உடையாத(தே) வெண்ணிலவே 13b
உடையாத(தே) வெண்ணிலவே 13b
சில முடிவுகள் தொடக்கத்தின் ஆதிப்புள்ளி சில முடிவுகள் அத்தியாயத்தின் இறுதிப்புள்ளி.
ஷ்யாம் சொன்ன இந்த முடிவு இதில் எந்த வகையறா என்பதை மான்யாவால் புரிந்து கொள்ள முடியவில்லை.
“வீ ஆர் கோயிங் டூ டு திஸ் சர்ஜரி. பீ ரெடி” என்று தீர்க்கமாக உரைத்தவனையே கண்களில் கலக்கத்தோடு பார்த்தாள்.
அந்த கலக்கத்தைப் படித்தவன் “எது உன்னை தடுக்குது மான்யா?” என்றான் கேள்வியாக.
“இல்லை அந்த சின்னக் குழந்தையை நினைச்சா பயமா இருக்கு. இந்த சர்ஜரி ஃபெயில் ஆச்சுனா?” கேள்வியோடு நிறுத்தியவளின் வார்த்தைப் பந்துகள் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது.
“மான்யா, ஐ டோல்ட் யூ ஆல்ரெடி. பேஷன்டோட எமோஷனலா கனெக்ட் ஆகாதே. அது உனக்கு பயத்தைத் தான் தரும். ஸ்கேல்பல் பிடிக்கும் போது உன் கை உன்னை மீறி நடுங்கும்” கோபமாய் சொல்லியவனை நிமிர்வாக பார்த்தாள்.
“ஆப்பரேடிங் ரூமுக்குள்ளே கண்டிப்பா என் கை நடுங்காது. ஆனால் இப்போ என் மனசு நடுங்குறதுக்கான காரணம், தப்பான முடிவு எடுக்குறோமோன்ற பயத்தாலே தான்” கலக்கமாக சொன்னவளின் கண்களை அவன் பார்வை ஊடுருவியது.
“மான்யா, அந்த குழந்தையோட அம்மா கிட்டே குழந்தையோட மெடிக்கல் காம்ப்ளிகேஷன்ஸ் எல்லாத்தையும் முழுசா எக்ஸ்ப்ளெயின் பண்ண அப்புறம் அவங்களா எடுத்த முடிவு இது. அவங்களோட முடிவை நாம மதிச்சு தான் ஆகணும்” முடிவாக உரைத்தவன் அவளின் முன்பிருந்த பென்-டிரைவ்வை சுட்டிக் காட்டிவிட்டு சென்றான்.
பெருமூச்சுவிட்ட மான்யா அவன் கொடுத்துவிட்டுப் போன பென்-டிரைவை எடுத்து சிஸ்டமில் போட்டாள்.
அதில் ஷ்யாமின் தலைமையில் நடைப்பெற்ற ஹெப்பிடோமி சர்ஜரி வீடியோஸ் இருந்தது.
அதை ஓடவிட்டவளின் கண்களில் வியப்பின் விரிவு.
அவனின் ஒவ்வொரு அசைவையும் சீர்மையும் கண்டு வியந்துப் போனாள். அவன் செய்த ஒரு சர்ஜரியில் கூட சிறு பிழையை அவளால் சுட்டிக் காட்டி சொல்ல முடியவில்லை. அத்தனை நேர்த்தியாக ஒவ்வொரு சர்ஜரியையும் செய்து முடித்தவனை விழியகலாமல் பார்த்தாள்.
அந்த மொத்த வீடியோஸ்ஸையும் பார்த்து முடித்தவளின் மூளையில் தொக்கி நின்றது அந்த கேள்வி.
‘இவன் மனிதனா? இல்லை சர்ஜிகல் ரோபோட்டா?’
உள்ளுக்குள் எழுந்த கேள்வியோடு தன் கைகடிகாரத்தை பார்க்க மணி ஏழரை.
