உயிர் காதலே உனக்காகவே எபிலாக்

உயிர் காதலே உனக்காகவே எபிலாக்

உயிர் காதலே உனக்காகவே…!  எபிலாக்… 

 

 

மதுரை தியாகராஜர் கலைக் கல்லூரி…  உள்ளரங்கம் முழுவதும் மாணவ மாணவியரால் நிரம்பியிருந்தது. சிறு சலசலப்புகூட இல்லாமல் மாணவமாணவியரைக் கட்டிப் போட்டிருந்தது மேடையிலிருந்து வந்து கொண்டிருந்த ஆளுமையும் அழுத்தமும் நிறைந்த கணீர் குரல். 

 

“மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்றார் கவிமணி, உண்மையில் மாதவம் செய்து வரமாய் பிறந்த பெண்களின் இன்றைய பாதுகாப்பற்ற நிலை பெரும் சாபமே.

   

பாலியல் வன்கொடுமை, பணியிடங்களில் சந்திக்கும் சீண்டல்கள், படிக்கும் பள்ளியில், பயணிக்கும் பேருந்தில், ஏன் பெண்களை தெய்வமாக வைத்து வழிபடும் கோவிலில் கூட பெண்களை இழிவுபடுத்தும் சமுதாயத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

     

பத்து, பதினைந்து வயது முதல் பெண்களுக்கு இத்தகைய பாலியல் வன்முறைகளைப்பற்றி எடுத்துக் கூறி அவர்களிடம் விழிப்புணர்வை நம்மால் கொண்டு வர முடியும். தம்மை தாமே பாதுகாக்கும் வழிமுறைகளை எடுத்துக் கூற முடியும்.

 

பத்து வயதிற்கும் குறைந்த குழந்தைகளிடம், குட் டச், பேட் டச் தவிர வேறு என்ன நம்மால் கூற முடியும்?

     

தனக்கு என்ன நடக்கிறது என்பதை கூட உணரமுடியாத சிறு குழந்தைகளிடம் கூட அத்துமீறும் கயவர்களை எப்படி இனம் காண முடியும்? ஆறு மாதக் குழந்தைகளைக்கூட விட்டுவைப்பதில்லை இவர்கள்…

 

இதற்கு உண்மையான தீர்வு பெண்களாகிய நம்மிடம்தான் இருக்கிறது. நம்முடைய பெண்குழந்தைக்கு பாதுகாப்பையும், விழிப்புணர்வையும் போதிக்கும் அதேவேளையில் ,ஆண்குழந்தைகளிடம் பெண்களை பாதுகாப்பது உன் கடமை, பெண்களை மதிக்க வேண்டும், உன் சொல்லாலோ, செயலாலோ அவர்களை காயப்படுத்தக்கூடாது , என்று சொல்லி வளர்க்க வேண்டும். 

இது ஒரு நாளில் நிகழ்ந்துவிடும் மாற்றமல்ல……

 

நான் சிறிது நாட்களுக்கு முன் ஒரு காணொளி பார்த்தேன், அதில் ஒரு பேருந்தில் இரவில் தனியாக பயணிக்கும் ஒரு பெண்ணிடம் நான்கைந்து கயவர்கள் வம்பிழுத்துக் கொண்டிருப்பர், அப்பேருந்தில் பயணிக்கும் மற்ற ஆண்கள் தத்தம் மனைவி, மகள், தங்கையின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு , அங்கு நடக்கும் நிகழ்வுகளை கண்டும் காணாமல் இருப்பர். அப்பொழுது அப்பேருந்தில் ஏறும் ஒரு இளைஞன் இதனைக் கண்டு, தன் அண்ணனுடன் பாதுகாப்பாக அமர்ந்திருந்த பெண்ணை சீண்டுவான், உடனே அந்த அண்ணன் அவ்விளைஞனை அடித்து “என் தங்கையின் மீது கை வைக்காதே” என்பான்.

உடனே அந்த இளைஞன் , “உன் அருகில் இருக்கும் இவள் உன் தங்கை என்றால், அக்கயவர்களிடம் சிக்கியிருக்கும் அவளும் நம் தங்கை தானே” என்று கூறி ….. என் ஒருவனால் அவர்கள் அத்தனை பேரையும் எதிர்க்க முடியாது , ஆனால் நாம் அனைவரும் சேர்ந்தால் முடியும் தானே என்கிறான்….

 

உடனே அங்கே அமர்ந்திருந்த ஆண்கள் அனைவரும் சேர்ந்து அக்கயவர்களை அடித்து விரட்டுகின்றனர்.

 

 

 

இத்தகைய விழிப்புணர்வைத்தான் நாம் நம் ஆண்குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.

ஒரு தீய வார்த்தை கூட பேசாதே! அவை அனைத்தும் உன் தாயை, தங்கையை, மனைவியை, தோழியை , மகளை இழிவுபடுத்தும் வார்த்தைகளே என்று சொல்லி வளர்க்க வேண்டும்.

உன்னுடன் படிப்பவர்களும், பணிபுரிபவர்களும், பயணிப்பவர்களும், நீ காணும் அனைத்து இடங்களிலும் உள்ள பெண்கள் அனைவரும் உனக்கு தாயாக, தங்கையாக , தோழியாக, மகளாக தெரிய வேண்டும், அவர்களை பாதுகாப்பது உன் கடமை என்பதை தாய்ப்பாலுடன் சேர்த்து நாம் ஊட்ட வேண்டும்.

