உயிரின் ஒலி(ளி)யே 4a
உயிரின் ஒலி(ளி)யே 4a
காத்திருத்தல் என்பது கொடுமை. அதுவும் சாவியில்லாமல் வீட்டிற்கு வெளியே வெறுமனே நின்றுக் கொண்டிருப்பது பெருங்கொடுமை.
அந்த கொடுமையை தான் அதிதி அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
கைக்கடிகாரத்தைத் திருப்பி பார்த்தாள். மணி எட்டை கடந்து பத்து நிமிடங்களாகியிருந்தது.
வேகமாக ராஜ்ஜின் அலைப்பேசிக்கு அழைக்க அதுவோ ஸ்விட்ச்ட் ஆஃப் என்று சொல்லி அவளை வெறுப்பேற்றியது.
“யூ ராஜ். என்னைப் பழிவாங்குற இல்லை” என கோபத்தோடு காலை தரையின் மீது எட்டி உதைக்க எத்தனிக்கும் போது தான் அடிப்பட்ட நியாபகமே வந்தது.
‘சே நேரம் பார்த்து இந்த காலும் சதி பண்ணுது. நிம்மதியா எட்டி கூட ஒதைக்க முடியலை’ என்று அவள் புலம்பிக் கொண்டிருந்த நேரம் வான உண்டியலில் இருந்து சிதறத் துவங்கியது மழை காசுகள்.
வேகமாக துப்பட்டாவை எடுத்து தலையின் மீது போர்த்திக் கொண்டவள் அந்த வீட்டுக் கதவை ஒட்டி நின்றுக் கொண்டாள்.
‘டேய் கோளாறு கண்ணா, சீக்கிரமா வந்து தொலையேன்டா’ என இவள் சப்தமாக முணுமுணுத்த அந்த நொடி வேகமாய் சீறிப் பாய்ந்தபடி நுழைந்தது அந்த கார்.
உள்ளிருந்து வெகு வேகமாய் இறங்கிய ராஜ்ஜின் கைகளில் குட்டியாய் ஒரு பூனைக்குட்டி.
அந்த குட்டிப் பூனையை மழையில் நனையாத வண்ணம் கைக்குள்ளே பொத்தியபடி வேகமாக கொண்டு வந்தவன், மழையில் ஒடுங்கிப் போய் நின்றிருந்த அதிதியை ஒரு கணம் பார்த்துவிட்டு வேகமாய் கதவைத் திறந்துவிட்டான்.
உள்ளே நுழைந்த அதிதி துவாலையை எடுத்து தலையைத் துடைத்தபடியே ராஜ்ஜைப் பார்த்து முறைத்தாள்.
“ப்ளான் பண்ணி தானே வீட்டுக்கு லேட்டா வந்தே? என்னை பழிவாங்குறல” என குற்றம் சுமத்தும் பாவனையோடு கேட்க, ராஜ் திரும்பி ஆழமாய் அவளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு ஆம் என்று தலையசைத்தான்.
அவனது தலையசைப்பைப் பார்த்து கடுப்பான அதிதி கோபமாய் அவனைத் திட்ட வாயெடுத்தாள்.
“நீயெல்லாம்” என அவள் ஆரம்பித்தவளின் குரலுக்கு பதில் மியாவ் என்ற குரல் ஒலித்தது.
கடுப்புடன் திரும்பியவள் “சே இந்த வீட்டுலே சுதந்திரமா திட்டக்கூட உரிமை இருக்கா” என்று முகத்தை சுருக்கிக் கொண்டு பூனையைப் பார்த்தாள்.
அந்த குட்டிப் பூனையும் முகத்தை சுருக்கி அவளை ஒரு பார்வை பார்த்தது.
அவளுக்கு சிறுவயதிலிருந்தே பூனைகளைக் கண்டால் பயம். அதுவும் அந்த நீலநிறக் கண்களைக் கண்டாலே பயந்து நடுங்குவாள். இப்போதும் அதே போல அந்த நீலக்கண்களைப் பார்த்து பயந்து பின்வாங்கினாள்.
அவளது பய படர்வை கண்ட ராஜ்ஜின் முகத்திலோ அசாத்திய மாற்றம்.
‘ஆக, இவளுக்கு பூனைனா பயமா. அப்போ இந்த பூனையை வெச்சே இவளை சமாளிக்க வேண்டியது தான்’ என எண்ணமிட்டுக் கொண்டிருந்தவனை சொடுக்கிட்டு அழைத்தாள் அதிதி.
“ராஜ், அந்த பூனையைக் கொண்டு போய் வெளியே விட்டுடு. எனக்கு பூனைனா அலர்ஜி” என்றவளது கோரிக்கைக்கு பலமாய் தலையசைத்து மறுத்தான்.
