எந்நாளும் தீரா காதலாக – 25

337ae47d21df999d4c4d05447fafb59c-593123bb

💝 💝25       

சிவாத்மிகா–அர்ஜுனின் நாட்கள் மிகவும் அழகாக கழிந்துக் கொண்டிருந்தது. இருவரும் காதலில் முக்குளித்து நாட்களை இனிமையாகக் கழித்தனர். இருவரின் அன்பும் நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டிருக்க, சிவாத்மிகா அவனது அன்பை ஆழ்ந்து அனுபவித்தாள்.  

அதே போலவே வினய், ராதாவின் மீது காட்டும் அன்பில், தனது பழைய வாழ்வை மறந்து மெல்ல வினயை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளத் துவங்கினாள். வினய், தனது அன்பை அவளுக்கு மொத்தமாய் காட்ட, ராதா அந்த அன்பில் கரைந்து போனாள். வினயின் மீது அவள் காட்டும் அக்கறையும், பாசத்தையும் கண்டவர், அவனது வாழ்வும் நல்லபடியா அமையும் என்பதில் திருப்தி கொண்டார்.

இரு ஜோடிகளின் புரிதலைக் கண்ட நிர்மலாவிற்கும் மனம் நிறைந்து போனது. சிவாவும், ராதாவும், தனது மகன்களை நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பிக்கையுடன் இருவரின் திருமண வேலைகளை வினயின் உதவியுடன் கவனிக்கத் துவங்கினார். அவர்கள் இருந்த ஏரியாவில் இருந்த பெரிய மண்டபத்தை அவர்களது திருமணத்திற்காக முன்பதிவு செய்து, ஒரு நல்ல ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பனியிடம் அவர்களது திருமண வேலைகளையும் ஒப்படைத்தனர்..

அர்ஜுன் வெளியூர் ஷூட்டிங் சென்று வந்த பின்பு, இவர்களது ஃபேஷன் ஷோவும் முடிந்த பிறகு, மற்ற திருமண உடைகளை எடுக்கச் செல்லலாம் என்று முடிவெடுத்து, முக்கியமானவர்களுக்கும், அவர்களது சொந்தங்களுக்கும் பத்திரிக்கை வைக்கலாம் என்று முடிவெடுத்து, பட்டியலிட்டு வைத்திருந்தனர்.

அதே போலவே சிவரஞ்சனியின் மகள் திருமணத்திற்கு உடைகள் தயாராகவும், அவளுக்கு அதை போட்டோ எடுத்து சிவாத்மிகா அனுப்பி இருக்க, அதைப் பார்த்தவள், மகிழ்ந்து போனாள். உடைகளை வாங்கிக் கொள்ள வந்தவள்,

“நான் உங்களை அக்கான்னு கூப்பிடவா? தப்பா எடுத்துக்க மாட்டீங்களே.. எனக்கு என்னவோ கூப்பிடனும் போல இருக்கு..” என்றவளை வெறித்துப் பார்த்தவளின் தலை தானாக அசைந்தது.

ப்ரியா அவர்களுக்கான உடையை எடுத்துக் கொடுக்க, அதைப் பார்த்த அந்த இரு மகள்களும், சந்தோஷத்துடன் சிவாத்மிகாவின் கையைப் பிடித்துக் கொண்டனர்.

“அக்கா.. ரொம்ப நல்லா இருக்கு.. செமையா இருக்கு அக்கா..” சின்னவள் குதூகலிக்க, பெரிய மகளோ, உடையை அணிந்து பார்த்து சிவாத்மிகாவிடம் காட்ட வந்தவளின் முகம் மகிழ்ச்சியிலும், நிறைவிலும் தத்தளித்துக் கொண்டிருந்தது. 

