உதிரத்தின்… காதலதிகாரம்! 7

உதிரத்தின்… காதலதிகாரம்! 7
உதிரத்தின்… காதலதிகாரம்!
காதலதிகாரம் 7
வீட்டிற்குள் நுழைந்தவளை வித்தியாசமான பார்வையோடு எதிர்கொண்ட பிரகதியின் தாய், “எங்க போயிட்டு வர்ற?” சிடுசிடுத்த முகத்தோடு வினவ,
“ஏன்மா?” என்றவாறே தனது கையில் இருந்த வாலட்டை ஹாலில் இருந்த மேசையின் மீது வைத்தபடியே கேட்டவள், “மெடிக்கலுக்குப் போறேன்னு சொல்லிட்டுத்தானேம்மா போனேன்!” என்றவளை நம்பாத பார்வை பார்த்தார் அத்தாய்.
இதுவரை பிரகதி தனது ஃப்ரண்டின் மெடிக்கலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வருவது வழக்கம். ஃப்ரண்ட் ஆணா பெண்ணா என்பதை பிரகதியும் இதுவரை கூறியதில்லை. ஆனால் ரேவதியோ, மகள் தனது தோழியின் மெடிக்கலுக்குச் சென்று வருவதாகவே இதுநாள் வரை அவராகவே எண்ணிக்கொண்டிருக்கிறார்.
அருகாமையில் இருந்திருந்தால் எப்போதேனும் மகள் குறிப்பிடும் ஃப்ரண்ட் யாரென்று அறிந்துகொண்டிருக்கும் வாய்ப்பு ஒருவேளை அத்தாயிக்கு கிட்டியிருக்கும்.
ஆனால், எதிரெதிர் திசையில் ஏறத்தாழ முப்பது கிலோ மீட்டர் இடைவெளியில் இருக்கும் பிரகதியின் வீட்டிற்கும், அக்கறை மெடிக்கலுக்கும் உள்ள தூரத்தை அத்தனை சிரத்தையெடுத்து வந்து கண்காணிக்கும் அளவிற்கு மகளின்மேல் சந்தேகம் ரேவதிக்கு இதுவரை வந்ததில்லை.
“மெடிக்கல் என்ன பார்க்குலயா இருக்கு? யாருடீ அது?” என்று பிரகதியின் தாய் அவளிடம் கேட்டார்.
என்றுமில்லாத புதுக்கதையாக தான் கௌதமோடு பார்க்கில் இருந்ததை பார்த்ததோடு, சமூக சேவையாக எண்ணி தாயிடம் யாரோ பற்ற வைத்துவிட்டார்கள் என்பது அவரின் சிடுசிடுத்த கேள்வியிலேயே பிரகதிக்குப் புரிய, “உன் வருங்கால மருமவன் என்னைப் பாக்க அங்க வரச் சொன்னாரு. அவரைத்தான் போயிப் பாத்துட்டு அப்டியே வரேன்” மதிய வெயிலுக்கு நாவறட்சி கொள்ள, அடுக்களைக்குள் சென்று தண்ணீரை எடுத்துக் குடித்தபடியே கூறினாள் பிரகதி.
“உங்கிட்ட இப்ப என்ன பேச்சு அவருக்கு?” பெரியவர்கள் திருமணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், வெளியில் சென்று பொது இடத்தில் வைத்து என்ன அதிமுக்கிய பேச்சு என்பதுபோல பிரகதியின் தாய் ரேவதிக்குத் தோன்ற, மகளிடம் அவ்வாறு கேட்டார்.
“என்னம்மா பேசுற? என்னைக்கும் இல்லாம முத தடவை என்னை வெளியே வரச்சொல்லி மீட் பண்ணதை நினைச்சு நானே இப்போதான் லைட்டா மெர்சலாகி அவரை மெச்சிகிட்டேன். அது உனக்குப் பொறுக்கலையா” பேன் சுவிட்சைப் போட்டபடியே துப்பட்டாவின் ஒரு முனையை எடுத்து கழுத்திற்கு நேராக விசிறியபடியே ஹாலில் கிடந்த சோபாவில் மென்னகையோடு வந்தமர்ந்தாள் பிரகதி.
