எந்நாளும் தீரா காதலாக – 11
எந்நாளும் தீரா காதலாக – 11
💝11
மதிய உணவை உண்டதில் இருந்தே சிவாத்மிகா நன்றாக உறங்கத் துவங்கினாள். தொண்டைக்கு இதமாக ராதா மிளகு ரசத்தை கொடுத்திருக்க, அதை நிர்மலா அவளுக்கு எடுத்து வைக்க,
“அம்மா.. நான் மேல தனியாவே இருக்கேன்.. உங்களுக்கு இப்போ கொஞ்சம் சரியா போச்சு.. என் பக்கம் வந்து உங்களுக்கும் திரும்ப வந்துடப் போகுது.. திரும்ப வந்தா உங்க உடம்பு தாங்காது..” என்றவளிடம் நிர்மலா மறுக்க வரவும்,
“இல்லம்மா.. நீங்க வேணா வினய் அண்ணாகிட்ட எல்லாம் கேட்டுப் பாருங்க.. அது தான் சரின்னு சொல்லுவாங்க… அர்ஜுன் கிட்ட கூட கேட்டுப் பாருங்க..” என்றவள், அவருக்கு உணவைக் கொடுத்துவிட்டு, தானும் எடுத்துக் கொண்டு வர, அவள் பின்னோடு வந்து சூடாக இருக்கும் பொழுதே, தூரத்தில் இருந்தபடியே அவள் உண்ணுமாறு அவர் பார்த்துக் கொள்ள, அவளது தொண்டைக்கும், வாய்க்கும் அந்த ரசம் இதமாக இருந்தது.
“நான் சாப்பிட்டுக்கறேன்மா.. நீங்க ஏன்மா நிக்கறீங்க?” அக்கறையுடன் அவள் கேட்க,
“எனக்கு இப்போ பரவால்லம்மா.. கொஞ்சம் டயர்ட் மட்டும் தான் இருக்கு.. இரும்பல் இருக்கு.. அவ்வளவு தான்.. நீ பேசாம சூடா சாப்பிடு.. நான் இங்க இல்லைன்னா நீ சாப்பிடாம வச்சிடுவ..” என்றவர்,
அவள் சாப்பிட்டு முடித்ததும், “நீ படுத்துக்கோ.. நல்லா தூங்கு.. எப்போ எழுந்துக்கணுமோ எழுந்துக்கோ.. நல்லா ரெஸ்ட் எடு.. நான் ராதா கூட டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு சொல்லிடறேன்..” என்றவர், அவள் படுத்துக் கொள்ளவும், கதவை சாத்தி விட்டு, தானும் சென்று படுத்துக் கொண்டார்.
மாலை எழுந்தவளுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு வித பதட்டம்.. சூடான இஞ்சி டீயை குடித்துக் கொண்டே அவள் ஜன்னலின் அருகே அமர்ந்திருக்க, அவளது கண்கள் எங்கோ நிலைக்குத்தி இருக்க, மனது அர்ஜுனிடம் தாவிக் கொண்டிருந்தது..
‘இது என்ன இது என் மனசு இப்படி அர்ஜுன் கிட்ட போகுது.. இது வரை யாரையும் இப்படி மனச அசைச்சது இல்லையே.. என்னை கல்யாணம் பண்ணிக்கறேன்னு வந்தவனைக் கூட நான் இந்த அளவு தேடல.. என் மனசை இந்த அளவு சலனப்படுத்தலையே.. எப்படியும் எங்க அப்பா மாதிரியே ஏமாத்திட்டா என்ன செய்யறதுன்னு ஒரு பயம் இருந்துக்கிட்டே தானே இருந்தது.. அவன் வேண்டாம்ன்னு சொன்ன போது கூட ரெண்டு நாள் ஒரு மாதிரி இருந்ததே தவிர.. வாழ்க்கையே முடிஞ்சுப் போச்சுங்கற மாதிரி எல்லாம் கஷ்டமா இல்லையே..
இப்போ அர்ஜுனுக்கு தவிக்கிற மனசு அப்போ அவனுக்கு தவிக்கலையே.. அர்ஜுனைப் பார்க்க மனசு துடிக்கிற துடிப்பு எனக்கு தாங்க முடியலையே. இது என்ன மாதிரி வலி.. எப்போ இருந்து நான் இப்படி ஆனேன்..” என்று உழன்றுக் கொண்டிருக்க, கண்கள் தன் பாட்டில் கடிகாரத்தைப் பார்க்க, அவன் எப்பொழுது வருவான் என்று மனம் ஏங்கியது.
தனது மனதை நினைத்தே அவளுக்கு விந்தையாக இருக்க, மெல்ல டீயைக் குடித்து முடித்தவள், அப்படியே தலையை ஜன்னலில் சாய்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவள் எப்படி இருக்கிறாள் என்று ஜன்னல் வழியாக பார்க்க வந்த வினய்யின் கண்களில், ஜன்னலில் சாய்ந்துக் கொண்டே, கண்கள் நிலைக்குத்தி, ஏதோ லோகத்தில் இருந்த சிவாத்மிகா கண்களில் விழுந்தாள். அவளது நினைவுகள் எங்கோ இருப்பதைப் பார்த்தவன், தனக்குள் சிரித்துக் கொண்டான்.
“சிவாம்மா..” என்று இரண்டு முறை சத்தமாக அழைக்க, அவள் காதில் விழாமல் அதே நிலையில் இருக்க, அவளை புகைப்படம் எடுத்துக் கொண்டவன், மேலும் சத்தமாக அழைக்க, சிவாத்மிகா திடுக்கிட்டு, பட்டென்று திரும்பி, “அர்ஜுன்..” என்று அழைத்தபடி, அவசரமாக எழுந்துக் கொள்ள, வினய்க்கு அவளது நிலையைப் பார்த்து பாவமாக இருந்தது..