“நோ அதிதி. எனக்கு பூனைனா ரொம்ப பிடிக்கும். இனிமேல் இந்த குட்டிப் பூனை நம்ம கூட தான் இருக்கும்” என்றான் வாயசைத்து.
“என்னை வெறுப்பேத்துறதுக்காகவே இதெல்லாம் பண்றியா ராஜ். மழை ஓய்ஞ்சதும் கொண்டு போய் பூனையை வெளியே விட்டுடு” என்றவள் சொல்ல அவனோ தீர்க்கமாய் மறுப்பு.
“இனி இந்த பூனை இங்கே தான் இருக்கும். நோ மோர் ஆர்கியுமென்ட்ஸ்” என்று சொல்லியவன் வேகமாய் பூனையுடன் சென்று தன்னறைக்குள் புகுந்து கொண்டான்.
மூடிய கதவையே இயலாமையோடு பார்த்தவள் தன் கையிலிருந்த பையை ஷோபாவில் பொத்தொன்று போட்டுவிட்டு தன்னறைக்குள் புகுந்து கொண்டாள்.
சில மணி நேரங்கள் கழித்து இருவரும் ஒரே நேரத்தில் கதவைத் திறந்து வெளிப்பட்டனர்.
மணி ஏற்கெனவே ஒன்பதரையைத் தாண்டியிருக்க வயிற்றில் வேறு ராகம் தப்பிய தாளங்கள்.
தன் அடிப்பட்ட காலோடு அதிதி நொண்டியபடி சமையலறைக்குள் சென்று லைட்டரை எடுக்க ராஜ் வேகமாக அவள் கையிலிருந்து பிடிங்கினான்.
அவன் மீது கேள்வியாக விழுந்தது அவள் பார்வை.
“வாரத்துலே முதல் முனு நாள் நான் சமைக்கிறேன். அடுத்த நாலு நாள் நீ சமை.இன்னைக்கு என்னோட டர்ன். நீ கிச்சன்லே இருந்து இப்போ கிளம்பலாம்” என்று வாயசைத்தவனை தலைசாய்த்துப் பார்த்தாள் அதிதி.
“எப்படி எப்படி? நான் மட்டும் ஒரு நாள் எக்ஸ்ட்ராவா வேலை பார்க்கனுமா? அதெல்லாம் என்னாலே முடியாது. உனக்கு எப்படி மூணு நாளோ அதே மாதிரி நானும் மூனு நாள் தான் சமைப்பேன்” என்று நியாயம் பேசியவளைக் கண்டு பல்லைக் கடித்தான்.
“ஓகே நீ மூணு நாள். நான் மூணு நாள். மீதியிருக்கிற ஒரு நாளிலே காலையிலே நீ குக் பண்ணு நைட்டு நான் பண்றேன்” என்றவன் டைப் செய்து வைக்க
“அப்போ லன்ச் யாரு பண்ணுவாங்க. ஃபைவ் ஸ்டார் செஃப்பா” என்றாள் நக்கலாக.
“கடையிலே வாங்கிக்கலாம் போதுமா” என்றவன் கையிலிருந்த கரண்டியை ஹால் பக்கம் சுட்டிக் காட்டினான்.
அவளை அங்கிருந்து வெளியே போகுமாறு சொல்லாமல் சொல்கிறான்.
அவனை காரமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு சோபாவில் அமர்ந்தவளின் முன்பு சரியாக அரை மணி நேரம் கழித்து உணவைக் கொண்டு வந்து வைத்தான்.
அவளுக்கு கொஞ்சமும் பிடிக்காத நூடுல்ஸ் அந்த தட்டில் இருந்தது. அதைப் பார்த்ததும் கோபமாய் அவனை முறைத்தாள்.
“நீ தெரிஞ்சு பண்றியா இல்லை தெரியாம பண்றியா ராஜ். எனக்கு இந்த நீட்டு குச்சு (நூடுல்ஸ்) கொஞ்சமும் பிடிக்காது. செய்யுறதுக்கு முன்னாடி என் கிட்டே கேட்டுட்டு செய்ய மாட்டியா?” என்றாள் ஆற்றாமையாக.
“நீ ஏன் முன்னாடியே சொல்லல. ஆல்ரெடி டைம் பத்து. இதுக்கு மேலேலாம் வேற செய்ய முடியாது” என்றவன் சாப்பிட துவங்க அவள் அந்த நூடுல்ஸையே ஒரு மார்க்கமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நீட்டு நீட்டா வெள்ளை முடி மாதிரியிருக்கு. எப்படி தான் இந்த நூடுல்ஸ் சாப்பிடுறாங்களோ?” என இவள் உதடுகளில் முணுமுணுக்க அதைப் படித்த ராஜ்ஜின் முகம் சட்டென மாறியது.
