உன்னாலே – 18 (Pre – final)

உன்னாலே – 18 (Pre – final)
கார்த்திக் தனது காதலை உணர வேண்டும், அவனாகவே முன்வந்து தன் காதலை தன்னிடம் சொல்ல வேண்டும் என்று தான் ராகினி இத்தனை வருடங்களாக காத்திருந்தாள்.
இன்று அவள் நினைத்தது போலவே அது எல்லாம் நடந்திருந்தாலும் அவளுக்குள் ஏற்பட்ட அந்த பிரமிப்பு மாத்திரம் இன்னும் அவளை விட்டு விலகவில்லை.
தனது மனதிற்குள் இருக்கும் தன் காதலை சொல்வதற்கு முதலே கார்த்திக் தன்னை நேசிக்க ஆரம்பித்து விட்டான் என்பதை நினைத்துப் பார்க்கும் போதே அவளுக்கு அளவில்லா ஆனந்தம் கிடைத்ததைப் போல இருக்க தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு அவனைப் பார்த்தவள், “இந்த ஒரு தருணத்திற்காகத் தான் நான் பத்து வருடங்களுக்கு மேலாக காத்துட்டு இருந்தேன் கார்த்திக். நான் கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி காரில் வைத்து உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆனதைப் பற்றி பேசினேன் இல்லையா? அதற்கும் என்னோட காதலுக்கும் சம்பந்தம் இருக்கு. உங்களைக் காப்பாற்றி ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ண அந்த பொண்ணு நான் தான்” என்று கூற கார்த்திக் அவளை அதிர்ச்சியாக நிமிர்ந்து பார்த்தான்.
“ராகினி!”
“ஆமா கார்த்திக். அன்னைக்கு நீங்க ஹாஸ்பிடலில் வைத்து என் கையை பிடித்து கொண்டு என்னை விட்டு போயிடாதேன்னு சொன்னீங்க. நீங்க என்னவோ அதை சுய நினைவு இல்லாமல் மயக்கத்தில் தான் சொன்னீங்க, ஆனா எனக்கு அது ஜென்ம ஜென்மமாக கூடவே இருன்னு சொன்னது போல இருந்தது. அதற்கு அப்புறம் அடிக்கடி உங்களை நினைத்துப் பார்ப்பேன்.
ஒரு நாள் தற்செயலாக உங்களை மறுபடியும் அதே இடத்தில் பார்த்த போது நடு ரோட்டில் நின்னு ஆட்டம் போட்டேன். அப்போதெல்லாம் இது காதலா என்று எனக்கு தெரியல. எதற்காக உங்களைப் பின் தொடர்ந்து வர்றேன்னு கூட தெரியாமல் பின் தொடர்ந்து வந்தேன். உங்களை ஒளிந்து, ஒளிந்து ரசித்துப் பார்த்தேன். அதற்கு அப்புறம் இது சரியில்லைன்னு என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டு உங்களைப் பின் தொடர்ந்து வரல, ஆனா அந்த கடவுள் மறுபடியும் உங்களை என் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துனாங்க. உங்க காலேஜ் கிரிக்கெட் டூர்ணமெண்ட் நடந்த இடம் என்னோட ரூம் பால்கனியில் இருந்து பார்த்தால் தெளிவாகத் தெரியும். நான் எல்லாவற்றையும் விட்டு விலகிப் போக நினைத்தாலும் மறுபடியும், மறுபடியும் உங்களை நான் சந்திக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அப்போ தான் எனக்கு நீங்க என்னோட வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான ஒரு ஆளாக வர வேண்டும் என்று எண்ணமே வந்தது.
