உடையாத(தே) வெண்ணிலவே 9

உதிரம்!

உதிரும் அதன் ஒவ்வொரு சிவப்பு துளியிலும் வலியின் ரேகைகள் ஊடுருவி கிடக்கும்.

வெளியே சிதறிய உதிரத்தால் தனக்குள் ஊடுருவிய அந்த வலியின் வீரியத்தை தாங்க முடியாமல் மெல்ல சரிந்திருந்தான் ஷ்யாம் சித்தார்த்.

அவன் அருகே ஓடி வந்த ஆரனாஷி, “அப்பா அப்பா” என்று கண்ணீருடன் அழைக்க,

“ஒன்னுமில்லைடா” என்று சொல்லும் போதே அவன் கண்களில் ரத்தத்தின் சிவப்பு ஏறியிருந்தது.

அதைக் கண்டு துரிதமான மான்யா,”ஷ்யாம், ப்ளீஸ் கான்சியஷ் இழக்காதீங்க” என்றபடியே வேகமாக வெளியே ஓடி வந்து அங்கிருந்த ஊழியர்களின் உதவியுடன் அவனை எமெர்ஜென்சி அறைக்கு தூக்கி சென்றாள்.

அங்கிருந்த இன்னொரு பேஷன்ட்டை பார்த்துவிட்டு திரும்பிய மீராவின் விழிகளில் ஷ்யாம் விழ பதறிப் போய்
“என்னாச்சா மான்யா?” என ஓடி வந்தாள்.

“ஷ்யாம் அம்மா குத்திட்டாங்க. ப்ளீடிங் ரொம்ப  ஹெவியா இருக்கு. ஐ நீட் காஸ். உடனே ஸ்டிட்சஸ் போடனும்” என்று சொல்ல மீரா வெகு வேகமாக செயல்பட்டாள்.

மான்யா கத்திரிக்கோலை எடுத்து அவனது சட்டையை வெட்டி அப்புறப்படுத்த ரத்த சகதியில் மின்னியது காயம்பட்ட அவனது தோள்பட்டை.

வேகமாக காஸ் எடுத்து உதிரத்தை துடைத்தவள் அவனுக்கு மெல்ல அன்ஸ்தீஷியா கொடுத்தாள்.

வலியின் தீவிரம் மெல்ல குறைய துவங்க ஷ்யாம், மான்யாவை இப்போது நிதானமாக ஏறிட்டான்.

மான்யாவின் பார்வை அவனது காயத்தை உன்னிப்பாக அலசிக் கொண்டிருந்தது.

“மிஸ்டர் ஷ்யாம், கத்தி இன்னும் நாலு சென்டிமீன்டர் உள்ளே போய் இருந்தாலும் ரொம்ப டேஞ்சராகி இருந்து இருக்கும்” என்று சொல்லியபடி தையல் போட ஊசியைக் கொண்டு போனாள்.

அதுவரை தேம்பி தேம்பி அழுதுக் கொண்டிருந்த ஆரனாஷி, தன் தந்தையின் தோளில் ஊசி இறங்க போவதைக் கண்டதும் சட்டென ஆத்திரமாகி மான்யாவை பட்டென்று அடித்தாள்.

‘இந்த  நண்டுக்கு என்னைய அடிக்கிறதே வேலையாப் போச்சு’ என மான்யா சடைத்தபடி பார்க்க ஆரனாஷியும் பதிலுக்குப் பார்த்தாள்.

“எதுக்கு என் அப்பாவுக்கு ஊசி குத்துறீங்க. அவர் பாவம்ல. ஏற்கெனவே வலியிலே துடிச்சுட்டு இருக்காருல” கண்ணீர் சிந்தியபடி கேட்டவளைப் பார்த்து மான்யாவிற்கு கோபப்படுவதா இல்லை நெகிழ்ந்து நிற்பதா என்று புரியவில்லை.

எப்போதும் கடினப்பட்டிருக்கும் ஷ்யாமின் இதழ்கள் ஆரனாஷியைக் கண்டதும்  தானாய் மலர்ந்துவிடும்.

இன்றும் அதேப் போல அத்தனை வலியையும் மீறி அவன் உதடுகளில் மலர்வு.

