காதல் – ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் காதல் என்ற ஒன்றை கடந்துதான் வந்திருப்போம்!
காதல்-1
அந்த அதிகாலை மார்கழி மாத குளிரையும் பொருட்படுத்தாது, மெரினா கடற்கரை சாலையில் அவன் ஓடிக்கொண்டிருந்தான். அவன் உதய்சரண்.
அவன் தனது ஓட்டப்பயிற்சியை முடித்துவிட்டு வருவதற்குள் நாம் அவனைப் பற்றி அறிந்துகொள்வோம் வாருங்கள்.
அவனுடைய பிரியமானவர்களால் உதய் என்று அழைக்கப்படுபவனோ, ஆறடி உயரத்தில்,எழுவது கிலோ எடையில், இறுகிய உடல்கட்டுடன், பல பெண்களின் கனவு நாயகனாய் உலா வரும் இருபத்தியெட்டு வயதேயான ஆணழகன்.
அவனின் தீட்சன்யமான கண்களோ எவரையும், ‘பத்தடி தள்ளியே நில்’ என்று எச்சரிக்கும். தந்தை ரகுராம் மற்றும் தாய் மீனாட்சி அம்மாளின் முதல் சீமந்தபுத்திரன். தம்பி சஞ்சய்கிரண் மற்றும் தங்கை மானஸாவிற்க்கு அன்பான அண்ணணாகவும் சில சமயங்களில் கண்டிப்பானவனாகவும் இருப்பவன்.
தன் தங்கையைத் தவிர பிற பெண்களை அவன் கண்டுகொண்டதும் கிடையாது. இவனை நெருங்கும் பெண்களையும் ஒரு அலட்சிய பார்வையோடு விளக்கிவிடுவான்.
அவனின் வழக்கமான ஓட்டப்பயிற்சியை முடித்துக் கொண்டவனோ, தன்னுடைய ராயல் என்பீல்டில் அடையாரிலுள்ள அவனது வீட்டை நோக்கிப் பயணித்தான்.
பத்து நிமிட பயணத்திற்கு பின் அவன் வீட்டை அடையும்போது மணி ஐந்தரை மணியாகிவிட்டிருந்தது. யாரையும் தொந்தரவு செய்யாது, சமயலறை சென்று, தனக்கான காப்பியைக் கலந்து கொண்டு அருந்தியவன், தங்கையின் அறையில் லைட் எரிவதைப் பார்த்தவன் அவளுக்கும் ஒரு காப்பியைக் கலந்து கொண்டு அவளது அறைக்கதவைத் தட்டினான்.
“உள்ளவா அண்ணா!”
“குட் மார்னிங்டா! இந்தக் காப்பியைக் குடிச்சுட்டு தெம்பா படிப்பியாம்!”
“தாங்க்ஸ் அண்ணா”
“அடிவாங்கப் போற! அது சரி இந்த முறையாவது அந்த நாலு அரியரை க்ளியர் பண்ணுவியா?”
“யாருக்கு தெரியும்? நானும் வேண்டாத கோவில் இல்ல, வேண்டாத தெய்வம் இல்ல, ஆனாலும் இந்த நாலு பேப்பர்ஸ பாஸ் பண்ண முடியல”
“வேண்டின நேரத்துக்கு படிச்சிருக்கலாம்ல?”
“அடப்போணே, நீ வேற. இதுக்கு தான் அப்போவே நான் சொன்னேன். காலேஜ்லாம் படிக்கலனு. கேட்டியா? இப்போ பாரு!”
“தப்புடாமா. நாங்க எது பண்ணினாலும் அது உன் நல்லதுக்குதான் இருக்கும். அது போக, ஒரு பெண்ணுக்குப் படிப்பிங்கறது ரொம்ப முக்கியம். அது உனக்கு இப்போ புரியலனாலும் பின்னாடி புரியும்”
“ஆத்தாடி! அண்ணா காலையிலேயே உன் அறிவுரையை ஆரம்பிக்காத. உனக்குப் புண்ணியமா போகும்! நீ பேசுறது கேக்குறதுக்குனு ஒரு படையே இருக்கே! அங்க போய்டுண்ணே! மீப்பாவம் பச்சைபாப்பா”
“வாலு. சரி தூங்காம படி!”