‘நிம்மதியா சாப்பிடவிடுறாளா பாரு. பேசி பேசியே வாந்தி எடுக்க வெச்சுடுவா போல’ என நினைத்தவன் தட்டை எடுத்துக் கொண்டு உள்ளறைக்கு சென்றுவிட்டான்.
இங்கோ அதிதி பசி வீரியத்தில் மெல்ல வயிற்றைப் பிடித்துக் கொண்டு சோபாவில் உருண்டு கொண்டிருந்த நேரம் காலிங்பெல் அடித்தது.
இவள் எழுந்து கொள்ளும் முன்பே வேகமாக சென்று கதவை திறந்த ராஜ், திரும்பி வரும்போது ஒரு பையோடு வந்தான். அதில் அவளுக்கான உணவு இருந்தது.
அதை அவளின் முன்பு நீட்ட அவளோ அவனை முறைத்தாள்.
“ஆர்டர் பண்றதுக்கு முன்னாடி என் கிட்டே கேட்க மாட்டியா? இப்பவும் உனக்கு பிடிச்ச சாப்பாட்டை தான் ஆர்டர் பண்ணியிருப்ப. அதுவும் எனக்கு பிடிக்காத ஃப்ரைட் ரைஸ்ஸா தான் ஆர்டர் போட்டு இருப்ப” என்றவள் அவனை திட்டிக் கொண்டே திறக்க உள்ளே அவளுக்கு மிகவும் பிடித்த சாம்பார் சாதம் இருந்தது.
வியப்பின் விரிவோடு அவனைப் பார்க்க அவனோ “சாப்பிட்டப்புறம் கூப்பிடு. கொஞ்சம் பேசணும்” என்று சொல்லியபடி சென்றுவிட்டான்.
அவள் சாப்பிட்டுவிட்டு சரியாக அவனை அழைக்க எத்தனித்த நேரம் அவனே வெளியில் வந்தான்.
அவன் கையில் பேப்பர் மற்றும் பேனா.
அவள் கேள்வியோடு நோக்க அவனோ அவளருகில் நன்றாக சாய்ந்து அமர்ந்து பேப்பரில் கோடு கிழிக்க துவங்கினான்.
அது அவர்கள் இருவரும் இந்த வீட்டில் எந்தெந்த வேலையை எப்போது செய்ய வேண்டும் என்று பிரித்து காட்டும் கோடு.
இருவரும் சண்டையிட்டு சமாதானமாகி ஒரு வழியாக அந்ந டெய்லி டைம்டேபிளை முடிக்கும் பொழுது நேரம் சரியாக பதினொன்னை நெருங்கியிருந்தது.
அந்த நேரத்தைப் பார்த்ததும் அதிதி, “ஓகே குட் நைட். எனக்கு தூக்கம் வருது” என்றபடி எழுந்து கொள்ள அவளின் கைகளை வலுக்கட்டாயமாக பிடித்தவன் புதியதாக வாங்கப்பட்ட ஆயில்மென்ட்டை திணித்துவிட்டு சென்றுவிட்டான்.
கையிலிருந்த ஆயில்மென்ட்டையும் வேகமாக சென்ற ராஜ்ஜையும் மாறி மாறிப் பார்த்தவளோ சட்டென்று டேபிளில் அதை வைத்துவிட்டு தன்னறைக்குள் வந்தாள்.
வலி கொடுத்த சுணக்கத்தில் அத்தனை சீக்கிரத்தில் தூக்கம் அவளுக்கு வரவில்லை.
எப்போதும் ரேடியோவில் பேசும் ஆதனின் குரல் அவள் மனதை மாய மெல்லிறகு கொண்டு வருடும். இன்றும் அதே வருடலுக்காக ஆன்லைன் ரேடியோவை உயிர்ப்பித்தாள்.
ஆனால் உள்ளறையில் ரேடியோ சரியாக கேட்கவில்லை. அலைப்பேசியை எடுத்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர ஹாலிற்கு வந்ததும் தான் ரேடியோவில் ஆதனின் குரல் தெளிவாக விழுந்தது.
திரும்பி ராஜ் அறையைப் பார்த்தாள்,கதவு இறுக்கமாக மூடியிருந்தது.
பெருமூச்சுவிட்டவள் சோபாவில் வசதியாக சாய்ந்துப் படுத்துக் கொண்டு காதுகளில் ஹெட்செட்டை மாட்டினாள்.