“அவனுக்கு நைட் பத்து மணிக்கு தான் ஃப்ளைட்.. இன்னும் ஷூட்டிங் முடியலம்மா.. ஷூட்டிங் முடிஞ்சதும் நேரா ஏர்போர்ட்டுக்கு வந்துடுவான்..” இதமாகச் சொன்னவன்,
“டீ குடிச்சியா? உடம்பு எப்படி இருக்கு?” என்று கேட்க,
“குடிச்சிட்டேன்..” என்றவள், முகத்தைச் சுருக்கி,
“இங்க தனியா இருக்க கடுப்பா இருக்குண்ணா.. கீழையாவது அம்மா கூட ஏதாவது பேசிட்டு இருப்பேன்.. இங்க தனியா அடச்சு போட்டா போல இருக்கு.. அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியா போயிருக்கு.. இப்போ மறுபடியும் அம்மாகிட்ட போக யோசனையா இருக்கு..” பரிதாபமாக அவள் கண்ணீருடன் சொல்ல, வினய் தவித்துப் போனான்.
என்ன செய்வதென்று ஓரிரு வினாடிகள் யோசித்த வினய், “ராதா..” என்று அழைக்க, “என்னாச்சுங்க?” என்று கேட்டபடி ராதா வந்து நிற்க,
“இங்க உட்கார்ந்து அவ கூட பேசிட்டு இரு.. அவ தனியா ஃபீல் பண்றா.. ஓடி ஆடி பிசியா இருந்த பொண்ணு.. ஒரே ரூம்ல அடஞ்சிக்கிடக்க கஷ்டமா இருக்கும்.. அவளுக்கு அழுகை வருது.. கொஞ்சம் இங்கயே இரு..” என்ற வினய், ராதாவை விட்டு நகர்ந்து செல்ல, ராதா குழப்பமாக அவனைப் பார்த்தாள்.
“எனக்கு சமயக் கட்டுல ஏகப்பட்ட வேலை இருக்கு.. நான் இங்க அவ கூட இருந்துட்டா அங்க யாரு வேலை செய்வா?” என்று கேட்க,
“என்ன வேலை இருக்கு?” வினய் சீரியசாகக் கேட்கவும், அவன் அருகில் சென்றவள்,
“மாவு போட்டு இருக்கேன்.. ராத்திரிக்கு அவளுக்கு ஏதாவது வாய்க்கு பிடிச்சா மாதிரி சமைச்சுத் தரணும்.. இப்போவே மணி ஆறு மணிக்கு மேல ஆகுது.. அவளுக்கு நேரத்துக்கு சமச்சித் தரனும் இல்லையா?” அவள் யோசிக்க,
“நீ இங்க உட்கார்ந்து அவ கூட கொஞ்சம் பேசிட்டு இரும்மா.. நான் பார்த்துக்கறேன்.. அவளுக்கு வாய்க்கு பிடிச்சது போல சமைச்சுத் தரேன்.. நான் அவ கூட என்ன உட்கார்ந்து பேசறது? இன்னைக்கு ஒரு நாள்.. நாளைக்கு இருந்து அர்ஜுன் இதே வேலையா செய்வான்.. நமக்கு அந்த வேலை இருக்காது..” என்றவன், ராதாவைப் பார்த்து இதமாக புன்னகைத்து விட்டுச் செல்ல, ராதா அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.
ராதாவைப் பார்த்த சிவாவிற்கு அழுகையை மறந்து சிரிப்பாக இருந்தது.. “என்னக்கா? என்ன சொல்லிட்டு போறாங்க? என்ன சீரியஸ் டிஸ்கஷன்?” என்று அவள் கேட்க,
“உன்கிட்ட நான் பேசிக்கிட்டு இங்கயே உட்காரணுமாம்.. சமையலை யாரு பார்ப்பான்னு கேட்டா.. அவரு என்னவோ உனக்கு சமைச்சுத் தராராம்.. என்ன தான் செய்யறாங்கன்னு பார்ப்போம்.. எதுவும் நல்லா இல்லன்னா.. நான் உனக்கு ஹோட்டல்ல ஆர்டர் பண்ணித் தரேன்..” ராதா சொல்ல, சிவாத்மிகா சிரிக்கத் துவங்கினாள்.
“ரெண்டு பேரும் நல்லா எப்போப் பாரு சண்டை போடறீங்க.. உங்களுக்கும் அவருக்கும் நல்லா பொழுது போகும்.. நானும் அங்க இருந்தா.. உங்க சண்டையை நல்லா பாப்கார்ன் சாப்பிட்டு வேடிக்கைப் பார்ப்பேன்..” என்றவள், சமயலறையில் இருந்து ஏதோ சத்தம் வரவும்,
“ஏதோ பாத்திரம் எல்லாம் கீழ விழுது.. என்ன பண்றாங்களோ?” என்று ராதா தவிக்க, அவளைப் பார்த்து சிரித்தவள்,
“சரிக்கா.. நீங்க கீழ போய் பாருங்க.. நான் போய் கொஞ்சம் கதை படிக்கறேன்.. அர்ஜுன் படிச்சு சொல்லச் சொல்லிருக்காங்க..” என்று அவள் சொல்லவும், ராதா அவளை ஆச்சரியமாகப் பார்த்தாள்..
