உருகிடும் உயிர்மெய்கள் 2

IMG-20210305-WA0007-ebaf7e7d

உருகிடும் உயிர்மெய்கள் 2

அத்தியாயம் – 2

 

தெய்வாதீனமாக மெரினா அருகிலேயே கேளிக்கை விடுதி ஒன்றில் இருந்ததால் செய்தியறிந்ததும் வெகு விரைவாக நேத்ரா இருந்த இடத்தை அடைந்திருந்தான் ரவீந்தர்.

அவனோடு அவனது நண்பர்கள் சிலரும் வந்திருக்க ஆளுக்கொரு புறமாய் வலைவீசி தேடியும் குழந்தை அகப்படாததில் நொடிக்கு நொடி பதட்டம் கூடியது.

வந்த வேகத்தில், “குழந்தை எங்க விளையாடுறான்னு கூட பார்க்காம ம…ரா புடுங்கிட்டு இருந்த?” என்று நேத்ராவிடம் எகிறியவன், அவளின் அழுகையையும் தவிப்பையும் பார்த்து சற்று இறங்கினான்.

“எங்கயும் போயிருக்க மாட்டா… இங்கதான் எங்கயாவது பக்கத்துல விளையாடிக்கிட்டு இருப்பா கண்டு பிடிச்சிடலாம். அழாத நேத்ரா”

மனைவியை சமாதானப் படுத்தினாலும் நேரம் போகப் போக அவனுக்கும் உதறல் எடுக்க ஆரம்பித்தது.

உடன் வந்த நண்பர்களும் தேடிப்பார்த்துவிட்டு வெறுங்கையோடு திரும்ப, நேத்ராவின் அழுகை அதிகமாகி மயங்கும் நிலைக்குப் போனாள்.

 காணமல் போன குழந்தையைத் தேடவா மயங்கி விழும் மனைவியைப் பார்க்கவா எனத் திண்டாடிப் போனான் ரவீந்தர்.

அருகே இருந்த கடையில் சோடா ஒன்றை வாங்கி அவளது மயக்கத்தைத் தெளிவித்து அவளை காரில் அமரச் செய்தவன் மீண்டும் ஒருமுறை அந்த பகுதியை சல்லடையாய் சலித்துப் பார்த்தான். குழந்தை எங்குமே காணாமல் போக அவனுக்குமே அழுகை முட்டியது.

அங்கே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவரும் விபரம் அறிந்து வந்தவர்,

“சார், பார்த்தா படிச்ச பசங்களா இருக்கீங்க, இங்கயே நேரத்தை கடத்தாதீங்க. இவ்ளோ நேரம் புள்ளய காணோம்னா யாராவது தூக்கிட்டு போயிருக்கனும். இந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷன்ல போய் முதல்ல கம்ப்ளைன்ட்ட குடுங்க சார்.

நானே இதை சொல்லக்கூடாது… யாராவது பெரிய அதிகாரிங்களைத் தெரியுமா? அவங்க மூலமா போனீங்கன்னா சீக்கிரம் ஆக்ஷன் எடுப்பாங்க. இல்லனா ரொம்ப மெத்தனமா வேலை நடக்கும்.”

“பெரிய அதிகாரியா? அப்படி யாரையும் தெரியாதுங்களே.” ரவீந்தர் பதில் கூறிக் கொண்டிருக்க, அவனுடைய நண்பன் ஜெகனோ…

“ரவி, நம்மகூட யுஜி பண்ண ஜோவியோட ஹஸ்பண்ட் போலீஸ் டிபார்ட்மெண்ட்தான். டிஎஸ்பின்னு நினைக்கிறேன். அவர்கிட்ட ஹெல்ப் கேக்கலாம்.”

“எனக்கு அவ்வளவா பழக்கமே இல்லையேடா.”

“அதனால என்ன? யாரா இருந்தாலும் இந்த மாதிரி சிச்சுவேஷன்ல ஹெல்ப் பணாணுவாங்கடா. நான் அவளை ஃபேஸ்புக்ல ஃபாலோ பண்ணிட்டுதான் இருக்கேன். அவ நம்பரும் என்கிட்ட இருக்கு.”

