தண்ணிலவு தேனிறைக்க…4

TTIfii-fffe396c

தண்ணிலவு தேனிறைக்க…4

தண்ணிலவு – 4

புனே, நடுத்தர அடுக்குமாடி குடியிருப்பு வளாகம்… அங்கிருந்த வீடு ஒன்றில் அலைபேசி விடாது அழைத்துக் கொண்டிருக்க, அதை கவனத்தில் கொள்ளாமல் மடிக்கணினியில் தன்னைத் தொலைத்திருந்தான் பாஸ்கர்.

வேலை நெட்டித் தள்ளியது அவனுக்கு… இந்த நான்கு நாட்களாக, ஒருநாளின் இருபத்திநான்கு மணிநேரத்தில் இருபது மணிநேரம் தூங்காமல் வேலை செய்து கொண்டிருக்கிறான்.

ஒய்வு கிடைக்கும் நான்கு மணிநேரத்திலும் அடித்துப் போட்டார் போல தூக்கம் வந்து அவனை ஆக்கிரமித்துக் கொள்ள, எதைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல் இருக்கிறான்.

புனேயில் உள்ள ‘ஏஃபோர் சாப்ட்வேர் ப்ரைவேட் லிமிடெட்’டில், ப்ரமோஷன் டெக் லீடராக தற்போது பணிபுரிந்து வருகிறான்.

சாதாரண ட்ரைனியாக ஏழு வருடங்களுக்கு முன் இந்த நிறுவனத்தில் அடியெடுத்து வைத்தவன், தனது விடாமுயற்சியிலும் உழைப்பிலும், தனக்கு கீழே நாற்பது பேரை வைத்து வேலை வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளான்.

தன்னை நிரூபித்தே ஆகவேண்டும் என்னும் வெறியை மட்டுமே மனதிலும் மூளையிலும் பதிய வைத்துக் கொண்டவன், அயராத உழைப்பில் அசுர வளர்ச்சி கண்டு உயர்ந்து நின்றதில் அங்கே எல்லோருக்கும் ஆச்சரியம்தான். 

எதுவும் தெரியாதவனாக, கடைநிலை ஊழியனாக ஆரம்பகாலத்தில் இருந்தவன், சிறிது நாட்களிலேயே தன்னை மெருகேற்றுக் கொண்டதை இன்று நினைத்தாலும் கனவு போலத்தான் இருக்கும்.

மனதின் கசப்புகளை, ஆவேசங்களை எல்லாம் இவன் வேலையில் காண்பித்து வெற்றியடைய, அதற்கு கைமேல் பலனாக படிப்படியாக பதவியும் ஊதியமும் உயர்ந்து கொண்டே சென்றது. மேற்படிப்பிலும் தனது தகுதியை வளர்த்து முன்னேற்றம் கண்டிருந்தான்.

அதன் எதிரொலியாக இன்றைய நிலையில் முத்தாய்பாக சுமார் எழுபதினாயிரம் தாண்டிய ஊதியத்தை மாதச் சம்பளமாக பெற்று வருகிறான் பாஸ்கர்.

ஊதியம் ஏணிப்படியாகிப் போனதில், வேலைகளும் பொறுப்புகளும் அசராமல் ஏறிக் கொண்டே சென்றது. அதிலும் சமீபகாலமாக கொரானா அச்சுறுத்தலில் வொர்க் அட் ஹோமில்தான் பணி நிமித்தங்கள் என்றாகிப்போக, நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்ப்பதும் வாடிக்கையாகிப் போனது.

அத்திபுத்தாற் போல இத்தனை வருடங்களில் கேட்காத பத்துநாள் விடுமுறையை இப்பொழுது இவன் கேட்க, மனம் இளகிய கம்பெனி நிர்வாகமும் சரியென்று தலையாட்டியதில் மகிழ்ந்தே போனான்.

விடுபடும் பத்து நாட்களின் வேலையை இந்த வாரத்தில் முடித்து கொடுத்து விட்டுசெல் என்ற ஆப்பை சொருகிவிட, அவனது சொற்பநேர சந்தோஷம் நொடியில் காணாமல் போனது.

இவனது மேலதிகாரியின் உத்தரவினை தட்டிக் கழிக்க இயலாமல், பல்லைக் கடித்துக் கொண்டே தினப்படி வேலைகளோடு, விடுபடும் நாட்களின் வேலையையும் சேர்ந்து செய்தே, தன் கடமையை முடிக்கும் அவசரத்தில் தற்போது இருக்கிறான்.

முன்பெல்லாம் நண்பர்களாக சேர்ந்து ஒரே வீட்டில் தங்கியவர்கள், கொரானாவால் தனித்தனி வீடுகளில் இடம் பெயர்ந்திருக்க, இப்பொழுது இவன் தனியாளாக தனக்கென ஒதுக்கப்பட்ட வீட்டில் வேலையை தொடர்ந்து கொண்டிருக்கிறான்.

கொஞ்சம் அலட்சியமாக இருந்தாலும், அத்தனை வேலைகளும் தேங்கி இவனது விடுப்பிற்கே, விடுமுறை அளித்து விடும் அபாயமிருக்க, இந்த நான்கு நாட்களாக அலைபேசியை கூட கையில் எடுக்கவில்லை.

