எந்நாளும் தீரா காதலாக – 3

3💝      

அவளது அறைக்குள் வந்த அர்ஜுன், சிவாத்மிகாவை நெருங்கி, அவளது பெட்டில் அமர்ந்துக் கொண்டு, அவளது முகத்தின் அருகே குனிந்து புன்னகைத்துக் கொண்டிருக்க, சிவாத்மிகாவின் உடல் வேர்க்கத் துவங்கியது.

பயத்தில், அவசரமாக அவனைப் பிடித்துத் தள்ளுவது போலத் தள்ளியவள், உறக்கம் களைந்து கண்களைத் திறந்துப் பார்த்தாள்.   அந்த அறையில் விளக்கு அனைக்கப்பட்டு, இரவு விளக்கு ஒளிர்ந்துக் கொண்டிருக்க, சுற்றி அந்த அறையைப் பார்த்தவள், அங்கு யாருமில்லாமல் போகவும், முகத்தைத் துடைத்துக் கொண்டே, அறையைச் சுற்றி பார்வையை ஓட்டினாள். உறக்கம் நன்கு களையவும், அது வெறும் கனவு என்றுத் தெரிந்ததும், தலையில் அடித்துக் கொண்டவள், கண்களை இறுக மூடி, அந்த நினைவை விரட்டுபவள் போல, தலையை குலுக்கிக் கொண்டாள்.  

“என்ன இது இப்படி எல்லாம் கனவு வருது.. அதுவும் முதல் தடவ அவரை இப்போ தானே பார்த்தேன்.. அதுக்குள்ள ஏன் கனவுல வராரு? இது சரியே இல்லையே.. பேட் பாய்..” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள், கடகடவென்று அருகில் இருந்த தண்ணீரைக் குடித்தாள்.

வியர்த்திருந்த முகத்தைத் துடைத்துக் கொண்டவள், அருகில் இருந்த டேபிளின் மேல் ராதா வைத்திருந்த ஹாட்கேசைப் பார்த்தாள்.

“இந்த ராதாக்காவுக்கு பொறுப்பு ரொம்ப ஓவரா இருக்கு.. இங்க வச்சா நான் வேஸ்ட் பண்ணாம கண்டிப்பா சாப்பிட்டுடுவேன்னு தெரிஞ்சே செய்யறது.. நடுராத்திரினாலும் சாப்பிடுன்னு கொண்டு வந்து வச்சிருக்காங்க..” சந்தோஷ சலிப்புடன், அதில் இருந்த இரண்டு தோசைகளை எடுத்துக் கொண்டு, பால்கனியில் இருந்த தனது ஊஞ்சலில் சென்று அமர்ந்தாள்.

மெல்ல ஊஞ்சல் ஆடிக்கொண்டே, கருவானத்தில் ஒளிர்ந்த அந்த நட்சத்திரத்தையும், அதற்கு நடுவே ஒளிர்ந்துக் கொண்டிருந்த நிலாவை ரசித்துக் கொண்டே, அவள் உண்டுக் கொண்டிருக்க, பக்கத்தில் இருந்த வீட்டின் உள்ளே ஒரு கார் நுழையவும், அவளது கவனம் அந்தப் பக்கம் திரும்பியது.

“ரொம்ப நாளா இந்த வீடு காலியா இருந்தது இல்ல? சேல் பண்றேன்னு சொல்லிட்டு இருந்தாங்க.. ஏதோ ரிப்பேர் வேலை எல்லாம் நடந்ததே.. இப்போ ஆளு வந்துட்டாங்க போல..” என்று தனக்குள் பேசிக் கொண்டவள், தோசையை பிய்த்து சட்னியில் முக்கி வாயில் போட்டுக்கொள்ள, அந்த நேரம் உள்ளே வந்த காரில் இருந்து இறங்கிய அர்ஜுனைப் பார்த்ததும், அவளது தோசைத்  தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டது..

