உடையாத(தே) வெண்ணிலவே 26

மீட்சி!

எத்தனை பெரிய துயரத்தில் இருந்தாலும் ஒரே ஒரு அன்பின் கரம் அருகிலிருந்தால் வேகமாக மீட்சியடைந்துவிட முடியும்.

மான்யா கண் விழிக்கும் போது அவளைச் சுற்றி ஒரு கரத்திற்கு பதிலாய் நான்கு ஜோடி கரங்கள் சுற்றியிருக்க அவள் முகத்தில் அத்தனை ஆசுவாசம்.

இதுவரை அனாதை என்ற உணர்வில் சிக்கித் தவித்த தன் அருகில் இத்தனை உறவுகள் நிற்பது அவளுக்குள் பெரும் பலத்தை கூட்டியது.

ஆஷி வேகமாய் நெற்றியில் குங்கும தீற்றலை வைத்துவிட்டு கண்ணீரோடு மான்யாவைப் பார்த்தாள்.

“மானுமா, நான் உங்களுக்காக இப்போ தான் கடவுள் கிட்டே சண்டை போட்டுட்டு உள்ளே வந்தேன், கரெக்டா நீங்களும் முழிச்சுட்டீங்க” ஆனந்தத்தில் கரைந்திருந்தது ஆஷியின் வார்த்தைகள்.

மான்யா மென்மையாக முறுவலித்தவாறே தன் கரத்தைப் பார்க்க, மீனாட்சியம்மாள் பரிதவிக்கும் விழிகளோடு மான்யாவின் விரல்களை பிடித்திருந்தார்.

மான்யா திகைத்துப் பார்க்க மீராவோ, “உன்னை விட்டு மீனாட்சியம்மா ஒரு நொடி கூட தள்ளிப் போகலை மான்யா. மூனு நாள் முன்னாடி பிடிச்ச உன் கையை இப்போ வரை விடலை” என்றாள் மென்முறுவலோடு.

தன் மீது மீனாட்சியம்மாள், இத்தனை பாசம் காட்டும் அளவிற்கு நான் அப்படி என்ன செய்தேன்! அவள் கண்களிலிருந்து கோடாய் விழிநீர் இறங்க, மீரா பதறிப் போனாள்.

“என்னாச்சு மான்யா, ரொம்ப வலிக்குதா?” என்றாள் வேகமாக.

“நோ, ரொம்ப சந்தோஷமா இருக்கு. இத்தனை பேரோட அன்பு எனக்கு கிடைச்சதை நினைச்சு” நெகிழ்ச்சியாக சொன்னவளின் விழி தேடல் இறுதியாக ஷ்யாம் சித்தார்த்திடம் வந்து முடிந்தது.

சுவற்றில் சாய்ந்து கைகட்டியபடி அவளையே வெறித்துப் பார்த்து நின்றிருந்தான் அவன். அவள் புருவம் உயர்த்த வேகமாக முகத்தைத் திருப்பி கொண்டவன் ஆரனாஷியின் கைப்பிடித்து வெளியே வந்தான்.

செல்லும் அவனையே வருத்தமாக பார்த்தவளின் தலையை வாஞ்சையாய் வருடிக் கொண்டிருந்தது மீனாட்சியம்மாளின் கரங்கள்.

ஷ்யாம் ஒரு வித தயக்கத்துடன் ஆரனாஷியைப் பார்த்தான்.

“ஆஷிமா” என்றழைத்தவனது குரலிலும் தடுமாற்ற அலைகள்.

“சொல்லுங்கபா”

“மானு அம்மாவை உனக்கு எவ்வளவு பிடிக்கும்?” என்றவனின் கேள்விக்கு தன் இரண்டு கைகளையும் பெரியதாக விரித்து “இவ்வளவு பிடிக்கும்” என்றாள் மலர்வாக.

அதைக் கண்டு புன்னகைத்தவன், “உன் ஃப்ரெண்ட்ஸ் வீட்டுலேலாம் அவங்க அம்மா அப்பா ஒன்னா சேர்ந்து இருக்கிறா மாதிரி நானும் மானுமாவும் ஒன்னா இருந்தா உனக்கு ஓகேவாடா” சிறுகுழந்தையிடம் பக்குவமாக கேட்டான்.

