எங்கே எனது கவிதை – 2

எங்கே எனது கவிதை – 2
2
அது ஒரு மார்கழி மாதம்.. சென்னையில், சில்லென்ற காற்று வீசும் ஒரே மாதம்.. மாலை மங்கும் நேரத்தில், பலவித சபாக்களில் எப்பொழுதையும் விட நிறைந்து வழியும் காலமது.. சபாக்களிலும், கோவிலிலும் தெய்வீக மனம் கமழ்ந்துக் கொண்டிருக்கும் மாதம் அது..
பலவித சபாக்களிலும், திருமண மண்டபத்திலும், கோவில் மண்டபங்களிலும், இசை நிகழ்ச்சிகளும், நடன நிகழ்ச்சிகளும் நடக்கும் காலம் அது.. அப்படி ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை வேளையில், கார்த்திக், தனது சீனியர் வக்கீலான அதியமானுடன் ஒரு கேஸ் விஷயமாக கலந்தாலோசிக்கச் சென்றிருந்தான்..
கேஸ் பற்றி பேசி முடித்த பிறகு, “என்ன கார்த்திக்.. இப்போ ஏதாவது வேலை இருக்கா?” என்று அதியமான் கேட்க,
“இல்ல சார்.. இப்போ வீட்டுக்கு போய் கிரிக்கெட் மாட்ச் தான் பார்க்கலாம்ன்னு இருக்கேன்.. ஆனா அதுக்கு எங்க அம்மா எனக்கு டிவியை விடனும். இந்த ஞாயிறு கூட விட்டு வைக்காம சீரியல் போட்டு படுத்தறாணுங்க சார்.. எங்க அம்மா ஒரு சீரியல் விடாம பார்த்துட்டு இருப்பாங்க.. நான் போய் மேட்ச் போடறேன்னு சொன்னா, எங்க அம்மா என்னை எதிரிய விட மோசமா பார்ப்பாங்க.. அப்பா ஏதாவது கோவில்.. இல்ல கச்சேரிக்கு போயிருவார்.. நான் தான் என்ன செய்யறதுன்னு தெரியாம லாப்டாப்ல எதையாவது பார்த்துட்டு இருப்பேன்.. ஏன் சார்.. ஏதாவது முக்கியமான வேலை இருக்கா?” புலம்பி விட்டு அவன் கேட்கவும்,
“இல்ல.. நான் ஒரு டான்ஸ் நிகழ்ச்சிக்கு போகப் போறேன்.. என்னை சீஃப் கெஸ்ட்டா கூப்பிட்டு இருக்காங்க.. என் கூட வாங்களேன்.. உங்களுக்கும் புது வகையா பொழுது போகும்.. ரொம்ப இன்டெரெஸ்ட்டா இருக்கும்.. கண்டிப்பா உங்களுக்கு போர் அடிக்காது.. நான் அதுக்கு காரண்டி.. வேணும்ன்னா என் தம்பியைக் கேளுங்களேன்..” அந்த சீனியர் வக்கீலான அதியமான் கேலியாகச் சொல்லவும்,
கார்த்திக் யோசனையுடனும், சந்தேகத்துடனும், “என்னது உங்க தம்பியா? அவருக்கு அதுக்கு எல்லாம் டைம் இருக்கா?” என்றபடி அவரைப் பார்த்தான்..
