எந்நாளும் தீரா காதலாக – 17

💝💝17                

சிவாத்மிகாவிற்கும் அர்ஜுனுக்கும் நாட்கள் மிகவும் அழகாக நகர்ந்துக் கொண்டிருந்தது.. ஒவ்வொரு நிமிடங்களும் இருவரும் ரசித்து வாழ்ந்தனர். கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்த காரணத்தினால் அனைத்து ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டிருக்க, சில தினங்கள் கடைகளும் மூடப்பட்டு இருக்கவும், இருவரின் பொழுதுகளும் பேசியே கழிந்தது. அது ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துக் கொள்ள மிகவும் உதவியாக இருக்க, இருவரும் அந்த நாட்களை ரசித்து மகிழ்ந்தனர்.

மெல்ல லாக்டவுன் தளர்த்தப்பட்டு, கடைகள் திறக்கப்பட்டு, ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு இருந்த இடைவேளையில், சிவாத்மிகா வேலைக்குச் சென்று திரும்பி வந்த நேரத்தில் இருந்து இருவரும் பால்கனியில் அமர்ந்து பேசியே பொழுதைக் கழித்தனர்..

சில நாட்கள், அர்ஜுனே பொட்டிக்கிற்கு அவளை அழைத்துச் சென்று வந்தான். ராதா கிண்டலாகச் சொன்னதையும் அவன் செய்தும் முடித்தான். அவனுடைய பால்கனியில் இருந்து, இவளுடைய பால்கனிக்கு செல்ல சிவாத்மிகாவிடம் வழி அமைக்க அனுமதி கேட்க,

“அய்யா என்னோட ராசா.. அதை முதல்ல செய்ங்க.. நீங்க அங்க இருந்து இங்க ஏறி குதிக்கறது பார்த்தா எனக்கு ஹார்ட்டு வெளிய வந்து விழுந்துடும் போல இருக்கு.. உங்களுக்கு ஏதாவதுன்னா நான் எப்படித் தாங்குவேன்..” தொண்டையடைக்க அவள் கேட்கவும், அவளது தலையை மெல்ல கலைத்தவன்,

“என்னோட ஸ்வீட்டே.. நீ சொல்லிட்டா அப்பீல் ஏது? உடனே செய்யறேன்டா என் லட்டு..” என்று கொஞ்சியவன், உடனே அதை செய்தும் முடிக்க, சிவாத்மிகா அவனது அன்பில் நெகிழ்ந்து போனாள்.            

அந்த வாரம் முழுவதும் அடுத்தடுத்து இருந்த ஷூட்டிங்கினால் அர்ஜுனின் நேரம் முழுவதும் அதில் சென்றுவிட, இருவரும் நேரில் சந்திப்பதே முடியாத காரியமாக இருந்தது.. முதல் இரண்டு நாட்கள், அதிகாலையிலேயே ஷூட்டிங் கிளம்பிவிடும் அர்ஜுன், இரவு நெடுநேரம் கழித்தே வீட்டிற்கு வருபவன், அவளது உறக்கத்தை கலைக்க மனமில்லாமல், உறங்கிவிட்டு மறுநாள் அதே போல அதிகாலையிலேயே ஷூட்டிங்கிற்குச்  சென்றான்.

அடுத்து வந்த நாட்கள், அவன் ஒரு ஆட் ஷூட்டிற்காக மும்பையும், அடுத்து ஒரு ஆல்பம் ஷூட்டிற்காக அங்கிருந்தே ஹைதராபாத்தும் சென்றுவிட,      அவர்களது பொழுதுகள், இடைவேளைக் கிடைக்கும் பொழுது போனில் பேசிக் கொள்வதில் கழிந்தது.. அதை விட இருவரும் தங்களது பிரிவை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் பாடல் மூலம் பதிலுக்கு பதில் பாட்டு போட்டு வெளிப்படுத்த, மெல்ல அர்ஜுனின் விசிரிகள் அதை கவனித்து, பலவளைத் தளங்களில், இருவரின் உறவுமுறையும் பேசுப் பொருளாக மாறி இருந்தது..

அதே போல சிவாத்மிகாவை முதன்முதலில் அறிமுகப்படுத்தி, அர்ஜுனுக்கு காட்டிய அந்த ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் பல யூட்யூப் சேனலிலும், பல வலைத்தளங்களிலும் பகிரப்பட்டு, அர்ஜுனின் பார்வையைப் பற்றிய ஆராய்ச்சியும், அதே போல அவர்களின் ஜோடிப் பொருத்ததைப் பற்றியும் அலசி ஆராயப்பட்டுக் கொண்டிருந்தது. 