“இப்ப சாப்பிட வருவாருல்ல உங்கப்பா. அவருகிட்டயும் இதையே சொல்லு…” என்ற ரேவதி,
“நாந்தான் அவரோட போயி பேசிட்டு வான்னு அனுப்பன மாதிரி உங்கப்பா என்னையக் கத்துறாரு. மகளைப் பாத்ததும் பொட்டிப்பாம்பு கணக்கா அமைதியாயிராரு. வரட்டும் இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பாத்துட்டுத்தான் மறு சோலி” அடுக்களைக்குள் நுழைந்ததோடு வெகுண்டு பேசியபடியே சமையலில் கவனமானார் ரேவதி.
பிரகதியின் தந்தை சில ஆண்டுகளாக வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தமையால், அனைத்து பொறுப்புகளும் அவளின் தாய் ரேவதி தலையில் விழுந்ததிருந்தது.
மூத்தவளின் திருமணத்திற்கு ஊருக்கு வந்தவர், அத்தோடு தனது சேமிப்பு தொகையைக் கொண்டு டிபார்மெண்டல் ஸ்டோர் ஒன்றை அவர்களின் வீதியிலேயே திறந்து அமர்ந்திருந்தார் பிரகதியின் தந்தை.
பிரகதி பிறந்த பிறகுதான் அவர்களின் வீட்டில் பொருளாதார நிலை மேம்பட்டிருக்க, அவளின் மீது அலாதியான அன்பு அவளின் தந்தைக்கு.
மகள் கேட்டது அனைத்தையும் வாங்கிக் கொடுப்பதோடு அல்லாமல், அவள் கேளாததையும் வாங்கிக் குவித்து அவரது பேரன்பைக் காட்டி வந்த நிலையில், பிரகதியின் திருமணப் பேச்சினை எடுத்தது முதல் அப்பாவிற்கும் மகளுக்கும் கருத்து வேற்றுமை வந்திருந்தது.
அது முதலே மனைவியைத் திட்டித் தீர்த்து தனது வருத்தத்தை மறைக்க முயன்றார்.
வேறு இனத்தில் மகளைக் கொடுத்தால், உற்றார் ஏதேனும் சொல்லக்கூடும் என நினைத்து மகளிடம் எவ்வளவோ பேசிப் பார்த்தும் அவரால் மகளைச் சமாளிக்க இயலவில்லை.
மகளின் மேல்கொண்ட பிரியம் வெல்ல, அரைமனதாக திருமணத்திற்கு ஒத்துக்கொண்டிருந்தார் பிரகதியின் தந்தை அருணாச்சலம்.
எதாவது கண்ணுக்கு குறை கிட்டினால் அதனைச் சாக்கிட்டு மகளின் திருமணத்தை தனது விருப்பம்போல மாற்றிக்கொள்ளும் எண்ணத்தில்தான் இன்னமும் இருந்தார்.
ஆனால் அதனை வெளிக்காட்டாது சில வேலைகளில் இறங்கியிருந்தார்.
முதலில் மகளின் விருப்பத்தினை மதிப்பதாகக் காட்ட எண்ணி, கௌதமின் பெற்றோர்களிடம் பேசிப் பார்த்ததில், இருவரது அனுசரணையான பேச்சில் மனம் சற்று தெளிவடைந்திருந்தது.
‘நல்ல குடும்பமா, நல்ல வசதியான இடம்னா இதையே முடிச்சிருவோம்’ என மனம் மாறும் வகையில் கௌதமின் பெற்றோர்களுடனான சந்திப்பு அமைந்திருந்தது.
இருகொள்ளி நிலையில் அருணாச்சலம்.
‘பையன் போட்டோவுல ராஜா மாதிரி இருக்கான். அவங்க வீட்டுப் பக்கமும் பாக்க நல்லவங்களாத்தான் தெரியறாங்க. ஆனா உறவுக்காரங்க, சாதிக்கார மத்த மனுசங்க நம்மை மதிக்க மாட்டானுகளே’ என்கிற நிலை.