“என்ன அப்படிப் பார்க்கறீங்க? நிஜமா சொல்றேன் கார்த்திக்.. டான்ஸ் ப்ரோக்ராம்ல நாம என்ன பண்ண போறோம்ன்னு யோசிக்காதீங்க.. இண்டரெஸ்ட்டிங்கான கதை இருக்கும்.. சும்மா ஒரு ட்ரை பண்ணிப் பாருங்க.. நிஜமா சொல்றேன்.. இது போல என் தம்பி சொன்னதுனால தான் நான் போனேன்.. அவனால தான் எனக்கு அதுல இண்டரெஸ்ட் வந்தது.. நிஜமாவே நல்லா இருக்கும்.. நம்பி என் கூட வரலாம்..” அவர் மிகவும் உணர்ந்துச் சொல்லவும்,
‘ஹ்ம்ம்.. எப்பவுமே இவரு சொன்னா சரியா தான் இருக்கும்.. போய் தான் பார்ப்போமே.. போர் அடிச்சா.. ஏதாவது சாக்கு சொல்லிட்டு எழுந்து வெளிய போயிடலாம்..’ என்று நினைத்துக் கொண்டவன்,
“சரி சார்.. வரேன்.. இதுவரை நான் இது போல எல்லாம் பார்த்தது இல்ல.. நீங்க சொல்றீங்கன்னு வரேன். பார்ப்போம்.. உங்க தம்பி டி.எஸ்.பி. இல்ல.. அவருக்கு இதெல்லாம் பிடிக்குமா? இல்ல இதை எல்லாம் பார்க்க அவருக்கு டைம் இருக்குமா? ஆச்சரியமா இருக்கு.. நீங்க அதுக்கு பதில் சொல்லவே இல்லையே..” என்றவன், அவருடன் அந்த நடன நிகழ்ச்சிக்குச் சென்றான்.
“மதிக்கு பாட்டுன்னா உயிரு.. எல்லாம் அவன் வைஃப் செஞ்ச வேலை.. மதுவ பத்தி அவளோட ஸ்கூல் பசங்க சொல்றதை கேட்டு கேட்டு, அவளைப் பார்க்காமையே ரொம்ப பிடிச்சுப் போய், அப்படியே பாட்டு மேலயும் ரொம்ப பைத்தியம் ஆகிட்டான்.. மது பாடினா அப்படியே உருகிடுவான்.. மதுவோட பாட்டு தான் அவனோட ரிலாக்சேஷனே.. அவ பாட்டு மூலமா தான் அவளை லவ் பண்ணியே கல்யாணமும் பண்ணிக்கிட்டான்..” என்று அந்த நாள் நினைவுகளில் சிரித்த அதியமான், கார்த்திக் அவனை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே,
“அதோட இப்போ ஆடற பொண்ணு என் மச்சினியோட டீம்ல வேலை செய்யற பொண்ணு.. நான் சீஃப் கெஸ்ட்டா போறேன்னு சொன்ன உடனே அவளுக்கு சந்தோசம் தாங்கல.. நானும் இந்த பொண்ணு டான்ஸ் ஆடறதை பார்த்து இருக்கேன்.. நல்லா இருக்கும்..” அதியமான் சொல்லிக் கொண்டே, அந்த நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்குச் சென்றான்..
(இந்த காரக்டர்ஸ் எங்கயாவது பார்த்த நியாபகம் இருக்கா? இருந்தா கமண்ட்ல சொல்லுங்க..)
அதியமானுடன் கார்த்திக் அந்த அரங்கிற்குள் நுழைந்து, அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தனர். கார்த்திக் சுற்றி வந்த கூட்டத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, அதியமான் அவனைப் பார்த்தான்..
“பரவால்ல சார்.. இப்போவும்.. இந்த காலத்துலேயேயும் இதை எல்லாம் பார்க்க இவ்வளவு பேர் வந்திருக்காங்க..” ஆச்சரியமாக கேட்க,
“என்ன இப்போவும்ன்னு சொல்ற? இந்த மார்கழி மாசத்துல நமக்கு ஏதாவது ஒரு சபால பாடவோ ஆடவோ ஸ்டேஜ் கிடைச்சிடாதான்னு எத்தனை பேர் வெளி நாட்டுல இருந்து கூட வெயிட் பண்றாங்க தெரியுமா? சிலது எல்லாம் என்றும் அழியாதவை.. அதுல நம்ம நாட்டு கலைகள் எல்லாம் அடக்கம்.. எவ்வளவு பேர் ஃபாரின்ல இருந்து எல்லாம் அவகிட்ட ஆன்லைன் கிளாஸ் படிக்கிறாங்க தெரியுமா? அதுல நிறைய வெளிநாட்டு பெண்களும் இருக்காங்க.. அவ்வளவு விரும்பிக் கத்துக்கறாங்க..” அதியமான் சொல்லிக் கொண்டிருக்க, கார்த்திக் அதிசயமாகக் கேட்டுக் கொண்டிருக்க, அன்றைய நாட்டிய நாடகத்திற்கான முன்னுரை வாசிக்கப்படும் பொழுதே, மெல்ல திரைகள் விலகி, நடன நிகழ்ச்சி துவங்கியது..
