alaikadal-21.2

alaikadal-21.2

அலைகடல் – 21.2

ஆரவ் அலப்பறையை பதிலின்றி முறைத்து பார்த்தவளிடம், “என்னன்னு கேட்கமாட்டியா? சரி நானே சொல்றேன். புருஷோத்தமன் இதெல்லாம் பண்ணுறதுக்கு முக்கிய காரணமே பதவி, சொத்து எல்லாம் ஒட்டுமொத்தமா அவரோட ஒரே மகனுக்கு வரணும்ன்னுதான். அந்த ஒரே மகன் யாரு தெரியுமா? தி கிரேட் அர்ஜுன்” என்றான் மீண்டும் வஞ்சப்புகழ்ச்சியில்.

அதில் யோசனையாய் பார்த்தவளிடம், “யெஸ் யெஸ் உனக்கு உதவி பண்றேன்னு உபத்திரவம் பண்ணுன அதே அர்ஜூன்தான்… வாழ்க்கை எவ்ளோ விசித்திரமானது பார்த்தியா? பதவி ஆசையில் என்னையும் எங்கம்மாவையும் விட்டுட்டு வேறு கல்யாணம் பண்ணுன அந்தாளோட மகனும் அவரோட தங்கச்சி புருஷன் பதவி ஆசையால அவரைவிட்டு பிரிஞ்சிட்டான் இல்ல இல்ல பிரிக்கப்பட்டிருக்கான்” வெகுவாய் சிலாகித்தான் ஆரவ்.

அவளும் அதையேதான் எண்ணினாள். ஆனால் அவனின் சிலாகிப்பு நாராசமாய் இருக்க, “நீயும் அவரு மகன்தானே? எப்படிப் பார்த்தாலும் அவருக்கு வெற்றிதான்” என்றாள் அவனின் சிலாகிப்பை முறியடிக்கும் நோக்கில்.

“கண்டிப்பா கண்டிப்பா… ஆனா அது அவருக்கு தெரியாதே! மனுஷன் எவனோ ஒருத்தன் தோற்கடிச்சிட்டான்னு பைத்தியம் மாதிரி சுத்துறதா கேள்விப்பட்டேன். லீவ் இட் அதைப்பத்தி எதுக்கு தேவையில்லாம பேசிட்டு. கம் பாக் டூ அவர் மேரேஜ்… நெஸ்ட் வீக் பண்ணிக்கலாமா?” என்றான் இயல்பாய். 

நொடிக்கு நொடி உணர்ச்சியை மாற்றுபவன் மீது என்றும் இல்லாத திருநாளாய் சற்று பயமாய் இருந்தது. 

ஆரவ் அங்கே இங்கே பிட்டு பிட்டு சொன்னதை எல்லாம் கோர்த்து தெளிவாய் இல்லையென்றாலும் ஓரளவு அவனின் கடந்தகாலம் புரிந்தது பூங்குழலிக்கு. ஆனால் தன்னை ஏன் திருமணம் செய்துக்கொள்ள நினைக்கிறான் என்றுமட்டும் புரியவில்லை. 

அதையே வாய்மொழியாகவும் கேட்டாள், “எனக்கு ஒன்னுமட்டும் புரியவேயில்ல… எப்படி நான் உன்னை கல்யாணம் பண்ணுவேன்னு நினைக்குற? இத்தனை விஷயம் என்கிட்ட சொல்லவே தேவையில்லை ஆனா சொல்லிருக்க. இப்போ நான் மறுத்தால் உன் அடுத்த மூவ் என்னவா இருக்கும்?” என்றாள் பூங்குழலி. 