ஆனாலும் கௌதமைப் பற்றி விசாரிக்க எண்ணி தனது நண்பரான ஆறுமுகம் என்பாரிடம் பொறுப்பைத் தந்திருந்தார் அருணாச்சலம்
ஆறுமுகத்திற்கோ பிரகதியின் காதல் விவகாரம் தெரியாமலிருக்க, அதைப்பற்றிய விவரம் எதையும் அருணாசலம் கூறாமல் மறைத்திருந்தார்.
ஆறுமுகத்தின் வேலைப்பளுவிற்கு இடையே நேரில் சென்று விசாரிக்க முடியாமல், என்றும் தன்னிடம் உதவி கோராத நண்பரின் வேண்டுகோளை மறுத்து ஒதுக்கவும் முடியாமல், தான் ஏற்றுக்கொண்ட பொறுப்பை தனது மற்றொரு நண்பரும், அவரின் நண்பரான அருணாசலத்தின் தூரத்து உறவான சங்கர் என்பவரிடம் அருணாசலம் அறியாமல் பொறுப்பை கொடுக்க, அவர் கௌதமின் பின்னே தொடர்ந்ததில் எழுந்ததுதான் அன்றைய சிக்கல்.
சங்கருக்கும், இது அருணாசலத்தின் மகளுக்காக ஆறுமுகம் தன்னிடம் ஒப்படைத்திருக்கிறார் என்பது தெரியாமல் கௌதமைக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தார்.
கௌதமுடன் பிரகதியைப் பார்த்ததும், ‘இது நம்ம அருணாசலம் மக மாதிரி இருக்கே’ என நினைத்ததோடு, ஆறுமுகத்திடம் தான் சேகரித்த விவரத்தைக் கூறுமுன் அருணாசலத்திற்கு அழைத்து நலம் விசாரித்தபின்,
“பொண்ணுக்கு மாப்பிள்ளை எதுவும் பாக்குறியாப்பா… நல்ல சம்பந்தம் ஒன்னு வருது. உன்னை வந்து பாக்கச் சொல்லட்டா?” என்று சங்கர் வினவ,
அருணாசலம் தனது மகளின் விருப்பமான கௌதமைப் பற்றி நேரடியாக விசயத்தைக் கூறாமல், “இப்ப ஒரு வரன் வந்திருக்கு. கூடி வந்தா அந்தப் பையனுக்கே பொண்ணைக் குடுக்கலாம்னு நினைக்கிறேன். ஒத்து வரலைன்னா நீங்க சொன்னதைப் பாக்கலாம்” என்று சமாளித்து வைத்திருந்தார் அருணாசலம்.
மூத்த மகளை திருமணம் செய்து கொடுத்திருக்கும் வகையில் சில வரன்கள் பிரகதியைக் கேட்டு வந்தவண்ணம் இருந்தாலும், மகளின் பிடிவாதத்திற்காக கௌதமை கருத்தில் கொண்டிருந்தார்.
சங்கர் பிரகதியின் தமக்கையை திருமணம் செய்து கொடுத்த வகையில்தான் அருணாசலத்திற்கு உறவு.
சங்கர் அத்தோடு இருக்காமல், பிரகதியை தங்களின் உறவில் கேட்கும் எண்ணத்திலிருக்கும் குடும்பத் தலைவரின் எண்ணுக்கு அழைத்து, “நீங்க அருணாசலத்தோடு சின்னப் புள்ளைய எடுக்கற நோக்கத்துல பேசிட்டு இருந்தீங்களே… கேட்டீங்களா அவருகிட்ட?” என விசாரிக்க,
“கேட்டேன்… ஆனா அவரு புடி குடுக்காமப் பேசறாரு” என அவர் கூற,
“அந்த சம்பந்தம் ஒத்து வரும்னு தோணலை. வேற எடத்தில பாத்துக்கலாம்” எனக் கூறியதும் அவர் சரியென்று விடாமல் அவரிடம் தோண்டித் துருவி விசாரிக்க,
“பொண்ணு பேரு வெளியில கெட்டுக் கிடக்கு. அந்த மாதிரிப் புள்ளைய எதுக்கு நம்ம வீட்டுல எடுத்து அசிங்கப்படணும்னுதான் ஒத்து வராதுன்னு சொன்னேன்” என தனக்குத் தோன்றியதை அப்படியே அவரிடம் உரைத்திருந்தார் சங்கர்.