தன் கைப்பையை எடுத்து கொண்டு மருத்துவ முகப்பிற்கு வந்தவளின் கால்களில் தயக்கம். எதையோ யோசித்து தாமாதித்தவள் பிறகு வேகவேகமாக ஸ்வேதாவின் அறைக்குள் நுழைந்தாள்.
அங்கே ஒளிர்விழந்த கண்களோடு சீலிங் ஃபேனையே குழந்தை வெறித்துக் கொண்டிருந்தது. இவள் “இன்ஜினியர்” என்றழைக்க அந்த கண்களில் சட்டென்று மின்னல்.
உதடுகளில் பூசிய புன்னகை சாயத்தோடு திரும்பிய குழந்தை “இன்னொரு தடவை கூப்பிடுங்க” ஏக்கமாக கேட்க மீண்டும் இன்ஜினியர் என்று மான்யா அழைத்தாள்.
அந்த குழந்தையின் கண்களில் எதையோ சாதித்த உணர்வு. புன்முறுவலுடன் மான்யாவை அருகில் அழைத்தவள் கன்னங்களில் அன்பின் சின்னத்தை பதிக்க மான்யாவும் பதிலுக்கு முத்தமிட்டுவிட்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்தாள்.
சற்று முன்பு வரை இருந்த கலக்கம் விலகி இப்பொழுது முகம் முழுக்க விகசிப்பு.
‘நான் கண்டிப்பா உன்னை காப்பாத்திடுவேன் ஸ்வே குட்டி’ நம்பிக்கையாக மனதிற்குள் சொல்லிக் கொண்டவளின் கண்களில் எதிரேயிருந்த சூப்பர் மார்கெட் விழுந்தது.
வேகமாக உள்ளே நுழைந்தவள் குழந்தைகள் விளையாடுவதற்கான பில்டிங் ப்ளாக்கை எடுத்துவிட்டு திரும்பும் போது வாட்டர் பெயிண்ட் கண்ணில்பட்டது.
என்ன தான் ஆரனாஷி செய்வது அவளுக்கு கோபத்தை விதைத்தாலும் அவளையுமறியாமல் உள்ளுக்குள் அன்பின் கொடி படர இதழ்களில் புன்னகை தளிர்.
வாட்டர் பெயிண்டையும் சேர்த்து வாங்கியவள் வீட்டிற்குள் நுழையும் போது ஷ்யாமும் ஆரனாஷியும் வாசலில் கையை கட்டிக் கொண்டு மான்யாவை முறைத்தனர்.
அவள் கேள்வியாய் புருவம் உயர்த்த “டைம் என்ன?” என்றான் ஷ்யாம் கோபமாக.
வெகு நேரம் கழித்து அப்போது தான் மான்யா தனது கைகடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தாள்.
மணி ஒன்பது!
“ஏன் லேட்டு?” அதிகாரமாய் கேட்டவனை வெட்டும் பார்வை பார்த்தாள்.
“நான் லேட்டா வருவேன். இல்லை வீட்டுக்கு வராம போவேன் நீங்க யாரு என்னை கேட்கிறதுக்கு. சீனியர் சர்ஜன்னா அதை ஹாஸ்பிட்டலோட வெச்சுக்கோங்க. அதட்டி உருட்டுற வேலையெல்லாம் என் கிட்டே வேண்டாம்” அவள் கை நீட்டி எச்சரித்தாள்.
அதைக் கண்ட ஆரனாஷி வேகமாக ஷ்யாமின் தோள்களில் ஏறி மான்யாவின் நீட்டிய விரலிலேயே பட்டென்று ஒன்று வைத்தாள்.
மான்யா திகைத்துத் திரும்ப, “எங்கப்பா கிட்டே கை நீட்டிலாம் பேசக்கூடாது. விரலை உடைச்சுடுவேன் அப்புறம்” மிரட்டல் குரலில் சொல்ல ஷ்யாமின் இதழ்களில் புன்னகை விரிசல் விட்டது.
மான்யா விரலைத் தேய்த்துக் கொண்டே ஆரனாஷியை முறைக்க ஷ்யாமோ அவளை சொடுக்கிட்டு அழைத்தான்.
