UMUV12

Banner-0106d97e

UMUV12

12

 

காலை கண் விழித்தவளின் மனதிற்கு முதலில் தோன்றியது ரிஷியின் அழகிய முகமே. ‘என்னடா இது காலங்கார்த்தாலயே மனசுக்குள்ள புகுந்து இப்படி இம்சிக்கிறே! ‘ தலையைக் கலைத்துக்கொண்டவள் தலையணையை முகத்தில் போட்டுக்கொண்டு மீண்டும் படுத்துக்கொண்டாள்.

அன்று முழுவதுமே கனவுலகில் மிதந்தபடி திரிந்தவள், தன் முகத்தில் தன்னையும் மீறிப் பொங்கி வழிந்த சந்தோஷத்தையும் புன்னகையையும் கட்டுப்படுத்த முடியாமல் திணறித்தான் போனாள்.

மாலை “வர்ஷா மதுவ கூட்டிகிட்டு கோவிலுக்கு போயி, அவ அப்பாயின்மென்ட் ஆர்டரை வச்சு அர்ச்சனை பண்ணிட்டு வாங்க” பாட்டியின் குரலில், மறுப்பு எதுவும் சொல்லாமல் சந்தோஷமாகவே தங்கை மதுவுடன் கிளம்பினாள் வர்ஷா.

“வண்டி எப்போடி வரும்?” கோவிலில் தன் வண்டியை நிறுத்தியபடி மது கேட்க,

“இன்னைக்கி ஃபோன் பண்ணிக் கேட்கணும்” என்ற வர்ஷா அவளுடன் கோவிலுக்குள் நுழைந்தாள்.

“ஏதாவது விசேஷமா இன்னைக்கு? இவ்வளவு கூட்டமா இருக்கு!” என்ற வர்ஷா, “நீ இரு, நான் அர்ச்சனை சீட்டு வாங்கிட்டு வரேன்” என்றபடி சென்றுவிட,

வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த மதுவின் முதுகில் யாரோ வந்து இடிக்க, “ஆண்டவா” தடுமாறி நின்றாள்.

“எருமை மாடு! இப்படியா வந்து இடிப்ப?” என்றபடி தன்னை இடித்த இளைஞனை அவள் முறைக்க,

அவனோ, “மனுஷன் வரது தெரியாம வழியில நின்னுட்டு கிடக்க நீதான் எருமை! பிரகாரத்தை சுத்துற வழியில நின்னுகிட்டு என்ன வேடிக்கை?” என்று சீறியவன், “கொத்தவரங்கா மாதிரி இருந்துகிட்டு வாய பாரு” என்று முணுமுணுக்க,

“யார்டா கொத்தவரங்காய்? மூஞ்சிய உடைச்சுடுவேன் பாத்துக்கோ” மது அவனை அண்ணாந்து முறைக்க,

அவளைப் பார்த்து நக்கலாகச் சிரித்தவனோ, “மொதல்ல நீங்க கிரவுண்ட் ஃபுளோர்ல இருந்து ரெண்டு மாடியேறி வாங்க மேடம். அப்போவாது என் முகம் எட்டுதான்னு பாப்போம்” என்று சொல்ல, கடுப்பானவள் கத்த, இருவருக்கும் வாக்குவாதம் துவங்கியது.

“ஹேய் விஷ்ணு! என்ன இங்க?” என்றபடி வந்த வர்ஷா, தங்கையின் முகத்திலிருந்த கோவத்தில், குழப்பமாக இருவரையும் பார்க்க, நொடியே நீடித்த அமைதி, மதுவின் “கோவிலுக்கு இடிக்குறதுக்குன்னே வர அலைஞ்சானுங்க!” என்ற சத்தமான முணும்முனுப்பில் கலைந்தது.

விஷ்ணுவோ, “அலைஞ்சான் அதுஇதுன்னே பல்லை பேத்துடுவேன். ரௌடிய மாறி கத்துறதை பார் வார்ஷா” என்று கத்த, கையை ஓங்கியபடி மது விஷ்ணுவை நெருங்கவும், இருவருக்கும் நடுவே அரணாய் வந்து நின்றாள் வர்ஷா.

