எங்கே எனது கவிதை – 30

th (10)-84fc4dc2

30 

காலைப் பொழுது அழகாக புலர, மெல்லிய மழைச் சாரல் பூமியை இதமாகத் தீண்டிக் கொண்டிருக்க, மழை மேகங்கள் முரசுக் கொட்டிக் கொண்டிருக்க, இரு இதயங்கள் ஆவலாக எதிர்பார்த்த அந்த நாளும் அழகாக விடிந்தது..

அன்று கார்த்திக், ஆதிராவின் திருமண நாள்.. மதி கேசின் விஷயத்திற்காக சென்னையிலேயே தங்கிக் கொள்ள, வேலையின் காரணமாக முந்தின நாள் காலை, அதியமானுடனும், சித்தார்த்துடன் கோயம்பத்தூர் வந்திருந்தான்..   

கைகளில் அழகாக மெஹந்தி போட்டுக் கொண்டு, இதழ்களில் மகிழ்ச்சி நிரம்பிய நாணப் புன்னகை ததும்ப, அழகிய பதுமையாக வரமஹாலக்ஷ்மி செய்யும் நலங்கு சடங்கிற்காக அவள் தயாராகி அமர்ந்திருக்க, சம்பிரதாயம் எனக் கூறி பாலகிருஷ்ணனின் வேண்டுகோளின் படி, கார்த்திக் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட, நலங்கு நிகழ்வுகளை சரவணன் வீடியோ காலில் காட்டிக் கொண்டிருந்தான்.. 

அழகான பட்டுப்புடவையில், கைகளில் அழகான வளையல்கள் அணிவகுக்க, அழகும் வனப்பும் சேர பதுமையாக அமர்ந்திருந்தவளைப் பார்த்தவனின் உள்ளம் அவளை நேரில் பார்க்கத் தவித்தது.. தனது மனைவியாகப் போகும் இனியவளை நேரில் காண கார்த்திக் மிகவும் ஆவலாகக் காத்திருந்தான்..

அதியமான், சித்தார்த்துடன் கார்த்திக், மருதமலைக்கு வந்து காத்திருக்க, சதாசிவமும், வரமஹாலக்ஷ்மியும், சில உறவினர்களுடன் ஆதிராவை அழைத்துக் கொண்டு வந்தனர்.. கார்த்திக்கின் கண்கள் அவளிடமே ஒட்டிக்கொள்ள,

“என்ன மச்சான்.. அப்படியே பிரீஸ் ஆகிட்டயா?” சித்தார்த் கிண்டலடிக்க,

“உங்க லவ் ஸ்டோரியும் எங்களுக்குத் தெரியும்.. உங்க கல்யாணத்துக்கு நானும் வந்திருந்தேன் மச்சான்.. அப்போ நீங்க ரெண்டு பேரும் விட்ட லுக்க நாங்களும் பார்த்தோம்.. இது இப்ப என் டர்ன்.. கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணாதீங்க..” கார்த்திக் தனது வேலையைத் தொடர, சித்தார்த், அதியமானைப் பார்க்க,

“அவன் என் ஜூனியர் தானே சகலை…” அதியமானின் பதில் சித்தார்த் தலையில் அடித்துக் கொண்டு நிற்க, கார்த்திக்கோ தனது உலகத்தில் சஞ்சரித்தான்..   

அழகிய அரக்கு நிறப் புடவை சரசரக்க, கழுத்தில் வெள்ளையும், அரக்கும் கலந்து தொடுத்த அழகிய ரோஜா மாலைச் சூடி, தலையில் சூடிய மல்லிகைச் சரங்கள் அவளது கூந்தலில் தனது அழகைச் சேர்க்க, அவளது நீளமான தலை முடி பின்னலிட்டு, அழகிய ரோஜாக்களினாலும், தங்க நிற முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்க, மெல்லிய கொடி போல நடந்து வந்தவளை கார்த்திக் விழிகள் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்..  

நடந்து வரும்பொழுதே, அவளது கண்கள் மெல்ல மேலெழும்பி, தனது மணவாளனாகப் போகும், தனது இனியவனைப் பார்த்தவளின் கண்கள் அவனது கம்பீரத்தில் அவனிடம் ஓட்டிக் கொண்டது.. பட்டு வேஷ்டி சட்டையில், கைகளைக் கட்டிக் கொண்டு அவன் நின்றிருந்த தோரணையில் அவனிடம் ஓடிச் செல்ல மனம் பரபரக்க, அவனிடம் இருந்து கண்களைத் தழைத்துக் கொண்டவள், மெல்ல அவன் அருகில் நடந்து சென்றாள்..  

இருவரையும் பார்த்த பெற்றவர்களின் மனம் நிறைந்து இருந்தது.. அவளை அழைத்துச் சென்று கார்த்திக்கின் அருகில் சுதா நிறுத்த, இருவரின் ஜோடிப்பொருத்தத்தையும் பார்த்த சதாசிவத்தின் மனம் மகிழ்ச்சியில் ததும்பியது.. அவளது வரவினால் தங்கள் வீட்டில் வீசப் போகும் வசந்தத்தை அனுபவிக்க தயாரானார்..       