திரைகள் விலகி, விளக்குகள் ஒளிர்ந்த பொழுது, கார்த்திக்கின் கண்களில் விழுந்தது ஒரு பெண் சிலை.. சில நடன மங்கையர் இரு புறமும் வந்து, அந்தச் சிலையைச் சுற்றி ஆடத் துவங்கினர்..
திரை விலகியதில் இருந்தே ஏனோ கார்த்திக்கின் பார்வை அந்த சிலையின் மீதே ஒட்டிக் கொண்டது.. ஏனோ அவனது மனதில் அந்த சிலை உயிர் பெற்று பெண்ணாக மாறினால் எப்படி இருக்கும்? அந்தச் சிலையைப் பார்க்கும்பொழுதே அவ்வளவு மென்மையாக இருக்கிறதே.. அந்தச் சிலை உயிர் பெற்றால்? என்ற எண்ணங்கள் ஏனோ ஓடத் துவங்கியது..
அந்த சிலையின் முகம் அளவெடுத்து செதுக்கியது போன்று அழகாக செதுக்கி இருந்தது.. அந்த சிலை உயிர் பெற்றால் அந்த பிரம்மன் ரசித்து ரசித்து செய்த ஓவியம் போன்று இருப்பாள் என்று அவன் நினைக்க, அந்த நேரம் அந்தச் சிலை உயிர் பெற்று அசையத் துவங்கியது.
அந்த சிலையின் மூடியிருந்த விழிகள் அழகாகத் திறக்க, அந்தக் கண்களின் ஒளியில் கார்த்திக்கின் இதயம் ஒருமுறை குலுங்கி நின்றது. அவனது கண்கள் தானாக அந்தப் பெண்ணைப் பார்த்து விரிந்தது.. அவன் நினைத்தது போல அந்தச் சிலை உயிர் பெற, அந்தக் கண்களின் காந்தம் அவனைக் கட்டி இழுத்தது.
அழகிய மான் போன்ற விழிகள்.. அந்த விழிகளுக்கு இமைகள் குடைப் போன்று காக்க, அவளது நீண்ட கண்ணிமைகள் அந்த கண்களுக்கு அழகு சேர்க்க, கார்த்திக்கின் கண்கள் அவளது தலை முதல் கால் வரை மெல்ல ரசித்து பயணித்தது.. மெல்லிய மேனியல் அவளது வாழைத் தண்டு கைகளில் அபிநயம் பிடித்த மெல்லிய விரல்களும், ஒரு கையால் அவள் தாங்கி இருந்த கொடி போன்ற இடையும், ‘பிரம்மா.. நீ ரசிகன் தான் போ.. எப்படி இப்படி ஒரு பொண்ணை செதுக்கி அனுப்பி இருக்க?’ அவனது மனது மெல்ல குரல் எழுப்ப, கண்கள் அவளிடமே ஒட்டிக் கொண்டது.
அவள் சிலை போன்று நின்றுக் கொண்டிருந்த பொழுது, அவளது மூச்சுக்கு கூட உடல் அசையாதது, அவளை உண்மையான சிலை என்றே அவன் நினைத்து இருக்க, அவள் மெல்ல அசையவும், அந்த அசைவில் கார்த்திக்கின் இதயமும் அசைந்தது..
