உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 24 [Final]

அசோகன் சொன்ன வார்த்தைகளை இழையினி இன்னமும் முழுமையாக உள் வாங்கிக் கொள்ள முடியாமல் அதிர்ச்சியடைந்த நிலையிலேயே நிற்க கீழே விழுந்த பொருட்களை எல்லாம் எடுத்து மீண்டும் அவள் கையில் வைத்த அசோகன்

“இழையினி என்னம்மா ஆச்சு?” என்று வினவவும்

 

பிரமை பிடித்தாற் போல அவரைத் திரும்பி பார்த்தவள்

“நீங்க.. நீங்க சொல்றது நிஜமா தாத்தா? நிச்சயதார்த்தம் எ..எனக்… எனக்கா?” தடுமாற்றத்துடனேயே அவரிடம் கேட்டாள்.

 

“ஆமாம்மா! உண்மையாக தான்! ஆனா நிச்சயமாக இந்த மாப்பிள்ளையை நீ வேண்டாம் என்று சொல்லவே மாட்ட! அந்தளவுக்கு உனக்கு பிடித்த பையன் தான் மாப்பிள்ளை!” அசோகன் அவர் பாட்டிற்கு பேசிக் கொண்டே போக அவை எதுவும் இழையினியின் செவிகளை சென்றடையவில்லை தனக்கும் இன்று நிச்சயதார்த்தம் என்ற ஒரே ஒரு வசனம் மட்டுமே அவளை சுற்றி சுற்றி வந்து கொண்டேயிருந்தது.

 

‘வேண்டாம்! எனக்கு இந்த நிச்சயதார்த்தம் வேண்டாம்! ஆதவன் இடத்தில் இன்னொரு நபரை நிச்சயமாக என்னால் கற்பனை கூட செய்ய முடியாது! வேண்டாம் என்று சொல்லு இழை! சொல்லிடு! இதற்கு மேலும் நீ அமைதியாக இருக்க கூடாது! உனக்காக நீ தான் பேசணும்!’ அவளது மனசாட்சி அவளைப் பேசச் சொல்லி தூண்ட 

 

தன் கையிலிருந்த ஆடைப்பெட்டியை மீண்டும் அசோகனின் கையில் வைத்தவள் 

“எனக்கு இந்த நிச்சயதார்த்தம், கல்யாணம் எதுவும் வேண்டாம்!” உறுதியான குரலில் அவர் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து கொண்டே கூறினாள்.

 

“என்னாச்சு இழைம்மா? இந்த நிச்சயதார்த்தம் ஏன் வேண்டாம் என்று சொல்லுற? இன்னும் என் மேல் கோபமா?”

 

“கோபம் இல்லை தாத்தா! சத்தியமாக கோபம் இல்லை! வருத்தம் தான் இருக்கு உங்களை நினைத்து! இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி உங்க முடிவை அடுத்தவங்க மேலே திணிக்க போறீங்க தாத்தா? சொல்லுங்க! இந்த இரண்டு வருடத்தில் கொஞ்சமாவது மாறி இருப்பீங்கன்னு நம்புனேன் ஆனா நீங்க மாறவே இல்லை! ஆதவன் நடந்த விடயங்களை எல்லாம் சொன்ன போது உங்களை கொஞ்சம் மன்னித்து பழையதை மறந்து திரும்பி பார்க்க நினைத்தது என்னவோ உண்மைதான்! இந்த இரண்டு வருடத்தில் நீங்க மாறி இருக்கக்கூடும் என்று நினைத்து இருந்தேன்! ஆனால் அன்னைக்கு நீங்க மண்டபத்தில் வைத்து ஆதவனை கோபமாகப் பேசும் போதே நான் அந்த நம்பிக்கையில் பாதி நம்பிக்கையை இழந்துட்டேன் இப்போ மீதியிருந்த கொஞ்ச நம்பிக்கையும் போயிடுச்சு! ஏன் தாத்தா ஏன்? நீங்க பட்ட கஷ்டம் நாங்க படக்கூடாது என்று நீங்க நினைக்கிறது சரி தான்! ஆனா அந்த விடயம் எங்களுக்கும் பிடிக்க வேண்டுமே தாத்தா!” 

 

“இல்லை இழைம்மா! நான்…”

 

“இப்போ கூட உங்களை கோபமாக பேச என்னால முடியல! இன்னும் அந்த பழைய விடயங்களை தூக்கி வைத்து இருக்கீங்களே என்று கவலையாக தான் இருக்கு தாத்தா!” ஒருவித இயலாமையுடன் அசோகனைப் பார்த்து கூறிய இழையினி தடுமாற்றத்துடன் அவர் காலடியில் அமர்ந்து கொண்டாள்.

 

“இழையினி!” அவளின் முன்னால் அமர்ந்து கொண்டு அவளது முகத்தை நிமிர்த்தி பார்த்த அசோகன்

 

“இப்படி மனது விட்டு பேசி என்னோடு இருக்கும் கோபத்தை வெளியே கொண்டு வர உனக்கு இவ்வளவு நாள் தேவைப்பட்டதாம்மா?” அவளது கண்களைத் துடைத்து விட்டபடியே கேட்கவும்

 

அவரது கலங்கிய கண்களையும், தோற்றத்தையும் பார்த்து உணர்ச்சி வசப்பட்டவள்

“தாத்தா!” என்றவாறே சிறு கேவலுடன் அவர் மேல் சாய்ந்து கொண்டாள்.

 

“உங்களுக்கு பிடிக்காததை செய்ய வேண்டும் என்று நான் ஒரு நாளும் நினைத்தது இல்லை இழைம்மா! சந்தர்ப்ப சூழ்நிலை இதற்கு முன் அப்படி நடக்க வைத்து விட்டது ஆனால் இனிமேல் அப்படி நடக்காதும்மா! நீ எனக்காக இங்கே திரும்பி வரலேன்னு எனக்கு ஒரு மாதத்திற்கு முன்பு செல்வத்தின் வீட்டில் வைத்து நீ வீட்டுக்கு வர அவசரப்படும் போதே தெரியும்! எதையோ மறைக்க அல்லது யாரையோ என்கிட்ட இருந்து தூரமாக்க தான் நீ அவ்வளவு அவசரப்பட்டேன்னும் எனக்கும் தெரியும்! உன் வாயால் அதை என் கிட்ட சொல்லுவ என்று தான் இந்த ஒரு மாதமும் நான் காத்திருந்தேன் ஆனா நீ என் கூடப் பேசவே இல்லையே! தப்பு பண்ணவன் திருந்தி வாழ தான் ஜெயிலில் கூட தண்டனை கொடுப்பாங்க அந்த ஜெயில் தண்டனையை விடவும் பெரிய தண்டனையை என் பொண்ணு கலையும், நீயும் எனக்கு கொடுத்துட்டீங்க! அதற்கு அப்புறமும் நான் மனது மாறாமல் இருந்தால் நான் மனுஷனாகவே இருக்க முடியாதேம்மா!” அசோகனின் கூற்றில் இழையினி குழப்பமாக அவரை நிமிர்ந்து பார்த்தாள்.