சிவாத்மிகா வினயிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது, அர்ஜுன் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தது போல இருந்தது அந்தப் புகைப்படம்.. அதில் அவனது கண்களில் இருந்த அன்பை தெள்ளத்தெளிவாக அந்த புகைப்படம் எடுத்தவர் பிடித்திருக்க, அந்தப் புகைப்படத்தை அர்ஜுனிடம் பகிர்ந்தவள்,

“என்ன லுக் இது?” என்று கேலியாகக் கேட்க,

“வாவ்.. வாட் எ ரொமாண்டிக் லுக் அர்ஜுனே.. செமடா.. பாரு பாரு முதல் நாளே எப்படி பார்த்து இருக்கேன்னு..” என்று தன்னையே பாராட்டிக் கொண்டவன்,

“என்ன..ம்..ம்.மா நான் ரொமண்டிக்கா பார்த்து இருக்கேன் பாரேன்.. அது என்னவோ உன்னைப் பார்த்தா தான் அப்படி ஒரு லுக் வருது.. இங்கப் பாரு.. இந்த போட்டோல சுட்டுப் போட்டாலும் இல்ல பாரேன்.. என்ன இண்டன்ஸ் லுக் பாரேன்..” என்று அவளிடம் கேட்க, சிவாத்மிகா சிரிக்கத் துவங்கினாள்.

“என் செல்ல பையா.. இது நாம பார்த்த ஃபர்ஸ்ட் டே.. அன்னிக்கே இது என்ன லுக்ன்னு கேட்டேன்.. அன்னைக்கேவா உங்களுக்கு என்னை இப்படி பிடிச்சது?” அவனது பதிலைக் கேட்க, அவளது இதயம் படபடக்கத் துவங்கியது.

“தெரியலடி என் ஸ்வீட்டு.. உன்னைப் பார்த்த முதல்ல இருந்தே என்னை அவுட் பண்ணிட்டு.. இது என்ன கேள்வி?” என்றவன், அவளது கன்னத்தைப் பிடித்து கொஞ்சியபடி,  

“அன்னிக்கே நான் காலி.. அதுவும் நீ அந்த ஹீரோயின் ப்ரான்க்ன்னு சொன்னவுடனே ஒரு செகண்ட் உன் முகம் வாடி, அதை சரி பண்ணின பாரேன்.. எனக்கு அந்த ஹீரோயின பிடிச்சு நல்லா நாலு கேள்வி கேட்கணும் போல அவ்வளவு கோபம் வந்துச்சு..” எனவும், தன்னைப் பார்த்த சில மணி நேரத்திலேயே, தன்னுடைய முக மாற்றத்தைக் கண்டுக் கொண்ட, அவனது அன்பில் சிவாத்மிகா நெகிழ்ந்து போனாள்.            

அவனது அன்பிலும், காதலிலும், அவளது நிமிடங்கள் அழகாக கழிய, ஹைதராபாத் ஷூட்டிங் முடிந்து, அன்று அதிகாலை வந்தவன், நேராக அறைக்கு சென்று, அவசர குளியல் போட்டு உடனே உறங்கியும் போனான்.

நெடுநேரம் உறங்கி எழுந்த பிறகு, சோம்பலாக கண்களைத் திறந்தவன், தனது போனை எடுத்துப் பார்க்க, சிவாத்மிகாவிடம் இருந்து மெசேஜ்ஜும், பதிவு போட்டதற்கான அறிவிப்பு வந்திருக்க, அவனது இதழ்களில் புன்னகை..

“காலையிலயே என் ஸ்வீட்டு என்னை மிஸ் பண்ணுதா? ஸ்டோரி எல்லாம் போட்டு இருக்காளே..” புன்னகையுடன் அதைத் திறந்தவன், அழகான கடற்கரையின் கரையில், இரு கைகள் கோர்த்து இருக்க, அதன் பின்னணியில்,     

காதல் சொல்வது உதடுகள் அல்ல,

கண்கள் தான் தலைவா,

கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல,

கவிதைகள் தலைவா..

என்ற பாடல் ஒலிக்க, அதைப் பார்த்துச் சிரித்தவன்,

“லட்டு.. நம்ம கையைப் போட்டு இப்படி பாட்டு போட்டா நான் என்ன செய்வேன்? பதிலுக்கு எசப்பாட்டு பாடுவேன்.. இதோ கம்மிங்..” என்று முணுமுணுத்தவன், தனது ஸ்டோரியை புன்னகையுடன் பதிவிடத் துவங்கினான்.

தனது கேமராவில் படம் பிடித்து இருந்த ஜோடி கிளிகளை பதிவிட்டு,

கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே  

என்று பாடலை பதிவிட, ஒரு டிசைனை கட் செய்துக் கொண்டிருந்த சிவாத்மிகா, தனது மொபைல் ஒலியெழுப்பவும், அவசரமாக செய்துக் கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு, அதைப் பார்த்தவள், அதில் தெரிந்த அர்ஜுனின் பெயரைப் பார்த்து இதழ்களில் புன்னகை அரும்பியது.

