உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 12

வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்து காற்றின் சலசலப்பும், பறவைகளின் இனிய சங்கீத ஒலியும் கேட்டு தன் துயில் கலைந்து எழுந்து அமர்ந்த இழையினியின் மனமும், உடலும் வெகு நாட்களுக்கு பிறகு இதமான ஒரு நிலையில் திளைத்து போய் இருந்தது.

 

வழமை போன்று தன் அன்றாட வேலைகளை எல்லாம் முடித்தவள் வேக வேகமாக தான் மலையேறும் மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

 

அவளது அன்றைய உற்சாகத்திற்கான காரணம் வேறு யாரும் அல்ல பொன் ஆதவன் தான்.

 

அன்று இறுதியாக அவனிடம் தொலைபேசியில் பேசி விட்டு தன் பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தவள் அடுத்த நாள் காலை எப்போதும் போல உற்சாகமாகவே தன் வேலைகளை கவனிக்கத் தொடங்கினாள்.

 

அந்த காலகட்டம் தேயிலை விளைச்சல் அதிகமாக இருக்கும் காலகட்டம் என்பதனால் அவளுக்கும் பேக்டரியில் தலைக்கு மேல் வேலை வந்து சேர்ந்து கொண்டது.

 

அந்த வேலைகளுக்கு இடையே தற்காலிகமாக ஆதவனின் நினைவுகளைப் பற்றி மறந்திருந்தவள் நேற்று மாலை வேலை முடிந்து வரும் நேரம் விஜியின்

‘நாளைக்கு ஹைக்கிங் போறியா இழை?’ என்ற கேள்வியிலேயே அவனை மீண்டும் நினைத்துப் பார்க்க தொடங்கினாள்.

 

‘நாளைக்கு ஆதவன் வர்றதாக சொன்னாங்க இல்லையா?’ மனதிற்குள் ஒரு முறை தன்னைத் தானே கேட்டு கொண்டவள் மனம் காரணமே இன்றி சந்தோஷத்தை தத்தெடுத்து கொண்டது.

 

எதனால் அந்த மாற்றம் என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை நாளை அவன் வருவான் அவனிடம் பேசித் தன் குழப்பங்களை தீர்த்து கொள்ளப் போகிறோம் அந்த ஒரு எண்ணம் தான் அப்போதைக்கு, அந்த கணத்தில் அவள் மனதிற்குள் இருந்தது.

 

விடிந்தும், விடியாமலும் இருந்த காலை நேரத்தில் குளிர் காற்று வீசும் அந்த சாலையில் கைகளைக் கட்டிக் கொண்டு நடந்து சென்ற இழையினி ஆதவன் எங்கேயாவது நிற்கின்றானா என்று திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்து சென்றாள்.

 

அப்போது வெகு தொலைவில் ஏதோ ஒரு குக்குரல் கேட்கவும் ஒரு கணம் தயங்கி நின்றவள் ‘வேலைக்குப் போக வந்த யாரும் சத்தம் போட்டு விளையாடுறாங்க போல!’ அடிக்கடி அப்படி நடப்பதை எண்ணிப் பார்த்து விட்டு தன் தோளை குலுக்கியபடியே மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

 

மலைக்கு மேல் ஏறுவதற்கான வசதியோடிருந்த பாதையின் ஆரம்பத்தில் வந்து நின்ற இழையினி தன் கடிகாரத்தை ஒரு முறை திருப்பி பார்த்து விட்டு தான் வந்த பாதையையும் ஒரு முறை திரும்பி பார்த்துக் கொண்டாள்.

 

‘ஆதவன் இன்னைக்கு தானே வர்றதாக சொன்னாங்க ஏன் இன்னும் அவர் வரல? ஒருவேளை வீட்டுக்கு போய் இருக்காரோ?’ யோசனையுடன் தன் கைகளைப் பிரிப்பதும், கோர்ப்பதுமாக நின்றவள் வானத்தை நிமிர்ந்து பார்க்க அதுவோ மெல்ல மெல்ல தன் விடியலைத் தொடங்க ஆரம்பித்திருந்தது.

 

‘அச்சோ! சூரியன் வேறு வரப் போகுதே! என்ன பண்ணுறது?’ வானையும், பாதையையும் மாறி மாறி பார்த்தவள்

 

‘சூரிய உதயத்தை பார்த்து விட்டு வந்து வீட்டுக்கு போய் ஆதவனுக்கு போன் பண்ணி பார்க்கலாம்’ தனக்குள் முடிவெடுத்து கொண்டு வீட்டிலிருந்து வரும் போது இருந்த உற்சாகம் எல்லாம் வடிந்து போக மெல்ல மெல்ல மலையேறத் தொடங்கினாள்.