 

“உனக்கு இன்னும் குழப்பம் போகவில்லைன்னு எனக்கு நன்றாக புரியுது! சரி இதெல்லாம் நிச்சயதார்த்தம் முடிந்ததும் பேசலாம் முதலில் நீ போய் ரெடி ஆகிட்டு வாம்மா! எல்லோரும் வர ஆரம்பிச்சுட்டாங்க” என்று கூறியபடியே அசோகன் இழையினியின் தோள் பற்றி எழுப்பி அவள் கையில் மீண்டும் அந்த ஆடைப்பெட்டியைக் கொடுக்க அவரை விசித்திரமாக பார்த்தவள் அந்த பெட்டியை தன் கையிலிருந்து தூர விட்டெறிந்தாள்.

 

அவளது நடவடிக்கையில் அசோகன் அதிர்ச்சியாக அவளை நிமிர்ந்து பார்க்க சிறிதும் அச்சமோ, தடுமாற்றமோ இன்றி அவரைப் பார்த்து கொண்டு நின்றவள்

“நான் ஆதவனை விரும்புகிறேன்! நான் அவரைத் தான் கல்யாணம் செய்தும் கொள்வேன்! இத்தனை நாளாக இதை நானே புரிந்து கொள்ளல எப்போ நீங்க நிச்சயதார்த்தம் என்று பேச்சு எடுத்தீங்களோ அப்போவே முடிவு பண்ணிட்டேன் ஆதவனைத் தவிர வேறு யாரையும் என்னால் விரும்ப முடியாது இந்த நிச்சயதார்த்தம் முடிந்ததும் நானே இதை எல்லோர்கிட்டவும் சொல்லலாம் என்று இருந்தேன் ஆனா அதற்கிடையில் நீங்க இப்படி நிச்சயதார்த்தம் வரைக்கும் அவசரப்பட்டு வந்துட்டீங்க! இனியும் என்னால் நடிக்க முடியாது! 

 

ஆமா நீங்க சொன்ன மாதிரி உங்க கிட்ட இருந்து ஆதவனை தூரமாக்க தான் அன்னைக்கு அவசர அவசரமாக ஊருக்கு திரும்பி வரணும்னு பிடிவாதமாக இருந்தேன் அது மட்டுமில்லாமல் ஆதவனோட மனதைக் காயப்படுத்தி பேசிட்டு தான் அங்கே இருந்து நான் வந்தேன் மறுபடியும் என்னால் இன்னொரு இழப்பை தாங்க முடியாது என்று தெரிந்தும் அதை பண்ணேன் ஏன்னா நான் பிரச்சினையை எதிர்கொள்ள முடியாத கோழை! எனக்காக அன்னைக்கு அம்மா பேசுனாங்க எப்போதும் அவங்க நிழலிலேயே இருந்ததால் என்னவோ அவங்க என்னை விட்டு போனதற்கு அப்புறமும் என்னோட விருப்பங்களை, பிரச்சினைகளை தைரியமாக சொல்ல முடியாமல் நான் ஓடி ஒளியத் தொடங்கிட்டேன் 

 

ஆரம்பத்தில் நான் வாய் திறந்து என் பிரச்சினைகளை பேசியிருந்தால் நிறைய இழப்புகளை தடுத்திருக்கலாம் ஆனா அப்போ எனக்கு இந்தளவிற்கு தைரியம் இருக்கல எப்போ ஆதவனை விரும்ப ஆரம்பித்தேனோ அப்போ தான் இந்தளவிற்கு தைரியம் வந்து இருக்கு அது தான் உண்மை! எனக்கு ஆதவன் வேணும்! ஐ லவ் ஹிம்! ஐ லவ் ஆதவன்! ஐ லவ் ஆதவன்!” தன் மனதிற்குள் அத்தனை வருடங்களாக சேர்த்து வைத்திருந்த கோபம், கவலை, அன்பு, வெறுப்பு, காதல் என ஒட்டுமொத்த உணர்வையும் ஒன்றாக வெளிப்படுத்திய படியே சத்தமிட்டவள் தன் தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு நின்றாள்.

 

“இழை அவ காதலை சொல்லிட்டா! ஆதவன் இதைக் கேட்கத் தானே இத்தனை வருஷமா காத்துட்டு இருந்தீங்க? இப்போ சந்தோசமாக உள்ளே வாங்க!” என்றவாறே மதியழகன் சிரித்துக் கொண்டு இழையினியின் அருகில் வந்து நிற்க

 

 அவளோ

‘மதிண்ணா என்ன சொல்லுறாங்க?’ குழப்பத்துடனும், வியப்புடனும் தன் தலையில் இருந்த கையை எடுத்து விட்டபடியே அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

 

“அங்கே பாரு!” மதியழகன் அவளின் முகத்தை திருப்பி வாயில் புறமாக காட்ட அங்கே ஆதவன் தன் கைகள் இரண்டையும் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு புன்னகையுடன் நடந்து வந்து கொண்டிருந்தான்.

 

ஆதவனைப் பார்த்த அடுத்த கணமே முகமெல்லாம் சந்தோஷம் ஊற்றாக பெருக்கெடுக்க

“ஆதவன்!” என்ற கூவலோடு அவனை நோக்கி ஓடிச் சென்ற இழையினி ஒரு கணமும் தாமதிக்காமல் அவனை தாவி அணைத்துக் கொண்டாள்.

 

அவளது அந்த திடீர் அணைப்பில் சிறிது தடுமாறிய ஆதவன் கால் தடுக்கி அங்கிருந்த ஸோபாவின் மீது சரிய இழையினியும் அவன் மீதே சரிந்து விழ சூழ நின்ற அனைவரும் பதட்டத்துடன் அவர்கள் அருகில் வந்து நின்று கொண்டனர்.

 

தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இழையினி ஆதவனை இறுக அணைத்தபடி கண் மூடி இருக்க அவர்களை சுற்றி நின்றவர்களோ கேலியாக புன்னகைத்தபடி ஆதவனைப் பார்த்து கொண்டு நின்றனர்.

 

”அச்சோ இழை! எல்லோரும் நம்மளையே பார்க்குறாங்க” ஆதவன் மெல்லிய குரலில் இழையினியின் காதில் கூற 

 

“பரவாயில்லை யார் பார்த்தாலும் இனி எனக்கு பரவாயில்லை! இனி நான் உங்களை எதற்காகவும் இழக்க மாட்டேன் பெரிய தியாகி போல அன்னைக்கு போனில் பேசிட்டு வந்து இந்த ஒரு மாதமும் நான் பட்ட கஷ்டம் போதும் இனி நான் உங்களை பிரியவே மாட்டேன்” என்றவள் தன் கண்களை திறவாமலேயே அவனோடு மேலும் ஒன்றிக் கொண்டாள்.