‘இவரு எதுக்கு இங்க வராரு? சிவா.. உனக்கு ஏன் இன்னைக்கு எல்லாம் புதுசா நடக்குது?’ தொண்டையில் சிக்கிய தோசை புரையேற, அவள் இரும்பத் துவங்கவும், வீட்டின் உள்ளே செல்ல நடந்த அர்ஜுன், அந்த இரவு நேரத்தின் அமைதியில், அந்த நேரத்தில் கேட்ட இரும்பல் சத்தத்தில், சுற்றி முற்றிப் பார்த்தவன், மேலே நிமிர்ந்துப் பார்த்தான்.

அங்கு வாயில் தோசையுடன் அவளைப் பார்க்கவும், அவளை அந்த நேரம் எதிர்ப்பார்க்காதவன், ஆச்சரியத்தில் கண்களை விரித்தான். அதுவும் அவளது வாயில் தொங்கிக் கொண்டிருந்த தோசையை பார்த்தவன், புன்னகையுடன் தலைமுடியை, விரலால் கோதிக்கொண்டே, உள்ளே செல்ல இரண்டடி எடுத்து வைக்க, அப்பொழுது கேட்டக் குரலில் அப்படியே நின்றான்.

இரவு நேரத்து நிசப்தத்தில் அவர்கள் பேசுவது நன்றாகக் கேட்க, அர்ஜுன் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு நின்றான். “சிவா.. என்ன முழிச்சிட்டயா? ரொம்ப அசதியா? வந்ததும் படுத்து தூங்கிட்ட? சாப்பாடு வேணும்ன்னா என்னை எழுப்பலாம்ல.. எதுக்கும் இருக்கட்டும்ன்னு தான் தோசையை பக்கத்துல வச்சேன்.. பாரு பசில எப்படி வாயில திணிச்சுட்டு இருக்கன்னு..” என்றபடி ராதா அவளுக்கு தண்ணீரோடு வரவும், அர்ஜுனின் புருவங்கள் அந்தப் பெயரைக் கேட்டதும் முடிச்சிட்டது.

‘சிவா?’ என்று மனதினில் நினைத்துக் கொண்டவன், மெல்ல வீட்டின் உள்ளேச் செல்ல, சிவாத்மிகா, ராதாவைப் பார்த்தாள்.

“ராதாக்கா.. நீங்க நல்லா தூங்கிட்டு இருந்தீங்க.. அதனால தான் எழுப்பல.. ஹாட்கேஸ்ல இருந்து எனக்கு எடுத்துக்க தெரியாதா? என்னவோ இன்னைக்கு ரொம்ப டயர்ட்டா இருந்தது.. அப்படியே குளிச்சிட்டு வந்து தூங்கிட்டேன்.. இப்போ வச்ச தோசையை வேஸ்ட் பண்ணக் கூடாதுன்னு எனக்கு நானே தனியா மூன்லைட் டின்னர் என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்கேன்.. ரொம்ப அழகா இருக்கு இன்னைக்கு வானம்..” என்றவள், அர்ஜுன் வீட்டின் உள்ளே சென்றுவிட்டதை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு சாப்பிடத் துவங்கினாள்.

அவன் உள்ளே சென்றுவிட்டதாக அவள் நினைத்திருக்க, அவனோ, உள்ளே இருந்த வராண்டா போன்ற இடத்தில் அவளது பேச்சைக் கேட்க நின்றுக் கொண்டிருந்தான். இரண்டு வீடுகளும் மிகவும் அருகருகே இருந்தது அர்ஜுனுக்கு மிகவும் வசதியாக இருந்தது..

“இல்ல எதுக்கு  தனியா உட்கார்ந்து சாப்பிடணும்ன்னு கேட்கறேன்? எத்தனை தடவ உன்னை ஒரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி சொல்றேன்? ஒரு மாப்பிளை பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டா, கூட உட்கார்ந்து சாப்பிட ஆள் இருக்கும்ல.. எத்தனை நாளைக்கு இப்படித் தனியா இருப்ப? உனக்கு ஏன் யாரையுமே பிடிக்க மாட்டேங்குது? உனக்குன்னு ஒரு துணை வேண்டாமா?