“கதையா? என்ன கதை?” ராதாவின் கேள்விக்கு,
“சும்மா பொழுது போக என்ன பண்றதுன்னு பார்த்த போது, இங்க நிறையா இருந்தது.. அவரு கிட்டக் கேட்டேன்.. நிறைய அசிஸ்டெண்ட் டைரெக்டர் கொடுத்த கதை வச்சிருக்காங்க.. படிச்சு எது பிடிச்சு இருக்கு சொல்லுன்னு சொன்னாங்க.. அது தான்..” என்றவள், ராதா சிரிக்கவும்,
“அக்கா.. அண்ணா கிச்சனை ஒரு வழி பண்ணப் போறாங்க.. போய் பாருங்க.. அப்பறம் நீங்க தான் க்ளீன் பண்ணனும்..” என்று நினைவுப்படுத்தவும்,
“ஹையோ ஆமா..” என்று அவள் பதறிக் கொண்டு ஓட, சிவாத்மிகா சிரித்துக் கொண்டே கதை படிக்க அமர்ந்தாள்.
ராதா அடுக்களைக்குள் செல்ல, அங்கு நிதானமாக வினய் காய்களை வெட்டிக் கொண்டிருக்க, அதைப் பார்த்த ராதா அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“என்ன கிட்சனை அலங்கோலம் பண்ணி இருப்பேன்னு வேக வேகமா வந்தியாக்கும்? இல்ல பாத்திரம் உருண்ட சத்தத்துல வந்தியா?” என்று கேலியாகக் கேட்க,
“பாத்திர சத்தம்..” ராதாவின் பதிலில்,
“இந்த பாத்திரத்துக்கு உள்ள இன்னொரு பாத்திரம் இருந்ததை கவனிக்கல.. அது தான்.. கவலைப்படாதே… நானும் அர்ஜுனும் அப்போ அப்போ கிட்சன் உள்ள போவோம்.. அம்மா திட்டுவாங்கன்னு ஒழுங்கா க்ளீனா செய்வோம்.. அதனால க்ளீனா செஞ்சு பழக்கம் தான்.. பயப்படாதே.. நாங்க வர்க் பண்ணினா நீட்டா இருக்கும்.” என்று அவன் சொல்லிக் கொண்டே, காய்களை தண்ணீரில் போட்டு, கொதிக்க விட, ராதா உதட்டைப் பிதுக்கினாள்.
“சரி.. இப்போ எதுக்கு இவ்வளவு தண்ணியில காயைப் போட்டு இருக்கீங்க?” என்று அவள் கேள்விக் கேட்க,
“கொஞ்சம் சூப் செய்யலாம்ன்னு பார்த்தேன்.. அவளுக்கு தொண்டைக்கும் வாய்க்கும் நல்லா இருக்கும்.. அப்பறம் கொஞ்சம் ஜீரா ரைஸ் போல செஞ்சு.. தொட்டுக்க, பெப்பர் கார்ன் பண்றேன்.. அதும் டேஸ்ட்டியா இருக்கும்.. வாட்ச்மேன கொஞ்சம் சமான் வாங்கிட்டு வரச் சொல்லி இருக்கேன்.. இப்போ எனக்கு நான் கேட்கற சாமான் எல்லாம் எடுத்துக் கொடு..” எனவும், ராதா அவனுக்கு உதவத் துவங்கினாள்.
“அது எல்லாம் இப்போ சாப்பிடலாமா?” ராதா கேட்க,
“எல்லாம் நல்லா சாப்பிடலாம்.. அவளுக்கு கொஞ்சம் வாய்க்கும் நல்லா இருக்கும்..” சொல்லிவிட்டு, வேகமாக அனைத்தையும் செய்யத் துவங்க, ராதா அவனை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதற்குள் வாட்ச்மேன் பொருட்களுடன் வரவும், ராதா அதை வாங்கிக் கொண்டு வந்து வைத்து, வினயை மேலும் ஆச்சரியமாகப் பார்க்க, “கொஞ்சம் உன் ஆச்சரியத்தை கம்மி பண்ணும்மா.. இன்னொருத்தன் வருவான் பாரு.. அவன் இன்னும் விதம் விதமா செய்வான்.. அப்பறம் என் தங்கச்சி உன் சமையல் நல்லா இல்லைன்னு சொன்னாலும் சொல்லிடுவா..” என்றவன், ராதாவின் முறைப்பைப் பெற்றுக் கொண்டு, நேர்த்தியாக சமைக்கத் துவங்க, ராதா அவனுக்கு உதவத் துவங்கினாள்.
அனைத்தையும் செய்து முடித்தவன், “எல்லாம் கொஞ்சம் டேஸ்ட் பாரு.. சூடா கொண்டு போய் கொடுக்கலாம்..” எனவும், அனைத்தையும் சுவைப் பார்த்தவள், உதட்டைப் பிதுக்கிக் கொண்டே, தலையை நன்றாக இருக்கிறதென்பது போல ஆட்ட, தனது டி-ஷர்டில் இல்லாத காலரை அவன் தூக்கி விட்டுக் கொண்டு, அனைத்தையும் எடுத்து வைத்தான்.
“வா.. நாம போய் கொடுத்துட்டு வரலாம்..” என்று வினய், அவளை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
அர்ஜுனின் டேபிளின் மேல் இருந்த ஒரு ஸ்க்ரிப்ட் ஃபைலை எடுத்து, பெட்டில் படுத்துக் கொண்டே, சிவாத்மிகா படிக்கத் துவங்கினாள். முதல் பைலில் இருந்தது ஒரு காதல் கதை.. ஹீரோ ஒரு பெண்ணை உருகி உருகி காதலிக்கிறான்.. அந்த பெண்ணின் மேல் உயிரையே வைத்திருக்கிறான்.. அவனுக்கு குறையாத காதலை அந்தப் பெண்ணும் வைத்திருக்கிறாள்..