 

“அப்போ இவங்க நிச்சயதார்த்தத்தை இப்படியே நடத்திடலாம் அப்பா! புதுவிதமாக இருக்கும்” மதியழகன் சிரித்துக் கொண்டே இளமாறனைப் பார்த்து கூற இழையினி சட்டென்று தன் கண்களை திறந்து கொண்டது மட்டுமின்றி சடாரென்று அவன் புறம் திரும்பி பார்த்தாள்.

 

“என்ன இது ஆளாளுக்கு நிச்சயதார்த்தம் நிச்சயதார்த்தம் என்றே பேசிட்டு இருக்குறீங்க? நான் தான் ஆதவனை விரும்புறேன்னு சொல்லுறேன் தானே? அதற்கு பிறகும் நிச்சயதார்த்தம் நடத்துவதைப் பற்றியே பேசிட்டு இருக்கீங்க?” இழையினி கோபமாக தன் இடுப்பில் கை வைத்து முறைத்து பார்த்தபடியே நிற்கவும் 

 

அவள் முன்னால் வந்து நின்ற தேன்மொழி

“நீ எல்லாம் எப்படி தனியாக ஒரு பேக்டரியை வைத்து இரண்டு வருடமாக பராமரித்து வந்தாயோ தெரியல! அப்போதிலிருந்து தாத்தாவும் சரி இப்போ மதி அத்தானும் சரி இவ்வளவு தூரம் சொல்லியும் உன் தலையில் ஒண்ணும் ஏறவே இல்லை! உனக்கு நிச்சயதார்த்தம் பண்ணணும்னா எதற்கு ஆதவன் இங்கே வரணும்? இவ்வளவு நேரம் உன்னைப் பேச விட்டு நாங்க எல்லாம் எதற்கு வேடிக்கை பார்க்கணும்? தாத்தா ஏன் உனக்கு பிடித்த பையன் தான் மாப்பிள்ளை என்கிற விஷயத்தை திரும்ப திரும்ப அழுத்தி சொல்லணும்?” அவளது தலையில் தட்டியபடியே கேட்க அப்போதுதான் அவள் அங்கே நடந்த விடயங்களை எல்லாம் நன்றாக உன்னிப்பாக யோசித்து பார்க்கத் தொடங்கினாள்.

 

அசோகன் அவளுக்கு நிச்சயதார்த்தம் என்று சொல்லி இருக்க அதைப் பற்றி மட்டுமே அவள் யோசித்து கொண்டிருந்ததால் என்னவோ இந்த விடயங்கள் எல்லாம் அவளுக்கு அப்போது சரியாக சிந்தையை சென்றடையவில்லை.

 

‘இதை எப்படி கவனிக்காமல் போனேன்?’ தன் மனதிற்குள் சிரித்துக் கொண்டே தன் தலையில் தட்டிக் கொண்டவள் அதே நேரம் குழப்பமாக ஆதவனின் புறம் திரும்பி தன் அடுத்த கேள்வியை கேட்க போக 

 

அதற்குள் அவள் வாயை மூடிய தேன்மொழி

“விட்டால் இவ இன்னைக்கு பூராவும் கேள்வியாக கேட்டு குடைவா! அதனால எல்லோரும் போய் நிச்சயதார்த்தத்திற்கு ரெடி ஆகுங்க! ஆதவன் அண்ணா நிச்சயதார்த்தம் முடிந்ததும் இவ கேள்விக்கு எல்லாம் நீங்களே பதிலை சொல்லிடுங்க!” என்றவாறே அவளை அங்கிருந்து இழுத்துக் கொண்டு செல்ல மற்ற அனைவரும் சிறு புன்னகையுடன் தங்கள் வேலைகளை கவனிக்க சென்றனர்.

 

எல்லோரும் அந்த இடத்தில் இருந்து சென்ற பின்னர் ஆதவனும், அசோகனும் மாத்திரம் அங்கே நின்று கொண்டிருக்க இருவரும் ஒருவரை ஒருவர் என்ன பேசுவது என்று தெரியாமல் பார்த்துக் கொண்டு நின்றனர்.

 

ஆதவன் சிறிது நேரம் அவரையே பார்த்துக் கொண்டு நின்று விட்டு அங்கிருந்து செல்லப் போக

“மாப்பிள்ளை! ஒரு நிமிஷம்” என்றவாறே அவன் முன்னால் வந்து நின்ற அசோகன்

 

“நான் உங்களை, உங்க மனதை ரொம்ப கஷ்டப்படுத்துற மாதிரி பேசி இருக்கேன் தயவுசெய்து அதையெல்லாம் மன்னித்து கொள்ளுங்க! வயதில் பெரிய ஆளாக இருந்தும் கூட இவ்வளவு நாளாக சரியாக மனிதனை மதிக்க தெரியாமல் இருந்திருக்கேன்! என்னை மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை!” அவனைப் பார்த்து தன் இரு கரங்களையும் உயர்த்த போக 

 

அவசரமாக அவரது கரங்களைப் பற்றி பிடித்துக் கொண்டவன்

“வயதில் பெரியவங்களோ, சின்னவங்களோ ஒருத்தருக்கு ஒருத்தர் தன்னை அறியாமல் தப்பு செய்வது சகஜம் தானே தாத்தா! எனக்கு உங்க மேலே ஆரம்பத்திலிருந்தே எந்த கோபமும் இல்லை ஏன்னா நீங்க அன்னைக்கு கோபப்படலேன்னா இன்னைக்கு எனக்கு இழையினி கிடைத்து இருக்க மாட்டாளே! அந்த வகையில் எனக்கு எப்போதும் உங்க மேலே தனிப்பாசம் உண்டு! அதனால் பழையதை நினைத்து இப்போ வரப் போகிற சந்தோஷத்தை இழந்து விடாமல் சந்தோஷமாக இருங்க தாத்தா!” என்று விட்டு அவரது கரங்களை ஆதரவாக அழுத்திக் கொடுத்து விட்டு சென்று விட அவரோ அவனை வியந்து போய் பார்த்து கொண்டு நின்றார்.

 

‘இந்த மாதிரி நற்குணங்கள் பொருந்திய ஒரு பையனை அவ்வளவு தூரம் மனது நோகும் படி பேசிவிட்டோமே! இப்படி ஒரு தங்கமான குணம் நிறைந்த பையன் தன் கணவனாக அமைய என்னுடைய பேத்தி இழையினி கொடுத்து வைத்தவள்!’ என்று தன் பேத்தியின் வாழ்க்கையை எண்ணி நிம்மதியும், பெருமிதமும் கொண்டவர் நிச்சயதார்த்த நிகழ்வுகளுக்காக உறவினர்கள் வருகை தருவதை பார்த்ததும் தற்காலிகமாக தன் சிந்தனைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அந்த நிகழ்வுகளை கவனிக்க தொடங்கினார்.