“தள்ளு! கையை ஓங்குறாளே, பெரிய ப்ரூஸ்லீ! அடிடி பாப்போம்!” வர்ஷாவை விலக்கியபடி விஷ்ணு முறைக்க,

“நீ தள்ளுடி! இவனை நாலு மிதிமிதிச்சாதான் என் ஆத்திரம் அடங்கும்! “ மதுவும் திமிர,

“ஹேய் சே! கேவலமா கோவில்ல கத்திகிட்டு, சீ கையை கீழ இறக்கு மது!” தங்கையை மிரட்டியவள், விஷ்ணுவின் புறம் திரும்பி, “என்ன இது? நீங்களுமா?” என்று முறைக்க,

விஷ்ணு “இந்த குரங்கை உனக்கு தெரியுமா?” என்று கேட்க, அவனை முறைத்த வர்ஷா,

“இந்த குரங்கோட அக்கா குரங்கு நான்தான் !” என்று சொல்ல, கண்கள் விரிய நின்ற விஷ்ணுவோ,

“இந்த அழகு தெய்வத்தின் தங்கையா இவள்? அய்யகோ!” என்று போலியாக அலுத்துக்கொண்டான்.

அவன் சொல்லி முடிக்கவும் கோபம் தலைக்கேறிய மதுவோ, வர்ஷாவை விலக்க முயன்றபடி, “நீ நகருடி அவனை அடிச்சு, கடிச்சு…” என்று மீண்டும் திமிர துவங்கினாள்.

விஷ்ணு ஓரக்கண்ணால் மதுவைப் பார்த்தபடி, “சிட்டிக்கு கோவம் வருது!” என்று நாக்கை துருத்தி பழிப்பு காட்ட, கொலைவெறியோடு அவனை அடிக்கப் பாய்ந்தவளைப் படாத பாடுபட்டு அமைதிப் படுத்தினாள் வர்ஷா.

வர்ஷா கடிந்து கொண்டதால் அமைதியான மது, விஷ்ணுவைக் கண்களால் எரிப்பதைப் போல் முறைப்பதை நிறுத்தவில்லை.

“என்ன முறைப்பு? கோலிக்குண்டு கண்ண வச்சுக்கிட்டு” விஷ்ணு அவளை விடாமல் சீண்ட, வர்ஷா “விஷ்ணு! ப்ளீஸ்!” என்று கெஞ்ச,

“சாரி” என்று வேண்டா வெறுப்பாகச் சொன்ன விஷ்ணு அமைதியாக, வார்ஷாவிற்கு எதோ நினைவு வந்ததைப் போல், “ஆமா நீங்க தனியாவா வந்தீங்க?” என்று பார்வையை தங்களைச் சுற்றி வீசியபடி கேட்க,

“இல்ல அண்ணாவும் அம்மாவும் வந்துருக்காங்க” என்றவன், நிறுத்தம் கொடுத்து வர்ஷாவை கூர்ந்து பார்க்க, அவளோ ஆர்வமாக இப்பொழுது தனக்குப் பின்னால், கண்களால் தேடுவதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டான்.

விஷ்ணு “சாரி நீங்க எங்க இங்க?”

விஷயத்தைச் சொன்ன வர்ஷா, மதுவுடன் முன்னே நடக்க, அவர்கள் பின்னே நடந்த விஷ்ணுவோ மதுவின் காது படவே உரக்க அவளை வம்பிழுத்தபடி முணுமுணுப்பதை வர்ஷா கெஞ்சிக்கேட்கும் வரை நிறுத்தவில்லை.

“நீங்க வேண்டிக்கிட்டு வாங்க, கொஞ்சம் வேலை இருக்கு” என்று விஷ்ணு சென்றுவிட,

அர்ச்சனையை முடித்துக்கொண்டவர்கள், கோவிலைச் சுற்றி பின்புறம் இருந்த நவகிரக சன்னிதிக்குப் பேசிக்கொண்டே நடந்தனர்.