உன்னைப் பெத்தவங்க தான் உன்னைப் பத்தி கவலைப்படாம அவங்க அவங்க வாழ்க்கைய பார்த்துக்கிட்டு போயிட்டாங்க.. அவங்க உன்னை மறந்துட்டு குடும்பம் குட்டின்னு சந்தோஷமா இருக்காங்க.. நீ தான் இங்க தனியா தவிச்சிட்டு இருக்க..” ராதாவின் கூற்றில் ‘ம்ப்ச்’ என்று சலித்துக் கொண்டாள். 

“என்ன சலிப்பு உனக்கு? இல்ல கேட்கறேன்? உனக்கு என்ன விதி இப்படி தனியா இருக்கறதுக்கு? உனக்கும் ஒரு துணை வேணும்ல பாப்பா.. இன்னும் இப்படியே மொட்டை வானத்தையும், குருவியையும், பூவையும் பார்த்துட்டு எவ்வளவு நாளைக்கு தனியா இருப்ப? உன்கிட்ட இதைப் பத்தி பேசக் கூடாதுன்னு தான் நினைக்கிறேன். மனசு கேட்கல..” மனத்தாங்களாக ராதா கேட்டுவிட, சிவாத்மிகாவின் கண்களில் நிராசை வழிந்தது..

ராதாவின் சாதாரண குரலே மிகவும் உயர்ந்து ஒலிக்கும்.. அதிலும் இப்பொழுது உணர்ச்சி வசப்பட்ட நேரத்தில் அவளது குரல் நன்றாகவே உயர்ந்திருந்தது..

ராதாவின் கூற்றைக் கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.. காரை ஷெட்டில் பார்க் செய்து விட்டு வந்த வினய், ‘இவன் என்ன இங்க நின்னுட்டு இருக்கான்? என்னாச்சு? எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கானா என்ன? அப்படின்னா இது புதுசா இருக்கே.. அப்போ இவனுக்கு நிஜமாவே ஏதாவது ஆகிடுச்சா?’ என்று அருகில் வந்தவன்,

“அர்..” என்று தொடங்கும் பொழுதே, அவசரமாக அவன் வாய் மீது விரலை வைத்து அமைதியாக இருக்கும்படி சைகைக்காட்ட, புருவத்தை உயர்த்தி, அவன் அப்படி என்ன கேட்கிறான் என்று குழம்பியபடி, அவன் அருகில் நின்ற வினய், ராதா சொல்வதைக் கேட்டு அதிர்ந்து தான் போனான். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் திகைப்புடன் பார்த்துக் கொண்டனர். 

“ம்ப்ச்.. யார் எனக்கு மாப்பிள்ளை பார்ப்பா? நானே போய் எனக்கு பார்த்துக்க முடியுமா? அது செம காமடியா இருக்கும்க்கா.. பொண்ணு வேணுமோ பொண்ணுன்னு அந்த கல்யாண சந்தையில நான் கூவனுமா? ஹஹஹஹா..” என்று சிரித்தவள்,  

“உங்களுக்குத் தான் தெரியுமே.. காலேஜ் முடிக்கும் போது என்னை லவ் பண்றேன்னு ஒருத்தன் வந்தானே அவன் என்ன பண்ணினான்? எனக்கு அப்பா அம்மா யாரும் இல்லன்னு தெரிஞ்சு, ‘உனக்கு எல்லாமா இருக்கேன்’னு கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணாத குறையா சொன்னான்.. நானும் ஹையோ எனக்குன்னு ஒருத்தன் வந்துட்டான்.. என்னை நல்லா பார்த்துக்கப் போறான்.. அப்பா அம்மாகிட்ட கிடைக்காத பாசம் எல்லாம் கிடைக்கப் போகுதுன்னு நம்பினேன்.. என்ன ஆச்சு?

வீட்ல பேசி எங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு வரேன்னு சொன்னான்.. சொன்னவன் அவனோட கல்யாண இன்விடேஷனை தானே கையில கொடுத்தான்.. அடப் போங்கக்கா.. கடுப்ப கிளப்பிக்கிட்டு.. எனக்கு எல்லாம் எவனையும் நம்பறதுக்கு தைரியம் இல்ல.. எவனும் எனக்கு வேண்டாம்.. அதனால தான் என்கிட்ட தொழில் ரீதியா கூட நெருங்க நான் எவனுக்கும் எந்த சந்தர்ப்பத்தையும் கொடுக்கறது இல்ல..” அவளது குரலில் தான் அவ்வளவு கசப்பு வழிந்தது..