 

அந்த பிரமாண்டமான இல்லத்தின் விசாலமான ஹாலின் நடுவில் ஒரு புறம் மதியழகன் மற்றும் தேன்மொழி ஜோடியாக நின்று கொண்டிருக்க மறுபுறம் இழையினி மற்றும் பொன் ஆதவன் நின்று கொண்டிருந்தனர்.

 

இரு ஜோடிகளின் முகங்களிலும் சந்தோஷம் கூத்தாட, பெரியவர்கள் மற்றும் உறவினர்களின் ஆசிர்வாதத்தோடு இனிதாக அவர்களது நிச்சயதார்த்தம் நிறைவு பெற அதே சந்தோஷமான தருணத்தில் அவர்கள் திருமணத்திற்கான நாளும் குறிக்கப்பட்டது.

 

வெகு நாட்களுக்கு பிறகு அந்த செந்தமிழ் இல்லத்தில் ஆனந்தம் அலை பாய அன்று தான் அசோகனிற்கும் தான் செய்த தவறுகளுக்கு எல்லாம் மன்னிப்பு கிடைத்தது போல் இருந்தது.

 

அதன் பிறகு பெரியவர்கள் எல்லோரும் ஆளுக்கொரு வேலையில் மூழ்கி விட மதியழகனும், தேன்மொழியும் தங்களுக்கென்று ஒரு உலகத்தில் சஞ்சரிக்க தொடங்க இழையினி மாத்திரம் பதட்டத்துடனும், படபடப்புடனும் நின்று கொண்டிருந்தாள்.

 

ஆதவன் பலமுறை அவளது பதட்டத்திற்கான காரணத்தைக் கேட்டும் பதில் சொல்லாதவள் சிறிது நேரம் கழித்து சுற்றிலும் ஒரு முறை பார்த்து விட்டு அவனின் கை பிடித்து வேகமாக தங்கள் தோட்டப் பகுதிக்கு அழைத்துக் கொண்டு இல்லை இல்லை இழுத்துக் கொண்டு சென்றாள்.

 

“இழை! எங்கே போற? அங்கே தேடப் போறாங்க!” ஆதவனின் எந்த கருத்தும் தன் காதில் விழாததைப் போல அவனை அழைத்துச் சென்றவள் தோட்டத்தில் யாரும் இல்லாத ஒரு அமைதியான பிரதேசத்தில் அவனை நிற்கச் செய்து விட்டு தயக்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

“என்ன இழைம்மா?” ஆதவனின் ஒற்றை கேள்வியிலேயே அவன் மீது சாய்ந்து கொண்டவள்

 

“ஐ யம் ஸாரி ஆதவன்! நான் அன்னைக்கு அப்படி பேசி இருக்க கூடாது என்ன பண்ணுறதுன்னு தெரியாமல் அவசரப்பட்டு உளறி ஏதேதோ பண்ணிட்டேன் ஐ யம் ஸாரி! நான்…”என்று பேசிக் கொண்டிருக்கையிலேயே ஆதவன் சட்டென்று அவள் இதழ் மீது தன் கரம் கொண்டு மூடினான்.

 

இழையினி அவனது கரத்தை விலக்கப் போக அவளைப் பார்த்து வேண்டாம் என்று தலையசைத்தவன்

“என்னால சத்தியமாக முடியல இழை! நிச்சயதார்த்தம் தொடங்கிய நேரத்தில் இருந்து இப்போ வரைக்கும் இதே விஷயத்தை சரியாக அறுபத்தெட்டு தரம் சொல்லிட்ட! இது அறுபத்து ஒன்பதாவது தடவை! மீ பாவம் இழை!” முகத்தை வெகு பாவமாக வைத்துக் கொண்டே கூற

 

“ஆதவன்!” சிறு கோபத்துடன் அவனது தோளில் தட்டியவள் மீண்டும் அவனோடு ஒன்றிக் கொண்டாள்.

 

“எப்படி ஆதவன் இதெல்லாம்? தாத்தா அன்னைக்கு உங்களை பார்த்து கோபமாக பேசும் போதே நான் பயந்து போயிட்டேன் இனி நீங்களும், நானும் சேரவே முடியாது என்று தான் நினைத்தேன் அதனால் தான் அன்னைக்கு நான் அப்படி எல்லாம் பேசிட்டேன்! ஆனால் இங்கு எல்லாம் தலைகீழாக இருக்கு! தாத்தாவே நிச்சயதார்த்தம் ஏற்பாடு பண்ணும் அளவுக்கு இந்த ஒரு மாதத்திற்குள் என்ன நடந்தது? ப்ளீஸ் சொல்லுங்க ஆதவன்! இல்லேன்னா என் தலையை வெடித்து விடும் போல இருக்கு”

 

“நானும், நீயும் சேரவே முடியாது என்று நினைத்த நீ அப்போ எப்படி இன்னைக்கு அவ்வளவு தைரியமாக பேசுன?”

 

“எல்லாம் நீங்க கொடுத்த தைரியம் தான்!”

 

“நானா?”

 

“ஆமா! உங்க காதலுக்காக இரண்டரை வருஷமாக எந்த பலனும் எதிர்பாராமல் கஷ்டப்பட்டீங்களே அந்த தைரியம் எனக்கு பிடிச்சது! எந்த விடயத்தையும் நமக்கு சாதகமாக பார்க்க வேண்டும் என்ற உங்க எண்ணம் எனக்கு பிடிச்சது! மொத்தத்தில் வெளியில் சொல்லாத உங்க காதலுக்காக நீங்க செய்த ஒவ்வொரு விஷயமும், அதில் மறைந்திருந்த உங்க தைரியமும் பிடித்ததனால் தான் இன்னைக்கு என்னால தைரியமாக என் வாழ்க்கைக்காக பேச முடிந்தது” இழையினி பேசப் பேச ஆதவன் அவளையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டு நின்றான்.

 

“ஆதவன் என்னாச்சு?” பதிலேதும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தவன் முன்னால் அவள் தன் கையை அசைக்க

 

 சிறு புன்னகையுடன் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்

“இந்த ஒரு நாளுக்காக தான் இந்த ஒரு மாதமாக நான் காத்திருந்தேன்” என்று கூற அவளோ அவனைக் குழப்பமாக பார்த்து கொண்டு நின்றாள்.

 

“இந்த ஒரு மாதமும் என்ன நடந்தது என்று கேட்ட இல்லையா? இப்போ சொல்லுறேன் உட்காரு!” அங்கிருந்த கல் நாற்காலியில் அவளை அமரச் செய்தவன் அவளருகில் அமர்ந்து கொண்டு அவளது குழப்பத்திற்கான பதிலைக் கூறத் தொடங்கினான்.

 

***************************

ஒரு மாதத்திற்கு முன்பு…….

இலங்கையில்……

 

அந்த திருமண மண்டபத்தில் இருந்து இழையினி தன்னைக் கடந்து போகும் போது அவளையே பார்த்துக் கொண்டு நின்ற ஆதவன் அவளது நடவடிக்கைகளை எல்லாம் வைத்தே அவள் மனதிற்குள் எதை நினைத்து இப்படி எல்லாம் நடந்து கொள்கிறாள் என்பதை சிறிது யூகித்து கொண்டான்.