“யார்டி எந்த லைட் ஹவுஸ்? எவ்ளோ கொழுப்பு, திமிர் பிடிச்ச பன்னி !” மது கடுகடுக்க,

“விடுடா! அவன் என் ஃபிரென்ட் தான். ரெண்டு பேர் கம்பெனியும் ஒரே பில்டிங்”

“இந்த மாதிரி லூசெல்லம் தான் உனக்கு ஃபிரெண்டா? சுத்தம்! அப்போ நீ செலக்ட் பண்ற பாய்பிரென்ட் கூட மாங்கா மடையனா தான் இருப்பான்!” என்று அலுத்துக்கொண்டே மது முன்னே நடக்க,

“அடிப்பாவி பொசுக்குன்னு என் நந்தாவ மாங்கா மடையன்னு சொல்லிட்டே?” என்று கத்திய வர்ஷாவோ நாக்கை கடித்துக்கொண்டாள்.

அக்காவின் வார்த்தைகள் தெளிவாகக் காதில் விழ அதிர்ந்து திரும்பிய மது, “என்ன சொன்ன?” என்று கண்கள் விரிய,

“ஓ..ஒண்ணுமில்லையே! வாடி நேரமாச்சு” என்று வர்ஷா அவளைத் தாண்டி நடக்க,

“யாருடி நந்தா? சொல்லவேயில்ல! கூட வேலை செய்றானா? எனக்கு தெரியுமா?” மது குடையத் துவங்க,

“நந்தா!” என்ற வர்ஷா சிலையாய் நின்றுவிட்டாள். அவள் பார்வை சென்ற வழி மது திரும்பும் முன்னரே கூட்டத்தில் ரிஷிநந்தன் கலந்துவிட,

“எங்கடி? காட்டு” என்று மது எம்பிப் பார்க்க, சோகமான வர்ஷா, மதுவின் தொணதொணப்பு தாங்காமல் மேலோட்டமாக நந்தாவைப் பற்றிச் சொன்னாள்.

“அடிப்பாவி அக்கா! ஒரு வார்த்தை சொன்னியா? ஐயோ என் பில்(Bil – Brother in law) எங்க போனார் தெரியலையே… இரு இரு அப்போ அந்த விஷ்ணு நமக்கு சொந்தக்காரன் ஆவானா! நோ வே!” மது கடுகடுக்க,

“அடியே நீ என்ன அவ்ளோ யோசிக்கிற? சேர்ந்தாப்புல ரெண்டு வார்த்தை பேசவே வரலையாம், இதுல நான் போயி காதல் கத்திரிக்காய்ன்னு பேசிட்டாலும். அவ்ளோ சீன் இல்ல, வா நேரமாச்சு கிளம்புவோம்” தங்கைக்காகச் சொன்னாலும் உண்மை அதானே, தன்னை தானே நொந்துகொண்டவள் கையைப் பிடித்து நிறுத்தினாள் மது.

“என்னடி பண்றான் உன் லூசு ஃபிரென்ட்?” என்று எங்கோ பார்க்க, தூரத்தில் பிரசாதத்தை பக்தர்களுக்கு விநியோகம் செய்ய உதவிக்கொண்டிருந்தான் விஷ்ணு.

தங்களைக் கடந்து சென்றவர்கள் கையிலிருந்த தொன்னையில் நெய் பளபளக்க மிளிர்ந்த சர்க்கரைப் பொங்கலை ஆர்வமாகப் பார்த்த சகோதரிகள் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்தபடி வேகமாகப் பிரசாத வரிசையில் நின்றனர்.

“வர்ஷ் இங்க மட்டும் அந்த பண்டாரம் இல்லாம அவன் அண்ணன், அதான் உன் சைட், நந்தா இருந்திருந்தா எப்படி இருக்கும்” மது கண்ணைச் சிமிட்ட,

“அபிராமி அபிராமி! ” என்று வர்ஷா, குணா கமல் போல அசைந்து அசைந்து நடக்க, தங்களுக்குள் பெண்கள் இருவரும் சிரித்துக்கொண்டனர்.

புன்னகையுடன் அனைவருக்கும் விநியோகம் செய்துகொண்டிருந்த விஷ்ணு, வர்ஷாவை பார்த்ததும், முத்திரி பருப்புகள் நிறைய வரும்படி பிரசாதத்தை வழிய வழிய அள்ளித் தொன்னையில் வைத்துக் கொடுத்து. பின்னே வந்த மதுவிற்கோ வேண்டா வெறுப்பாக முக்கால் தொன்னை மட்டுமே கொடுத்தான்.