 

சுற்றியிருந்த பைனஸ் மற்றும் ஊசியிலை மரங்களின் பசுமையான தோற்றத்தை பார்த்துக் கொண்டே நடந்து சென்றவள் சிறிது நேரத்திற்கு பின் அந்த மலையுச்சியை வந்து சேர்ந்திருந்தாள்.

 

அவள் அங்கே வந்து சேர்ந்த கணமே சூரியன் தன் கதிர்களை மெல்ல மெல்ல அந்த வானெங்கும் பரவச் செய்ய ஒரு முறை தன் கண்களை இறுக மூடிக் கொண்டு சுற்றியிருந்த இயற்கை காற்றை உள்ளிழுத்து கொண்டவள் தன் இமைகளை மெல்லத் திறக்க அங்கே அவள் கண்களின் முன்னால் இயற்கையின் ஆதவனை மறைத்தவாறு மூச்சு வாங்க அவளைப் பார்த்து புன்னகைத்த படியே நின்று கொண்டிருந்தான் பொன் ஆதவன்.

 

“ஆதவன்!” இழையினியின் கண்களும், முகமும் ஆச்சரியத்தில் விரிய 

 

அவளைப் பார்த்து கண் சிமிட்டியவன்

“சொன்ன மாதிரி வந்துட்டேனா?” என்று கேட்டான்.

 

“நீங்க எப்படி வந்தீங்க? நான் ரொம்ப நேரமாக உங்களைத் தேடுனேனே உங்களைக் காணவே இல்லையே!” 

 

“அந்த சோகக்கதையை ஏன்ங்க கேட்குறீங்க?”

 

“அய்யய்யோ! என்னங்க ஆச்சு? ஏதாவது பிரச்சினையா?”

 

“சேச்சே! பிரச்சினை எல்லாம் எதுவும் இல்லை ஆனால் நான் சொல்லுறதைக் கேட்டு விட்டு நீங்க சிரிக்க கூடாது”

 

“சிரிக்குறதா?” குழப்பமாக ஆதவனைப் பார்த்து கொண்டு நின்ற இழையினி 

 

“சரி பரவாயில்லை சொல்லுங்க” என்று கூறவும்

 

சுற்றிலும் ஒரு முறை திரும்பி பார்த்துக் கொண்டவன்

“இழையினி மேடம்! நீங்க தப்பா எடுத்துக்கலேன்னா கொஞ்சம் இப்படி உட்காருங்களேன் ஓடி ஓடி கால் வலிக்குது” என்றவாறே அங்கிருந்த கற்பாறை ஒன்றில் அமர்ந்து கொள்ள அவளும் சிறிது இடைவெளி விட்டு அங்கே அமர்ந்து கொண்டாள்.

 

இழையினி வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்னர்…..

 

பொன் ஆதவன் இழையினியை சந்தித்து பேசுவதற்கு சனிக்கிழமை அன்று வருவதாக முன்னரே கூறியிருந்ததனால் அதற்கு ஒரு நாள் முன்னதாகவே அவன் ராஜாவோடு தெல்தெனிய பகுதிக்கு வந்து சேர்ந்திருந்தான்.

 

இழையினி சொன்ன நேரத்திற்கு எப்படியும் தன்னால் தூக்கத்தில் இருந்து எழுந்து செல்ல முடியாது என்று தெரிந்து கொண்டவன் ராஜாவை இரவு முழுவதும் தூங்க விடாமல் பேசிப் பேசியே விழிக்க வைத்து அவனது பலவிதமான ஏச்சு, பேச்சுக்களையும், பல்வேறு விதமான சாபங்களையும் எந்தவொரு கவலையும் இல்லாமல் புன்னகையுடன் வாங்கி கொண்டு அவளைக் காண்பதற்காக புறப்பட்டு சென்றான்.

 

இழையினியின் வீடு இருந்த பக்கத்திற்கு எதிர் புறமாக அவன் தங்கியிருந்த வீடு இருந்ததனால் அவள் வந்து விட்டாளா? இல்லையா? என்று தெரியாமல் அந்த மலை அடிவாரத்தில் வந்து நின்றவன் அவளது வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக் கொண்டு நின்றான்.

 

அப்போது திடீரென்று அவன் தலையின் மேல் ஏதோ விழ திடுக்கிட்டு போய் நிமிர்ந்து பார்த்தவன் அங்கே அவன்  நின்று கொண்டிருந்த இடத்திற்கு சரியாக மேலே ஒரு மரத்தில் குரங்கு ஒன்று அமர்ந்து கொண்டு வெண்ணெய் பழங்களை தின்று விட்டு அதன் விதைகளை அவன் மேல் வீசிய படி அமர்ந்திருந்தது.