அவனைத் திரும்பிப் பார்த்த அதியமான், ஒரு புன்னகையுடன் “கார்த்திக்.. வாயில ஈ போகுது.. சீக்கிரம் வாய மூடு.. ஒண்ணு இல்ல ரெண்டு ஈ..” என்று கேலி செய்ய, கார்த்திக் அவசரமாக வாயை மூடிக் கொள்ள, அதியமான் அவனைப் பார்த்து குறும்பாகச் சிரித்தான்.
அவனது சிரிப்பைப் பார்த்தவன், “என்ன சார் கேலி செய்யறீங்க? நான் சும்மா தான் டான்சைப் பார்த்தேன்..” கார்த்திக் சமாளிக்க,
அவனது சமாளிப்பைக் கண்டுக் கொள்ளாமல், “அவ பேர் ஆதிரை பாலகிருஷ்ணன்..” அதியமான் சொல்லிவிட்டு அந்த நாட்டிய நிகழ்ச்சியைப் பார்க்க, கார்த்திக் அதியமானை நோக்கி பார்வையைத் திருப்பாமல் போனாலும், அவனது காதின் வழியே நுழைந்த அவளது பெயரை, அவனது மனது பதிந்துக் கொண்டது..
அந்த நடன நிகழ்ச்சி முடியும் வரையும் கார்த்திக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.. சில மணி நேரங்களுக்கு முன்பு இப்படி நடன நிகழ்ச்சியை ரசித்து பார்ப்பான் என்று யாராவது சொன்னால் சிரித்து கூட இருப்பான்.. அதுவும் ஒரு நிமிடம் கூட கண்ணைத் திருப்பாமல், கவனம் சிதறாமல் பார்ப்பான் என்று சொன்னால், அவனே தன்னைப் பற்றி நம்பி இருக்க மாட்டான்..
ஆனால் இன்றோ, சிறிது கூட ஆடாமல், அசையாமல், அந்த நடனத்தைக் கண்டு களித்தான்.. அவளையே ரசித்துக் கொண்டிருந்தான்.. அவள்.. ஆதிரா.. அவளது கண்களின் அசைவும், அவளது மெல்லிய விரல்கள் பிடித்த அபிநயமும்.. தாளத்திற்கு ஏற்ற அவளது கால்களின் அசைவுகளும் அவனை அந்த நிகழ்ச்சியோடு கட்டித் தான் போட்டது..
நடன நிகழ்ச்சி முடிந்ததும், மேடையில் பேசிய அதியமான், அந்த நாட்டியத்தில் இருந்த கருத்துக்களைச் சொல்லவும், கார்த்திக் தனது மனதில் மீண்டும் ஆதிரா ஆடிய நடனத்தை ஓட்டிப் பார்க்கத் துவங்கினான்.. அந்த நாட்டியத்தில் இருந்த கருத்துக்கள் புரிய, அவனது மனது அவளுக்கு பெரிய சபாஷ்ஷைப் போட்டு கைத் தட்டியது.. மேடையில் பேசிய அதியமான், கீழே இறங்கியதும், கார்த்திக்குடன் ஆதிராவை காணச் சென்றான்..
“ஹாய் ஆதிரா.. நான் அதியமான்.. நாம ஏற்கனவே மீட் பண்ணி இருக்கோம்.. நியாபகம் இருக்கா?” அதியமான் அவளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவும்,
அவனை ஏற்கனவே தெரிந்தது போல புன்னகைத்தவள், “ஹாய் அண்ணா.. எப்படி இருக்கீங்க? நீங்க தெய்வாவோட மாமா தானே.. நீங்க வரப் போறீங்கன்னு தெய்வா சொன்னாங்க.. ரொம்ப நாள் முன்னால பார்த்து இருக்கோம் இல்ல..” எனவும்,
“ஆமா ஆதிரா.. நான் தெய்வாவோட மாமா தான்.. நல்லா இருக்கேன்மா..” என்றவன், தனது அருகில் இருந்த கார்த்திக்கை காட்டி,
“இது என்னோட ஃப்ரெண்ட்.. இவரும் லாயர் தான்.. பேரு கார்த்திக்.. எலிஜிபில் பேச்சிலர்..” என்று அவளுக்கு அறிமுகம் செய்து வைக்க,
“ஹாய்..” கார்த்திக்கின் குரல் ஏனோ குழைந்து வந்தது..