சங்கருக்கு உண்மையில் நடப்பது என்னவென்று தெரியாததால் அவராக ஒரு முடிவுக்கு வந்து உறவினரிடம் விசயத்தை தெரிவித்த கையோடு நண்பருக்கும் அழைத்துப் பேசியிருந்தார்.
ஆறுமுகத்திடம், “பையனுக்கு வேற பொண்ணோட பழக்கம் இருக்கும்போல… அதுனால இது ஒத்துவராதுன்னு சொல்லிருங்க” எனக் கூறியதோடு பிரகதியுடன் கௌதம் பார்க்கில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த படத்தையும் எடுத்து ஆறுமுகத்தின் மொபைலுக்கு அனுப்பியிருந்தார்.
சங்கர் அனுப்பிய புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, பிரகதியைத் தெரிந்திருந்தமையால் அருணாசலம் அனுப்பிய கௌதமின் புகைப்படத்தை ஒப்பு நோக்கிவிட்டு, “பையனைப் பத்தி எங்கிட்ட விசாரிக்கச் சொன்னியே அருணா… இப்ப கொஞ்ச நாளா விசாரிச்சதுல பையன் ரொம்பப் பொறுப்புனு தெரியுது. அவங்களைப் பத்தி ரொம்ப அதிகமா அக்கம் பக்கத்துல உள்ளவங்களுக்கு எதுவும் தெரியலை.
அவங்கம்மா யாருகூடவும் அந்தளவுக்கு ஒட்டுதல் கிடையாதுபோல. அந்தப் பையனும் அவன் உண்டு அவன் வேலையுண்டுன்னு இருக்கற ரகம்னு சொல்றாங்க.
மத்தபடி… வேற எதுவும் சொல்லிக்கற மாதிரி இல்லை.
பெரியவங்க பேசி ஒரு முடிவுக்கு வரதுக்குள்ள அதுக ரெண்டும் ஒரு முடிவுக்கு வந்திட்ட மாதிரித் தெரியுது. எதை வச்சிச் சொல்றேன்னா… ரெண்டு பேரும் சேந்து ஊரைச் சுத்துற மாதிரித் தெரியுதுப்பா… நாலு பேரு பாக்கறதுக்குள்ள கல்யாணத் தேதிய முடிவு பண்ற வேலையப் பாரு அருணா” என தானே நேரில் இருந்து அனைத்தையும் பார்த்ததைப்போல இதற்குமுன் சங்கர் கூறிய அனைத்தையும் தொகுத்துக் கூறியதோடு, தனது யூகத்தைத் தெரிவிப்பதுபோல சில கருத்துகளையும் நண்பரிடம் பேசிவிட்டு இருவரும் பார்க்கில் சந்தித்த படத்தையும் வாட்சப்பில் அனுப்பிவிட்டு வைத்திருந்தார் ஆறுமுகம்.
ஆறுமுகமும் தனக்கு சங்கர் மூலம் வந்த செய்தியைக் கொண்டு தானாகவே யூகித்து ஒரு முடிவுக்கு வந்ததோடு, அதனை தனது நண்பரான அருணாசலத்திடம் அப்படியே மறையாமல் திணித்திருந்தார்.
பிரகதியும் கௌதமும் பேசிக்கொண்டிருக்கும் படத்தைப் பார்த்துவிட்டு மனைவிக்கு அழைத்த அருணாசலம், “உன்னை நம்பி விட்டுட்டு வெளிநாட்டுல இருந்த நேரத்தில புள்ளைய ஒழுங்கா பாத்து வளக்கத் துப்பில்லாம இன்னைக்கு தலைகுனிவா ஆகற அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்க.
