உன்னாலே – 10

eiAPZYF37537-019d7eca

உன்னாலே – 10

கார்த்திக் தன் மனதிற்குள் இருக்கும் தடைகளை விட்டு வெளியே வருவதாக ராகினியிடம் கூறி அன்றோடு மூன்று வாரங்கள் எட்டு மணித்தியாலங்கள் இருபது நிமிடங்கள் கடந்திருந்தது.

இந்த மூன்று வாரங்கள் எட்டு மணித்தியாலங்கள் இருபது நிமிடங்கள் காலப்பகுதியில் ராகினி எதிர்பார்த்த அளவிற்கு கார்த்திக்கின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு சில மாற்றங்கள் இருந்தது.

அதில் முக்கியமானது அவளின் மனதைக் காயப்படுத்தும் வகையில் எந்தவொரு விடயத்தையும் அவன் இப்போது பேசுவதில்லை மாறாக அவளது விருப்பு வெறுப்புகளை அறிந்து கொள்ளுவதில் சிறிது ஆர்வத்தைக் காட்டத் தொடங்கியிருந்தான்.

வழமை போல அன்றும் அவர்கள் இருவரும் அலுவலக வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரம் கார்த்திக்கிற்கு தொலைபேசி அழைப்பு வர ராகினியின் முகத்தைப் பார்த்துக் கொண்டே அந்த அழைப்பை எடுத்தவன்
“சொல்லுடா ஆதி எப்படி இருக்க?” என்று கேட்க

மறுமுனையில் என்ன பதில் வந்ததோ தன் தலையை கோதி விட்டபடியே சிறு புன்னகையுடன் தன் முன்னால் இருந்த பைலை புரட்டியவன்
“இல்லை டா ஆதி! இன்னைக்கு ராகினியையும் அழைச்சுட்டு வரலாம்னு இருக்கேன் அது தான் போன வாரம் வீட்டுக்கு வரல” என்று கூற அவனது கூற்றில் ராகினி சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

கார்த்திக் தொலைபேசியை பேசி முடிக்கும் வரை அமைதியாக அவனைப் பார்த்து கொண்டிருந்தவள்
“ஆபிஸ் முடிந்து எங்கேயாவது போறோமா கார்த்திக்?” என்று கேட்க

அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவன்
“ஒரு முக்கியமான ஆளை உனக்கு அறிமுகப்படுத்தப்படுத்தி வைக்கணும் ஆனா அது வரைக்கும் அவங்க யாரு? என்னன்னு எதுவும் கேட்க கூடாது சரியா?” என்று பதிலுக்கு அவளைப் பார்த்து கேள்வி கேட்க சரியென்பது போல தலையசைத்தவள் தனது வேலையை மீண்டும் கவனிக்கத் தொடங்கினாள்.

மாலை நேரம் அலுவலகம் முடிந்து இருவரும் காரில் சென்று கொண்டிருந்த கார்த்திக் வழக்கத்திற்கு மாறாக சந்தோஷமாக அமர்ந்திருக்க அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ராகினி
‘எதற்கு இவ்வளவு சந்தோஷமாக இருக்காங்க? அப்படி யாரைப் பார்க்கப் போறோம்? ஆதின்னு தானே போனில் பேசுனாங்க அப்படின்னா ஆதித்யா அண்ணாவாக இருக்குமோ?’ என்று சிந்தித்தபடியே தன் தலையை பின்னால் சாய்த்து கண் மூடிக் கொள்ள அவளது விழிகளுக்குள் சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக்கை அவனது நண்பன் ஆதித்யாவுடன் அந்த மனநல காப்பகத்தில் வைத்து சந்தித்த காட்சி படமாக விரிந்தது.