“ஓய் என் பொண்ணை எதுக்கு முறைக்கிற” என்று கேட்க இப்போது மான்யாவின் அக்னி பார்வை ஷ்யாமின் மீது விழுந்தது.
“நான் லேட்டா வந்ததாலே உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை?” என்றாள் கைகளை கட்டிக் கொண்டு.
“எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் எங்க அம்மாவை பார்த்துக்கிற பொறுப்பை நீ எடுத்துக்கிட்டதை மறந்துட்டியா மான்யா?”
“நான் மறக்கலை மிஸ்டர் ஷ்யாம். என்னோட ஷிப்ட் முடிஞ்சது ஏழு மணிக்கு. இரண்டு பஸ் மாறி வீட்டுக்கு வர எனக்கு இந்த டைம் தான் ஆகும். அதுக்கு நான் எதுவும் பண்ண முடியாது” என்றபடி உள்ளே நுழைந்தாள்.
“இனி நீ லேட்டா வீட்டுக்கு வர முடியாது. வரவும் கூடாது.நான் உன்னை இனி மேல் ஹாஸ்பிடெலிலே இருந்து பிக்-அப் பண்ணிக்கிறேன்” முடிவாக உரைத்தவனையே முடியாதென்னும் பாவனையில் பார்த்தாள்.
“நான் வர முடியாதுனு சொன்னா என்ன பண்ணுவீங்க?” எதிர்க்கேள்வி கேட்டாள்.
“நீ வர வரைக்கும் எங்க அம்மா சாப்பிடாம இருக்கிறதைப் பார்த்துட்டு என்னாலே பொறுத்துக்க முடியாது. உன்னை வர வைக்கிறதுக்காக நான் எந்த எல்லைக்கும் போவேன்” என்றவனின் வார்த்தைகள் மான்யாவிற்குள் அதிர்வை ஏற்படுத்தியது.
“வாட் மீனாட்சியம்மா இன்னும் சாப்பிடலையா?”
“யெஸ். அவங்க இந்நேரத்துக்கு சாப்பிட்டு டேப்லெட் போட்டு தூங்கியிருக்கணும். பட் சாப்பிடாம அடம் பிடிக்கிறாங்க” என்றவனின் பதில் அவளுக்குள் கலக்கத்தை உண்டாக்கியது.
வேகமாக உள்ளே நுழைந்தவளின் கண்களில் டைனிங் டேபிளில் அமர்ந்து வாசலையே வெறித்துக் கொண்டிருந்த மீனாட்சியின் உருவம் விழ, வேகமாக தன் கையை கழுவிக் கொண்டு அவரருகே அமர்ந்தவள், லயாவிடமிருந்து தட்டை வாங்கி ஊட்ட, மீனாட்சியம்மாளின் உதடுகள் தானாக திறந்துக் கொண்டது.
அதைக் கண்ட மூவரின் கண்களும் தெறித்தது.
கிட்டத்தட்ட அரை மணிநேரமாக அவரை உண்ண வைக்க மூவரும் அப்படி போராடிக் கொண்டிருந்தனர். ஆனால் மான்யா எந்த பிரயர்த்தனமும் செய்யாமல் ஒரு வார்த்தையிலேயே மீனாட்சியம்மாளின் வாயை திறக்க வைத்திருந்தாள்.
அதுவரை சாப்பிடாமல் இருந்த ஷ்யாமும் ஆரனாஷியும் அந்த காட்சியை பார்த்தபடி டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தனர்.
இருவரும் மான்யாவின் மீது எழுந்த கோபத்தை சப்பாத்தியை வேகமாக பிய்த்து மென்றவர்களின் பார்வை மான்யாவையும் சேர்த்து அரைத்தது.
கதை பேசியபடி மீனாட்சியம்மாளுக்கு ஊட்டிய மான்யாவை கண்ட லயாவிற்கோ ஏதோ அடிப்பட்ட உணர்வு.