தனது அருகே வந்து நின்றவளை கண்களால் அள்ளிப் பருகியவனின் கண்களைப் படித்தவளுக்கு, அவனது கண்களில் தோன்றிய நிறைவே மகிழ்ச்சியையும், நாணத்தையும் கொடுக்க, கண்களைத் தழைத்துக் கொண்டு, கைகளில் சிவந்திருந்த மருதாணி கரத்தினால், ராஜ அலங்காரத்தில், சாந்தமும், அழகும் தவழ்ந்த புன்னகையுடன் அருள் பாலித்துக் கொண்டிருந்த முருகப் பெருமானை கைக் கூப்பி வேண்டியபடி, கார்த்திகைப் பார்க்க, அவளைப் பார்த்தவன், இதழில் புன்னகையுடன் அவனும் கைக் கூப்பிக் கொண்டான்..  

“இங்கப் பார்த்தியா எங்க அண்ணனை.. அவளோட ஒரே பார்வைக்கு இப்படி அடங்கிப் போறானே..” சரவணன் கேலி செய்ய,

“நீயும் அப்படி தான் ஆகணும் சரவணா..” சித்தார்த்தின் கேலியில், அவனைப் பார்த்துவிட்டு, கார்த்திக் புன்னகையுடன் கை கூப்பி வேண்ட, அர்ச்சகர் உள்ளே பூஜை செய்யத் துவங்கினார்..

ஆதிராவின் கண்கள், முருகனைப் பார்த்திருக்க, இருவருமே அமைதியாக அந்த அழகான தருணத்தை மவுனமாக ரசித்துக் கொண்டிருந்தனர்.

சுதா கொடுத்த திருமாங்கல்யத்தை, முருகனின் பாதத்தில் வைத்து பூஜை செய்து எடுத்துக் கொண்டு வர,  அதைப் பார்த்த ஆதிராவின் தலை, மகிழ்ச்சியிலும், நாணத்திலும் கவிழ, அழகிய கொடியென தன்னருகில் நின்றிருந்தவளை திரும்பிப் பார்த்தவனின் இதழ்கள் புன்னகையைப் பூசிக் கொண்டது..

“ஹே ஆதிரா.. அண்ணாவை நிமிர்ந்துப் பாரு” சரவணன் ஆதிராவை வம்பு வளர்க்க, விழிகளை மட்டும் உயர்த்தி கார்த்திக்கை நிமிர்ந்துப் பார்த்தவள், அவன் புன்னகையுடன் நிற்கவும், நாணத்துடன் தலைக் கவிழ,

“என்ன பார்த்தியா? ஓகேவா இருக்கானா? என்ன என் ப்ரெண்டுக்கு வெட்கம் எல்லாம் வருது?” விடாமல் சரவணன் கேட்கவும்,

“டேய்.. சும்மா இருடா..” ஆதிரா அவனை அடக்க,

“ஹையோ சிஸ்டர்.. கார்த்திக் துரத்தி துரத்தி அடி வாங்கறதைப் பார்க்க நாங்க எல்லாம் ஆவலா வெயிட் பண்ணிட்டு இருக்கோம்.. இப்படி எல்லாம் அவன்கிட்ட சாஃப்ட்டா இருக்காதே..” சித்தார்த் கேலி செய்ய, அந்த நேரம் அர்ச்சகர் பூக்கள் நிறைந்த தட்டில் மாங்கல்யத்தை எடுத்துக் கொண்டு வந்து, அங்கு நின்றிருந்த பெரியவர்களிடம் ஆசிர்வாதத்திற்கு தர, பெற்றவர்கள் பயபக்தியுடன் மனம் நிறைந்து கண்களில் ஒற்றிக் கொண்டு ஆசிர்வதிக்க, அதியமானும் சித்தார்த்தும் அதே போல கண்களில் ஒற்றிக் கொள்ள,

‘இந்தாங்க.. முருகன நல்லா வேண்டிண்டு பொண்ணு கழுத்துல வச்சு கட்டுங்கோ..’ அய்யர் கொடுக்கவும், அதைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டவன், அதை எடுத்துக் கொண்டு ஆதிராவைப் பார்க்க, ஆதிரா அவன் சூடப் போகும் மாங்கல்யாதிற்காக காத்திருந்தாள்..

“கார்த்தி.. இப்படி அவளைப் பார்த்தபடி நில்லு..” சதாசிவம் அவனை அவளுக்கு நேராக நிற்க வைக்க, அவளது கழுத்தின் அருகே மாங்கல்யத்தை எடுத்துச் சென்றவன், அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டே மூன்று முடிச்சிட, தங்கள் வாழ்வு சிறக்க வேண்டி கைகளைக் கூப்பிய படி, அவன் தனது கழுத்தில் மாங்கல்யத்தை சூட்டும் தருணத்தை படபடப்புடன் ரசித்துக் கொண்டிருந்தாள்..

கார்த்திக் மூன்று முடிச்சிடவும், விழிகளை உயர்த்தி அவள் கார்த்திக்கைப் பார்க்க, அவளது கண்களைப் பார்த்தவன், புன்னகையுடன், அய்யர் அவன் கையில் கொடுத்து மாங்கல்யத்தில் வைக்கச் சொன்ன குங்குமத்தை வைத்து, அவளது நெற்றியில் அழகாக வைக்க, சித்தார்த், சரவணன் இருவரும் கைத் தட்டி ஆர்பரிக்க, கார்த்திக் ஆதிராவின் கையைப் பிடித்து அவளது விரலுடன் விரல் கோர்த்துக் கொண்டான்..