இதோடு அக்கா மிதுனாவின் அழைப்பும், மகன் விபாகரனின் அழைப்பும் அடுத்தடுத்து வந்து ஒய்ந்து போய் விட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பே மகனிடம் வாட்ஸ்-அப்பில் நான்கு நாட்கள் கழித்து பேசுகிறேன் என்று வாய்ஸ் மெசேஜ் போட்டும் விட்டான்.

அவனை அழைத்துப் பேச ஆரம்பித்தால் நேரம் கடந்து விடும் என்றே இந்த வார்த்தை சிக்கனத்தை கடைபிடித்தது. அவ்வாறே தனது அக்காக்களிடமும் சொல்லியிருக்க, அதையும் தாண்டி இப்போது மிதுனா அழைத்துக் கொண்டிருந்தாள்.

தவறிய அழைப்புகளின் எண்ணிக்கை நூறினை தாண்டியிருக்க, விடாது மீண்டும் அழைத்த தமக்கையின் அழைப்பினை ஏற்றுப் பேசத் தொடங்கினான் பாஸ்கர்.

“சீக்கிரம் சொல்லுக்கா… அவசரமில்லாத விசயம்னா ரெண்டுநாள் கழிச்சு பேசு!” என வெட்டி விட்டுப் பேசியே, அப்பக்கம் இருந்த அக்காளின் ரத்த அழுத்தத்தை சோதித்தான்.

“என் வேலையை விட்டுட்டு, உனக்கு பேசுறேன்ல இதுவும் பேசுவடா சீமைதொர…” எடுத்த எடுப்பிலேயே அவனை கடிந்து கொண்டாள் மிதுனா.

“நெலம புரியாம பேசாதக்கா! நீ முதலாளி… வேலைய ஒத்தி வைச்சுட்டு பேசலாம்… நான் அப்படியா சொல்லு! என்னை பார்த்தா உனக்கே பாவமா தெரியலையா?” அப்பாவியாக பேசியே தமக்கையின் கோபத்தை குறைக்க முயற்சித்தான்.

தயானந்தனின் முயற்சியில் ஆரம்பித்த ட்ரைகிளீனிங் சென்டர் மற்றும் மினரல் வாட்டர் பிளாண்ட் இரண்டின் அலுவல் சம்மந்தமான பொறுப்புகள்முழுவதையும் இவள் பார்த்துக் கொண்டிருக்க, தயா வெளிவேலைகள் அனைத்தையும் தன்வசப்படுத்திக் கொண்டிருந்தான்.

மொத்தத்தில் வீட்டிலும் தொழிலும் இவள் மட்டுமே எஜமானி… அதை மனதில் வைத்து உடன்பிறந்தவன் சொல்ல, மனதிற்குள் பெருமை பொங்கி வழிந்தது மிதுனாவிற்கு.

“ஏன்டா… பத்துநாள் லீவுக்கு இத்தனை அக்கபோரா? அனுபவி ராசா அனுபவி! இந்த ஃபீல்டுலதான் குப்பை கொட்டுவேன்னு வீம்பு பிடிச்சு போனவன், இப்போ எதுக்குடா மூக்க சிந்துற…” என்று நக்கலடித்தபடியே,

“எப்போ கிளம்பி வர்ற? அதை கேக்கதான் கூப்பிட்டேன்!” என அழைத்த காரணத்தை கூறினாள் மிதுனா.

“இன்னும் மூணுநாள்ல கிளம்பிடுவேன்கா! இந்த நாதாரி ஷீஃப் வேலைய இப்படி தலையில கட்டுவான்னு நினைச்சுகூட பார்க்கல…” என மீண்டும் புலம்பத் தொடங்க,

“கண்ணு போயிறாமடா பாஸ்கி! பார்த்துக்கோ… நீ வந்த பிறகு செய்யணும்னு வேலையெல்லாம் நிப்பாட்டி வச்சுருக்கேன்!” என்றவளின் குரலில் உடன்பிறந்தவனின் மீதான அக்கறையே வெளிப்பட்டது.

“சரிக்கா… சீக்கிரம் வரப்பாக்கறேன்!”

“சிந்துகிட்ட இந்நேரத்துக்கு நீ பேசியிருந்தா, உனக்காகன்னு இந்த வேலையை போட்டு வச்சிருக்க மாட்டேன்! இப்போ நானா கூப்பிட்டாலும் அவ என்ன சொல்வாளோ தெரியல”

“நான் பேசினா அந்த பெரிய மனுஷிக்கு பிடிக்காதுக்கா… அவ ரேஞ்சே வேற!” நையாண்டியுடன் தனது கணிப்பை கூறிட, மிதுனா தலையிலடித்துக் கொண்டாள்.

“ஆமா நீ இப்படி பேசு! அவளும் தப்பாம அப்படியே நினைக்கட்டும்… உங்க கோமாளிச் சண்டைக்கு நடுவுல நாங்கதான் முழிச்சுட்டு நிக்கிறோம்”

“ஏன்கா என்ன ஆச்சு? எதுவும் பிரச்சனையா?”