 

இழையினி அசோகன் மற்றும் மதியழகனுடன் அந்த மண்டபத்தில் இருந்து வெளியேறி சென்றதும் உடனடியாக விஜியும், ராஜாவும் ஆதவனின் அருகில் வந்து நின்று கொண்டனர்.

 

“என்ன ஆதவா இது? இழையினி ஒண்ணும் பேசாமல் போறாங்க?” 

 

“அவ ஏதோ குழப்பத்தில் இப்படி எல்லாம் செய்யுறா அண்ணா! நீங்க போய் அவகிட்ட பேசுங்க!” ராஜாவும், விஜியும் தங்கள் மனதுக்கு தோன்றிய விடயங்களை அவனிடம் பகிர்ந்து கொள்ள

 

அவர்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்துக் கொண்டவன்

“இழையைப் பற்றி எனக்கு ரொம்ப நல்லா தெரியும்! அவ பழைய விடயங்களை நினைத்து தான் இப்படி எல்லாம் பண்ணுறா! இது அவ வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் அதனால் அவ தான் இதைக் கடந்து வந்து தனக்காக பேசணும்! எப்போதும் இன்னொருவர் உதவியை அவ எதிர்பார்த்து இருக்க முடியாது! எப்போ இழை தனக்காக முன்வந்து தைரியமாக பேசுறாளோ அப்போ அவ முன்னாடி நான் இருப்பேன்! இழையினி வாய் திறந்து சொல்லாவிட்டாலும் அவ கண்களிலும் சரி, ஒவ்வொரு அசைவிலும் சரி என் மீதான காதல் நிறையவே இருக்கு! எனக்கு நிச்சயமாக நம்பிக்கை இருக்கு இவ்வளவு தூரம் என்னைக் கொண்டு வந்த என்னோட காதல் இழையையும் என்னோடு கண்டிப்பாக சேர்த்து வைக்கும்!” என்று உறுதியான குரலில் கூறவும் மற்ற இருவரும் அவனையே வியப்பாக பார்த்து கொண்டு நின்றனர்.

 

“இழையினி ரொம்ப அதிர்ஷ்டசாலி தம்பி!” தங்கள் அருகில் கேட்ட செல்வத்தின் குரலில் திரும்பி பார்த்த ஆதவனும், ராஜாவும் சற்று தயக்கமாக அவரைப் பார்த்து கொண்டு நிற்க

 

இயல்பாக அவர்களைப் பார்த்து புன்னகைத்த படியே ஆதவன் அருகில் வந்து அவனது தோளில் தன் கையை போட்டுக் கொண்டவர்

“நீங்க முதல் நாள் எஸ்டேட்டிற்கு வரும் போதே விஜி நீங்க என்ன காரணத்திற்காக இழையினியைப் பார்க்க வந்தீங்கன்னு எனக்கிட்ட சொல்லிட்டா” எனவும் ராஜாவும், ஆதவனும் அதிர்ச்சியாக அவரைத் திரும்பி பார்த்தனர்.

 

“அங்கிள்! அப்படின்னா டிரெயினில் நான் வரும் போது கூட நீங்க இந்த விடயம் உங்களுக்கு தெரிந்த மாதிரி காட்டிக்கொள்ளவே இல்லையே!” 

 

“இழையினி எனக்கும் மகள் மாதிரி தான் தம்பி! நீங்க இழையினியை எந்தளவுக்கு விரும்புறீங்கன்னு விஜி கிட்ட நீங்க முதல் நாள் சொன்னதை எல்லாம் வைச்சு நான் தெரிஞ்சுகிட்டேன் என்னோட மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் போது அதை நான் தடுக்க கூடாது இல்லையா? ஒருவேளை எனக்கு இதெல்லாம் தெரிஞ்ச மாதிரி நான் முதல்லே காட்டியிருந்தால் நீங்க இந்தளவுக்கு சகஜமாக இருந்திருக்க மாட்டீங்க இல்லையா? அது தான்!”

 

“அங்கிள்! எனக்கு சொல்லுறதுன்னே தெரியல! எனக்காக நீங்க எல்லோரும் ரொம்ப ஆதரவாக இருக்குறதைப் பார்க்கும் போது எனக்கு வார்த்தையே வரல” ஆதவன் தன் மனமகிழ்ந்து செல்வத்தைப் பார்த்து புன்னகையுடன் கூறவும் 

 

அவனருகில் வந்து நின்று அவனது கைகளை ஆதரவாக பற்றிக் கொண்ட ராஜா

“ஆதவா! இப்போ நீ என்னடா செய்யப் போற?” கேள்வியாக அவனை நோக்கினான்.

 

“நானாக எதுவும் பண்ண மாட்டேன் எல்லாம் தானாக நடக்கும் நீ வேணும்னா பாரு இன்னைக்கு நைட்குள்ள இழை என் கூட பேசுவா! அப்போ அவ கண்டிப்பாக ஏதாவது கிறுக்குத்தனமாக உளறுவா நீ வேணும்னா பாரு!” ஆதவன் அந்த சூழ்நிலையை சகஜமாக்கும் பொருட்டு இயல்பாக சிரித்துக் கொண்டே பேசவும் மற்ற அனைவரும் அவனது இயல்பான பேச்சைக் கேட்டு சிறிது புன்னகைத்துக் கொண்டனர்.

 

அதன் பிறகு சிறிது நேரத்தில் விஜியின் குடும்பத்தினர் அந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சென்று விட ஆதவனும், ராஜாவும் தங்கள் அறைக்குள் வந்து சேர்ந்து கொள்ள அந்த நொடியில் இருந்து ராஜா மாத்திரம் ஒரு வித பதட்டத்துடனும், படபடப்புடனும் அந்த அறைக்குள் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.

 

ஆரம்பத்தில் அதைப் பெரிதாக கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்த ஆதவன் ஒரு சில நிமிடங்களுக்கு பின் ராஜாவின் முன்னால் வந்து நின்று அவனையே வித்தியாசமாகப் பார்த்து கொண்டு நிற்க 

“என்னடா ஆதவா நீ இவ்வளவு பொறுமையாக இருக்க? அடுத்து என்ன நடக்குமோன்னு எனக்கு ஒரே டென்ஷனாக இருக்கு நீ எப்படிடா இப்படி இருக்க?” ஆதவனிடம் பதட்டத்துடன் கேட்ட ராஜா மீண்டும் அவனது கையிலிருந்த தொலைபேசியைப் பார்ப்பதும் கடிகாரத்தை பார்ப்பதுமாக கடந்து செல்ல

 

 அவனைப் பிடித்து நிறுத்தியவன்

“இப்போ எதற்கு உனக்கு இவ்வளவு பதட்டம்?” வெகு இயல்பாக அவனைப் பார்த்து வினவினான்.