இத்தனை நாளாக வெகு அருகிலிருந்து கவனித்துக் கொண்ட தன்னை விட இந்த மான்யா முக்கியமானவளாக போய்விட்டாளா? பொறாமையில் அவள் கண்கள் எரிய அதே நெருப்பு ஷ்யாம் ஆஷியிடமும் திகுதிகுவென எரிந்தது.
மூவரின் வித்தியாசமான பார்வையை கவனிக்காமல் தங்கள் உலகத்தில் லயித்துக் கிடந்தனர் மான்யாவும் மீனாட்சியும்.
மான்யா உணவைக் கொடுத்து விட்டு இறுதியில் ஸ்வீட்டை ஊட்டப் போக ஷ்யாம் வேகமாக தடுத்தான்.
“அம்மாவுக்கு ஸ்வீட் பிடிக்காது மான்யா” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மீனாட்சியம்மாள் அந்த ஸ்வீட்டை உண்டு முடித்திருந்தார்.
அதைக் கண்டு ஷ்யாம் பேச்சற்று நின்றுவிட ஆஷியோ “ஐ பாட்டி ஸ்வீட் சாப்பிடுறாங்க. நானும் ஊட்டப் போறேன்” சந்தோஷ கூக்குரலோடு ஸ்வீட்டை எடுத்து ஊட்ட எத்தனித்தாள்.
ஆனால் மீனாட்சியம்மாளின் உதடுகள் இந்த முறை திறக்கவே இல்லை.
“பாட்டி உங்க பேத்தி ஊட்டுறேன்ல. ப்ளீஸ் வாங்குங்க” ஆஷியின் கெஞ்சலுக்கு மீனாட்சி அசைவில்லை.
அதைக் கண்டு ஆஷியின் கண்களில் நீர் கோர்த்தும் மான்யாவின் விழிகள் தயங்கியது.
“என் பாட்டி எப்படி உங்க கூட மட்டும் க்ளோஸா இருக்காங்க? ஏன் என் கூட பேச மாட்டேங்குறாங்க. நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா?” கேவியபடி கேட்டவளை மான்யாவின் கரங்கள் அள்ளி அணைத்துக் கொள்ள நினைத்தது.ஆனால் அவளுக்கு முன்பு ஷ்யாம் அணைத்து முடித்திருந்தான்.
“ஆஷிமா, அழக் கூடாதுடா. நான் தான் பாட்டிக்கு உடம்பு சரியில்லைனு சொல்லியிருக்கேன்ல” சமாதானப்படுத்தியபடி ஆரனாஷியை தன் தோளின் மீது போட்டுக் கொண்டு மான்யாவை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு தோட்டத்தை நோக்கி சென்றான்.
லயாவோ அவளை காரமாய் பார்த்துவிட்டு தன் கைப்பையை எடுத்து கொண்டு வெளியேற அந்த இடத்தில் இப்போது அந்நியப்பட்டு நின்றாள் மான்யா.
‘தான் ஒருத்தி இங்கே வந்ததால் தான் இத்தனை வருத்தங்களோ!’ கலக்கத்தோடு எண்ணியவள் மீனாட்சியம்மாளை அழைத்துக் கொண்டு அறைக்கு சென்றாள்.
எப்போதும் மாத்திரை உண்டு விட்டு நள்ளிரவு கடந்தே ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லும் மீனாட்சி அன்று மான்யாவின் அருகாமையில் வெகு சீக்கிரமாக உறங்கிப் போனார்.
அவர் முகத்தையே சில நிமிடங்கள் உற்றுப் பார்த்தவள் பெருமூச்சுடன் வெளியே வந்தாள். அதே நேரம் ஆரனாஷியைத் தூக்கி கொண்டு ஷ்யாம் உள்ளே நுழைந்தான்.
இருவரின் பார்வையும் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்தன.
“ஆஷி தூங்கிட்டாளா?” மான்யாவின் கேள்விக்கு ஷ்யாமின் தலை ஆமோதிப்பாய் ஆடியது.
