உன்னாலே – 04

உன்னாலே – 04
கார்த்திக்கின் கையிலிருந்த பொருளைப் பார்த்து அதிர்ச்சியாகி நின்றவள் உடனே தன்னை நிதானப்படுத்திக் கொண்டு
“நீங்க… நீங்க இன்னும் தூங்கலயா? ட்ரெஸ் சேஞ்ச் பண்ண போறீங்களா? எனக்கு ரொம்ப தூக்கம் வருது நான் தூங்குறேன்” என்றவாறே கட்டிலை நோக்கி நகர்ந்து செல்ல போக
அவள் முன்னால் வந்து நின்று கொண்டவன்
“இது என்னோட ஃபேவரிட் டீசர்ட் காலேஜ் படிக்கும் போது நான் அடிக்கடி இதை தான் போட்டுட்டு இருப்பேன் என்ன நடந்ததுன்னு தெரியலை திடீர்னு ஒரு நாள் இந்த டீசர்ட் காணாமல் போச்சு அந்த சம்பவம் நடந்து எப்படியும் ஒரு நாலு அல்லது ஐந்து வருஷம் இருக்கும் இத்தனை வருஷம் கழிச்சு மறுபடியும் இந்த டீசர்ட் இப்போ என் கப்போர்டில் இருக்கு அது எப்படி சாத்தியம்?” கேள்வியாக அவனை நோக்க
அவனை நிமிர்ந்து பார்த்தவள்
“அதுவா? நான் தான் உங்க டீசர்டை இத்தனை நாட்களாக எடுத்து வைத்திருந்தேன் உங்க ஞாபகார்த்தமாக இருக்கட்டும்னு என் கூடவே வைத்திருந்தேன் இப்போ நீங்க என் கூடவே இருக்கீங்க இனியும் இந்த டீசர்டை உங்களாக நினைத்து பேசிட்டு இருக்கத் தேவையில்லை பாருங்க அது தான் கொண்டு வந்து வைத்தேன் உங்க சந்தேகம் தீர்ந்துடுச்சா?” இயல்பான புன்னகையோடு அவனைப் பார்த்து கேட்க அவளை ஏற இறங்க பார்த்தவன் அமைதியாக அங்கிருந்து நகர்ந்து சென்றான்.
“ஹலோ பாஸ்! என்ன எதுவும் பேசாமல் போறீங்க?”
“நீ எனக்கு தெரியாமல் இந்த டீசர்டை ஐந்து வருஷமாக உன் கூட வைத்து இருந்த! அதுவும் என் ஞாபகார்த்தமாக!”
“ஆமா நான் அப்படித்தானே சொன்னேன்”
“உனக்கு எது எதில் விளையாடணும்னே இல்லை வீடு க்ளீன் பண்ணும் போது இல்லை வேறு எங்கேயும் இருந்து எடுத்து அம்மா கொடுத்து இருப்பாங்க ஆனா அதை சொல்லாமல் நீ இப்படி ஒரு கதை சொல்லுற இதை நான் நம்பணும்?”
‘அடங்கொய்யா! நீ பார்க்கத்தான் பச்சபுள்ளன்னு நினைத்தா இப்போ உண்மையை சொல்லியும் தத்தி மாதிரி இருக்கியேபா! உன்னை எல்லாம் நம்பி எப்படிடா பிசினஸ் பண்ணுறாங்க? ஷப்பா முடியல!’ ராகினி கார்த்திக்கின் அப்பாவித்தனத்தை பார்த்து தனக்குள் பேசிக் கொண்டு நிற்க
அவள் முகத்தின் முன்னால் சொடக்கிட்டவன்
“ராகினி என்னாச்சு?” என்று கேட்க
அவனைப் பார்த்து இடம் வலமாக தலை அசைத்தவள்
“உங்க மூளை இருக்கே மூளை அது இந்த உலகத்தில் யாருக்குமே இருக்காது! நீங்க வெரி ஷார்ப் போங்க! கல்யாணத்துக்கு வீட்டை ரெடி பண்ணும் போது எல்லா இடத்தையும் சுத்தம் பண்ணி இருப்பாங்க அப்போதுதான் இந்த உங்க ஃபேவரிட் டீசர்ட் கிடைத்து இருக்கும் போல நீங்க ரொம்ப ப்ரிலியண்ட்ங்க!” அவனைப் பாராட்டுவது போல கூறி விட்டு கை தட்ட சிறு பெருமை கலந்த புன்னகையுடன் தன் தலையை கோதிக் கொண்டவன் அதே புன்னகை தவழும் முகத்தோடு குளியலறையை நோக்கி நடந்து செல்ல
அவளோ
“அட கடவுளே!” என்றவாறு தன் தலையில் தட்டிக் கொண்டாள்.