 

“இழையினி என்ன சொல்லுமோன்னு எனக்கே அவ்வளவு டென்ஷனாக இருக்கு நீ ரொம்ப சாதாரணமா எதுக்கு இவ்வளவு பதட்டம்னு கேட்குற?”

 

“அவ என்ன பண்ணுவான்னு எனக்கு முன்னாடியே தெரியும் நீ எதற்கு வீணாக பதட்டப்படுற? கூல் டவுன் மிஸ்டர் ராஜா!” ராஜாவின் தலையைக் கலைத்து விட்டபடியே ஆதவன் கூறிக் கொண்டிருக்க சரியாக அந்த தருணம் அவனது தொலைபேசியும் சிணுங்கியது.

 

திரையில் ஒளிர்ந்த இழையினியின் பெயரைப் பார்த்ததும் முகம் மலர அந்த அழைப்பை எடுத்தவன் ராஜாவைப் பார்த்து கண்ணடித்து விட்டு அவளோடு பேசத் தொடங்கினான்.

 

அவன் மனதிற்குள் என்ன நினைத்திருந்தானோ அதே விடயங்களை அவள் வார்த்தை மாறாமல் பேச சிரித்துக் கொண்டே அவளது பேச்சைக் கேட்டு கொண்டு நின்றவன் இறுதியாக அவள் அழுகுரலோடு தொலைபேசி அழைப்பை நிறுத்தவும் தன் மனம் முழுவதும் கலங்கிப் போக கண்களை மூடிக்கொண்டு தன்னை சிறிது நிதானப்படுத்திக் கொண்டான்.

 

ஆரம்பத்தில் இருந்து அவனது முகமாற்றங்களை எல்லாம் பார்த்து கொண்டு நின்ற ராஜா இறுதியாக அவன் மொத்தமாக தன் நிலை இழந்து நிற்பதை பார்த்து அவனது தோளில் கையை வைக்க அவனது தொடுகையில் தன் கண்களை திறந்து கொண்ட ஆதவன்

“நான் என்ன சொன்னேனோ அதே மாதிரி பேசிட்டா! நான் அவளை எந்தளவுக்கு புரிந்து வைத்திருக்கேன் இல்லை?” சிறு புன்னகையுடன் அவனைப் பார்த்து வினவ

 

பதிலுக்கு அவனைக் கூர்மையாக பார்த்தவன்

“ஏன்டா இப்படி இருக்க? அவங்க தான் புரியாம ஏதேதோ செய்யுறாங்கன்னா நீயும் அப்படியே இருக்க! நீயாவது போய் அவங்க வீட்ல கதைக்கலாமே?” என்று கேட்க

 

அவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவன்

“எப்போதும் அவளுக்காக இன்னொரு ஆள் பேசுனா தனக்காக முன்வந்து பேச அவளுக்கு தைரியம் வராது நாளைக்கு அதுவே அவளுக்கு பல பிரச்சனைகளை உருவாக்கும் அதனால இழை எப்போ தனக்காக முன்வந்து தைரியமாக எல்லாவற்றையும் முகம் கொடுத்து பேசுறாளோ அப்போ தான் அவ அம்மா ஆசைப்பட்ட மாதிரி அவளுக்கு ஒரு நல்ல நிலைமை உருவாகும் அது தான் என் விருப்பமும் கூட!” என்று கூறவும் ராஜா அவனை ஆரத்தழுவி கொண்டான்.

 

“உன் காதல், புரிதலை எல்லாம் பார்க்கும் போது எனக்கும் லவ் பண்ணணும்னு தோணுது ஆனா இடையில் நீ புலம்புனதை எல்லாம் பார்த்து லைட்டா பயமாவும் இருக்கு!” ராஜா சிரித்துக் கொண்டே ஆதவனை பார்த்து கூற அவனுக்கும் அந்த புன்னகை வந்து தொற்றிக் கொண்டது.

 

அடுத்த நாள் காலை இழையினியைப் பின் தொடர்ந்து சென்றவன் அவளது தவிப்பையும், ஏக்கமான பார்வையையும் பார்த்து மனதிற்குள் சிறிது தடுமாற்றம் கொண்டாலும் இந்த பிரச்சினையை அவள் தான் முகம் கொடுத்து கடந்து வர வேண்டும் என்ற தீர்மானத்தோடு அவளைப் பார்வையினாலேயே பின் தொடரத் தொடங்கினான்.

 

இழையினி விமானம் ஏறிச் செல்லும்வரை அவளைப் பின் தொடர்ந்து வந்தவன் அவள் இலங்கையில் இருந்து புறப்பட்டு சென்று ஒரு வாரத்தில் தானும் தன் தாயகம் திரும்பி செல்வதற்கான வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினான்.

 

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி வரும் அந்த நாள் தான் ஆதவனுக்கு அவன் வாழ்நாளிலேயே மிகவும் கடினமான நாளாக அமைந்தது.

 

ராஜாவின் குடும்பத்தினருடன் அத்தனை நாட்களாக பழகியது அவனை வெகுவாக தவித்து போக செய்தாலும் தன் கடமைகளைக் கருத்தில் கொண்டு கனத்த மனதுடன் தன் பிரயாணத்தை ஆரம்பித்தவன் இழையினியைப் பற்றிய எண்ணங்களோடும், தன் பெற்றோரின் நினைவுகளுடனும் சென்னை விமான நிலையத்தில் வந்து தரையிறங்கி அங்கிருந்து நேராக தங்கள் வீட்டை நோக்கி புறப்பட்டு சென்றான்.

 

இரண்டு வருடங்களாக பிரிந்திருந்த தன் மகனைக் கண்ட சந்தோஷத்தில் வள்ளியம்மை மற்றும் தமிழ்ச்செல்வன் கண்கள் கலங்க அவனை ஆரத் தழுவிக் கொண்டு ஒரு அமைதியான பாசம் கலந்த நிமிடங்களை அங்கே செலவிட அந்த நேரம் சரியாக அவர்கள் வீட்டின் முன்னால் ஒரு கார் வந்து நின்றது.

 

‘நம்ம வீட்டுக்கு காரில் யாரு வர்றாங்க?’ ஆதவன் யோசனையுடன் வாயில் புறமாக திரும்பி பார்க்க அங்கே மதியழகனும் அவன் பின்னால் அசோகனும் நடந்து வந்து கொண்டிருந்தார்.

 

அவர்களை அங்கே எதிர்பாராத ஆதவனின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து போய் நிற்க 

“வணக்கம் தம்பி!” அவர்களை எல்லாம் பார்த்து இயல்பாக புன்னகைத்த படியே  அசோகன் அங்கே வந்து நின்றார்.

 

“வாங்க! வாங்க! உட்காருங்க!” அசோகனின் கம்பீரமான குரலில் முதலில் தன்னை சுதாரித்துக் கொண்ட தமிழ்ச்செல்வன் அவரை இன்முகத்துடன் வரவேற்க ஆதவனும் தன்னை சிறிது நிதானப்படுத்திக் கொண்டு அவரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டான்.