“எங்க அம்மாவுக்கு எங்க அப்பாவை விட ஒருத்தரைப் பிடிச்சது.. அவர் தான் முக்கியம்ன்னு டைவர்ஸ் வாங்கிட்டு போயிட்டாங்க.. அந்த ஆளுக்கு நான் வேண்டாம் எங்க அம்மா மட்டும் தான் வேணும்.. அதனால எங்க அம்மாவுக்கும் நான் வேண்டாதவளா போயிட்டேன்.. என்னைக் கண்டுக்கல..

சரி அவங்க தான் அப்படின்னா.. எங்க அப்பா.. என்னைப் தனியா பார்த்துக்க முடியாதுன்னு ஊட்டி போர்டிங் ஸ்கூல்ல விட்டாச்சு.. அவர் அவரோட அவமானத்தை துடைக்க வெளிநாடு போன இடத்துல அவருக்கு ஒருத்தரை பிடிச்சது.. அந்த அவங்களுக்கும் எங்க அப்பா மட்டும் தான் வேணும்.. கூட சுமையா நான் வேண்டாம்..

ரெண்டு பேருக்கும் எதுல ஒத்தும இருக்கோ என்னவோ. அவங்களுக்கு அமைஞ்சவங்க விஷயத்துல ரொம்ப ஒத்துமை.. எனக்கு சாப்பிட, தங்க, படிக்க எல்லாம் பணத்தை அனுப்பலாம்.. தேவைக்கு அதிகமா கூட அனுப்பலாம்.. ஆனா, அவங்க என்னை வந்து பார்க்கக் கூடாது.. போன்ல கூட பேசக் கூடாது..

என்னைப் பெத்தவளுக்கு பணம் அனுப்பிட்டா நானே வளர்ந்துடுவேன்னு நினைப்பு.. தன்னோட மனசு, தன்னோட ஆசைப் பத்தி பார்த்தாங்களே தவிர, என்னைப் பத்தி ரெண்டு பேருமே யோசிக்கலையே.. இதுக்கு அவங்க என்னை பெத்துக்காமையே இருந்திருக்கலாம்.. அது தான் பிள்ள உண்டாகாம இருக்க எவ்வளவோ இருக்கே.. இல்ல கருவுலயே கலைச்சுட்டு போயிருக்கலாம்.. எனக்கு இந்த கஷ்டம் இருந்திருக்காதே..” என்றவள், மூக்கை உரிய, அவள் அழுது கொண்டிருக்கிறாள் என்று அர்ஜுனுக்கு விளங்கியது..

மனதினில் ஏதோ பாரம் அழுத்த, அவன் கதவில் சாய்ந்து நிற்கவும், அவனது முகத்தைப் பார்த்த வினய், அவனது தோளை அழுத்தினான்.

மடையைத் திறந்தது போல சிவாத்மிகா பேசிக் கொண்டே போக, ராதா அவளது மனதின் காயம் ஆற அவள் பேசுவது தான் வழி என்று வழமை போல அமைதியாக கேட்கத் துவங்கினாள். “எங்க அம்மாவுக்கு, என் கூட பேசினா அவங்க பிள்ளைங்களுக்கு நான் இருக்கேன்னு தெரிஞ்சிடுமாம்.. அதாவது அவங்க ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு தெரிஞ்சிடும்.. அது அவங்களுக்கு அவமானமாம்.. அதனால நான் ஒருத்தி உயிரோட இருக்கேனான்னு கூட அவங்களுக்குத் தெரியாது.. எங்க அப்பாவுக்கு பணம் அனுப்பிட்டா கடமை முடிஞ்சது.. 