*****************

“இல்லை ஆதி நீ என்ன சொன்னாலும் சரி நான் எதையும் கேட்க மாட்டேன்! அந்த அஞ்சலி பண்ண விஷயங்கள் எல்லாம் உனக்கு நல்லாவே தெரியும் அப்படி இருக்கும் போது நான் என் வாழ்க்கையில் ஒரு பொண்ணை அனுமதிப்பேன்னு எப்படி நினைக்கிற? அந்த அஞ்சலி எப்படி நம்ம வாழ்க்கைக்குள்ள வந்தா அவ என்ன எல்லாம் பண்ணிட்டு போய் இருக்கா எல்லாம் உனக்கு தெரியும் நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அதை எல்லாம் பார்த்துட்டு நான் மனதை மாற்றிக் கொள்ளுவேன்னு நீ வீணாக கற்பனை பண்ண வேண்டாம் என்னோட வாழ்வில் காதல், கல்யாணம் இதெல்லாம் நடக்கவே நடக்காது! நீ இதோடு அந்த பேச்சை விட்டுட்டு போய் ஒழுங்காக ட்ரீட்மெண்ட் எடு ஆதி! நான் நாளைக்கு ஈவ்னிங் மறுபடியும் வர்றேன் டேக் கேர்!” என்று விட்டு கார்த்திக் அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்று விட அவன் கூறிக் கொண்டிருந்த விடயத்தைக் கேட்டு ராகினிக்கு அவளையும் அறியாமலேயே கண்ணீர் தாரை தாரையாக வடியத் தொடங்கியது.

தான் அழுவதை யாரும் பார்த்து விடுவார்களோ என்கிற பதட்டமான உணர்வில் வேக வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடிச் சென்றவள் தனது ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு எப்படியோ ஒரு வழியாக தன் வீடு இருக்கும் பகுதியை வந்து சேர்ந்திருந்தாலும் இந்த நிலையில் தான் தனது வீட்டுக்கு செல்ல முடியாது என்று புரிந்து கொண்டு வேறு எங்கேயாவது செல்லலாம் என்ற நோக்கத்துடன் தன் வண்டியை மீண்டும் இயக்க அவள் கால்களும், கையும் அவளை கார்த்திக்கின் வீட்டின் முன்னால் வந்து அவளை நிறுத்தச் செய்திருந்தது.

தன் வண்டியை விட்டு இறங்கி நின்றவள் எப்போதும் போல அங்கிருக்கும் வாகை மரத்தின் உட்பகுதியில் வந்து அமர்ந்து கொண்டு கார்த்திக்கின் வாழ்க்கையில் இன்னுமொரு பெண் இருந்து இருக்கிறாள் என்பதை நினைத்து நினைத்து கண்ணீர் விட அவளது நிலையை எண்ணி அவளுக்கே பரிதாபம் பொங்க ஆரம்பித்தது.

“எப்படி? எப்படி எனக்கு தெரியாமல் போச்சு? ஆறு வருஷமாக கார்த்திக்கின் நிழலை விட அதிகமாக அவரைப் பின் தொடர்ந்து அவரை கண்மூடித்தனமாக காதல் செய்தேன் அப்படி இருக்கும் போது…. ஒருவேளை ஒருவேளை நான் அவங்களை மட்டுமே கவனித்து வந்ததால் அவரைச் சுற்றி என்ன நடக்கிறதுன்னு பார்க்காமலேயே விட்டுட்டேனா? ஆனாலும் எப்படி? அவங்க அம்மா, அப்பா, தங்கச்சி, பிரண்ட்ஸ்ன்னு எல்லாரைப் பற்றியும் எந்தவொரு உதவியும் இல்லாமல் நானாக எவ்வளவு கஷ்டப்பட்டு தேடி தேடி கண்டுபிடித்து எனக்குள்ளேயே சேர்த்து வைத்தேன் அப்படி இருக்கும் போது இந்த அஞ்சலி யாரு? எங்கே இருந்து வந்தா? ஒவ்வொரு நாளும் உங்களைப் பற்றி மட்டும் தானே நான் யோசிப்பேன் கார்த்திக்! நீங்க காதல் மேலேயும், கல்யாணத்தின் மேலேயும் இவ்வளவு வெறுப்பை வளர்க்கும் அளவுக்கு அப்படி என்ன பண்ணாங்க கார்த்திக்? என்ன பண்ணாங்க?