 

யாராவது ஒருவர் பேச்சை ஆரம்பிப்பார்கள் என்று எல்லோரையும் வள்ளியம்மை திரும்பி திரும்பி பார்க்க அங்கே யாரும் வாய் திறந்து பேசுவதாக இல்லை.

 

‘இது சரி வராது நாமே பேச்சைத் தொடங்குவோம்!’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவர்

 

“ஐயா எங்க வீடு தேடி வந்து இருக்கீங்க அப்படின்னா ஏதாவது முக்கியமான விஷயமாக தான் இருக்கும் இல்லையா?” என்று கேட்க 

 

அவரது கேள்வியில் தன் தயக்கம் சிறிது விலக அவரை நிமிர்ந்து பார்த்த அசோகன்

“முதலில் நீங்க எல்லோரும் என்னை மன்னிக்கணும்! அன்னைக்கு கல்யாண மண்டபத்தில் வைத்து ரொம்ப அதிகமாக பேசிட்டேன்” தன் இரு கரம் கூப்பி மன்னிப்பு கேட்க 

 

அவரது கையை பிடித்து கொண்ட தமிழ்ச்செல்வன்

“ஐயோ! அப்படி எல்லாம் எதுவும் நாங்க நினைக்கலைங்க! ஆரம்பத்தில் இது தான் பிரச்சினை என்று தெரியாமல் நாங்களும் அமைதியாக இருந்துட்டோம் இனி நடந்ததை பேசி என்ன ஆகப் போகுது அதை எல்லாம் மறந்துடுங்க!” இயல்பாக அவரது கையை தட்டிக் கொடுத்தவாறே கூறினார்.

 

தமிழ்ச்செல்வனின் கூற்றில் சிறிது முகம் தெளிவாக ஆதவனின் முன்னால் வந்து நின்றவர் 

“என்னோட பேத்தி இழையினியை கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு சம்மதமா மாப்பிள்ளை?” என்று கேட்க

 

அவனோ

“மாப்பிள்ளையா?” அதிர்ச்சியில் தன்னை மறந்து சத்தமிட.

 

“ஆமா மச்சான்! இனி நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை தான்” மதியழகனும் தன் பங்கிற்கு அவனைக் குழப்ப

 

“என்னய்யா நடக்குது இங்க?” ஆதவன் தன் தலையில் கையை வைத்து கொண்டு திருதிருவென விழித்து கொண்டு நின்றான்.

 

“ஆதவன் முதலில் உட்காருங்க நான் எல்லாம் சொல்லுறேன்” என்ற மதியழகன்

 

“இழையினி சென்னைக்கு வரணும் என்று செல்வம் அங்கிள் வீட்டில் வைத்தே அவசரப் படும் போது எனக்கு லைட்டா ஒரு சந்தேகம் இருந்தது அவ எதையோ மறைக்கப் பார்க்குறான்னு தெரிந்தது அது தான் அவ ஒவ்வொரு நடவடிக்கையும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன் அப்போதான் எனக்கு உறுதியாக அவ மனதிற்குள் ஏதோ ஒன்று இருக்குன்னு புரிந்தது ஆரம்பத்தில் அதை தாத்தா மேல் இருக்கும் கோபம் என்று தான் நினைத்தேன் ஆனால் அது இல்லைன்னு போகப் போக புரிந்தது அதற்கு அப்புறம் தான் விஜி கிட்ட போன் பண்ணி கேட்டேன் அவ வாயே திறக்கல கல்லு மாதிரி பேசாமல் இருந்தா! அவளைப் பேசி பேசி கரைய வைத்து தான் உங்க காதல் விஷயத்தை தெரிஞ்சுகிட்டேன் இப்படி ஒரு பையன் கிடைத்தும் என் தங்கச்சி அதை தவறவிடப் பார்க்காலேன்னு இன்னும் அவ மேல் கோபம் வருது தான் இருந்தாலும் தங்கச்சி லைஃப் ஆச்சே! அது தான் தாத்தாகிட்டயும் பேசி புரிய வைத்து உங்களை என் தங்கைக்கு சம்பந்தம் கேட்க வந்தோம்” என்று விட்டு ஆதவனைத் திரும்பி பார்க்க அவனோ எந்தவொரு பதிலும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

 

“என்னாச்சு ஆதவன்? ஏன் எதுவும் பேசாமல் இருக்குறீங்க?”

 

“நான் இழையினியை பார்க்க வராமல் இருந்ததற்கு காரணம் நீங்க சம்மதிக்க மாட்டீங்கன்னு இல்லை மதி! இழையினி தனக்காக அவளே பேசணும்னு தான்! இப்போ கூட விஜி மூலமாக தான் என்னைப் பற்றி நீங்க தெரிஞ்சுகிட்டீங்களே தவிர இழையினி சொல்லவே இல்லையே! நான் ஆசைப்படுவது எல்லாம் ஒரே ஒரு விடயம் தான் இழையினி அவளாகவே முன் வந்து இதையெல்லாம் பேசணும்! அவளுக்காக அவ பேசணும் அவ்வளவு தான்!” ஆதவனின் கூற்றில் அந்த இடத்தில் பலத்த அமைதி நிலவியது.

 

அந்த அமைதியைக் கலைக்கும் வகையில் தன் தொண்டையை செருமிக் கொண்ட மதியழகன்

“அவ்வளவு தானே! நீங்க கவலைப்பட வேண்டாம் அதெல்லாம் இழையினி தைரியமாக பேசுவா! நான் பேச வைப்பேன்! இன்னும் இரண்டு வாரம் கழித்து எனக்கு நிச்சயதார்த்தம் முடிவாகி இருக்கு! அதே நாளில் உங்க இரண்டு பேர் நிச்சயதார்த்தமும் நடக்கும் உங்க ஆசைப்படி இழையினி அவளுக்காக பேசுவதை நீங்க கேட்ட பிறகு! சரி தானே மச்சான்? வர்ற பதினெட்டாம் திகதி மறக்காமல் வந்துடுங்க நாங்க வர்றோம்!” புன்னகையுடன் ஆதவனின் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு சென்று விட அவனும் புன்னகையுடன் அவர்களை சந்தோஷமாக வழியனுப்பி வைத்தான்.

 

அதன் பிறகு வந்த நாட்களை எல்லாம் ஆதவன் மௌனமாக கடத்தினாலும் மனதிற்குள் ஒரு தயக்கத்துடன் தான் கழித்துக் கொண்டிருந்தான்.

 

இன்று காலை இழையினி அவன் நினைத்ததைப் போல தைரியமாக தனக்காக பேசியது மட்டுமின்றி தன் காதலையும் வெளிப்படுத்தியிருக்க அதன் பிறகே அவனுக்கு அந்த தயக்கம் நீங்கி சென்றிருந்தது.

 

ஆதவன் அத்தனை நேரமாக கூறியதை எல்லாம் கேட்டு மெய் மறந்து போய் நின்ற இழையினி

“இழை!” என்ற அவனது அழைப்பிலேயே நிஜத்திற்கு வந்தாள்‌.