“ஹாய்..” அவள் சொல்லி முடிப்பதற்குள், அவள் ‘அண்ணா’ என்று சொல்லி விடுவாளோ என்கிற பயத்தில்,
“என்னை பேர் சொல்லியே கூப்பிடுங்க..” கார்த்திக் அவசரமாகச் சொல்லவும்,
புருவத்தை உயர்த்தி அவனைப் பார்த்தவள், “ஹாய் கார்த்திக்..” எனவும், அவளது புருவ வளைவில் பார்வையைப் பதித்தபடியே,
“ஹாய்..” கார்த்திக் மீண்டும் சொல்லவும்,
“ஹாய்.. நான் ஆதிரா.. ப்ரோக்ராமரா சாப்ட்வேர் கம்பனில வேலை..” என்றவள், அவனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு முன் யாரோ அழைக்க, அவனுக்கு கைக் கொடுத்த படியே, திரும்பி அவர்களைப் பார்த்தாள்.
“ஆதி.. போகலாமா வண்டி வந்திருச்சு.. சீக்கிரம் டிரஸ் மாத்திட்டு வா.. இல்லையே இப்படியே போய் டிரஸ் மாத்திக்க போறியா?” என்று ஒரு பெண் கேட்கவும்,
“ஹான் வரேன்..” என்றபடி அவள் ஓரடி எடுத்து வைத்தவளின் கை கார்த்திக்கிடம் சிக்கிக் கொண்டிருந்தது..
அவளைப் பார்த்துக் கொண்டே கார்த்திக் அவளது கையை இறுக பிடித்திருக்க, ஆதிராவின் பார்வை தனது கையைப் பிடித்திருக்கும் அவனது கையின் மீது பதிந்தது.. அந்த கரத்தின் அழுத்தம் ஆதிராவை யோசிக்க வைக்க, புருவங்களை சுருக்கி அவனைப் பார்த்தாள்.
கேலியாக புருவங்களை ஏற்றியபடி அதியமான் கார்த்திக்கைப் பார்க்க, ஆதிரா அவனைக் கண்களால் கேள்வி கேட்டு தனது கையைப் பார்க்க, அப்பொழுது தான் தான் அவளது கையை இறுக பிடித்திருப்பது தெரிய, “சாரி.. சாரி.. தெரியாம…” என்றபடி கார்த்திக் அவசரமாக அவளது கையை விடுவித்தான்.
அவன் அவசரமாக விடுவிக்கவும், அவளது இதழ்கள் அழகாக விரிய, கார்த்திக்கின் பார்வை அவளது இதழ்களுக்குத் தாவியது.. அந்த ஆரஞ்சு சுளை போன்ற அதரங்களில் பூசி இருந்த மெல்லிய ரோஸ் நிற லிப்ஸ்டிக் அதனை மேலும் அழகாக்க, கார்த்திக்கின் இதயம் தாறுமாறாக துடித்தது..
அவனைப் பார்த்து ஒரு சிறு தலையசைப்புடன், “சரி அண்ணா.. நான் வரேன்.. தெய்வா கிட்ட என்னைப் பார்த்துட்டேன்னு சொல்லிடுங்க.. நான் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்.. லேட் ஆச்சு.. இப்போ போனா அவங்க என்னை டிராப் பண்ணிடுவாங்க.. இல்ல கேப் புக் பண்ற தொல்லை வேற இருக்கு..” எனவும், கார்த்திக் ஆவலாக அதியமானைப் பார்த்தான்..