“ஐ லவ் யூ..” அவன் வாயசைக்க, நாணத்துடன் தலைக்கவிழ்ந்தவளை, அவளது நாடி பிடித்து கார்த்திக் நிமிர்த்த,

“அடேய்.. இது கோவில்.. அப்படியே சாமி கும்பிடு.. எங்க ரொமான்ஸ் பண்றதுன்னே அளவு இல்லையா?” வீடியோ காலில் இருந்த மதியின் குரலில், தலையில் அடித்துக் கொண்ட கார்த்திக்கிடம்,

“கங்க்ராட்ஸ் டா மச்சான்.. ஹாப்பி மேரீட் லைஃப் தங்கச்சி…” என்று வாழ்த்த,

“தாங்க்ஸ் மச்சான்.. ஆனாலும் நீ வீடியோ கால்ல வந்து கலாட்டா பண்ற பாரு.. அதைச் சொல்லணும்.. எல்லாம் என் நேரம்..” என்று கார்த்திக்கும் வம்பைத் துவங்க,

“போதும் கார்த்திக்.. அங்க சாமி கும்பிடுங்க.. அர்ச்சனை செய்யறாங்க..” அதியமான் சொல்லவும், மதி அமைதியாக, அர்ச்சனை முடித்து, சன்னிதானத்தை விட்டு வெளியில் வர,

“இந்தாங்க தம்பி.. இதை அவ காலுல போடுங்க..” சுதா கொடுத்த மெட்டியை ஆதிராவின் மென் பாத விரல்களைப் பிடித்து அணிவித்து, அவன் நிமிரவும்,

“ஹே.. கார்த்திக் காலை பிடிக்க ஆரம்பிச்சிட்டான்..” என்ற சித்தார்த்தின் கேலியில், அனைவரும் சிரித்து, மனநிறைவுடன் அங்கிருந்து கிளம்ப, வீட்டில் திருமண விருந்து கலைக் கட்டியது..

மீதிச் சடங்குகள் வீட்டில் நடக்க, கார்த்திக்கும் ஆதிராவும் அமைதியாக இருப்பது போல இருந்தாலும், மெல்லிய விரல் தீண்டல்களாலும், கண்களாலும், இருவரும் அருகாமையை அமைதியாக ரசித்துக் கொண்டிருக்க, அதைப் பார்த்த பெரியவர்களின் உள்ளம் நிறைந்து, இருவரும் இணைபிரியாமல், இன்பமுடன் வாழ மனதார வாழ்த்தினர்..

எட்டு மாதங்களுக்குப் பிறகு..

ஆதிராவை கடத்திய வழக்கு அன்று கோர்ட்டில் வாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.. முதலில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஆஜரான அதியமான் வாதத்தைத் துவங்கி வைக்க, இந்திரன் மற்றும் பகவான் தரப்பின் வழக்கறிஞர் தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தனர். அவர்கள் கூறும் வாதத்தை கூர்ந்து கவனித்து, அதியமானுக்கு உதவியாக கார்த்திக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான்.. அவர்களது வாதம் வெகு தீவிரமாக நடந்துக் கொண்டிருந்தது..

முதல் சாட்சியாக, சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சி கூறிய ஆதிராவிடம், அவளைக் கடத்தியவர்களை அடையாளம் காணச் சொல்ல, ஆதிரா, ஆதவனை அடையாளம் காட்டி, “இவரோட இவங்க வைஃப் இருந்தாங்க.. அவங்க இப்போ உயிரோட இல்லன்னு சொன்னாங்க.. இவங்க நான் தங்கி இருந்த ஃப்ளாட்ல குடி இருந்தாங்க.. அது மூலமா அந்த விசித்திரா எனக்கு பழக்கம்..” என்று சொல்லத் துவங்கியவள், நடந்த மொத்தத்தையும் சொல்ல, ஆதிராவிற்கு அந்த நாள் நிகழ்வுகளின் தாக்கத்திலும், தற்போதைய நிலையிலும் சோர்ந்து நின்றாள்..

எதிர் தரப்பு வழக்கறிஞர் ஆதிராவை குறுக்கு விசாரணை செய்யத் துவங்க, ஆதிரா பொறுமையாக பதில் சொல்வது போல இருந்தாலும், அவளது பதட்டத்தை குரலிலேயே கண்டுக் கொண்ட கார்த்திக்கின் இதயம் துடித்தது..

அவள் திரும்பி கார்த்திக்கைப் பார்க்க, அந்தக் கண்களில் இருந்த தவிப்பைக் கண்டவன், கண்களை மூடித் திறந்து அவளுக்கு ஆறுதல் சொல்ல, அவள் ஒரு பெருமூச்சுடன் அங்கு நின்றுக் கொண்டிருந்தாள்..

“உங்களோட கூற்று படி அவங்க அய்யான்னு தான் சொன்னாங்க.. அது யாரு அய்யான்னு நீங்க எப்படி சொல்றீங்க?” எதிர்தரப்பு வழக்கறிஞர் கேட்க,

“அதை நான் சொல்லலையே..” ஆதிரா பதில் சொல்ல,

“அது ஆதவனோட வாக்குமூலத்துல சொன்னது யுவர் ஹானர்..” என்று அதியமான் குறுக்கிட, ஆதிரா கால் மாற்றி மாற்றி நின்றுக் கொண்டிருக்க, அங்கிருந்த சித்தார்த்திற்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது.. அதை விட கார்த்திக் ஆதிராவைப் பார்த்து அங்கு அமர முடியாமல் தவித்துக் கொண்டிருக்க, மெல்ல சித்தார்த் அவனது கையைத் தட்டிக் கொடுத்தான்..   