 

 

பிறந்ததிலிருந்து என்னுடன் வளரும் இவள் என் தங்கை என்றால், என்னுடன் சிறுவயது முதல் படிக்கும் சகவகுப்பு மாணவிகள் அனைவரும் என் தங்கைகளே…..

என்னுடன் பணிபுரியும், நான் சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்ளும் இவள் எனது தோழி என்றால், குடும்ப சூழ்நிலை காரணமாக பணிக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணும் எனது தோழியே……

எனது தாயின் வயதை ஒத்த அனைத்து பெண்மணிகளும் எனக்கு தாயை போன்றவர்களே……

என் உதிரத்தில் உருவான இவள் என் மகள் என்றால் , இப்பூவுலகில் வாழும் அனைத்து பெண்களும் எனது மகளைப் போன்றவர்களே…..

இவர்களை எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும், பாதுகாப்பது என் கடமை என்று ஒவ்வொரு ஆணும் உணரத் துவங்கிவிட்டால், இதனை விட வேறு என்ன பெண்கள் பாதுகாப்பு இருந்துவிட முடியும்.

 

ஆனால், இவை உடனடியாக நிகழும் மாற்றமல்ல…. 

மெதுவாக நிகழ்ந்தாலும் இதுவே நிரந்தரமான, நாளைய சமுதாயத்திற்கு தேவையான மாற்றம். இத்தகைய மாற்றத்தை உருவாக்கும் பொறுப்பு பெண்களாகிய நம் கைகளில்தான் உள்ளது.

 

    எதிர்வரும்  சுய ஒழுக்கம் நிறைந்த சமுதாயத்தைக் கட்டமைப்பதில் மாணவ மாணவியர் பங்கு என்ற தலைப்பில் மிக அழகாக பேசிக்கொண்டிருந்தாள் பூரணி. 

நீண்ட நெடிய ஐந்து வருடங்கள் அவளிடத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தது. சில காயங்கள் மருந்தால் சரியாகும்… சில காயங்கள் மறந்தால்தான் சரியாகும்… காலம் அவளது காயங்களை மறக்க வைத்து மாற்றியிருந்தது. 

அணிந்திருந்த நேர்த்தியான காட்டன் புடவையும், முகத்தில் தென்பட்ட தன்னம்பிக்கையும் உறுதியும் தனி சோபையைக் கொடுத்திருந்தது அவளுக்கு. முப்பதுகளின் ஆரம்பத்தில் இருந்தவளுக்கு, வயதுக்கேற்ற முதிர்ச்சி வந்திருந்தது. 

மனைவியின் பேச்சை முகத்தில் மிளிர்ந்த புன்னகை அகலாமல் ரசித்தபடி அந்த அரங்கத்தின் கடைசி வரிசையில் கம்பீரமாய் அமர்ந்திருந்தான் ஆனந்தன். அவனது வலது கரம் அவன் தோளில் சாய்ந்து உறங்கிய ஒரு வயது மகளை மென்மையாய் வருடியபடி இருந்தது.

வாழ்ந்து கொண்டிருக்கும் இனிய வாழ்க்கையின் பூரிப்பு, முகம் முழுவதும் பொங்கி வழிந்தது. முகத்தின் தழும்புகள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாக ஓரளவு சீர் செய்யப்பட்டிருந்தன.  

அவனது தந்தைக்கும் சித்தப்பாவுக்கும் வயதாகித் தளர்ந்து விட்டதால் அவர்களின் ஆலோசனையோடு, அக்கா கணவர்கள் உடன் இணைந்து அவர்களது வியாபார நிறுவனங்களைப் பார்த்துக் கொள்கிறான். இடைப்பட்ட காலத்தில் புத்திர சோகத்தில் மூழ்கி, கவனிக்காமல் ஏனோதானோவென்று இருந்த தொழில் ஆனந்தனின் வரவுக்குப் பிறகு நல்ல முன்னேற்றம் அடைந்திருந்தது. 

அவ்வப்போது அவன் மீது பாய்ந்த மனையாளின் பார்வையை ரசித்தபடி அமர்ந்திருந்தான். பார்வை படும் இடத்தில் ஆனந்தன் இருந்தாக வேண்டும் பூரணிக்கு. அவளின் ஆத்ம பலமே அவன்தான். 

ஐந்து வருடத்தில் எவ்வளவோ அவளது தைரியம் மீண்டிருந்தாலும், அவ்வளவுக்கும் அடிநாதம், தன் நிழலாக கணவன் உடனிருப்பான் என்ற எண்ணமே. 

ஆனந்தனின் செல்பேசி உறுத்தாத மெல்லிசையை வெளிப்படுத்த,  மகளின் உறக்கம் கலைந்துவிடுமோ என்று அவசரமாக அழைப்பை ஏற்று காதில் வைத்தான். 