“ஆஷிமா” என்றழைக்க கண்ணீரோடு வந்து நின்றாள்.

அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை அடிப்படாத இன்னொரு கரத்தால் துடைத்தவாறே, “அப்பாவுக்கு வலி இல்லைடா. இவங்க போட்ட ஊசியாலே தான் வலி போச்சு. இப்போ அப்பா எப்படி ஸ்மைலிங் ஃபேஸோட இருக்கேன் பாரு” என்று ஆற்றுப்படுத்தியவன் ஆரனாஷியை லயாவுடன் வீட்டிற்கு அனுப்பிவிட்டு மான்யாவிடம் திரும்பினான்.

“நீங்க கன்டினியூ பண்ணுங்க மிஸ்.இன்டெர்ன். ஆமாம் பழைய பகையை மனசுலே வெச்சுட்டு ஏதாவது ஏடாகுடம் பண்ணிடமாட்டிங்களே?” அவனிடம் இடக்கான கேள்வி.

“பர்செனல் ஃபீலிங்ஸை தொழிலே கொண்டு வரக்கூடாதுனு எனக்கு ஒரு சீனியர் சர்ஜன் அட்வைஸ் பண்ணியிருக்காங்க. சோ இப்போதைக்கு பண்ண மாட்டேன்” என்று சொல்லியபடியே நிறுத்திய இடத்திலிருந்து தையல் போட துவங்கியவளின் கை தன் போக்கில் வேலை செய்ய, வாய்யும் தன் போக்கில் பேசத் துவங்கியது.

“ஏன் ஷ்யாம், நீங்க இடையிலே புகுந்து என்னை காப்பாத்துனீங்க? ஹீரோ ஆகலாம்ன்றதுக்காகவா?” என்று கேட்டவள் ஒரே நேரத்தில் தோளிலும் வார்த்தையிலும் ஊசியை இறக்கினாள்.

அந்த கேள்விக்கு கசப்பாக சிரித்தவன் “நான் ஹீரோ ஆகுறதுக்காக பண்ணல. என் அம்மாவை யாரும் வில்லியா பார்த்துடக் கூடாதுன்றதுக்காக தான் உன்னை காப்பாத்துனேன். மத்தபடி எனக்கு ஹீரோ ஆக கொஞ்சமும் இன்ட்ரெஸ்ட் இல்லை”  என்றான் தலையணையில்  இலகுவாக சாய்ந்தபடி.

அந்த வார்த்தைகள் மான்யாவை சட்டென்று நிமர வைத்தது.

‘தாயின் மீது அத்தனை பாசமா இவனுக்கு?’, விழிகளில் கேள்வியைத் தேக்கியபடி பார்க்க அவனும் அவளை பதிலுக்கு ஒரு பார்வைப் பார்த்தான்.

இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட நேரம் அங்கே ஹாஸ்பிடெல் சீஃப் டாக்டர் வெங்கட்ராம் வந்து நின்றார்.

“ஹவ் இஸ் ஹீ நெவ்” பார்வை ஷ்யாமை அளந்து கொண்டிருந்தாலும் கேள்வி மான்யாவை நோக்கி இருந்தது.

“ஆறு ஸ்டிட்சஸ் போட்டு இருக்கேன் டாக்டர். ஆன்டிபயாடிக்ஸ் அன்ட் டி.டி கொடுத்திருக்கேன். காயம் கொஞ்சம் ஆழமாப்பட்டதாலே, கையை நல்லா அசைக்க கிட்டத்தட்ட பத்து நாளாவது தேவைப்படும்” என்ற மான்யாவின் தகவலில் அவர் விரல்கள் தாடையை சொறிந்துக் கொள்ள துவங்கியது.

கூடவே “ஓ ஐ சீ” என்ற உபரி வார்த்தைகள் அவர் உதட்டிலிருந்து வெளிப்பட பார்வையில் லேசாக கலக்கம்.