 

“ஹேய்! மங்கி உனக்கு என்னைப் பார்த்தால் எப்படி இருக்கு? நான் என்ன குப்பைத் தொட்டியா? மரியாதையாக போயிடு என் இழை வர்ற நேரம் வீணா என்னை டிஸ்டர்ப் பண்ண அப்புறம் நானும் குரங்காக மாறிடுவேன் பார்த்துக்கோ” அந்த குரங்கு தன் மேல் போட்ட குப்பைகளை எல்லாம் தட்டி விட்டபடியே ஒரு விரல் நீட்டி அந்த குரங்கை எச்சரித்தவன் சற்று தள்ளி வேறு ஒரு மரத்தின் கீழ் நின்று கொள்ள அந்த குரங்கோ மீண்டும் அவன் மாறி சென்று நின்ற அந்த மரத்தின் கிளையில் வந்து அமர்ந்து கொண்டு மறுபடியும் அவன் மேல் சருகுகளை அள்ளிப் போடத் தொடங்கியது.

 

“மங்கிப் பயலே! எவ்வளவு தெனாவெட்டு உனக்கு? உன்னை!” ஆதவன் தன் காலின் கீழ் கிடந்த சிறு பைனஸ் மர காய்களை அந்த குரங்கின் மேல் தூக்கிப் போட அதில் ஒன்றிரண்டு காய்கள் அந்த குரங்கின் கையிலும் கால்களிலும் பட்டுக் கீழே விழ கோபம் கொண்ட அந்த குரங்கு அவனை நோக்கி சீற்றத்தோடு பாய்ந்து வந்தது.

 

“அய்யய்யோ! நான் வைத்த குறி சரியா படும்னு நான் எதிர்பார்க்கவில்லை மங்கி ஸார் என்னை விட்டுடுங்க மங்கி ஸார்!” அந்த காடே அதிரும் படி சத்தமிட்ட வண்ணம் ஆதவன் பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடத் தொடங்க அவனது நேரமோ என்னவோ அந்த நேரத்தில் அந்த காட்டுப் பாதையில் யாரும் இருக்கவில்லை.

 

குரங்கின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்த இடத்திலேயே மீண்டும் மீண்டும் பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாக ஓடிக் கொண்டு நின்றவன் சற்று தொலைவில் இழையினி நடந்து செல்வதைப் பார்த்து விட்டு

“இழையினி மேடம்!” என்று சத்தமிட்டு கத்தியபடியே ஓடிச் செல்ல யோசனையுடன் சென்று கொண்டிருந்தவளுக்கு அந்த சத்தம் சரியாக கேட்கவில்லை.

 

“என் வாழ்க்கையில் முன்ன பின்ன இப்படி நான் ஓடியதே இல்லைங்க! ஏதாவது ஒரு பெரிய தப்பு பண்ணி ஆளுங்க விரட்டி வந்து அதற்காக ஓடியிருந்தாலும் பரவாயில்லை! ஆனா ஒரு குட்டி குரங்கு இரண்டே இரண்டு காயைத் தூக்கி போட்டதற்கு அப்படி விரட்டிடுச்சு! இதை நான் எங்கேன்னு போய் சொல்லுவேன் மேடம்?” ஆதவன் தன் தலையில் கை வைத்து கொண்டு சோகமாக இழையினியின் புறம் திரும்பி பார்க்க அவளோ வயிற்றைப் பிடித்து கொண்டு கண்களில் நீர் வரும் அளவுக்கு சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

அவளது சிரிப்போடு மலர்ந்து போய் இருந்த முகத்தை பார்த்து ஆதவனுக்கும் இதழ்கள் புன்னகையில் விரிய சிறிது நேரம் அவளையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டு அமர்ந்திருந்தான்.

 

காலை சூரியனின் ஒளி அவள் முகத்தில் பட்டுத் தெறிக்க அவள் முகத்தில் அரும்பியிருந்த வியர்வை துளிகளும் அந்த சூரிய கதிர்களின் தாக்கத்தில் தங்கத்தைப் போன்று ஒளி வீச மொத்தத்தில் அவள் முகம் தங்கத்தைப் போன்று ஒளி வீசிக் கொண்டிருந்தது.