“உங்க கிட்டே கொஞ்சம் பேசணும் ஷ்யாம்” என்றவளின் கோரிக்கைக்கு தலையசைத்தவன் ஆஷியை உள்ளே படுக்க வைத்துவிட்டு அவள் எதிரே வந்து அமர்ந்தான். அவன் கண்களில் என்ன என்ற கேள்வி.
“மீனாட்சி அம்மாவோட பாஸ்ட் மெடிக்கல் ஹிஸ்டரி எனக்கு தெரியணும். அவங்களுக்கு எக்ஸாக்டா என்ன டிசீஸ்” என்றவளின் கேள்விக்கு “கேட்டடோனியா செல்ஃப் மியூட் அப்புறம் ஏ.டி.எச்.டி” என்று பதிலளித்தான்.
அவன் பதில் மான்யாவிற்குள் அதிர்ச்சியை அதிகரித்தது.
இந்தளவிற்கா மீனாட்சியம்மாள் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்?
கேட்டடோனியா வியாதி இருப்பவர்கள் எதற்கும் எதிர்வினையாற்ற மாட்டார்கள். பேசும் எந்த வார்த்தைக்கும் பதிலளிக்க மாட்டார்கள். அவர்களை எந்த உணர்வும் பாதிக்காது.
ஆனால் தன் பேச்சு மட்டும் மீனாட்சியம்மாளை எப்படி அசைக்கிறது!
அவள் இதயத்தை கேள்விகள் பின்னியது.
“பட் ஷ்யாம், எப்படி என் பேச்சுக்கு மட்டும் மீனாட்சியம்மாள் ரியாக்ட் பண்றாங்க?” அவள் குழப்பமாய்க் கேட்க ஷ்யாம் கையை விரித்தான்.
“நானும் அதே தான் கேட்கிறேன் மான்யா. இத்தனை வருஷமா எங்களோட ஒரு வார்த்தைக்கு கூட அசையாதவங்க எப்படி திடீர்னு உன் கிட்டே மட்டும் ரியாக்ட் பண்றாங்க. என்ன பண்ண? என்ன சொக்குபொடி போட்ட?” அன்று கேட்ட கேள்வியையே ஷ்யாம் இன்றும் கேட்க மான்யாவிடம் பதிலில்லை.
அவளுக்குமே இது புதிராக தான் இருந்தது. புரியாமலும் இருந்தது.
ஆனால் ஒன்று மட்டும் அவளால் தெளிவாக சொல்ல முடியும். இது அன்பென்னும் மாயநூலினால் கட்டப்பட்ட பந்தம். அதனால் தான் மீனாட்சியம்மாள் அசைகிறாரென்று எப்படி ஷ்யாமிடம் விளக்குவது.
மொழியின்றி எழுந்தவள் தன்னறைக்குள் சென்று சுருண்டுக் கொண்டாள். ஆழமான உறக்கத்திற்கு செல்லாதவளின் விழிகள் காலை மூன்று மணிக்கே விழித்துக் கொண்டது.
ஐந்து மணி வரை கட்டிலில் புரண்டவள் அதற்கு மேலும் படுக்க முடியாமல் வேகமாக தயாராகி தோட்டத்திற்கு சென்றாள்.
பூக்களின் வாசம் அவள் நுரையீரலுக்கு பெரும் புத்துணர்வை அந்த அதிகாலை வேளையில் கொடுத்த நேரம் மண்வாசமும் நாசியை நிறைத்தது.
அருகே அந்த தோட்டத்தின் காவல்காரர் ரங்கசாமி செடிகளுக்கு நீருற்றிக் கொண்டிருக்க மான்யா அவரைப் பார்த்து புன்முறுவல் பூத்தாள். பதிலுக்கு அவரிடமும் ஒரு புன்னகை.
“அண்ணா நம்ம தோட்டத்திலே டிஜிட்டல் ஊதா பூ இருக்கா?” எனக் கேட்க அவர் தெரியாது என்னும் விதமாக தலையை சொறிந்தார். அவர் இந்த பூந்தோட்டத்திலிருக்கும் பூக்களுக்கு மட்டுமே பழக்கப்பட்டவர்.