“அவ என்னைக்குடா படிச்சிருக்கா? உங்க அப்பாவுக்குப் பயந்து கொஞ்ச நேரம் புத்தகத்தைத் திறந்து வச்சிருக்கா” என்றார் இவர்கள் பேசியதைக் கேட்டபடியே அங்கு வந்த அவரது தாயார் மீனாட்சி அம்மாள்.
“ஏன்மா?”
“பின்ன என்னடா ஏதோ அவ பப்ளிக் எக்சாமுக்கு படிக்குற மாறிச் சீன் போட்டுட்டு இருக்கா? நீ வேற காப்பி போட்டுக் குடுக்கற”
“பாவம்மா அவ!”
“அடப்போட அவளாவது படிச்சு பாஸ் ஆகுறதாவது”
“மம்மி, போதும் நிறுத்து. ரொம்ப ஓவரா பேசிட்ட, இந்த நாள் உன் டைரில குறிச்சு வச்சுக்கோ. இந்த எக்சாமில நான் பாஸ் ஆகுறேன்”
(பாஸ் ஆகுற ஐடியா அவளுக்குக் கிடையாத. அது அவள் அண்ணனிற்கும் தெரியும. சின்னப் பிள்ளை, விட்டுப் பிடிப்போம் என்று அவன் இருக்க, இவளோ தன் திட்டம் யாருக்கும் தெரியாது என்று மனக்கோட்டை கட்டி வைத்திருக்கிறாள்)
“அடச்சே போன வாரம்தானடி இந்த டயலாக்க சொன்ன. வாரவாரம் டைரில எழுத்திட்டுலாம் இருக்க முடியாது. உன்னை நம்பி டைரிய வேஸ்ட்ப் பண்ண முடியாது”
“அவமானம்”
“விடுடா மானு. இது நீ டெய்லி வாங்குறதுதானே”
“இதுக்குதான் சஞ்சய் அண்ணண் வேணுங்கிறது. அவன் இருந்தா இந்நேரம் எனக்குச் சப்போர்ட்டு பண்ணியிருப்பான்”
“யாரு அவன், உன் இம்சை தாங்க முடியாமதான்டி அவன் அமெரிக்காவிற்கு போய்ட்டான்”(உண்மையில் அவன் அமெரிக்காவிற்கு சென்றதிற்கு வேறு காரணமும் இருக்கிறது)
“அப்படி அவன் உன்கிட்ட சொன்னானாமா?”
“சொல்லலடி இரத்த கண்ணீர் வடிச்சான்”
“நீங்க மொக்க போட்டது போதும். நான் படிக்கணும் எல்லாரும் இடத்தைக் காலி பண்ணுங்க”
“அடியேய் நீ படிச்சு கிழிச்சது போதும். வா, வந்து பூரி போட ஹெல்ப் பண்ணு”
“இந்தா போய்டேன்ம்மா”.என்று அவள் பறந்து விடவே.
“இவளை நம்பி இவளுக்கு நீ காப்பி போட்டுக் கொடுக்கிற. நீ டெய்லி காப்பி போட்டுத் தருவனுதான் இவ படிக்குறேன்னு உக்காருரா போல”
“அவ படிக்குறதுக்கு எதாச்சும் ஏற்பாடு பண்றேன்மா”
“அடப்பாவி அண்ணா. காலேஜ் போறத்துக்கே எனக்கு டைம் இல்ல. நீ டியுஷன் சேர்க்க பிளான் போடுறியே” என்று அலறியபடி அங்குவந்து சேர்ந்தாள் மானசா.
“அடியேய் ஒட்டுகேட்டியா” மீனாட்சி கண்டிக்கும் குரலில் கேட்க,
“இந்தப் பக்கமா வந்தேன் அதுவே காதுக்குள்ள வந்துச்சு” என்று சமாளித்து வைத்தாள் அவள் வேறுவழி இல்லாமல்
“வரும் வரும்”
“மொத்தத்துல இந்த அண்ணணப் பிடிச்சு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கனும்! அப்போதான் எனக்கு நல்லது. அது சரி, இந்நேரம் அந்த அண்ணி கேரக்டர் என்ன பண்ணுதோ?” என்று மானசா வருத்தமாகக் கூற,
“அடி கழுதை ஓடிபோ” அவளது தாயார் அவளை விரட்ட, உதயிற்கு அவர்களது பேச்சைக் கேட்டு சிரிப்புதான் வந்தது.
