உடையாத(தே) வெண்ணிலவே 24a
உடையாத(தே) வெண்ணிலவே 24a
காதல்!
அது ஒரு பட்டாம்பூச்சி
நெருங்கும் போது விலகி, விலகும் போது நெருங்கி பல நூறு வண்ணங்கள் காட்டும். பிடிக்க முற்பட்டாலோ விரல்களை ஏமாற்றி பறந்து போய்விடும்.
அப்படி தான் அவளை ஏமாற்றிவிட்டு, பறந்துப் போய்விட்டான் ஷ்யாம் சித்தார்த்.
மான்யாவிற்கு காதல் உயிருள்ள பட்டாம்பூச்சி. ஆனால் ஷ்யாமிற்கோ அது பிளாஸ்டிக் பட்டாம்பூச்சி.
நினைத்த மாத்திரத்தில் அவள் இதழ்களில் வேதனை வளைவு. அவன் இறுதியாக சொல்லிவிட்டு போன வார்த்தைகளை நினைக்க நினைக்க மான்யாவின் மிருதுவான இதயம் கடினமாகிக் கொண்டிருந்தது.
அவன் தன்னிடம் இப்போதும் நடித்துக் கொண்டிருந்தான் என்பதை நம்ப முடியவில்லை அவளால்.
காற்றில் கிழியும் இலையாய் அவன் வார்த்தைகளால் கிழிந்து போய் அமர்ந்திருந்த, மான்யாவின் தோளின் மீது ஒரு கரம் விழுந்தது.
நிமிர்ந்துப் பார்த்தாள். எதிரே விஷ்வக்.
அவளின் சோகம் இழையோடிய முகத்தைக் கண்டவன், “என்ன ஆச்சு? உன் ஷிஃப்ட் முடிஞ்சும் போகாம உட்கார்ந்துட்டு இருக்க” கேள்வியோடு அவளருகில் அமர்ந்தான்.
அவளிடம் பதிலில்லை. மௌன வெறிப்பு மட்டுமே.
மெதுவாக அவள் தோளை உலுக்கியவன், “ஷ்யாம் ஏதாவது திட்டிட்டானா?” புருவ சுருக்கத்தோடு கேட்டவனின் கேள்வியில் கலைந்தாள்.
“நீ என் கிட்டே அவ்வளவு எடுத்து சொல்லியும் நான் ஏமாந்துட்டேன் விஷ்வக்” கேவலோடு தலையில் அடித்துக் கொண்டாள்.
“யாரு கிட்டே ஏமாந்த மான்யா?” திடுக்கிலுடன் கேட்டான்.
“தி கிரேட் சர்ஜன், ஷ்யாம் சித்தார்த் கிட்டே” கசப்பாய் வளைந்தது அவள் உதடுகள்.
“வாட்?” அவனிடம் அப்பட்டமான அதிர்வு.
“நீ சொன்னதை நான் கேட்டு இருக்கணும் விஷ்வக். ஆனால் நான் அதையும் மீறி ஷ்யாமை நம்பிட்டேனே. என் தப்பான முடிவுக்கு இந்த தண்டனை தேவை தான்” என்றாள் கதறியபடி.
“நோ மான்யா, சீனியர் கண்ணுலே இப்போ எல்லாம் உன்னைப் பார்க்கும் போது ஏதோ சேன்ஞ் தெரியுது. ஐ திங்க் ஹீ இஸ் இன் லவ் வித் யூ” அவன் ஆறுதலான வார்த்தைகளைக் கேட்டு வேகமாக மறுத்து தலையசைத்தாள்.
“ஷ்யாமே சொல்லிட்டான். அவன் என்னை காதலிக்கலையாம். அப்போ ஆரம்பிச்ச விளையாட்டை இதோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரை ப்ளே பண்ணேன்றதை அவனே ஒத்துக்கிட்டான்”
வேதனையின் உச்சத்தில் கதறிக் கொண்டிருந்த மான்யாவைப் பார்க்க பார்க்க அவனுக்கு, ஷ்யாமின் மீது கோபம் பன்மடங்கு எகிறியது.
தான் மீராவை தவிர்க்க வேண்டி, இரவு ஷிஃப்டை வாங்கியது பிழையாகிப் போய்விட்டதோ? குற்றவுணர்வோடு அவளைப் பார்த்தான்.
அன்று ஷ்யாமைப் பற்றி சொல்லும் போது அவனுக்காக நிமிர்ந்து நின்று வாதிட்ட மான்யாவின் முகம் மனக்கண்ணாடியில் தோன்றி மறைந்தது. ஆனால் இன்றோ இப்படி சில்லு சில்லாக உடைந்துப்போய்விட்டாளே!
