உடையாத(தே) வெண்ணிலவே 2
உடையாத(தே) வெண்ணிலவே 2
எங்கும் நிற்காமல் வேகமாக ஓடிய அவன் வாழ்க்கைப் பயணத்தின் கால்கள், அவளைக் கண்டதும் ஸ்தம்பித்துப் போயின.
சுடராய் எரிந்து மறைந்த அவள் முகத்தைக் கண்டு திகைத்துப் போய் நின்றுவிட்டான்.
ஆனால் ஆரனாஷியிடம் அந்த ஸ்தம்பிப்பு இல்லை, அவசரமாக மான்யாவை நோக்கி ஓடினாள். தாயைக் கண்ட இளங்கன்று அல்லவா!
“என்னை விட்டுட்டு ஏன்மா போனீங்க. உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா” கேவலுடன் கேட்ட அந்த சிறுப்பெண்ணை உணர்ச்சி துடைத்த முகத்தோடு பார்த்தவள் பதில் பேசாமல் நடக்க எத்தனித்தாள்.
அவள் கால்களை இறுக கட்டிக் கொண்ட ஆரனாஷி, “அம்மா ப்ளீஸ் இந்த தடவையும் எங்களை தனியாவிட்டுட்டு போயிடாதீங்க” என கெஞ்ச மான்யாவின் முகத்தில் சற்றும் இளக்கமில்லை.
வேகமாக ஆரனாஷியின் கைகளை தன் மீதிருந்து பிரித்தெடுத்தவளின் நடையிலோ வேகத்தின் கூட்டல்.
“அம்மா நில்லுங்க. ப்ளீஸ் போகாதீங்க. மானுமா நம்மளை விட்டு மறுபடியும் போறாங்க. தடுங்கபா” ஆரனாஷி கேவலும் கண்ணீருமாய் கேட்க ஷ்யாம் சித்தார்த் அசையவில்லை.
எப்படி தடுப்பான்? என்ன சொல்லி தடுப்பான்?
வார்த்தைகள் கடலலைப் போல உள்ளிழுத்து கொள்ள தவித்துப் போய் இங்கே இவன் நின்றுவிட, அங்கோ ஆரனாஷியோ நிற்ககூட திராணியில்லாமல் மயங்கியிருந்தாள்.
அந்த ஏர்போர்ட்டே அதிரும்படி, “ஆஷிமா” என்று கத்தியவனை, அங்கிருந்த எல்லாருடைய விழிகளும் திரும்பிப் பார்க்க , அதில் மான்யாவின் விழிகளும் அடக்கம்.
பிரக்ஜையின்றி விழுந்து கிடந்தவளைப் பார்த்த பிறகு மான்யாவால் அதற்கடுத்து ஒரு அடியை கூட முன்னால் எடுத்து வைக்க முடியவில்லை.
எந்த திசையிலிருந்து வேகமாக தப்பித்தோடி வந்தாளோ மீண்டும் அதே திசையை நோக்கியே, காலம் ஓடவைத்தது.
ஷ்யாம், குழந்தையைத் தூக்கிக் கொண்டு காரை நோக்கி ஓட, மான்யாவும் அவனுடன் ஓடினாள்.
பின் சீட்டில் குழந்தையை கடத்திவிட்டு வேகமாக முன்னே வந்து காரை எடுத்தவன் அலைப்பேசியில் மருத்துவ ஊழியர்களுக்கு வேகமாக கட்டளையை பிறப்பிக்க துவங்கியிருந்தான்.
மான்யாவோ குழந்தையின் உடையை வேகமாக தளர்த்தியவாறே, நன்றாக சுவாசிக்கும் வகையில் படுக்க வைத்தாள்.
“ஆஷிமா, இங்கே பாருங்கடா. நல்லா மூச்சை இழுத்துவிட்டு இருமு” இவள் கன்னத்தில் தட்டி மயக்கத்தை விடுவிக்க முயல ஆரனாஷி கண் விழிக்கவேயில்லை.
வேகமாக நாசியின் அருகே தன் கரத்தை சென்று சோதித்துப் பார்க்க குழந்தையிடம் சுவாசமுமில்லை.
உடனே பதற்றமானவள் “ஷ்யாம், சீக்கிரமா ஹாஸ்பிட்டல்க்கு போ. குழந்தை சுவாசிக்கலை. ஆஸ்பிரின் டேப்ளேட் வெச்சு இருக்கியா?” கேட்டபடி குழந்தையின் மார்பில் தன் கைகளை வைத்து அழுத்தத் துவங்கினாள்.