மதுவோ “கஞ்ச பிசினாறி! என்னமோ அவனே சமைச்சு தர்ற மாதிரி ஓர வஞ்சனைய பாரேன்” முணுமுணுத்தபடி வர்ஷாவுடன் ஒரு ஓரமாக அமர்ந்தாள்.

“நீ இதை எடுத்துக்கோ, நான் ஏற்கனவே குண்டடிக்கிறேன்னு பாட்டி திட்றா, நீதான் வளர்ற பொண்ணு சாப்பிடு” வர்ஷா மதுவிடம் தன் தொன்னையை நீட்ட,

“ஹாய் வர்ஷா!” என்ற குரலில் இரு பெண்களுமே நிமிர, அங்கே பற்கள் தெரிய நின்றிருந்தான் வர்ஷாவின் நந்தாவான ரிஷிநந்தன்.

தேடித் தேடி பார்க்கமுடியாமல் போகவே உள்ளுக்குள் சோகமாக இருந்தவளோ, அவனே அவளைத் தேடி வந்ததில் ஸ்தம்பித்துவிட்டாள்.

“நீ வந்துருக்கேன்னு விஷ்ணு சொன்னான், இதான் உன் தங்கையா?” என்றவன் மதுவைப் பார்த்து வணக்கம் சொல்ல, பதிலுக்கு வணக்கம் சொன்ன மது வந்திருப்பவன் யாரென்று யூகித்துவிட்டாள்.

“அ.. இ.. ம..” திணறிய அக்காவைப் பார்த்துச் சிரித்துவிட்ட மது, தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.

மதுவின் கையில் சின்ன டிஃபன் பாக்ஸை தந்த ரிஷி, “இந்தாங்க வீட்டுக்கு பிரசாதம்” கொடுக்க,

‘உங்களுக்கு எப்படி கிடைச்சுது?’ என்பதை போல் கேள்வியாய் பார்த்த வர்ஷாவிடம், “அம்மா தான் இன்னிக்கி சர்க்கரை பொங்கல் ஸ்பான்சர்” என்றான்.

“இதே மாதிரி உங்க அருமை தம்பிக்கு அறிவு வளரணும்னு வேண்டிக்கிட்டு அடிக்கடி கொடுக்க சொல்லுங்க, எங்களுக்கும் பிரசாதம் கிடைக்கும்” என்ற மதுவைக் கிள்ளி வைத்த வர்ஷா, என்ன நினைத்திருப்பானோ என்று பயத்துடன் ரிஷியைப் பார்க்க, அவனோ சிரித்துக்கொண்டிருந்தான்.

“என்ன பண்ண? இவன் தம்பிக்காவது வேண்டிக்கிட்டா புத்தி வரும், சில பேருடைய தங்கைக்கு வேண்டிக்கிட்டாலும் புத்தி வளறாதே. ஏன்னா இருந்தா தானே வளரும்ங்கிறேன்!” என்ற படி வந்து நின்றான் விஷ்ணுவர்தன்.

சின்னவர்கள் சண்டையிடத் துவங்கும் முன்னே, விஷ்ணுவிடம் “என்ன வேண்டுதல்?” என்று கேட்டாள் வர்ஷா அவசரமாக.

“பெரியப்பா… ஐ மீன் அப்பாக்கு உடம்பு முடியாமயிருந்தது. அப்போ வேண்டிகிட்டது”

“இப்போ தேவலாமா?”

“எஸ் இப்போ ஓகே” என்ற விஷ்ணு, ஒரு தொன்னை நிறையச் சர்க்கரைப் பொங்கலை மதுவிடம் நீட்ட, அவளோ முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“என்னடி இது” வர்ஷா கடிந்துகொள்ள,

“சாரி சிஸ்டர்” என்று அவள் முன்பு சென்று நின்ற விஷ்ணு, “சும்மா விளையாட்டுக்குத்தான் வம்பிழுத்தேன். நான் சொன்னதெல்லாம் வாபஸ் வாங்கிக்கிறேன். ஃபிரண்ட்ஸ்?” என்று புன்னகைத்த விஷ்ணுவை அதற்கு மேல் மதுவாலும் வெறுக்க முடியவில்லை.