அதில் புருவத்தை உயர்த்திய ஆரவ், “சோ ஸ்மார்ட் பூங்குழலி… நான் கூட உன்னைலாம் எப்படி சப் கமாண்டர் ஆக்குனாங்க என்று முன்ன ஆச்சரியப்பட்டிருக்கேன் பரவால்ல உனக்குள்ளயும் ஏதோ இருக்குது” சுத்தி வளைத்தவனை எரிச்சலுடன் நோக்கினாள் பூங்குழலி. உள்ளுக்குள் எரிமலை வெடித்துச் சிதறினாலும் அவன் நோக்கம் முழுதாய் தெரியும்வரை அதை அடக்கிவைத்தாள். 

“சிம்பிள்… உன் தம்பி இப்போ என் கஸ்டடிலதான் இருக்கான். நீ இதையெல்லாம் வெளிய சொன்னாலோ இல்லை என்னை மேரேஜ் பண்ணலைன்னாலோ நேரா நானே அவன் குடும்பத்துக்கிட்ட போய் அவனை ஒப்படைச்சிட்டு வந்திருவேன். அவன் மேஜர் ஆக மூணு வருஷம் இருக்கு அதுக்குள்ள என்ன நடந்தாலும் நான் பொறுப்பு இல்லை” இதைக்கூறவே என்னமோ செய்ததுதான், முயன்று மிரட்டினான் ஆரவ்.

அவனை அங்கு ஒப்படைத்தால் பின் அவன் உயிருக்கு உத்திரவாதம் ஏது? புருஷோத்தமன் சும்மா இருப்பாரா கூடவே அர்ஜுன் வேறு. அவன் எப்படிப்பட்டவன் என்றுதான் அவளிற்கு ஏற்கனவே தெரியுமே. 

“அவன் மேல உண்மையா பாசம் வச்சிருக்கியோன்னு ஒருநொடி என்றாலும் சந்தேகப்பட்டேன். எவ்ளோ பெரிய தப்பு அது” ஆரவ் கூறியதை ஜீரணிக்கமுடியாமல் நெஞ்சம் வரை கசந்துவழிந்தது பூங்குழலிக்கு. அதில் கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டாள் அவள். 

அதில் ஆரவ்விற்கு தவிப்பாய் இருந்தது. ‘பேசாமல் அவளை விட்டுவிடுவோமா?’ என்று ஒருமனம் நினைக்க, காதல் கொண்ட மறுமனமோ, ‘இப்போது விட்டுவிட்டால் அவள் வேறு எப்போதும் கிடைக்கமாட்டாள். விடாதே… பிடித்துக்கொள்’ என்றது.

அதை ஏற்றவன், “சீக்கிரம் முடிவெடு பூங்குழலி. திரும்ப மயங்கி விழுந்துறாத… பேருதான் பெத்த பேரு பூங்குழலின்னு ஆனா வானதி மாதிரி பொசுக்கு பொசுக்குன்னு மயங்கி விழுகுற” அவளை அதிகம் துன்பத்தில் மூழ்கவிடாமல் திசைதிருப்பினான் ஆரவ். ஆனால் திசை திருப்பக்கூடிய துன்பமா இது?

கோபப்படுவாள் என்று ஆரவ் எதிர்பார்க்க அவளோ வேறொன்று கூறினாள், “உன் இஷ்டத்துக்கு என்னை ஆட்டிவைக்க முடிவுபண்ணிட்ட அப்படிதானே? சத்தியமா என்னால இது முடியாது. இப்படி நடக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா அன்னைக்கே செத்திருப்பேன்… ஒன்னு கேட்டாச்சுன்னா அடுத்து எதுக்கெல்லாம் இதைவச்சி பிளாக் மெயில் பண்ணுவியோ யாருக்கு தெரியும்!” என்றவள் பின்,

“இப்போ என்ன? உனக்கு உன் பேர் கெடக்கூடாது, பதவி போகக்கூடாது அவ்ளோதானே? கொஞ்சநாள் இப்படியே விட்டுரு. நான் வேலைக்கு போனதும் வேலையை விடமாட்டேன்னு சொன்னதால பிரிஞ்சிட்டோம் என்று சொல்லிரலாம். பிரச்சனை முடிஞ்சது” சுலபமாய்தான் தீர்வு சொன்னால் பூங்குழலி ஆனால் அவன் எதிர்பார்ப்பது இதுவல்லவே!