 

“இழை! என்னாச்சுடா?”

 

“ஆதவன்!” சிறு பிள்ளையென அவனோடு மீண்டும் ஒன்றிக் கொண்டவள் 

 

“உங்க காதல் கிடைக்க நான் என்ன புண்ணியம் பண்ணிருந்தேனோ தெரியல! எனக்காக நீங்க எல்லோரும் இவ்வளவு தூரம் யோசித்து இருக்குறதை பார்க்கும் போது நான்… எனக்கு… என்ன சொல்லுறதுன்னே தெரியல!” கலங்கிய தன் கண்களை அவனறியாமல் துடைத்து விட்டபடியே கூறவும்

 

அவளை மேலும் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்

“இப்போ நல்லா பேசு! இதை அன்னைக்கே மண்டபத்தில் வைத்து பேசியிருந்தால் எங்க எல்லோர் உடம்பிலும் இருந்து இவ்வளவு சக்தி வீணாகி இருக்காது இல்லையா?”கேலியாக அவளைப் பார்த்து தன் புருவம் உயர்த்த

 

“ஆதவன்! உங்களை!” அவனைப் பார்த்து கோபமாக முறைக்க முயன்று அது முடியாமல் போகவே சிரித்துக் கொண்டே அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்.

 

மதியழகனும் சரி, தேன்மொழியும் சரி, விஜயாவின் குடும்பமும் சரி தனக்காக இவ்வளவு பாசத்தை காண்பித்து இருக்கிறார்களே என்று எண்ணி பார்த்தவள் மனம் தன் அன்னை இப்போது தான் முழுமையாக மன நிம்மதியாக இருப்பார் என்றெண்ணி சந்தோஷம் கொண்டது.

 

அதே நிம்மதியான மனநிலையுடன் ஆதவன் கைகளை தன் கைகளோடு கோர்த்துக் கொண்டவள் சட்டென்று ஏதோ ஞாபகம் வந்தவளாக

“ஆமா நீங்க ராஜா அண்ணாகிட்டயும், விஜி கிட்டயும் என்ன சொன்னீங்க? நான் கிறுக்குத்தனமாக ஏதாவது பண்ணுவேன்னா?” அவனைப் பார்த்து வினவ

 

அவளைப் பார்த்து சமாளிப்பது போல சிரித்துக் கொண்டவன்

“உண்மைகளை எல்லாம் அடிக்கடி சொல்லக் கூடாது இழைம்மா!” என்று கூறவும் அவளோ பதிலுக்கு அவனை முறைத்து பார்த்து கொண்டு இருந்தாள்.

 

“நோ டென்ஷன் இழை! முகத்தில் சுருக்கம் வரும் மறந்து போச்சா?” அவனது கேள்வியில் பக்கென்று சிரித்தவள்

 

“நீங்க எப்போதும் இப்படியே தான் பேசுவீங்களா ஆதவன்? எப்படி உங்களால் எப்போதும் இப்படியே சிரித்துக் கொண்டே இருக்க முடியுது?” கேள்வியாக அவனை பார்த்து வினவினாள்.

 

“இழையினி மேடம் நாம அடுத்தவங்களுக்கு நம்ம கிட்ட இருந்து என்ன உணர்வை வெளிப்படுத்திக் காட்டுகிறோமோ அதே உணர்வு தான் நமக்கு பதிலாக கிடைக்கும்! இப்போ நான் எப்போதும் கோபமாக இருந்தால் என் கூட பேச வர்றவங்களும் கோபமாக தான் பேசுவாங்க அதே மாதிரி இப்போ நான் சிரித்து பேசுவதால் என்கூட பேசுறவங்களும் சிரித்து தானே பேசுறாங்க ஸோ சிம்பள்!” 

 

“எனக்கு உங்க கிட்ட பிடித்த விடயமே இது தான் ஆதவன்! எதையும் நமக்கு சாதகமாக பார்க்கும் உங்க குணம் தான் முதல் முதலாக என்னை உங்க பக்கம் சாய வைத்தது! அதற்கு அப்புறம் உங்க பேச்சு முக்கியமாக உங்க சிரிப்பு! நீங்க சிரிக்கும் போதெல்லாம் நான் என்னை மறந்து போய் விடுவேன்! உங்க கிட்ட இருக்கும் எல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்!”

 

“அப்போ இவ்வளவு ஆசையை வைத்துக் கொண்டு தான் மேடம் பெரிய அன்னை தெரேசா மாதிரி எதுவும் வேணாம்னு வந்தீங்களா?” ஆதவனின் கேள்வியில் தன் நாக்கை கடித்து கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள்

 

“ஐ யம் ஸாரி….” என்று கூறத் தொடங்க

 

“அய்யோ! வேண்டாம் மா! இதோடு எழுபதாவது தடவை” அவன் அலறிக்கொண்டே அவளது வாயை மூட அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டவள் மேலும் அவனோடு நெருங்கி அமர்ந்து கொண்டாள்.

 

“ஆதவன்!”

 

“சொல்லுங்க இழையினி மேடம்!”

 

“இப்போ இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு ஒரு பாட்டு வரி தான் திரும்ப திரும்ப நினைவுக்கு வருது”

 

“அப்படியா? என்ன அது?”

 

என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய்?

டோரா போரா மலை சென்றாலும் துரத்தி வருவேனே

உன்னை நீங்கி நான் எங்கே செல்வது?

உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே  ஒளிந்து கொள்வேனே

 

தன் இனிமையான குரலினால் அவன் காதில் அவள் பாட அந்த பாடல் வரிகளதும், அவள் குரலினதும் மயக்கத்தில் கிறங்கிப் போனவன் அவள் நெற்றியில் தன் முதல் காதல் முத்திரையைப் பதித்தான்.

 

எந்தவொரு பொருளோ, உணர்வோ, விருப்பங்களோ எந்தவித எதிர்பார்ப்பும், முயற்சியும் இன்றி இலகுவாக கிடைத்து விட்டால் அதன் பெறுமதியை உணர முடியாது.

 

அதே போல்தான் ஆதவனின் காதலும் இழையினியை சரியாக சேர வேண்டிய விதத்தில் சேர்ந்திருக்கிறது.

 

பலவித போராட்டங்கள், பிரச்சினைகள், தடைகள் என எல்லாவற்றையும் கடந்து பொன் ஆதவனின் காதல் இழையினியை சேர்ந்திருக்க இனி ஆதவனை நீங்கி இழையினி எங்கே செல்வாள்?

 

அவனை நீங்கி அவளும், அவளை நீங்கி அவனும் இனி போகவே முடியாது என்பது போல தங்கள் காதல் உலகில் மூழ்கி லயித்திருக்க அவர்களது இனிமையான இந்த காதல் பயணத்தில் இனி என்றென்றும் சந்தோஷமும், நிம்மதியுமே சாமரம் வீசும்.

 

**********முற்றும்*********