மதுவும் “நானும் சாரி. ஃபிரண்ட்ஸ்” என்றாள் புன்னகையுடன்.

“ஏ‌ற்கனவே பாக்ஸ் நிறைய கொடுத்திருக்கார் போதும்” என்ற வர்ஷா., “நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா?” விஷ்ணுவிடம் கேள்வியை ஆரம்பித்தவள் ரிஷியிடம் முடிக்க,

ரிஷி,”வீட்டுக்கு போயி தான்” என்றான்

“உங்க அம்மா எங்க?” மது கேட்க,

விஷ்ணு, “அவங்க கொஞ்சம் முன்னாடி தான் கிளம்பினாங்க. நாங்க பிரசாதம் விநியோகம் பண்ண அப்புறம் கிளம்பலாம்ன்னு இருந்தோம்”

அவர்கள் இருவரும் பேசத் துவங்க, வர்ஷா ரிஷி அவ்வப்போது ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.

‘இந்த மாதிரி எப்போ நான் உன்கிட்ட ஜாலியா பேச முடியும் நந்தா? ‘ கண்களும் சேர்ந்து சிரிக்கும் அவன் அழகில் தன்னை மறந்து அவனைப் பார்க்க, சடாரென்று திரும்பிய அவன் பார்வையில் பதறிப் புன்னகைத்துச் சமாளித்தாள்.

பதிலுக்குப் புன்னகைத்தவன் முகத்தில் வர்ஷாவுக்கு எந்த உணர்வும் புலப்படவில்லை.

‘காணாததைக் கண்ட மாதிரி பாக்குறேனோ? ‘ வர்ஷாவின் மூளை எ‌ச்ச‌ரி‌க்கை செய்ய, “நேரமாச்சு மது” என்றாள் கிசுகிசுப்பாக.

அவர்களிடம் விடை பெற்றவள், “பாக்ஸ் மண்டே தரேன்” பொதுவாகச் சொல்லிவிட்டு ரிஷியிடம் மெல்லிய தலையசைப்புடன் விடைபெற்றாள்.

கண்ணிலிருந்து வர்ஷா மறையும் வரை நின்றிருந்தவன், கீழே அமர்ந்து மதிலில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.

“வீட்டு போலாம்டா, ரொம்ப களைச்சு தெரியுறே” என்ற விஷ்ணுவிற்குப் பதில் தராமல் மௌனமாக நின்றிருந்தான் ரிஷி,

“என்னாச்சு” விஷ்ணு அவன் தோளைப் பற்ற,

“அவளை அவாய்ட் பண்ணலாம்னு பாக்கறேன் ஆனா முடியவே மாட்டேங்குது, பாரு இப்போகூட அவளை தூரத்திலே பார்த்துட்டு வீட்டுக்கு போயிடலாம்னு பார்த்தேன். ஆனா…”

“ஆனா என்ன அவள பார்த்ததும் ஓடிப்போய் டப்பால பிரசாதத்தை ரொப்பி உன் கையால கொடுக்கவும் கொடுத்தாச்சு, போறாததுக்கு உன் மச்சினியையும் பார்த்தாச்சு. சும்மா சொல்ல கூடாதுடா வர்ஷாவை விட இவ தான் பெரிய கேடி போல இருக்கு!” விஷ்ணு உதட்டைப் பிதுக்க,

சிரித்துவிட்ட ரிஷியோ, “டேய் சின்ன பொண்ணுடா பாவம்” என்று சொல்ல,

“ஹலோ நான் அவளைவிட ரெண்டு வயசுதான் பெரியவன், சின்ன பொண்ணாமே, அது சரி நீங்க பேசிக்கணும்னு தானே நான் அந்த கொத்தவரைங்காய் கிட்ட சமாதானமா போனேன், ஏன்டா நீ வர்ஷாட்ட பேசல?”