இப்படியாக கதை நகர, அதை படித்துக் கொண்டே வந்தவள், சிறிது நேரத்திலேயே அர்ஜுனையும், முகம் தெரியாத ஒரு பெண்ணையும் கற்பனை செய்து பார்க்கத் துவங்கினாள்.
அர்ஜுன் ஹீரோயினை அப்படி உருகி உருகி காதலிப்பது போலவும், அதற்கு குறையாத காதலை அந்த முகம் தெரியாத பெண்ணும் அவனுக்கு காட்டுவது போலவும், அவளது கற்பனை விரிய சிவாத்மிகாவின் எண்ணம் அந்த காட்சிகளை அணிவகுத்தது..
அந்தக் கதையில் குறிப்பிடப்பட்டிருந்த முத்த காட்சிகளில் கன்னம் வேறு சிவக்க, மனது ஒரு பக்கம் ‘ஹையோ.. அர்ஜுன் ஏன் யாரையோ கிஸ் பண்ணனும்? கட்டிப்பிடிக்கணும்? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..’ மனது சிணுங்க,
‘ஹையோ சிவா.. இது கதை.. சினிமா.. அப்படித் தான் இருக்கும்.. கிஸ்ன்னா நிஜமாவா கிஸ் பண்ணப் போறாங்க? அது ஷாட் அப்படி வைப்பாங்க..’ என்று தனக்கே ஆறுதல் சொல்லிக் கொண்டவள், தனது மனதை நினைத்து வியந்துக் கொண்டே, தொடர்ந்து சுவாரஸ்யமாக படிக்கத் துவங்கினாள்.
கீழே வைக்க மனமில்லாமல், கதை, அருமையான காட்சியமைப்புகளுடன் சென்றுக் கொண்டிருக்க, வினய் அவளை செல்லில் அழைத்தான்..
“என்னண்ணா?” படிக்கும் சுவாரஸ்யத்தில் அவள் கேட்க,
“சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்மா.. வந்து வாங்கிக்கோ..” என்று அவன் சொல்லவும்,
“அதுக்குள்ளயா?” அவள் கேட்க,
“என்னது அதுக்குள்ளயா? மணி எட்டு ஆகுது.. எந்த உலகத்துல இருக்க நீ?” என்று அவன் கேட்க,
தனது தலையில் தட்டிக் கொண்டவள், “இதோ வரேன்..” என்றபடி, கதையை வைக்கவும் மனமில்லாமல், கையில் இருந்த அந்த ஸ்க்ரிப்டை படித்துக் கொண்டே கீழே இறங்க, அவளைப் பார்த்த நிர்மலா, வினயைப் பார்த்தார். அவளது கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்து கண்களை விரித்து, அங்கு நின்றுக் கொண்டிருந்த வினய்க்கு ஜாடை காட்ட,
“என்னாச்சு?” என்று கேட்ட வினய், வீட்டின் உள்ளே எட்டி சிவாத்மிகாவைப் பார்த்தான்.
அவளது கையில் இருந்த ஸ்க்ரிப்ட் பைலைப் பார்த்தவன், புருவத்தை மேலே ஏற்றி, தலையை மெல்ல கேலியாக அசைத்து, “என்ன சிவாம்மா அப்படி இண்டரெஸ்ட்டா படிக்கிற?” எதுவும் தெரியாதது போலக் கேட்க,
“ஹான்.. அண்ணா.. அது சினிமா கதை.. அர்ஜுன் டேபிள் மேல இருந்தது..” அவள் சொல்லவும்,
“அது தொட்டா அவன் திட்டுவானேம்மா..” அவன் மெல்ல இழுக்க, கண்களை விரித்து குழப்பமாக அவனைப் பார்த்தவள்,
“நான் அவர் கிட்ட கேட்டுட்டேனே.. அவர் தான் படிச்சிட்டு எது பிடிச்சிருக்குன்னு சொல்லுன்னு சொன்னார்..” என்று புரியாமல் சொல்லவும், வினய் நிர்மலாவைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு,
“ஓ.. அய்யா உத்தரவு கொடுத்துட்டாரா? அப்போ படிச்சு சொல்லும்மா.. அங்க இருக்கற அஞ்சு கதையும் படிச்சு பாரு..” என்று கேலியாகச் சொன்னவனிடம்,
“என்னண்ணா கேலி செய்யறீங்க? என்னாச்சு?” இன்னமும் புரியாமல் அவள் கேட்க,
“ஒண்ணும் இல்ல.. உங்க அண்ணா வெரைட்டியா சமைச்சு உனக்காக கொண்டு வந்து இருக்கேன்.. அந்த ராதாவுக்கு ஒண்ணுமே டேஸ்டியா செய்யத் தெரியல.. நாளைக்கு இன்னும் ஸ்பெஷல் ஐடெம் எல்லாம் வரும்.. ஓகே வா.. எப்படி இருந்ததுன்னு பார்த்துச் சொல்லு.. சரியா?” அவன் பேச்சை மாற்ற, சிவாத்மிகா அவனை முறைத்தாள்.