அதை பார்த்த அவளது உதவியாளர் ப்ரியா, “என்ன மேடம்.. அர்ஜுன் சார் ஊருல இருந்து வந்தாச்சா?” என்று கேலியாகக் கேட்க,

“ம்ம்… காலையில தான் வந்தாங்க.. நான் கிளம்பும்போது தூங்கிட்டு இருந்தாங்க.. இப்போ முழிச்சாச்சு போல..” புன்னகையுடன் அவளிடம் சொன்னவள், அவசரமாக அர்ஜுனுக்கு காலை வாழ்த்தை அனுப்பிவிட்டு, வேகமாக வேலையை முடித்தாள்.

அதற்குள் அர்ஜுன் அவளுக்கு அழைத்திருக்க, “நீங்க அவரோட அந்த அவார்ட் பங்க்ஷன் டிரஸ் ரெடி பண்ணிடுங்க.. அடுத்த வாரம் பங்க்ஷன் இருக்கு.. தினமும் ரெடியான்னு கேட்டே என்னை கொல்றார்.. ரெடின்னா ஒரு தடவ போட்டு ட்ரையல் பார்த்துடலாம்.. இல்ல லாஸ்ட் மினிட்ல வினய் அண்ணா போல என்னையும் ஓட விட்டா நான் தாங்க மாட்டேன்..” சந்தோஷச் சலிப்புடன் சொன்னவள், ப்ரியா சிரித்துக் கொண்டே நகரவும், தனது போனை எடுத்தாள்.

“ஹ…லோ.. கண்ணா.. என்ன முழிச்சாச்சா?” சமீப காலமாக அர்ஜுனை அவள் அழைக்கும் பெயரைச் சொல்லி விளிக்க, அந்த பெயர் தன்னைத் தேடும் பொழுது தான், அவளது வாயில் இருந்து வெளிவரும் என்று புரிந்தவன்,

“ஹலோ மை லட்டு.. ஐ மிஸ் யூ.. காலைல என்ன இவ்வளவு சீக்கிரம் பொட்டிக் போயிட்ட? அதுவும் என்னை வந்து பார்க்காம.. நான் சோகமா இருக்கேன்..” அவளை வம்பிழுக்க,

“கண்ணா.. மை டியர் கண்ணா.. கொஞ்சம் மணியைப் பாருங்க.. பன்னிரண்டு ஆகுது.. நான் பத்து மணி வரை உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு தான் வந்தேன்.. நீங்க விடிய காலைல வந்து டயர்ட்டா தூங்கிட்டு இருப்பீங்கன்னு தான் நானும் கிளம்பி வந்துட்டேன்.. லஞ்ச்க்கு வீட்டுக்கு வந்து உங்களைப் பார்க்கலாம்ன்னு தான் நான் லஞ்ச் கூட எடுத்துட்டு வரல..” என்று அவள் சொல்லவும்,

“செம டயர்ட்டா சிட்டு.. காலையில வந்த பொழுதே ஏறி குதிச்சு உன்னைப் பார்க்க வந்திருப்பேன்.. நீயும் நைட் பேசும்போது டயர்டா இருக்குன்னு சொன்னியா.. அதுனால தான் டிஸ்டர்ப் பண்ணல..” எனவும்,

“அர்ஜுனே.. நீங்க ஏறி குதிக்க வேண்டாம்ன்னு தானே.. கிரில் எல்லாம் எடுத்து அங்க வழி போட்டீங்க? என்ன ஒரு வாரத்துல மறந்துப் போச்சா?” என்று கேலி செய்ய, அர்ஜுன் சத்தமாகச் சிரித்தான்.

“சும்மா.. ஏதோ பழக்க தோஷத்துல ஒரு ஃப்ளோல சொல்லிட்டேன்..” என்றவனுக்கு அவளது களுக்கென்ற சிரிப்பே பதிலாகக் கிடைக்க, பதிலுக்கு அர்ஜுனும் புன்னகைத்துக் கொண்டான்.  

“நீங்க வந்துட்டீங்களான்னு காலைல கண்ணு முழிச்சதும் பார்த்தேன்.. உங்க ரூம் ஸ்க்ரீன் அசைஞ்சிட்டு இருந்துச்சு.. சரி நீங்க வந்துட்டீங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன்..” என்றவளிடம்,   

“லஞ்ச்க்கு வெளிய போகலாமா?” அர்ஜுன் கேட்க,

“ஹான்..” என்று அவள் அதிர, அர்ஜுன் சிரிக்கத் துவங்கினான்.

“என்னாச்சு?” அவனது கேள்விக்கு,

“இல்ல.. லஞ்ச்க்கு வெளிய போகலாமான்னு கேட்கறீங்க? ஹோட்டல் எல்லாம் போனா எத்தனை பேரு கண்ணுல படணும்.. அரசல் புரசலா இருக்கறது கன்ஃபார்ம் பண்றோமா?” அவள் கேலியாகக் கேட்க,

“பண்ணிடலாம்.. பண்றதுல எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல.. ஆனா.. கன்ஃபார்ம் பண்றது நம்ம கல்யாண டேட்டா தான் இருக்கணும்.. நாம அதுக்கு ரெடியா இருக்கோமா?” தீவிரமாக அர்ஜுன் கேட்க, என்ன சொல்வது என்று புரியாமல் சிவாத்மிகாவிடம் அமைதி..