“அக்கா.. நான் எப்படி இருக்கேன்? எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா..” அவள் கேட்க,

“ரொம்ப அழகா இருக்கும்மா.. யு லுக் லைக் எ பிரின்சஸ்.. ரொம்ப க்யூட்டா இருக்கு..” சிவாத்மிகா புன்னகையுடன் சொல்லவும், தன்னையே சுற்றிப் பார்த்துக் கொண்டவள்,  

“செம பெர்ஃபக்ட்டா இருக்குக்கா.. சூப்பர்..” என்றவள்,

“அம்மா.. எப்படி இருக்கு?” அதுவரை அமைதியாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருத்த சிவரஞ்சனியிடம் கேட்க,

“ரொம்ப நல்லா இருக்கு..” என்றவரின் பார்வை சிவாத்மிகாவைத் தழுவ, அவளோ அங்கு ஒருவர் இருப்பதையே மறந்தவள் போல, அந்த இரு மகள்களின் மீது மட்டுமே பார்வையை செலுத்திக் கொண்டிருந்தாள்.

“ரொம்ப நல்லா இருக்கு சிவா..” சிவரஞ்சனி அவளிடம் சொல்ல, அதை கவனிக்காதவள் போல,

“உங்களுக்கு பிடிச்சிருக்கு இல்ல.. சோ நானும் ஹாப்பி.. கஸ்டமர் சாடிஸ்பேக்ஷன் எனக்கு ரொம்ப முக்கியம்..” என்று அந்தப் பெண்களிடம் சொன்னவள், சிவரஞ்சனியை ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“ப்ரியா பில் தருவாங்க.. பே பண்ணிடுங்க.. அப்பறம்.. விஷ் யூ எ வெரி ஹாப்பி மேரீட் லைஃப்..” என்று வாழ்த்த,

“தேங்க் யூ.. சோ மச் அக்கா.. நான் இன்விடேஷன் தருவேன்.. நீங்க கண்டிப்பா வரணும் என்ன? நான் உங்களை ரொம்ப எதிர்ப்பார்ப்பேன்..” கண்களைச் சுருக்கி அழகாகக் கேட்க,

“பார்க்கறேன்மா. எனக்கு அடுத்து ஒரு பேஷன் ஷோ.. அதுக்கு அப்பறம் எங்க மேரேஜ் வேலைகள் எல்லாம் இருக்கு.. அர்ஜுன் ஷூட்டிங் முடிச்சு வந்ததும் தான் ஸ்டார்ட் பண்ணனும்.. அதுல நான் கொஞ்சம் பிசி ஆகிடுவேன். எங்க அண்ணாவை மட்டும் எல்லாமே செய்ங்கன்னு நான் விட முடியாது இல்லையா? ஏன்னா அண்ணாக்கும்.. என்னைத் தாய்க்குத் தாயா பார்த்துக்கற எங்க அக்காவுக்கும் அதே முஹுர்த்ததுல கல்யாணம்.. சோ அவங்க மேரேஜ்க்கு நான் தானே ரெடி செய்யணும்?” என்று கேட்டவள்,

“நான் ஒரு சின்ன அட்வைஸ் சொல்றேன்.. தப்பா எடுத்துக்காதீங்க.. நீங்க அக்கான்னு சொல்றதுனால எனக்கு சொல்லணும்னு தோணுது..” அவள் இழுக்க,

“என்னக்கா இப்படி சொல்றீங்க? சொல்லுங்க.. நான் தப்பா எல்லாம் எடுத்துக்க மாட்டேன்..” ஆவலாக பெரியவள் கேட்கவும்,