“எய்யா… ஆனந்தா, நேரமாகிட்டே… இன்னமும் உங்களைக் காணோமேன்னு ஃபோன் போட்டேனப்பு.” வாஞ்சையான பெரியம்மாவின் குரல் காதில் மோத… 

“இதோ வந்துடுவோம் பெரியம்மா. இன்னும் கொஞ்ச நேரத்துல புரோகிராம் முடிஞ்சிடும் வீட்டுக்கு வந்துடுவோம்.”

“சரிப்பு… இன்னைக்கு வீட்ல விசேஷமில்ல. சொந்தபந்தமெல்லாம் வந்தாச்சு. எல்லாரும் சின்னக்குட்டியத்தான் கேக்காக. வெரசா வரப்பாருங்க.”

“சரி பெரியம்மா.”

பேசி முடித்ததும் அலைபேசியை அணைத்து பாக்கெட்டினுள் போட்டுக்கொண்டவனுக்குள் எப்போதும் போல ‘சொந்த பந்தங்கள் அமைந்ததில் நான் வெகுவாக கொடுத்து வைத்தவன்’ என்ற எண்ணம் ஓடியது. 

மீண்டு ஐந்தாண்டுகள் ஆகியிருந்தாலும் நடைபெற்ற சம்பவங்களின் எச்சம் அடிமனதின் ஆழத்தில் இன்னும் தன்வீட்டு பெரியவர்களுக்கு இருப்பதை அவனால் உணர முடிந்தது. 

சொல்லிச் சென்ற நேரத்துக்கு வர சிறிது தாமதமானாலும் உடனடியாக பெரியம்மாவிடம் இருந்து ஃபோன் வந்துவிடும். அவனுடைய நலத்தை அவன் வாயால் கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும் அவருக்கு. 

பழைய நினைவுகள் எதுவுமே அவ்வளவாக அவனுக்குத் திரும்பாத போதும், சுற்றியிருந்த சொந்தங்களின் தன்னிகரற்ற பாசம் அவர்களை உணர அவனுக்குப் போதுமாயிருந்தது. பழைய சம்பவங்கள் நினைவுக்கு வராவிட்டால் என்ன? புதிதாய் வாழத் தொடங்கினான். 

அவனைக் கண்ணால் கண்டதே அவனது அன்னையின் உடல்நலனை மீட்டிருக்க, மறைந்திருந்த மகிழ்ச்சி அவ்வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மலரத் துவங்கியது. 

தன் கணவன், தன் தாய், தந்தை, சொந்தங்கள் தவிர வேறு யாரோடும் பழக மறுத்த பூரணியை பேசிப் பேசி அவளது பழைய தைரியத்தை மீட்க அவர்களுக்கு பல மாதங்கள் ஆனது. 

அதற்கு பெரிதும் துணையாய் இருந்தவர் தியாகராஜர் கல்லூரி உளவியல் துறை பேராசிரியர் தமிழரசி பாண்டியன்.  

பாலியல் பாதிப்புக்கு உள்ளான பெண்களுக்கு,  சமூகத் தொண்டாக உளவியல் ஆலோசனைகள் அளித்து அவர்களை இயல்புக்குக் கொண்டுவரும் பணியை சத்தமில்லாமல் செய்து வந்தவர். 

பூரணியோடு பொறுமையாகப் பேசிப் பேசி அனைத்து மனிதர்களையும் பயமின்றி எதிர்கொள்ளும் பக்குவத்தை அவளுக்குள் கொண்டு வந்தவர் அவர்தான். கூடவே பேச்சுப் பயிற்சிகளும் அளிக்கப்பட நல்ல முன்னேற்றம் காணப்பட்டது பூரணியிடத்தில். 

ஓரளவுக்குத் தெளிந்து வந்தவள், அவருடைய ஆலோசனையின் பேரில் தியாகராஜர் கல்லூரியிலேயே இளநிலை அறிவியல்,  உளவியல் துறையில் எடுத்துப் படித்தாள். இயல்பிலேயே புத்திசாலிப் பெண்ணான அவளுக்கு அது சாத்தியமானது. 

இப்பொழுது தொலைதூரக் கல்வி முறையில் உளவியல் ஆலோசனை குறித்து முதுகலைப் படிப்பையும் படித்து வருகிறாள். 

அவருக்குத் துணையாக பாலியல் பாதிப்புக்கு உள்ளான பெண்களுக்கு உளவியல் ஆலோசனை செய்யும் அளவுக்கு அவளுடைய மனநிலையும் உடல்நிலையும் நன்கு மாறியிருந்தது. 

இப்பொழுது கூட அவரது கோரிக்கையின் பேரில்தான் இந்தக் கல்லூரி ஆண்டுவிழாவில் பேச பூரணி ஒப்புக் கொண்டதால் இருவரும் வந்திருக்கின்றனர். 

இன்று அவர்களது செல்ல மகள் அமிர்தாவுக்கு முதல் வருட பிறந்தநாள். அந்தக் கொண்டாட்டத்துக்காக உற்றார் உறவினர் அனைவரும் வீட்டில் குழுமி வீடே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. 