அந்த நாளைக்கு அப்புறம் தொடர்ந்து உங்களை பாலோ பண்ண ஆரம்பித்தேன். உங்க காலேஜ், பிசினஸ், ஃபேமிலி என எல்லாவற்றையும் பற்றி என்னால் முடிந்த அளவு தெரிந்து வைத்துக் கொண்டேன். உங்க மேல நான் எந்தளவிற்கு காதல் வைத்து இருந்தேனா, உங்க பக்கத்தில் இருக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் போதும்னு தான் நான் நீங்க படித்த அதே காலேஜில் அதே கோர்ஸில் சேர்ந்தேன். காலேஜ் ஃபைனல் இயர் படிக்கும் போது தான் துளசியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, அதற்கு அப்புறம் உங்க வீட்டுக்கும் வந்து போகத் தொடங்கினேன். அப்போ எல்லாம் நீங்க ஒரு தடவை என்னை திரும்பி பார்க்க மாட்டீங்களா என்று ரொம்ப ஏங்கி இருக்கேன். என்னோட வாழ்க்கையில் நடந்த விடயங்கள் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு வகையில் நீங்க தொடர்பு பட்டு இருப்பீங்க. இது வரைக்கும் உங்களுக்காக தான் நான் ஒவ்வொரு விடயத்தையும் செய்தேன், செய்துட்டு இருக்கேன், இனியும் செய்வேன் கார்த்திக்”
“அப்போ இதெல்லாம் நீ ஏன் என் கிட்ட முன்னாடியே சொல்லல ராகினி?”
“நான் பலதடவை என் காதலை சொல்ல உங்களைத் தேடி வந்தேன் கார்த்திக், ஆனா அதற்கான சந்தர்ப்பம் அமையல. எது எப்படியிருந்தாலும் கண்டிப்பாக என் காதலை உங்களுக்கு தெரியப்படுத்தணும்னு ஒரு நாள் நீங்க ஆதித்யா அண்ணாவை அட்மிட் பண்ணி இருந்த ஹாஸ்பிடல் வரை உங்களைப் பின் தொடர்ந்து வந்தேன்” அன்றைய நாளின் நினைவுகளில் ராகினி கார்த்திக்கின் முகத்தை பார்க்காமல் வேறு புறமாக தன் பார்வையை திருப்பிக் கொள்ள,
“அன்னைக்கு என்ன ஆச்சு?” அவனோ அவளது முகத்தை தன் புறமாக திருப்பியவாறே அவளை கேள்வியாக நோக்கினான்.
“நீங்களும், ஆதித்யா அண்ணாவும் பேசுவதை அரையும், குறையுமாக கேட்டு நீங்களும், அஞ்சலியும்…” அதற்கு மேல் அவனது முகத்தை பார்த்து பேச முடியாமல் ராகினி தன் பார்வையை தாழ்த்திக் கொள்ள,
சிறு புன்னகையுடன் அவளைத் தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன், “சரி விடு ராகினி. நடந்து முடிந்ததை நம்மால் மாற்ற முடியாது. நீ என்னை இந்தளவிற்கு காதலித்து இருப்பேன்னு நான் கற்பனை கூட பண்ணிப் பார்த்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால் உன்னை வார்த்தைகளால் பலமுறை காயப்படுத்தும் இருக்கேன். ஒரு பொண்ணு இந்தளவிற்கு ஒரு பையனை காதலிக்க முடியுமான்னு எனக்குத் தெரியலை, ஆனா அப்படியான ஒரு காதல் எனக்கு கிடைத்து இருக்குன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு ராகினி. நீ காதலிக்கும் அளவுக்கு என்னால் காதலிக்க முடியுமான்னு தெரியலை, ஆனா என் மனதில் இப்போ நீ மட்டும் தான் நிறைந்து போய் இருக்க. ஒரு வாரம் நீ தென்காசிக்கு போய் இருந்ததையும், அந்த நேரத்தில் என் கூட இல்லைங்குறதையுமே என்னால் ஏற்றுக்கொள்ள முடியல. அந்தளவிற்கு நீ என்னோட வாழ்க்கையில் நிறைந்து போய் இருக்க ராகினி” என்று கூற, அவளோ அவனோடு மேலும் ஒன்றி அமர்ந்து கொண்டாள்.