“மேரேஜ் ஒரு நார்மல் கமிட்மன்ட் கிடையாது.. அது ரெண்டு மனசுக்குமான கமிட்மன்ட்.. அதுல அன்பும் புரிதலும் நிறைஞ்சு இருந்ததுன்னா வாழ்க்கை ரொம்ப அழகா இருக்கும்.. லைஃப் லாங்.. அது தான் நமக்கு சந்தோஷமும் கூட.. உங்க லைஃப் பார்ட்னரை நல்லா புரிஞ்சிக்கோங்க.. அதே போல.. அவரையும் உங்களை புரிஞ்சிக்க வைங்க.. அவருக்கான அன்பை நீங்க கொடுங்க.. அவரும் கண்டிப்பா அது படியே அன்பை கொடுப்பார்.. சின்ன சின்ன அட்ஜஸ்ட்மெண்ட்ஸ்ல தான் லைஃப்போட சந்தோஷமே இருக்கு.. அது தான் மேரேஜ்ஜோட சக்ஸஸ் கூட.. இது எனக்கு எங்க அத்தை, அர்ஜுனோட அம்மா சொன்னது.. ரெண்டு பேரும் சண்டை போட்டா கூட அது மூணாவது மனுஷங்களுக்கு தெரியக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. அதுல யாரும் பாதிக்கவும் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க.. ஹஸ்பெண்ட் அன்ட் வைஃப்குள்ள இருக்கற புரிதலும் காதலும் தான் ரொம்ப அழகானது..” என்று ரசித்துச் சொன்னவள்,            

“எங்க ரெண்டு பேருல.. அர்ஜுன் என் மேல காட்டற அன்புல அவருக்கு பாதி கூட முன்னால எல்லாம் நான் காட்டலைன்னு தான் சொல்வேன்.. அவர் என்னை ரொம்ப பேம்பர் பண்ணுவார்.. என்னோட குரல் வச்சே நான் ஓகேவா.. உடம்பு முடியலையா.. டயர்ட்டா இருக்கேனா.. இல்ல மூட் அவுட்டா இருக்கேனான்னு எல்லாமே சொல்லுவார். அந்த அளவு அன்பை.. அந்த அளவுக்கு புரிதலை நான் இப்போ அர்ஜுனுக்கு திரும்ப கொடுக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.. அது ரொம்ப சுகமா இருக்கு.. ரொம்ப ஹாப்பியா இருக்கு.. அவருக்காக நான் செய்யற சின்னச் சின்ன விஷயம் கூட எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்..  

அதே போல நீங்களும் உங்க ஹஸ்பெண்ட் கிட்ட இருங்க.. சின்னச் சின்ன சண்டை வரும் தான்.. ஆனா.. எதுவா இருந்தாலும் பேசினா தீரும்.. தீர்க்க முடியாததுன்னு எதுவுமே இல்ல.. எமோஷனலா இருக்கும்போது எந்த ஒரு வார்த்தையையும் விட்டுடாதீங்க.. அதுவே ரிலேஷன்ஷிப்பை நல்ல ஹெல்த்தியா வச்சிக்கும்..” சிவரஞ்சனியைப் பார்த்து குத்திக் கொண்டே, அந்த அறிவுரையை அவள் சொல்ல, அர்ஜுனைப் பற்றி அவள் சொல்லவும், அந்தப் பெண் மகிழ்ந்துப் போனாள்.

“ஸ்யூர் அக்கா.. நான் அவரை ரொம்ப பிடிச்சுத் தான் மேரேஜ் பண்ணிக்கறேன்.. ஐ லவ் ஹிம் எ லாட்.. நீங்க சொன்னதும் கரக்ட் தான்.. உங்க அர்ஜுனை நீங்க ரொம்ப லவ் பண்றீங்களா?” அந்தப் பெண் குதூகலமாகச் சொல்லவும்,

சிறிய புன்னகையுடன் ஆம் என்பது போல தலையசைத்தவள், “அதை விட அர்ஜுன் என்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றார்..” என்றவளின் விரல்கள் அவன் அணிவித்த மோதிரத்தை வருடிக் கொடுக்க, அதைப் பார்த்த அந்தப் பெண்,

“சூப்பர் அக்கா. நானும் நீங்க சொன்னது போலவே அவரோட லவ்வை அனுபவிக்கறேன்..” என்று கண் சிமிட்ட, அவளைப் பார்த்து புன்னகைத்தவள்,

“செம.. அதே லவ்வோட உங்க பேரன் பேத்தி எல்லாம் கல்யாணம் செஞ்சுத் தரது வரை நீங்க ஒத்துமையா சந்தோஷமா இருக்கணும்.. காட் ப்ளஸ் யூ.. லவ் தி லைஃப் யு லிவ்.. அது தான் ஒரு அக்காவா எனக்கும் வேணும்..” என்று வாழ்த்தவும்,

“தேங்க்ஸ் அக்கா. நீங்களும் அர்ஜுன் மாம்ஸ் ஓட ஹாப்பியா இருக்கணும்.. அப்படியே அவர் கூட டெய்லி ரெண்டு போட்டோ போடுங்க..” என்று வாழ்த்த, சிவாத்மிகா, அவளுக்கு பத்திரம் காட்டி, புன்னகையுடன் அவளைப் பார்த்தாள்.