ஒரு முடிவோடு எழுந்தவன் நேராக ஷ்யாமின் அறையை நோக்கி சென்றான்.
சுழல் நாற்காலியில் அமர்ந்தபடி சிந்தனையின் சுழலில் அகப்பட்டிருந்த ஷ்யாம், கதவு தட்டும் ஓசையில் கலைந்தான்.
அவனுக்கு தெரியும் வந்திருப்பவன் விஷ்வக் தான் என்று.
மான்யாவிற்கு ஒன்று என்றால் யாராய் இருந்தாலும் விஷ்வக் எதிர்த்து நிற்பான்.
அது தானாய் இருந்தால் கூட அவளுக்காக எதிர்க்க தயங்க மாட்டான் என்பதை ஷ்யாம் தெரிந்தே வைத்திருந்தான்.
‘தன் நண்பன் கூட இப்போது அவள் பக்கம்!’ உதடுக்குள் உதிர்ந்த கசந்த முறுவலுடன், “யெஸ் கம் இன்” என்றான் வேகமாக.
உள்ளே நுழைந்த விஷ்வக் முகம் தீஜுவாலையாய் இருக்க வார்த்தைகளும் அனலை கக்கியது.
“ஷ்யாம், நீ பண்ணது சரியா? மான்யாவிற்கு ஏன் துரோகம் பண்ண?” அவன் கேள்வி ஷ்யாமை நிமிர்ந்து பார்க்க வைத்தது.
“இது எனக்கும் மான்யாவுக்கும் இடையிலே இருக்கிற பர்செனல்.இதை தவிர வேற எது வேணாலும் பேசு விஷ்வக்.” ஒட்டும் ஒட்டாமலும் வந்தது அவன் வார்த்தைகள்.
“பண்றதெல்லாம் பண்ணிட்டு, பர்செனலாம் பர்சனல். அவள் மனசை துண்டு துண்டா உடைச்சுட்டு இப்படி கல்லு மாதிரி நிற்கிறியே… உனக்கு கொஞ்சம் கூட வலிக்கலையா?” என்றான் ஆற்றாமை மேலிட.
அந்த கேள்விக்கு ஷ்யாம் மௌனத்தையே பதிலாக தரவும் விஷ்வக் ஆத்திரமானான்.
“உன்னை நம்புனாடா அவள். நீ விளையாடுறேன்ற உண்மையை நான் அவள் கிட்டே உடைச்சு சொன்ன அப்புறம் கூட உன்னை நம்புனாடா. ஆனால் அவளை இப்படி உடைச்சு போட்டுட்டியே” விஷ்வக்கின் வார்த்தைகள் அவன் மனமெங்கும் அதிர்வை ஏற்படுத்தியது.
“வாட்! நீ சொன்ன அப்புறமும் அவள் நம்புனாளா?” கேட்கும் போதே அவன் குரலில் கீறல்.
“யெஸ் ஆனால் நீ மான்யாவோட உணர்வுகளை உடைச்சு போட்டுட்ட. பெரிய தப்பு பண்ணிட்ட ஷ்யாம். இதுக்கு நீ நிச்சயமாய் அனுபவிப்ப” விஷ்வக் ஆத்திரமாய் கத்திவிட்டு செல்ல ஷ்யாம் நின்ற சிலையாகிப் போனான்.
ஆலமரமாய் வளர்த்த அவள் நம்பிக்கையின் மேல் தான் வார்த்தை கத்தியை வீசிவிட்டேனா?
அன்றவள் ஆஷிக்கு, ராஜா ராணியை ஏமாற்றிய கதையை சொல்லும் போது, என் முகத்தை ஒரு மாதிரி ஊடுருவிப் பார்த்தாளே, நான் குற்றவுணர்வு கொள்கிறேனா என்று பார்க்க தானோ?
நானும் அவள் வார்த்தையில் கலங்கிப் போய் குனிந்துவிட்டேனே!
எனக்குள்ளே எங்கோ மறைந்து கிடந்த, காதல் என்னை அறியாமல் வெளிப்பட்டு போய்விட்டதோ? அதை அவளும் கண்டு கொண்டுவிட்டாளா?
எண்ண நூல்கள் மனதை சுற்ற துவங்க அதில் சிக்கி கொண்டவன், இடிந்துப் போய் நாற்காலியில் அமர்ந்தான்.