“எனக்கு இப்போ கூட பயமாக இருக்கு கார்த்திக்”
“ஏன்?”
“இது ஒருவேளை என் கனவாக இருக்குமோன்னு தான். இப்படி பலமுறை நீங்க உங்க காதலை சொல்வது போல் கற்பனை பண்ணி பண்ணி இப்போ உண்மையாக நீங்க உங்க காதலை சொல்வது கூட எனக்கு கனவு தானோன்னு நினைக்கத் தோணுது, ஏன்னா இது என்னோட பத்து வருட ஆசை கார்த்திக்” ராகினியின் கலக்கமான குரலைக் கேட்டு அவளது கையை ஆதரவாக அழுத்திக் கொடுத்தவன், “இது கனவில்லை ராகினி, நிஜம் தான்” என்றவாறே அவளது நெற்றியில் முத்தமிட அவளோ கண்கள் கலங்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் அதைக் கேட்கவா கார்த்திக்?”
“ரொம்ப நாளாகவா? அப்படி என்ன சந்தேகம்?”
“நீங்க தான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு உறுதியாக இருந்தீங்களே, அப்புறம் எப்படி நம்ம கல்யாணத்துக்கு திடீர்னு சம்மதம் சொன்னீங்க?”
“ஆதித்யாவால் தான்”
“புரியலையே”
“நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு உறுதியாக முடிவு எடுக்கவும் ஆதி தான் காரணம், இந்த கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லவும் அவன் தான் காரணம்”
“சத்தியமாக ஒண்ணுமே புரியல கார்த்திக்” ராகினி பாவமாக தன் முகத்தை வைத்துக் கொண்டு கார்த்திகை பார்க்க,
அவளைப் பார்த்து வாய் விட்டு சிரித்துக் கொண்டவன், “நான் எதனால் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னேன்னு உன் கிட்ட முன்னாடியே சொல்லி இருந்தேன். அந்த முடிவை நான் மாற்றிக் கொள்ளவே இல்லை. அதற்கு அப்புறம் அம்மா, அப்பாவோட பேச்சைக் கேட்டு எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக மனது மாறியது உண்மை தான். அந்த நேரத்தில் ஆதித்யாவும் என் கிட்ட ரொம்ப கெஞ்சிப் பேச ஆரம்பித்தான், ஆனா நான் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லவே இல்லை.
அதற்கு அப்புறம் எனக்கே ரொம்ப கஷ்டமாகிடுச்சு. என்னால் பலபேரு கஷ்டப்படுறாங்களோன்னு கவலையாக இருந்தது. முக்கியமாக அம்மாவும், அப்பாவும். நான் ஓபனாக சொல்லுறேன், இந்த கல்யாணத்துக்கு நான் ஆரம்பத்தில் சம்மதம் சொல்ல காரணம் அம்மா, அப்பா அப்புறம் ஆதித்யா. அதனால் தான் நான் உன்னைப் பற்றி ஆரம்பத்தில் எந்தவொரு தகவல்களும் தெரிந்து கொள்ள முயற்சிக்கல, அது என் தப்பு தான். கல்யாணத்துக்கு அப்புறம் நான் என்னோட மனநிலைமையை சொல்லி வரப் போகும் பொண்ணு கிட்ட பேசலாம்னு தான் நான் நினைத்து இருந்தேன், ஆனா நீ முதல் நாளே என்னை ஷாக்காகி நிற்க வைத்துட்ட” தங்கள் திருமணத்தின் முதல் நாள் இரவில் தான் நடந்து கொண்ட விதத்தை எண்ணி ராகினி புன்னைகைக்க,
அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தவன், “அதற்கு அப்புறம் அடிக்கடி நான் பேச முயற்சி பண்ணுவேன், நீ ஏதாவது சேட்டை பண்ணி என் பேச்சை மாற்றிடுவ. நீ எனக்காக ஒரு சில விடயங்கள் பண்ணும் போது எனக்கே தெரியாமல் நான் உன்னை ரசிச்சு பார்த்து இருக்கேன். அந்த உண்மை எல்லாம் நீ என் பக்கத்தில் இல்லாத போது தான் எனக்கே புரிந்தது. உன் பக்கத்தில் வரும் போதெல்லாம் எனக்கு ஏனோ நான் என் கட்டுப்பாட்டை இழந்து விடுவேனோ என்கிற பயம். நீ அடிக்கடி சொல்லுவ, நான் என்னைச் சுற்றி பொய்யாக ஒரு சுவர் கட்டி வைத்து இருக்கேன்னு. அது உண்மை தான் ராகினி. ஆரம்பத்தில் என்னை விட சின்ன பொண்ணு கிட்ட போட்ட சவாலில் தோற்பதான்னு தான் கொஞ்சம் வீம்பாக இருந்தேன், ஆனா எப்போ என் மனதிற்குள்ளும் நீ தான் இருக்கேன்னு புரிந்ததோ அப்போவே அதை எல்லாம் தூக்கி தூரப் போட்டுட்டேன்” என்று கூற,
ஏதோ ஞாபகம் வந்தவளாக அவனை சட்டென்று திரும்பி பார்த்தவள், “உங்க காதலை உங்களுக்கு புரிய வைக்க கூட ஆதித்யா அண்ணா ஏதாவது சொன்னாங்களா?” என்று கேட்டாள்.
“எதனால் இப்படி கேட்கிற ராகினி?” கார்த்திக் அவளை சிறிது குழப்பத்தோடு நோக்க,
“இல்லை, உங்களுக்கு ஒரு விடயத்தை நேரடியாக சொன்னாலே புரியாது. இங்கே எல்லாமே மறைமுகமாக நடந்த விடயங்களாக இருக்கு, அதுதான்…” என்றவாறே ராகினி தான் சொல்ல வந்த விடயத்தை சொல்லி முடிக்காமல் இழுக்க,
அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவன், “என் காதலை நான் உணர அவனோட பங்களிப்பு இருக்கு, ஆனா அது அவனுக்கே தெரியாது. ஆதி அவனோட உறவைப் பற்றி பேச பேசத் தான் எனக்கே சில நிதர்சனம் புரிய ஆரம்பித்தது. ஆதித்யாவோட வீட்டுக்கு போய் வந்த அன்னைக்கே நான் என் மனதில் இருக்கும் விடயத்தை பற்றி எல்லாம் சொல்லி இருப்பேன், ஆனா எனக்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது, என்னை நானே புரிந்து கொள்ள எனக்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. இப்போ நான் முழுமையாக, தெளிவாக இருக்கேன்” என்றவாறே அவளது கையை தன் கையோடு சேர்த்துப் பிணைத்துக் கொண்டான்.
சிறிது நேரம் அவர்கள் இருவருக்கும் இடையே அமைதியே நிலவ தன் குரலை சரி செய்து கொண்டு கார்த்திக்கை திரும்பி பார்த்த ராகினி இதற்கு முன்பு அவனை மறைந்திருந்து காதலோடு பார்த்ததைப் போலல்லாமல் இப்போது நேரடியாக அவனைக் காதலோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
ராகினியிடம் இருந்து எந்தவொரு பேச்சும் இல்லாமல் இருக்க, அவளைத் திரும்பிப் பார்த்த கார்த்திக் அவளைப் பார்த்து கேள்வியாக தன் புருவம் உயர்த்த, அவனைப் பார்த்து ஒன்றும் இல்லை என்பதைப் போல தலையசைத்த ராகினி, “ஆதித்யா அண்ணா அப்படி என்ன சொன்னாங்க கார்த்திக்?” என்று வினவ,
“என்ன நீ எப்போ பார்த்தாலும் கேள்வியாகவே கேட்டுட்டு இருக்க? முதன்முதலாக மனது விட்டு பேசி காதலை சொல்லி இருக்கேன், அதைப் பற்றி பேசாமல் ஆதி என்ன சொன்னான்? ஆட்டுக்குட்டி என்ன சொன்னாங்க? என்று கேட்டுட்டு இருக்க” என்றவாறே கார்த்திக் சலித்துக் கொள்ள அவனைப் பார்த்து சிரித்தவள் அவனிடம் இருந்து விலகி எழுந்து நின்று கொண்டாள்.