“சோ.. நாம அதுக்கு ரெடின்னு தோணற வரை இப்படியே என்ஜாய் பண்ணலாம்.. ரெடியா இரு.. இன்னும் ஒன் ஹவர்ல உன்னைப் பிக்கப் பண்ணிக்கறேன்..” என்றவன்,

“சரி.. வாங்க.. நான் அதுக்குள்ள வேலையை முடிச்சு வைக்கறேன்..” என்ற பதிலைத் தொடர்ந்து, போனை வைத்துவிட்டு, போன் செய்து வினய்யிடம் தான் அவளுடன் வெளியில் செல்வதாக சொல்லி விட்டு, எழுந்து தயாராகத் துவங்கினான்.

“அம்மா நான் சொன்னேன் இல்ல.. அவன் சிவா கூட லஞ்ச்க்கு போறானாம்.. ரெண்டும் ஒரு வாரம் பார்க்காததுக்கே இந்த ஃபீல் பண்ணிட்டு சுத்துதுங்க..” வினய் கேலி செய்துக் கொண்டிருக்க, நிர்மலா படிகளில் இறங்கி வரும் அர்ஜுனைத் திரும்பிப் பார்த்தார்.

“என்னடா கண்ணா? எப்படி இருக்க? டயர்ட்டு போச்சா?” என்று கேட்க, அவரது மடியில் சாய்ந்தவன்,

“போச்சும்மா.. நீங்க என்ன செய்யறீங்க?” அவனது கேள்வியில்,

“நான் என்னடா.. இப்போ தான் சாப்பிட்டேன்.. வினய் வெளிய போய் சாப்பிடறேன்னு சொல்லிட்டான்.. நீ என்ன செய்யப் போற?” என்று கேலியாகக் கேட்க,

“நானும் அவளைப் பார்த்து ஒரு வாரம் ஆகுது.. அவளைப் பார்த்துட்டு வரேன்.. அவ என்னை மிஸ் பண்றா போல..” எனவும்,

“பேசாம சீக்கிரம் அவளை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வாயேன்.. அப்போ சுதந்திரமா எல்லாம் இடமும் அவளைக் கூட்டிட்டு போகலாம்ல..” நிர்மலா கேட்க, அர்ஜுன் அவரைப் பார்த்து சிரித்தான்..

“உங்க மருமகளே வாயைத் திறந்து, நாம கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொல்ற வரை அந்தப் பேச்சே கிடையாது.. அவளுக்கு இன்னும் மனசு அதுக்கு செட் ஆகலை.. அவ பட்ட காயம் கொஞ்சமா சொல்லுங்க..” என்றவன், அவர் முறைக்கவும், கண் சிமிட்டிவிட்டு,

“இன்னும் கொஞ்சமே கொஞ்ச நாள்.. அவ சொல்லிடுவா..” என்று நம்பிக்கையுடன் சொன்னவன், அவர் கொடுத்த காபியை குடித்துவிட்டு,

“சரிம்மா.. நான் போயிட்டு அவளைப் பார்த்துட்டு வரேன்..” என்று அவன் எழுந்துக் கொள்ள,

“அர்ஜுன்.. அந்த அவார்ட் டிரஸ் எல்லாம் ரெடியா கேளுடா.. ஒன்ஸ் ட்ரையல் பார்த்துட்டு பிக்ஸ் பண்ணிக்கலாம்..” என்று வினய் சொல்ல, அர்ஜுன் அவனைப் பார்த்து கேலியாகச் சிரித்தான்.

“நான் அதைப் பத்தி கேட்டா.. உங்களுக்கு கண்டிப்பா அவார்ட் பங்க்ஷன்க்கு கார்ல ஏறுறதுக்குள்ள தந்துடறேன்.. பயப்படாதீங்கன்னு என்னை கேலி செய்யறாங்க அந்த டிசைனர் மேடம்.. நான் என்னடா செய்யறது? நீயே உன் தங்கை கிட்ட கேட்டுப் பாரு.. கேட்டு வாங்கிக் கொடு” என்று கேலி செய்ய, வினய் சிரிக்கத் துவங்கினான்.

“ஹஹா.. உனக்கு ஏத்த ஆள் தான்.. சரி.. நானும் கிளம்பறேன்.. உன்னோட அந்த ஆல்பம்க்கு டிரஸ் ரெடி பண்ணிட்டு வரேன்.. நாங்களும் லஞ்ச்சுக்கு போயிட்டு வருவோம்..” வினய் கேலி செய்ய,

அவனைப் பார்த்து சிரித்தவன், “நானும் போய்ட்டு வரேன்மா.. அவ வெயிட் பண்ணிட்டு இருப்பா..” என்ற அர்ஜுன் கிளம்பிச் செல்ல,

“நானும் வரேன்மா..” என்ற வினய், தனது அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்றவன், நேராக ராதாவைக் காணச் சென்றான்..  