ஒருவாறாக ஆதிராவின் குறுக்கு விசாரணை முடியவும், “அடுத்து நான் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆதவனை விசாரிக்க விரும்புகிறேன் யுவர் ஹானர்..” என்று அதியமான் கூறவும், ஆதவன் கூண்டில் ஏற, ஆதிரா மெல்ல இறங்கி, அவளுக்குத் துணைக்கு வந்திருந்த சரவணனின் அருகில் சென்று அமர,  அவன் கையோடு கொண்டு வந்திருந்த பழச் சாரை எடுத்துத் தந்தான்..

“தேங்க்ஸ்டா.. ரொம்ப டயர்டா இருக்கு..” என்று அவள் சொல்லவும், மெல்லியதாக மேடிட்டு இருந்த வயிற்றைப் பார்த்து வித்யா புன்னகைத்தாள்.

“ஆமா.. உள்ள இருக்கற ஜூனியர் எவ்வளவு நேரம் சும்மா இருப்பாரு.. அவங்களுக்கு பசிக்கும் இல்ல..” வித்யாவின் கேலிக்கு,

“என்னோட கல்யாணத்துக்கு ஊருலயே இல்லாதவங்க எல்லாம் கேலி பேச வேண்டாம்.. நான் இன்னும் கோபமா தான் இருக்கேன்..” என்று சொல்லவும்,

“ஓய்.. இப்போ நான் கேட்கறேன் பதில் சொல்லு.. நீ கோயம்புத்தூர் போயிருக்கும்போது உன்னை கார்த்திக் வரச் சொன்னா நீ வர மாட்டேன்னு சொல்லுவியா? அதுவும் டிக்கெட் புக் பண்ணி உடனே வான்னு கால் பண்ணும்போது..” என்று கேட்க, ஆதிரா அங்கு ஆதவனை விசாரணை செய்துக் கொண்டிருந்த அதியமானைப் பார்த்தாள்.

“மாட்டேன்..” என்ற ஆதிராவின் கவனம் அங்கு நடந்துக் கொண்டிருந்த வாதத்தில் பதிந்தது..

“யுவர் ஹானர்.. ஆதவனின் சாட்சியத்தில், இந்த இந்திரன் தான் கடத்தினாங்க அப்படின்னு தெரியுது.. அதைவிட இந்திரனோட செல்போன்ல இருந்து ரிக்கவர் செஞ்ச சில வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு..” என்று ஒரு பென்ட்ரைவை அதியமான் தர, அவருக்கு முன்பிருந்த லேப்டாப்பில் அவர் பொருத்திப் பார்க்க, அதைப் பார்த்தவர் முகத்தைச் சுளித்தார்..

இந்திரனையும் பகவானையும் பார்த்து அவர் முறைத்து, “வேற சாட்சியங்கள் இருக்கா?” என்று கேட்க, அந்த கடத்தப்பட்ட ஐந்து பெண்களில் நான்கு பெண்கள் சாட்சிக் கூண்டில் வந்து நின்றனர்.. அவர்களது முகமூடியை எடுத்தவர்கள், பகவான், இந்திரன், ஆதவன் மூவருக்கும் எதிராக சாட்சியங்கள் சொல்லத் துவங்க, ஆதிராவிற்குத் தலை வலிக்கத் துவங்கியது..

“சரவணா.. நாம வீட்டுக்குப் போகலாமா? எனக்கு நேரம் ஆக ஆக ஒரு மாதிரியா இருக்கு.. தலை வலிக்குது.. தூக்கம் வேற வருது.. உட்கார முடியல..” ஆதிரா முகத்தைச் சுளித்து,

“இந்த வக்கீல் ரொம்ப சின்சியர்.. அந்த சோடா புட்டியை மாட்டிக்கிட்டு என்னவோ எக்ஸாம் எழுதறா போல சின்சியரா பேனாவை வச்சு குறிச்சுக்கிட்டு இருக்கார்.. இங்க ஒருத்தி உட்கார்ந்து இருக்கேனேன்னு இருக்கான்னு பாரு.. திரும்பியாவது பார்க்கலாம்ல..” ஆதிரா புலம்பிக் கொண்டிருக்க, அவளைப் பார்த்துச் சிரித்த சரவணன்,

“அண்ணி.. அண்ணா வேலைன்னு வந்துட்டா சின்சியர் சிகாமணி தான்.. அது தான் அவருக்கு முக்கியம்.. இந்த கேசை எப்படியாவது ஜெயிச்சே தீரனும் இல்ல..” என்று கேலி செய்ய, ஆதிரா அவனைப் பார்த்து முறைத்தாள்..

அவளது முகத்தைப் பார்த்தவன், “ரொம்ப முடியலையா?” என்று பரிதாபமாகக் கேட்க,

“ஹ்ம்ம்..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, கார்த்திக்கிடம் இருந்து மெசேஜ் வந்தது..

“கொஞ்சம் நேரம்டா தங்கம்.. ப்ளீஸ்டா.. முடிஞ்சதும் நேரா வீட்டுக்குப் போயிடலாம்..” அவனது மெசேஜய்ப் பார்த்தவளின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.. அவன் சொன்னது போலவே அந்த நாள் வழக்கு முடியவும், அதியமானிடமும் சித்தார்த்திடம் சொல்லிவிட்டு அவசரமாக ஆதிராவின் அருகில் வந்தவன்,

“போகலாம்டா கண்ணம்மா.. கார்ல்ல நல்லா சாஞ்சு உட்கார்ந்துக்கோ..” என்றபடி அவளது கையைப் பிடித்து மெல்ல எழுப்ப, எப்பொழுதும் போல சரவணன் இருவரையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்..