அதை உணர்ந்த ஷ்யாம், “டாக்டர் நீங்க எதுவும் வொரி பண்ணிக்காதீங்க. என் இடத்திலேயிருந்து மிஸ். மான்யா டேக் கேர் பண்ணிப்பாங்க, அவங்களுக்கு  நான் அசிஸ்ட் பண்றேன். அந்த பெரிடோனிடிசிஸ் பேஷன்ட்டையும்  மான்யா பார்த்துப்பாங்க” என்றவனின் இறுதி வார்த்தையைக் கேட்டு  மான்யாவின் கண்கள் ஷ்யாமின் மீது முறைப்பாய் விழுந்தது.

“அந்த ரேப்பிஸ்டை நான் பார்த்துக்கணுமா?” பட்டென்று மான்யா கேட்க

“ஸ்மால் சேன்ஞ் மான்யா. அவர் இப்போ பெரிடோனிடிசிஸ் பேஷன்ட்” என்று திருத்தி சொன்னவன், “அவரோட பொறுப்பு இனி உன்னோடது தான்” என்றான் முடிவாக.

அதைக் கேட்டதும் மான்யாவின் கண்கள் உக்கிரமாய் அவனை முறைத்தது. சீஃப் டாக்டர் எதிரே அவனிடம் மறுத்துப் பேசவும் முடியவில்லை.

‘நேரம் பார்த்து பழிவாங்கிறானே. இதுக்கு நானே கத்தி குத்து வாங்கி நிம்மதியா படுத்து கிடந்து இருப்பனே. இவன் குறுக்காலே புகுந்து கெடுத்துட்டான்’ அவள் மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்த நேரம்,

“மிஸ். மான்யா இனி நீங்க அந்த பேஷன்டை டேக் கேர் பண்ணிக்கோங்க. அன்ட் இனி வரப் போற சர்ஜரிக்குலாம் ஷ்யாம் உங்களுக்கு கைட் பண்ணுவாரு” என்று சொல்லி முடித்தவரின் பார்வை ஷ்யாமின் முகத்தில் இறுதியாக தேங்கி நின்றது.

அதுவரை இருந்த தொழில்ரீதியான முகபாவம் அவர் முகத்தில் மறைந்துப் போக, மொழிப் பெயர்க்க முடியாத பாவனை ஒன்று அவர் முகத்தில் ஊடாடியது.

அவனது தோளில் மெல்ல தட்டிக் கொடுத்தவர், “கெட் வெல் சூன் மேன். டேக் கேர்” உணர்ச்சி மிகுந்த குரலில் சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து அகன்றார்.

அதைக் கண்ட நர்ஸ் மீரா, “என்ன தான் ஹாஸ்பிடெல் ஹெட்டா இருந்தாலும் எம்ப்ளாயிஸ்க்கு ஒன்னுனா அவர் கண்ணு தானா கலங்கிடும்” என்று சிலாகித்து சொன்னாள்.

ஆமோதிப்பாய் தலையாட்டிய மான்யாவின் விழிகள் ஷ்யாமை முறைத்தது.

“அந்த ரேப்பிஸ்ட் பரதேசியை என்னாலே பார்த்துக்க முடியாது. இவனை எல்லாம் சாகடிக்காம ஏசி ரூமிலே வெச்சு ட்ரீட்மென்ட் கொடுக்குற அளவுக்கு எனக்கு விஸ்தாரமான மனசு இல்லை. நீங்க அவரை கவனிச்சுக்க வேற ஆளைப் பார்த்துக்கோங்க” என சொல்ல ஷ்யாம் ஆயாசமாய் படுக்கையில் சாய்ந்தான்.

முன்பிருந்த ஷ்யாமாக இருந்தால் பதிலுக்கு பதில் பேசியிருப்பான். ஆனால் இப்பாதோ அவனுக்கு பேச சுத்தமாக தெம்பு இல்லை.

இதற்கு மேல் பேச விருப்பமில்லை என்பதை போல கண்களை இறுக மூடிப் படுத்துக் கொண்டவனை செயலற்றுப் பார்த்தாள்.

‘ஆக இது தான் இறுதி முடிவு. இதில் மாற்றமில்லை’ என்று உணர்ந்தவள் எதுவும் பேசாமல், தையல் போட்ட இடத்தில் ப்ளாஸ்டரை ஒட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.
அவள் பார்வை காரிடரிலிருந்த இருக்கை மீது விழ வேகமாக தன்னை சாய்த்துக் கொண்டாள்.