“இல்ல.. நீங்க இப்போ ஏதோ கிண்டல் செஞ்சா போல இருந்தது.. சொல்லுங்க.. இல்ல நான் அர்ஜுனுக்கு கால் பண்ணிக் கேட்பேன்..” என்று அவள் மீண்டும் கேட்கவும்,
“போன் தானே பண்ணிக்கோ..” என்றவன்,
“ரொம்ப ஸ்க்ரிப்ட் படிக்கறேன்னு ஸ்ட்ரைன் பண்ணாதே..” அவன் அடுத்ததைச் சொல்ல, கடுப்புடன் தலையசைத்தவள்,
“அண்ணா.. நான் அவர்கிட்ட கேட்டு தான் எடுத்தேன்.. அவர் தான் எனக்கும் பொழுது போகும்ன்னு படிக்கச் சொன்னார்.. சரியா.. இப்போ சொல்லுங்க.. என்ன கிண்டலா பார்த்தீங்க?” பாவமாக கேட்க, வினய், அவளது முகத்தைப் பார்த்து தன்னையே நொந்துக் கொண்டு நிர்மலாவைப் பார்த்தான்.
“அது ஒரு தடவ நான் ஸ்க்ரிப்ட் பைல அடுக்கி வைக்கிறதா நினைச்சு எங்கயோ வச்சிட்டேன்ம்மா.. அதை அப்பறம் ரொம்ப நேரம் தேடி எடுக்க வேண்டியதா போச்சு.. அதனால தான் அவன் என்னை, ‘அது எங்க இருந்தாலும் அங்கேயே இருக்கட்டும்.. தொடக் கூடாது’ன்னு சொல்லுவான்.. அது தான் வேற ஒண்ணும் இல்ல.. அவனே படிக்கச் சொல்லி இருக்கானே.. படிச்சு அவனுக்கு கதை எப்படி இருக்குன்னு சொல்லு.. அவனுக்கும் ஹெல்ப்பா இருக்கும்.. உன் டேஸ்ட் மேல அவனுக்கு ரொம்ப நம்பிக்கை..” நிர்மலா அவளை சமாதானப்படுத்த, அதில் மனம் குளிர்ந்து,
மெல்ல புன்னகைத்தவள், “சரிண்ணா.. நான் படிச்சிட்டு பத்திரமா அங்கேயே வச்சிடறேன்.. திட்டு வாங்க மாட்டேன்..” என்றவள், வினய் தலையசைக்கவும்,
“அம்மா.. சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடுங்க.. நான் காலைல சொன்னா போல, கொஞ்சம் தள்ளியே இருக்கேன்மா.. நீங்க என்கிட்டே வர வேண்டாம்.. நான் மேல சாப்பிட்டுக்கறேன்..” அவள் சொல்லவும், ‘இல்ல..’ என்று நிர்மலா துவங்க,
“இல்லம்மா.. அவ சொல்றதும் கரக்ட் தான்.. திரும்ப உங்களுக்கும் வந்தா ரொம்ப கஷ்டம்.. ரெண்டு பேரும் தனியாவே இருங்க..” என்ற வினயைப் பார்த்த நிர்மலா,
“அவ தனியா என்ன செய்வா?” என்று கவலைக்கொள்ள,
“நான் பார்த்துக்கறேன்மா.. நீங்க ஏற்கனவே ரொம்ப வீக்கா இருக்கீங்க.. பாருங்க நான் சொன்னது போல அண்ணாவும் அதையே தான் சொல்றாங்க.. நீங்க சாப்பிட்டு, மாத்திரை போட்டு படுத்துத் தூங்குங்க.. சீரியல் எல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம்.. நீங்க எவ்வளவு நாள் அப்பறம் பார்த்தாலும் அது அதே இடத்துல தான் இருக்கும்.. குட் நைட்ம்மா..” என்றவள், தன்னுடைய டப்பாவை எடுத்துக் கொண்டு மேலே செல்ல, நிர்மலா வினயைப் பார்த்தார்.
அதுவரை அடக்கிக் கொண்டிருந்த சிரிப்பை வினயின் உதடுகள் வெளியிட, நிர்மலாவும் சிரிப்புடன் ஆச்சரியமாக அவனைப் பார்த்தார்..
“டேய்.. என்னடா நடக்குது இங்க? ஸ்கிரிப்ட் எல்லாம் படிக்க சொல்லி இருக்கான்.. நான் எடுத்துப் பார்த்ததுக்கு அப்போ எப்படி கத்தினான்?” என்று கேலியாயும், ஆச்சரியமுமாகக் கேட்க,
“உங்களுக்கு பொட்டலம் மடிக்க, இங்க பேப்பர் எதுவும் இல்ல.. அது எல்லாம் இங்கத் தேடாதீங்கன்னு சொன்னான்மா..” வினய் எடுத்துக் கொடுக்க,
“அதான்.. இப்போ அவளுக்கு டிசைன் வரைய பேப்பர் தந்திருக்கானோ? வரட்டும் அவன்.. கவனிச்சுக்கறேன்..” கேலியாக நிர்மலா மிரட்ட,
“வரட்டும்.. விடாதீங்கம்மா அவனை.. நல்லா தலையை பிடிச்சு உலுக்கிக் கேட்டு சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க..” வினயும் கேலியைத் தொடர, நிர்மலாவின் முகம் கனிந்தது.