அவள் ஷ்யாம் முகத்தையே குட்டிக் கண்களால் உருட்டிப் பார்க்க, “டாடி, மானு அம்மாவை கல்யாணம் பண்ணிக்கட்டுமா ஆஷிமா? உனக்கு இதுலே சம்மதமா?” என்றான் தயங்கி தயங்கி.

வேகமாக அவன் அருகே வந்த ஆரனாஷி, அவன் கையைப் பிடித்து இழுக்க, ஷ்யாமும் அவள் உயரத்திற்கு குனிந்தான்.

ஆரனாஷி தன் தந்தையின் விழிகளை ஊடுருவிப் பார்க்க, ஒருவித தயக்கத்துடன் குனிந்தவனின் முகத்தைத் தாங்கிப் பிடித்தாள்.

“ஐ லவ் யூ சோ மச்பா. எனக்கு மானுமா வேணும். சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோங்க”  ஆஷி கன்னத்தில் முத்தமிட்டு சம்மதம் சொன்ன திருப்தியில் மலர்ந்த அவன் உதடுகள் அங்கே வந்து நின்ற வெங்கட்ராமை கண்டு இறுகியது.

“மீரா அத்தை கிட்டே பாட்டியை சாப்பிட கூட்டிட்டு போக சொல்லுடா. அப்பா வந்துடுறேன்” என்றுரைத்துவிட்டு வெங்கட்ராமிடம் திரும்பினான் என்ன என்ற கேள்வியோடு.

“மான்யா உனக்கு வேண்டாம் ஷ்யாம். பின்னாலே ஏற்பட போற விளைவுகளை உன்னாலே தாங்கிக்க முடியாது” என்றார் ஒருவித கடின குரலில்.

அவர் வார்த்தைகள் அவனை மௌனமாக்கியது.

“இப்பவே மான்யாவை விட்டு விலகிடு ஷ்யாம். அதான் உனக்கு நல்லது” திரும்பவும் அவர் அழுத்தி சொல்ல அவன் மனம் எதை எண்ணியோ நடுங்கியது.

ஆனாலும் உயிர் போகும் நிலையிலும் ‘டூ யூ லவ் மீ?’ என்று தன் பதிலுக்காக மருகி நின்றவளை உடைத்து போட அவனுக்கு விருப்பமில்லை.

ஒரு முடிவோடு நிமிர்ந்தான்.

“பரவாயில்லை என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன். எனக்கு மான்யா வேணும். அவளை என்னாலே இழக்க முடியாது” என்றான் உடைய முயன்ற கண்ணீரை அடக்கிக் கொண்டு.

“இந்த முடிவுக்காக பின்னாலே ஒரு நாள் கண்டிப்பா வருத்தப்படுவ ஷ்யாம்” அவரின் வார்த்தைகள் அவனை நெடுநேரம் வரை அப்படியே நிற்க வைக்க,  ஒரு பெருமூச்சோடு மான்யாவின் அறைக்குள் நுழைந்தான்.

அவள் இவனையே வைத்தக் கண் வாங்காமல் பார்க்க வேகமாய் முகம் திருப்பிக் கொண்டான் இவன்.

“ஓய் சிட்டி ரோபோ இப்போ எதுக்கு கோவம்” என்றாள் மெல்லிய புன்னகையோடு.

“பண்றதெல்லாம் பண்ணிட்டு சிரிப்பு வேற. அந்த கொலுசுகாக எதுக்கு அப்படி ஓடுனே இடியட் இன்டெர்ன்” என்றான் அவள் கையைப் பிடித்துக் கொண்டு.

“என் லவ்வர் எனக்கு முதன்முறையா தந்த கிஃப்ட் அதான் ஓடுனேன்.  ஆனாலும் அதை எடுக்குறதுக்குள்ளே நசுங்கிப் போயிடுச்சே” வருத்தத்தோடு சொன்னவளின் காலை மென்மையாக பற்ற அவள் நரம்புகளுக்குள் காதல் நதி பாய்ந்தது.

