உடையாத(தே) வெண்ணிலவே 18

குழந்தைகள்!

உலகை ஆசிர்வதிக்க வந்த சின்னஞ்சிறு மொட்டுகள். 

உள்ளுக்குள் இருக்கும் கவலையை வற்ற செய்யும் வசந்த அருவி, அதன் வார்த்தைகளில் இருக்கும்.

அந்த அன்பின் நீருற்றில் சுகமாய் மூழ்கியிருந்தவள், பேச்சின் படபடப்பில் ஆஷி மூச்சு வாங்குவதைக் கண்டதும்  வேகமாக அந்த மோன நிலையிலிருந்து கலைந்தாள்.

“ஆஷிமா என்ன ஆச்சுடா? ஏன் இப்படி மூச்சு வாங்குது?” கலக்கத்துடன் கேட்படி குழந்தையின் மார்பை நீவினாள்.

“அது எனக்கு கன்டினியூஸா பேசும் போது அப்படி தான்மா ரொம்ப மூச்சு வாங்கும். நீங்க அதை விடுங்க” என்ற ஆஷி ‘ஆமாம் நான் எங்க விட்டேன்?’ என்ற கேள்வியோடு நெற்றியை சுருக்கினாள்.

விட்ட இடம் நினைவிற்கு வந்ததும் சட்டென்று செந்தாமரையாய் மலர்ந்தது அந்த முல்லையின் முகம்.

“நான் நெயில் கட் பண்ணலனு மிஸ் என்னை தோப்புக்கரணம் போட சொல்லிட்டாங்கமா. காதை அழுத்தமா பிடிச்சு போட்டதாலே காதே சிவந்து போச்சு. இதைப் பார்த்து தீப்தி என்னை ரொம்ப கிண்டல் பண்ணிட்டா” சிவந்துப் போன செவியை சுட்டிக் காட்டி பேச இப்போதும் அந்த காதுமடலில் விடாமல் துடிப்பு இருந்தது.

அதைக் கண்டு மான்யாவின் புருவங்களில் நெறிசல்.

“என்னாச்சு மானு மா?” ஆஷி கேள்வியால் கலைக்க, வேகமாய் சுயம் திரும்பியவள் நகவெட்டியை எடுத்துக் கொண்டு வந்தமர்ந்தாள்.

“நெயில் அதிகமா வளர்க்கக்கூடாது ஆஷிமா. உடம்புக்கு நல்லதில்லை” குரலில் கண்டிப்பை பூசியபடி ஆஷியின் கைவிரலைப் பிடித்தாள்.

நகங்கள் ஒவ்வொன்றும் ஸ்பூன் வடிவில் இருக்க மீண்டும் மான்யாவின் புருவங்களில் சிந்தனை சுழல்.

கலக்கமாக நிமிர்ந்த நேரம் “ஆஷி” என்ற அழைப்போடு ஷ்யாம் அங்கே வந்து நின்றான்.

“ஒரு ஃபைவ் மினிட்ஸ்பா. மானுமா கிட்டே முழு கதையும் சொல்லிட்டு வந்துடுறேன்” அவள் அவனை தற்காலிகமாக தவிர்த்துவிட்டு மான்யாவிடம் பேச்சைத் தொடர அவனுக்குள் ஏதோ ஒரு முறிந்தது. உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைந்தது.

வேதனை படிந்த அவன் முகத்தை கண்ட மான்யா ஆரனாஷியிடம் திரும்பினாள்.

“அப்பா கூப்பிடுறாங்களே ஆஷி. வந்து பேசிக்கலாம். நீ போயிட்டு வா” மான்யாவின் வார்த்தைக்கு மனமேயில்லாமல் எழுந்து வந்த ஆஷியின் காதுகளில் ஷ்யாம் ஏதோ ஒன்றை முணுமுணுக்க அதைக் கேட்டு அந்த குட்டி முகம் விரிந்தது.

“ஓகேபா இதோ ரெடியாகிட்டு வரேன்” மானின் துள்ளல் அவளிடம்.

இரண்டே நிமிடங்களில் ஆஷி தயாராகி வெளியே வர ஷ்யாமும் மீனாட்சியம்மாளை கூட்டிக் கொண்டு வந்தான்.

“மான்யா நாங்க ஃபேமிலியா அவுட்டிங் போயிட்டு வரோம். டாடா பாய் பாய்” அவன்
ஃபேமிலி என்ற வார்த்தையில் அதிகம் அழுத்தம் கொடுத்துவிட்டுப் போக அவள் காலடியில் நிலம் இரண்டாகிற மாதிரி ஒரு அவஸ்தை.