அவளது உள்ளத்தில் அலையென சலனம்.

அந்த குழந்தையைப் பெற்றவர்கள் சிந்திய கண்ணீர் அவள் இதய சுவர்களில் மோதி மோதி எதிரொலித்தது.

‘என்ன தவறு செய்தது அந்த குழந்தை?’ என்று யோசிக்கும் போதே இன்று அந்த காவல்காரர் பேசிய வார்த்தை நினைவிற்கு வந்தது.
“எந்த ஜென்மத்திலே பண்ண பாவமோ.  குழந்தைக்கு இந்த நிலைமை” அவர் உச்சு கொட்டியது நினைவிற்கு வர இவளின் உள்ளங்கையில் இறுக்கம்.

ஒரு கொலையே முன்ஜென்மத்தில் செய்திருந்தாலும் அதற்கு இந்த கற்பழிப்பு என்னும் தண்டனை மிக கொடியது.

பாவம் அந்த குழந்தை எத்தனை வலியை அனுபவித்து இருக்கும்!

‘கடவுளே ஏன் அந்த குழந்தையைத் தண்டித்தாய். ஏதோ ஒரு ஜென்மத்தில் ஏதோ ஒரு பெரிய தவறு செய்து இருந்தாலும் இந்த தண்டனை கொடியதல்லவா! ஏன் இப்படி செய்தாய்?’ என மனதோடு அரற்றிக் கொண்டிருந்த நேரம் அவளின் அலைப்பேசி ஒளிர்ந்து அடங்கியது.

ஷ்யாம் தான் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான், அந்த கொடூரனின் வைட்டல்ஸ் எல்லாம் சரியாக இருக்கிறதா என பார்க்க சொல்லி கட்டளை வேறு.

‘இந்த கொலைகாரனை பாதுகாக்க எவ்வளவு மெனக்கெடுறான் இவன். எல்லாம் பணம் படுத்துற பாடு’

அவள் தொண்டையில் கசப்பின் விஷம் இறங்க அந்த பேஷன்ட் இருந்த அறைக்கு சென்றாள்.

வெளியே ஒரு காவலர் மாற்று உடையில் நின்று காவல் காத்துக் கொண்டிருக்க, அவரைக் கடந்து உள்ளே செல்ல எத்தனித்தவளின் விழிகள் அந்த குட்டி கண்ணாடித் திரையில் தெரிந்த காட்சியில் விக்கித்து நின்றது.

அந்த குழந்தையைப் பெற்றவர்கள் இருவரும் அந்த பேஷன்டின் எதிரே  மண்டியிட்டு மனம் உருக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.

அதைக் கண்டு குழப்பமாய் அந்த காவலரைப் பார்த்தாள்.
அவரும் இவளது குழப்பத்தை உணர்ந்தவராக “அந்த பேஷன்ட் சாகனும்னு ரெண்டு பேரும் பிரார்த்தனை பண்றாங்கமா” என்று சொல்ல அவள் விழிகள் அதிர்ச்சியைக் காட்டியது.

“அவன் பணக்காரன்மா. என்ன தான் அவன் மேலே கோர்ட்லே கேஸ் போட்டிருந்தாலும் அந்த பணக்காரன் ஈஸியா வெளியே வந்துடுவான். இவங்க கிட்டே பெருசா காசில்லை. இவங்க நம்பிக்கை கடவுள் ஒருத்தர் தான். எப்படியாவது இவன் உயிரை எடுத்துட சொல்லி கடவுள் கிட்டே கேட்டுட்டு இருக்காங்க. நானும் அதான் மனசுக்குள்ளே வேண்டிட்டு இருக்கேன். சாகணுமா இவன்லாம்” அவர் உணர்ச்சி மிகுந்த குரலில் பேச மான்யாவும் உணர்ச்சி வசப்பட்டுப் போனாள்.

சப்தமின்றி அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே போனவளின் பார்வை, எதிரிலிருந்த அந்த ரேப்பிஸ்டை ஒரு முறை தொட்டு அருகிலிருந்த பெற்றோரிடம் சென்று நிலைத்தது.