உங்க மனதில் என்ன இருக்குன்னு தெரியாமலேயே இத்தனை வருஷமாக என் மனதிற்குள் ஏதேதோ ஆசையை வளர்த்துட்டேனே! உங்களை விரும்ப ஆரம்பித்து இருந்த நேரமே என் மனதிற்குள் இருக்கும் காதலை சொல்லாமல் விட்டது என் தப்பு தான்! உங்களை எந்தவிதத்திலும் தப்பு சொல்ல முடியாது ஒருத்தரை மனதார நேசிச்சுட்டு அவங்க இல்லாமல் இருக்கும் வலி எவ்வளவு கஷ்டமானதுன்னு எனக்கு இப்போ புரியுது! ஆரம்பத்திலேயே உங்க கிட்ட பேசாமல் விட்டது என் தப்பு தான்! எல்லாம் என் தப்பு தான்! என் தப்பு தான்! ” தன் முகத்தை மூடிக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதவள் ஒரு நிலைக்கு மேல் அழவே முடியாது என்ற நிலைக்கு வந்த பின்பு தன் முகத்தை துடைத்துக் கொண்டு கார்த்திக்கின் இல்லத்தை தன் நினைவிருக்கும் வரை மறக்கவே கூடாது என்பது போல சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்று விட்டு ஒருவழியாக தன் வீட்டை வந்து சேர்ந்திருந்தாள்.

அந்த சம்பவம் நடந்து இரண்டு, மூன்று வாரங்கள் கடந்திருக்க ராகினி அன்றைய நாளின் பின்னர் துளசியை சந்திப்பதையும் அவளது அழைப்புக்களை ஏற்பதையும் முற்றாக தவிர்த்து வரத் தொடங்கியிருந்தாள்.

அவள் என்னதான் வெளிச்சூழலை தவிர்த்து இருந்தாலும் கார்த்திக்கின் ஞாபகார்த்தமாக அவள் எடுத்து வைத்திருக்கும் அவனது டீ சர்ட் நித்தமும் அவளை அவன் நினைவுகளால் கட்டிப்போடாமல் இல்லை.

அவனது நினைவுகளை தன் மனதிலும் அவனது ஞாபகார்த்த சின்னங்களை தன் கையிலும் சுமந்தபடியே தான் ராகினியின் நாட்கள் கடந்து செல்ல ஆரம்பித்திருந்தது.

அன்று டிசம்பர் மாதத்தின் முதல் நாள் வருட இறுதியில் பொழியும் இயற்கையின் கொடையான மழை அதன் பணியை சிறப்பாக ஆரம்பித்திருக்க ராகினி வெளியே எங்கேயும் செல்லப் பிடிக்காமல் தன் அண்ணனின் குழந்தைகளுடன் தனது அறைக்குள் இருந்த கூடாரம் போன்ற அமைப்பு ஒன்றிற்குள் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

குழந்தைகளோடு குழந்தையாக மாறி தன்னை மறந்து தன் கவலைகளை மறந்து உல்லாசமாக அவள் விளையாடிக் கொண்டிருந்த நேரம்
“என்ன மேடம் எங்களை எல்லாம் பார்க்க வரவே கூடாதுன்னு முடிவெடுத்துட்டீங்களா?” என்று குரல் ஒலித்ததும் ராகினி திரும்பி பார்க்க அங்கே துளசி தன் இடுப்பில் கை வைத்து கொண்டு அவளை முறைத்துப் பார்த்தபடி நின்றாள்.

அவளை அங்கே எதிர்பார்க்கவில்லை என்பதை ராகினியின் அதிர்ந்த தோற்றம் அவளுக்கு உணர்த்தினாலும் புன்னகை முகமாக அவளின் அருகில் வந்து அவளது தோளில் தன் கரத்தை போட்டுக் கொண்ட துளசி
“என்ன அண்ணி ஆச்சு உங்களுக்கு? உடம்புக்கு எதுவும் சரியில்லையா என்ன? இரண்டு, மூணு வாரமாக வீட்டுக்கும் வரல அம்மா போன் பண்ணியும் நீங்க எடுக்கவே இல்லை என்ன ஆச்சு அண்ணி?” என்று கேட்க

அவளது அண்ணி என்ற அழைப்பை உணராமலேயே தன் அண்ணனின் குழந்தைகளின் புறம் திரும்பி நின்றவள்
“பாப்பாஸ்! நீங்க இங்கேயே இருங்க வெளியில் வரவேண்டாம் சரியா?” என்று கூறி விட்டு

துளசியின் புறம் திரும்பி
“இங்கே எதுவும் பேச வேண்டாம் பால்கனிக்கு போகலாம்” என்று அவளது கைப்பிடித்து அழைத்துக் கொண்டு பால்கனி புறமாக நடந்து சென்றாள்.