“தெரியலடா, என்னை பார்த்து எவ்ளோ அழகா ஸ்மைல் பண்ணிகிட்டே இருக்கா தெரியுமா? அவகட்ட நான் உண்மையை சொன்னா அந்த சிரிப்பைப் பார்க்க முடியாதுல. இவ்ளோ நாள் ஏமாத்திட்டேன்னு கோவப்பட போறால?” அவன் கண்களில் தெரிந்த வலி, விஷ்ணுவையும் வருத்தியது,

“இப்போதைக்கு ரொம்ப யோசிக்காத, பாத்துக்கலாம்”

“யோசிக்காம எப்படிடா? ஒவ்வொரு தடவையும் அவளை பார்க்கும்போது இப்படித்தான் குற்றவுணர்ச்சி வருது, வரவும் போகுது” மொபைல் வைப்ரேட் ஆக, “வர்ஷா தான்” என்றவன், அழைப்பை ஏற்காமல் சட்டை பையில் மொபைலை போட்டுக்கொண்டான்.

கேள்வியாய் பார்த்த விஷ்ணுவிடம், “அப்புறம் பேசிக்கறேன், எப்படியும் கோவில்ல எப்படி ஃபோன் பேசுறது? சரி வா கிளம்பலாம்” என்றபடி ரிஷி முன்னே நடக்க,

விஷ்ணு “என்னமோ போ! சிம்பிள் விஷயம் நீ ஏன் குழப்பிக்கிறேன்னு புரியலை” என்றபடி அவனுடன் கிளம்பினான்.

வீடு வந்த வர்ஷாவின் கால்கள் தரையில் இல்லை. எதிர்பாராமல் நந்தாவைப் பார்த்த அதிர்ச்சி அவளுள் சொல்லத்தெரியாத சந்தோஷத்தைத் தந்திருந்தது.

‘லட்டு குட்டி மாறி இருந்தான். அவனுக்கு எவ்ளோ அழகா இருந்தது அந்த வெள்ளை வேஷ்டியும் டார்க் ப்ளூ ஷர்டும்! அதுவும் அந்த ஃபுல் ஸ்லீவ்வை கொஞ்சம் மடிச்சுவிட்டு… படுத்துறானே!’ கண்களை மூடி அவன் வடிவத்தை மனத்தில் நிறைத்துக் கொண்டவளின் முகத்தில் மென்மையான புன்னகை படர்ந்தது.

மறுமுனையில் கோவிலில் வர்ஷாவை பார்த்ததை மகன்கள் சொல்ல,

“ஆஹா கொஞ்சம் மெதுவா கிளம்பியிருந்தா நானும் அவளை பார்த்திருப்பேன்” ரஞ்சனி வருந்த,

“அதுனால என்ன? வேணும்னா எதாவது காரணம் சொல்லி மீட் பண்ண கூப்பிடவா?” விஷ்ணு கேட்க,

ரிஷி “ப்ச் பொறுமையா பாத்துக்கலாம் மா, இங்க தானே இருக்கா” விட்டேத்தியாகச் சொன்னவன் மொபைலை பார்த்தபடி அமர்ந்துவிட, ரஞ்சனி முகம் வாடியபடி சமையல் அறைக்குச் சென்றுவிட்டார்.

“பாவம் ஆசையா கேட்டாங்க ஏன்டா இப்படி?” விஷ்ணு அருகில் அமர்ந்தான்.

“நீயும் புரிஞ்சுக்காட்டி எப்படிடா? அவங்க மனசுல ஆசையை வளர்க்க சொல்றியா?”