“நோ” வருத்தமாய் சொன்னவன், மான்யாவைப் பார்த்து “பெர் மினிட் 100-120 வரை புஷ் பண்ணனும்” என்றான்.
“ஐ நோ மிஸ்டர் ஷ்யாம். எனக்கு சி.பி.ஆர் பண்ண தெரியும். உங்களுக்கு தான் டேப்ளேட் கொண்டு வர தெரியலை” கோபமாக சொல்லிவிட்டு சி.பி.ஆர் செய்வதில் கவனமானாள்.
கார் மருத்துவமனை முகப்பை வந்தடைந்த நொடி, ஏற்கெனவே தயாராக நின்றிருந்த ஸ்ட்ரெக்ட்சரில் குழந்தை ஐ.சி.யூவிற்கு கொண்டு செல்லப்பட, தவிப்புடன் வெளியே நின்றுவிட்டனர் அவர்கள் இருவரும்.
ஷ்யாமின் முகத்தில் ஈயாடவில்லை.
கைகளில் ஏற்பட்ட நடுக்கத்துடன் அந்த குட்டி கண்ணாடித்திரை வழியே தன் மகளுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சையை பார்த்தபடி நின்றிருந்தான்.
உலகத்தின் மிக சிறந்த மருத்துவர்கள் கூடி தன் குழந்தைக்கு சிகிச்சை தந்துக் கொண்டிருந்தாலும் வெளியே நின்றிருந்தவனின் உள்ளத்திலோ நடுக்கம் குறையவே இல்லை.
ஏற்கெனவே ஒரு முறை ஆரனாஷிக்கு இப்படி நிகழ்ந்திருக்கிறது. அப்போது தனக்கு பக்கபலமாய் அருகில் நின்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த மான்யாவோ இப்போது தன் குழந்தைக்கு எமனாக மாறி நிற்கின்றாள்.
தன் குழந்தையை இந்நிலைக்கு ஆளாக்கிய மான்யாவின் மீது ஏக்கர் கணக்கில் கோபம் கூட அது வார்த்தையிலும் வெளிப்பட்டது.
“அவள் ஹார்ட் பேஷன்ட் அதிகமா அழக்கூடாதுனு தெரிஞ்சும் அவளை இப்படி ஆளாக்கிட்டியே பாவி. சின்னக்குழந்தைனு கூட கருணை காட்டாம அவள் அழஅழ திரும்பி பார்க்காம போனியே, உன்னாலே தான் எல்லாம். என் பொண்ணு உன்னாலே தான் இப்படி படுத்து கிடக்கிறா” என்றான் குற்றம் சாட்டும் பாவனையில்.
“தப்பு முழுக்க உன் மேலே வெச்சுட்டு என்னை எதுக்கு குத்தம் சொல்றே? ஆஷிக்கு ஹார்ட் ப்ராப்ளம் இருக்குனு தெரிஞ்சும் ஏன் ‘ஆஸ்பிரின்’ டேப்ளேட் நீ முன்னெச்சரிக்கையா வைச்சுல்லை. அவள் ஸ்டேஜ் க்ரிடிக்கல்னு தெரிஞ்சும் இப்படி தான் கேர்லெஸ்ஸா இருப்பியா?” ஆற்றாமையோடு கேட்டாள் அவள்.
“நான் டேப்ளேட் கொண்டு வராதது தப்பு தான் ஒத்துக்கிறேன். ஆனால் ஆஷி ஹார்ட் பேஷன்ட்னு தெரிஞ்சும் இப்படி அவள் கிட்டே கடினமா நடந்துக்கிட்டதை என்னாலே மன்னிக்க முடியாது. நீ தான் என் குழந்தையை இந்த நிலைமைக்கு ஆளாக்குன” கோபத்தில் கத்தியவன் பின்பு நிதானித்து
“ஆஷி, எழுந்ததும் உன்னைத் தான் கேட்டு அடம்பிடிச்சு அழுவா. திரும்ப அவளுக்கு ஹார்ட் அட்டாக் வரதுக்கு கூட சேன்சஸ் இருக்கு. ப்ளீஸ் கொஞ்சநாள் எங்க கூட இரு மான்யா. நம்ம குழந்தைக்காக” தன் மகளின் நிலையை கருத்தில் கொண்டு அவன் குரல் கெஞ்சியது.