 

“இழை!” ஆதவனின் குரல் கேட்டு சிரித்துக் கொண்டே அவனைத் திரும்பிப் பார்த்தவள் புன்னகையோடு அவனைப் பார்த்து கேள்வியாக தன் புருவம் உயர்த்த 

 

கண்களை மூடி ஒரு முறை தன் தலையை அழுந்தக் கோதிக் கொண்டவன் அவள் விழிகளை நேருக்கு நேராக பார்த்து

“நான் கௌசிக்கின் மாமாவோட பையன் பொன் ஆதவன்!” என்று கூற அத்தனை நேரம் தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்தவள் சட்டென்று தன் புன்னகை மறைய அவனை வெறித்து பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

“இழையினி நான்”

 

“ப்ளீஸ் எதுவும் பேச வேண்டாம்!” ஆதவனைப் பார்த்து வேண்டாம் என்று தன் கையை காட்டியவள் எழுந்து சிறிது தூரம்  தள்ளிச் சென்று மறுபுறம் திரும்பி நின்று தன் நெற்றியை நீவி விட்டபடியே நின்றாள்.

 

“இழையினி இப்படி நான் சொல்ல வர்றதை முழுமையாக கேட்காமல் இருந்தால் எப்படி? என்னைப் பேச வரச் சொல்லி தானே இன்னைக்கு இங்கே வரச் சொல்லி இருந்தீங்க இப்போ எதுவும் பேச வேண்டாம் என்று சொன்னால் என்ன அர்த்தம்?” ஆதவன் அவள் நின்று கொண்டிருந்த புறமாக வந்து நின்று கேள்வியாக அவளை நோக்க 

 

கண்கள் கலங்க அவனை நிமிர்ந்து பார்த்தவள்

“நான் இப்போ தான் என் வாழ்க்கையில் நடந்த தேவையில்லாத விடயங்களை எல்லாம் மறந்து கொஞ்சம் பழைய நிலைக்கு மாறிட்டு வர்றேன் இப்போ போய் அந்த விடயங்களை திரும்பவும் பேச நான் விரும்பல நீங்க கௌசிக் பற்றித் தான் பேச வந்தீங்கன்னா இனிமேல் என்னை தயவுசெய்து சந்திக்க வேண்டாம் அவர் அவருக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு போயிட்டாரு அது என்னால கெட்டுப் போக வேண்டாம்” இரு கரங்களையும் கூப்பி கெஞ்சுதலாக கூற 

 

அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவன்

“நான் இப்போ உங்க கிட்ட பேச வந்தது கௌசிக்கைப் பற்றியோ, உங்களைக் கஷ்டப்படுத்தும் விடயங்களைப் பற்றியோ இல்லை நான் எப்படி உங்க வாழ்க்கையில் சம்பந்தப்பட்டேன்னு சொல்லுவதற்காகத் தான் அவனைப் பற்றி சொன்னேனே தவிர அந்த பழைய விடயங்களை பற்றி பேசி உங்களை காயப்படுத்துவதற்காக இல்லை நான் உங்க கிட்ட பேச நினைத்து வந்தது கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு முன்னர் நடந்த உங்களுக்கே தெரியாத புதிய விடயங்களை பற்றி!” என்று கூறவும் இழையினி குழப்பமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

“நீங்க என்ன சொல்லுறீங்க? எனக்கு எதுவுமே புரியல!” 

 

“இதுவரைக்கும் உங்க வாழ்க்கையில் உங்க பக்கத்தில் என்ன நடந்தது என்று தான் உங்களுக்கு தெரியும் ஆனால் உங்களுக்கே தெரியாமல் உங்க வாழ்க்கையில் ஒரு சின்ன மூலையில் நான் இருந்து இருக்கேன் அந்த சின்ன மூலையில் இருந்து நான் செய்த ஒரு விஷயம் தான் இன்னைக்கு உங்களையும் என்னையும் இங்கே இந்த இடத்தில் இப்படி நின்று பேச வைத்து இருக்கு முதலில் நான் என்னைப் பற்றி சொல்லிடுறேன் அதற்கு அப்புறம் நான் எப்படி, எதற்காக உங்க வாழ்க்கையில் வந்தேன்? இரண்டரை வருஷமாக நான் எதற்கு உங்களைத் தேடுனேன் எல்லாவற்றையும் சொல்லிடுறேன் அதற்கு அப்புறம் உங்க முடிவு என்னன்னு பார்க்கலாம் ஆனா என்னோட முடிவு எப்போதும்…”

 

“என்…என்ன முடிவு?”

 

“கடைசியில் சொல்லுறேன்” என்று கூறிய ஆதவன் இழையினியைப் பார்த்து கீழே அமரும் படி சைகை செய்ய அவளோ அவனையே யோசனையுடன் பார்த்து கொண்டு அமர்ந்து கொண்டாள்.