காலையிலேயே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று குழந்தையின் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டபின் கல்லூரி விழாவுக்கு வந்திருந்தனர். இதை முடித்துக் கொண்டு சென்றதும் மாலையில் பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

பூரணி பேசி முடித்து, பிறகு விழா நிறைவு பெற்றபின், அவளை விழாவுக்குப் பேச அழைத்திருந்த பேராசிரியரிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தனர் ஆனந்தனும் பூரணியும். கார் பார்க்கிங்கில் விட்டிருந்த தங்களது ஹூன்டாய் வெர்னாவை உயிர்ப்பித்துக் கிளப்பி சாலைப் போக்குவரத்தில் கலந்தனர். 

மகளின் உறக்கம் கெடாமல் மார்பில் சாய்த்து அணைத்தபடி முன் சீட்டில் ஆனந்தன் அமர்ந்திருக்க, வாகனத்தை லாவகமாக இயக்கிக் கொண்டிருந்தாள் பூரணி. 

“எப்படி மாமா என் ஸ்பீச்?”

“அசத்திட்டடா. சமூகத்துக்குத் தேவையான கருத்துக்கள். நல்லா தெளிவா பேசின.”

“நிஜமா தமிழரசி மேம்க்குதான் நன்றி சொல்லனும். நான் படிச்ச காலேஜ் ஃபங்ஷன்ல நானும் கெஸ்ட்டா கலந்துக்கிட்டு பேச வாய்ப்பு கிடைச்சதுல ரொம்பவே சந்தோஷமா ஃபீல் பண்றேன் மாமா. அதோட குட்டிமா பர்த்டே வேற… காலையில இருந்தே செம ஹேப்பி மூட்தான். ஹரிணி பேசினாளா மாமா? எப்ப வர்றாங்களாம்?”

வாய் மூடாமல் படபடவென பேசிய பூரணியை, கண்களின் காதல் மாறாமல் ரசித்தபடி வந்தவன் அவளது இறுதி கேள்விக்கு பதில் கூறினான். 

“ம்ம்… பேசினாடா. திருச்சியில இருந்து எல்லாரும் கிளம்பிட்டாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துடுவாங்க.”

“எல்லாரையும் பார்த்து ரொம்ப நாளாகுது இல்ல மாமா. குட்டிமா பிறந்தப்ப வந்தாங்க. சுஜி வராளா?”

“ம்ம்… வர்றாடா. 

ஹரிணியும் சரணும் தற்போது இரண்டு வருடங்களாக ஹைதராபாத்தில் வசித்து வருகின்றனர். தீரன் ரிடையர்டு ஆகிவிட,  திலகவதியும் தனது பணியை ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊரான திருச்சிக்கே வந்துவிட, ஹரிணியின் பெற்றோர் மற்றும் தனாவின் பெற்றோர் வசிக்கும் பகுதியிலேயே அவர்களும் வீடு வாங்கி செட்டில் ஆகிக் கொண்டனர். 

சரணுக்கு அவ்வப்போது பணி நிமித்தமாக மாற்றல் வரும் என்பதால் ஹரிணி மட்டும் அவனோடு அலைந்து கொண்டிருக்கிறாள்.  அவர்களுக்கு மூன்று வயதில் ஹரிஹரன் என்ற மகனிருக்க, ஹரிணியின் பொழுதுகள் மகனோடு பிசியாக சென்று கொண்டிருக்கிறது. 

முதுகலை பட்டப் படிப்பை படித்து முடித்தவள், மகன் சற்று வளர்ந்ததும் பணிக்குச் செல்ல முடிவெடுத்திருந்தாள். சுஜியும் ஹரிணியுடன் பெங்களூருவில் முதுகலைப் பட்டம் பெற்று மீடியாவில் சில வருடங்கள் பணிபுரிந்தவளுக்கு சமீபத்தில்தான் திருமணம் முடிந்திருந்தது. 

அனைவருமே ஆனந்தனின் மகள் முதல் பிறந்தநாளுக்காக திருச்சிக்கு வந்திருந்தனர்.  அங்கிருந்து பெற்றவர்களையும் இணைத்துக் கொண்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.  ஆனந்தனின் உருவில் இழந்த தம் மகனை பார்த்துக் கொள்வர் தனாவின் பெற்றோர்.

தனாவின் பெற்றவர்களையும் ஹரிணியின் பெற்றவர்களையும் ஆனந்தனுக்கு நேரமிருக்கும் போதெல்லாம் திருச்சிக்குச் சென்று பார்த்துக் கொள்வான். தனாவை இழந்து வேதனையில் தவித்தவர்களை ஆனந்தன் அவர்கள் மீது காட்டிய தன்னலமற்ற அன்பு கொஞ்சம் கொஞ்சமாக மீட்டுக் கொண்டுவந்தது. 

கார் அவர்களது வீட்டை அடையவும் அவர்களது மகளரசி கண் விழிக்கவும் சரியாய் இருந்தது. வாசலிலேயே இவர்களது வரவை எதிர் பார்த்து நின்றிருந்த பெரிய பாட்டியிடம் தாவிக் கொண்டது சின்ன சிட்டு. 

பால் குடிக்கும் நேரம் மட்டுமே அன்னையைத் தேடும்… மற்ற நேரங்களில் அப்பாவோ பாட்டிகளோ தாத்தாக்களோ மட்டும் போதும் அமிர்தாவுக்கு. அனைவருக்குமே செல்ல அம்முக்குட்டி அவள். வீட்டின் உயிரோட்டத்தை தான் பிறந்த இந்த ஒரு வருடத்தில் முழுமையாக கொண்டு வந்தவள். 