அவங்க ரெண்டு பேருமே குடும்பம் குட்டின்னு ரொம்ப சந்தோஷமா இருக்காங்க.. அந்த பிள்ளைங்க அப்பா அம்மா பாசத்துல நனைஞ்சிக்கிட்டு ரொம்ப சந்தோஷமா இருக்காங்க.. ஆனா.. நான்.. அவங்களுக்கு பிறந்த பாவத்துக்கு என்னோட அஞ்சு வயசுல இருந்து தனிமையைத் தவிர எதுவுமே பார்த்தது இல்லேக்கா..

சில சமயம் என் புன்னை நானே கிளறிக்கிற மாதிரி என்னைப் பெத்தவங்களோட சோசியல் மீடியா பக்கம் எல்லாம் பார்ப்பேன்.. அந்தப் பசங்க எல்லாம் அவங்க மேல சாஞ்சிக்கிட்டு, கழுத்தைக் கட்டிக்கிட்டு, எல்லா பண்டிகைலையும், ஃபேமிலியா, சந்தோஷமா இருக்கற அவங்க போட்டோ எல்லாம் பார்க்கும்போது.. எனக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க? பேசாம செத்துப் போயிடலாம்ன்னு கூட தோணும்.. உயிரே வெறுத்து கூட போகும்..” என்று அவள் தேம்பத் துவங்க, ஏண்டா அவளது திருமணத்தைப் பற்றி பேச்செடுத்தோம் என்று ராதா தன்னையே நொந்துக் கொண்டாள்.   

அவளது தலையை மெல்ல அவள் வருடிக் கொடுக்க, “உங்களுக்குத் தெரியுமா.. நான் ஏஜ் அட்டென்ட் பண்ணின பொழுது எனக்கு அதைப் பத்தி எதுவும் தெரியாது.. எங்க செட்ல நான் தான் முதல்ல ஆனேன்.. அதனால யாரும் அதைப் பத்தி பேசினது கூட இல்ல.. எனக்கு பீரியட்ஸ் ஆன உடனே என்ன ஏதுன்னு கூடத் தெரியாம நான் பயந்து அழுதுக்கிட்டு நின்னேன்..

வார்டன் தான் பார்த்துட்டு என்னோட கா…ர்டி..யனான என்னோட அப்பாவுக்கு கால் பண்ணி சொன்னாங்க.. அவர் ரொம்ப பொறுப்புள்ள அப்பாவா எனக்கு ஸ்வீட் வாங்கித் தரச் சொல்லி ஹாஸ்டல் வார்டன்க்கு பணம் அனுப்பினார்.. எங்க அம்மாவுக்கு விஷயத்தைச் சொன்ன போது.. அவங்க என்னை சுமந்தவங்க இல்லையா.. அவங்க அதுக்கும் மேல.. ‘என்ன? அதுக்குள்ள வயசுக்கு வந்துட்டாளா? இன்னும் அதுக்கு வயசு ஆகலையே.. இப்போ என்ன அவசரம் அவளுக்கு? ஏதோ அவ பொய் சொல்றா.. நல்லா விசாரிங்க’ன்னு சொல்லிட்டு வச்சிட்டாங்க..” என்றவள், கண்களில் கண்ணீர் வழிய,     

“அந்த நாள்ல எல்லாம் வயிறு வலி, முதுகு வலின்னு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? அம்மாவோட அன்புக்கும், மடிக்கும் அவ்வளவு ஏங்கி இருக்கேன் தெரியுமா? இப்போ எனக்கு அந்த நேரத்துல நீங்க இருக்கீங்க அக்கா.. உங்க மடியில படுத்துக்கறேன்.. எனக்கு சரியா போயிடுது.. ஆனா.. அப்போ எல்லாம்.. என்ன ஏது, ஏன் ஹாஸ்டல்ல இருக்கோம்ன்னு ஒண்ணுமே தெரியாம லீவ்ல கூட ஹாஸ்டல்லயே இருந்தேனே..  