“முதல்ல மூத்தவன் உனக்கு கல்யாணம் பண்ணனும்.. இல்ல ரெண்டு பேருக்கும் சேர்த்து கூட செய்யலாம்.. ஆனா.. உனக்கும் அவன் கூட செய்யணும்..” என்ற நிர்மலாவைப் பார்த்து வினய், அழகு காட்டிச் சிரிக்கவும்,
“அவ மேல ரொம்ப ஆசை வச்சிருக்கான் இல்லடா.. அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியலையே.. அவன் சொன்னா அப்படியே கேட்கறா தான்.. ஆனா.. அதையும் தாண்டி அவ மனசுலயும் ஆசை இருக்கணுமே.. இருந்தா அர்ஜுனும் கொடுத்து வச்சவன் தான்.. அவனை குழந்தை மாதிரி பார்த்துப்பா.. தங்கமான பொண்ணு.. இந்தப் பொண்ணைப் போய் எப்படி இப்படி அவளோட பெத்தவங்களால விட்டுட்டு போக முடிஞ்சது? கல்லா அவங்க?” என்று வருந்த, வினயும், அன்று அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை சொல்லி முடித்தான்.
முடித்தவன், “அவளுக்கும் அவனை பிடிச்சிருக்குன்னு தான் நினைக்கிறேன்.. பார்ப்போம்.. மொதல்ல உங்க பையன் வந்து அவகிட்ட மனசு விட்டு பேசட்டும்.. அப்பறம் தான் அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியும்.. அவ உடனே ஒத்துப்பான்னு எதிர்பார்க்க முடியாது.. ஏன்னா அவளோட காயங்கள் அப்படி.. அது அர்ஜுனுக்கும் தெரியும்.. அவன் பார்த்துப்பான்..” என்ற வினய், நிர்மலா பெருமூச்சு விட,
“சரிம்மா.. ரொம்ப நேரம் நீங்களும் நிக்க வேண்டாம்மா.. சாப்பிட்டு படுங்க.. உங்களுக்கு இன்னும் நாலு நாள் இருக்கு.. அப்பறம் டெஸ்ட் பண்ணி பார்த்துடனும்.. அப்பறம் நாங்க இங்க வந்துடறோம்.. உங்களுக்கும் நல்ல ரெஸ்ட் தேவை.. நல்லா தூங்குங்க.. நாங்க மத்த வேலை எல்லாம் பார்த்துக்கறோம்.. இப்போவும் தூங்காம விடிய காலைல எழுந்து என்ன வேலை உங்களுக்கு? உட்கார்ந்து ஃபேஸ்புக்ல போஸ்ட் போட்டுட்டு இருக்கீங்க.. நல்லா தூங்கணும் சொல்லிட்டேன்..” என்று கண்டித்த வினய், அவரிடம் விடைப்பெற்று செல்ல,
“சரிடா வாயாடி.. இனிமே போஸ்ட் போடல.. ஆனா.. விழிப்பு வந்துடுதுடா..” எனவும்,
“நாளைக்கு காலைல உங்க செல்லக் கோண்டு உங்களைப் பார்க்க வரும்.. உங்க முகம் வாட இருந்தா அவனால தாங்க முடியாது. அதனால நல்லா தூங்கி ஃபிரெஷா எழுந்திருங்க.. இல்ல.. உங்களைப் பார்த்து தவிச்சு போயிடுவான்..” என்று சொல்லவும், அர்ஜுனின் நினைவில் புன்னகைத்தவர்,
“சரிடா.. சாப்பிட்டு நல்லா தூங்கறேன்..” என்று சொல்லிவிட்டு, கதவடைத்துக் கொண்டு, உண்டு முடித்து உறங்கச் சென்றார்.
உணவை உண்டபடியே சிவாத்மிகா கதையைப் படிக்கத் தொடர, மிகவும் சுவாரஸ்யமாக அதோடு வினய் செய்த உணவும், நாவிற்கு வக்கணையாக இருந்தது. முழு சுவை உணர முடியாமல் போனாலும், அதுவே நாவிற்கு சுவையனாதாக இருந்தது..
“வாவ்.. நல்ல கதையோட, இப்படி ஒரு நல்ல சாப்பாடு சாப்பிட்டா ரொம்ப நல்லா இருக்கு இல்ல.. கூடவே பாட்டும்..” என்று நினைத்துக் கொண்டவள், அங்கிருந்த ம்யூசிக் சிஸ்டத்தை பார்த்துவிட்டு, அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு, மாத்திரைகளையும் போட்டுக் கொண்டு, மீண்டும் பெட்டில் சாய்ந்து அமர்ந்தவாறு படிக்கத் துவங்கினாள். அப்படியே உறக்கம் கண்களைச் சுழற்ற, உறங்கியும் போனாள்.
நிர்மலாவிற்கும் சிவாத்மிகாவிற்கும் உணவை கொடுத்துவிட்டு வந்த வினய், “வா ராதா.. நாமளும் சாப்பிடலாம்.. பசிக்குது..” என்றபடி, டைனிங் டேபிளில் அனைத்தையும் எடுத்து வைக்க, ராதா பதறிப் போனாள்.
“என்னங்க.. நீங்க ஏன் இதெல்லாம் செஞ்சிட்டு இருக்கீங்க? இருங்க நான் எடுத்து வைக்கிறேன்..” என்றவாறு அவசரமாக வினயின் கையில் இருந்த பாத்திரங்களை வாங்கி வைக்க, வினய் இருவருக்குமான தட்டை எடுத்துக் கொண்டு வந்தான்.
“ஹையோ.. என்ன நீங்க இதை எல்லாம் செஞ்சிட்டு இருக்கீங்க? எனக்கு ரொம்ப வேலை வாங்கற மாதிரி இருக்கு..” என்று பதறியபடி அவள் தட்டையும் வாங்கி வைக்க, வினய் அவளைப் பார்த்து பெருமூச்சை வெளியிட்டு,
“எதுக்கு இப்போ எல்லாத்துக்கும் ஷாக் ரியாக்ஷன் தந்துட்டு இருக்க? ரெண்டு பேரும் தானே சாப்பிடப் போறோம்.. அப்பறம் நான் உட்கார்ந்துக்கிட்டு எடுத்து வான்னு அதிகாரம் பண்ண முடியுமா?” யதார்த்தமாக அவன் கேட்க, ராதாவின் கண்கள் பழைய நினைவுகளில் கலங்கியது.