“எதற்கு இந்த மழை காலத்தில் வெளியே எல்லாம் திரியுற துளசி?” ராகினி தன் கையைக் கட்டிக்கொண்டு வேறு எங்கோ ஒரு புறமாக பார்த்துக் கொண்டு வினவ

அவளது முகத்தை தன் புறம் வலுக்கட்டாயமாக திருப்பிய துளசி
“அண்ணன் கூட ஏதாவது பிரச்சினைன்னா என் கிட்ட ஏன் அண்ணி சரியாக பேச மாட்டேங்குறீங்க? சொல்லுங்க அண்ணி ஏன்? சொல்லுங்க அண்ணி?” என்று கேட்க

கோபமாக அவளது கையைத் தட்டி விட்டவள்
“என்ன அண்ணி, அண்ணின்னு….ஹேய்! நீ என்ன சொல்லி என்னைக் கூப்பிட்ட?” அவளை அதிர்ச்சியாக பார்க்க

சிரித்துக் கொண்டே அவளது கன்னத்தில் முத்தமிட்டவள்
“என்னோட அண்ணின்னு கூப்பிட்டேன்” என்று விட்டு அவளது தோளில் வாகாக சாய்ந்து கொண்டாள்.

“அண்ணி..அப்படின்னா.. உனக்கு..துளசி”

“எனக்கு எல்லாம் தெரியும் அண்ணி!”

“எப்…எப்படி?”

“நீங்க ரொம்ப நாளாக எங்க வீட்டுக்கு முன்னாடி இருக்கும் வாகை மரத்திற்குள்ள ஒளிந்து இருந்து எங்க அண்ணாவைப் பார்க்க வரும் போதிருந்து எனக்குத் தெரியும்”

“என்ன?”

“ஆமா நான் எங்க வீட்டு மொட்டை மாடியில் இருந்து உங்களை நிறைய தடவை பார்த்து இருக்கேன் ஆனா வந்து பேசுனது இல்லை ஒருநாள் நான் சைக்கிள் பஞ்சர் ஆகி நிற்கும் போது தான் உங்களை பக்கத்தில் பார்த்தேன் அப்போ எனக்கு எதுவும் கேட்க முடியல கேட்கவும் முடியாது ஏன்னா என்கிட்ட எந்த ஆதாரமும் இல்லையே!”

“அப்புறம் எப்படி?”

“அன்னைக்கு நீங்க எங்க வீட்டுக்கு வந்துட்டு திரும்பி போகும் போது எங்க அண்ணாவோட டீசர்ட் கூட ஏதோ பேசிட்டு இருந்தீங்களே!”

“இது…இது எல்லாம் கார்த்திக்கு…”

“அவங்களுக்கு எதுவுமே தெரியாது! ஆனா அம்மாவுக்கும், அப்பாவுக்கும் தெரியும்”

“என்ன?” ராகினி அதிர்ச்சியில் தன்னை மறந்து சத்தமிட

தன் காதை தேய்த்து விட்டுக் கொண்ட துளசி
“எதற்கு இவ்வளவு சத்தம் அண்ணி? இன்னும் சொல்ல கதை இருக்கு கேளுங்க! அந்த நாளுக்கு அப்புறம் உங்களை நான் நிறைய தடவை பார்த்து இருக்கேன் எங்க அண்ணா வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் உங்க பார்வை அவர் இருக்கும் பக்கமே இருக்கும் அதுவும் இல்லாமல் எங்க அம்மா ஒரு நாள் வந்து கார்த்திக்கிற்கு ராகினியைக் கேட்டுப் பார்ப்போமான்னு என் கிட்ட வந்து கேட்டாங்க அப்போ தான் இந்த விஷயத்தை எல்லாம் நான் சொன்னேன்” என்று கூற அவளோ இன்னமும் அதிர்ச்சியாகி நின்றாள்.

“இது எல்லாம் எப்போ நடந்தது?”