பேசியபடியே ஜோவி என்று நண்பர்களால் அழைக்கப்படும் ஜோவிதாவின் எண்ணைத் தேடி எடுத்து அழைத்து அவளிடம் விபரத்தைப் பகிர்ந்திருந்தான் ஜெகன்.

அவளிடம் இருந்து அவளது கணவன் புகழேந்தியின் பர்சனல் நம்பரை வாங்கி அவரைத் தொடர்பு கொண்டவர்கள் விபரத்தைக் கூற,

அந்த கான்ஸ்டபிள் கூறியது போலவே உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும்படியும் சிறிது நேரத்தில் தான் அங்கு வருவதாகவும் கூறி வைத்தார் டிஎஸ்பி புகழேந்தி.

இவர்கள் காவல்நிலையம் சென்று புகார் கொடுக்க, அழாமல் தெளிவாய் பூஜா அணிந்திருந்த உடை அதன் நிறம் மற்றும் அவளது தலை அலங்காரங்களை நேத்ராவை சொல்ல வைப்பதற்குள் பெரும் பாடாய் போனது.

குழந்தையின் புகைப்படத்தை வாங்கியவர்கள், “நீங்க போங்க சார். குழந்தை கிடைச்சதும் ஃபோன் பண்றோம்” என்று சொல்லிவிட்டு அவர்களது பணியில் ஆழ்ந்துவிட, இவர்களுக்குதான் தாள முடியாமல் போனது.

“என்னடா இவ்ளோ அலட்சியமா சொல்றாங்க? புள்ளயக் காணோம்னு பதறுதுடா. பூஜா இல்லாம நான் வீட்டுக்குப் போக மாட்டேன். எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஜெகன். பூஜா கிடைச்சிருவால்ல?”

கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்ட ரவீந்தரை அணைத்துக் கொண்ட ஜெகன்,

“டேய் பாப்பா கிடைச்சிருவாடா. நீயே இப்படி உடைஞ்சு போனா சிஸ்டரை யாரு தேத்தறது? அவங்க பாவம் எப்படி அழுதுகிட்டே இருக்காங்க பாரு. எப்படியும் நைட்டுக்குள்ள பாப்பா கிடைச்சிருவா.”

ஜெகன் சற்று தன்னம்பிக்கையோடு பேசிக் கொண்டிருக்க, சற்று நேரத்தில் அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தனர் புகழேந்தியும் ஜோவிதாவும்.

பரஸ்பர அறிமுகத்திற்கு பிறகு ஸ்டேஷனுக்குள் சென்று குழந்தையைத் தேடும் பணி நிலவரத்தை விசாரித்தார் புகழேந்தி.

உயரதிகாரியின் வருகை அங்கிருந்தவர்களைப் பரபரப்பாக்கியது.  விரைப்பாய் எழுந்து நின்று மரியாதை செலுத்திய இன்ஸ்பெக்டரின் மரியாதையை ஏற்றுக் கொண்ட புகழேந்தி கேஸ் விபரத்தைக் கேட்க,

“சார் இப்பதான் எங்களுக்கு கம்பளைன்ட் வந்துச்சி சார்.

குழந்தையோட ஃபோட்டோவை கன்ட்ரோல் ரூம்க்கு அனுப்பியிருக்கோம் சார். எல்லா செக்போஸ்ட்க்கும் அனுப்ப சொல்லியிருக்கோம்.

அந்த ஏரியால மாமூலா குழந்தைங்களைக் கடத்துற ஆளுங்களைப் புடிச்சி விசாரிக்க கான்ஸ்டபிள உடனே அனுப்பறேன் சார்.”

இன்ஸ்பெக்டர் கூறியதும் கன்ட்ரோல் ரூமைத் தொடர்பு கொண்டு சென்னை மாநகர எல்லைகளின் சோதனைச் சாவடிகளை கண்காணிக்கச் சொன்னவர்,

“அதோட அந்த ஏரியால இருக்கற எல்லா சிசிடிவி புட்டேஜையும் செக் பண்ணுங்க.

கூடவே அந்த ஏரியால இருக்கற கடைகள்ல விசாரிங்க.

 பக்கத்துல இருக்கற குப்பத்து பிள்ளைகள்கிட்ட குழந்தையோட ஃபோட்டோவை காட்டி விசாரிக்கச் சொல்லுங்க.