முழுதாக எட்டு வருடங்கள் பிள்ளைகளை இழந்து விட்டதாக எண்ணித் துயரப்பட்டுக் கொண்டிருந்த பெரியவர்களுக்கு இருவருமே உயிரோடு மீண்டது சொல்லொணா சந்தோஷத்தைக் கொடுத்த போதும், பூரணியின் நிலை மனதில் ரணத்தைக் கொடுத்தது.

ஆனந்தன் பூரணியின் திருமணத்தைக்கூட ஊரைக்கூட்டி சந்தோஷமாக நடத்த முடியாத சூழலே அப்போது இருந்தது. இருவீட்டு நெருங்கிய உறவுகளை மட்டும் அழைத்து குலதெய்வம் கோவிலிலேயே மிக எளிமையான முறையில் திருமணத்தை முடித்துக் கொண்டனர். 

இருவரது வாழ்வும் செழிக்க வேண்டும் என்பது மட்டுமே அனைவரது பிரார்த்தனையாக இருந்தது அப்போது. 

 ஆனந்தனின் மிகப் பொறுமையான அணுகுமுறையும் பேராசிரியர் தமிழரசி பாண்டியனின் கவுன்சிலிங்கும் மெல்ல மெல்ல பூரணியைத் தேற்றி, இருவரின் வாழ்வும் மலர்ந்து பூரணி கருவுற்ற செய்தியைக் கேட்டபோது, குடும்பத்தினர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது. 

பூரணியைத் தங்கத் தட்டில் வைத்துத் தாங்கிக் கொண்டனர்.  ஊரார் கண்படும் என்று வளைகாப்பைக்கூட வீட்டோடு முடித்துக் கொண்டனர். நல்லபடியாக பிள்ளை பிறந்து பூரணி நலமோடு மீளவும்தான் அவர்களுக்கு ஆசுவாசமானது. 

திருமணத்திற்கும் சொல்லவில்லை, வளைகாப்புக்கோ பிள்ளை பிறந்தபோதோ கூப்பிடவில்லை என்று சொந்தபந்தங்கள் வருத்தம் கொள்ள, பேத்தியின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட ஒப்புக் கொண்டார் ஆனந்தனின் அம்மா. 

அதுவும்கூட ஆடம்பரமாக ஹோட்டலிலோ மண்டபத்திலோ செய்யக்கூடாது, வீட்டில் சுருக்கமாக செய்வோம் என்றும் கூறியிருந்தார். அவரது சொல்படியே வீட்டிலேயே எளிமையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது விழா. 

ஆனந்தனின் மாமன்கள் வீட்டின் முன்னும் மாடியிலும் பந்தல்போடும் வேலைகளையும் அலங்கார வேலைகளையும் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்க அவர்களோடு இணைந்து கொண்டான் ஆனந்தன். புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்ட வீடு அலங்காரத்தில் ஜொலித்தது. 

வந்திருந்த உறவினர்களை வரவேற்று உபசரித்த பிறகு,  ஆட்களை வேலைக்கு அமர்த்தி பின்கட்டில் சமையல் தயாராகிக் கொண்டிருக்க,  அதனை கவனிக்கச் சென்றாள் பூரணி. 

திருவண்ணாமலையில் இருந்து வந்திருந்த பூரணியின் அண்ணன்கள் அத்தை மகன்கள் அனைவருக்குமே திருமணமாகி குழந்தைகள் பிறந்திருக்க திரும்பிய இடமெல்லாம் பிள்ளைச் செல்வங்கள் ஓடிவிளையாடி வீட்டை கலகலக்கச் செய்திருந்தனர். 

கூடவே ஆனந்தனின் அக்காமார்  மதினிமார் பிள்ளைகளும் சேர்ந்து கொள்ள வீடே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. வெகு வருடங்களுக்குப் பிறகு வீட்டில் நடக்கும் விசேஷம் ஆகையால் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. 

பூரணியைத் தேடி வந்த மாதவி, “பூரணி அம்முக்குட்டிக்கு சாப்பாடு ஊட்டலாமா? அம்மா கேட்டாங்க. சாப்பாடு ஊட்டுனா தூங்குவால்ல. சாயங்காலம் பங்ஷனுக்கு ஃபிரெஷ்ஷா இருப்பா பாப்பா.”

“மாதவிக்கா அவ நல்லா தூங்கி எழுந்துட்டா. இனி தூங்க மாட்டா. சாப்பாடு மட்டும் ஊட்ட சொல்லுங்க. பசங்களோட விளையாடட்டும்.”

“சரி, ஆனந்தனும் நீயும் சாப்பிடுங்க. மாடியில பந்தி நடக்குது. இங்க ஆளுங்க பார்த்துக்குவாங்க. நீயுமே கொஞ்சம் படுத்து தூங்கு. டயர்டா தெரியற.” வாஞ்சையோடு பூரணியின் முகத்தைக் கையால் பற்றிக் கொண்டு கூறிய மாதவியை அணைத்துக் கொண்டவள். 