என்ன தான் ஆரனாஷி தன்னை அம்மா என்று கூப்பிட்டாலும் அவளுடைய உண்மையான தாய் நான் இல்லையே!

அந்த வீட்டில் நான் இருந்தாலும் அவர்கள் குடும்பத்தில் தான் ஒருத்தி இல்லையே!

அந்த வீட்டில் மீண்டும் மீண்டும் தீவாய் உணர்கிறாள்.

அவளுக்கென பற்றிக் கொள்ள ஒரு சிறிய நிலம் கூட இல்லை.

‘இந்த உலகில் தன் மீது நிபந்தனையில்லாத தூய அன்பு காட்ட ஒரு உயிர் கூட இல்லையா!’ வருத்தத்தோடு நினைத்த நேரம் அவள் அலைப்பேசி அலறியது.

எடுத்துப் பார்க்க விஷ்வக்.

அதைக் கண்டு அவள் இதழ்களில் முகில் நகை.

புன்னகையுடன் எடுத்து காதில் வைத்தவள் “சொல்லு விஷ்வக்” என்றாள்.

“மான்யா நீ ஃபீரியா இருந்தா லன்ச் என் கூட ஜாயின் பண்ணிக்கிறியா?” அவன் கேள்விக்கு சரியென்றவள் அடுத்த அரை மணிநேரத்தில் உணவகத்தில் அவனுக்கு முன்பு அமர்ந்து இருந்தாள்.

எதிரே முழு புன்னகையுடன் விஷ்வக்.

“என்ன திடீர்னு லன்ச் ப்ளான் பண்ணியிருக்க விஷ்வக்?” என்றாள் தன் முன்னாலிருந்த பழச்சாற்றை குடித்தபடி.

அதே நேரம் அவள் முன்னே குட்டியாய் ஒரு கேக் கொண்டு வந்து வைக்கப்பட்டது.

அதில் ‘இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்யூச்சர் ஃபேமஸ் சர்ஜன்’ என்ற எழுத்துக்களைப் பார்த்ததும் மான்யாவின் மனம் நெகிழ்ந்தது.

தன் பிறந்தநாளை, வாழ்த்தால் ஆசிர்வதிக்க ஒரு சொல் கூட யாரிடமிருந்தும் உதிரவில்லையே என காலையிலிருந்து ஏங்கியவளின் தவிப்பு தீயை மொத்தமாக அன்பெனும் சொல் கொண்டு அணைத்தான் விஷ்வக்.

கண்ணீர் புகை அவள் குரலை மறைக்க, “தேங்க்ஸ் விஷ்வக்” என்றாள் திக்கி திணறி.

“ஃப்ரெண்ட்ஸ்குள்ளே யாராவது தேங்க்ஸ் சொல்லுவங்களா?” எனக் கேட்டபடி அவள் எதிரே கத்தியை நீட்டினான்.

புன்முறுவலுடன் வாங்கியவள் கேக்கை வெட்டி அவனுக்கு ஊட்டிவிட்டு ஆனந்த கண்ணீரோடு நிமிர்ந்தாள்.

“அப்பாவும் என்னை விட்டுட்டு போன பிறகு இந்த மூனு வருஷமும் என் பிறந்தநாள் ரொம்ப வெறுமையா தான் போச்சு. பட் ஆஃப்டர் லாங் டைம் ஐ யம் சோ ஹேப்பி மேன். உன் அன்புக்கு நான் தகுதியானவளானு தெரியலை” என்றாள் கண்ணில் மினுங்கிய நீரோடு.

“யூ ஆர் சோ ஸ்பெஷல் டூ மீ மான்யா. உன்னை முதல் தடவை பார்க்கும் போதே பிடிச்சுடுச்சு. உன்னோட பழக பழக உன்னை இன்னும் பிடிச்சு போயிடுச்ச” என்றவனை புன்முறுவலோடு பார்த்தாள்.

“எனக்கும் அப்படி தான் விஷ்வக். நம்ம ரெண்டு பேருக்கு இடையிலே ஏதோ ஒன்னு ஒத்துப் போறா மாதிரி ஃபீலிங்” அவள் சொன்ன வார்த்தைகளை ஆமோதித்து அங்கீகரித்தான்.

“வீ ஆர் சேய்லிங் ஆன் தி சேம் போட் மான்யா. உனக்கும் அம்மா அப்பா இல்லை எனக்கும் இல்லை. நீயும் பாசத்துகாக ஏங்குற, நானும் ஏங்குறேன். இன்னும் நிறைய விஷயத்துலே நாம ஒத்து போறோம்” என்றவனை குறும்பு பார்வை பார்த்தாள்.