“அத்தை உங்க பையனை இப்படி பச்ச மண்ணா வளர்த்து வைத்து இருக்கீங்களே அத்தை! நடந்த உண்மையை சொல்லியும் அதை நம்பாமல் அவராகவே ஒரு கதையை சொல்லிட்டு போறாங்க இந்த நிலைமையில் இவருக்கு என் காதலை புரிய வைத்து அவர் வாயாலேயே என்னை காதலிக்கிறேன்னு வேற சொல்லுவாருன்னு நான் நம்பிட்டு இருக்கேன்! ஷப்பா இப்போவே கண்ணைக் கட்டுதே!” கார்த்திக் சென்ற வழியைப் பார்த்து கொண்டு நின்றபடியே தனக்குத்தானே பேசிக் கொண்டு நின்றவள் சோர்வாக அருகில் இருந்த கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
“நான் இனி என்ன பண்ணுவேன்? இவங்க சொன்ன கதையை கேட்டு என் மூளை அப்படியே வேலை நிறுத்தம் செய்துடுச்சே!” யோசனையுடன் ராகினி தன் பார்வையை அந்த அறையை சுற்றி சுழலவிட அவளது பார்வை எதிரிலிருந்த சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கார்த்திக்கின் புகைப்படத்தில் நிலைகுத்தி நின்றது.
அந்த புகைப்படத்தை பார்த்ததுமே மெல்ல எழுந்து சென்று அதை வருடிக் கொடுத்தவள் அவனது புன்னகை தவழும் முகத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்றாள்.
“நான் இந்த காதலை நினைத்து சோர்ந்து போகும் நேரமெல்லாம் இந்த சிரிப்பை வைத்தே என் மனதை மாற்றிடுறீங்க மை டியர் ஹஸ்பண்ட் கார்த்திக்! ஹ்ம்ம்ம்ம்ம்! பத்து வருஷத்தை அசால்ட்டாக கடந்த எனக்கு இனி வரப்போகும் நாட்களை கடக்கத் தெரியாதா என்ன? கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்ன ஆளை இப்போ இந்தளவிற்கு மாற்றி வைத்து இருக்கேன் உங்க மனதில் காதலை வர வைக்க முடியாதா என்ன?
மிஸ்டர் ஹஸ்பண்ட் கார்த்திக் உங்க இத்தூணுன்டு மூளையில் நான் சொல்லப் போவதை குறித்து வைத்துக் கொள்ளுங்க கூடிய சீக்கிரம் உங்க வாயாலேயே ராகினி நான் உன்னை காதலிக்கிறேன்னு சொல்லுவீங்க அந்த நாள் ரொம்ப தூரத்தில் இல்லை! ரொம்ப தூரத்தில் இருந்தாலும் பரவாயில்லை நீங்க சொல்லுவீங்க! டோன்ட் வொர்ரி ராகினி உன்னால் முடியும்! உன் காதல் உன்னை எப்போதும் கை விடாது!” ராகிணி தனக்குத்தானே தைரியம் அளித்து கொள்வது போல தன் கணவனின் நிழல் படத்துடன் பேசிக் கொண்டு இருக்கையில் குளியலறைக் கதவு திறந்து கொள்ளும் சத்தம் கேட்கவே கார்த்திக் குளியலறையில் இருந்து வெளியே வருவதற்குள் அவசரமாக ஓடிச் சென்றவள் கட்டிலின் ஒரு ஓரத்தில் கண் மூடி படுத்துக் கொண்டாள்.