ஆனால் அவள் முகத்திலிருந்த கடினப் போர்வை விலகவில்லை.
“உங்க பொண்ணு உங்க கவலை. நான் இடையிலே எங்கிருந்து வந்தேன். ஐ யம் லீவிங் நவ்” வேகமாக சொல்லிவிட்டு நகர முயன்றவளை வேகமாக இழுத்து சுவற்றில் சாய்த்தான்.
“அவள் நம்ம பொண்ணுணு நீ சொன்னதை மறந்துட்டியா?” அவன் அழுத்தமாய்க் கேட்க அவளோ அலட்சியமாய் தோளைக் குலுக்கினாள்.
அதைக் கண்டு ஆத்திரமடைந்தவன் “அப்புறம் ஏன்டி ஆஷிக்கு உடம்பு முடியாம போனதும் அப்படி பதறுனே?” என்று கத்த
“மனிதாபிமானத்தாலே… ஒரு டாக்டராலே பேஷன்ட் இப்படி இருக்கிறதைப் பார்த்து அப்படியே போக முடியாதே, அதனாலே தான். என்னை பொறுத்தவரை ஆஷி பேஷன்ட். அதைத் தவிர்த்து வேற எந்த உறவுமுறையும் இல்லை” நிதானமாக சொன்னவளின் வார்த்தைகளைக் கேட்டு ஷ்யாமின் நிதானம் தப்பியது.
“யூ மான்யா… என்னை நீ பழிவாங்கு. ஆனால் ஏன்டி என் குழந்தையும் சேர்த்து பழிவாங்குற” என்றான் கோபத்தின் உச்சத்தில்.
“உன் குழந்தையைப் பழி வாங்குனா தானே நீ துடிப்பே, அதனாலே தான் ஷ்யாம். உன் குழந்தை அங்கே கஷ்டப்படுறதைப் பார்த்து நீ இங்கே கஷ்டப்…” என்றவள் அடுத்த வார்த்தையை பேசவர ஷ்யாமின் கரங்களோ அவளது தொண்டையை இறுக்கிப் பிடித்து வார்த்தைகளை அப்படியே முழுங்க வைத்தது.
தன் தொண்டையை நெருக்கியவனை முதலில் அதிர்ந்துப் பார்த்தவள் பின்பு வேகமாக அவனது கழுத்தைப் பிடித்து நெருக்க ஆரம்பித்தாள்.
இருவரிடமே நொடிக்கு நொடி அழுத்தம்கூட சட்டென்று இடையில் விழுந்த நர்ஸின் குரலைக் கேட்டு இருவரும் வேகமாக தளர்ந்தனர்.
“சார், பேபி ஆபத்தான கட்டத்தை தாண்டிட்டாங்க. நவ் ஷீ இஸ் ஓகே” என்று சொல்ல ஷ்யாமின் இதயம் அப்போது தான் நிம்மதியாக மூச்சைவிட்டது.
வேகமாக குழந்தை இருக்கும் அறைக்குள்ளே இருவரும் செல்ல, செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு ஆழ்ந்த தூக்கத்தில் ஆட்பட்டு இருந்தவளின் உதடுகளிலோ அசைவு.
ஷ்யாம் கிட்டே நெருங்கி சென்று கேட்க
“மானுமா” என்று விடாமல் புலம்பிக் கொண்டிருந்தது பிஞ்சு உதடுகள்.
அதைக் கேட்டதும் அவன் கண்களில் கண்ணீர்கோடு. தன் மகளின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு வேகமாக தன் கண்ணீரைத் துடைத்தபடி வெளியே வந்தவன் முகத்தில் பாறையின் இறுக்கமும் கடினமும்.
மான்யாவின் செவிகளிலும் அந்த வார்த்தை விழ தான் செய்தது. ஆனால் அதைக் கேட்டு நெகிழவில்லை அவள்.
குழந்தையை ஒரேயொரு பார்வை பார்த்துவிட்டு தனக்கும் அந்த இடத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் வேகமாக நடக்கத் துவங்கியவளின் காதுகளில் விழந்தது ஷ்யாமின் இறுகிய குரல்.
நிதானமாக திரும்பினாள்.