“பார்றா! இங்க இவ்ளோ வியாக்கியானம் பண்ணிட்டு, அவளை பார்த்தா எல்லாத்தையும் காத்துல பறக்கவிட்டுட்டு போயி பேசுற. உன் மனசுல என்னதான் நினைக்கிற அதையாவது சொல்லு.எனக்கு உன்னை புரிஞ்சுக்க முடியல”

“எனக்கே தெரியலையே டா!” என்ற ரிஷி, “எத்தனை வாட்டி சொல்லுவேன். எனக்கு அவளை பிடிச்சுருக்கு ஆனா லவ் பண்ணல. அதே சமயம் வேண்டாம்னு ஒதுக்கவும் மனசு வரல, என் குழப்பத்துக்காக வர்ஷாக்கு ஆசை காட்டி மோசம் பண்ண முடியாது”

அவன் கையில் உணவு தட்டைக் கொடுத்த ரஞ்சனி, “யாருடா மோசம் பண்ண சொன்னது? கல்யாணம் பண்ணிக்கோ நானே போயி பேசறேன்னு சொல்லிட்டேன். வேற என்ன தான் எதிர் பாக்குறே? எனக்கு அவளை பார்க்கணும்.என் புள்ள மேல அவ்ளோ அன்பு வச்சிருக்க பொண்ண பார்த்தே ஆகணும். நீ காதலி, காதலிக்காம போ! எனக்கு வர்ஷாவ பார்க்கணும்!” என்றார் தீர்மானமாக.

***

அந்த வாரம் முழுவதும் வேலை மிகுதியென்று ரிஷி மதியவுணவிற்கு வெளியே செல்லாமல் போகவே, விஷ்ணு ரிஷிக்கும் சேர்த்து உணவைப் பார்ஸல் வாங்கிக்கொண்டு அவன் அலுவலகத்திற்குச் சென்றான்.

பணிச்சுமையைக் காரணம் காட்டி வர்ஷாவை தவிர்க்கத் தனக்குத்தானே கடிவாளமிட்டுக்கொள்ள முயன்றுகொண்டிருந்தான் ரிஷிநந்தன்.

அவ்வப்போது வர்ஷாவின் ஃபோன் காலில் தன் மனம் சமாதானம் ஆகிக்கொண்டதும் ஒரு வகையில் அவனுக்கு ஏதுவாய் போக, ஒரு வாரப் பிரிவில் தவித்துப்போனது என்னவோ வர்ஷா தான்.

“இன்னிக்கும் நந்தா ஹோட்டலுக்கு வரலை ரிஷி”, “எனக்கு அவனை ஒருவாட்டி பார்த்தா போதும்னு இருக்கு”, “ஐ மிஸ் ஹிம் ரிஷி” என்று அவ்வப்போது அவள் புலம்பும் பொழுதெல்லாம் குற்றவுணர்வு தலை தூக்க, இன்னும் தன்னை அவளிடமிருந்து விலக்கிக்கொள்ளவே முயன்றான்.

அவர்கள் பார்த்துக்கொள்ளாமல் போன, முதல் வார இறுதியில், வர்ஷா முழுவதும் ஒடிந்து தான் போனாள். உணவு உறக்கம் எதுவுமே பிடிக்காமல் எதிலுமே ஒட்டுதல் இல்லாமல் இயந்திரம்போல நாட்களைக் கடத்த துவங்கியவள், ரிஷியை அழைப்பதையும் நிறுத்திவிட்டாள்.

தொலைப்பேசி உரையாடலும் நின்றுபோகும் வரை ரிஷியை இந்தப் பிரிவு பெரிதாய் பாதிக்கவில்லை.

அடுத்த வார இறுதியில், சோர்வாகப் படுத்திருந்த ரிஷியின் அருகில் அமர்ந்தார் ரஞ்சனி, “ரிஷிமா சாப்பிட வாடா, மணி இப்போவே மூணாச்சு, இன்னும் பசி வரலையா?” அவன் முதுகை வருட,

“இல்லமா அப்புறம் சாப்பிட்டுக்கறேன்” என்றான் உணர்ச்சியற்ற குரலில்.

“என்னமோ சரியில்லைன்னு தெரியுது ஆனா என்னனு புரியலை, ஆபீஸ்ல ஸ்ட்ரெஸ்ஸா? இல்லை வர்ஷா கூட சண்டையா?”

“அதெல்லாம் இல்லாமா, நீ போ, பசிச்சா நானே வரேன்” என்றவன் போர்வையால் முகத்தையும் மூடிக்கொண்டான்.