***********
காலை -11 மணி
இடம்: மதுரை
“அடியேய் நான் பெத்த எருமை மாடே, எழுந்திரிடி. மணி பதினொன்னு ஆகுது. இன்னும் தூங்குற”
“அம்மா, நீ பெத்த எருமை மாடு இந்நேரம் வேலைக்கு போயிருக்கும். நான் நீ பெத்த கன்னுகுட்டி”
“எடு செருப்ப. ஏன்டி என் புள்ளை உனக்கு எருமையா?”
“இல்லயேம்மா, எருமை மாடுனுதானே சொன்னேன்”
“அடியேய் உன்னை…”
கையில் கிடைத்தை எடுத்துகொண்டு தன் மகளைத் துரத்தத் தொடங்கினார், அனுராதா!
தன் தாயின் அடிகளிள் இருந்து தப்பித்து, அவருக்கு போக்குக்காட்டி இருப்பவள், மீரா!
மீரா, மதுரையில் பிரபல தனியார் கல்லூரியில் எம்.பில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் இருபத்திநாலு வயது நிரம்பிய யுவதி !
இறுதியாகத் தாயிடம் மாட்டிக் கொண்டாள். அவரும் அவளின் காதைத் திருகி இருந்தார்.
“ஏன்டி வாய் கொழுப்பு உனக்கு அடங்கவே அடங்காதா?”
“இது வாய் கொழுப்பு இல்லம்மா”
“அப்புறம்?”
“என்ன அப்புறம் விழுபுரம்னு. அதான் எந்திருச்சுடேன்ல. போ… போய்க் காப்பி கொண்டா”
“என் மாமியார் கூட என்னை இப்படி வேலை சொன்னது இல்லடி”
“அந்தக் குறைய தீர்க்கதான் யாம் அவதாரமே எடுத்தோம் பக்தாய்”
“அதானே, ஏழு கழுதை வயசாச்சு இன்னும் ஒரு காப்பி போடத் தெரியல. வாய் மட்டும் காதுவரைக்கும் இருக்கு”
“நிறுத்து! காப்பி கிடைக்குமா? கிடைக்காதா? அத மட்டும் சொல்லு”
“ஏன்டி நான் நிறுத்தனும்”
“இதுலாம் ஒரு வீடா? மனுசி இருப்பாளா இங்க? காலையில் எழுந்துருச்சி ஒரு காப்பி கேட்டா, கொடுக்குறதுக்கு இங்க ஆள் இருக்கா?”
“அடியேய். போதும் நிறுத்துடி. மரியாதையா போய் பல்லு விளக்கிட்டு குளிச்சிட்டுவா. இன்னைக்கு வெள்ளிக்கிழமை”
“இருந்திட்டு போகட்டும். வெள்ளிக்கிழமனா குளிக்கனுமா என்ன? அப்போ மித்த நாளுக்குலாம் லீவ் விட்டு விடுவோமா?”
“இங்க பாருடி உனக்குப் பதில் சொல்ல எனக்கு நேரம் இல்ல. நான் உன்ன மாறி வெட்டியும் இல்ல. காப்பி வேணும்னா நான் சொன்னத பண்ணு”
“முடியாதுனா?”
“நீயே காப்பி போட்டுக் குடிச்சுக்கோ”
“சரி உனக்காகக் கொஞ்சம் இறங்கி வரேன்!”
“அப்படினா?”
“பல்லு வேணுனா விளக்கிகலாம்”
“அப்போ குளியல்?”
“டைம் இல்ல டைம் இல்ல…”
“எடு செருப்ப”
“இந்தா போய்டேங்ம்மா. நான் போய்ட்டு பல்லு விளக்கிட்டு குளிச்சிட்டு வந்தே சாப்பிட்டுகிறேங்கம்மா”
இப்படியாக அவர்களது காலை இனிதே தொடங்கியது, கொஞ்சம் கலக்கலான ரணகளத்தோடு!