சோகம் ததும்பிய முகத்துடன் கடவுளிடம் மன்றாடியவர்களைப் பார்த்து இவளது முகத்திலும் துயரத்தின் கசிவு.

இருப் பக்கமும் மாறி மாறிப் பார்த்தவள் பின்பு ஒரு முடிவோடு கீழே மண்டியிட்டு அவர்களுடன் இணைந்து அவன் உயிரைப் பறிக்க சொல்லி கடவுளிடம் கோரிக்கை வைக்க துவங்கினாள்.

அங்கே மூவரின் பிரார்த்தனையும் ஒரு சேர கடவுளை நோக்கி ஒலித்தது.

அங்கே எமெர்ஜென்சி அறையில் படுத்துக் கொண்டிருந்த ஷ்யாம் நிலை கொள்ளாமல் தவித்தான்.

அந்த பேஷன்ட்டை பார்த்துக் கொள்ள மான்யாவை துணிந்து  அனுப்பிவிட்டாலும்,  ஏதாவது கோளாறு செய்துவிடுவாளோ என மனம் நிரடியது.

வேகமாக கட்டிலிலிருந்து எழுந்தவன் ஐ.சி.யூவிற்கு செல்ல முயல மீராவோ அவனை முறைத்துப் பார்த்தாள்.

“எங்கே போறீங்க. இப்போ நீங்க இங்கே சீனியர் சர்ஜனில்லை ஒரு பேஷன்ட். சோ ஒழுங்கா நர்ஸ் சொல்றதை கேட்டு ரெஸ்ட் எடுங்க” கண்டிப்பாக ஒலித்தது அவள் குரல்.

“இதோ ஃபைவ் மினிட்ஸ்லே வந்துடுறேன் மீரா” என்றவன் அவளது பதிலுக்கு கூட காத்திராமல் ஐ.சி.யூவை நோக்கி வேகமாக விரைந்தான்.

அங்கே மூவரும் மண்டியிட்டு கண்ணீர் மல்க வேண்டிய காட்சியைக் கண்டு அவன் கண்கள் நிலைகுத்தி நின்றது.

கூடவே அந்த காவலர் சொன்ன கூடுதல் தகவல் அவன் நெற்றியில் பல சுருக்கங்களை உருவாக்கியிருந்தது.

பிரார்த்தனை முடிந்து பெற்றோர்கள் இருவரும் கண்களை திறந்துப் பார்க்க அருகில் அமர்ந்து வேண்டி கொண்டிருந்த மான்யாவை கண்டு திகைத்துப் போயினர்.

“டாக்டர்” என அதிர்ந்து வாயசைக்க மெல்ல கண்திறந்த மான்யா, “இவன்லாம் உயிரோட வாழ தகுதியில்லாதவன். செத்துப் போகட்டும்” என்றாள் கண்களில் நீர் மின்ன.

அந்த வார்த்தையைக் கேட்டு அந்த அன்னை கதறியபடி அவளை அணைக்க பதிலுக்கு இறுக்கி அணைத்தவள் “கவலைப்படாதீங்கமா. உங்க இழப்புக்கு கண்டிப்பா நியாயம் கிடைக்கும்” என்றாள் நம்பிக்கை மின்ன.

அந்த நம்பிக்கை வார்த்தைகள் அவர்கள் முகத்தில் ஒளியேற்ற, கண்ணீரைத் துடைத்தபடியே மூவரும் வெளியே வந்தனர். ஷ்யாம் மான்யாவை ஒரு பார்வைப் பார்த்தான், அதில் ஏகப்பட்ட அர்த்தங்கள்.

அந்த பார்வை மான்யாவை எதுவும் செய்யவில்லை. பதிலுக்கு அவனை நேர்ப்பார்வை பார்த்தாள்.

“என்ன ஷ்யாம். ஏன் இப்படி பார்க்கிறீங்க?”எனக் கேட்க தனியே அவளைத் தள்ளிக் கொண்டு வந்தவனின் பற்கள் நறநறத்தது.