“இந்த காதல் என்பது ஒரு மாயவலை” எனத் தொடங்கிய ஆதனின் வார்த்தைகளைக் கேட்டவள் எப்போதும் போல இப்போதும் சலிப்படைந்தாள்.
‘சே எப்போ பார்த்தாலும் இந்த உலகத்திலே காதல் மட்டுமே பிராதானமா இருக்கிறா மாதிரி பேசுறான் பாரு’ என்று நொடித்துக் கொண்டவள் அன்னப்பறவைப் போல் வார்த்தைகளை விலக்கிவிட்டு குரலை மட்டும் தன் செவிகளில் பருகத் துவங்கினாள்.
ஆதனின் குரல் மெல்ல அவள் இதயத்தை ஊடுருவ துவங்கியது. எப்பேற்பட்ட வலியாக இருந்தாலும் அந்த குரல் தரும் கதகதப்பில் உறங்கிவிடுவாள். இன்றும் அதே போல சோபாவில் படுத்தபடியே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டாள்.
தண்ணீர் குடிப்பதற்காக வெளியே வந்த ராஜ், சோபாவில் படுத்திருந்த அதிதியைப் பார்த்துவிட்டு நெருங்கி வந்தான்.
அங்கே திறக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த ஆயில்மென்ட்டைப் பார்த்ததும் அழுத்தக்காரி என முணுமுணுத்தவன் அடிப்பட்ட காலைப் பார்த்தான், வீங்கிப் போய் சிவந்திருந்தது.
ஆயில்மென்ட்டை கையில் எடுத்தவன் மென்மையாக அடிப்பட்ட இடத்தில் போட்டுவிட்டு போர்வையைப் போர்த்தியபடியே காதுகளைப் பார்த்தான்.
இரண்டு பக்கமும் குடிக் கொண்டிருந்த ப்ளூடூத் ஹெட்செட்டை விலக்கி மேஜையின் மீது வைக்கப் போனவனிடமோ லேசாக சலனம்.
தயக்கமாக அந்த ஹெட்செட்டை தனது காதுகளில் மாட்டினான். அதில் துல்லியமாக ஒலித்தது ஆதனின் குரல்.
எந்த குரலைக் கேட்காமல் இத்தனை நாள் ஒதுங்கி விலகி ஓடினானோ அதே குரல் அவன் செவிகளில் விழுந்ததும் தீப்பட்டாற் போல அந்த ஹெட்செட்டை வேகமாக கழற்றிவைத்துவிட்டு தன்னறைக்குள் புகுந்து கொண்டான்.
அந்த குரலைக் கேட்க கேட்க ராஜ்ஜின் நினைவுகளில் பொங்கி எழுந்தது கடந்த கால கசப்புகள்.
கயல் என்ற பெண்ணை உயிருக்கு உயிராய் காதலித்த பழைய ஏமாளி ராஜ்ஜின் முகம், தன் மனக் கண்ணாடியில் தெரிய வேகமாய் கட்டிலின் மீது தன் கையை குத்தினான்.
எவ்வளவு காதலித்தான் அவளை? எவ்வளவு அன்பு செலுத்தினான்? பதிலுக்கு அவள் செய்தது என்ன?
துரோகம் பச்சை துரோகம்.
சில வருடங்களுக்கு முன்பு அவன் நெருங்கிய நண்பன் தீரனையும், ராஜ்ஜையும் ஒரே நேரத்தில் காதலித்து ஏமாற்றி முதுகில் குத்தியவள் அந்த கயல்.
அந்த கயல் தந்த வலியில் தானே வண்டியை ஓட்டி விபத்தில் தன் குரலை இழந்தான். அந்த குரலைத் தானே வாய்ஸ் ப்ராசெஸ்ஸிங் சாஃப்ட்வேர் மூலம் இப்போது தீரன் ஆதனாக மாறி ரேடியோவில் சில்லுனு ஒரு காதல் நிகழ்ச்சியில் பேசுகிறான்.
இழந்து போன தன் நண்பனின் குரலை ஒட்டு மொத்த உலகிற்கும் கேட்க வைக்க தீரன் எடுத்த அந்த முயற்சியில் ராஜ்ஜுக்கு சற்றும் உடன்பாடில்லை.
அந்த குரலில் தானே அவன் கயலிடம் காதல் மொழி பேசினான். அந்த குரலால் தானே அவள் காதல்வயப்பட்டதாய் சொன்னாள். இந்த குரலால் தானே கயலிடம் ஏமாந்தான்.
அதனால் அந்த குரலைக் கேட்காமல் இத்தனை வருடம் தப்பித்தோடி வந்தவனின் காதுகளில் மீண்டும் தன் பழைய குரல் விழவும் அவன் இதயத்தைக் கீறி கிழித்தது கடந்தகால கத்தி.