பதிலுக்கு புன்னகைத்தவள், “ஓகே அக்கா.. நான் இன்விடேஷன் அனுப்பறேன்.. கண்டிப்பா நீங்க வரணும்..” மீண்டும் மீண்டும் சொன்னவள், அவளிடம் இருந்து விடைப்பெற, சிவாத்மிகா அவளைப் புன்னகையுடன் வழியனுப்பினாள்.

சிவரஞ்சனி சிவாத்மிகாவைப் பார்க்க, அவளோ அவரைக் கண்டுக்கொள்ளாமல், தனது அருகில் கணினியின் பக்கம் பார்வையைத் திருப்பிக் கொள்ள, வேறு வழியின்றி அவர் தனது மகள்களுடன் கிளம்பிச் சென்றார்.. அவரது பார்வையைப் பார்த்த சிவாத்மிகாவின் இதழ்கள் இகழ்ச்சியில் விரிந்தது..                                     

நாட்கள் தன் போக்கில் உருண்டோட, பேஷன் ஷோவிற்கான நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது.. வினயும், சிவாத்மிகாவும் அந்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். வினய் சொன்னது போல அந்த உடையை சிவாத்மிகா அணியவும், அர்ஜுன் கண்களை விரித்து, அவளை மேலிருந்து கீழாக வருடியபடி,

“யு லுக் கார்ஜியஸ் மை டார்லிங்.. இன்னும் அதுக்கான ஹேர் ஸ்டைல், ஆக்சசரிஸ் எல்லாம் போட்டா.. வாவ்.. மை லேடி வில் பி சோ சோ கார்ஜியஸ்..” என்றவன், அவளது கன்னத்தை மெல்ல வருடிக் கொண்டே கன்னம் நோக்கிக் குனிய, ‘ஹுக்கும்.. ஹுக்கும்..’ வினய், தொண்டையை கனைத்து தனது இருப்பை உணர்த்தினான்.

“சரிடா.. சரிடா.. நந்தி..” என்ற அர்ஜுன், அவளை பார்வையால் விழுங்கிக் கொண்டே நகர்ந்து நிற்க, முகம் சிவக்க, தனது அறைக்குச் சென்றவள், அவனது பார்வை தந்த குறுகுறுப்பில் அப்படியே அமர்ந்தாள்.

“என்ன பார்வை அஜ்ஜு.. அப்படியே என்னை முழுங்கறீங்க..” என்றவளுக்கு, அர்ஜுனுடனான திருமணக் கனவுகளும், அவனுடனான தனது வாழ்வும் கண் முன் விரிய, அந்த மகிழ்ச்சியில் தனது வேலைகளை உற்சாகத்துடன் கவனித்தாள்.                

அர்ஜுனின் படப்பிடிப்பு முழுமூச்சாக நடந்துக் கொண்டிருந்தது.. வாரத்தில் கிடைக்கும் இரண்டு நாட்கள் ஓய்வில் அவர்களது பேஷன் ஷோவிற்கு, அவர்கள் தயார் செய்யும் உடைகளை அவனது ரசனைக்கேற்பவும் சில மாறுதல்களைச் சொல்ல, அதில் செய்ய முடியும் பட்சத்தில் அவர்களும் அதை அதில் உபயோகப்படுத்தினர்.

அனைத்தும் தயாரான நிலையில், ஃபேஷன் ஷோவிற்கான நாளும் நெருங்கியது. அடுத்த நாள் காலை வினயும், சிவாத்மிகா, ராதா மூவரும் பெங்களூர் செல்ல கிளம்பிக் கொண்டு இருந்தனர்.