எதற்கும் தேவைக்கு இருக்கட்டும் என்று வித்யாவையும் சாட்சிக்கு அழைத்திருந்த கார்த்திக், அவளுக்கு நன்றி கூற, “குழந்தை பிறந்ததும் போட்டோ அனுப்புங்க.. நான் அடுத்த தடவ வரும் பொழுது பார்க்கறேன்.. ரொம்ப தேங்க்ஸ் கார்த்திக்..” என்று சொல்லவும், அவளுடன் வந்திருந்த அவளது கணவருக்கும் நன்றி தெரிவித்த கார்த்திக்,

“தேங்க்ஸ் வித்யா.. இவ்வளவு தூரம் வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்.. பார்க்கலாம்.. தேவைனா நான் சொல்றேன்.. மோஸ்ட்டா தேவைப்படாது.. அப்போ மட்டும் கொஞ்சம் வரது போல இருக்கும்..” என்றபடி ஆதிராவையும், சரவணனையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்..

நாட்கள் செல்ல, வழக்கு தீவிரமாக நடந்து இரு தரப்பு வாதங்களும் காரசாரமாக நீதிபதியின் முன் அதியமான் வைத்தான்.. பத்திரிக்கைகளில் அந்த வழக்கு பெரிதாக பேசப்பட, அந்த மூன்று பேரின் மீதும் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தனர்.. அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று பல இடங்களிலும் போராட்டங்கள் நடந்துக் கொண்டிருந்தது.. அந்தப் பெண்களின் பெற்றவர்கள், அவர்களுக்கு அதிக பட்ச தண்டனை, வாங்கித் தர அதியமானிடமும், கார்த்திக்கிடமும் வலியுறுத்தினர்..    

அன்றைய நாள் அந்த வழக்கின் தீர்ப்பு வரும் நாள்.. அந்த மூவரும் தப்பித்து விடக் கூடாது என்று கருதிய நீதிபதியும், அந்த வழக்கை துரிதமாக விசாரிக்க, சாட்சிகள் வலுவாக இருந்ததால் தீர்ப்பும் அதியமானுக்கு சார்பாகவே வரும் என்று அனைவருமே எதிர்ப்பார்த்து அந்த நாளை மிகவும் ஆவலுடன் எதிர் பார்த்திருந்தனர்..

கை நிறைய வலையல்களை அடுக்கிக் கொண்டு, தாய்மைத் தந்த பூரிப்பும் களைப்பும் சேர்ந்து அழகுக்கு அழகு சேர்த்திருக்க, அவளை ரசித்துக் கொண்டே கோர்ட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தவனுக்கு, வழக்கம் போல ஆதிரா உணவை ஊட்டிக் கொண்டிருக்க, வேர்த்திருந்த அவளது முகத்தைத் துடைத்தவன், அறையில் ஏ.சி.யைப் போட்டு விட்டு,  

“என்னடா ரொம்ப கஷ்டமா இருக்கா? இன்னைக்கு இந்த கேஸ் முடியட்டுமடா.. நான் உன் கூடவே இருக்கறது போல பார்த்துக்கறேன்..” என்று கேட்க, அவள் மறுப்பாகத் தலையசைத்து,

“தெரியல ஒரு மாதிரி இருக்கு.. சீக்கிரம் கேஸ் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்திருங்க.. நான் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..” அவனது தலைமுடியைக் கோதிக் கொண்டே சொல்லவும்,

“சரிடா கண்ணம்மா.. எதுவா இருந்தாலும் கால் பண்ணு.. ஒருவேளை நான் கேஸ் ஹியரிங்ல இருந்தா போனை எடுக்க முடியலைனா மெசேஜ் பண்றேன்.. சரியா?” என்று கேட்க, ஆதிரா தலையசைக்கவும், அவளது வயிற்றில் முத்தம் பதித்தவன்,  

“பாப்பா.. அப்பா சீக்கிரம் வந்துடறேன்.. அம்மாவை படுத்தாம இருங்க.. அவ என்னோட செல்லக்குட்டி என்ன?” என்று கேட்கவும், அவளது வயிற்றில் அசைவு தெரியவும், ஆதிரா ‘ஹா..’ என்று முனகி,

“உங்க பிள்ளைக்கு நீங்க என்னை செல்லக் குட்டின்னு சொன்னதுல பொறாமை..” என்று அவனைக் கேலி செய்ய,

“இல்ல.. என்ன செஞ்சாலும் எனக்கு அம்மா தான் செல்லக்குட்டி..” என்றவன், நிமிர்ந்து அவளது நெற்றியிலும் இதழ் பதித்து,

“வரேண்டா கண்ணம்மா.. பார்த்துக்கோ.. பேசாம படுத்து பாட்டைக் கேளு.. புக் படி..” என்றபடி மனமே இல்லாமல் கிளம்ப, அவனை வழியனுப்ப வாயில் கதவு வரை சென்றவளை இறுக அணைத்துக் கொண்டவன், மனமே இல்லாமல் மீண்டும் அவளது கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு,

“பார்த்துக்கோ.. கேஸ் முடிஞ்ச உடனே ஓடி வந்துடறேன்..” என்று அவன் சொல்லவும், ஆதிரா புன்னகையுடன் தலையசைக்க, அவளது முகத்தைப் பார்த்தவன், பெரு பெருமூச்சுடன் கிளம்பவும், கதவடைத்துக் கொண்டு உள்ளே வந்தவள்,  

“அம்மா.. இடுப்பு லேசா வலிக்கிற போல இருக்கும்மா.. எனக்கு ஒரு மாதிரி வேர்க்குது. என்னவோ போல இருக்கு..” என்று அங்கு காய்களை நறுக்கிக் கொண்டிருந்த சுதாவிடம் சொல்லவும், பாலகிருஷ்ணனும், சரவணனும் பதறி அவள் அருகில் வர, அப்பொழுது தான் உள்ளே வந்த சதாசிவம், அவள் சொன்னதைக் கேட்டு அருகில் ஓடி வந்தார்..   