எந்த ஆண்மகனுக்குதான் தான் உயிராய் விரும்பும் பெண் உன்னை திருமணம் செய்வதற்கு பதில் செத்துவிடலாம் என்றால் பிடிக்கும். வலித்தது… ஆழமாய் எங்கோ வலித்தது ஆரவ்விற்கு.

அதில் அபரிதமாய் ஆத்திரம் பெருக, “ஏய் உன்கிட்ட நான் ஐடியா கேட்டேனாடி? கேட்டேனா? பெருசா பேசிட்டே போற… கல்யாணம் பண்ணுற, லீவ் முடிஞ்சதும் வேலைக்கு கிளம்புற அவ்ளோதான். இடையில எனக்கு எதிரா வேந்தன்கிட்ட உண்மை சொல்றேன், வெளியபோய் கிழிக்கிறேன்னு போன… ரெண்டு பேரையும் போட்டுத்தள்ளிட்டு பழிய எதிர்க்கட்சி மேல போட்டுட்டு போயிட்டே இருப்பேன் பார்த்துக்கோ” இரைந்ததில் மேலும் கீழும் மூச்சுவாங்க பூங்குழலியை உறுத்து விளித்தான் ஆரவ்.

பூங்குழலி, “சோ… இதான் உன் உண்மையான பிளான் இல்லையா? உனக்கு எதிரா நிக்கிற என்னை கொன்னமாதிரியும் ஆச்சு அதேசமயம் எதிரியை பழிவாங்குற மாதிரியும் ஆச்சு. எப்படியென்றாலும் கொல்லத்தான் போற அதுக்கு இப்போவே கொன்னுரு” பேசிக்கொண்டிருந்தவள் அடுத்த நொடி ஏற்கனவே கைப்பற்றியிருந்த கத்தியுடன் ஆரவ்வின் கழுத்தை குறிவைத்து பாய்ந்தாள். 

எப்பொழுது கத்தியை எடுத்தாளோ தெரியவில்லை. ஆனால் அவளின் ஒவ்வொரு அசைவையும் அவதானித்துக் கொண்டிருந்தவனுக்கு தெரியாதா அவள் கத்தியை கைப்பற்றி மறைத்தது? இருந்தாலும் தெரியாததுபோல் சற்று எச்சரிக்கையுடனே பேச, பூங்குழலி பாயவும் சட்டென்று பின்னால் நகர்ந்து பெண்ணவளின் கையை முறுக்கி கத்தியை தட்டிவிட்டவன் அவளைத் தன்னுடன் சேர்த்தணைத்தான்.

மற்றொரு நேரம் என்றால் அங்கே ஒருதரமான அடிபிடி சண்டையோ கராத்தே சண்டையோ நிகழ்ந்திருக்கும். உடற்சோர்வில் இவ்வளவு செய்ததே பெரிதாய் இருக்க, அவனிடம் மாட்டிக்கொண்டதும் அவளின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது.

இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற விரக்தியும் சேர, சிங்கத்தின் மரணபிடிக்குள் சிக்கிய புள்ளி மானாய் தன்னை உணர்ந்தாள் பூங்குழலி. பின்னே அசையக்கூட முடியவில்லையே.

தன்னை மிரட்டியதும் இல்லாத பொறுமையை இழுத்துபிடித்து பேசியவளுக்கு அவன் தன்னோடு சேர்த்து தம்பியையும் கொலை செய்வேன் என்றதும் ‘அதற்கு நீ உயிருடன் இருக்கவேண்டுமே’ என்றெண்ணி சடுதியில் கொல்ல முடிவெடுத்தாள் பூங்குழலி. என்ன மிஞ்சிப்போனால் தான் ஜெயிலுக்கு போகவேண்டியிருக்கும்… வேந்தனாவது தப்பித்துவிடட்டும் என்று நினைக்க இப்போதோ அவனின் கைச்சிறையில் மாட்டிக்கொண்டாள்.