“இரண்டு, மூணு மாதம் இருக்கும் சரியான நேரம் பார்த்து அம்மாவும், நானும் இந்த விஷயத்தைப் பற்றி உங்க கிட்டயும், அண்ணா கிட்டயும் பேச ரெடி ஆனோம் ஆனா திடீர்னு ஆதி அண்ணாவுக்கு கொஞ்சம் பிரச்சினை ஆச்சு அதனால் அண்ணா கொஞ்சம் ஸ்ட்ரெஸ்ஸா இருந்தாங்க இப்போ அந்த பிரச்சினை கொஞ்சம் சால்வ் ஆச்சு ஆனா நீங்க திடீர்னு வீட்டுக்கு வராமல் போன் எடுத்தால் பேசாமல் இருக்கீங்க அது தான் நானே உங்களைத் தேடி வந்துட்டேன்” என்று விட்டு துளசி ராகினியின் முகத்தையையே பார்த்துக் கொண்டிருக்க

அவளை சிறிது குழப்பத்தோடு நிமிர்ந்து பார்த்தவள்
“அஞ்… அஞ்சலி யாரு?” என்று வினவ இப்போது அதிர்ச்சியாகி நிற்பது துளசியின் முறையாகிப் போனது.

“உங்களுக்கு அவங்களை தெரியுமா?” துளசியின் கேள்விக்கு மறுப்பாக தலையசைத்த ராகினி தன் மனதிற்குள் இருந்த விடயங்களை எல்லாம் ஒன்று விடாமல் கூற

அவளைத் தாவி அணைத்துக் கொண்டவள்
“ஐயோ அண்ணி! அண்ணி! இந்த விஷயத்தைக் கேட்டுட்டா நீங்க இப்படி இருக்கீங்க? எங்க அண்ணாவை விட ரொம்ப அப்பாவியாக இருக்கீங்களே மை டியர் அண்ணி! அந்த அஞ்சலினால் தான் இவ்வளவு பிரச்சினையும் ஆனா அவங்க எங்க அண்ணா விரும்புருவங்க இல்லை ஆதித்யா அண்ணாவோட மனைவி?” என்று கூறவும் ராகினி அவளை விசித்திரமாக பார்த்துக் கொண்டு நின்றாள்.

“நான் உங்களுக்கு எல்லாம் விளக்கமாக சொல்லுறேன் வாங்க! ஆதித்யா அண்ணாவும், எங்க அண்ணாவும் பர்ஸ்ட் ஸ்டாண்டர்டிலிருந்தே ரொம்ப க்ளோஸ் பிரண்ட்ஸ் ஆதித்யா அண்ணாவுக்கு அம்மா, அப்பா கிடையாது அவங்க சித்தி, சித்தப்பா தான் வளர்த்தாங்க ஆனா அவங்க அவரை தங்களோட சொந்த பையன் போல தான் வளர்த்தாங்க ஏன்னா அவங்களுக்கு குழந்தை கிடையாது ஆதித்யா அண்ணா ரொம்ப கலகலப்பான டைப் நம்மளை மாதிரி ஆனா எங்க அண்ணா ரொம்ப சைலண்ட் டைப் அதனால என்னவோ எனக்கு ஆதித்யா அண்ணா தான் ரொம்ப செல்லம்!

ஸ்கூல், காலேஜ்ன்னு இரண்டு பேர் லைஃபும் ரொம்ப சந்தோஷமா போயிட்டு இருந்த நேரம் அண்ணாவோட காலேஜில் ஒரு கிரிக்கெட் டூர்ணமெண்ட் நடத்த ஏற்பாடு பண்ணி இருந்தாங்க இந்த ஏரியாவில் தான்….ஆஹ்! அதோ அந்த கிரவுண்ட் அங்கே தான் மேட்ச் நடந்துச்சு அன்னைக்கு ஃபைனல் மேட்ச் நடக்கும் நேரம் ஆதித்யா அண்ணா பேட்டிங் பண்ணிட்டு இருந்தாங்க நானும், எங்க அண்ணனும் உட்கார்ந்து பார்த்துட்டு இருந்த நேரம் உங்களுக்கு அந்த நேரம் எதுவும் தெரிந்து இருக்காதுன்னு நினைக்கிறேன் ஏன்னா அன்னைக்கு நீங்க இந்த பால்கனிக்கு வரல வேறு எங்கேயோ போய் இருந்தீங்க கரெக்டா?” துளசியின் கேள்விக்கு ராகினியின் தலை ஆமோதிப்பாக அசைந்தது.