அந்த பசங்கதான் சுண்டல் பஞ்சுமிட்டாய் பலூன் இதெல்லாம் பீச்ல ரெகுலரா விக்கிற பசங்க. குழந்தைய அவங்க பார்த்திருக்க வாய்ப்பு இருக்கு.”

“ஓகே சார்”

“விசாரிக்கிற தகவல்களை உடனே எனக்குத் தெரியப் படுத்துங்க.” என்றபடி புகழேந்தி எழுந்து கொள்ள,

“ஓகே சார்”  எழுந்து சல்யூட் அடித்தார் இன்ஸ்பெக்டர்.

ஸ்டேஷன் விட்டு வெளியே வந்த புகழேந்தி ரவீந்தரிடம், “நாம குழந்தை காணாம போன ஸ்பாட்டுக்கு போய் பார்க்கலாம்” என்க, மீண்டும் அனைவரும் மெரினா வந்து சேர்ந்தனர்.

பரபரப்போடு கழிந்த அந்த நிமிடங்களில் பூஜா தொலைந்த இடத்தைப் பார்வையிட்டு உடன் வந்த போலீசாருடன் சேர்ந்து அப்பகுதியில் விசாரணை நடத்தி முடிக்கையில் நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது.

அழுதழுது சோர்ந்து போன மனைவியும், நேரம் ஆக ஆக குழந்தையின் நிலை என்ன என்று தெரியாத சூழலும் ரவீந்தரை வெகுவாய் மிரட்டியது.

“சார், குழந்தை கிடைச்சிடுவால்ல?” தழுதழுப்பாய் வந்தது குரல்.

“கண்டிப்பா கிடைச்சிடுவா ரவீந்தர். பயப்படாம இருங்க.” கைகளைப் பிடித்து ஆறுதல் சொன்ன புகழேந்தியின் கரங்களை இறுக்கமாய் பற்றிக் கொண்டான் ரவி. நடுக்கமிருந்தது அவன் கரங்களில்.

“தைரியமா இருங்க ரவி. ஃபார்மலா என்னென்ன நடவடிக்கை எடுக்கனுமோ அதையெல்லாம் இன்ஸ்பெக்டர் செய்வார். அதை நானும் ஃபாலோ பண்ணிக்கிறேன்.

நீங்க வீட்டுக்குப் போங்க. உங்க மனைவியை தைரியமா இருக்கச் சொல்லுங்க. குழந்தையை எப்படியும் கண்டுபிடிச்சிடலாம்.”

“மாட்டேன்… பூஜா இல்லாம நான் வீட்டுக்குப் போக மாட்டேன்” நேத்ரா கதறி அழ,

“ப்ளீஸ் அழாதீங்க நேத்ரா. குழந்தை கண்டிப்பா கிடைச்சிடுவா. நீங்க தைரியமா இருங்க.”

வெகுவாய் அழுது தேம்பிய நேத்ராவை ஜோவிதா சமாதானம் சொல்லி ஆறுதல் படுத்த,

 ரவியைத் தனியே அழைத்த புகழேந்தி சில விபரங்களை அவனிடம் கூறினார்.

பின்னர் அவர்களை அனுப்பி வைத்துவிட்டு புகழேந்தியும் ஜோவிதாவும் தங்கள் வீட்டுக்குத் திரும்பினர்.

கார் பயணத்தில்…

“புகழ், குழந்தை கிடைச்சிடும்ல. ரவியையும் அவங்க வெய்ஃபையும் பார்க்கவே பாவமா இருக்கு.”

“குழந்தை தானா காணாம போயிருக்க வாய்ப்பில்ல ஜோ. யாராவது கடத்தியிருக்கனும்.”

“எதை வச்சு அப்படி சொல்றீங்க?”

“குழந்தையோட வயசு… அவ காணாம போன இடத்துல நடத்திய விசாரணைகளை வச்சுதான் சொல்றேன். அந்த ஏரியா சிசிடிவி கேமரா புட்டேஜ பார்க்க சொல்லியிருக்கேன். பார்க்கலாம்… லோக்கல் கும்பலா இருந்தா உடனே மாட்டுவாங்க.”