தனக்குத் தேவையான பொருட்களை அவள் எடுத்து வைத்துக் கொண்டிருக்க, அவள் எடுத்து வைக்கும் பொருட்களை அர்ஜுன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்தவள்,

“என்ன அப்படி வேடிக்கைப் பார்க்கறீங்க?” அவள் எடுத்து வைத்திருந்த துணிகளைப் பார்த்தபடி அவள் சிணுங்க,

“சும்மா தானடி உன்னை வேடிக்கைப் பார்க்கறேன். உன்னை நான் பார்க்காம.. ரசிக்காம.. எனக்கு வேற என்ன வேலை இருக்குச் சொல்லு.. நீங்க அங்க போயிட்டு வந்த உடனே நான் ஒரு மாசம் ஹைதராபாத்துக்கு ஷூட்டிங்க்கு கிளம்பிடுவேன்.. அங்க இருந்து ஒரு சாங்குக்கு குலு மணாலி போகணும்.. அப்படி இப்படின்னு நான் உன்னை திரும்ப பார்க்கறதுக்கே ஒரு மாசத்துக்கு மேல ஆகிடும்..” என்று பெருமூச்சு விட,

அவனைப் பார்த்து சிரித்தவள், “நான் வேணா உங்க கூடவே வந்துடவா?” விளையாட்டாகக் கேட்க,  

“அது தான் நானும் சொல்ல வரேன்.. உனக்கு கொஞ்சம் ஃப்ரீ ஆச்சுன்னா.. நீயும் வரியா? சும்மா அங்க சுத்திப் பார்த்துட்டு வரலாம்.. அப்படியே.. நம்ம ஹனிமூனை என்ஜாய் பண்ணலாம்.. மேரேஜ் முன்னாலயே ஹனிமூன் போய் நாம ஹிஸ்டரி படைப்போம்..” என்றவன் கண்ணடிக்க, அவனைப் பார்த்து முறைத்தவள்,

“என்ன? என்ன விளையாடறீங்களா? அது எல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம் போகலாம்.. ரொம்ப ஹிஸ்டரி எல்லாம் படைக்க வேண்டாம்.. ஆளைப் பாரு..” என்று அவனது கன்னத்தில் குத்தியவளைத் தனதருகே இழுத்துக் கொண்டவன்,

“இல்ல.. முன்னாலேயே போகலாமே.. நான் பாவம் இல்ல.. உன்னையும் பக்கத்துல வச்சிக்கிட்டு எவ்வளவு கஷ்டமா இருக்குத் தெரியுமா?” அவளைத் தனது மடியில் அமர்த்திக் கொண்டு, அவளது கழுத்து வளைவில் இதழ்களைப் பதித்துக் கொண்டே கேட்கவும், அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டவள், கண்களை மூடி அவனது இதழ்களின் தீண்டல்களை ரசித்தபடி,

“என் செல்ல அஜ்ஜு இல்ல.. என் செல்லக் கண்ணா இல்ல.. அது எல்லாம் தப்பு இல்ல.. கல்யாணத்துக்கு அப்பறம் நாம போகலாம் ஓகே வா.. ஐம் ஆல் யுவர்ஸ்.. ஆனா.. இப்போவே போனா ஊரு நம்ம ஹிஸ்டரியைத் தப்பா பேசும்ல.. அதோட நம்மள அம்மா நம்பித் தானே இங்க விட்டு இருக்காங்க.. நாம அப்படி செஞ்சா தப்பு தானே.. அவங்க நம்பிக்கையை வீண் செய்யறது தானே.. பாவம் இல்ல நம்ம அம்மா..” என்று கொஞ்சிக் கொண்டே கேட்க,