அவன் தன்னைப் பார்க்கும் நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல் பாசாங்கு செய்தவள் சிறிது நேரத்தில் அவன் உறக்கத்தை தழுவிக் கொண்டான் என்பதை உறுதி செய்து கொண்டு அவனின் புறம் திரும்பி அவனை காதலோடு பார்த்தபடியே நிம்மதியாக உறங்கிப் போனாள்.
பெண்ணவள் எவ்வளவு தூரம் தன் காதலை தன் மனம் கவர்ந்த மனாளனுக்கு புரிய வைக்க முயன்றும் அவனால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை.
ராகினி அவனது ஒவ்வொரு செய்கையிலும் காதலோடு தன்னை மெய் மறந்து போவது போல் கார்த்திக் அவளது காதலை உணர்ந்து அவள் காதலில் தன்னை மெய் மறப்பானா? இல்லையா? என்பதை அந்த காலத்தின் ஓட்டத்தில் தான் அறிந்து கொள்ள முடியும்.
கார்த்திக் மற்றும் ராகினியின் வாழ்வு அதன் பின்னர் வந்த நாட்களில் எல்லாம் ஒட்டுமொத்தமாக நெருக்கத்தில் இல்லாவிட்டாலும் மெல்லிய நீரோட்டம் போல இயல்பாகவே சென்று கொண்டிருந்தது.
முதன்முதலாக ஒரு பெண் தனக்கு உரிமையானவளாக இருக்கும் அந்த நிலை கூட அவனுக்கு ஒரு புதிய அனுபவமாக தான் இருந்தது.
இத்தனை நாட்களாக துளசியுடனும், தன் அன்னை சகுந்தலாவுடனுமே அதிகமாக தன் வீட்டில் இருக்கும் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தவன் இப்போது புதிதாக தன் வாழ்க்கையில் இணைந்திருக்கும் ராகினியையும் அந்த வட்டத்துக்குள் மெல்ல மெல்ல அவனையறியாமலேயே சேர்த்துக் கொள்ள தொடங்கியிருந்தான்.
திருமணத்திற்கு பிறகு ஒரு வாரம் விடுமுறை எடுத்திருந்தவன் அன்று அந்தவொரு வாரத்தை வெற்றிகரமாக கடந்து விட்ட திருப்தியோடு தன் அலுவலகத்திற்கு செல்ல தயாராகி கொண்டிருக்க அதே நேரம் ராகினியும் அவசர அவசரமாக தயாராகி கொண்டு நின்றாள்.
அவன் அணிந்திருந்த சந்தன நிற கோர்ட்டுக்கு பொருத்தமாக அமைவது போல சந்தனம் மற்றும் பிங்க் நிறம் கலந்த ஷிஃபான் சேலை அணிந்து அதன் மடிப்புகளை நேர்படுத்திக் கொண்டிருந்தவளை அவனது கண்கள் அளவிடாமல் இல்லை.
அதே நேரம் அவன் தன்னை கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டிருப்பதை அவள் கண்டு கொள்ளாமலும் இல்லை.
தன் முன்னால் இருந்த நிலைக்கண்ணாடி வழியாக அவளைப் பார்த்து கொண்டு இருந்தவன்
“ராகினி எங்கேயும் வெளியே போகப் போறியா? நான் வேணும்னா டிராப் பண்ணவா?” என்று கேட்கவும்
சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள்
“எது டிராப்பா? என்ன விளையாடுறீங்களா? நானும் உங்க கூட ஆபிஸுக்கு தான் வர்றேன் மாமா உங்க கிட்ட என் வேலை விஷயமாக சொன்னேன்னு சொன்னாங்களே! உங்களுக்கு மறந்து போச்சா?” குழப்பத்துடன் அவனைப் பார்த்து வினவ
“அப்பாவா?” சிறிது நேரம் யோசித்து கொண்டு நின்றவன் பின்னர் ஏதோ ஞாபகம் வந்தவனாக தன் தலையில் தட்டிக் கொண்டான்.