 

“என்னோட பேரு பொன் ஆதவன் அது உங்களுக்கு முன்னாடியே தெரியும் என்னோட அப்பாவோட பேரு தமிழ்ச்செல்வன் அம்மா பேரு வள்ளியம்மை எங்களுக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கத்தில் சோலையூர் கிராமம் ஐந்து தலைமுறைகளாக நாங்கள் ஜமீன்தார் வம்சமாக இருந்தோம்னு எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாங்க காலம் மாற மாற மழை, தண்ணீர் இல்லாமல் வேளாண்மை எல்லாம் கெட்டுப் போச்சு என்ன செய்வதென்று தெரியாமல் வேறு வழி தெரியாமல் ஊரில் இருந்த சொத்து, நிலங்களை எல்லாம் விற்று விட்டு சென்னையில் வந்து குடியேறிட்டோமாம் அப்போ எனக்கு இரண்டு வயதாம் 

 

சென்னைக்கு வந்து ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து என்னை எங்க அப்பா படிக்க வைத்தாங்க எங்க அப்பா படும் கஷ்டத்தை பார்த்து பார்த்தே அவருக்கு ஏதாவது பெரிதாக பண்ணணும்னு எனக்கு ஆசை ஒரு வழியாக தட்டுத்தடுமாறி படித்து முடித்து எஞ்சினியரிங் முடித்தேன் படித்து முடித்த கையோடு மலேஷியாவில் வேலை கிடைத்தது நல்ல சம்பளம் மனதுக்கு பிடித்த வேலைன்னு மூணு வருஷம் வீட்டுக்கு வராமல் அங்கேயே இருந்துட்டேன் கொஞ்சம் கொஞ்சமாக நாங்களும் பழையபடி ஜமீன்தார் பரம்பரை நிலைமைக்கு வரலேன்னாலும் ஒரு நடுத்தர நிலைக்கு எங்களை உயர்த்திகிட்டோம் 

 

எல்லாம் சரியாக போயிட்டு இருந்தது அப்படியிருக்கும் போது தான் ஒரு நாள் எங்க அப்பா கிட்ட இருந்து போன் வந்தது அவரோட தங்கச்சி பையன் அதாவது என் அத்தை பையன் ஒரு வேலை விஷயமாக மலேஷியா வர்றான்னு சொன்னாங்க நான் சின்ன வயதில் இருக்கும் போதே அத்தை அவங்க வீட்டுக்காரரோட தன்னோட பங்கு சொத்தை எல்லாம் எழுதி வாங்கிட்டு போனதாக எங்க அப்பா சொல்லி இருந்தாங்க இப்போ திடீர்னு இத்தனை வருஷம் கழிச்சு அவங்க மறுபடியும் நம்மளைத் தேடி வந்து இருக்காங்கன்னு சொல்லவும் நானும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளல நம்ம குடும்பம் தானேன்னு விட்டுட்டேன் 

 

அதற்கு அப்புறம் அப்பா எனக்கு போன் பண்ண அந்த நாளில் இருந்து சரியாக ஒரு வாரம் கழித்து கௌசிக் மலேஷியா வந்தான் நானும் எந்த பிரச்சனையும் இல்லாமல் அவனை என் கூடவே இரண்டு மாதம் அவன் ப்ராஜெக்ட் முடியும் வரை தங்க வைத்து இருந்தேன் அப்போ தான் அவன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்த விடயத்தை பற்றி சொன்னான் பொண்ணோட பேரு, ஊர் எல்லாம் சொன்னான் பட் போட்டோ காமிக்கல நானும் கேட்கல தலைக்கு மேல் வேலை இருந்ததால் அதற்கு அப்புறம் நாங்க ரெண்டு பேரும் சரியா பேசி கிட்டது கூட இல்லை அந்த இரண்டு மாத வேலை முடிந்து அவன் திரும்பி சென்னைக்கு போகும் போது நானும் அவன் கூட வரணும்னு சொல்லி கட்டாயப்படுத்தி என்னை சென்னைக்கு கூட்டிட்டு வந்தான் அந்த பயணத்திற்கு பிறகு தான் என் வாழ்க்கையை மொத்தமாக மாறிப் போனது அவனால் தான் என் வாழ்க்கையே மொத்தமாக மாறப் போகிறது என்று அப்போ எனக்கு தெரியல”

 

“அ.. அவங்க என்ன பண்ணாங்க?” இழையினி தயக்கத்துடன் ஆதவனைப் பார்க்க அவளைப் பார்த்து சிறு புன்னகை சிந்தியவன் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் தன் வாழ்வில் நடந்த விடயங்களை எல்லாம் கூறத் தொடங்கினான்…….