“ஆனால் ஒரே ஒரு விஷயத்துலே மட்டும் வீ ஆர் ஆப்போசிட்” சொல்லிவிட்டு நிறுத்தியவளை கேள்வியோடு நிமிர்ந்து பார்த்தான்.

“ஷ்யாம்” அந்த ஒற்றை பதிலில் விஷ்வக் இதழில் கற்றைப் புன்னகை.

“உனக்கு ஷ்யாம்னா ரொம்ப பிடிக்கும். பட் எனக்கு அந்த சைக்கோவை சுத்தமா பிடிக்காது. ஆனால் இப்போ” வேகமாக ஆரம்பித்தவள் முடிக்குமிடத்தில் மெல்ல தடுமாறினாள்.

“ஆனால்?” என்றான் விஷ்வக் கூர்மையாக.

“ஆனால் இப்போ அந்த ரோபோவையும் கொஞ்சமே கொஞ்சமா பிடிக்க தான் செய்யுது” என்றவளின் பதிலைக் கேட்டு விஷ்வக் கையெடுத்து மான்யாவை கும்பிட்டான்.

“அம்மா தாயே. நீ முதலிலே ஷ்யாமை எப்படி நினைச்சுயோ அதே மாதிரியே இப்பவும் நினை. டோன்ட் சேன்ஞ் யுவர் ஒப்பினியன்” அவசரமாக சொன்னவனை ஆச்சர்யமாக பார்த்தாள்.

எப்போதும் ஷ்யாமிற்காக வக்காலத்து வாங்குபவனா இன்று அவனுக்கு எதிராக பேசுகிறான்.

“என்ன ஆச்சு விஷ்வக். எப்பவும் ஷ்யாமை ஆஹா ஓஹோனு பேசுவியே. இப்போ எல்லாம் ஏன் டிஃபரெண்டா நடந்துக்கிற?” அவளிடம் கேள்வியின் பாய்ச்சல்.

“ஏன்னா ஷ்யாம் உன் கிட்டே டிஃபரெண்டா நடந்துக்கிறான். உன் விஷயத்துலே மட்டும் சீனியரை முழுசா நம்ப ஏதோ ஒன்னு தடுக்குது மான்யா” என்றவனை புரியாமல் பார்த்தாள்.

“ஏன்” அந்த கேள்விக்கு விஷ்வக்கிடம்  திணறல்.

என்ன தான் நடந்து இருந்தாலும் தன் சீனியரை விட்டுக் கொடுக்க அவனுக்கு  பிடிக்கவில்லை.

ஒருவேளை ஷ்யாம் வஞ்சத்தை உள்ளே வைத்திராமல் வெறும் கோபத்தில் அந்த வார்த்தைகளை அவசரப்பட்டு சொல்லி இருக்கலாம் அல்லவா!

தான் தான் எல்லாவற்றையும் மாற்றி புரிந்து கொண்டு தவறான கண்ணோட்டத்தில் ஷ்யாமை பார்க்கிறோமோ?

அவன் எண்ணத்தில் நூல்கண்டு சிக்கல்.

யோசனையோடு சாளரம் வழியே வெளியே பார்த்தவனின் முகம் வானிலை போல நொடிப் பொழுதில் மாறிப் போனது.

அதை கவனித்த மான்யா “என்னாச்சு விஷ்வக்? ஏன் அந்த பொண்ணையே பார்க்கிற?” கேள்வியால் அவனை உலுக்கினாள்.

சாலையை கடந்து போன பெண்ணை ஜன்னல் வழியே சுட்டிக் காட்டிய விஷ்வக், “ஷ்யாமோட எக்ஸ் லவ்வர்” என்றான் உணர்ச்சி துடைத்த குரலில்.

அவன் காட்டிய திசையின் விளிம்பில் இருந்த பெண்ணைப் பார்த்த மான்யாவின் விழிகள் விரிந்தது.

அந்த பெண்ணின் முகத்தில் அப்படியொரு தேஜஸ் இருந்தது. உயிருள்ள ஓவியமாய் இருந்தாள் அவள்.

பார்க்கும் எந்த ஆணையும் வீழ்த்தும் அழகு அந்த பெண்ணிடம் இருக்க  ஷ்யாமும் அவளிடம் வீழ்ந்ததில் ஆச்சர்யமில்லையே என நினைத்தவளின் முகம் எதை நினைத்தோ இறுகியது.