“நம்ம மாமியார் வச்ச சூட்டுல, நேத்தே பையனோட வந்து சேர்ந்துட்டா உன் பொண்டாட்டி… அவகிட்ட எல்லா ஏற்பாட்டையும் சொல்லி முடிச்சதும் அவ மொகம் தொங்கிப் போனத பார்த்து எனக்கே பாவமாயிடுச்சுடா!” என்று சிந்துவின் நிலைமையை மிதுனா விளக்கிட,

“நம்ப முடியவில்லை… இல்லை… இல்லையேக்கா!” என இவன் பின்பாட்டு பாடி கலாட்டாவில் இறங்கினான்.

“அடப்பாவி! கேலியா பண்ற… அவ நிஜமாவே வருத்தமா  இருக்கா… எல்லாத்தையும் உள்ளுக்குள்ளயே போட்டு அடக்கிட்டு இருக்காடா பாஸ்கி! 

இவளா எதுவும் கேட்காத வரைக்கும் உனக்கு பிரச்சனை இல்லை… ஆனா, எப்போ இவ வாயை தொறந்து என்னை, இங்கே யாரு மதிக்கிறான்னு கண்ணை கசக்கிட்டான்னா… உன் மாமா, தேடி வந்து உன்னை உதைப்பாரு! கூடவே எனக்கும் லட்சார்ச்சனை கிடைக்கும். சொல்லச்சொல்லக் கேக்காம உன் இஷ்டத்துக்கு செஞ்சுட்டு இருக்க நீயி!” தயாவின் மனைவியாக மிரட்டலில் இறங்கினாள் மிதுனா.

“ஓ… கேக்கட்டுமேக்கா! இப்படியாவது நான் ஒருத்தன் இருக்கேன்ங்கிறது இவளுக்கு ஞாபகத்துக்கு வந்தா சரிதான்! மாமா கையால வாங்காத அடியா? அதெல்லாம் பார்த்துக்கலாம் யு டோன்ட் வொர்ரி!” அசராமல் பேச,

“கொஞ்சம் சீரியஸா யோசிடா! இனிமேலாவது எல்லாம் சரியாகனும்னு நினைக்கிறேன்… ஆனா, நடக்கிறத பார்த்தா எனக்கு இப்பவே கண்ணை கட்டுது” ஆயாசக்குரலில் மிதுனா முடிக்க,

“என் கடமை, என்னோட பொறுப்பை யார் தலையிலயும் ஏத்தாம, நானே கையில எடுத்தது தப்பா போச்சா? இன்னும் நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்கிறீங்க?” படபடத்தான் பாஸ்கர்.

“தப்புன்னு சொல்லலடா! ஆனா, அவகிட்டயும் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். நாளைக்கு சபையில அவ, உன்கூட சேர்ந்து நிக்க வேணாமா? பிரச்சனை முடிச்சுக்க வழிய தேடச் சொன்னா, நீ அதிகமாக்கிக்க வழி பண்ணிட்டு இருக்க…”

“அக்கா, சத்தியமா இதுல என் தப்பு என்ன இருக்குன்னு புரியல… அஞ்சனாக்கு தண்ணி ஊத்துற சடங்கன்னைக்கு, அவ எல்லா காரியத்தையும் முன்னாடி நின்னு செய்றான்னு நீதான் சொன்ன… எனக்கு ரொம்ப சந்தோசம்தான்!

ஆனா, அதை பத்தி என்கிட்ட, அவ கேக்கவும் இல்ல… சொல்லவும் இல்ல! அவ செஞ்ச அதே காரியத்த தான் இப்ப நான் ஃபாலோ பண்றேன்… என்னை சொல்றவங்க, அன்னைக்கு அவகிட்டயும் சொல்லி, என்னோட பேசச்  சொல்லியிருக்கலாமே?” என தன் கேள்விகளை எடுத்து வைக்க, என்ன சொல்வதென்று மிதுனாவிற்கும் தெரியவில்லை.  

அன்றைய தினத்தில் மரகதம் கூட எத்தனையோ சொல்லிப் பார்த்தும் சிந்து, தன் கடமையை அமைதியாக செய்துகொண்டே போக, அவளை யாரும் தடுக்க முன்வரவில்லை.

“அண்ணிங்க ரெண்டு பேரும் சொல்லிட்டாங்கம்மா… திரும்ப நானும் சொல்லனும்னு இல்ல…” என்ற பதிலில் அனைவரையும் அடக்கி விட்டாள். இப்பொழுது அதைப் போலவே இவனும் பேசி வைக்க,

‘ரெண்டும் ஒரே குட்டையில ஊறின மட்டைங்கதான்’ மனதிற்குள் மிதுனவால் கடிந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

“அவ சொல்லலைன்னு குத்தம் சொல்றவன், நீ அன்னைக்கு கேட்டிருக்க வேண்டியது தானே பாஸ்கி!”

“விபு நம்பருக்கு நிறைய தடவை கால் பண்ணி, அம்மாவை கூப்பிடுன்னு சொன்னாலும் அவ வந்து பேசல… ஃப்ரீ டைம்ல அம்மாவை பேசச் சொல்லுன்னு விபுகிட்ட சொன்னேன்! அவ ஃபோனே பண்ணல, பேசவும் செய்யல…  இதுக்கு மேல நான் என்ன பண்ணனும்?” ஆற்றாமையில் முடித்தான் பாஸ்கர்.