“யூ ஆர் எ எமோஷனல் இடியட். எதுக்காக காலையிலே உயிரைக் கொடுத்து காப்பத்துனும்? இப்போ எதுக்காக அவன் சாகுறதுக்காக உயிர் உருக ப்ரே பண்ணனும்?” என்றான் கோபமாக.

“அது டாக்டரா என்னோட கடமை. இது ஒரு ஹியூமன் பீயிங்கா என்னோட ஃபீலிங். நீங்க வேணா கல்லா இருக்கலாம் ஷ்யாம். பட் நானும் அப்படி இருக்கணும்னு நீங்க எக்ஸ்பெட் பண்றது தப்பு. நான் இப்படி தான் இருப்பேன்” என்று சொன்னவளின் மீது மொழி பெயர்க்க முடியாத பாவனையை செலுத்தினான்.

“மான்யா நான் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஸ்பென்ட் பண்ணி காப்பாத்துனது இவன் இப்படி அனாமத்தா சாகறதுக்கு இல்லை. டூ யூ கெட் இட்” அவன் கோபத்தில் கத்த, மான்யாவோ இகழ்ந்த புன்னகையைப் பதிலாக தந்தாள்.

“யா நீங்க இவ்வளவு டைம் ஸ்பென்ட் பண்ணி காப்பாத்துனது அனாமத்தா சாகுறதுக்காக இல்லை பணத்துக்காக. யூ ஆர் மனி மைன்டட்” என்று கோபமாக கத்தியவள் பின்பு மெல்ல நிறுத்தி நிதானமாக அவனை ஏறிட்டாள்.

“உங்களுக்கு இந்த வலி புரியாது ஷ்யாம். எந்தவொரு பொண்ணும் அனுபவிக்கக்கூடாத வலி இது. ஆனால் அந்த குட்டி குழந்தை அனுபவிச்சுருக்கா. ஒரு ரோபாவா இருக்கிற உங்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை. பட்” என்று மீண்டும் நிறுத்தியவள் அவனது முகத்தைக் கூர்ந்துப் பார்த்தபடி மீண்டும் தொடர்ந்தாள்.

“பட் இதே உங்க வீட்டுலே யாருக்காவது நடந்திருந்தா இப்படி கல்லு மாதிரி இருந்திருப்பீங்களா ஷ்யாம்? உங்கள் ரத்தம் துடிச்சு இருக்கும் தானே. உங்க பொண்ணுக்கு இப்படி நடந்திருந்தா அவனுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்திருப்பீங்களா?” என்ற  மான்யாவின் கேள்வி ஷ்யாமின் கன்னத்தில் பளாரென அறைந்ததுப் போல இருந்தது.

அவன் முகத்தில் நொடிப்பொழுதில் ஏகப்பட்ட மாறுதல்கள்.

ஆனால் ஜன்னல் கண்ணாடியில் படியும்  பனித்திரைப் போல படர்ந்த கணத்திலேயே அந்த முக பாவனைகளும் மறைந்துப் போனது. 

உணர்ச்சியற்ற முகத்துடன் அவளைப் பார்த்தவன், “நான் அப்பவும் ட்ரீட்மென்ட் கொடுப்பேன் மான்யா. அவனை சாகவிடமாட்டேன்” என்று அழுத்தமாக சொன்னான். அந்த பதில் மான்யாவை கொதிக்க வைத்தது.

‘இவன் உண்மையில் மனிதன் தானா?’ மான்யாவின் உள்ளத்தில் கேள்வி குதிரைகள் குதிதாளமெடுத்து ஓட துவங்க, “யூ ஆர் ரியலி எ சைக்கோ” என்றாள் கண்களில் வெறுப்பு மின்ன.

“யெஸ் ஐ யம் எ சைக்கோ” என்று அழுத்தி சொன்னவன்,

“டேக் கேர் தட் பேஷன்ட். ஏதாவது எக்குத்தப்பா பண்ணி வைச்சா உன்னை செக்குலே போட்டு ஆட்டிடுவேன்” என்று விரலை நீட்டி எச்சரித்தவனையே கோபமாக தொடர்ந்தது மான்யாவின் விழிகள்.