தன் கோர்ட்டிலிருந்து கால் சங்கிலியை எடுத்து மாட்டியவனின் கரங்களோ அவள் பாதங்களை மயிலிறகாய் வருடியது.

“உனக்காக ஒரு கொலுசு குடோவுனே வாங்கிட்டேன். இனி கால் கொலுசு எடுக்க போய் எங்கேயாவது சில்லறை வாறி வைக்காதே சரியா?” கேலியாக சொல்ல முயன்றாலும் அவன் கண்ணில் ஏதோ ஒரு வலி ஊடாட கை நீட்டி அவனை அழைத்தாள்.

அருகே வந்தவனின் கையைப் பிடித்துக் கொண்டவள், “பயந்துட்டியா?” என்றாள் வாஞ்சையாக.

“உயிரே போயிடுச்சுனு டயலாக் சொல்ல நான் ஒன்னும் அலைபாயுதே ஹீரோ மாதவன் இல்லை” என்றான் எங்கோ பார்த்தபடி.

“ஓஹோ, அப்படிங்களா” என்றவள் வாகாக கட்டிலில் சாய முயல இவன் தலையணையை பின்னால் வைத்தான்.

“அப்போ நீங்க எனக்காக ஃபீல் பண்ணலை, ஹீரோ இல்லைனு சொல்ல வரீங்க ரைட்?” என்றாள் கேள்வியாக.

அவளை வெறுப்பேற்றும் நோக்கில் ஆமோதித்து தலையாட்டினான்.

அவள் பார்வை அருகில் வைத்திருந்த தன் கைப்பையின் மீது விழவும் வேகமாக கைப்பையை எடுத்து வந்து தந்தான்.

உள்ளிருந்து ஒரு காகிதத்தை எடுத்து அவனைப் பார்த்தவள், “என்னை காதலிக்கிறனு நீங்க ஆக்ஸிடென்ட் ஆன அப்போ ஒத்துக்கிட்டது உண்மை தானே. இல்லைனா அதுவும் கேம் பொய்னு சொல்ல போறீங்களா…” அவள் முடிக்கும் முன்பே அவளது இதழை வேகமாய் கரம் கொண்டு மூடியவன் “ஐ ரியலி லவ் யூடா” என்றான் காதலாக.

அவள் பதிலில் கர்வசிரிப்போடு  அந்த காகிதத்தை அவன் முன்பு நீட்டினாள்.

திறந்து வாங்கிப் பார்த்தவனின் விழிகள் மாற்றம் கொண்டது.

அன்று மான்யாவிடம் “இது காதலில்லை வெறும் நடிப்பு” என்று சொல்லிவிட்டு தன் அறைக்குள் வந்து விழுந்தவன், இதற்கு முன்பு அவள் கொடுத்துவிட்டுப் போன தங்களுடைய ஈ.சி.ஜி காகிதத்தில் நடுக்கத்துடன் எழுதிய வரிகள் அவை.

என்னுடைய இதயத்துடிப்பாக இருக்க சம்மதமா என்ற கேள்விக்கு பக்கத்தில்,

“எனக்கு உன் இதயத்துடிப்பா இருக்க ரொம்ப ஆசை இன்டெர்ன். ஆனால் நான் உனக்கு தகுதியானவன் இல்லையே. என் பொண்ணை உன்னாலே முழு மனசா ஏத்துக்க முடியுமானு பயமா இருக்கு. அதான் உன்னை ஹர்ட் பண்ணிட்டேன். ஐ யம் சாரி” என்று பதிலாக எழுதியிருந்தது.

இது எப்படி இவள் கையில் கிடைத்தது என பார்க்க “நீங்க கேம்னு சொன்ன கோவத்துலே எதுக்கு என் இதயத்துடிப்பு உங்க கிட்டே இருக்கணும்னு ரிப்போர்ட்டை எடுக்க வந்தப்போ கண்ணிலே அகப்பட்டுச்சு” என்று நிறுத்தியவள் அவனை காதலாய் பார்த்தாள்.