“அவ இப்படிதான் இருக்கான்னு தெரியுதுதானே பாஸ்கி! அதையே நீயும் செய்யணுமா என்ன?”

“என்னக்கா பண்றது? உன் திட்டுக்கு வராத ரோசம், அந்த ஊமைக்கோட்டான் பண்ற காரியத்துல எனக்கு பொத்துகிட்டு வருது. பொறுமை விட்டுப் போச்சுக்கா! குழந்தைக்கு அப்பாவ மட்டுமே இருங்கன்னு சொன்னவகிட்ட, எப்படி என் பொண்டாட்டியா காரியத்தை எடுத்து செய்யின்னு சொல்ல முடியும்? அவளும் அம்மாவா மட்டும்தானே இருக்கா!”

“இப்படியே பதிலுக்குபதில் தர்க்கம் பண்ணியே வாழ்க்கைய முடிச்சுக்க போறியாடா?” கோபத்துடன் கேட்டவளின் குரலில் ஆதங்கமே மிஞ்சி நிற்க,

“அவளா ஒதுங்கி என்னை ஒதுக்கியும் வச்சுருக்கா… அவ வந்து பேசுற வரைக்கும் நானும் பேசப்போறதில்ல! என் தப்புக்கு நானே தண்டனை கொடுத்துக்கறதா நினைச்சுதான் அவ விருப்பத்துக்கு விலகி இருக்கேன்… இதுக்கும் மேல என்னால இறங்கி வரமுடியாதுக்கா… என்ன நடக்குதோ நடக்கட்டும்! கவலைய விடுக்கா!” என தம்பி ஆறுதல் கூறிட, இங்கே இவளின் மனம் பாரமேறிப் போனது.

உடன் பிறந்தவனின் எதிர்காலம் தனிமையிலே கழிந்து விடுமா என்கிற பயம் பூதாகாரமாய் வந்து நிற்க, எப்படி இவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பது என்ற குழப்பத்தில் ஆழ்ந்தாள். 

“என்னக்கா அமைதியாகிட்ட… தம்பிய நினைச்சு ஃபீல் பண்றியோ?” கேலிபேச்சில் அவளை திசை திருப்பிட,

“போடா அரைகுறை! எல்லாத்தையும் அவசரகோலத்துல தெளிச்சு விட்டுட்டு, இப்ப ஒத்தையா நிக்கிற…” என வெறுமைப் பேச்சில் பல்லைக் கடித்தாள்.

“ஹாஹா… உன்கிட்ட இருந்து இந்த திட்டை வாங்கிக்காம, ரொம்ப மிஸ் பண்ணேன்க்கா…” என்றவன் இன்னும் கொஞ்சம் கோபத்தை ஏற்றி வைக்க,

“திருந்தமாட்டடா நீ! உனக்கு பாவம் பார்த்தா, என்னை கேலி பண்ற…” என்ற அலுப்புடன் அழைப்பை தூண்டித்தாள்.

‘நீ சொன்னமாதிரி எனக்கும் இப்பவே கண்ணை கட்டுதேக்கா!’ மனதோடு அலுத்துக் கொண்டவனின் எண்ணமெல்லாம் மனைவியை சுற்றியே வந்தது.

வாழ்க்கையை புரிந்து கொண்டு புது மனிதனாக மாறத் தொடங்கியதில் இருந்து, மனதளவில் பெரிய போராட்டங்களையே நடத்திக் கொண்டிருகிறான் பாஸ்கர்.

விவரம் தெரியாத சிறுபெண் என்று நினைத்த, மனைவியின் அசாத்திய நிமிர்வில் இவன் வெகுவாக அதிர்ந்துதான் போனான்.

தனது கையாலாகாத தனத்தையும், பொறுப்பின்மையையும் அவள் வெளிச்சம் போட்டுக் காண்பித்ததில் இவனது ஆண் என்ற தன்மானம் வெகுவாக அடிபட்டுப் போனது.

பாஸ்கருக்கு வாழ்க்கையை இலகுவாக எடுத்துச் சென்றுதான் பழக்கம். எங்கும் எப்பொழுதும் நின்று மருகிப் பழக்கமில்லாதவன்.

அப்படியிருக்க தனது சுயத்தையே உரசிப் பார்க்கும்படியாக மனைவியாக அவள் பேசியதில் குற்றமில்லை என்றாலும், அதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

வீராப்புடன் தன்போக்கில் பாதையை மாற்றிக் கொண்டுச் செல்லப் பழகிக் கொண்டவனுக்கு மெல்ல மெல்ல நிதர்சனம் புரிந்து போனது.

நம்பிக்கை என்ற வார்த்தையின் பொருளை முழுதாக உணர்ந்து கொண்டவனின் புதிய அவதாரம் அவனது அடித்தளத்தையே மாற்றியமைத்தது.