தன் இருக்கையை விட்டு எழுந்ததவள், விஷ்வக் எதிர்கேள்வி கேட்கும் முன்பே வேகமாக அந்த உணவகத்தை விட்டு அவசர அவசரமாக ஓடினாள்.

ஆனால் அவள் வெளியே வருவதற்குள் அந்த அழகுப் பெண் மாயமாகி மறைந்து இருந்தாள்.

அவள் பின்னாலே பதற்றமாக ஓடி வந்த விஷ்வக் “ஏன் இப்படி ஒடி வந்த?” என்றான் மூச்சு வாங்க.

“அந்த பொண்ணை நேரா பார்த்து நல்லா  நாலு கேள்வி கேட்கணும்னு தான் ஓடி வந்தேன்” கோபமாக சொன்னவளின் மீது விஷ்வக்கின் பார்வை கேள்வியாக விழுந்தது.

“ஆஷி, பாவம் விஷ்வக். அம்மா இல்லாம எவ்வளவு கஷ்டப்படுறா தெரியுமா? ஷ்யாம் கூட அவளுக்கு என்ன வேணாலும் ப்ரச்சனை இருக்கட்டும். அதுக்காக தான் பெத்த குழந்தையை அப்படியே விட்டுடுவாளா?” அவளின் நியாயமான கேள்விக்கு விஷ்வக்கிடம் மௌனம் மட்டுமே பதிலாக.

“அந்த குழந்தை, தன்னோட அம்மா யாருனு கேட்கும் போது கதறி அழுத ஷ்யாமோட முகம் இன்னும் என் கண்ணுலேயே இருக்கு விஷ்வக். ஒரு தகப்பனா அந்த கேள்விக்கு பதிலில்லாமல் நிற்கிறது எவ்வளவு வலி தெரியுமா?” கலக்கமாக கேட்டவளின் தோளை ஆதரவாய் தட்டிக் கொடுத்தான்.

“சில நேரத்திலே விதி கொடூரமா நடந்துக்கும் மான்யா. ஆனால் ஷ்யாம் விஷயத்திலே விதி ரொம்ப விளையாடிடுச்சு. அந்த பிஞ்சு குழந்தையோட நிராதரவா சென்னைக்கு வந்த ஷ்யாமோட முகம் இன்னும் என் கண்ணுலே இருக்கு. மனநலம் சரியில்லாத மீனாட்சியம்மாவையும் சரியா பார்த்துக்க முடியாம அந்த குழந்தையை எப்படி வளர்க்கிறதுனும் தெரியாம தனியாளா சீனியர் தவிச்ச தவிப்பு, ஐயோ அது நரகம்” விஷ்வக்கின் கலக்கமான வார்த்தைகள் மான்யாவின் மனதில் இமயமலை பாரத்தை ஏற்றி வைத்தது.

💐💐💐💐💐💐💐💐💐

இருள் கவிந்த முகத்தோடு வீட்டிற்கு உள்ளே நுழைந்த மான்யாவின் கண்களில் ஆச்சர்யத்தின் அதிர்வுகள்.

அவள் முன்னே ‘ஹேப்பி பர்த் டே மானு அம்மா’ வார்த்தைகளை சுமந்து நின்றது அழகிய கேக்.

எதற்கும் அசையாத மான்யா, அன்பிற்கு அசைந்து போக அவள் கண்களில் முணுக்கென்று கண்ணீரை துளிர்த்தது.

ஆரனாஷி வேகமாக ஓடி வந்து “எப்படி எங்களோட சப்ரைஸ்?” என்று கேட்க மான்யாவிடம் ஆனந்த கண்ணீரே பதிலாக.

ஆஷியை அணைத்து முத்தமிட்டவாறே நிமிர்ந்து ஷ்யாமை பார்த்தாள்.

“ஹேப்பி பர்த்டே மை இன்டெர்ன்” இன்முகத்துடன்  சொன்னவன் அவள் எதிரே கத்தியை நீட்ட புன்முறுவலோடு வாங்கியவள் அந்த கேக்கை வெட்டி ஆஷிக்கும் ஷ்யாமிற்கும் ஊட்டியவள், நேராக மீனாட்சியம்மாளிடம் சென்றாள்.

அவர் காலில் விழுந்து எழுந்தவள்,
“அம்மா என்னை ப்ளஸ் பண்ணுங்க” ஆசையாக கேட்டபடியே கேக் துண்டை மீனாட்சியம்மாளிடம் நீட்டினாள்.