“சோ ஸ்வீட் மாதவிக்கா. எனக்கு டயர்டெல்லாம் எதுவுமே இல்லை. ரொம்ப நாள் கழிச்சு நம்ம வீட்ல நடக்குற ஃபங்ஷன், நான் ரொம்பவே ஹேப்பியாதான் இருக்கேன். ஹரிணி சுஜி ரெண்டு பேரும் குடும்பத்தோட வந்துகிட்டு இருக்காங்க. அவங்க வந்ததும் அவங்களோட சேர்ந்து சாப்பிடறோம்.”

அங்கேயிருந்த ஆனந்தனின் தமக்கைகளும் வேலைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீ போய் பிள்ளையோடு இரு என்று கூறவும் வேறுவழியின்றி தன் மகளுக்கு மாலையில் அணிவிக்க வேண்டிய உடைகளையும் நகைகளையும் எடுத்து வைக்கச் சென்றாள். 

உண்மையில் அந்த கூட்டுக் குடும்பத்தில் அனைத்து வேலைகளையும் பகிர்ந்து அனைவரும் செய்ய, பூரணிக்குச் செய்ய வேலைகள் ஏதுமில்லை. எத்தனை வயதானாலும் அந்த வீட்டின் குட்டி இளவரசியாய்தான் அவளை நடத்தினர் அனைவரும். 

சற்று நேரத்தில் ஹரிணியும் சுஜியும் குடும்பத்தினரோடு வந்துவிட வீடே களைகட்டியது.  அனைவரையும் வரவேற்று உணவுண்ண வைத்து உபசரித்த பின்னர் பூரணியோடு இணைந்து கொண்டனர் ஹரிணியும் சுஜியும். அவர்களுக்கு ஒன்றுகூடி பேச ஆயிரம் கதைகள் இருந்தன. 

ஆனந்தனின் மகளுக்குதான் ஏக கொண்டாட்டம். பெற்றவளைத் தேடத் தேவையின்றி தேவதையாய் அனைவரும் தாங்கிக் கொள்ள,  பாரபட்சமின்றி கள்ளமில்லா பால் சிரிப்போடு அனைவரிடமும் தாவிக் கொண்டாள். 

சரணும் சுஜியின் கணவன் தீபக்கும் குழந்தையை தரையில் விடாமல் கொண்டாடித் தீர்க்க, சரணின் மகனான ஹரிஹரனுக்கும் மிக விருப்பமான விளையாட்டு பொம்மையாகிப் போனாள் அமிர்தா.  

மாலை நெருங்கும் நேரத்தில் ஹரிணியும் சுஜியும் அமிர்தாவை தயார் செய்யும் பொறுப்பு எங்களது என்று கூறிவிட,  ஆனந்தனும் பூரணியும் தனாவின் பெற்றோர் ஹரிணி மற்றும் சரணின் பெற்றோர், மற்றும் விழாவுக்கு வந்திருந்த  உறவினர்களை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். 

கோலாகலமாய் பிறந்த நாள் விழாவும் ஆரம்பமாகியது. வீட்டு தெய்வத்துக்கு பூஜை செய்து வழிபட்ட பின்னர், விழா துவங்கியது. மூன்றடுக்கு பெரிய சைஸ் கேக் ஆர்டர் செய்து வரவழைக்கப் பட்டிருக்க, அதன் மேல்புறம் குழந்தைகள் விரும்பும் வண்ணம் கார்டூன் கேரக்டர்கள் சித்திரமாய் இருந்தனர். 

இளஞ்சிவப்பு வண்ணத்தில் அடுக்கடுக்காய் பூக்களோடு இணைந்தாற் போலிருந்த ஃபிராக் குழந்தையை தேவதையாய் காட்டியது. ஆனந்தனும் பூரணியும் குழந்தையின் உடையோடு பொருந்தும் வண்ணத்தில் உடையணிந்து தயாராகி இருந்தனர். 

 ஆனந்தனும் பூரணியும் குழந்தையின்  இருபக்கமும் நின்று மெழுகுவர்த்தியை ஊதி அணைத்தபின் குழந்தையின் கைகளைப் பிடித்து  கேக்கை வெட்டி பிள்ளைக்கு முதலில் ஊட்டி விட்டனர். 

பின்னர் அமிர்தாவும் தனது பிஞ்சுக் கரங்களால் கேக்கை எடுத்து தாத்தா பாட்டியில் துவங்கி உறவினர்கள் அனைவருக்கும் ஊட்ட,  அனைத்து நிகழ்வுகளும் சரணின் கேமராவில் அழகாய் பதிவாகிக் கொண்டிருந்தது. 

வெகு திருப்தியாக விழா முடிந்ததும் அனைவருக்கும் விருந்து பரிமாறி, உபசரித்து, வந்திருந்த குழந்தைகள் அனைவருக்கும் சிறு விளையாட்டுகள் வைத்து பரிசுப் பொருள்கள் கொடுத்து வழியனுப்பும் வரை பூரணிக்கு உதவியாக ஹரிணியும் சுஜியும் பம்பரமாய் சுழன்றனர். 

அதன் பிறகு வீட்டினர் அனைவரும் உணவுண்டு முடித்து வெகுநேரம் சந்தோஷமாகப் பேசி சிரித்து மனநிறைவோடு இருக்கையில், அனைவரையும் அமர வைத்து ஆனந்தனின் அம்மா திருஷ்டி சுற்றிப் போட, படபடவென்று வெடித்த மிளகாயும் உப்பும் அவர்களுக்கு இனி நடப்பவை அனைத்தும் சுகமே என்று கட்டியம் கூறியது. 