“இரு நான் அண்ணாவுக்கு உடனே கால் பண்றேன்..” சரவணன் போனை எடுக்க,

“இல்ல.. வேண்டாம்.. அவருக்கு இன்னைக்கு கோர்ட்ல கேஸ்க்கு தீர்ப்பு சொல்றாங்க.. அவர் இத்தனை நாள் உழைச்ச உழைப்புக்கு அந்த நேரம் அவர் அங்க இருக்கணும்.. அதனால தான் நான் அப்போ அவர்கிட்டச் சொல்லல..” என்று சொல்லவும், அவளை நெகிழ்ந்துப் பார்த்த சதாசிவம்,

“டேய்.. என்னடா பார்க்கற? உடனே காரை எடு.. சம்பந்தியம்மா அவளுக்குத் தேவையான பொருள் எல்லாம் எடுத்து வைங்க..” என்று சொல்லவும், சரவணன் அவசரமாக கிளம்ப, பாலகிருஷ்ணன் அவளுக்கு திருநீறு பூசி, அவளது நெற்றியில் இதழ் ஒற்றி அவளது கையைப் பிடித்துக் கொண்டு நிற்க, சுதா அவளுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு வரவும், சரவணன் அவசரமாக சென்று காரை எடுத்தான்..

அவர்களைக் கலவரப்படுத்தாமல் அவள் வலிகளைத் தாங்கிக் கொண்டு வர, “சரியான அமுக்குணி.. எப்படி உட்கார்ந்து இருக்கா பாரு.. நான் அவனுக்கு கால் பண்றேன்.. அவனுக்கு உன் பக்கத்துல இருக்கணும்ன்னு இருக்கும் இல்ல.. அப்பறம் அவன் வந்து என்னைத் திட்டுவான்..” என்று சரவணன் சொல்ல,

“எனக்கும் தான் அவரு பக்கத்துல இருக்கணும்ன்னு இருக்கு.. ஆனா.. இது அவருக்கு ரொம்ப முக்கியம்.. ஒரு மணி நேரத்துக்கு அப்பறம் அவருக்கு கால் பண்ணிடு. அதுக்குள்ள நான் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆன உடனே சொல்லிடு.” ஆதிரா சொல்லவும், தலையில் அடித்துக் கொண்ட சரவணன், வண்டியை மருத்துவமனையில் கொண்டு நிறுத்தினான்..

ஆதிராவை மருத்துவமனையில் அனுமதித்த பிறகு தான் சரவணனுக்கு நின்றிருந்த மூச்சு வெளி வந்தது.. அவர்கள் பயந்து விடுவார்களே என்று அவள் வலியை மெல்லிய முனகலில் மட்டுமே காட்ட, அதுவும் கார்த்திக் ஒரு முக்கியமான நிகழ்வில் இருக்கும் நேரம் அவளுக்கு எந்தத் துன்பமும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்சியும், தங்கள் குடும்பத்தின் முதல் குழந்தையின் பிறப்பு என்ற ஆவலும், அவள் நல்லபடியாக குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமே என்ற பதட்டமும் எல்லாம் சேர்ந்து அவன் மனதளவில் சுழன்றுக் கொண்டிருந்தான்..         

ஆதிரா சொன்னதைக் கேட்காமல், அவளை உள்ளே அழைத்துச் சென்றதும், அவன் உடனடியாக கார்த்திக்கிற்கு மெசேஜ் அனுப்ப, அப்பொழுது தான் தனது இறுதி வாதத்தை அதியமான் வைத்துக் கொண்டிருக்க, தனது செல்போன் வைப்ரேட் ஆகவும், கார்த்திக் அதை எடுத்துப் பார்த்தான்.. அது காட்டிய செய்தியைப் பார்த்தவனுக்கு உள்ளம் பதறத் துவங்கியது.. அவனது அருகில் இருந்த சித்தார்த் அவன் போனைப் பார்க்கவும், புருவத்தை உயர்த்தி என்னவென்று சைகையில் கேட்க, பதற்றமாக முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

“என்னடா ஆச்சு?” என்று மெல்ல குனிந்து ஒரு பைலை எடுப்பது போலக் கேட்க, தனது மொபைலை அவனிடம் காட்ட, சித்தார்த் அவனது முகத்தைக் கவலையுடன் பார்த்தான்..

“எப்படி இருக்கான்னு கேளு..” சித்தார்த் அவனிடம் சொல்லவும்,

‘ஹ்ம்ம்..’ என்றவன், சரவணுக்கு மெசேஜ் அனுப்பிக் கேட்டுக் கொண்டு, பல்லைக் கடித்துக் கொண்டு அந்த நிமிடங்களை நெட்டித் தள்ளியவனுக்கு கண்கள் கலங்கத் துவங்கியது.. தன்னை சமாளித்துக் கொண்டவன், அடிக்கடி சரவணனுக்கு மெசேஜ் செய்து கேட்டுக் கொண்டே இருந்தான்..