இன்னைக்கு பிரகதி எங்க போச்சுன்னு சொன்ன? மெடிக்கலுக்குப் போறேன்னு சொல்லிட்டு பார்க்குல போயி அவங்கூட என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு? அதுதான் பெத்தவங்க பேசிட்டு இருக்கோம்ல. அதுக்கு இடையில அவனப் பாக்காம இருக்க முடியலையாமா?” இப்படி இன்னும் சில வார்த்தைகளைப் பேசி ரேவதியை கடுப்பாக்கியிருந்தார் அருணாசலம்.
அதே கோபத்தில் இருந்த ரேவதி மகளிடம் விசாரித்ததோடு, கணவர் வந்ததும் தான் அறிந்த விசயத்தைப் பற்றிக் கூற, இருவருக்கிடையே பொறுப்பு யாருக்கு? யார் நழுவ விட்டது என்பதான வாக்குவாதம் தடித்தது.
பிரகதி கூகுளின் உதவியோடு ஹீமோஃபிலிக் பற்றிய விசயங்களை மேலோட்டமாக அறிந்து கொண்டதோடு, அதற்குண்டான மருந்துகள் பற்றித் தேடி அறிந்து கொண்டாள்.
பிறகு, ‘இதுனாலதான் என்னை அவாய்ட் பண்ணியா தம்மு’ என தனக்குத்தானே கேள்வியைத் தொடுத்தவளுக்கு, கௌதம் மீதான அன்பு கூடியதே அன்றி குறையவில்லை.
இரக்கம் வந்து கதவைத் தட்டும்போது, காதல் கூடாரத்தையே கைப்பற்றிவிடும் என்பதைப் பற்றி பிரகதிக்கு தெரிந்திருக்கவில்லை.
கௌதமின் மீதான இரக்கம் அவளையே சுனாமியாக தனக்குள் சுருட்டிக் கொண்டு அந்நீரோடு கலந்துவிடும் அபாயத்தை பிரகதி தெளிவாக உணர்ந்தாலும், அவளுக்கு ஏனோ தனது முடிவிலிருந்து பின்வாங்க இயலவில்லை.
ஹீமோஃபிலியா குறைபாட்டின் வலிகளும், வேதனைகளும் இன்னபிற கஷ்டங்களும் அவளுக்குச் சல்லியளவிற்கும் தெரிந்திருக்கவில்லை.
‘இது டிசீஸ் இல்ல. இது ஒரு டெஃபிசியன்சிதான. இதுக்கு ஏன் தம்மு இவ்ளோ ரியாக்ட் பண்ணுது. லூசு…’ இப்படித் தனக்குள்ளாகவே கௌதமைத் திட்டிக் கொண்டாள் பிரகதி.
அவள் மேல்நிலை இரண்டாமாண்டு பள்ளியில் படிக்கும்போது உயிரியல் பாடத்தில் படித்ததைப்பற்றி நினைவு கூர்ந்தாள்.
‘அப்பவே அந்த மிஸ்கூட சொன்னாங்களே… இந்த டெஃபிசியன்சி இருக்கறவங்களுக்கு கே விட்டமின் ரிச் ஃபுட் குடுக்கணும்னு… அது என்ன பெரிய விசயமா. குடுத்து சரி பண்ணிக்கலாம்’ என தனக்குத்தானே ஒரு முடிவுக்கு வந்திருந்தாள் பிரகதி.
எக்காரணத்தை முன்னிட்டும் கௌதமை இழப்பதை அவள் விரும்பவில்லை.
‘ஆவூன்னு என்னத்தையாவது சொல்லி பயமுறுத்தி என்னைத் தள்ளி நிறுத்தறதே இந்த தம்முக்கு வேலையாப் போச்சு.