“இந்த காகிதத்திலே நீ எழுதியிருக்கிற காதலை, உன் வாயாலே ஒத்துக்க வைக்கிறதுக்குள்ளே முடியலை ஷ்யாம்” என்றாள் செல்லமாக அவன் முக்குநுனியை ஆட்டி.

அவன் ஸ்தம்பிப்பிலிருந்து விலகவே இல்லை.

தன் காதலை தெளிவாக கண்டு கொண்டவளிடம் இதெல்லாம் நடிப்பு என்று சொன்னால் எப்படி நம்புவாள்?

அதனால் தான் பின்னால் சுற்றி தன் வாயாலேயே காதலை ஒத்துக் கொள்ள வைத்திருக்கின்றாள்.

அவன் இதழில் புன்னகை தளிர்.

ஷ்யாமின் தாடையை மிருதுவாக வருடி, “ஆஷி, நம்ம பொண்ணு ஷ்யாம். நான் அவளை பத்திரமா பார்த்துப்பேன்” ஆதூரமாக சொன்னவள் அவன் கைகளை இறுகப் பற்றினாள்.

“ஏதோ ஒன்னு சொல்ல முடியாமல் தவிக்கிறீங்கனு என்னாலே புரிஞ்சுக்க முடியுது. உங்களுக்கு எப்போ அதை ஷேர் பண்ண தோணுதோ அப்போ சொல்லுங்க. அது வரை உங்களை ஃபோர்ஸ் பண்ண மாட்டேன்” என்றவளை இமை தட்டாமல் பார்த்தான்.

எத்தனை பேருக்கு கிடைக்கும் இத்தனை புரிதல் வாய்ந்த காதலி!

அவன் இதழ்கள் புன்னகையால் வளைந்த நிமிடம் அடுத்து அவள் கேட்ட கேள்வியில்

கலங்கியது.

“ஆமாம் விஷ்வக் ஏன் இன்னும் இங்கே வரலை?”

“அவன் நம்ம எல்லாரையும் விட்டுட்டு போயிட்டான் மான்யா. இனி இங்கே வரவே மாட்டான்” என்றான் பரிதவித்த குரலில்.

‘ஏன் விஷ்வக் போனான்’ என்ற கேள்வி இவனை உடைய வைக்கும்  என்று உணர்ந்தவள் அந்த கேள்வியை தனக்குள்ளேயே தேக்கிக் கொண்டு ஷ்யாமை ஆதரவாய்ப் பார்த்தாள்.

அதன் பிறகு நாட்கள் சர்க்கரையாக கரைய மான்யாவின் உடல்நிலையும் இயல்பு நிலைக்கு திரும்பி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகும் நாள் வந்தது.

ஷ்யாமின் காதல் மழையிலும் மீனு, ஆஷியின் அன்பு மழையிலும் மூச்சு முட்ட நனைந்தாலும் விஷ்வக் இல்லாத குறை அவளை செல்லாய் அரித்தது.

ஏன் போனான்? என்ற கேள்வியோடு வீட்டிற்கு செல்லும் முன்பு விஷ்வக்கின் அறைக்கு போனவள் சுற்றி முற்றி தேட இறுதியாக மேஜைக்கு அடியில் அன்று வீசி சென்ற செய்தித்தாள் அகப்பட்டது.

எடுத்துப் பார்த்தவளின் முகம் வானிலையைப் போல சட்டென்று மாறிய நொடி, “மான்யா” என்ற அழைப்போடு ஷ்யாம் வந்தான்.

அவனுக்கு தெரியாமல் அந்த செய்தித்தாளை தன் கைப்பைக்குள் மறைத்தவள் சிரிப்பை இதழில் தைத்துக் கொண்டு திரும்பினாள்.

“கிளம்பலாமா?” என்ற கேள்விக்கு மெதுவாக தலையாட்டியவள் காருக்கு வந்து அமர அதன் பின்பு அவள் இதழ்களிலிருந்து வார்த்தை முத்துக்கள் உதிரவே இல்லை.

ஆனால் இயல்புக்கு மாறாக ஷ்யாம் பேசிக் கொண்டே வந்தான்.