வெகு நேரமாகிவிட்டது என்று கூறிக் கொண்டு ஹரிணியும் சுஜியும் கிளம்பத் தயாராகினர். பூரணிக்கு அவர்களை அனுப்ப மனமேயில்லை. 

“இருந்துட்டு நாளைக்குப் போகலாம்ல.”

“இல்ல பூரணிக்கா. நாங்க நாளைக்கு நைட்டு ஹைதராபாத் கிளம்பனும். சுஜியுமே நாளைக்கு கிளம்பிடுவா. இப்பவே திருச்சி போனா, பெரியம்மா பெரியப்பாகூட நாளைக்கு முழுக்க இருந்துட்டு ஊருக்குப் போவோம். அவங்களுக்கும் ஆறுதலா இருக்கும். நீங்களும் ஹேப்பிண்ணாவும் ஹைதராபாத் வாங்க.”

“வரோம் ஹரிணி… சுஜி அடுத்து உங்க வீட்டு விசேஷத்துக்கு நாங்க எல்லாரும் ஒன்னு சேர்ந்து வரனும் ஓகேவா.” குறும்போடு சுஜியைப் பார்த்து பூரணி கண்ணடிக்க, சுஜியின் வெட்கச் சிரிப்பில் சூழல் கலகலப்பானது.

“சுஜி உன்னோட கல்யாணத்துக்குதான் குட்டி பாப்பாவை வச்சுக்கிட்டு என்னால வரமுடியல. உங்க ஹேப்பிண்ணா மட்டும் வந்தாங்க. ஆனா இனி எந்த பங்ஷனையும் தவற விட மாட்டேன் கண்டிப்பா வந்துடுவேன்.”

“கண்டிப்பா கூடிய சீக்கிரம் விசேஷம் வச்சிடலாம் சிஸ். நீங்களும் அவசியம் வந்துடுங்க.” சுஜியின் கணவன் தீபக்கும் மனைவியை குறும்போடு நோக்கியபடி பூரணிக்கு பதில் கூற சுஜியின் வெட்கத்திலும் இளசுகளின் ஆரவாரத்திலும் மேலும் கலகலப்பானது வீடு.

“ஜூனியர் பெரிய பையனாகிட்டார். அவருக்கு குட்டியா தம்பியோ பாப்பாவோ வந்தாலும் கூடதான் நாமெல்லாம் அடுத்து ஒன்னு சேர்ந்து கொண்டாட முடியும்.” ஹரிணியின் மகனை தூக்கி அணைத்தபடி ஆனந்தன் கூற… 

“எனக்கு டபுள் ஓகே.” சரண் ஹரிணியைப் பார்த்துச் சிரிக்க… அவனை முறைத்தவள், “உங்களையும் உங்க மகனையுமே என்னால சமாளிக்க முடியல. இதுல இன்னோரு டிக்கெட் வேறயா?”

“நீ பெத்து மட்டும் குடுத்தா. நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம் வளர்த்துட மாட்டோம்.” தனாவின் அம்மாவும் இளையவர்களோடு கலந்து கொள்ள இனிமையாய் போனது பொழுது. 

கிளம்ப மனமே இன்றி கிளம்பினர் ஹரிணியும் சுஜியும். 

ஹரிணிக்கும் தாய் வீட்டில் தங்குவது போலதான் தனது ஹேப்பிண்ணா வீட்டில் தங்குவதும் மிக பிடித்தமானது. திருச்சிக்கு வரும் போதெல்லாம் மதுரைக்கு வந்து தங்காமல் அவள் செல்வதில்லை…  ஆனால் இந்த முறை உடனடியாக ஊருக்கு கிளம்புவதால் தன் பெற்றோரோடு ஒரு நாளாவது தங்க வேண்டுமே என்பதால் பூரணியிடமும் ஆனந்தனிடமும் கூறிக் கொண்டு  கிளம்பினர்.

ஹரிணியின் மகனுக்குதான் அமிர்தாவைப் பிரிய மனமில்லாமல் அழுது அடம் பிடிக்க, பாப்பா வளர்ந்ததும் நம்வீட்டுக்கு அழைத்துக் கொள்வோம் என்று சமாதானம் கூறி அவனை அழைத்துச் சென்றனர். 

ஓரளவுக்கு விழாவுக்கென வந்திருந்தவர்கள் அனைவரும் கிளம்பிவிட, குழந்தைக்கு சூடாக தண்ணீர் ஊற்றி மேல் கழுவிவிட்டு பால் கொடுத்து பாட்டிகளுடன் படுக்க வைத்தவள்,  ஆனந்தனுக்கும் தனக்கும் பால் ஆற்றி எடுத்துக் கொண்டு தன்னறைக்கு வந்தாள் பூரணி. 

காலையில் கோவிலுக்குப் போனதிலிருந்து தற்போது ஹரிணியும் சுஜியும் விடை பெற்று ஊருக்கு கிளம்பியது வரை நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் தனது டைரியில் எழுதிக் கொண்டிருந்தான் ஆனந்தன். 