அவளது முகத்தைப் பார்த்தவன், அவளது கண்கள் கலங்கி இருக்கவும், எப்படி அவளிடம் காரணம் கேட்பது என்று தயங்கி, அடுத்து சூப்பை எடுத்து பவுலில் விட்டபடி, “சூடா இருக்கும்போதே நீயும் என் கூட உட்கார்ந்து சாப்பிடு..” எனவும், தயங்கியபடி அவள் அமர, அவளை இயல்புக்கு கொண்டு வரும் பொருட்டு,
“சரி.. எனக்கு இந்த வீட்டு சாவி வேணுமே.. நான் ஒரு பதினோரு மணிக்கு அர்ஜுன கூப்பிட போகணும்.. சாவி இருந்தா.. நான் பாட்டுக்கு சத்தம் போடாம போயிட்டு கூட்டிட்டு வந்துடறேன். இல்லன்னா நாங்க வர வரை உன் தூக்கம் கெடும்..” என்று சொல்லவும், அவள் சாவியை எடுக்க நகர,
“நான் இப்போவே போகல.. இன்னும் டைம் இருக்கு.. அவன் ஃப்ளைட் ஏறின அப்பறம் தான் கிளம்பனும்.. மெல்ல சாப்பிட்ட அப்பறம் எடுத்துக் கொடு” என்று அவன் சொல்லிவிட்டு, அவன் உணவை பரிமாறத் துவங்க, ராதா அவசரமாக அவனது கையில் இருந்த கரண்டியை பிடுங்கி, அவனுக்கு பரிமாறத் துவங்கினாள்.
ஏனோ வினயின் மனதில் அவள் பரிமாறி சாப்பிட்டு, உணவின் சுவையை கூட்டியது போல இருந்தது.. ஏதோ சொல்லத் தெரியாத ஒரு இதம்.. தனது மொபைலில் ஜோக்குகளை பார்த்துக் கொண்டே அவன் உண்ணத் துவங்க, அந்த ஜோக்குகளில் வரும் டயலாக்குகளை கேட்டு ராதாவும் சிரிக்க, மெல்ல போனை இருவருக்கும் நடுவில் வைத்தவன், நிறைவாக உண்டு முடித்தான்.
அவனது அந்த சிறு செயலே அவளுக்கு மனதினில் ஒரு இதத்தைத் தர, அவன் மீதான மதிப்பு ராதாவிற்கு உயர்ந்தது. மீதி வேலைகளை முடித்தவள், அவனது கையில் சாவியைக் கொடுத்துவிட்டு, சிவாத்மிகாவின் அறையை சுத்தம் செய்து தயாராக ஹீட்டர் போட்டு வைத்துவிட்டு,
“ஹீட்டர் போட்டு வச்சிருக்கேன்.. தம்பி வந்தா குளிக்கச் சொல்லிடுங்க.. பயணம் செய்து வராங்க.. ஃப்ளைட்ல யாரு எப்படி வராங்களோ?” என்ற ராதா, ஒரு கதை புத்தகத்தை எடுத்துக் கொண்டு, தனது அறைக்குள் சென்று படுத்துக் கொள்ள, வினய் டிவி பார்க்கத் துவங்கினான்.
இரவு அர்ஜுன் அழைத்ததும், வினய் சென்று அழைத்துக் கொண்டு வர, காரில் ஏறியதும் முதலில், “வினய்.. அம்மா எப்படி இருக்காங்க? ஒழுங்கா சாப்பிடறாங்களா? அவங்களுக்கு தனியா ஒண்ணும் கஷ்டமில்லையே.. சமாளிச்சுக்கறாங்களா? அவ எப்படி இருக்கா? ஒழுங்கா சாப்பிட்டறாளா? ரொம்ப கஷ்டப்படறாளா?” என்று கேட்க,
“ஹ்ம்ம்.. கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ.. அம்மா ஓகே தான் சமாளிச்சுக்கறாங்க.. டயர்ட்டா தான் இருக்குன்னு சொன்னாங்க.. ஒண்ணும் பிரச்சனை இல்ல.. இப்போ தான் நைட் சாப்பாடு கொடுத்துட்டு பார்த்துட்டு வந்தேன்.. அவ சாப்பிட்டான்னு நினைக்கிறேன்.. மேடம்க்கு உன்னோட டேபிள்ல இருந்த ஒரு ஸ்க்ரிப்ட் ரொம்ப பிடிச்சுப் போச்சு போல.. கீழ வைக்காம படிச்சிட்டு இருக்கா.. அந்த சுவாரஸ்யத்துல அவ சமையல் எப்படி இருந்ததுன்னு போன் பண்ண மறந்துட்டா போல..” வினய் கேலியுடன் சொல்ல, அர்ஜுன் கண்களை விரித்தான்.