“…”

“பணத்துக்காக யாராவது கடத்தியிருந்தா உடனே சேஃபான இடத்துல குழந்தைய பதுக்குனதும் ஃபோன் பண்ணி டிமாண்ட் பண்ணுவாங்க.

அதிகபட்சம் அஞ்சாறு மணி நேரத்துக்குள்ள ஃபோன் வரலாம். ரவிகிட்ட தெளிவா சொல்லியிருக்கேன். அவங்க டிமாண்டுக்கு ஒத்துக்கிட்டு பணம் ரெடி பண்ண அவகாசம் கேட்க சொல்லியிருக்கேன்.

வர்ற காலை ரெக்கார்ட் பண்ண சொல்லியிருக்கேன்.

பொதுவா இப்படி பணத்துக்காக கடத்தியிருந்தா நல்லா தெரிஞ்ச நபர்களா இருக்க வாய்ப்பு இருக்கு. வேலையாட்கள் டிரைவர் இப்படி…

 அதே நேரம் வழக்கமா கடத்தல்ல ஈடுபட்டு பணம் பறிக்கிற கும்பலா இருக்கவும் வாய்ப்பு இருக்கு.”

“வழக்கமா கடத்துற கும்பல்னு சொல்றீங்க. யார் யார் கடத்துறான்னு தெரியும்தான… அவங்களை புடிச்சு ஜெயில்ல போட முடியாதா?”

“கஷ்டம் ஜோ… இது பெரிய நெட்வொர்க். குழந்தைய கடத்துறவன் அடுத்தடுத்து கைமாத்திக்கிட்டே போவான்… அவனுங்களுக்களுக்குள்ள ஒருத்தனுக்கு ஒருத்தன் அறிமுகம் கூட இருக்காது.

அவனுக்கு வேண்டிய பணம் வந்ததும் குழந்தைய கைமாத்தி விட்டுட்டு போயிட்டே இருப்பான்.

கிட்டத்தட்ட இருபத்துநாலு மணி நேரத்துக்குள்ள பத்து பேர்கிட்ட மாறும் குழந்தைங்க.

ஒருதடவை குழந்தைய கடத்தி பணம் பார்த்தான்னா கிட்டத்தட்ட ஆறு மாசம் வரை தலைமறைவா இருப்பான்.

அப்படியே நாங்க வளைச்சு யாரையாவது புடிச்சாலும், ஒருத்தரை ஒருத்தர் காட்டிக் குடுக்கவே மாட்டாங்க.

பெத்தவங்களை மிரட்றது பணம் பறிக்கறது இதெல்லாம் இவனுங்களுக்குத் தலைமையா இருக்கறவன் செய்வான். பணம் மட்டும்தான் அவனுங்க இலக்கு.”

 

“சப்போஸ் அப்படி பணம் எதுவும் கேட்டு ரவிக்கு ஃபோன் வரலன்னா?”

“அப்படி பணம் கேட்டு ஃபோன் வரலன்னா…?”

“…”

“குழந்தைய கடத்துனது லோக்கல் கும்பல் கிடையாது.”

“என்ன சொல்றீங்க புகழ்? அப்ப வேற யாரு?”

“குழந்தைகள் கடத்தல்தான் நம்ம நாடு சந்திச்சிக்கிட்டு இருக்கிற மிக மிக மோசமான பிரச்சனை ஜோ.

இந்தியால போன வருஷத்துல மட்டும் நாற்பதாயிரம் குழந்தைகள் கடத்தப்பட்டிருக்காங்க. அதுல சேதாரத்தோடயோ இல்ல சேதாரமில்லாமயோ மீட்கப்பட்ட குழந்தைகள் வெறும் பதினோராயிரம் மட்டும்தான்.

நம்ம தமிழ்நாட்ல மட்டுமே 800 குழந்தைகளுக்கு மேல கடத்தப்பட்டிருக்காங்க சராசரியா ஒரு நாளைக்கு ரெண்டு குழந்தைக்கு மேல… இதுல நூற்றுக்கணக்குல மட்டும்தான் குழந்தைகள் மீட்கப்படறாங்க…”

“கடவுளே…! அப்ப மீதி குழந்தைங்க?”

“என்ன ஆகுறாங்கன்னு கண்டுபிடிக்கவே முடியறதில்ல… ரொம்பவே வெட்ககேடான விஷயம்தான்.