அவளது முகத்தைப் பார்த்தவன், அவளது கண்கள் மூடி இருக்கவும், அவளது இமைகளின் மேல் இதழ் பதித்தபடி, “போடி.. ரொம்ப தான் பிகு பண்ற? நீயும் என் கூட வாயேன்.. கொஞ்சம் நாம ஜாலியா சுத்திட்டு வரலாம்.. உன்னை விட்டுட்டு நான் அவ்வளவு நாள் எப்படி இருக்கறது? இ வில் மிஸ் யூ பேட்லி..” என்று கேட்கவும், அவனைப் பார்த்துச் சிரித்தவள், அவனது கன்னத்தில் தட்டிவிட்டு,       

“பார்க்கறேன் அஜ்ஜு.. நீங்க அங்க இருக்கும்போது ஏதாவது கேப் கிடைச்சா வந்துடறேன்.. ஓகே வா.. பட் ஹனிமூன் எல்லாம் இல்ல..” அவள் சமாதானம் செய்து கொண்டிருக்கும் போது அங்கே வந்த நிர்மலா, அவர்களைப் பார்த்து திகைத்து,

“சிவா.. அஜ்ஜு..” என்று கூவ, சிவாத்மிகா அவசரமாக அர்ஜுனிடம் இருந்து விலக, அர்ஜுன் திருதிருவென முழித்துக் கொண்டே எழுந்து நின்றான்.  

“என்னடா பண்ணிட்டு இருக்கீங்க?” இருவரையும் முறைத்துக் கொண்டே அவர் கேட்க,

“அம்மா.. அது.. வந்து..” அவன் தொடங்குவதற்குள்,

“என்னடா நடக்குது இங்கன்னு கேட்டேன்?” இருவரையும் பார்த்து நிர்மலா கேட்க, சிவா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தலைகுனிந்து நிற்க,

சிவாத்மிகாவின் முகத்தைப் பார்த்த அர்ஜுன், அந்த சூழ்நிலையை இலகுவாக்கும் பொருட்டு.. “நடக்கலம்மா.. உட்கார்ந்து தானே இருந்தேன்..” அப்பாவியாகக் கேட்க, அவனது தலையில் தட்டியவர்,

“இப்போ ரெண்டு பேரும் என்ன பண்ணிட்டு இருந்தீங்கன்னு கேட்டேன்.. ரெண்டு பேரையும் நம்பி பக்கத்துல விடக் கூடாது போல.. விட்டா கல்யாணத்துக்குள்ள பிள்ளையோட வருவான் போல இருக்கே..” அவர் அங்கலாய்க்க,

அர்ஜுனோ, “நீங்க தானேம்மா ‘சீக்கிரம் பேரனையோ பேத்தியையோ கொஞ்சணும்’ன்னு சொன்னீங்க? அது தான் ட்ரை பண்றேன்.. நீங்களே சொல்லிட்டு.. இப்போ நீங்களே குறுக்கால வந்து பேச்சை மாத்தறது நியாயமா நிம்மி? சின்னப் பையன் என்ன செய்வேன் நான்? அய்யகோ? இதுக்கு நியாயத்தைக் கேட்க ஆள் இல்லையா? எங்கே என் மச்சான்? எங்கே என் அக்கா?” நாடக வசனம் பேச, அவனது தோளில் அடித்தவர்,

“அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம் சொன்னேன்.. இப்போவே இல்ல.. அவளை விட்டு நகர்ந்து நில்லுடா..” அவனை அதட்டியவர்,

“நீ என்ன அவனுக்கு கன்னத்தை காட்டிக்கிட்டு உட்கார்ந்து இருக்க? போடான்னு அவன் கன்னத்துல ரெண்டு வைக்க வேண்டாமா?” என்று அவளையும் மிரட்ட, முகம் சிவக்க அவள் நிற்க,

அவளது காதின் அருகே குனிந்தவன், “நல்லவேளை.. நான் அடுத்து உன்னோட லிப்ஸ்ல குடி இருக்கலாம்ன்னு இருந்தேன்.. அம்மா அப்போ வராம அதுக்கு முன்னாலேயே வந்துட்டாங்க.. அப்போ பார்த்து  இருந்தா என்ன சொல்லி இருப்பாங்க?” என்ற  அர்ஜுனைப் பார்த்தவள், அவனை முறைக்க முடியாமல் நாணத்துடன் தலைகுனியவும்,