இந்த நாட்குறிப்பு தன் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று என்பதை அவன் நன்கு உணர்ந்திருந்தான்.  நாட்குறிப்பு எழுத அவன் தவறுவதே இல்லை. 

ஒரு காலத்தில் அவன் உணர்வுகளின் புதையலாய் பாதுகாத்த நாட்குறிப்புதான் அவனுடைய அளவிலா காதலை பூரணிக்குத் தெளிவாக காட்டியது.  அவனைத் தேடி அவளை வரவழைத்தது. 

அதே நாட்குறிப்புதான் பின்னாளில் தன்னையே அவனுக்கு அடையாளம் காட்டியது. இந்த நாட்குறிப்பு மட்டும் இல்லாவிட்டால் அவனது வாழ்க்கையின் பல பொக்கிஷ நிமிடங்கள் அவனுக்குத் தெரியாமலேயே போயிருக்கும். 

“டைரி எழுதுறீங்களா மாமா?” என்றபடி பால் டம்ளர் ஒன்றை அவனிடம் நீட்டியவள் மற்றொன்றை தான் அருந்தியபடி ஆனந்தனின் தோள்களில் சாய்ந்து கொண்டு அவன் எழுதியதைப் படிக்கத் துவங்கினாள். 

எப்பொழுதுமே ஆனந்தனின் டைரியைப் படிக்க பூரணிக்குப் பிடிக்கும். கவிதையாய் வரிகளைப் புணைந்து நடைபெற்ற நிகழ்வுகளை நேரில் பார்ப்பது போல வார்த்தையில் வடித்திருப்பான். 

தன் தோள்களில் சாய்ந்திருந்தவளின் நெற்றியில் புரண்ட முடிகளை ஒதுக்கியவன், மென்மையாய் உதடுகளை ஒற்றி அவள் தலை மீது சாய்ந்து கொண்டான். 

ஆனந்தன் என்றுமே அமைதியானவன். அதிர்ந்து கூடப் பேசத் தெரியாதவன். இடையில் தன் மனையாளுக்கு நேர்ந்த கொடுமைகளே அவனை மூர்க்கனாக்கியிருந்தது. ஐந்து வருட இனிய வாழ்வில் மனம் பக்குவப்பட்டு மென்மை மீண்டிருந்தது. 

தாரத்தை குழந்தையாய் தாங்கிக் கொண்டவன் அவன். அமிர்தா வேறு பூரணி வேறு கிடையாது அவனுக்கு. பூரணி அவனிடத்தில் உணர்வதும் தாய்மை கலந்த காதலைத்தான். 

இன்னார்க்கு இன்னார் என்று இறைவன் போடும் கணக்குகள் என்றுமே நேர்த்தியானவை. ஆனந்தனுக்கு பூரணி அமைந்ததும் பூரணிக்கு ஆனந்தன் அமைந்ததும் அப்படியே. 

“நான் ரொம்ப லக்கி இல்லையா மாமா?”

“தேவதை மாதிரி பொண்டாட்டி, பொக்கிஷமா புள்ள, சொர்க்கமா வாழ்க்கை  கிடைச்சிருக்க நான்தான் லக்கி.”

அவனது பதிலில் நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் சிரிப்போடு எம்பி அவனிதழ்களில் தன்னிதழைப் புதைத்துக் கொண்டாள். 

 

தொடரும் ஏழ் பிறப்பும்

நான் வருவேன் கூட

உயிரே உன் மடிதான் என் மாளிகை…

 

தினமும் தோள் அணைக்க

நானிருக்கும் போது

தனியாய் வாடுவதோ என் தேவதை…

 

நீ இல்லையேல் நானில்லையே

நீரில்லையேல் வேறில்லையே…

 

சொந்தம் எனும் சந்தம் கொண்டு ஒரு

சிந்து படித்திட வா…

 

   சிந்துகளை சொல்லி சொல்லி

உன்னை அள்ளி எடுத்திடவா…

 

காலம் தோறும் காதல் பாடல் வாழும்…

 

 

வாழ்க்கை அனைவருக்கும் பூ பாதைகளை மட்டுமே விரிப்பதில்லை. கரடு முரடுகளும் காடும் மேடும் கலந்ததுதான் வாழ்க்கை. கடந்து வாழ்வதுதான் சாதனை. 

பிறக்கும் போது துன்பத்தை அனுபவிப்பவர் வாழ்வின் பிற்பகுதியில் இன்பம் காண்பதும், பிறக்கும் போதே செல்வாக்காய் பிறப்பவர் பிற்பாடு துன்பத்தில் உழல்வதும் நாம் கண்கூடாய் காண்பவை. 

வாழ்வில் இன்பமோ துன்பமோ நிரந்தரமில்லை. அதை ஒன்றுபோல் எண்ணி கடக்கும் பக்குவம் மட்டுமே நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியது. 

ஆனந்தனுக்கும் பூரணிக்கும் இடையில் வந்து துன்பம் விலகி இனிமையான வாழ்வொன்று அவர்கள் முன் விரிந்திருக்கிறது. இனி அதில் இன்பம் மட்டுமே நிலைத்திருக்க அனைவரும் பிரார்த்திப்போம்… 

சுபம்… 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

error: Content is protected !!