அப்பொழுது, “பாப்பா.. நீ மதியம் சாப்பிட வரியா?” ராதா சிவாத்மிகாவிடம் கேட்க,

“அவங்க வெளிய லஞ்ச் சாப்பிட போறாங்களாம்.. நீயும் வரியா நாம லஞ்ச் சாப்பிட போகலாம்..” வினய் கேட்டுக் கொண்டே அமர,

“சரி பாப்பா.. நான் வச்சிடறேன்..” என்றவள், இடுப்பில் கையை வைத்துக் கொண்டு வினயை முறைத்தாள்.

“எதுக்கு இப்போ முறைக்கறீங்க?” வினய் இழுத்துக் கேட்க,

“இல்ல.. உங்களுக்கு பொழுது போகலையா? என்னை வந்து வம்புக்கு இழுத்துட்டு இருக்கீங்க?” அடுக்களைக்குள் சென்றுக் கொண்டே ராதா கேட்க, வினய் அவள் முன்பு வந்து நின்றான்.

“ராதா.. நான் ஒண்ணும் வம்புக்கு கேட்கல.. சீரியஸா தான் கேட்கறேன்.. அது தான் சமைக்கல இல்ல.. வா நாம போயிட்டு அப்படியே கொஞ்சம் என்னோட ஆபீஸ்க்கு போயிட்டு வந்துடலாம்.. அவனுக்கு டிரஸ் ரெடியான்னு பார்க்கணும்.. நீயும் வீட்டையே சுத்திச் சுத்தி வர இல்ல..” என்று அவன் கேட்க, ராதா அவனை விழிகள் விரியப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இப்படியே பார்த்துட்டு இருக்கப் போறியா? நானும் வெளிய போய் சாப்பிட்டுக்கறேன்னு சொல்லி கிளம்பிட்டேன்.. பசிக்குது வேற.. வா.. கிளம்பு.. சீக்கிரம்.. உன் சமையல்ல இருந்து உனக்கு இன்னிக்கு விடுதலை.. அதுக்கே நீ எனக்கு நன்றி சொல்லணும்..” அவன் கேலியாகச் சொல்ல, ராதா முறைக்க,

“போய் கிளம்புன்னு சொல்றேன் இல்ல..” என்றவன், கையைக் கட்டிக் கொண்டு நிற்க, மீண்டும் அவனை முறைக்க முயன்றுத் தோற்றவள், புன்னகையுடன்,

“என்ன இன்னைக்கு ரொம்ப அடம் பண்ணறீங்க?” என்றபடி, சுடிதாரை மாற்றிக் கொண்டு வந்தாள்.

அவள் படிகளில் இறங்கி வரும்பொழுது அவளது நீளமான பின்னலை முன்னால் போட்டு, அவள் நீவிக் கொண்டே இறங்கி வர, அவளை நிமிர்ந்துப் பார்த்த வினயின் கண்கள் ரசனையுடன் அவள் மீது படிந்தது.

அவனது கண்கள் அவளிடமே ஒட்டிக் கொள்ள, அவன் அருகே வந்தவள், அவனது முகத்தின் முன்பு கை ஆட்ட, தலையை உலுக்கிக் கொண்டவன், “போகலாமா?” என்று கேட்க, ராதா புன்னகையுடன் தலையசைத்தாள்.

வினயின் நெஞ்சிலே ஏதோ ஒரு அதிர்வு.. அமைதியாகவே அவளுக்கு வீட்டை பூட்ட உதவியவன், அவளை அழைத்துக் கொண்டு, தன்னுடைய காரில் ஏற, அதைப் பார்த்துக் கொண்டிருந்த நிர்மலாவின் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை..  

காரில் ஏறியும் வினய் அமைதியாக வர, “என்ன சைலென்ட்டா இருக்கீங்க?” ராதா பேச்சைத் தொடங்க,

“ஒண்ணும் இல்ல.. சும்மா தான்.. எங்க போகலாம்ன்னு யோசிச்சேன்..” என்றவன், காரை ஒரு ஹோட்டலில் நிறுத்த, அந்த ஹோட்டலைப் பார்த்த ராதா கண்களை விரிக்க, அர்ஜுனின் காரை அப்பொழுது வாலெட் பார்க்கிங்கிற்கு எடுத்துச் சென்றதைப் பார்த்த வினய், ராதாவிற்கு அதைக் காட்டி சிரித்தான்.