“பத்து வருஷம் எம்.டி சார். பத்து வருஷம். அதனால அதற்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் கெத்து காட்டத்தானே வேணும்” என்றவாறே ராகினி அவனைப் பார்த்து கண்ணடிக்க,
“ஓஹ், அப்படியா பி.ஏ மேடம்?” என்று விட்டு, சட்டென்று அவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்து நிறுத்தியவன், “இதற்கு முன்னாடி இருந்த நாட்களை எல்லாம் எதையுமே புரிந்து கொள்ளாமல் வீணடித்தது போதும் ராகினி. இதற்கு மேல் ஒரு நாளையும் வீணாக்க கூடாது” என்றவாறே அவளை நெருங்க,
தாங்கள் நிற்கும் இடத்தை கருத்தில் கொண்டு அவனை சிறிது தள்ளி விட்டவள், “கார்த்திக் இது ரோடு பா” என்றவாறே அவனது தோளில் செல்லமாக தட்டினாள்.
“அப்போ நான் சொன்ன விடயம் பரவாயில்லை, இருக்கும் இடம் தான் சரியில்லை அப்படித்தானே?” கார்த்திக்கின் கேள்வியில் ராகினியின் முகம் குங்குமமாய் சிவக்க, அவளது தாடையைப் பற்றி அவளது முகத்தை நிமிர்த்தியவன் அவளது பார்வையோடு தன் பார்வையை கலக்க விட்டான்.
அவர்கள் நின்று கொண்டிருந்த சாலை பெரிதும் ஆள் நடமாட்டம் இல்லாத ஒன்றிரண்டு கனரக வாகனங்கள் கடந்து செல்லும் சாலையாக இருந்ததனால் அவர்களும் தங்கள் விளையாட்டான பேச்சு வார்த்தையை அங்கேயே வளர்த்துக் கொண்டே நின்றனர்.
மௌளனங்கள் காதல் மொழியாக மாறி கார்த்திக் மற்றும் ராகினியை கட்டிப் போட்டு வைத்திருக்க, அவர்களை கடந்து சென்ற ஒரு லாரியின் ஹார்ன் சத்தத்தில் சட்டென்று தன்னை நிதானப்படுத்திக் கொண்ட ராகினி அவனிடம் இருந்து விலகப் பார்க்க அவனோ அவளது கரத்தை இறுக்கமாக பற்றிக் கொண்டான்.
அவனது செய்கையில் முகம் சிவக்க அவனது கையை தட்டி விட்டவள் வீதிக்கு மறுபுறமாக கடந்து தங்கள் காரில் ஏறுவதற்காக செல்ல அதற்குள் அந்த வழியாக வந்த ஒரு கனரக வாகனம் அவளை மோதியிருந்தது.
ஒரு கணத்திற்குள் எல்லாம் நடந்து முடிந்திருக்க, கார்த்திக்கின் முகத்தை பார்த்தபடியே ராகினி வீதியின் ஒரு ஓரத்திற்கு தூக்கி வீசப்பட, ராகினியின் அந்த நிலையைப் பார்த்ததுமே, “ராகினி!” என்றவாறே கார்த்திக் அவளை நோக்கி ஓடி வர, அதற்குள் இன்னொரு வாகனம் கார்த்திகை நோக்கி வந்து கொண்டிருந்தது.