“ஆமா இரண்டு வாரத்துக்கு முன்னாடி அப்பா எனக்கு பி.ஏ வாக ஒருத்தரை அரேஞ்ச் பண்ணி இருக்கேன் இரண்டு வாரம் கழிச்சு ஜாயின் பண்ணுவாங்கன்னு சொன்னாங்க தான்! நான் யாரு அதுன்னு கேட்டதற்கு சர்ப்ரைஸ்ன்னு சொன்னாங்க அந்த சர்ப்ரைஸ் நீ தானா?”
“ஆமா ஆமா! உங்களுக்கு சர்ப்ரைஸ் தர்றேன்னு சுற்றி சுற்றி நான் தான் சர்ப்ரைஸ் ஆகிக்கிறேன்” இறுதியாக கூறிய வசனங்களை மெல்லிய குரலில் தனக்கு மாத்திரம் கேட்கும் வகையில் ராகினி முணுமுணுத்துக் கொள்ள
“என்ன சொன்ன?” கார்த்திக் அவள் இதழசைவையே கேள்வியாக பார்த்துக் கொண்டு நின்றான்.
“நேரமாச்சு இப்படியே பேசிட்டு இருக்கப் போறீங்களான்னு கேட்டேன்” தலையை ஒரு பக்கம் சரித்து பற்கள் அனைத்தும் வெளியே தெரியும் படி சிரித்துக் கொண்டே ராகினி அவனைப் பார்த்து வினவ
“அய்யோ! ஆமா லேட் ஆகுதுலே! சீக்கிரமாக போகலாம் வா” என்றவாறே பதட்டத்துடன் கார்த்திக் அறையை விட்டு வெளியேற அவனது நடவடிக்கைகளை பார்த்து எப்போதும் போல சிரித்தபடியே பின் தொடர்ந்து சென்றாள் அவனது மனைவி அவனை எப்போதும் அளவுக்கு அதிகமாக நேசிக்கும் அவனது மனைவி.
காலையுணவை முடித்து விட்டு ஆபிஸ் செல்லும் வழி முழுவதும் தங்கள் வேலையை பற்றியும், கம்பெனி நடவடிக்கைகள் பற்றியும், பங்குச்சந்தை நிலவரம் பற்றியும் ஒவ்வொரு அடிப்படை விடயமாக கார்த்திக் ராகினிக்கு சொல்லிக் கொடுத்த வண்ணம் இருக்க அவளுக்கோ இந்த ஒரு வார காலம் ஏன் இந்த பத்து வருடங்களாக தான் பார்த்து காதல் செய்த கார்த்திக் இவன்தானா என்றிருந்தது.
அவனது பேச்சு, வார்த்தைகள் என ஒவ்வொன்றிலும் அத்தனை முதிர்ச்சி இருப்பதை பார்த்து வியந்து போனவள்
‘கார்த்தி நீங்க உங்க மூளையை எல்லாம் பிசினஸில் பாவிச்சுட்டீங்கன்னு நான் சும்மா ஒரு பேச்சுக்கு தான் நினைத்தேன் ஆனா உண்மையாகவே அப்படித்தான் இருக்கும் போல இருக்கு! இந்த ஷார்ப் அன்ட் ஸ்மார்டை பர்சனலாவும் யூஸ் பண்ணி இருக்கலாம்’ தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டதை வெளியே சொல்லாமல் அமைதியாக இருந்தவள் அவன் இதுவரை வேலை விஷயமாக சொல்லித் தந்த விடயங்களை எல்லாம் தன் கையிலிருந்த டைரியில் குறித்து கொண்டாள்.
அவளுக்கு பிசினஸ் பற்றியோ கணக்கு பற்றியோ எந்தவொரு விருப்பமும் இல்லாமல் இருந்தாலும் கார்த்திக்கோடு அவனது அலுவலகத்தில் இணைந்து வேலையாவது செய்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் அவள் பி.காம் படிக்கவே ஆரம்பித்தாள்.
விரும்பியோ விரும்பாமலோ பல அரியர்ஸ், பல திட்டுகள், பல கிளாஸ் கட் என ஒருவழியாக அவள் படித்து முடித்த அவளது கல்லூரி படிப்பு இப்போது அவளது ஆசையை வெற்றிகரமாக நிறைவேற்றி இருந்தது.