“மான்யா இதுநாள் வரை நான் உன் மேலே மனசார கோவப்படல. ஆனால் இப்போ உன்னாலே என் பொண்ணோட உயிரே ஊசலாட தொடங்கியிருக்கு. இதுநாள் வரை துரோகியா தான் இருந்த, ஆனால் இப்போ ஒரு கொலைகாரியாவும் மாற முயற்சி பண்ணாதே. என் பொண்ணு எனக்கு வேணும். அதுக்கு நீ இங்கே இருக்கணும். என் பேச்சை மீறி நீ வெளியே போனா, இந்த ஷ்யாமை வேற மாதிரி பார்ப்ப. உன்னோட மொத்த மெடிக்கல் கேரியரையும் முடக்கிப் போட்டு உன்னை ஆள் அட்ரெஸ் இல்லாம ஆக்கிடுவேன்” அவன் குரலிலோ பெருஞ்சிங்கத்தின் கர்ஜனை.
இந்த குரல் இதுவரைப் பேசிக் கொண்டிருந்த ஷ்யாமின் இயல்பான குரலல்ல. அவன் அரக்கனாக உருமாறும்போது பேசும் குரல்.
இந்த அரக்கன் எந்த விளிம்பிற்கும் செல்லுவானென உணர்ந்தவள் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் தயங்கி நின்றாள்.
அவளை தீர்க்கமாக பார்த்துவிட்டு, “உன்னை ஒரு மாசத்துக்கு ஆஷிக்கு பர்செனல் டாக்டரா அப்பாயின்மென்ட் பண்றேன். இந்த ஹாஸ்பிட்டலிலே உன்னோட அறை எதுனு உனக்கு நியாபகம் இருக்கும்னு நினைக்குறேன். கோ அன்ட் ஸ்டே தேர்” என்று கர்ஜித்தவன் வேகமாக மருத்துவ ஊழியர்களுக்கு அடுத்தடுத்த ஆணைகளைப் பிறப்பிக்க ஆரம்பித்தான்.
அவன் தன்னுடைய கேரியரை முடக்கிவிடுவேன் என்று சொன்ன வார்த்தை அவளைப் பாதிக்கவில்லை.
ஆனால் கொலைகாரியாக மாறிவிடாதே என்றானே அந்த வார்த்தை தான் அவளைப் பெரிதும் பாதித்தது.
தன்னால் ஆரனாஷிற்கு ஏதாவது நிகழ்ந்துவிட்டால்!
நினைத்தமாத்திரத்தில் அவளது உள்ளம் நடுங்கியது.
உயிர்காக்கும் தொழிலில் இருக்கும் தன்னால் ஒரு உயிர் போவதா?
இல்லை கூடாது கூடாது என்று உள்ளம் மறுக்க, மௌனமாக தன் அறையை நோக்கி நடந்தாள்.
எங்கிருந்து தன் மருத்துவ பயணத்தை ஆரம்பித்தாளோ அதே இடத்தை நோக்கி மீண்டும் செல்கிறாள்.
அவள் அங்கே வந்த அடுத்த நொடி பூட்டைத் திறந்துவிட்டு நர்ஸ் விலகிக் கொள்ள உள்ளே நுழைந்தவளின் கண்களில் அகப்பட்டது, மேஜையின் மீதிருந்த அந்த குட்டிப் பலகை.
“மான்யா சுந்தர். எம்.எஸ் ஜெனரல் சர்ஜன்(இன்டெர்ன்)” என்று எழுதியிருந்த அந்த பலகையைப் பார்த்து விரக்தியில் இதழ்கள் வளைந்த பொழுது, வேகமாய் உள்ளே வந்த இன்னொரு ஊழியர் அவளது டேபிளிலிருந்த பலகையை எடுத்துவிட்டு இன்னொரு பலகையை வைத்தார்.
“மான்யா சுந்தர், எம்.எஸ் ஜெனரல் சர்ஜன், கார்டியாதொராசிக் சர்ஜன்” என்று மாற்றி எழுதப்பட்டிருந்தது அந்த பலகை.
புதிய பலகையில் இன்டெர்ன் என்ற வார்த்தை அழிக்கப்பட்டிருந்தாலும் அவள் மனதில் அழியாமல் பதிந்து போயிருந்த அந்த வார்த்தை தன் கோரநகங்களால் இதயத்தை கீறிவிட நினைவின் உதிரம் உதிர துவங்கியது.