தன் முகத்தருகே நெருக்கமாய் நிற்பவனை உணரவேயில்லை அவள். இனி என்ன செய்யப்போகிறான் இவன் என்றஞ்சி உள்ளுக்குள் உதறிக்கொண்டிருக்க சற்றும் எதிர்பார்க்காத விதமாய், 

“செம சீன்ல… நம்ம கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கப்போகுதுங்குற சாம்பிள்தான் இப்போ நீ காமிச்சது. வெரி இன்ட்ரெஸ்டிங் பூங்குழலி” என்றான் ஆரவ். 

அது அவளை வெகுவாய்ச் சீண்ட, “ஆமா… நீ என் பக்கத்துல இருக்குற ஒவ்வொரு நொடியும் உன்னை கொல்ல முயற்சிப்பேன் பரவால்லையா?” என 

“அப்போ கல்யாணத்துக்கு ஓகேவா?” என்று அவன் மடக்கிய பின்பே மறைமுகமாய் தான் சம்மதித்தது தோன்ற, “ஷிட்… உனக்கென்ன பைத்தியமா? விடு… விடு என்னை” என்று நெஞ்சில் கைவைத்து அவனின் உடும்புப்பிடியில் இருந்து விலகினாள்.

ஆரவ், “உனக்கு உன்னையோ வேந்தனையோ ஏதாவது செய்திருவேன்னு பயம்ன்னா உனக்கொரு வாக்கு கொடுக்கிறேன். இந்த உண்மை உன்கிட்ட இருந்து வெளிய போகாதவரை, என் உயிரோட நீ விளையாடாதவரை நான் உங்களை ஒன்றும் பண்ணமாட்டேன். இதுல ஒன்னு தவறினாலும் நான் வேற முடிவு எடுக்கவேண்டிவரும் பூங்குழலி. யுவர் டைம் இஸ் ஓவர். சே எஸ் ஆர் நோ ஒன்லி” என்றான் இதுவே கடைசிகட்ட பேச்சென்று உணர்த்தியவாறு.

வேகவேகமாக யோசித்தவள், “எஸ்… பட் என் கண்டிஷனுக்கு ஒத்துகிட்டாதான் இல்லை நோதான். எங்க உயிரே போனாலும் சரி நோதான்” என்றாள் தீவிரமாய். 

“உனக்கு கண்டிஷன் போடுற ரைட்ஸ் நான் குடுத்தேனா என்ன? தாடையை தடவியபடி கேட்டவன், “சரி நீ சம்மதிச்சத்துக்கு பதிலா இதை சொல்ற உரிமையை உனக்கு தரேன்” என்றான் திமிராய். உயிரை வைத்தே மிரட்டுபவளிடம் உள்ளே கடுகடுவென்று வந்தது. 

“மேரேஜ் முடிஞ்சதும் உன் பிளாக் மெயிலோட வேலிடிட்டியும் முடிஞ்சிரும். திரும்ப திரும்ப அதையே வச்சி வேற எதுக்காகவும் என்னை மிரட்டுற வேலையெல்லாம் வச்சிக்கக்கூடாது” என்றாள் பூங்குழலி. 

எதை நினைத்துச் சொன்னாளோ அதனை தெளிவாய்ப் புரிந்துக்கொண்டவன் அடக்கப்பார்த்தும் முடியாமல் சிறுசிரிப்போடு, “அவ்ளோ சீப் நான் இல்லை பயப்படாத. மேரேஜ் பண்ணிட்டு என் வீட்டுல… என் ரூம்ல… உன் இஷ்டத்திற்கு… நீ இருக்கலாம்” ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானமாய் உச்சரித்தான் ஆரவ். 