“அப்போ கெமோமில் பூவாவது இருக்கா?” எனக் கேட்க அவர் தலை வேகமாக ஆடியது.
“அதோ அங்கே இருக்குமா” குறிப்பிட்டு சொன்னவரிடம் தனக்கு பிடித்தமான பூக்களைப் பற்றி பேச துவங்கியிருந்தாள் மான்யா.
ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஆரனாஷி திடீரென்று பதறி எழுந்தமர்ந்தாள். அவளது கலக்கமான முகத்தைக் கண்ட ஷ்யாம் “ஏதாவது கெட்ட கனவு கண்டியாடா? என்று கேட்க ஆமோதிப்பான தலையாட்டல் அவளிடம்.
“ஆமாம்பா, மிஸ் என்னை அடிக்கிறா மாதிரி கனவு கண்டேன்” அழுகுரலில் சொன்ன மகளை புன்னகையோடு அணைத்துக் கொண்டான் ஷ்யாம்.
“ஆஷி தான் நல்ல பிள்ளையாச்சே. அப்புறம் ஏன் மிஸ் அடிக்கப் போறாங்க” சமாதானமாக அவளது தோளைத் தட்டிக் கொடுத்து தூங்க வைக்க முயன்றான்.
“இல்லைபா மிஸ் டிஃபரெண்டான பூவை எல்லாம் கலெக்ட் பண்ணிட்டு வர சொன்னாங்க. பட் நான் நேத்து அந்த ஹோம் வொர்க் பண்ண மறந்துட்டேன். இப்போ மிஸ் அடிப்பாங்களே” பயந்த குரலோடு சொன்னவளை இறுக அணைத்துக் கொண்டவன்
“நம்ம தோட்டத்துலே தான் நிறைய பூ இருக்கே. நம்ம தோட்டத்து அங்கிள் கிட்டே வித்தியாசமான பூவை கேட்டு அதை கலெக்ட் பண்ணி கொண்டு போகலாம். ஆஷிமா அழாம வாங்க” ஆறுதலாக சொல்லியபடியே அவளை தோட்டத்திற்கு அழைத்து வந்தான்.
அங்கே மான்யா மற்றும் ரங்கசாமி பூக்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்க அவர்களிருவரது சம்பாஷனையில் ஒன்று மட்டும் இவர்களுக்கு தெளிவாக புரிந்தது.
ரங்கசாமியை விட மான்யாவிற்கு பூக்களைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கிறது என்று.
ஆஷி ஷ்யாமின் காதுகளில், “அப்பா என் ப்ராஜெக்டுக்கு ஹெல்ப் இவங்களாலே தான் பண்ண முடியும். ஆனால் நான் இவங்க மேலே வாட்டர் பலூன் அடிச்சுட்டேனே. ஹெல்ப் பண்ணுவாங்களா?” யோசனையாய்க் கேட்க ஷ்யாம் உறுதியான குரலோடு “பண்ணுவாங்க” என்றான்.
“எப்படிபா?” எதிர்க்கேள்வி கேட்டாள் அவள்.
“நீ ஹெல்ப் கேட்டதும் முதலிலே முடியாதுனு தான் சொல்லுவாங்க. உங்களுக்கு பூவைப் பத்தி தெரியாது அதான் இப்படி பிகு பண்றீங்கனு சொல்லிப் பாரு, அடுத்த நிமிஷமே உன் கூட கிளம்பி வருவா” ஷ்யாமின் யோசனைப்படி ஆஷி அப்படியே மான்யாவிடம் சொல்ல அவளோ கையை மடித்துக் கொண்டு தயாரானாள்.
“யாரைப் பார்த்து பூவைப் பத்தி தெரியாதுனு சொன்ன? இரண்டே நிமிஷம் இரு, ரெடியாகிட்டு வரேன்” துடிப்பாக பேசிவிட்டு சென்ற மான்யாவையே இருவரும் இதழில் வழிந்த புன்னகையோடு பார்த்து ஹைஃபை கொடுத்தனர்.