யார் என்ன சொன்னாலும் சரியென்று ஒத்துக்கொண்டு போகும் சோம்பேறித்தனத்தை அறவே விட்டொழித்தான்.  வெளியுலகத்தை தெரிந்து கொள்ள ஆரம்பித்தவனுக்கு, வாழ்க்கையின் தாத்பரியம் மிகக் கடினமான பாடங்களை கற்றுக் கொடுத்தேதான் விளங்க வைத்தது.

தன் நன்மைக்கென அறிவுரை கூறிய குடும்பத்தாரின் அக்கறையை முழுதாய் புரிந்து கொண்டான். தன்னையே நம்பி வந்த சிறுபெண்ணின் மனவலியை உணர்ந்து கொண்டதில், அவளின் விருப்பபடியே இனி நடந்து கொள்வது எனத் தீர்மானித்தே வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் பயணித்து வருகிறான்.

நெஞ்சமெல்லாம் அவளை மீட்டிக் கொண்டிருந்தாலும் அவளாக வரட்டும் என்ற முடிவில் இவன் உறுதியாக இருந்தான். அதற்காக மனைவி என்ன செய்தாலும் சரியென்று அனுசரித்துச் செல்லும் மனோபாவம் ஏனோ அவனுக்கு வரவில்லை. மனதிற்குள் சமீப நாட்களாக நீயா நானா என்ற வாக்குவாதத்தை மனைவியோடு நடத்திக் கொண்டிருக்கிறான் பாஸ்கர்.

*************************

ஒருவழியாக விழாவிற்கு முன்தினம், சென்னைக்கு வந்து சேர்ந்தான் பாஸ்கர். அதிகாலை நேரத்தில் வந்து நின்றவனுக்கு தயானந்தன் முதற்கொண்டு அனைவரும் மகிழ்ந்தே வரவேற்பு தந்திட, அப்பொழுதே வீட்டில் கலகலப்பு சூழ்ந்து கொண்டது.

ஐந்து வருடத்திற்கு முன், வந்தபொழுது யாரோ எவரோ என்று தந்தையை கேள்வியாக நோக்கிய மகன், இன்று பாஸ்கரை கண்டதும் தாவி வந்து அணைத்துக் கொண்டான்.

“ஹைய்யா அப்பா வந்தாச்சு… நீ வருவேன்னு சீக்கிரமே அலாரம் வச்சு எழுந்திருச்சேன்ப்பா!” புன்னகை விரவிய முகத்துடன் விபாகரன் பேசியதில், இவனுக்கும் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது.

தனது தோளில் மகனை தூக்கி வைத்துக் கொண்டு அங்குலம் அங்குலமாய் ரசிக்க, பதிலுக்கு அவனும் தந்தையை இமைக்காமல் பார்த்து ரசித்தான். 

தனக்கு விவரம் தெரிந்து இப்போதுதான் அப்பா என்னும் உறவை நேரில் பார்க்கிறான். தந்தையை பார்த்ததில் இருந்து சொல்லத் தெரியாத சந்தோஷம் சிறுவனை வந்து தாக்கியிருக்க, அதைத் தடையின்றி அனுபவித்தான்.

காணொளி அழைப்பில்(வீடியோ கால்) தினந்தோறும் பார்த்து, பேசி சிரித்தாலும் நேரில் தந்தையை தொட்டு உணர்ந்து ரசிப்பது இப்போதுதானே!

இருபத்தியொன்பது வயதிற்கான முழுமையான ஆண்மகனாய் பார்வைக்கு கம்பீரமாக இருந்தான். மெலிந்த தேகத்திலும் பார்வைக்கு பளிச்சென்று இருந்தான். ஜீன்ஸ்- டி-சர்ட், ரிபோக் ஷூவுடன், அலைஅலையான கேசம் அடங்க மறுக்க, கண்களில் கூலர் மாட்டிக் கொண்டு நின்ற தந்தையை பார்க்க மகனுக்கு அலுக்கவில்லை.

“ம்மா… அப்பாவை பாரும்மா… உன்னை மாதிரியே ஒல்லியா இருக்காரு! ஆனா, ஸ்டைலா தலை சீவி செம்ம ஹாண்ட்சமா இருக்காரு…” என விழி விரித்து தனது அன்னைக்கே தந்தையை அறிமுகப்படுத்தி வைத்தான் விபாகரன்.

“நீ என்னப்பா என்னை மாதிரியே இருக்க? நீ போட்டுருக்க டி-சர்ட் மாதிரிதான் நானும் கேட்டேன்… அம்மாதான் இன்னும் வாங்கிக் கொடுக்கல…” பேச்சோடு பேச்சாக தாயின் மீதான குற்றப் பத்திரிக்கையும் வாசித்து முடித்தவன், அவனின் கேள்விக்கு பதில் வந்து சேரும் வரையிலும் காத்திருக்காமல் அடுத்த கட்ட ஆராய்ச்சிக்கு சென்று விட்டான்.

“உனக்கு மீசை வராதாப்பா? முடி ஏன் இவ்வளவு வச்சுருக்க? ஹேர்கட் பண்ணிக்கோ! பரட்டையா இருந்தா அம்மாக்கு பிடிக்காது… அப்படிதானேம்மா!” என தந்தையை தொட்டுத் தடவிப் பேசி என இவன் செய்த கலாட்டாவில் ஒருமணி நேரம் குடும்பத்தினர் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

மகனின் ஒவ்வொரு வார்த்தையும், அம்மாவை சார்ந்து  தொடர்ந்து கொண்டேவர, கணவனும் மனைவியும் பதில் சொல்ல முடியாமல் அவஸ்தையுடன் நெளிந்தனர்.