பணத்துக்காக கடத்தப்படற குழந்தைகளை எங்களால ஓரளவுக்கு மீட்க முடியுது. ஆனா வேற காரணங்களுக்காகவும் குழந்தைகளை கடத்திக்கிட்டேதான் இருக்காங்க.

எதாவது ஒரு கடத்தல் கும்பலை மடக்கிப் பிடிச்சாலும் புற்றீசல் மாதிரி நிறைய கும்பல் வந்துகிட்டே இருக்காங்க. வேரோட அழிக்கவே முடியறதில்ல.”

“குழந்தைங்களை கடத்தி என்னதான் பண்ணுவாங்க? பணத்துக்காக கடத்தலன்னா வேற எதுக்காக?”

“பணம்தான் குறிக்கோள்… ஆனா நேரடியா பெத்தவங்களை மிரட்டி பணம் பறிக்கிறது ஒருவகைன்னா, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு கடத்திட்டு வந்த குழந்தைய வித்து பணம் பார்க்கறது ஒருவகை.

பிறந்த குழந்தைங்க, ஒரு வயது கூட நிரம்பாத சின்ன குழந்தைங்கதான் அவங்க டார்கெட். குறிப்பா பிளாட்பாரத்துல தங்கற ஏழைகளோட குழந்தைகள் நிறைய இதற்காகதான் திருடப்படுது.

அரசு மருத்துவமனைகள்ல பிறக்கற குழந்தைகளை திருடுறவங்களும் இருக்காங்க. இதுக்காக பெரிய நெட்வொர்க்கே இருக்கு.

பெண் குழந்தைகள் பெரும்பாலும் பாலியல் தொழில் செய்ய வைக்கிறதுக்காக, ஆபாச படம் எடுக்கறதுக்காக கடத்தப்படறாங்க. குழந்தைகளைக் கடத்தி அந்த தொழில் செய்யறவங்ககிட்ட பணத்துக்காக வித்துடுவாங்க.

மும்பை கொல்கத்தா மாதிரியான இடங்கள்ல இது சர்வ சாதாரணமா நடக்குது.

தனக்கு என்ன நடக்குதுன்னே புரியாம கடைசிவரை அந்த குழந்தைகள் நரகத்துல உழலும்.

அதோட ரோட்ல பிச்சை எடுக்கறதுக்காக, உடல் உறுப்புகளை திருடறதுக்காக, குழந்தை தொழிலாளர்களா கொத்தடிமைகளா வெளிநாடுகளுக்கு விற்கப்படறாங்க.

ஈராக் மாதிரியான நாடுகளுக்கு தற்கொலைப் படை தாக்குதலுக்கு ஈடுபடுத்தவும் குழந்தைகள் கடத்தப்படறாங்க.

இன்னும் கொடுமை என்னன்னா நரபலி கொடுக்கறதுக்கு கூட கடத்தப்படறாங்க நிறைய குழந்தைகள். ராஜஸ்தான்லயும் கேரளாவுலயும் இது பரவலா நடக்குது.

எவ்வளவுதான் கஷ்டப்பட்டு நாங்க கடத்தல் கும்பலை மடக்கி பிடிச்சாலும், கடுமையான சட்டங்கள் இல்லாததால ஈசியா தப்பிக்கிறாங்க”

வி‌பரங்களைக் கேட்கக் கேட்க கண்கள் நீரால் நிறைந்தது ஜோவிதாவுக்கு.

“இதுக்கு எதுவுமே செய்ய முடியாதா புகழ்? எத்தனை குழந்தைங்க? என்ன பாவம் செஞ்சாங்க அவங்க?

பிள்ளைகளை பறிகொடுத்த பெத்தவங்க எவ்வளவு பாவம்? நினைக்க நினைக்க மனசே ஆறல புகழ்.”

“இது தமிழ்நாட்ல மட்டும் இருக்கற நெட்வொர்க் இல்ல ஜோ. இந்தியா முழுக்க இருக்கற நெட்வொர்க். குழந்தைகள் கடத்தப்பட்டு இருபத்துநாலு மணி நேரத்துக்குள்ள கிட்டத்தட்ட பத்து கும்பலுக்கு மேல கைமாத்தி மாநிலத்தை விட்டு வெளியே கொண்டு போயிடறாங்க.