“அங்க என்ன குசுகுசுன்னு பேசிட்டு இருக்கீங்க? நீ இந்தப் பக்கம் வா.. அவன் பக்கத்துல இருந்து நகரு நீ.. இதெல்லாம் ஒண்ணும் சரியே இல்ல..” என்றபடி சிவாவின் கையைப் பிடித்து தனது அருகே இழுத்துக் கொண்டவர்,   

“என்ன எல்லாம் எடுத்து வச்சிட்டியா? எதையும் மறக்கலையே..” என்று ஒரு தாயாய் அவர் அவளது பையைப் பார்த்துக் கொண்டிருக்க, சிவாத்மிகாவை பின்னாலிருந்து தனதருகே சட்டென்று இழுக்க, அவள் பயத்தில் ‘ஹையோ..’ என்று அலற, நிர்மலா திரும்புவதற்குள் சட்டென்று அவளது கன்னத்தில் முத்தமிட்டவன், அவர் திரும்பவும், அவளது கையைப் பிடித்துக் கொண்டு அப்பாவியாக நின்றான்.

“ஹும்.. ஹும்.. இதெல்லாம் சரிப்படாது.. நீ வாடா..” என்றபடி அவனது கையை பிடித்து இழுத்துக் கொண்டு அவர் நடக்க,

“அப்படியே குலுமனாலில நம்ம ஹனிமூனுக்கும் டிரஸ் பேக் பண்ணிடு..” என்றபடி நிர்மலாவை வம்பு செய்துக் கொண்டே, அவனது மற்றொரு கையால் அவளை இழுத்துக் கொண்டு நடக்கவும், சிவாத்மிகா அவனுடன் சிரித்துக் கொண்டே நடக்க, அவன் சொன்னதைக் கேட்டு, அவனைப் பார்த்து முறைத்த நிர்மலா, இடுப்பில் கையை வைத்துக் கொண்டு நின்றார்.

“என்னடா அட்டகாசம் பண்றீங்க? உங்க ரவுசு தாங்கள? இது தெரிஞ்சா சீக்கிரம் முஹுர்த்தம் பார்த்து இருப்பேன்ல.. படுத்தறீங்கடா? உங்களை நம்பி விடலாமா?” அவர் கேட்கவும், சிரித்துக் கொண்டே அவரது கன்னத்தைத் தட்டியவன்,

“எங்களோட லிமிட் எங்களுக்குத் தெரியும்ல நிம்மிச் செல்லம்.. சும்மா உங்களை வம்பு வளர்த்துக்கிட்டு இருந்தேன்.. வேற ஒண்ணும் இல்ல.. ஆனா.. உண்மையைச் சொல்லணும்ன்னா அப்போ அப்போ கொஞ்சம் அவ கூட ரொமான்ஸ் பண்ணுவேன்.. ஏன்னா நான் ரொமாண்டிக் ஹீரோ..” என்ற அர்ஜுனின் கன்னத்தைத் தட்டியவர்,

“என் பிள்ளைங்களைப் பத்தி எனக்குத் தெரியும்டா.. சும்மா உங்களை வம்பு வளர்த்தேன்.. இருந்தாலும் இன்னும் மூணு மாசம் இருக்கு.. ஆமா.. சொல்லிட்டேன்.. உன் ரொமான்சை எல்லாம் கொஞ்சம் கண்ட்ரோல்ல வச்சிக்கோ..” என்றவர், சிரித்துக் கொண்டே இருவரின் அருகில் நின்றார்.