தன் வலியையும் பொருட்படுத்தாமல் தன் காதலைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்புடன், “கார்த்திக்” என்றவாறே ராகினி பெருங்குரலெடுத்து கத்தியபடி எழுந்து அமர அவளை சுற்றி இருந்த இடமோ அவளுக்கு விசித்திரமாக தென்பட்டது.
வெண்ணிற கண்ணாடி தடுப்பு சுவரால் அமைக்கப்பட்டிருந்த அறைக்குள் மருத்துவ கருவிகள் பல பொருத்தப்பட்டிருக்க அந்த இடத்தை பார்த்து விழித்துக் கொண்டு அமர்ந்திருந்த ராகினி அந்த அறையின் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த டிஜிட்டல் கடிகாரத்தில் அன்றைய நாளின் திகதியைப் பார்த்து இன்னமும் குழப்பம் அடைந்து போனாள்.
அதிலிருந்த திகதி ராகினி மற்றும் கார்த்திக் தங்கள் காதலைப் பகிர்ந்து கொண்ட போது இருந்த நாளில் இருந்து ஆறு மாதங்கள் கழித்து இருந்த நாளை குறித்துக் கொண்டிருந்தது.
தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் ராகினி தவித்துப் போய் நிற்க, சரியாக அந்த நேரம் பார்த்து ஒரு நர்ஸ் உள்ளே வந்து, நின்று கொண்டிருந்த ராகினியினி அருகில் அவசரமாக ஓடி வந்து, “மேடம் ஆர் யூ ஓகே?” என்றவாறே அவளை அமரச் செய்ய,
அந்த நர்ஸையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள், “எனக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.
“உங்களுக்கு பெரியதொரு ஆக்சிடென்ட் ஆகி இங்கே வந்து அட்மிட் பண்ணாங்க. கிட்டத்தட்ட ஆறு மாதமாக நீங்க கோமாவில் இருந்தீங்க”
“என்ன ஆறு மாதமா?” அந்த நர்ஸ் சொன்ன தகவலைக் கேட்டு அதிர்ச்சியானவள்,
‘ஆனா எனக்கு எல்லாம் இப்போ தான் நடந்த மாதிரி தானே தெரிந்தது. கார்த்திக்கோடு என் கல்யாணம், ஆதித்யா அண்ணா அன்ட் அஞ்சலியை சேர்த்து வைத்தது, கார்த்திக் அவங்க காதலை சொன்னது. எனக்கு ரொம்ப குழப்பமாக இருக்கே. ஒரு வேளை…ஒரு வேளை நான் கோமாவில் இருந்த போது என் மனதில் பதிந்து போன விடயங்கள் எல்லாம் என் நினைவில் இருந்ததால் அந்த நினைவில் தான் நான் கண் விழித்தேனா? அப்படி என்றால் இதுநாள் வரைக்கும் நான் நடப்பதாக நினைத்தது எல்லாம் நினைவுகளா? அதனால் தான் எனது பக்க விடயங்கள் மட்டும் நடப்பது போல எனக்குத் தோன்றியதா?” இது நாள் வரை நடந்து கொண்டிருப்பதாக நினைத்த விடயங்கள் எல்லாம் அவள் நினைவுகளில் சேமிக்கப்பட்டிருந்த விடயங்கள் என்ற உண்மைநிலையை உணர்ந்து அதிர்ச்சியாகி அமர்ந்திருந்தாள்…..
(இந்தக் கதையின் ஆரம்பத்தில் இருந்து இப்போ வரைக்கும் நீங்க நல்லா கவனித்து இருந்தீங்கன்னா ஒரு விடயம் தெரிந்து இருக்கும். கதையின் ஆரம்பம் முதல் இப்போது வரைக்கும் ராகினி நினைப்பவ, ராகினிக்கு நடந்தவை என அவளின் பக்கமாகவே கதை நகர்ந்து இருக்கும். அதற்கான காரணம் தான் இதில் இறுதியில் சொல்லப்பட்டு இருக்கிறது)