அவனது இதயம் ஏனோ அதியமான் அவளைத் தன்னுடன் வருமாறு அழைக்க எதிர்ப்பார்க்க, அதியமானோ, “சரிம்மா சொல்லிடறேன்.. பார்த்து ஜாக்கிரதையா போ.. போயிட்டு தெய்வாவுக்கு வேணா மெசேஜ் பன்னிரு.. நான் அவகிட்ட கேட்டுக்கறேன்..” பொறுப்பாக அதியமான் சொல்லவும், மெல்லிய தலையசைப்புடன் அவள் நகர்ந்து செல்ல, கார்த்திக் ஏமாற்றத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான்..
“என்ன கார்த்திக் இப்படி அமைதியா பார்த்துக்கிட்டே இருக்க? அவ உனக்கு பேச வராதுன்னு நினைச்சிருக்கப் போறா.. நீ ஒரு வக்கீல்ன்னு வேற சொல்லி இருக்கேன்.. அந்தப் பேரையாவது நீ காப்பாத்தி இருக்கலாம்..” அவனை மெல்ல இவ்வுலகிற்கு அதியமான் தரையிறக்க, கார்த்திக் அதியமானை குழப்பத்துடன் பார்த்தான்.
“என்ன?” அதியமானின் இதழ்கள் கேலியில் விரிய,
தன்னை சமாளித்துக் கொண்டவன், “ஒண்ணும் இல்ல சார்.. ரொம்ப நல்லா டான்ஸ் ஆடறாங்க.. நான் இது வரை இப்படி ஒரு டான்ஸ் நிகழ்ச்சியைப் பார்த்தது இல்ல. அது தான்.. அதுவும் நீங்க சொன்ன விளக்கத்துக்கு அப்பறம் அவங்களோட அந்த அபிநயம் எல்லாம் எவ்வளவு தத்ரூபமா இருந்ததுன்னு யோசிச்சேன்.. ரொம்ப மெய் சிலிர்த்து போயிட்டேன்..” கார்த்திக் அவளைப் பாராட்டிக் கொண்டே போக, அதியமான் ஒப்புதலாக தலையசைத்தான்.
அதற்கு மேல் அவளைப் பற்றிப் பேசாமல், “சரி.. நேரமாச்சு வா.. நீயும் வீட்டுக்கு போய் மாட்ச் பார்க்கணும்ன்னு சொன்னயே.. இப்போ கிளம்பினா நீ செகண்ட் இன்னிங்க்ஸ் பார்க்கலாம்.. மாட்ச் வேற நல்லா போகுது.. இந்தியா செம ரன் ரேட்ல இருக்காங்க..” என்றபடி அதியமான் முன்னே நடக்க,
“இது எப்போ நடந்தது?” என்று அதிசயித்தபடி கார்த்திக் அவனைப் பின்தொடர்ந்துச் சென்றான்.
“அதெல்லாம் நீ மெய் மறந்து அவ ஆடறதைப் பார்த்துட்டு இருந்த பொழுது நான் மேட்ச்சையும் பார்த்தேன்..” அதியமானின் கேலியில், கார்த்திக் தனக்குள்ளேயே ரசித்து சிரித்துக் கொண்டான்.. மீண்டும் அவளைப் பற்றி தெரிந்துக் கொள்ள,
“உங்களுக்கு ஆதிரா ரொம்ப பழக்கமா சார்..” கார்த்திக் கேட்க,
“நான் ரொம்ப எல்லாம் பேசினது இல்ல. இன்னிக்குத் தான் பேசறேன்.. ஆனா.. எங்க வீட்ல தெய்வா.. அது தான் என் மச்சினிச்சி இவளைப் பத்தி அடிக்கடி பேசுவா.. ரொம்ப ரொம்ப சாஃப்ட்.. ரொம்ப எமோஷனல்ன்னு எல்லாம் சொல்லுவா.. இவளைப் பத்தின பேச்சு எங்க வீட்டு டைனிங் டேபிள்ல அடிக்கடி நடக்கும்.. இவளையும் என் தம்பி வைஃப்பையும் வச்சு தெய்வா கேலி செய்வா..