மகனின் பேச்சினைக் கேட்ககேட்க பாஸ்கரின் மனம் வெகுவாக கலங்கிப் போனது.

‘எத்தனை இழந்திருக்கிறேன் நான்… இவளது விருப்பத்திற்கு மரியாதை செய்வதாக நினைத்து விட்டு, என் குழந்தையை ஏங்க வைத்து விட்டேனே’ என்ற ஆதங்கம் மட்டுமே பெற்றவனின் மனம் முழுவதும் வியாபித்திருந்தது. 

இனிமேல் யாரைப் பற்றியும் கவலை கொள்ளாமல் மகனை அடிக்கடி வந்து சந்திக்க வேண்டும் என்ற உறுதியை அன்றே, அந்தக் கணமே எடுத்துக் கொண்டான். 

“விபுகுட்டி! அப்பா இங்கே தான் இருப்பாரு… இப்போ ஃப்ரீயா விடு! பிரெஷ்-அப் பண்ணிட்டு வரட்டும்” என மிதுனா அழைத்த பிறகே விபாகரன் சற்று அமைதியாகிப் போனான்.

விபாகரனை பின்பற்றிய நந்தாவும் நைநிகாவும் அவனை ‘பாஸ்மாமா’ என சுற்றி வந்து கொண்டாடிக் கொள்ள, அந்த நிமிடங்கள் எல்லாம் அற்புதமான தருணங்களாகிப் போனது பாஸ்கருக்கு…

பாஸ்கரின் வருகையை குடும்பமே கொண்டாடி மகிழ, சிந்துவோ வழக்கம்போல் உள்ளறைக்கு சென்று தன்னை தனிமைபடுத்திக் கொண்டாள்.

மனைவியின் உள்நடப்பில் கணவனும் அதிருப்தி அடைந்துவிட, முதல் கோணல் முற்றிலும் கோணலாகிப் போனது.

விபு வலுக்கட்டாயாக சிந்துவை இழுத்து வந்ததில், முன்னறைக்கு மீண்டும் வந்தவள் கணவனின் புறம் திரும்பாமலேயே, தன் வேலைகளை பார்க்கச் சென்றுவிட, பாஸ்கருக்குதான் வெறுமை சூழ்ந்து கொண்டது.

‘இது இப்போதைக்கு சமாதானமாகாது போல! பேசாம நான் வெளியே ரூம் எடுத்து தங்கியிருக்கலாம். பையனை பார்க்குற அவசரத்துல, இந்த ராங்கி இருப்பாங்கிறதயே மறந்துட்டு வந்துட்டேன்’  என மனதோடு புலம்பிக் கொண்டான்.

வந்தவனுக்கு காபி, பலகாரம் கொடுத்து, வேண்டியதை கவனித்த மிதுனா, மறந்தும் சிந்துவிடம் கணவனுக்கு வேண்டியதை செய்து கொடு என்று சொல்லவில்லை.

முதலில் இருவரும் சகஜமாகப் பேசிக் கொள்ளட்டும். பிறகு நாம் சொல்லாமலேயே செய்து விடுவாள் என்ற நினைப்பில் தன்போக்கில் இருந்து விட்டாள். 

“உங்க அண்ணிய பார்த்தாவது மாப்பிள்ளைக்கு வேணுங்கிறத செய்யேன்டி!” கிசுகிசுப்புடன் மகளை கடிந்துகொண்ட மரகதம் மருமகளையும் தடுக்க வர,

“இப்ப அவளுக்கு அட்வைஸ் பண்றதவிட, என் தம்பிக்கு தேவையானத கவனிக்கிறதுதான் எனக்கு முக்கியம் அத்தை… விடுங்க… அவங்களா சமாதானம் ஆகிக்குவாங்க” என்ற பேச்சோடு தம்பியை கவனிக்க சென்று விட்டாள் மிதுனா.

நடப்பதை எல்லாம் கண்டும் காணாதவன் போல் பார்த்துக் கொண்டிருந்த தயாவும் உணவை முடித்துக் கொண்டு வேலைக்கு புறப்பட்டு நின்றான்.

“என்னால இன்னைக்கு வரமுடியாது தயா… என்னென்ன செய்யணும்னு ஆபீஸ்ல சொல்லிட்டு வந்துட்டேன்… வேற எதுவும் தேவைன்னா எனக்கு கால் பண்ணுங்க” மிதுனாவும் கணவனிடம் சொல்லி முடிக்க,

“நீங்களும் கடைக்கு வாங்க மாமா!” என தயங்காமல் அழைத்தான் பாஸ்கர்.

“உன் அக்காவை கூட்டிட்டு போயிட்டு வா மாப்ளே! இதுக்கெல்லாம் நான் எதுக்கு?” இலகுவாய் கூறிச் சென்று விட்டான் தயா.