“அவங்க ரெண்டு பேருமே இங்க தான் வந்திருக்காங்க போல..” வினய் சொல்ல,

“எப்படி அதுக்குள்ள அவங்க வந்துட்டாங்க?” ராதா யோசனையுடன் கேட்க,

“அது ஒருத்தரை நான் பசிக்குது.. சீக்கிரம் டிரஸ் மாத்திட்டு வா. சாப்பிடப் போகலாம்ன்னு சொன்னேன்.. ஆனா.. ஒரு சுடிதார் மாட்ட ஒருத்தர் பண்ணின நேரத்துல அவங்க முன்னால வந்துட்டாங்க..” வினய் சொன்னதை முதலில் புரியாமல் முழித்தவள், புரிந்த பின்னோ அவனை முறைத்தாள்.  

வீட்டில் இருந்து கிளம்பிய அர்ஜுன், சிவாத்மிகாவின் பொட்டிக்கிற்குச் செல்ல, தனது அறையில் இருந்தே அவனைப் பார்த்தவள், வேகமாக வெளியில் வந்தாள்.

“அர்ஜுன்..” அவள் துள்ளிக் குதிக்க,

“ஹாய் சிட்டு..” என்றபடி அவளது கையைப் பிடித்தவன், அவளுடன் அவளது அறைக்குச் சென்றான்.

புன்னகையுடன் அவன் அருகில் அமர, “சிட்டு.. என்ன என்னைப் பார்க்காம ஒரு வாரத்துல இளைச்சு போயிட்டியா?” அவன் கேட்க,

“ஹய்யடா.. ரொம்ப ஓவர் தான்.. அப்படி எல்லாம் இல்ல..” என்றவள், அவனிடம் அவனது டிரெஸ்ஸை நீட்டி,

“உங்க அவார்ட் டிரஸ் ரெடி.. இந்தாங்க..” என்றபடி அவனது கையில் கொடுக்க, அதைப் பிரித்துப் பார்த்தவனின் கண்கள், அதன் வடிவமைப்பில் பெரிதாக விரிந்தது..

“வாவ்.. செல்லமே.. ரொம்ப சூப்பரா இருக்கு.. எனக்கு இப்போவே ட்ரை பண்ணனும்ன்னு ஆசையா இருக்கு.. ஆனா.. இப்போ அதுக்கு டைம் இல்ல.. நாம வீட்டுக்கு போயிட்டு ட்ரை பண்ணலாம்.. சரியா இருக்கும்ன்னு நினைக்கிறேன்..” என்றவன், அவள் தனக்காக முதன்முதலாக வடிவமைத்த ஆடையை ஆசையாக வருடிக் கொண்டே அவளைப் பார்க்க, கன்னத்தில் கை வைத்துக் கொண்டு, சிவாத்மிகாவும் அவனை ஆசையுடனும் ஆவலுடனும் பார்த்துக் கொண்டிருந்தாள்.  

“ரொம்ப அழகா இருக்கு சிட்டு..” என்றவன்,

“என்ன.. நான் சும்மா நச்சு பண்றேன்னு கொடுத்துட்டியா?” என்று புருவம் உயர்த்தி அவளைப் பார்த்து கேலியாக சிரிக்க,

“ரொம்ப கொழுப்பு தான்.. சரி.. இதை வீட்ல ட்ரை பண்ணிட்டு எனக்கு காட்டுங்க.. எனக்கு பசிக்குது.. காலையில உங்க கூட சேர்ந்து பிரேக்பாஸ்ட் சாப்பிடலாம்ன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. நீங்க எழுந்துக்கலங்கவும் அவசரமா ரெண்டு வாய் சாப்பிட்டு வந்தேன்.. இப்போ கிளம்பலாம்.. இந்த டிரஸ்சை ட்ரையல் பார்த்துட்டு ஏதாவது வேணுமான்னு சொல்லுங்க.. வினய் அண்ணாகிட்டயும் சொல்லிட்டேன்..” என்றவள், எழுந்துக் கொள்ள, அர்ஜுன் அவளுடன் எழுந்தான்..

இருவரும் காருக்கு வந்ததும், அவளது கையை அழுத்திய அர்ஜுன், அவளைத் தோளோடு அணைத்துக் கொள்ள, அவனது தோள் சாய்ந்தவள், “நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணினேன்.. தினமும் உங்களைப் பார்க்காம கஷ்டமா இருந்தது..” என்று அவனது கன்னத்தில் இதழ் பதிக்க, டக்கென்று திரும்பியவன், அவளது இதழில் மெல்லியதாக இதழ் ஒற்றி,

“நான் மட்டும் ஜாலியாவா இருந்தேன்.. நான் அங்க இருந்தாலும் இங்க தான் என் நினைப்பு பூரா இருந்தது.. பேசாம நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? நான் உன்னை என் கையோடவே கூட்டிட்டு போயிடுவேன்.. இப்படி பிரிஞ்சு இருந்து கஷ்டப்பட வேண்டாம்ல..” என்று அவன் கேட்கவும், அவனது தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டவள், அவனது கையைப் பிடித்துக் கொண்டு அமைதியானாள்.