அதுதான் அந்த பிரச்சனையிலிருந்து வெளிவர மெடிசன் இருக்குல்ல. அப்புறம் எதுக்கு என்னையப் பயமுறுத்தணும்’ என பிரகதி நினைத்துக் கொண்டிருந்தபோதுதான் அவளின் தந்தை மதிய உணவிற்கு வீட்டிற்குள் நுழைந்திருந்தார்.
இறுதியாக மகளிடம் பெற்றோர் விசாரிக்க, வேறு வழியின்றி கௌதம் அழைத்துப் பேசியதைப்பற்றி கூறும் நிலை பிரகதிக்கு வந்திருந்தது.
அவளும், கௌதம் தான் ஹீமோஃபிலிக் என்பதைப்பற்றித் தன்னிடம் கூறுவதற்காகவே முதன் முறையாக தன்னை வெளியில் வரச் சொல்லி கௌதம் பேசியதாக பெற்றோரிடம் கூறிவிட, அதைப்பற்றி அறிந்ததும் வீடே நிசப்தமாக மாறியிருந்தது சற்று நேரம்.
அந்நேரத்தில் ரேவதி, “பசியோட யோசிச்சா எதுக்கும் முடிவு தெரியாது. முதல்ல ரெண்டு பேரும் சாப்பிடுங்க” என இருவரையும் உண்ணச் செய்து, தானும் உண்டு அமர்ந்தார்.
அப்போது ஹீமோஃபிலியா பற்றி மகளிடம் விசாரிக்க, பிரகதியும் தான் அன்று அதுபற்றி அறிந்த விசயங்கள் அனைத்தையும் தந்தையிடம் கூறிவிட்டாள் பிரகதி.
சற்று நேரம் யோசனை வயப்பட்டிருந்தவர் மனைவியிடம், “அந்த அம்மாவும் அந்தாளும் ஏன் எதுக்கெடுத்தாலும் சரி சரினு சொன்னாங்கனு அப்பவே எனக்கு டவுட்டு. இப்பத்தான புரியுது…
புள்ளைக்கு முடியலை. அதான் எதையும் டிமாண்ட் பண்ணாம போடுறதைப் போடுங்க. எல்லாம் உங்க இஷ்டம். உங்க தோது பாத்துட்டு சொல்லுங்கன்னு… எல்லாத்துலயும் விட்டுக் கொடுத்திருக்காங்க” என்றவர்,
அத்தோடு ஒரு முடிவுக்கு வந்தவராக பிரகதியை நேரில் அழைத்து, “இப்படி ஒரு குறையிருக்க புள்ளைக்கு உன்னைக் குடுக்கணும்னு எங்களுக்கு என்ன விதியா? அப்டிக் குடுத்துட்டு காலம் முழுக்க நீ கஷ்டப்படறதைப் பாத்துகிட்டு எங்களால நிம்மதியா இருக்க முடியுமா? அதனால அந்தப் பையனை மறந்துட்டு, அப்பா பாக்கற பையனையே கல்யாணம் பண்ணிக்கத் தயாரா இரு” என்று தீர்மானமாக மகளிடம் உரைத்திருந்தார் அருணாச்சலம்.
பிரகதியோ, “அப்பா… அவரு நம்மகிட்ட உண்மையச் சொல்லித்தான என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு கேக்கறார். ப்ளீஸ்பா. கொஞ்சம் கன்சிடர் பண்ணி அவருக்கே என்னைக் கல்யாணம் பண்ணிக் குடுங்கப்பா” என்று கெஞ்சத் துவங்கியிருந்தாள்.
“வாழ்க்கை வேற… இந்த காதல் கண்றாவி வேற… முதல்ல நான் சொல்றதைப் புரிஞ்சிக்கம்மா” என்றவர்,
“உன்னோட நல்லதுக்காகத்தான் அந்தப் பையனை வேணாங்கறேன்” மகளிடம் தானறிந்த வகையில் விளக்கம் குடுத்தாலும், பிடிவாதமாக மறுத்தாள் பிரகதி.