“நீ நேத்தும் எதுவுமே சாப்பிடலை, இப்போவும் பசியில்லைனா என்ன அர்த்தம்? ஒரு மனுஷனுக்கு ரெண்டு நாள் பசிக்காம போகுமா என்ன” என்றவர், ரிஷியிடமிருந்து பதில் வராமல் போகவே, யோசனையாய் வெளியே சென்றுவிட்டார்.

‘லவ் இல்லைனு சொல்ற உனக்கே இவ்ளோ வலிக்குதே, உன்னை விரும்புற வர்ஷாவுக்கு எவ்ளோ வலிக்கும்? பாக்காம பேசாம எவ்ளோ தவிச்சுபோவா?’ மனம் அவனைக் குத்த துவங்க, அவளை அழைக்க மொபைலை எடுத்தான்.

‘நீ சுயநல வாதி! அவ எவ்ளோ பொலம்பினா நந்தாவை பார்க்கணும் போல இருக்குன்னு, அப்போ எங்க போச்சு இந்த நல்ல புத்தி? நீ மிஸ் பண்றதால தானே பேச நினைக்கிற? ’ அவன் மனம் அவனைப் பார்த்துக் கிண்டலாகச் சிரிக்க, எடுத்த மொபைலை மெத்தையில் எறிந்துவிட்டு, கண்களை மூடிக்கொண்டான்.

சிறிது நேரத்தில் அறைக்குள் வந்த ரஞ்சனி, “ரிஷி எழுந்திரு இதைக் குடி” என்று ஒரு டம்பளரை அவன் முன்னே நீட்டினார்.

“எனக்கு எதுவும் வேணாம் மா, பசிக்கலைன்னு சொல்றேன்ல!”

“குடினா குடி” ரஞ்சனியின் பிடிவாதம் அறிந்தவன் என்பதால், அதை என்னவென்று பாராமல் வேகமாகக் குடித்தான்.

“உவ்வே! என்ன இது? கசக்குது!” அவன் முகம் சுளிக்க,

“பச்சை பாவக்காய் ஜூஸ்டா”

“என்ன பாவக்காவா?” அவரை முறைத்தவன், “என்னத்துக்குமா இத குடுத்த இப்போ?” போர்வையை உதறி நேராகவே அமர்ந்தான்.

“பசியே இல்லைன்னு ரெண்டு நாளா சாப்பிடவே இல்ல, குடல்ல புழு இருக்கும் போல இருக்குடா, ராத்திரி இன்னுமொருவாட்டி தரேன் குடி, எந்தப் புழுவானாலும் நாளைக்கு க்ளியர் ஆகிடும்”

“அம்மா! நா என்ன குழந்தையா வயத்துல பூச்சி புழு வர?”

“பூச்சிக்கு உன் வயசு தெரியாது! வீட்லேந்து லன்ச் எடுத்துட்டு போடான்னா கேட்காம தினோ ஹோட்டல்ல சாப்டா வயத்துல பூச்சி என்ன டைனோசரே வரும்!” மகனை முறைத்தவர் வேகமாக அவனிடமிருந்த டம்பளரை வாங்கிக்கொண்டு சென்றுவிட,

ரிஷி பொங்கி வந்த கோவத்தை, மெத்தையின் மேல் கை முஷ்டியால் வெளிப்படுத்தினான்.

‘ஏன் என்னை இவ்ளோ நேசிக்கிற வர்ஷா? நீ இவ்ளோ அன்பா இருந்தா, எனக்கு யாரையும் கல்யாணம் செஞ்சுக்குற எண்ணமே இல்லன்னு உன்கிட்ட எப்படி சொல்லுவேன்!

விஷ்ணுவை நீ நல்ல அண்ணியா இருந்து பாத்துப்ப தான்…

ஒருவேளை உனக்கு அப்படி தோணாம போனா?

விஷ்ணுவுக்கு என்னைவிட்டா யார் இருக்கா, வேண்டாம் வர்ஷா ப்ளீஸ்!

நீயா விலகி போயிடேன்! உன்னை விலக்கி வைக்க என்னால முடியல’ மானசீகமாக அவளிடம் அவன் கோரிக்கையை வைக்க,

மறுபுறம் வர்ஷாவோ மெதுவாக ரிஷியைப் பற்றித் தாத்தாவிடம் சொல்லத் துவங்கினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!