“அம்மா..” என்ற ஆதிராவின் அலறலுடன், குழந்தையின் அழுகுரல் கேட்க, வெளியில் நின்ற அனைவருக்குமே குழந்தை சத்தத்ததைக் கேட்டு, கண்களில் கண்ணீர் வழிய கடவுளுக்கு நன்றி தெரிவித்து விட்டு, குழந்தையையும் தாயையும் பார்க்க காத்திருக்க, இங்க கோர்ட்டில் அமர்ந்திருந்த கார்த்திக்கின் இதயம் தாறுமாறாகத் துடித்துக் கொண்டிருந்தது..

முள்ளின் மீது அமர்ந்திருப்பது போல கார்த்திக் அமர்ந்திருக்க, கோர்டில் தீர்ப்பு வாசிக்கப்படத் துவங்கியது.. தனது கவனத்தை ஒருநிலைப்படுத்தி தீர்ப்பில் கவனம் செலுத்தியவன், அதில் தங்கள் பக்கம் வெற்றிப் பெற, சித்தார்த் அவனை அணைத்துக் கொண்டான்..

“கார்த்திக்.. வீ வான்..” என்று சந்தோசம் பொங்கச் சொல்ல,

“எஸ்..” என்று அதியமான் அவனைக் கட்டித் தழுவ, அந்தப் பெண்ணின் பெற்றவர்கள் இருவருக்கும் நன்றி தெரிவித்தனர்..

“நீங்க நல்லா இருக்கணும் தம்பி.. எங்க பொண்ணுங்களோட வாழ்க்கையை சீரழிச்சவனுங்களுக்கு நல்ல தண்டனை வாங்கித் தந்துட்டீங்க.. அதோட அவங்க வாழ்க்கையும் நல்லபடியா அமைய கவுன்சலிங் எல்லாம் கொடுத்து.. அவங்க இப்போ ஓரளவுக்கு பழைய வாழ்க்கைக்கு வர வச்சதுக்கு ரொம்ப நன்றிங்க.. இதை நாங்க எங்க கடைசி வரைக்கும் மறக்க மாட்டோம்..” என்று கார்த்திக், அதியமான், சித்தார்த் மூவரையுமே வாழ்த்த, கார்த்திக்கின் கண்கள் கலங்கத் துவங்கியது..

அவர்கள் நகர்ந்ததும், “நீ சீக்கிரம் கிளம்பு கார்த்திக்..” என்று சித்தார்த் அவசரப்படுத்த,

“வரேண்டா.” என்ற கார்த்திக், அடித்துப் பிடித்து மருத்துவமனைக்கு ஓடி வந்தான்.. அவர்கள் இருந்த இடத்திற்கு வரும் நேரம், குழந்தையின் அழுகுரல் கேட்க, கார்த்திக்கின் இதயம் ஒரு நொடி நின்றுத் துடிக்க, உள்ளம் நடுங்க, சரவணனிடம் ஓடி வந்தான்..

“சரவணா..” என்று வந்தவனை அணைத்துக் கொண்ட சரவணன்,

“அண்ணா.. டேய்.. கங்க்ராட்ஸ்டா.. குழந்தை பிறந்துடுச்சு..” என்று சந்தோஷத்துடன் சொல்லவும், கண்களைத் துடைத்துக் கொண்டவன்,

“அவ ரொம்ப கஷ்டப்பட்டாளா? என்னைக் கேட்டாளாடா?” கண்ணீருடன் அவன் கேட்க,

சரவணன் “ஆமாடா எனக்கு பயமா இருந்தது.. ஆனா.. அவ உன்னை கேட்கவே இல்லடா.. உன்கிட்ட உடனே சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டா.. எனக்குத் தான் மனசு கேட்காம அவளை அட்மிட் பண்ணிட்டு உனக்கு மெசேஜ் போட்டேன்..” என்று சொல்லவும்,

“கார்த்திக்.. நான் தாத்தா ஆகிட்டேன்..” என்று சதாசிவம் அவனைக் கட்டிக் கொண்டார்.

“சந்தோஷமா இருக்குடா..” என்று அவர் வாழ்த்த, பாலகிருஷ்ணன் “கங்க்ராட்ஸ் கார்த்திக்..” என்று அவனைத் தட்டிக் கொடுக்க, கார்த்திக் அத்தனை நேரம் இருந்த பதட்டம் தனிய, ஆதிராவைக் காணும் ஆவலும் சேர, அங்கிருந்த சேரில் தொப்பென்று அமர்ந்தான்..

அழகிய துவாலையில் சுற்றிய குழந்தையைத் தூக்கிக் கொண்டு, செவிலியர் ஒருவர் அவர்கள் அருகில் வர, “டேய் கார்த்திக்.. பாப்பா வந்தாச்சுடா..” சதாசிவம் பரபரப்பாகச் சொல்லவும், சரவணன் ஆவலாக குழந்தையை எட்டிப் பார்க்க, சுதாவின் கையில் குழந்தையைக் கொடுத்த செவிலியர்,

“கங்க்ராட்ஸ்ங்க.. பெண் குழந்தை பிறந்திருக்கு..” அவர் சொல்லவும்,

“ஹே.. சூப்பர்..” என்று அனைவரும் கார்த்திக்கைப் பார்க்க, கார்த்திக் தவிப்புடன் சுதாவின் கையில் இருந்த குழந்தையைப் பார்த்தான்..