“அந்த நேரம் ஒரு அக்கா எங்க முன்னாடி வந்து நின்னாங்க அவங்களைப் பார்த்து கார்த்திக் அண்ணா எழுந்து நின்று கொண்டு ஹாய் அஞ்சலி! நீங்க என்ன இந்த பக்கம்? என்று கேட்க அவங்க கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் சுற்றிலும் பார்த்துட்டு சட்டுன்னு அவங்க ஆதித்யா அண்ணாவை விரும்புவதாகவும் அவரு இல்லைன்னா அவங்களுக்கு லைஃப் இல்லேன்னும் ஃபீல் பண்ணி பேச ஆரம்பிச்சுட்டாங்க! எங்க அண்ணா இதற்கு முன்னாடி இப்படி எல்லாம் பார்த்ததே இல்லையா அவங்களுக்கு ரொம்ப ஷாக்! கொஞ்ச நேரத்தில் அந்த அக்கா அங்கே இருந்து போனதும் ஆதித்யா அண்ணா வந்து என்ன நடந்துச்சுன்னு கேட்க எங்க அண்ணா எல்லவற்றையும் சொன்னாங்க அதைக் கேட்டதும் அவரோட முகத்தில் ரொம்ப சந்தோஷம் ஆனா அதை வெளியே அவரு காண்பிக்கவே இல்லை

அப்புறம் கொஞ்ச நாள் கழித்து என்ன நடந்ததுன்னு தெரியலை அண்ணாவோட காலேஜ் படிப்பு முடிந்த அன்னைக்கு இரண்டு பேரும் எங்க அம்மாகிட்ட வந்து ஆதித்யா அண்ணாவுக்கு இன்னும் இரண்டு மாதத்தில் கல்யாணம்னு சொன்னாங்க பொண்ணு பேரு அஞ்சலின்னும் சொன்னாங்க! எல்லோரும் ரொம்ப சந்தோஷப்பட்டோம் ஆதித்யா அண்ணா எங்க வீட்டில் ஒருத்தங்க மாதிரி தான் அதனால அவரோட கல்யாணத்தை ரொம்ப சிறப்பாக பண்ணி வைத்தோம் அந்த கல்யாண பங்சனில் கூட நான் உங்களை கவனிச்சு இருக்கேன் ஆனா நீங்க அந்த கல்யாண பொண்ணு பேரைக் கவனிக்கல போல!”

“கவனிக்க வேண்டியவங்க கவனிக்கலையே! சரி நீ மேலே சொல்லு!”

“ஹ்ம்ம்ம்! எல்லாம் சரியாக தான் போயிட்டு இருந்துச்சு இப்போ ஒரு மாசத்துக்கு முன்னாடி திடீர்னு ஆதித்யா அண்ணா வீட்டில் இருந்து நடு ராத்திரியில் போன் வந்தது! கார்த்திக் அண்ணா பதட்டத்தோடு அங்கே போய் பார்த்த நேரம் அங்கே ஆதித்யா அண்ணா தூக்க மாத்திரை போட்டு சூசைட் பண்ண ட்ரை பண்ணிட்டு இருந்து இருக்காங்க என்ன, ஏதுன்னு விசாரித்து பார்த்த நேரம் தான் அவங்க வைஃப் அஞ்சலி லெட்டர் எழுதி வைத்துட்டு வீட்டை விட்டு போயிட்டாங்கன்னு தெரிய வந்தது அவங்க வாழ்க்கையில் என்ன நடந்ததுன்னு தெரியலை ஆனா அவங்க இரண்டு பேரையும் சேர்த்து வைக்க எங்க அண்ணன் தான் ரொம்ப முயற்சி எடுத்து இருந்தாங்க அப்படி அவங்க இவ்வளவு தூரம் பாடுபட்டு பண்ணி வைத்த கல்யாணம் இப்படி ஆகிடுச்சேன்னு அண்ணாவுக்கு ரொம்ப கில்டி அதனால வீட்டில் யார் கூடவும் பேசல அதனால்தான் ஒரு வாரம் நீங்க அண்ணாவை சரியாக வீட்டில் பார்த்து இருக்க மாட்டீங்க! அதைப்பற்றி உங்களுக்கு எங்க கிட்ட கேட்கவும் முடியல நீங்க கேட்காமல் நாங்களாக எதுவும் சொல்லவும் முடியல அது வேற கதை!