மீரா, அனுராதா மற்றும் கணசேகரின் இரண்டாவது செல்ல மகள். தந்தை கணசேகர் குடும்ப கஷ்டத்தால் துபாயில் பணிபுரிந்து வருகிறார். ஆண்டிற்கு ஒருமுறை என்று என்றாவது வருபவர், சில காலமாகத் தன் மகளின் எதிர்கால வாழ்விற்க்காக உழைக்க வேண்டி, அந்த விடுமுறையையும் மறுத்து விட்டார்.
ஆரம்பத்தில் கஷ்டபட்டாலும், படிபடியாக முன்னேறி, இன்று ஒரு அளவுக்கு அப்பர் மிடில் க்ளாஸ் என்று சொல்லும் அளவிற்க்கு முன்னேறி உள்ளனர். இவளின் தமையன் மித்ரனோ, தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிகிறான். குடும்ப நிலை அறிந்து, நன்கு படித்து வங்கி தேர்விலும் வெற்றி அடைந்து, இப்போது மூன்று வருடங்களாக வேலை பார்த்து வருகிறான். தங்கைமேல் உயிரையே வைத்திருக்கும் பாசமான அண்ணணும் கூட. இப்படியான அழகான குடும்பம் இவர்களுடையது!
# # # # #
இங்கே தங்கை மற்றும் தன் தாயின் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து முடித்தவன் தன் அறைக்கு வந்து குளிக்கச் சென்றான்.
குளித்து முடித்து வந்தவனோ, அவனின் காக்கி ஆடையைக் கையில் எடுக்க, எப்பொழுதும்போல் அவன் உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்ப்பட்டது. அவனின் ஆசை, கனவு, இலட்சியம் எல்லாமே இந்தக் காக்கி சட்டைதான்.
ஆம்! பொதுமக்கள் பாதுகாப்பு பிரிவில் ஏசிபி உதய்சரண்தான் இவன். சிறு வயதில் காக்கி சட்டையைப் பார்த்து,’அது எனக்கு வேண்டும்’ என்று அடம் பிடித்தவன், பள்ளி படிக்கும்போது அதிகமாகப் போட்ட வேடம் கூட காவல் அதிகாரியாகதான்.
பார்க்கின்ற படம், படிக்கின்ற கதை, இப்படி அனைத்திலும் காவல் அதிகாரிகளை பற்றியே வேண்டும் இவனுக்கு. “நீ வெறும் வேடம் தான் போடுகிறாய், உண்மையான காவல் அதிகாரி நீ அல்ல” என்று அவனது நண்பர்கள் கேலி செய்ய, அன்று சொன்னதுபோலவே, இன்று உண்மையான காவல் அதிகாரி ஆகிவிட்டிருந்தான்.
கிளம்பி வெளியே வந்தவனோ, ஹாலில் தந்தை பேப்பர் படிப்பதைப் பார்த்து், “குட் மார்னிங்பா” என்றான்.
இவனின் தந்தை ரகுராம் ஆர் ஆர் கட்டுமான நிறுவனத்தின் முதலாளி. அந்தக் நிறுவனம், அவரின் தந்தை ராஜாராமால் உருவாக்கப்பட்டதாகும். இன்று சென்னையில் மிக முக்கிய புள்ளிகளில் இவரும் ஒருவர். ‘தனக்கு பின் தன் மகன்கள் தன் தொழிலைக் கையில் எடுப்பார்கள்’ என்று நினைத்துக் கொண்டு இருக்கையில், ஒருவன் காவல் அதிகாரி ஆகிவிட, இன்னொருவனோ அமெரிக்காவிற்க்கு செல்கிறேன் என்றுவிட்டான். அடுத்ததாக மகளிடம் சென்றவர், அவளோ காலேஜ் மட்டும் முடித்தால், நம்ம தலையில் கம்பெனியைக் கட்டி விடுவார்கள் என்று பயந்து நாலு அரியரை க்ளியர் பண்ணாமலே வைத்திருக்கிறாள்.