ராகினியின் வாழ்க்கையில் பல்வேறு வகையான விடயங்கள் நடந்திருப்பினும் அவற்றில் பெரும்பாலானவை கார்த்திக்கை முன்னிறுத்தியே இருக்கும் ஒன்று கார்த்திக்கிற்காக செய்தது இன்னொன்று, அதுவும் கார்த்திக்கின் காதலிற்காக செய்ததாக தான் இருக்கும்.
ராகினியின் இருபத்தேழு வருட வாழ்க்கையில் பத்து வருடங்கள் கார்த்திக்கை மட்டுமே சுற்றி சுற்றி வந்திருக்கிறது.
அவளது இந்த பத்து வருடக் காத்திருப்பிற்கு எதிர்பார்த்தது கிடைக்குமா? இல்லை அப்படியே இறுதி வரை போய் விடுமா? காத்திருந்து பார்க்கலாம்.
கார்த்திக் திருமணம் முடித்து தன் மனைவியுடன் அலுவலகம் வருகிறான் என்ற செய்தி முன்னரே அவனது அலுவலகத்தில் இருந்த நபர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்க புது மணத் தம்பதியரை வரவேற்க அலுவலக ஊழியர்கள் எல்லோரும் வாயிலில் அவர்களுக்காக ஆவலுடன் காத்து நின்றனர்.
தன் முதல் நாள் அலுவலக வேலை அதுவும் தன் காதல் கணவனோடு என்ற பூரிப்போடு அமர்ந்திருந்த ராகினி அங்கே அவர்களுக்காக காத்து நின்ற ஊழியர்களையும், அவர்களது வரவேற்பு உபசாரத்தையும் பார்த்து திக்கு முக்காடி தான் போனாள்.
இதற்கு முன் தன் அண்ணனின் அலுவலகத்திற்கு எல்லாம் அவள் பெரிதாக சென்றதே இல்லை அவராக அழைத்தாலும் ஏதாவது ஒரு காரணத்தை சாக்கு சொல்லி விட்டு கார்த்திக்கை மறைந்திருந்து காதல் செய்யும் தன் பணியை செய்ய ஓடி விடுவாள்.
இப்போது அவளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்க அதை எல்லாம் பார்த்து ஒரு பக்கம் அளவுகடந்த சந்தோஷமாக இருந்தாலும் மறுபுறம் அவளுக்கு சிறிது சங்கோஜமாகவும் இருந்தது.
இது மாதிரி வரவேற்பு, பாராட்டுக்கள் எல்லாம் கார்த்திக்கிற்கு பழகிப் போன விடயங்களாக இருந்தாலும் ராகிணியின் சங்கடத்தை அவன் நொடிப்பொழுதில் உணர்ந்து கொண்டான்.
என்ன தான் மற்ற விடயங்களில் கார்த்திக் சற்று மந்தமாக இருந்தாலும் இந்த பிசினஸ் சம்பந்தமான விடயங்களில் எல்லாம் அவரது மூளை கடுகதி ரயிலை விட வேகமாக சிந்திக்கும்.
ஊழியர்களின் வாழ்த்துக்களை இன்முகத்துடன் பெற்றுக் கொண்டவன் சிறு தலையசைவுடன் ராகினியை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டபடி முன்னே நடந்து செல்ல சுற்றி நின்ற அனைவரும் அவர்களுக்கு வழி விட்டு சற்று விலகி நிற்க அவனது செய்கையில் ராகினி மயங்கித் தான் போனாள்.
தனது சங்கடத்தை உணர்ந்து தனக்காக அவன் யோசிக்கின்றானா என்ற பூரிப்போடு அவன் தன் தோளைப் பிடித்திருந்த கையை தன் மறு கையால் மெல்ல வருடிப் பார்த்தவள் வெட்கம் கலந்த புன்னகையுடன் அவனது முகத்தை திரும்பிப் பார்த்தாள்.
தனது கேபினுக்குள் வந்து சேரும் வரை ராகினியின் தோளைப் பிடித்திருந்த தன் கையை விலக்கி கொள்ளாதவன் அந்த அறைக்குள் வந்த அடுத்த கணமே அவளைப் பற்றியிருந்த தன் கையை விலக்கிக் கொண்டு தன் கடமைகளை கவனிக்க தொடங்கினான்.
வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு வார விடுமுறை என்பது ஒரு வாரம் தானே குறுகிய காலம் அது என்பது போல தோன்றும் ஆனால் அந்த ஒரு வாரத்தில் ஏழு நாட்களும் பங்குச்சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப தொழில் புரியும் கார்த்திக் போன்ற தொழில் வல்லுனர்களுக்கு அந்த ஒவ்வொரு நாட்களும் அத்தனை விலைமதிப்பானது.
தான் ஒரு வாரம் விடுமுறை எடுத்ததால் அந்த வேலைகள் அனைத்தையும் உடனடியாக கவனிக்க வேண்டிய தேவையிருந்ததனால் ராகினியையும் தன் வேலையில் இணைத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அவன் தன் பணியை ஆரம்பிக்க முதல் நாளே அத்தனை வேகத்தை வேலையில் எதிர்பாராதவள் திக்குமுக்காடி போனாள்.
அவனைப் பார்த்து முடியாது என்று சொல்லவும் முடியாமல் அவன் கொடுக்கும் வேலைகளை குறுகிய நேரத்திற்குள் செய்து முடிக்கவும் முடியாமல் அவள் படும் அவஸ்தை அவள் ஒருவளே அறிவாள்.
ஒரு கட்டத்துக்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த அறையின் மூலையில் போடப்பட்டிருந்த ஷோபாவில் சென்று அமர்ந்து கொண்டவள் அசதி தாளாமல் சற்று கண்ணயர்ந்து விட
“ராகினி! இவ்வளவு வேலையை வைத்துட்டு அங்கே என்ன பண்ணுற?” கார்த்திக் தான் பார்த்துக் கொண்டிருந்த பைலில் இருந்து தன் பார்வையை உயர்த்தாமலேயே சத்தம் போட அவனது சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து நின்றவள் காலை தரையில் உதைத்து கொண்டபடியே அவசர அவசரமாக தன் முகத்தை துடைத்து கொண்டு அவனின் அருகில் வந்து நின்று தன் கைக்கடிகாரத்தை திருப்பிப் பார்த்தாள்.
‘அய்யோ கடவுளே! இன்னும் எவ்வளவு நேரம் இந்த கஷ்டத்தை நான் தாங்குவேன்? எனக்கு வர்ற ஆத்திரத்திற்கு அப்படியே இவங்க கழுத்தை… ஒண்ணும் பண்ண முடியாது! எல்லாம் என் நேரம்!’ மனதிற்குள் புலம்பிக் கொண்டே தனக்கென கொடுக்கப்பட்ட பைலை எடுத்து புரட்டத் தொடங்கியவள் ஓரக்கண்ணால் அவனைப் பார்த்து கொண்டே அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கினாள்.
தன் கையிலிருந்த பைலை பார்ப்பது போல பாவனை செய்தபடியே மெல்ல அந்த அறையை சுற்றிலும் நோட்டம் விட்டவள் சட்டென்று தன் கையிலிருந்த பைலை அவன் பார்த்துக் கொண்டிருந்த பைலில் மேல் போட அவளது செய்கையில் சற்று முகம் சிவக்க கோபத்துடன் எழுந்து நின்றவன்
“ராகினி! என்ன விளையாட்டு இது? உனக்கு வேலை செய்ய இஷ்டம் இல்லைன்னா வேலை செய்யுற மற்ற ஆளுங்களை இப்படி தான் தொந்தரவு பண்ணுவியா?” வழக்கத்திற்கு மாறாக தன் குரலை உயர்த்தி பேச
அவனைப் பார்த்து புன்னகைத்து கொண்டே அவன் முன்னால் வந்தவள்
“மை டியர் ஹஸ்பண்ட் கார்த்திக்! லைஃப்ல எப்போதும் இப்படி வேலை வேலைன்னு ஓடிட்டே இருக்க கூடாது பாஸ்! கொஞ்சம் அப்பப்போ சின்னதாக ஒரு இடைவேளை எடுத்துக் கொள்ளணும் இல்லைனே மூளை சூடாகி உங்க இரண்டு காது வழியாகவும் உருகி வழிந்துடும்!” சிறு குழந்தைக்கு கதை சொல்வது போல கண்களை உருட்டி பாவனை செய்தபடியே கூறவும் அவளைப் பார்த்து சலித்துக் கொண்டவன் தன் இருக்கையில் அமர்ந்து கொள்ளப் போக சட்டென்று அவனை நகர விடாமல் அவனது கோர்டை பிடித்துக் கொண்டவள் இல்லை என்பது போல மறுப்பாக தலையசைக்க அவனோ அவளை குழப்பமாக பார்த்துக் கொண்டு நின்றான்.