மாமனும் மாப்பிள்ளையும் முதன்முறையாக முறைப்பில்லாமல் பேசிக் கொண்டதில் மிதுனாவிற்கு மகிழ்ச்சிதான். ஏதோ ஒருவிதத்தில் உறவுகள் சரியானால் நல்லதுதானே!

மாடியில் இருக்கும் வீட்டினை பாஸ்கருக்கென ஒதுக்கி கொடுத்து விட, அவனும் குளித்து, உணவை முடித்து கொண்டு வெகு விரைவாகவே தயாராகி வந்தான். அப்பொழுதும் மனைவியை இவன் அழைக்கவில்லை.

எங்கே இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டால்தானே, நேரடியாக பேசுவதற்கு… இவள்தான் வேண்டா வெறுப்பாய் ஓரிடத்திலும் நிற்காமல் நடமாடிக் கொண்டு கடுப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறாளே!

அதை பார்த்தவனும் கோபத்தில் அவளை கண்டு கொள்ளவில்லை. மிகத் தீவிரமான கண்ணாமூச்சி ஆட்டம்தான் அங்கே ஆரம்பாகி இருந்தது. 

அதன் பிறகு மிதுனாவை உடனழைத்துக் கொண்டு வெளியே கிளம்பியவன், குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துக் கொண்டான்.

“சிந்துவையும் கூட்டிட்டு போவோம் பாஸ்கி!” என தம்பியிடம் சொன்ன மிதுனா,

“நீயும் எங்ககூட வா சிந்து!” அவளை அழைக்க,

“எனக்கு கொஞ்சம் தலைவலியா இருக்கு அண்ணி… நீங்க போயிட்டு வாங்க! பசங்களை நான் பார்த்துக்கறேன்…” என்று அவள் மறுத்ததில் பெரிதாக கோபப்படவில்லை பாஸ்கர்.

‘உன்னிடம் எதிர்பார்த்ததுதான்’ என்கிற பாவனையில், தனது வேலையை கவனிக்க தொடங்கி விட்டான்.

“நீ கூப்பிட்டு பாரு பாஸ்கி… வந்தாலும் வருவாடா!” என மிதுனா தம்பிக்கு அறிவுறுத்த,

“இப்ப, இவகூட பேசினா, பஞ்சாயத்து வைப்பா… அதுக்கெல்லாம் எனக்கு நேரமில்லக்கா… வா போவோம்!” என்று அக்காவை இழுத்துக் கொண்டே குழந்தைகளுடன் கிளம்பி விட்டான்.

‘என்ன திமிரு இவருக்கு? என்னோட பேசுறதுன்னா பஞ்சாயத்து பண்றதா அர்த்தமா?’ என்ற கோபப்பார்வையில் இவள் நோக்க,

“ஒழுங்கா கூப்பிட்டா மட்டும், வந்துட்டு தான் நீ வேற வேலை பார்ப்பீயா? இந்த பார்வை எல்லாம் என்னை ஒண்ணும் செய்யாது’ என்ற அலட்சியத்துடன் மனைவியை பார்த்துவிட்டு நடையைக் கட்டினான் பாஸ்கர்.

‘ரெண்டும் ரெண்டாப்பை ரெண்டும் கழண்டாப்பை…’ என இருவரின் செயல்களையும் பார்த்து நொடித்துக் கொண்ட மரகதம், மகளை பிடித்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்க ஆரம்பித்தார்.

“வராத மனுஷன் வந்திருக்காருன்னு சந்தோஷப் படுறியாடி… அப்படியென்ன ஏத்தம் உனக்கு? இன்னுமா கோபத்தை பிடிச்சு தொங்குவ?

பொண்டாட்டி புள்ளைங்கள திரும்பியே பார்க்காம, ஏனோதானோன்னு இருக்குறவனையே கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்றாங்க…

இங்கே என்னடான்னா திருந்தி வந்தவனையும் வாங்கன்னு கூப்பிட வழியக் காணோம்… நீதான் சுதாரிச்சுக்கணும் சிந்து…

இவ இப்படிதான்னு முடிவு கட்டி, ஈஸியா வேற வழிய பார்த்திட்டு போயிடுவாங்க ஆம்பளைங்க… யார் செஞ்ச புண்ணியமோ இன்னும் உன் வீட்டுக்காரன் எந்த பிரச்சனையும் பண்ணாம, அமைதியா இருக்கான்” என மரகதம் கூறியவை யாவும் கணவனுக்கு சாதகமாகவே இருக்க, இவளின் கபாலம் சூடேறிப் போனது.