அவளது தோளை அழுத்தியவன், “உனக்கான டைம் எடுத்துக்கோ.. ஆனா.. சீக்கிரம் சொல்லு என்ன? இப்போ நாம கிளம்பலாம்..” என்றவன் வண்டியைக் கிளப்பிக் கொண்டு செல்ல,

“எனக்கும் உங்க கூட சந்தோஷமா உரிமையா ஊரைச் சுத்தணும்ன்னு ஆசையா தான் இருக்கு அர்ஜுன்.. நிஜமா நெஞ்சு நிறைய ஆசை இருக்கு.. நீங்க எனக்கு சொந்தம்.. பாருங்கடா என் அஜ்ஜு கண்ணாவன்னு எனக்கு அப்படியே கத்திச் சொல்லணும் போல தான் இருக்கு.. ஆனா.. ஏதோ பயமா இருக்கு அர்ஜுன்.. எனக்கு இன்னும் அது பத்தி யோசிக்க முடியல.. நான் உங்க கூட நிறைவா வாழணும்ல.. நம்ம குழந்தைங்களை சந்தோஷமா நாம வளர்க்கணும்ல..” என்று அவள் கேட்க, அர்ஜுன் அவளைத் தனது தோளோடு அணைத்துக் கொண்டான்..

“நான் ஒண்ணு மட்டும் உனக்கு சொல்றேன்.. நம்ம குழந்தையை நாம ரொம்ப சந்தோஷமா.. அவங்களையும் நம்ம ரெண்டு பேரோட அன்புல குளிப்பாட்ட போறோம்… நாம தான் பெஸ்ட் பேரெண்ட்ஸ்ன்னு நம்ம பசங்க சொல்ற அளவுக்கு இருப்போம்.. பாரு.. ஆனா.. கொஞ்சம் சீக்கிரம் யோசிம்மா.. நானும் பாவம் இல்ல.. சின்னப் பையன்.. எவ்வளவு நாள் உன்னை விட்டு இப்படி இருக்கறது..” என்று முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டவன், அவள் சிரிக்கவும்,

“சிரிக்காதடி லட்டு.. அப்படியே கடிச்சிடுவேன்..” எனவும், நாணத்துடன் அவனது தோள் சாய்ந்தவளை காதலுடன் பார்த்தவன், சந்தோஷமாக பேசிக் கொண்டே, ஹோட்டலிற்கு சென்றனர்.

அவன் ஏற்கனவே புக் செய்திருந்த டேபிளிற்குச் செல்ல, “டேபிள் புக் பண்ணினீங்களா?” என்று கேட்டவளிடம் தலையசைத்து,

“உனக்கு பிடிச்ச ஐடம்ஸ் சொல்லு..” என்று கேட்டவன், அவள் சொல்லவும், அதையே தனக்கும் சொன்னவன், நிறைவாய் அந்த ஒரு வாரப் பிரிவை பேசியேத் தீர்த்தனர்.

இருவரும் உண்டு முடித்து வெளியில் வரவும், சிவாத்மிகா அர்ஜுனுக்கு சற்று பின்னால் வர, “இப்போ எதுக்கு பின்னால வர.. கூட வா.. ஒண்ணா தானே வந்தோம்..” என்று அவன் திரும்பிக் கேட்டுக் கொண்டிருக்க, அதே நேரம்,   

“அர்ஜுன் சார்..” என்ற குரல் கேட்கவும், சிவாத்மிகாவின் கண்கள் சிரிக்க, அவளை முறைத்தவன், அந்த குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினான்.

அவனது மாஸ்கையும் மீறி, அவனை அடையாளம் கண்டுக் கொண்டவர்கள், அவன் அருகில் புகைப்படம் எடுக்க ஆவலுடன் வந்தனர்.. அர்ஜுன் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க, சிவாத்மிகா அவனை பார்க்காது போல பார்த்துக் கொண்டு தனது செல்லில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அர்ஜுனின் பார்வை அவளிடம் சென்று மீள, அதை சிலர் கவனித்தனர்.. சிலர் வேண்டுமென்றே சிவாத்மிகாவும் விழுவது போல போட்டோ பிடிக்க, அர்ஜுன் அது தெரிந்தும், தெரியாதது போல நின்றான்.. அங்கு வந்தவர்களிடம் படம் பிடித்து, ஓரிரு வார்த்தை அவன் பேசி, அவர்களிடம் புன்னகையுடன் விடைப்பெற்று சிவாத்மிகாவைத் திரும்பிப் பார்க்க, சிவாத்மிகா அவனுடன் இணைந்துக் கொண்டாள்.