சொன்ன படி இரண்டே நிமிடத்தில் தனது கைப்பையை எடுத்துக் கொண்டு வந்த மான்யா அவளுக்கு தெரிந்த பூங்காவிற்கெல்லாம் ஆஷியை அழைத்துக் கொண்டு சென்றாள்.
அங்கிருந்த விதவிதமான வித்தியாசமான பூக்களை மான்யா சுட்டிக் காட்ட ஆஷியின் விழிகள் கோழிகுண்டாய் விரிந்த நேரம் “ஆஷி” என்ற கூக்குரலோடு இரண்டு சிறுவர்கள் ஓடி வந்தனர்.
அவர்களைக் கண்ட ஆஷி குதூகலமானாள்.
“ஓய் பிரவின், தீப்தி இங்கே என்ன பண்றீங்க?” ஆஷி கேள்வியாக நோக்க,
“எங்க வீடு இங்கே தான் இருக்கு. பார்க்லே ஜாகிங் போக வந்தோம்” என்று சொன்ன குழந்தைகளின் பார்வை மான்யாவின் மீது குழப்பமாய் படிந்து மீண்டது.
அந்த இருவரும் தங்களுக்குள் ஏதோ குசுகுசுவென்று பேசிக் கொண்டு ஆஷியைப் பார்த்தனர்.
“ஆஷி அப்போ நீ நேத்து பொய் சொல்லலையா? உனக்கு நிஜமாவே அம்மா இருக்காங்களா?” என்ற கேள்வியில் ஆரனாஷியின் முகத்தில் பதற்றம் குடிக் கொண்டது.
நேற்று பள்ளியில் அவர்கள் இருவரிடமும் தனக்கு தாய் இருக்கிறாள் என்று சொல்லிய பொய் இப்போது வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தோடு மான்யாவை கெஞ்சலாக பார்த்தாள்.
அவளின் பார்வையும் ஆஷியின் மீது ஒரு வித கவலையோடு விழுந்தது.
“சாரி ஆஷி நேத்து நீ பொய் சொல்றேனு நாங்க கிண்டல் பண்ணிட்டோம். இப்போ நீ சொன்னதை நம்புறோம். உனக்கு அம்மா இருக்காங்க தான்” என்று திப்தீ சொல்ல ஆஷி வேகமாக மான்யாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு “ஆமாம் எனக்கு அம்மா இருக்காங்க. இவங்க தான் என் அம்மா” அவசரமாக சொல்லிவிட்டு மான்யாவை கெஞ்சலாக பார்த்தாள்.
அதில் மறுத்து சொல்லிவிடாதே என்ற ஏக்கம்.
பள்ளிப் பருவத்தில் தாய் இல்லாமல் தான் பட்ட கஷ்டத்தைப் போல இந்த சிறு குழந்தையும் இப்போது அனுபவிக்க வேண்டுமா? என்ற கேள்வி தோன்றிய அடுத்த நொடி மான்யா வேகமாக ஆஷியைத் தூக்கிக் கொண்டாள்.
“நான் தான் இவளோட அம்மா. இனி இவளுக்கு அம்மா இல்லைனு யாரும் சொல்லக்கூடாது” வாஞ்சையாய் சொன்ன மான்யாவைக் கண்டு ஆஷியின் விழிகளில் நீர்முத்து.
“அம்மா” என்ற கூக்குரலோடு மான்யாவை இறுக்கமாக அணைத்துக் கொண்டவள் கன்னத்தில் முத்தத்தைப் பதிக்க மான்யா பதிலுக்கு அழுத்தமாக ஒரு முத்தத்தை இட்டுவிட்டு தனது கைப்பையில் நேற்று வாங்கி வைத்த வாட்டர் பெயிண்டை எடுத்து ஆஷியிடம் நீட்டினாள்.
அதைப் பார்த்த ஆரனாஷி “பலூன் மிஸ்ஸிங்” கண்ணடித்தபடி சொல்ல மான்யா “வாலு” என்ற அடைமொழியோடு அவளை இறுக அணைத்துக் கொண்டாள்.