“இப்போ யார் அவரை தடுத்தா? அழகா இன்னும் ஒன்பது கல்யாணம் கூட பண்ணிக்கட்டும்… என்னால எல்லாத்தையும் மறந்துட்டு வாழ முடியாது… அப்படி விட்டுக் கொடுத்து வாழவும் தெரியாது… என் வரைக்கும், நான் நிம்மதியா இருக்கேன்! எனக்கு அது போதும்” என நிமிர்வுடன் பேசிட,

“ஐயோ பாவம்னு உன்னை ஆரம்பத்துல விட்டது தப்பா போச்சுடி! அன்னைக்கே ரெண்டு அடி கொடுத்து மாப்பிள்ளை கூடத்தான் இருக்கணும்னு உன்னை கட்டி போட்டுருக்கணும்…

அப்படி செய்யாததுதான், இப்போ உன் திமிரா வந்து விடிஞ்சிருக்கு! இனிமேலும் உனக்கு புரிய வைச்சு புத்திமதி சொல்ல யாரும் முன்வரமாட்டாங்க… உன் வாழக்கையை நீதான் பார்த்துக்கணும். சொல்றத சொல்லிட்டேன்… அப்புறம் உன்னிஷ்டம். சொல்பேச்சு கேட்டு நடக்க முயற்சி பண்ணு!” என கடிந்து கொண்டு சொல்லி முடிக்க, அன்றைய தினம் முழுக்க ஒருவித கடுப்புடனேதான் சிந்துவிற்கு கழிந்தது.

எல்லா வேலைகளையும் முடித்து, குழந்தைகளுக்கும் வேண்டியதை வாங்கிக் கொடுத்துவிட்டு திரும்பும்போது இரவு எட்டு மணியை தாண்டியிருந்தது.

வந்ததும் குழந்தைகள் மூவரும் தங்களுக்கென வாங்கிய உடைகளை வெளியே எடுத்து கடை பரப்பி வைத்தனர்.

“ம்மா… நாளைக்கு போட்டுக்க நான், நந்தா, அப்பா மூணு பேரும் சேம் பின்ச் கலர்ல வேஷ்டி சட்டை எடுத்திருக்கோம்! உனக்கும் அதே கலர்ல ஒரு பட்டுசாரி அப்பா எடுத்தாங்க… நீயே பாரு! சூப்பரா இருக்கும். நைல் குட்டிக்கும் கூட சேம் கலர்ல பட்டுபாவாடை எடுத்தோம்” என்ற சந்தோஷ ஆர்பரிப்பில் சொன்ன விபு, சேலையை தன் அம்மாவின்மேல் போட்டு அழகு பார்க்க,

“நல்லா இருந்து என்ன பண்ண விபு? நாளைக்கு காலையில போட்டுக்க இப்போ சேலை வாங்கினா போதுமா? ப்ளவுஸ் தைச்சுக்க வேண்டாமா?” என சேலையை தவிர்க்க காரணத்தை முன்னிறுத்தினாள் சிந்து.

“ரெடிமேட் ப்ளவுஸ் எடுத்துட்டு வந்திருக்கேன் சிந்து! இந்தா போட்டுபாரு!” மிதுனா நீட்ட, இப்பொழுதும் அசரவில்லை சிந்து.

“இல்லண்ணி… நாளைக்கு கட்டிக்கன்னு அங்கேயே நெய்ஞ்ச பட்டுசேலை ஒண்ணு அம்மா எடுத்து கொடுத்துட்டாங்க! அதையே கட்டிக்கிறேன்! இத அடுத்து வர்ற பங்கஷன்ல கட்டுறேன்” என முற்றிலும் தவிர்த்திட, மிதுனாவிற்கும் கோபம் ஏறிப் போனது.

“இருக்கட்டும் சிந்து… நாளைக்கு இத கட்டு! அலமு சித்திகிட்ட நான் சொல்றேன்!” என மிதுனா கொடுக்கப் போக,

“கம்பெல் பண்ணாதேக்கா… பெரிய வீட்டுப் பொண்ணு கிராண்டா கட்டி பெருமையா நிக்கட்டும்…” என கோபத்தில் வெடித்த பாஸ்கர், புடவையை பிடுங்கிக் கொண்டு செல்ல, அடுத்து எந்த பேச்சிற்கும் இடமில்லாமல் போனது.

அனைத்து வேலைகளை முடித்துக் கொண்டு, நெருங்கிய சொந்தங்கள் அனைவருக்கும் அலைபேசியில், தான் முறையாக சீர்வரிசை செய்யப் போவதை கூறி, விசேசத்திற்கு வருமாறு அழைப்பை விடுத்தான்.

இவன் பேசி முடித்தவுடன் அருகில் அமர்ந்திருந்த சிந்துவிடம் அலைபேசியை நீட்ட, அவளும் தன் பங்கிற்கு பேசி முடித்தாள். எக்காரணம் கொண்டும் அவள் முகத்தை கூட இவன் ஏறிட்டுப் பார்க்கவில்லை. மனம் முழுவதும் அவனுக்கு கோபம் கோபம் மட்டுமே வியாபித்திருந்தது.

மிதுனா ஒவ்வொருவரின் அலைபேசி எண்களை சொல்லச்சொல்ல பாஸ்கர் அழைக்கவென இருக்க, அப்பொழுதும் கணவன் மனைவியிடத்தில் பேச்சு வார்த்தை இல்லை.

வேலை, அலைச்சல் மிகுதியில் எதையும் கவனிக்கும்படியாக மிதுனாவோ, தயாவோ இல்லை. உடன் பிள்ளைகளின் அட்டகாசம் வேறு சேர்ந்து கொள்ள எதைத்தான் நினைத்தபடி செய்ய முடியும்.

விடிந்ததும் விழாநாளின் ஆர்ப்பரிப்பும் சூழ்ந்து கொள்ள, இருவரும் இன்னும் பாராமுகமாய் நடந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!