“அப்படியா? அப்போ அதைக் கண்டிப்பா படிச்சு பார்க்கணும்..” என்றவன், வினய் கேலியாகச் சிரித்து, ஷூட்டிங்கைப் பற்றி விசாரிக்க,
“செம டயர்டா இருக்குடா.. நேத்து இருந்து கண்டினியூஸ் ஷூட் வேற இல்ல.. டைரெக்டர் அவசரமா ஏன் இப்போவே கிளம்பறீங்க? நாளைக்கு காலையில நல்லா தூங்கி எழுந்து போகலாமேன்னு கேட்டார்.. என்னோட கஷ்டம் அவருக்கு எங்க புரிய போகுது?” அவன் உதட்டைப் பிதுக்க,
“சொல்ல வேண்டியது தானே. அங்க என் அம்மாவும் பொண்டாட்டியும் உடம்பு முடியாம இருக்காங்கன்னு..” வினய் அவனை கேலி செய்ய,
“சொல்லிட்டேனே.. என் அம்மாவுக்கு பத்து நாளா உடம்பு சரி இல்ல.. அவங்களைப் பார்த்துக்கிட்ட அவங்களோட வருங்கால மருமகளுக்கும் இப்போ உடம்பு முடியல.. அதனால இப்போ நான் போய் பார்த்துக்கணும்.. நான் கிளம்பறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்..” அர்ஜுன் சாதாரணமாகச் சொல்லவும், வினய் திகைத்து அவனைப் பார்த்தான்.
“டேய்.. நிஜமா தான் சொல்றியா? டைரக்டர் கிட்ட என்னடா சொல்லி வச்சிருக்க? நீ அதுல ஸ்ட்ராங் ஆகிட்டயா? நிஜமாவே தான் சொல்றியா?” என்று கேட்க,
“அதெல்லாம் முடிவே பண்ணியாச்சு.. என்னோட வருங்காலமே அவ தான்டா.. என்னோட வாழ்க்கையோட சந்தோசம், அர்த்தம் எல்லாமே அவ தான்.. இவளைப் பார்க்கத் தான் இவ்வளவு நாள் காத்து இருந்தேனோ? இனிமே அவளை விடறதா இல்ல.. உடம்பு சரியா போகட்டும்.. அவகிட்ட என் மனசுல இருக்கறதை சொல்லி, அவளை நம்ம வீட்டுக்குத் தூக்கற வழியைப் பார்க்கணும்.. ரொம்ப எல்லாம் வெயிட் பண்ண முடியாது..” அதை சொல்லிக் கொண்டிருந்த அர்ஜுனின் கண்களில் காதல் ததும்பியது..
“வாவ்.. கங்க்ராட்ஸ்டா மச்சான்.. சீக்கிரமே எனக்கு கல்யாண சாப்பாடு கிடைக்கப் போகுது..” என்று குதூகலித்தவன்,
“நான் உன்னை புரிஞ்சு வச்சிருக்கறது சரி தான்டா மச்சான்.. அம்மாகிட்ட கூட சாயந்திரம் பேசிக்கிட்டு இருந்த போது சொல்லிட்டு இருந்தேன்.. அவன் வந்த அப்பறம் மனசுல இருக்கறது சொல்லுவான்னு நினைக்கிறேன்னு கெஸ் பண்ணினேன். நீயும் அதையே சொல்ற..” என்றவன்,
“ஆனா.. அவகிட்ட பேசறதுக்கு முன்னால நீ டைரக்டர் கிட்ட சொல்லி இருக்க வேண்டாம்டா.. அது நியூஸ் வெளிய போச்சுன்னா அவளுக்கும் தொல்லை தானே..” வினய் ஆதங்கப்பட்டான்.
“நானா சொல்லலடா.. சொல்ற மாதிரி ஆகிடுச்சு.. நான் சிட்டு கூட காலைல வீடியோ கால் பேசிட்டு இருந்தேன்ல.. அப்போ அவர் திடீர்ன்னு என் பக்கத்துல வந்துட்டார்.. அதுவும் அவர் என் பக்கத்துல வந்த பொழுது, நான் அவளை சிட்டுன்னு கூப்பிட்டேன்.. அதை வச்சு கண்டுபிடிச்சு கேட்டார்.. இன்னும் வீட்ல பேசணும்.. அதுவரை ப்ளீஸ் வெளிய தெரிய வேண்டாம்ன்னு சொல்லி இருக்கேன்..” என்றவன், வினய் சிறிது ஆஸ்வாச மூச்சு விடவும்,
“வெளிய தெரிஞ்சாலும் எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல.. ஆமா.. அவளை தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லிட்டு போயிக்கிட்டே இருப்பேன்.. இது என்ன மூடி மறைக்க நான் கள்ளக்காதலா பண்ணிட்டு இருக்கேன்?” அர்ஜுன் கேட்கவும்,
“எதுக்கும் அவகிட்ட பேசின அப்பறம் சொல்லி இருக்கலாம்.. அவ என்ன பதில் சொல்லப் போறான்னு ஒன்னு இருக்கே..” என்றவன், அர்ஜுன் அவனைப் பரிதாபமாகப் பார்க்க,
“சரி விடு.. அவளுக்கும் உன்னைப் பிடிச்சிருக்குன்னு தான் நினைக்கிறேன்.. பார்க்கலாம்..” என்றவன், அமைதியாக காரை ஓட்ட, வீட்டின் உள்ளே வந்த அர்ஜுன், அவசரமாக மாடிக்குச் சென்று, அவளது பால்கனி வழியாக, தன்னுடைய பால்கனிக்குத் தாவி ஏறி, அவனது பிரெஞ்சு விண்டோ வழியாக அவள் தெரிகிறாளா என்று பார்க்க, நன்றாக ஸ்க்ரீன் இழுத்து விடப்பட்டு இருக்க,
“போடி.. உன்னைப் பார்க்க ஆசையா ஓடி வந்தேன்..” என்றவன், ஏமாற்றத்துடன் திரும்பி அறைக்கு வர, வினய் அவனை அதிசய பிறவி போல பார்த்துக் கொண்டிருந்தான்.