“குட் மார்னிங்டா கண்ணா. எங்க ஸ்டேஷனுக்கு கிளம்பிட்டியா?”
“இல்லப்பா. இன்னைக்கு கமிஷனரைப் பார்க்கப் போகனும்”
“சரி கண்ணா”
“தம்பி சாப்பிட்டு போ” தாயார் அவனது பசி அறிந்து அங்கு வந்த சேர,
“வேண்டாம்மா. இன்னைக்கு கமிஷனரோட பிரேக் பாஸ்ட்”
“சரிப்பா”
“வரேன்மா”
உண்மையில் அவன் இன்று சாப்பிட போவதில்லை. காலை உணவு மட்டும் அல்ல. அன்றும் முழுவதுமே உண்ணாநோன்புதான். இந்த நாளை அவனால் தன் வாழ்வில் என்றுமே மறக்க முடியாதே!
# # # # #
குளித்திவிட்டு வந்தவளோ, “அம்மா காப்பி… மம்மி காப்பி… அம்மி காப்பி… தாயே காப்பி…” ராகதோடு பாட்டு படிக்க,
அவளின் தாயோ, மூன்று தோசையோடு அவளுக்கு மிகவும் பிடித்த கார சட்டினியையும் வைத்தார்.
“தாயே இது என்னவோ?”
“காலைச் சிற்றுண்டி மகளே!”
“ஆனால், நான் கேட்டது அதுல? இதை வச்சா என்ன அர்த்தம்?”
“அத கொடுக்க முடியாது. மூடிகிட்டு இத திண்ணுனு அர்த்தம்”
“தவறு செய்துவிட்டாய் சிவகாமி”
“அப்படிதான் செய்வேன் கட்டப்பா”
“என்ன மீ?”
“நானும் பாகுபலி பாத்துட்டேன்டி”
“ஓ! முடிவா கேக்குறேன்”
“என்ன?”
“காப்பி தரமுடியுமா முடியாதா?”
“முடியாவே முடியாது. என்ன பண்ணுவ?”
“ஒன்னும் பண்ணமாட்டேன். அந்தத் தோசையையே குடு”
“அப்படி வா வழிக்கு. இதுக்காடி பாகுபலியை இழுத்திட்டு வந்த?”
“பின்ன என்னமா? அவ்ளோ கோடி செலவு பண்ணி படம் எடுத்திருக்காங்க, வரலாறு அதைப் பத்தி பேசனும்ல?”
“வரலாறு பேசட்டும், நீ ஏன்டி பேசுற?”
“நான் வருங்கால இந்தியாவின் முதுகெழும்பாச்சே!”
“போடி ஏதாச்சும் சொல்லிட போறேன், பேசாம சாப்பிடு, சும்மா காமெடி பண்ணிகிட்டு”
“பார்ரா ! நீ பாத்திட்டே இரு. ஒரு நாள் இல்ல ஒரு நாள், உலகமே என்ன பத்தி பேசும்”
“சரிடி. அம்மாக்கு வேலை இருக்கு. அம்மா போறேன். நீ தனியா எதையோ பேசிட்டு இரு”
“மறுபடியும் பார்ரா”
இவர்களது உரையாடல் எப்பொழுதும் இப்படிதான் இருக்கும், கலகலவென்று! பார்ப்பவருக்கு எப்படியோ, மீராவிற்கு அந்த நாள் தொடக்கம் முதல், குட் நைட் சொல்லி, படுக்க செல்லும்வரை இப்படிதான் இருக்க வேண்டும். தாயோடு வம்பிழுகாமல் அவளால் துளியும் இருக்க முடியாது. அவளது தாயிற்கு அப்படியே!
காவல் துறையே தனது வாழ் நாள் லட்சியம் என்று சுற்றி திரியும் உதய்யிற்கும், கலகலவென்று சுற்றித் திரியும் மீராவிற்கும், இடையில் காதல் மலருமா? இல்லை மலர்ந்து விட்டதா? பொறுத்திருந்து பார்ப்போம்!
காதல் தொடரும்…!
# # # # #