“உன்னை அந்த மாதிரி ஒரு பையனுக்கு கல்யாணம் பண்ணிக் குடுக்கறதுக்கு பதிலா, கன்னியாஸ்திரியா அனுப்பிருவேன். ஒழுங்கா அப்பா சொல்றதைக் கேட்டு நட. இல்லையா சல்லிப் பைசா தர மாட்டேன் சொத்துல” என்று அருணாசலம் இறுதியில் மகளிடம் மிரட்ட,
“எனக்கு உங்க சொத்து எதுவும் வேணாம்பா. கௌதமுக்கே என்னைக் கல்யாணம் பண்ணி வச்சிருங்கப்பா” என்று பிரகதியும் தந்தையிடம் கதறினாள்.
***
தாயின் உடல்நிலை பற்றி அறிய வேண்டி கௌதம் தனது தந்தைக்கு அழைக்க, “நீ ஃப்ரீயா இருந்தா ஒரு எட்டு ஹாஸ்பிடல் வந்துருவேன்” என்றதும், கௌதமும் அங்கு சென்றுவிட்டான்.
மருத்துவரோ, “மெனோபாஸ் வரதுக்கு முன்ன இந்த மாதிரியெல்லாம் சிம்டம்ஸ் சிலருக்கு இருக்கும்.
வர்க் டென்சன். அதனாலயும் மென்ஸ்சுரல்ல பிராப்ளம் கன்டினியூ ஆகியிருக்கலாம். கொஞ்ச நாள் ஸ்ட்ரெஸ் இல்லாம இருக்கற சூழல்ல இருந்தா இம்ப்ரூவ் ஆக வாய்ப்பிருக்கு.
அப்புறம் நார்மல் ஆகிட்டு, ஒரு சிலருக்கு அகைன் இம்புராபர் மென்சுரல் கன்டினியூ ஆகும்.
பீஸ்ஃபுல்லா மைண்ட் வச்சிக்க ட்ரை பண்ணுங்க. அதுக்கு வாய்ப்பில்லைனா, மெடிடேசன் மாதிரி கத்துக்க ட்ரை பண்ணுங்க. ஓரளவு மேனேஜ் பண்ணும்.
இப்ப கொஞ்சம் மெடிசன் தரேன். ஃப்பிஃடீன் டேஸ் கழிச்சு கூட்டிட்டு வாங்க” என அனுப்பியிருந்தார்.
கௌதமின் தந்தை வீட்டிற்கு வரும் வழியிலேயே, “அவளை நான் இங்க தனியா விட்டுட்டுப் போனா அங்க என்னால நிம்மதியா வேலை பாக்க முடியாது. அதனால, அவளையும் ஊருக்கு கையோட கூட்டிட்டுப் போறேன். நீ உன் உடம்பைப் பாத்துக்க” என்றவர் மகனிடம் கூறிக்கொண்டு மனைவியோடு விடைபெற்றிருந்தார் சேகரன்.
இதுவரை தன்னைத் தனியாக விடாமல் தன்னோடு உடனிருந்த தாய் அவரின் உடல்நிலையால் சோர்ந்து காணப்படுவதைப் பார்த்தவனுக்கு தாயின் நிலையைக் காட்டிலும், தாய் ஊருக்குச் செல்வதை எண்ணி சிறு பிள்ளைபோல தொண்டை கமறியது.
ஆண் அழுவது ஆதரிக்கப்படாத நிலையில், சமூகக் குற்றமாக அறிவுறுத்தப்படும் நிலையில் அனைத்தையும் தனக்குள் விழுங்கினான் கௌதம்.
அவனது மனமெங்கும் தாயைப் பற்றிய சிந்தனை மட்டுமே.
***
தாயில்லாமல் வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு வெறுப்பாக இருந்தது. தனித்திருக்காதவன் தனிமையில் வெறுமையை உணர்ந்தான்.