அவர் உதடுகள் தன்னால் திறந்து அந்த கேக்கை வாங்கிக் கொள்ள, எப்போதும் அசையாத அவர் கைகளில் இப்போது மெல்லிய அசைவு.

நடுங்கிய கைகளுடன் மான்யாவின் தலைகளை வாஞ்சையாய் வருடியவரைக் கண்டு ஷ்யாமிடம் அப்பட்டமான அதிர்வு.

வேகமாக தன் அன்னையின் அருகே வந்த ஷ்யாம் அவர் முன்னே மடிந்து அமர்ந்தான்.

கண்களில் மருகலுடன், “அம்மா இன்னைக்கு எனக்கும் பர்த்டேலமா. ப்ளீஸ் என்னையும் ப்ளஸ் பண்ணுங்க” அவன் கெஞ்சலாய்க் கேட்க அவரது கைகள் மான்யாவின் தலையை விட்டு அசையவே இல்லை.

இன்று அவனுக்கும் பிறந்தநாள் என அறிந்த மான்யா திகைத்து திரும்ப அவன் கண்களோ அடிப்பட்ட வலியோடு தன் தாயையே பார்த்து கொண்டிருந்தது.

“அப்பா, அப்போ இன்னைக்கு தான் உங்க பர்த்டேவா. எத்தனை வருஷமா உங்க பர்த்டே என்னைக்குனு கேட்டு இருப்பேன். ஏன் சொல்லலை?” கேள்வியோடு ஓடி வந்து ஷ்யாமை அணைத்துக் கொண்டாள் ஆரனாஷி.

அவன் அசைவே இல்லாமல் தன் தாயையே வெறித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு இப்போது வேண்டியது தன் தாயின் ஒரு துண்டு நிழல்.

ஆனால் அது கிடைக்காமல் அவன் இதயம்  வெம்மையில் தகித்துக் கொண்டிருந்தது.

அவன் உணர்வுகளைப் புரிந்து கொண்ட மான்யா, தன் சிரத்திலிருந்த மீனாட்சியம்மாளின் கரத்தை எடுத்து ஷ்யாமின் தலை மீது வைத்துவிட்டு அவர் கைகளோடு தன் கைகளை இறுக்கிக் கொண்டாள்.

அந்த மீட்சியின் புனித கரங்கள் தன்னைத் தொட்டதும் அவன் கண்களில் குளமாய் கண்ணீர் கட்டியது.

தன் கண்ணீரை மறைத்துக் கொண்டு வேக வேகமாக தன்னறைக்கு சென்றவனின் பின்னே ஆரனாஷியும் ஒடினாள்.

மான்யாவின் பார்வை கலக்கமாக அவர்களின் மீது படிந்தது.
தாயின் அன்பிற்காக ஏங்கிய அந்த ஷ்யாமின் முகம் அவளை ஏதோ செய்தது.

இனம் புரியாத உணர்ச்சியின் பிடியில் தன்னறைக்குள் நுழைந்த மான்யாவின்  மனம் எதிரே இருந்த பரிசுப் பொருளைக் கண்டதும் மீண்டும் அதிர்ந்தது.

ஒரு நாளில் எத்தனை இன்ப அதிர்ச்சி தான் தாங்குவாள்!

தன் மேஜை மேல் வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருளை ஆர்வத்தோடு எடுத்தாள்.

‘டு மை இடியட் இன்டெர்ன்’ என்று எழுதியிருந்த வார்த்தைகளைப் படித்ததும் ‘சைக்கோ ஷ்யாம்’ என்ற முணுமுணுப்போடு பிரித்தாள்.

அவளுக்கு மிகவும் பிடித்த கொலுசு பரிசாய் உருவெடுத்திருக்க மனமெங்கும் சிற்றோடையின் சங்கீதம்.
அவளுக்கு கொலுசு என்றால் கொள்ளைப் பிரியம்.

‘தனக்கு கொலுசு பிடிக்குமென்று எப்படி அவனுக்கு தெரியும்?’

உள்ளுக்குள் எழுந்த கேள்வியோடு ஏற்கெனவே தன் காலில் அணிந்திருந்த கொலுசை கழற்றியவள், அவன் கொடுத்த கொலுசை கால்களில் அணிந்துவிட்டு தன் கால்களை வேகமாக அசைக்க அதிலிருந்து ஏழு ஸ்வரத்தின் இசை.

அந்த ஸ்வரத்திற்குள் காதலின் ராகமும் கலந்து இருக்கின்றதோ!