“அது தான் சின்ன இடைவேளைன்னு சொன்னோம்லே அப்புறம் என்ன?” ராகினி அவனைப் பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டே அவனது கோர்டைப் பிடித்திருந்த தன் கையை விலக்கி எடுத்துக் கொண்டு அவனை நெருங்கி வர அவளது செய்கைகளைப் பார்த்து கார்த்திக்கிற்கு அந்த ஏ.சி குளிர்மையிலும் வேர்த்துக் கொட்ட ஆரம்பித்தது.
“ரா…ரா…ரா…”
“அது அப்படி இல்லை மை டியர் ஹஸ்பண்ட் கார்த்திக்! ரா ரா சரசுக்கு ரா ரா… அப்படி வரும் அது சரி உங்களுக்கு என்ன சந்திரமுகி பாட்டு இவ்வளவு கேப் ஆகுது?” ராகினியின் கேலியான கேள்வியில் தன்னை சுதாரித்துக் கொண்டு வேகமாக அவளை விட்டு சிறிது தள்ளி நின்று கொண்டவன்
“ராகினி இது ஆபிஸ்! இங்கே இப்படி எல்லாம் விளையாட வேண்டாம்! அதோடு இப்படி என் பக்கத்தில் வர்றதையும் கொஞ்சம் குறைச்சுக்கோ” என்று கூற
“ஓஹ்! அப்போ வீட்டில் வைத்து விளையாடி பக்கத்தில் வந்தா பரவாயில்லையா?” தனக்கு எதுவுமே தெரியாது என்ற பாவனையோடு அவள் கேள்வி கேட்க அவளை முறைத்துப் பார்த்தவன் தன் கைக்கு சிக்கிய ஒரு பைலை எடுத்து கொண்டு அந்த அறையை விட்டு விட்டால் போதும் என்பது போல அவசர அவசரமாக வெளியேறிச் செல்ல அவனது பதட்டமான நடவடிக்கைகளை பார்த்து ராகினி தன் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள்.
“மை டியர் ஹஸ்பண்ட் கார்த்திக்! பத்து வருஷம் உங்களை விட்டு தள்ளி இருந்தது போதாதா? இன்னமும் தள்ளி இருக்கணுமா என்ன? நோ வே! இப்போ நான் உங்க மனைவி பாஸ் அதை நீங்க மறக்கலாமா? நான் பக்கத்தில் வந்தாலே அய்யாவுக்கு வேர்த்துக் கொட்டுது இதற்கே இப்படின்னா இனி வரப்போற நாள் எல்லாம் நீங்க உங்க கையோடு ஒரு விசிறியை வைத்துட்டு விசிறிட்டே இருக்கணும் போல? எது எப்படியோ இன்னைக்கு என் பிளான் சக்ஸஸ் இன்னும் கொஞ்ச நேரம் நிம்மதியாக தூங்கலாம் மை டியர் ஹஸ்பண்ட் என்னை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டாரு!” கைகள் இரண்டையும் விரித்து சந்தோஷமாக ஒரு முறை அந்த அறையை சுற்றி வந்தவள் அதே சந்தோஷமான மனநிலையுடன் தான் தூக்கத்தை இடைவிட்ட ஷோபாவில் சாய்ந்து மீண்டும் உறக்கத்தை தழுவ மறுபுறம் கார்த்திக் பதட்டத்துடன் அந்த அறையின் வாயிலில் குட்டி போட்ட பூனை போல பதட்டமான முகத்துடன் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான்…..