ஏன்னா மதியோட வைஃப் அப்படித் தான் இருந்தா.. தெய்வா அடிக்கடி, ‘இவளைப் பார்க்கறது உன்னைப் பார்க்கற மாதிரியே இருக்கும் மது.. வீட்ல நீ.. ஆபீஸ்ல அவ’ன்னு சொல்லி கிண்டல் பண்ணுவா.. அப்படித் தெரியும்.. ரெண்டு மூணு தடவ டான்ஸ் பார்த்து இருக்கேன்..” என்ற அதியமான்,
“ரொம்ப தங்கமான பொண்ணுன்னு தெய்வா சொல்லுவா.. ரொம்ப எமோஷனல்.. டெடிகேட்டட்.. அவங்க அப்பா அம்மான்னா ரொம்ப உயிராம்.. ரொம்ப ஹெல்ப் பண்ணுவாளாம்.. அன்னிக்கு ஒரு நாய்க்கு ரோடுல அடிப்பட்டதுன்னு அழுதிருக்கான்னா பாரேன்..” புன்னகையுடன் அதியமான் சொல்லிக் கொண்டே தனது காரின் அருகே செல்ல, அதைக் கேட்டுக் கொண்டே கார்த்திக் அவனைப் பின்தொடர்ந்தான்..
வீட்டிற்குச் சென்றவனுக்கு, அன்றைய விறுவிறுப்பான மாட்சில் கூட மனம் ஒட்டாமல், ஆதிராவின் நினைவுகளிலேயே அவனது மனது சுழன்றுக் கொண்டிருந்தது..
அதற்கு மேல் மாட்சை வெறிக்க முடியாமல், அதை அமர்த்திவிட்டு, படுக்கையின் விழுந்தவனின் மனம் முழுவதையும் ஆதிரா ஆக்கிரமித்து இருந்தாள்.
அந்த நேரம் உள்ளே வந்த அவனது தாய், விளக்கை அணைக்காமல் அவன் கண்களை மூடிக் கிடக்கவும், “என்ன கார்த்திக்.. கொஞ்சமாவது உனக்கு பொறுப்பு இருக்கா? எதுக்கு லைட்டைப் போட்டுக்கிட்டே தூங்கற? உனக்கு எல்லாம் காசு ஈசியா கிடைக்கிற திமிரு.. வேற என்ன? உங்க அப்பாவைப் போல ராவா பகலா.. நாயா பேயா உழைச்சு இருந்தாத் தெரியும்.. குருவி சேர்க்கறது போல, கட்டு சிட்டா சிக்கனமா இருந்து சேர்த்து வச்சு உங்களை சொகுசா வாழ வச்சா அப்படித் தான் இருக்கும்.. பொறுப்பு இருக்கா உனக்கு?” என்று சத்தமிட, அந்த சத்தத்தில் கண் திறந்துப் பார்த்தவன், அவரை வெறித்துக் கொண்டிருந்தான்..
“என்ன பார்க்கற? சாப்பிட வரியா?” அவனது தாய் வரமஹாலக்ஷ்மி கேட்க,
“ஹ்ம்ம்.. நைட்க்கு என்ன இருக்கு?” சோம்பலாக கார்த்திக் கேட்கவும்,
“நீ எங்கயோ உன் சீனியர் கூட பங்க்ஷன்க்கு போறேன்னு போன் செஞ்ச? அங்க சாப்பாடு போடலையா?” ஏளனமாக அவர் கேட்கவும், கார்த்திக் உதட்டைப் பிதுக்கினான்.