“ச்சே.. ச்சே.. சும்மா தான் பேசிட்டு இருந்தேன்மா.. நான் அவளை டிரஸ் பேக் பண்ணச் சொன்னது இப்போ நான் குலுமனாலி போற போது. அப்போ அவளையும் ஹனிமூன்க்கு வான்னு சொல்லிட்டு இருந்தேன்.. எங்க சொன்ன பேச்சே அவ கேட்க மாட்டேன்கிறா.. இதுல நான் எங்கத்தை ரொமான்ஸ் செய்யறது? எங்க கல்யாணத்துக்குள்ள குழந்தையோட வரது?” என்றவனைப் பார்த்து முறைத்தவர், அவனது காதைப் பிடித்துத் திருகி,

“இதுல கல்யாணத்துக்கு முன்னால ஹனிமூன் வேறையா? உதை வாங்குவ படவா..” என்றபடி இருவரின் கன்னத்தையும் தட்டி,

“சந்தோஷமா இருங்கடா..” மன நிறைவுடன் சொன்னவர், அங்கிருந்து நகர, அர்ஜுன் சிவாத்மிகாவைப் பார்த்து கண் சிமிட்டி,

“பாரு அம்மாவே சொல்லிட்டாங்க..” என்று வம்பு வளர்க்க, அவனைப் பார்த்து முறைத்தவள், அவனை வாய்க்குள்ளயே திட்ட,

“நோ பேட் வார்ட்ஸ் மை லட்டு.. மீ பாவம்..” அவளை கேலி செய்து சிரித்தவன், வினய் வரவும், அவனையும் வம்பிழுக்கத் துவங்கினான்.

சிரிப்பினூடே அனைவரும் இரவு உணவை முடிக்க, “ரெண்டு பேரும் செமையா செய்ங்க.. ஜெயிச்சிட்டு வாங்க..” நிர்மலா வாழ்த்தவும்,

“ஆமாம்மா.. அப்படியே இவங்க ரெண்டு பேரையும் அனுப்பி விட்டு நான் அவன் கூட ஹைதராபாத்துல ஜாயின் பண்ணிக்கறேன்.. அப்பறம் வந்து இங்க கல்யாண வேலை எல்லாம் பார்க்கணும்.. நீங்க வந்து தனியா செய்ய முடியாது..” என்ற வினய், அவனது அடுத்தக் கட்ட திட்டத்தைச் சொல்ல,

“நீ ஒரு மாசம் ஃபுல்லா அங்க இருக்க வேண்டாம்டா.. நான் மேனேஜ் பண்ணிக்கறேன்.. நீ இங்க வேலையை எல்லாம் பாரு.. சரியா? என்னால தான் உங்களுக்கு எல்லாம் ஹெல்ப் பண்ண முடியல.. குலு மணாலிக்கு போயிட்டு வந்து ஹெல்ப் பண்றேன்..” என்ற அர்ஜுனின் தோளைத் தட்டியவன்,

“நீ வேலையைப் பாருடா.. நான் இங்க எல்லாம் பார்த்துக்கறேன்.. சும்மா ஃபீல் பண்ணாதே..” வினய் அவனுக்கு ஆறுதல் சொல்ல, அர்ஜுன் அவனைப் பார்த்து புன்னகைத்தான்.

சிவாத்மிகா, அர்ஜுன் இருவரும் திருமணம் ஆனவுடன் முதலில் வினயையும், ராதாவையும் தேன்னிலவிற்கு அனுப்ப முடிவு செய்திருந்தனர்.. அர்ஜுனும் சிவாத்மிகாவும் கிளம்பினால், நிர்மலாவை சாக்கு வைத்துக் கொண்டு அவன் செல்ல மாட்டான் என்ற காரணத்தினாலேயே, அவர்கள் அந்த முடிவை எடுத்திருந்தனர்.. அதை அப்பொழுது சொன்னால் அவன் ஒத்துக்கொள்ள மாட்டான் என்று அப்பொழுது சொல்லாமல் அர்ஜுன் அமைதி காத்தான்.

மறுநாள் காலையே வினய் இருவருடனும் பெங்களூர் கிளம்ப, அர்ஜுன் சிவாத்மிகாவை இறுக அணைத்து அவளை வழியனுப்ப, சிவாத்மிகா சந்தோஷத்துடன் வினயுடன் கிளம்பிச் சென்றாள்.