“என்ன ஆச்சுடா? வலிக்குதா?” என்றவன் கேட்க வேகமாய் அவன் தோளில் ஒன்றியவளின் கண்களில் மானின் மருகல்.

“ஷ்யாம் லவ் யூ” என்றாள் ஒரு மாதிரி தவிப்பாக.

ஒரு வேளை தன் காதலை சொல்லும் இறுதி முறை என்பதால் வந்த தவிப்பாகவும் அது இருக்கலாம்.

“மீ டூ இன்டெர்ன்” அவள் நெற்றியில் இதழ் பதித்தவாறே “ஆஷியும் மீனு அம்மாவும் கோவிலேயிருந்து இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்துடுவாங்க”  என்று சொல்லியபடியே காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான்.

அதே நேரம் வானமாலை தன் நீர் முத்துக்களை கீழே சிதறவிட துவங்கியிருந்தது.

மழை மேலும் அடர்ந்து பெய்யவும் அவன் இப்போது தான் எலும்பு முறிவிலிருந்து சரியாகி கொண்டிருக்கும் அவள் கால்களைப் பார்த்தவன் அடுத்த நொடி கைகளில் ஏந்த அவன் மார்புகளுக்குள் தஞ்சம் புகுந்தாள் அவள்.

மழையில் நனைந்தபடியே அவளை உள்ளே கொண்டு வந்து விட்டவனின் பார்வை மழையில் நனைந்த அவள் மேனியில் பட பார்வையில் பெரும் தடுமாற்றம்.

அவனை மேலும் தடுமாற வைக்கும் படி அவன் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டாள் அவள்.

“இன்டெர்ன், நாம சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கலாமா” அவன் கேள்விக்கு அவள் இதழில் மௌன அலை அடிக்க,

பனியில் சிவந்த ரோஜாவைப் போல சிவந்து நின்றவளின் வதனத்தை தாங்கியவனின் கைகளில் குறுகுறுப்பு .

அவளின் கண் அசைவில் மகுடிக்கு மயங்கும் பாம்பாய் சொக்கிப் போக,வேகமாய் அவளை இழுத்து தன் மார்பில் சாய்த்துக் கொண்டவனின் கைகளிலோ அத்துமீறலின் ஆதித் துவக்கம்.

மின்னல் போல அவனை சுகமாய் வெட்டிக் கொண்டிருந்த அவளின் இடையை இறுகப் பற்றியவனுக்குள் காதல் கண்மண் தெரியாமல் கூடிப் போக, கட்டழகியின் கைப்பாவையாகி தனது கட்டுப்பாட்டை மெல்ல இழக்க ஆரம்பித்திருந்தான்.

இருவரிக் கவிதையாய் இருந்த  இதழ்களை ரசித்துப் படிப்பதற்காக  நெருங்கியவனை, மொழிப்பெயர்க்க முடியாத புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்திலோ அசாத்திய மாற்றம்.

அதுவரை அவன் மேல் சுகமாய் வீசிக் கொண்டிருந்த காதல்சாரல் மெல்ல அவன் தலையில் இடியை இறக்க தொடங்கியது.

“யூ லாஸர். நீயும் காதல்ன்ற சாக்கடைக்குள்ளே விழுந்துட்டே ஷ்யாம் சித்தார்த்.” என்றவளின் இதழ்களிலோ காதல் சிரிப்பிற்கு பதில் கர்வசிரிப்பு.

மின்னல் தாக்கிய மரமாய் அவன் உணர்வுகள் எல்லாம் நொடிப்பொழுதில் கருக, ஸ்தம்பித்துப் போய் நின்றவனின் கன்னத்தைத் தட்டியவள் கேலிப் புன்னகையுடன் தொடர்ந்தாள்.