அதற்கு அப்புறம் ஆதித்யா அண்ணாவுக்கு கவுன்சிலிங் கொடுக்குற ஹாஸ்பிடலுக்கு தான் அண்ணா அடிக்கடி போவாங்க அங்கே அவங்க பேசிட்டு இருந்ததைத் தான் நீங்க கேட்டு இப்போ இப்படி ஆகி இருக்கீங்க போல! ஆனாலும் அண்ணாவுக்கு எல்லா பொண்ணுங்களும் இப்படித்தான்னு நினைக்குற அளவுக்கு மனசு மாறும்னு நான் நினைக்கல அஞ்சலி மாதிரி எல்லாரும் வாழ்க்கையில் சோகத்தையும், கஷ்டத்தையும் தருவாங்கன்னு அவங்க நினைச்சுட்டு இருக்காங்க போல! ஆனாலும் அண்ணி நீங்க எதற்கும் கவலைப்பட வேண்டாம் நாங்க இருக்கோம்! உங்களை அவ்வளவு சீக்கிரமாக துவண்டு போக விட்டுவிட மாட்டோம்!” என்று கூறியபடியே அவளது கன்னத்தை பிடித்து ஆட்டிய துளசி

“இப்போ உங்க குழப்பம் எல்லாம் போயிடுச்சு தானே இனி நீங்க கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரணும்” என்று கூறவும்

அவளை பார்த்து மறுப்பாக தலையசைத்த ராகினி
“முதலில் அவங்க இந்த குழப்பத்தில் இருந்து வெளியே வரட்டும் அதற்கு அப்புறம் நான் அங்கே வர்றேன்! இல்லைன்னா அவங்க கிட்ட என்னைப் பற்றி பேச நீங்க முயற்சி பண்ணி அவருக்கு இன்னமும் குழப்பம் கூடி விடும் இத்தனை வருடங்களாக அவங்களை நினைச்சு காத்திருந்த எனக்கு இன்னும் கொஞ்ச நாள் பெரிய விஷயமே இல்லை!” என்று கூற துளசி அவளை புன்னகை முகமாக ஆரத் தழுவிக் கொண்டாள்.

பதிலுக்கு ராகினியும் அவளை பாசத்தோடு அணைத்துக் கொள்ள அவள் மனமோ
‘நான் உங்களைப்பற்றி ரொம்ப தப்பாக நினைத்து விட்டேன் கார்த்திக்! இத்தனை வருடங்களாக உங்க மேல வைத்த நம்பிக்கையை அவ்வளவு சீக்கிரத்தில் நான் விட்டுக் கொடுத்து இருக்க கூடாது! இனி என்னவானாலும் சரி என்னுடைய காதல் உங்களுக்கு மட்டும் தான் கார்த்திக்! உங்களுக்கு மட்டும் தான்!’ என்று நினைத்து கொள்ள அந்த வசனங்கள் மீண்டும் மீண்டும் அவள் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தால் என்னவோ காரை விட்டு இறங்கி கார்த்திக் அவளை தட்டி எழுப்பும் போதும் அந்த வார்த்தைகளையே அவளது உதடுகள் மீண்டும் மீண்டும் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

கார்த்திக் அவளது கன்னத்தில் தட்டும் நேரம் அவனது கைகளை தன்னோடு சேர்த்து பிடித்து கொண்ட ராகினி
“நான் உங்களை அப்படி நினைத்து இருக்கக் கூடாது கார்த்திக்! அப்படி நினைத்து இருக்கவே கூடாது” என்று புலம்ப அவளது புலம்பலில் கார்த்திக் அவளது கன்னத்தில் தட்ட

அவனது தொடுகையில் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவள் கார்த்திக்கின் குழப்பமான முகபாவத்தில்
‘தான் தூக்கத்தில் உளறியதை அவன் கேட்டு இருப்பானோ?’ என்கிற யோசனையுடன் அவனைப் பார்த்து திருதிருவென விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!