கையில் வாங்கி வந்திருந்த உணவை உண்டதாகப் பெயர் செய்துவிட்டு படுக்கையில் விழுந்தவனை அலைபேசி ஒலி நடப்பிற்கு மீட்க, எடுத்துப் பார்த்தவனுக்குள் திரையில் ஒளிர்ந்த ‘ராகா’ எனும் பெயர் வாடியிருந்த வதனத்தில் வாளிப்பை அவனறியாமலேயே வாரியிறைத்திருந்தது.
தயங்காமல், தடுமாறாமல் நொடி நேரத்தையும் வீணாக்காமல் அழைப்பை இன்முகமாக ஏற்றவனிடம், “ஹலோ…தம்மு….” ஈனஸ்வரத்திலிருந்து வந்தது பிரகதியின் குரல்.
“ம்ஹ்ம். சொல்லு… என்ன இந்த நேரத்தில” என்றவனுக்குள், ‘என்னாச்சு எப்பவும் நல்ல மூட்ல பேசுவா. இப்ப ஏதோ வித்தியாசமா இருக்கு வாய்ஸ்’ மனதில் ஓடியது.
“நான் உங்கிட்ட வந்திரவா…” எனும் கேள்வியெழுப்பியவளின் குரலே அங்கு ஏதோ சரியில்லை என்பதை அவனுக்கு சொல்லாமல் சொல்ல,
“ஏண்டா… என்னாச்சு…” அதிசயமாக கௌதமின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் தேனைத் தடவிக்கொண்டு பிரகதியிடம் பேச,
“என்னால இனி இங்க இருக்க முடியாது. நீ வேணும் எனக்கு” தேம்பலோடு திணறிப் பேசியவளின் வார்த்தைகளைக் கேட்டவனுக்கு , இதயத்தில் இரணம்.
“அழுகாமப் பேசு ராகா. நீ பேசுறது எனக்குப் புரியலை” மனம் பதறியபடி கூறினான் கௌதம்.
அன்று நடந்த விசயங்களைப்பற்றி சுருக்கமாக கௌதமிடம் பேச, அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டவன், “உன்னோட நல்லதுக்குத்தானடா வீட்டுல சொல்றாங்க… அதுக்குத்தான் நான் அவங்களோட ஒப்பீனியன் கேட்டுட்டு, அவங்களுக்கும் ஓகேன்னா மேற்கொண்டு பேசலாம்னு சொன்னேன்”
கௌதமின் பதிலில் மேலும் வெகுண்டுபோனவள், “டேய்… உன்னையெல்லாம் நம்பி நான் சொல்லிக்கிட்டு இருக்கேன் பாரு. முதல்ல என்னைச் சொல்லணும்.” என்றவள்,
“ஒழுங்கா எதுக்கும் தயாரா இருந்துக்கோ. நான் எப்போ எப்டி அங்க வருவேன்னு எனக்கே தெரியாது. நான் எப்டி வந்தாலும் என்னை ஒழுங்கா மரியாதையா ஏத்துக்கிட்டு வாழத் தயரா இரு! இல்லையோ… உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” எனக் கத்திவிட்டு கௌதமின் பதிலுக்குக் காத்திராமல் கோபமாக அலைபேசியை வைத்திருந்தாள் பிரகதி.
பிரகதி கூறிய விசயம் உண்டாக்கிய பாதிப்பைக் காட்டிலும், அவளுடன் சற்று நேரம் உறவாடியது இதயத்திற்கு இதமாக இருக்க, யோசனையோடு படுத்தான் கௌதம்.
‘அம்மாவுக்கு சரியான பின்ன இதைப்பத்திப் பேசிக்கலாம்’ எனும் சிந்தனை ஓட, தாயிக்கு அழைத்து இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு வைத்தான்.
உறங்கச் சென்றவனுக்கு, பேச்சோடு நிற்காமல் செயலிலும் அதனைக் காட்டப் போகிறாள் பிரகதி என்பதை அறியாமல் உறக்கம் தழுவிக்கொண்டது.
இனி உறக்கமே இல்லாத இரவுகள் நீளக்கூடும் என்பது அவனுக்கு அப்போது தெரியவில்லை.
***