“என்ன மிஸ்டர் ஷ்யாம் சித்தார்த். இன்னுமா உங்களுக்கு புரியலை, எப்படி நீங்க என்னை பழிவாங்க காதலிக்கிறா மாதிரி நடிச்சீங்களோ, அதே மாதிரி தான் நானும் நடிச்சு உங்களை ஏமாத்துனேன். அன்னைக்கு நான் எப்படி  கதறுனேனோ அதே மாதிரி நீ இன்னைக்கு துடிக்க துடிக்க கதறனும்டா” கோபமாய் கர்ஜித்தவளின் கரத்தை பதற்றத்தோடு பிடித்துக் கொண்டான்.

“நான் அன்னைக்கு அப்படி நடந்ததுக்கு ஒரு காரணம் இருக்கு. ப்ளீஸ் நான் சொல்ல வரதை கேட்டுட்டு முடிவு பண்ணுடா. இப்படி அவசரப்பட்டு நடிப்புனு சொல்லி என் மனசை உடைச்சு போடாதேமா. என் காதல் உண்மை. நம்ம காதல் பொய்யில்லை” கதறியபடி அவளைக் கட்டியணைக்க முயன்றவனை வேகமாக தள்ளிவிட்டாள் அவள்.

“மிஸ்டர் ஷ்யாம் சித்தார்த். யூ நோ ஒன்திங் நான் உன்னை காதலிக்கவேயில்லை. நான் ஸ்டேட்ஸ்க்கு போக முடிவு பண்ணிட்டேன். போறதுக்கு முன்னாடி என்னை காயப்படுத்தின உன்னை பழிவாங்காம போறது நியாயமாப்படலை. அதான் உன்னை துடிக்கதுடிக்க வேட்டையாடிட்டேன். இப்போ ஐ யம் ஹேப்பி. டாடா லாஸர்” மோகினியாய் சிரித்தவள் வார்த்தைகளில் மட்டுமல்லாது அவன் தோளிலும் ஊசியை இறக்கினாள்.

அவன் கண்கள் மெல்ல மயக்கத்தை தழுவிக் கொண்டிருக்க, “எக்காரணம் கொண்டும் என்னை தேடி வந்துடாதே ப்ளீஸ் ஷ்யாம். உன்னை மறுபடியும் பார்த்தா உடைஞ்சுடுவேன்” கேவலோடு சொன்னவள் அவன் இதழில் அழுத்தமாய்  இதழ் பதித்துவிட்டு கண்ணீருடன் தன் உடமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

அதே நேரம் உள்ளே நுழைந்த ஆஷி மான்யாவை கேள்வியாகப் பார்த்தாள்.

“எங்கே போறீங்க மானுமா?” என்ற கேள்விக்கு திரும்பி பார்க்காமல் போய் விட வேண்டும் என்று தான் நினைத்தாள். ஆனால் அதையும் மீறி விழிகள் பார்த்தது.

இந்த சிறுகுழந்தை என்ன பாவம் செய்தது!

“ஆஷிமா” கண்ணீரோடு  இறுக்கி அணைத்து ஏகப்பட்ட முத்தங்களை கன்னத்தில் பதித்தவள் “சாரிடா” என்ற கேவலோடு திரும்ப மீனாட்சியம்மாள் அவளையே பார்த்து கொண்டிருந்தார்.

அவரைக் கண்டு ஒரு கணம் ஸ்தம்பித்தவளோ வேகமாக தன் கண்ணீரை அழுந்த துடைத்துக் கொண்டாள். அவள் கண்களில் மாற்ற முடியாத முடிவு.

அவளின் பார்வை அந்த வீட்டின் மீது இறுதியாக படிந்து மீள, இதற்கு மேலும் தாமதித்தால் ஆபத்து என்று உணர்ந்தவள் வேக வேகமாக வெளியேறிவிட்டாள், அவர்கள் வாழ்க்கையிலிருந்து, வீட்டிலிருந்து, நாட்டிலிருந்து.

ஆனால் காலம் ஏன் மீண்டும் மூன்று வருடம் கழித்து இதே இடத்தில் திரும்ப கொண்டு வந்திருக்கிறது என்று புரியாமல் தன் முன்னால் வைக்கப்பட்டிருந்த அந்த பெயர் பலகையையே வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.

இந்த வெண்ணிலவு எப்போது ஷ்யாமிற்காக உடையும்?