முக்கியமா மும்பை கொல்கத்தா இதெல்லாம் அந்த நெட்வொர்க் செயல் படற மையமா இருக்கு.

அதுக்கு அப்புறம் ஈசியா வெளிநாடுகளுக்கு கடத்துறாங்க. சங்கிலி தொடர் மாதிரி நடக்குது இது. வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கறது ரொம்ப கஷ்டம்…

அப்படியே நாங்க எதாவது ஒரு கும்பலை மடக்கி பிடிச்சாலும் அவங்க மத்த கும்பலை காட்டி குடுக்கறது இல்ல ஜோ.

கஷ்டப்பட்டு கடத்தல்காரங்களை நாங்க டிரேஸ் பண்ணாலும், கடத்தினவங்களைக் காட்டிக் குடுத்திடுவாங்கன்ற ஒரே காரணத்துக்காக கடத்தப்பட்ட குழந்தைகளைக் கொல்றதும் நிறைய நடக்குது.”

“ஹைய்யோ ரவி குழந்தையும் அப்படி எதாவது கும்பல்கிட்ட மாட்டியிருந்தா?” நினைக்கவே பயமாய் இருந்தது ஜோவிதாவிற்கு.

“அதுக்காகதான் உடனடியா குழந்தையோட ஃபோட்டோவை எல்லா செக்போஸ்ட்க்கும் அனுப்ப சொல்லியிருக்கேன். செக்கிங் ஸ்ட்ரிக்ட்டா பண்ணச் சொல்லியிருக்கேன். எல்லைகளைத் தாண்டி குழந்தை போக முடியாது.

ரெயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாண்டு ஏர்போர்ட்னு எந்த வழியாவும் குழந்தை சென்னைய விட்டு வெளிய போகாதபடிக்கு  அந்தந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்கும் குழந்தையோட ஃபோட்டோவை அனுப்பியிருக்கேன்.

இந்நேரம் எல்லா ஏரியாலயும் போலீஸ் செக்கிங் ஆரம்பிச்சிருப்பாங்க.

நாளைக்கு காலையில வரை பார்க்கலாம். எந்த ஃபோன் காலும் ரவிக்கு வரலன்னா அடுத்து என்ன செய்யலாம்னு யோசிப்போம்.

கண்டிப்பா குழந்தைய நல்லபடியா மீட்டுடுவேன்.” உறுதியான நம்பிக்கை இருந்தது அவன் குரலில்.

*****

வீடு வந்து சேர்ந்த நேத்ரா ரவியிடம் உயிர்ப்பே தொலைந்து போயிருந்தது.

குழந்தை இந்நேரம் என்ன செய்கிறதோ? எங்கே எப்படி கஷ்டப்படுகிறதோ என்று நினைக்கும் போதே நெஞ்சில் உதிரம் வடிய…

 அழுதழுது முகமும் கண்களும் வீங்கிப் போயிருந்தாலும் வற்றாத ஜீவநதியாய் கண்ணீர் பெருகி ஓட ஹால் சோபாவிலே சுருண்டிருந்தாள் நேத்ரா.

இரவெல்லாம் பொட்டுத் தூக்கமில்லாமல், பச்சைத் தண்ணீர் கூட பல்லில் படாமல் தவிப்போடு ஏதேனும் செய்தி வருகிறதா என்று அலைபேசியையே பார்த்துக் கொண்டிருந்த ரவிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஒருவருக்கொருவர் என்ன ஆறுதல் கூறிக் கொள்வது என்றுகூட புரியாமல், விடாது அழும் மனைவியை என்ன சொல்லித் தேற்றுவது என்று கூட புரியாமல் தவிப்போடு கடந்தது நேரம்.

விழிகள் எங்கோ வெற்றிடத்தை வெறித்திருக்க சிந்தை முழுக்க முழுக்க பிள்ளையின் நியாபகம்…

 

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைகிறேன்

கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித்தானே பெற்றேன் உன்னை
உடல் ஜவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

கண்கள் நீயே காற்றும் நீயே
தூணில் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானம் நீயே
ஊனும் நீ உயிரும் நீ

 

____ தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!