அவனுக்குள்ளே திரும்ப திரும்ப அந்த ஒரே கேள்வி தான் ஒலித்துக் கொண்டிருந்தது.
‘அவளின் இத்தனை அன்புக்கும் நம்பிக்கைக்கும் நான் தகுதியானவன் தானா?’ கேள்வியோடு அவள் கொடுத்து விட்டுப் போன ஈ.சி.ஜி ரிசல்டைப் பார்த்தான்.
💐💐💐💐💐💐💐💐💐💐
மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்த ஷ்யாம், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக மீனாட்சியம்மாளை சாப்பிட வைக்க போராடிக் கொண்டிருந்தான்.
மான்யா வராமல், அவள் வார்த்தையை கேட்காமல் அவரிடம் ஒரு அணு கூட அசையவில்லை.
“அம்மா ப்ளீஸ் ஒரே ஒரு வாய் மட்டும் வாங்கிக்கோங்க” கெஞ்சலாய் கேட்டவனின் வார்த்தைகள் தன் செவியில் விழாதது போலவே அமர்ந்திருந்தார்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன் ஒரு கட்டத்தில் தன் அமைதியை தகர்த்தான்.
“அம்மா நீங்க மான்யா இல்லாம வாழ பழகிக்கணும். அது தான் உங்களுக்கு நல்லது” தீர்க்கமாக சொன்னவனின் வார்த்தைகள் மீனாட்சியம்மாளை அசைத்தது.
அதுவரை எதற்கும் எதிர்வினையாற்றாமல் அமர்ந்திருந்தவர் சட்டென தட்டை தூக்கி அவன் முகத்தில் விசிறியடித்தார்.
அதிர்வாய் ஷ்யாம் பார்க்க, மீனாட்சியம்மாளின் விழிகளிலிருந்து கோடாய் கண்ணீர்.
அதைக் கண்டு ஆற்றாமையாக தன் தலையில் அடித்துக் கொண்டவன், “அம்மா நானே கெஞ்சி கூப்பிட்டாலும் அவள் உன்னைப் பார்த்துக்க வர மாட்டா. மான்யா இனி நமக்கு வேண்டாம்மா. புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்” அவன் கலக்கமாய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் அருகில் மான்யாவின் நிழலுரு விழுந்தது.
“எனக்கு கோவம் ஆத்திரம் எல்லாம் உன் மேலே மட்டும் தான் ஷ்யாம். நீ பண்ண பாவத்துக்கு ஏன் மீனாட்சியம்மாவும் ஆஷியும் தண்டனை அனுபவிக்கனும்?” வார்த்தையில் ஊசி ஏற்றி கேட்டாள்.
அவனிடம் பதில்மொழி இல்லை, மௌனமாக வெளியே வந்து நின்றான்.
மீனாட்சியம்மாளுக்கு உணவை ஊட்டி முடித்துவிட்டு வெளியே வந்த மான்யாவை, ஷ்யாம் ஒரு பார்வை பார்த்தான். அவளும் பதிலுக்கு நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள்.
காதல் கசியும் அவள் மான் விழிகளில் இப்போது ரத்த வேட்கை படர்ந்திருந்தது.
“நான் இவ்வளவு பண்ணியும் உனக்கு ஏன் என் மேலே முழுசா கோவம் வரலை மான்யா? என் அம்மாவை இன்னும் இவ்வளவு பாசமா பார்த்துக்கிறியே, ஏன்?” சன்னமான குரலில் அவன் கேள்வி.
“உன்னை மாதிரி அன்பை வெச்சு விளையாட நான் என்ன மிருகமா ஷ்யாம்? நான் அவங்க மேலே வெச்ச பாசம் உண்மை. அதுக்காக என்ன வேணாலும் பண்ணுவேன்” என்றாள் நிமிர்வான குரலில்.
அவள் பதில் அவனை ஏதோ செய்தாலும் உடனே தன்னை சமன் செய்து கொண்டு அவளை நிமிர்ந்துப் பார்த்தான்.
“இது தான், இந்த அன்பு தான் உன் மேலே எனக்கு கோவத்தை ஏற்படுத்துச்சு. ஏன் மான்யா, நீ என்னை ஜெயிக்கணும்ன்றதுகாக அன்பை கொண்டு வீழ்த்த நினைச்ச?” என்றான் உணர்வற்ற குரலில்.
தன் மீது காரணமில்லாமல் அவன் போட்ட பழி மான்யாவை கோபமாய் நிமிர்ந்து பார்க்க வைத்தது.
“நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன். சும்மா அன்பு வைச்சு விளையாடுனேன், விளையாடுறேனு சொல்றீங்களே. எப்போ நான் விளையாடுனேனு தெரிஞ்சுக்கலாமா?” என்றாள் உதடுகளில் கோபம் மின்ன.
அவளிடம் முதன் முதலாய் செவிலியர்களிடம் பேசியதை மறைந்திருந்து கேட்டது முதற் கொண்டு இப்போது அவர்கள் பேசியது வரை சொல்லிவிட்டு அவளை கூர்ந்துப் பார்த்தான்.
அவள் முகத்தில் அலையென வருத்தம்.
எத்தனை நம்பினேன் இவனை, ஆனால் இவன் என்னை ஒரு துளி கூட நம்பவில்லையே.
அவன் மறைந்திருந்து கேட்ட விஷயங்களைப் பற்றி என்னிடம் ஒரு முறையாவது விவாதித்து இருக்கலாமே.
அப்படி செய்திருந்தால் இத்தனை பெரிய கொடுமை தனக்கு நிகழ்ந்து இருக்காதே.
நான் மீனாட்சியம்மாளிடம் பாசமாய் இருப்பதைப் பார்த்து தான் விஷ்வக்கிடம் பொறாமையில் அப்படி சொல்லியிருப்பான் என்று நினைத்தது எத்தனை பெரிய தவறு.
அவள் ஷ்யாமைப் பற்றி வைத்த ஒவ்வொரு அபிப்ராயமும் தவறு. மிகப் பெரிய தவறு!
எத்தனை சூழ்ச்சி பின்னல்களை எனக்கு தெரியாமல் என் வாழ்வில் பின்னியிருக்கிறான் இவன்!
உதடு துடிக்க நிமிர்ந்தவள், “நீயெல்லாம் மனுஷனே இல்லை ஷ்யாம். உன்னை காதலிச்சதுக்காக நான் வெட்கப்படுறேன்” என்றாள் கண்களில் வெறுப்பு மின்ன.
அது வரை நிமிர்வாய் நின்று கொண்டிருந்த ஷ்யாம், அவளது இறுதி வார்த்தையில் முறிந்தான்.
“இன்டெர்ன்” அவன் குரல் நடுங்கியது.
“டோன்ட் கால் மீ இன்டெர்ன். ஐ யம் மிஸ். மான்யா சுந்தர்” கர்ஜனையாய் சொல்லிவிட்டு திரும்பிய நேரம் “மானுமா” என்ற அழைப்போடு ஆரனாஷி அங்கே வந்தாள்.
ஆஷியின் கையை இறுக்கமாக பற்ற, ஷ்யாம் ஒரு வித தவிப்போடு இணைந்திருந்த அவர்கள் கையைப் பார்த்தான்.
அவன் முகம் போன போக்கைக் கண்டு திருப்தியுற்றவள், ஆஷியின் கையை இன்னும் அழுத்தமாக பற்றிக் கொண்டு, “எனக்கு இப்போ அன்பை வெச்சு விளையாட தோணுது ஷ்யாம். விளையாடட்டுமா?” என்றாள் இதழை சுழித்து.
அந்த கேள்வி தீப்பட்டாற் போல அவனை திகைத்து நிமிர வைக்க, “மான்யா?” என்றான் வேகமாக.
அவன் தவிப்பைக் கண்டு ரசித்து சிரித்தவள், “பயப்படாதே ஷ்யாம் உன்னை மாதிரி நான் அரக்கன் இல்லை, எந்த தப்பும் பண்ணாதவங்களை தண்டிக்கிறதுக்கு” அவள் அவனை சொல்லால் குத்தியபடி, ஆரனாஷி அருகே இன்னும் நெருங்கி நிற்கவும் ஷ்யாமிடம் கலக்கம்.
ஆரனாஷி புரியாமல் பார்க்க சட்டென்று கலைந்த மான்யா, “ஆஷிமா இன்னைக்கு நாம நியூ பில்டிங் கட்டலாமா?” என்றாள் அவள் கன்னத்தை வாஞ்சையாய் வருடியபடி.
“ஓகே மானுமா” ஆர்வமாய் சொல்லியபடி மான்யாவின் கையைப் பிடித்தபடி செல்லும் தன் குழந்தையையே கலக்கத்தோடு பார்த்தான்.
மான்யாவின் அன்பு ரேகையில் உறைந்து போன ஆரனாஷியின் விரல்களை எப்படி பிரித்தெடுக்கப் போகிறோம்? நினைக்கும் போதே அவன் உடைந்துப் போனான்.