“நான் போனது ஒரு டான்ஸ் ஷோக்கு.. அங்க சாப்பாட்டு போட்டாங்களான்னு எல்லாம் தெரியாது.. நான் என் சீனியர் கூட கிளம்பி வந்துட்டேன்..” என்றவன்,
“பசிக்குது.. கொஞ்சம் சாப்பாடு இருக்கா?” என்று கேட்க,
“இல்ல.. அம்மாவுக்கு ரொம்ப கால் வலியா இருந்ததுன்னு நாங்களே ஹோட்டல்ல தான் ஆர்டர் செஞ்சு சாப்பிட்டோம்.. நீயும் ஹோடல்ல ஆர்டர் செஞ்சு நல்ல சாப்பாடா சாப்பிடு..” என்றபடி அவனது தம்பி சரவணன் வந்து அமர்ந்தான்..
“இன்னைக்கும் கால் வலியா? ஏதாவது டாக்டர பார்க்கலாமா?” தனது மொபைலில் தனக்கான உணவை ஆர்டர் செய்துக் கொண்டே கார்த்திக் கேட்க,
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..” என்றவர், மீண்டும் டிவியில் மூழ்க, அவரை ஒரு பார்வைப் பார்த்தவன்,
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. சும்மா எப்பவும் போல சீரியல் பார்க்க சொல்ற சாக்கு தான்.. நீ ஆர்டர் செய்யும் போது எனக்கும் சேர்த்து செய். ஒரு பிரியாணியப் போடு.. கூடவே ரெண்டு கூல் ட்ரின்க்ஸ்.. எனக்கு இவங்க ஒரே ஒரு தோசை தான் மிச்சம் வச்சாங்க..” அவன் குற்றப்பத்திரிக்கை வாசிக்க, கார்த்திக் ஒரு பெருமூச்சுடன் அவனுக்கும் சேர்த்து ஆர்டர் செய்தான்..
“என்ன அண்ணா டான்ஸ் ஷோக்கு எல்லாம் போயிருக்க? எந்த டிவிது?” சரவணன் கேட்கவும்,
“அது டிவியோட டான்ஸ் ஷோ இல்லடா.. ஒரு சபால நடந்த ஒரு நாட்டிய நாடகம்.. என் சீனியர் அதியமான் இருக்கார் இல்ல.. அவர் கூட போனேன்..” அவன் சொல்லி முடிப்பதற்குள்,
“ஆதிராவோட டான்ஸ் பார்க்க போனியா கார்த்திக்?” சரவணன் பரபரப்பாக கேட்க, கார்த்திக் அவனைப் பார்த்து விழித்தான்.
“உனக்கு.. உனக்கு எப்படி அவளைத் தெரியும்?” அவசரமாக படுக்கையில் இருந்து எழுந்த கார்த்திக், ஆச்சரியமாகக் கேட்க,
“அடேய் அண்ணா.. அவ என் ஃப்ரெண்ட்.. நானும் அவளும் ஒரே டீம் தானே.. ரொம்ப அழகா இருப்பா.. ஆனா.. அது பத்தி அவ கண்டுக்க கூட மாட்டா.. அவ டான்ஸ் மட்டும் இல்ல.. அவ நல்லா பாட்டும் பாடுவா.. அவர் குரல் அப்படியே தேன் மாதிரி குழையும்..” என்ற சரவணன்,
“என்கிட்டே சொல்லி இருக்கலாம் இல்ல.. நானும் வந்திருப்பேன்..” என்று குறைப்பட, கார்த்திக் திரு திருவென விழித்தான்..
“என்ன முழிக்கிற?” சரவணன் கேட்க,
“எனக்கே நான் போறது தெரியாது.. திடீர்ன்னு தான் போனேன்..” என்ற கார்த்திக், தலையணையில் படுத்து விட்டத்தை வெறிக்கத் துவங்கினான்..