“உன்னை யாரு போய் உட்கார சொன்னது?” என்று கேட்டுக் கொண்டே அர்ஜுன் நடக்க,

“பின்ன உங்க ஃபேன் கேர்ள்ஸ் இருக்கும்போது நான் இருந்தா அவங்களுக்கு எல்லாம் கடுப்பாகாது?” என்று அவள் கேலியாகக் கேட்க, அர்ஜுன் அவளை முறைத்து,

“அவங்க ஆகறாங்கன்னு எல்லாம் நீ ஒண்ணும் நகர வேண்டாம்..” என்றவன், அவளுடன் காருக்கு நடக்க, அவனது முகத்தைப் பார்த்தவள்,

“அர்ஜுன்.. என் மேல கோபமா?” பாவமாக சிவாத்மிகா கேட்க,

“கோபம் இல்ல சிவா வருத்தம்..” என்றபடி, தனது காருக்காக சென்று நிற்க, சிவாத்மிகாவின் முகம் வாடியது..

“உங்களுக்குத் தேவை இல்லாம..” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள்,

“என்ன தேவை இல்லாம சிவா? இல்ல கேட்கறேன்.. எது தேவை இல்லாதது? நீயும் நானும் சேர்ந்து இருக்கறதா? இப்போ நீ அங்க உட்கார்ந்து இருந்தா அவங்க உன்னை கண்டுக்க மாட்டாங்களா? இப்போ எத்தனை பேர் உன்னையும் சேர்த்து போட்டோ எடுத்தாங்கன்னு தெரியுமா? என்னை நம்பலைன்னா.. நாளைக்கு அது சோஷியல் மீடியால வரும்.. அப்போ பாரு..” என்றவன், காரை வாலெட் பார்கிங்கில் இருந்து எடுத்துக் கொண்டு அந்த ஊழியர் வரவும், அவருக்கு டிப்ஸ் கொடுத்துவிட்டு, காரில் ஏறியவன், அவளும் அமைதியாக ஏறவும், அவளைப் பார்த்தவன், காரை செலுத்திக் கொண்டே,

“இதைப் பத்தி நான் தான் கவலைப்படணும்.. எனக்கு அதைப் பத்தி கவலை இல்ல.. இப்போ கூட சொல்றேன்.. எனக்கு நம்ம ரிலேஷன்ஷிப்பை அனவுன்ஸ் பண்றதுல எந்த வித பிரச்சனையும் இல்ல.. ஏன்னா என் லைஃப்ல இருக்கப் போற ஒரே பொண்ணு எங்க அம்மாவைத் தவிர நீ மட்டும் தான்..” என்றவன், அவளது முகத்தைக் கூர்ந்து பார்த்து,

“உனக்கு என் கூட நிக்கறதுல என்ன கஷ்டமா இருக்கு? என்னோட இமேஜ்ன்னு எல்லாம் சொல்லாதே.. ஏற்கனவே நம்ம விஷயம் எல்லாம் யூட்யூப் சேனல்ல நியூஸ்சா போயிட்டு இருக்கு.. அதனால எனக்கு ஒண்ணும் ஆகிடாது.. அதே போல நான் ஒளிச்சு மறைச்சு உன் கூட பழக நினைக்கலைன்னு மனசுல நல்லா பதிய வச்சிக்கோ.. அப்படித் தான் இருக்கணும்ன்னா.. நாம இனிமே கல்யாணத்துக்கு அப்பறம் வெளிய வரலாம்.. இது தான் லாஸ்ட்..” என்றவன், அமைதியாக காரை ஓட்டத் துவங்கினான்.

“சாரி அர்ஜுன்.. அங்க தேவை இல்லாத சீன் ஆகிடப் போகுதுன்னு தான் நான் உட்கார்ந்தேன்..” என்று அவள் சொல்லவும்,

“சாரி கேட்க எல்லாம் ஒண்ணும் இல்லடா சிவாம்மா.. எனக்கு நீ அப்படி போய் உட்கார்ந்தது கொஞ்சம் கஷ்டமா இருந்தது.. அது தான்..” என்று சொன்னவன், அவளது கையை அழுத்திவிட்டு, வண்டியை அவளது கடையின் முன்பு நிறுத்த,

“உள்ள வரீங்களா?” அவளது கேள்விக்கு,

“இல்லம்மா.. ரொம்ப டயர்டா இருக்கு.. போய் கொஞ்சம் தூங்கனும்.. நீ சீக்கிரம் வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு வா.. உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..” என்றவன், அவளது கன்னத்தைத் தட்ட, அவனது கையை தனது கன்னத்தோட அழுத்திக் கொண்டவள்,

“நிஜமாவே நான் உங்களோட இதுக்காகத் தான் செஞ்சேன்.. இனிமே இப்படி பண்ண மாட்டேன்.. சாரி.. இப்படி மூஞ்சியை வச்சிக்காதீங்க..” என்று அவள் கெஞ்ச, அவளை நெருங்கி அவளது நெற்றியில் இதழ் ஒற்றியவன்,

“சரிடா என் சிட்டு.. டேக் கேர்.. சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வீட்டுக்கு வா.. நாம டிரஸ் ட்ரையல் பார்க்கலாம்.. பை..” என்று சொன்னவன், அவள் கீழே இறங்கவும், அவளுக்கு கையசைத்து காரை கிளப்பிச் சென்றான்.