“அதைத்தானே முடியாதுன்னு சொல்றேன்” என்று முரண்டவளை

“உன்னை என்ன என் கூட வாழ வா என்றா கூப்பிட்டேன். என்ன ஒரு மாசம் இருப்பியா? அங்க ஒரு ரூம்மேட் மாதிரி தங்கிட்டு போ… ஒரு சின்ன சந்தேகத்தைக் கூட நான் யாருக்கும் வரவிடமாட்டேன் முக்கியமா உன் அருமை தம்பிக்கு” என்றவனிடம் 

“இதையெல்லாம் எப்படி நம்புறது? இப்போ சரின்னு சொல்லி பின்ன மாத்தி பேசமாட்ட என்று என்ன நிச்சியம்?” மதில் மேல் பூனையாக மிகவும் தடுமாறினாள் பூங்குழலி.

சாகவும் முடியாமல் பிழைக்கவும் முடியாமல் நாட்டாத்தில் தொங்குவது போல் மனதினுள் தவிப்பாக இருந்தது. தப்பித்து செல்லலாம் என்றாலும் வேந்தனை இவனிடம் விட்டுச்செல்ல முடியுமென்று தோன்றவில்லை. ஒருவேளை தன் மீது உள்ள துவேசத்தில் அவனை எதுவும் செய்துவிட்டால்? அதையும் யோசிக்க வேண்டி இருந்ததே!

அவளின் கலக்கத்தை நீக்கும் பொருட்டு, “என் அம்மா மேல சத்தியம் பண்றேன் பூங்குழலி. நீ ஒழுங்கா இருந்தா உனக்கு கொடுத்த வாக்கை நான் கண்டிப்பா காப்பாற்றுவேன். என்னை நம்பலாம்” என்றான் தீர்க்கமாய்.

அவன் மீது மருந்துக்கும் நம்பிக்கை வராவிட்டாலும் அவன் தாய்மீது வைத்திருந்த பாசத்தை சற்றுமுன் உணர்ந்திருந்தாளே! தாயிற்காக இத்தனை செய்தவன் அவர் மீது வைத்த சத்தியத்தை காப்பாற்றமாட்டானா என்று தோன்ற அரைகுறை மனதுடன் சம்மதித்தாள் பூங்குழலி. 

வாய்ப்புக் கிடைத்தால் எப்படியேனும் இங்கிருந்து வேந்தனையும் அழைத்துக்கொண்டு தப்பித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் அவள் இருக்க,

‘எப்படியாவது இங்கிருந்து நீ வேலைக்கு போவதற்குள் என் மனதை உனக்கு கொடுத்து உன்னுடையதை நான் எடுத்துக் கொள்வேன் பூங்குழலி. அதுக்கப்புறம் நீயே நினைச்சாலும் உன்னை பிரியவிடமாட்டேன். என்கூடவே உன்னை எப்போதும் வச்சிப்பேன்’ மனதில் உறுதியாக புது நம்பிக்கை பிறக்க, அவளுடன் தன் வீட்டிற்கு புறப்பட்டான் ஆரவ். 

அழகே உன்னை பிரிய மாட்டேன்

உன்னை பிரிஞ்சி வாழ மாட்டேன்

அது சொர்க்கம் என்றாலும் நரகம் என்றாலும் கூடவே வருவேன்

உன்னோடு சேர கூடி வாழ உசுர கூட விடுவேன்…

இருவரின் நம்பிக்கையும் நேர்எதிராய் இருக்க, ஒன்று மட்டுமே நிறைவேறும் வாய்ப்பிருக்கையில் வெற்றி பெறப்போவது யாரின் நம்பிக்கையோ?

அலைகடல் ஆர்ப்பரிக்கும்…

Leave a Reply

error: Content is protected !!