அவனது முகத்தைப் பார்த்த சுதா, “இந்தாங்க தம்பி.. குழந்தையைப் பாருங்க..” என்று அவனது கையில் குழந்தையைக் கொடுக்கவும், மென்மையாகத் தனது மகவைக் கையில் வாங்கியவனின் உடல் சிலிர்க்க, கண்களில் கண்ணீர் வழிந்தது.

“சரவணா.. இங்கப் பாரு.. ஆதிரா போலவே இருக்கா..” அருகில் இருந்த தனது சகோதரனிடம் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொள்ள, ரோஜாப் பூ போன்று கண்களை மூடி உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் குட்டிக் கன்னத்தை வருடிய சரவணன்,

“முடி எவ்வளவு இருக்குப் பாரு.. கை எவ்வளவு குட்டியா இருக்குப் பாரு..” என்று அவனும் கண்கள் கலங்க அவனிடம் பகிர, இருவரையும் பார்த்த சதாசிவம், அவனது தோளைத் தட்டிக் கொடுக்க, “குழந்தை அழகா இருக்குடா.. அப்படியே ஆதிராவை உரிச்சு வச்சிருக்கா..” என்று அருகில் வந்து எட்டிப் பார்த்த வரமஹாலக்ஷ்மி சொல்லவும், சுதாவும் கண்ணீருடன் தலையை அசைக்க, அனைவரும் குழந்தையை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்க, ஆதிராவை அறைக்கு அழைத்து வந்தனர்..

குழந்தையுடன் கார்த்திக் ஆதிராவிடம் ஆவலாகச் செல்ல, அயர்ந்த நிலையில் கண்களை மூடி இருந்தவள், அவன் உள்ளே வரும் அசைவில் கண்களைத் திறந்துப் பார்க்க, கார்த்திக் குழந்தையை அவளிடம் நீட்டினான்..

குழந்தையை மெல்ல வருடியவளின் நெற்றியில் இதழ் ஒற்றியவன், “பாப்பா ரொம்ப அழகா இருக்கா..” என்று அவன் சொல்லிக் கொண்டே அவளது அருகில் மெல்ல அமர,    

“கேஸ் என்ன ஆச்சு?” அவள் கேட்க, மீண்டும் அவளது புரிதலில் தன்னைத் தொலைத்தவன், அவளது நெற்றியில் இதழ் ஒற்றி,

“பகவானுக்கு பதினஞ்சு வருஷத்துக்கு பெயில்ல வர முடியாத மூணு ஆயுள் தண்டனை.. இந்திரனுக்கும் அதே தான்.. ஆதவன் அப்ரூவர் ஆனதுனால அவனுக்கு ரெண்டு ஆயுள் தண்டனை கிடைச்சிருக்கு..” என்றவனின் தோளில் சாய்ந்தவள், அவனது கன்னத்தைத் தொட்டு,

“உங்களுக்கும் அதியமான் அண்ணாவுக்கும் வாழ்த்துகள்.. உங்களோட உழைப்பு தான்.. அதோட அந்த பொண்ணுங்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, அவங்க பழையபடி வாழ வழி செஞ்சிட்டீங்க.. அதுவும் அந்த பொண்ணுங்க முகம் இதுவரை வெளியவே தெரியாத அளவுக்கு நீங்க எல்லாம் ஹாண்டல் பண்ணினது தான் கிரேட்.. ஐம் ப்ரவுட் அப்பு.. எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கு.. இன்னைக்கு நாள் எனக்கு மறக்கவே முடியாது..” நெகிழ்ச்சியுடன் அவள் சொல்ல,

“நிஜமா அந்த பொண்ணுங்களைப் பெத்தவங்க எல்லாம் எங்களை வாழ்த்தும் போது ரொம்ப சந்தோஷமா இருந்தது.. நம்ம குழந்தை பிறக்கற நேரத்துல எல்லாரோட ப்ளெஸ்சிங் கிடைச்சது பாரு.. அது தான் எனக்கு ரொம்ப சந்தோசம்.. சரி விடு.. நம்ம பாப்பாவைப் பார்ப்போம்.. அப்பறம் என்னோட செல்லம் இந்த அப்பாவும் அம்மாவும் என்னை கவனிக்கவே இல்லன்னு கோவிச்சுக்கப் போறா..” என்று சொல்லவும்,

“நான் தானே உங்க செல்லக் குட்டி..” ஆதிரா அவனைக் கொஞ்ச,    

“பின்ன இல்லையா அம்மு.. அவ வேற உன்னைப் போலவே இருக்கா.. எனக்கு டபிள் சந்தோசம் தான் ..” என்றபடி அவளது நெற்றியில் முட்டியவன், மெல்ல அவளது கையில் கொடுக்க, ஆதிரா அவனைப் பார்த்து புன்னகைத்தாள்..

“க்யூட்டா இருக்காள்ல..” ஆதிரா கேட்க,

“உன்னை மாதிரியே ரொம்ப அழகா இருக்கா.” என்றவன், அவளது நெற்றியில் இதழ் பதிக்க, ஆதிரா நிறைவுடன் அவனது தோளில் சாய்ந்து கண்களை மூட, ஒரு கையில் குழந்தையை பிடித்துக் கொண்டவன், மறுகையால் அவளை அணைக்க, தனது வாழ்வின் கவிதையைத் தேடிக் கொண்டிருந்தவனுக்கு, வாழ்வே கவிதையாய் அமைய, மனம் நிறைந்து பெற்றவர்கள் அவர்களை வாழ்த்த, நாமும் அவர்களது இல்லறம் கவிதையாய் அமைய வாழ்த்தி விடைப்பெறுவோம் நன்றி வணக்கம்..