அவங்க ரெண்டு பேருக்கும் பிறந்த பாவத்தைத் தவிர நான் எதுவுமே செய்யல.. என்னைப் பேசாம கொன்னுட்டு அவங்க பாட்டுக்கு அவங்க வாழ்க்கையை பார்த்துட்டு போயிருக்கலாம். பணத்தை அனுப்பிட்டா எனக்கு எல்லாம் கிடைச்சிடுமா? யாருக்கு வேணும் அவங்க அனுப்பற பணம்? பாவ மன்னிப்பு கேட்கறது போல..

இந்த வீட்டை எங்க அப்பா பெரிய மனசு பண்ணி எனக்கே கொடுத்துட்டார்.. எனக்கு படிப்பு முடிச்சு தங்க இடம் வேணுமாம்.. எனக்கு பாதுக்காப்பா இருக்குமாம்.. அவங்களுக்கு இந்த வீடு வேண்டாமாம்.. இந்த வீட்டு பத்திரத்தை நேர்ல கூட தராம ஒரு வக்கீல விட்டுக் கொடுத்து அனுப்பினார்.. யாருக்கு வேணும் அவங்க சம்பாதிச்ச வீடு?” அவளது குரலில் இருந்த கசப்பே அர்ஜுனுக்கு அவளது மனதின் வலியைச் சொன்னது. 

“விடு பாப்பா.. அவங்களுக்கு உன் அருமை புரியல.. நீ ஒரு மாணிக்கம்.. அது அருமை அவங்களுக்கு இப்போ தெரியாது..” அவளை சமாதானப்படுத்த,    

கண்களைத் துடைத்துக் கொண்டவள், “விடுங்கக்கா.. உங்களுக்குத் தெரியாதது இல்ல.. எல்லாம் நான் வாங்கி வந்த வரம்.. எங்க அப்பாவையும், கூடவே அந்த மகானையும் பார்த்த எனக்கு எப்படிக்கா ஒருத்தனை நம்பி என்னோட வாழ்க்கையை கொடுக்க தைரியம் வரும்?  அதோட உங்களுக்கு மட்டுமென்ன? ஒருத்தன் கல்யாணம் பண்ணி ஏமாத்தி விட்டுட்டு போனானே.. நீங்க எவ்வளவு நாள் அதனால கஷ்டப்பட்டிங்க? அத எல்லாம் பார்த்துமா ராதாக்கா என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றீங்க? 

லைஃப்ல ஒரு ஆண் இருந்தா தான் வாழ முடியுமா என்ன?  இப்போ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேனே.. அதே போல இருந்துட்டு போறேன்..” என்று சொன்னவள், தோசையை எடுத்து அவள் பறவைகளுக்காக வைத்திருந்த ஒரு தொட்டியில் பிய்த்துப் போடத் துவங்கினாள். 

“ஹையோ இப்படி சாப்பிடற நேரத்துல நான் பேசினது தப்புத் தான்.. சாப்பிட்ட பொண்ணை போய் சாப்பிட விடாம பண்ணிட்டேனே.. என்னை மன்னிச்சிடு சிவா.. உன்னோட காயம் தெரிஞ்சும் நான் உன்னை இப்படி கேட்டது தப்புத் தான்.. விடு.. உனக்கு நான்.. எனக்கு நீ.. இப்படியே கடைசி வரை இருந்துட்டு போகலாம்.. இப்போ நான் போய் மீதி தோசைய எடுத்துட்டு வரேன்..” என்றவள், நகரத் தொடங்க,

“வேண்டாம்க்கா.. பசிக்கல போதும்.. நீங்க போய் தூங்குங்க.. எனக்கு காலைல சக்கரைப் பொங்கல் சாப்பிடணும் போல இருக்கு.. செஞ்சிக் கொடுங்க.. நான் கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு படுக்கறேன்..” என்றவள், ராதாவை அனுப்ப முயல,

“ஹையோ.. சொல்ல மறந்துட்டேனே சிவா.. பக்கத்து வீட்ல புதுசா குடி வந்திருக்காங்க.. அங்க ஒரு அம்மா இருக்காங்க.. இன்னைக்கு நீ கிளம்பிப் போனதும் கொஞ்ச நேரத்துல வந்தாங்க.. நாளைக்கு காலைல அவங்க வீட்ல ஒரு பூஜை இருக்காம்.. நம்மளை வரச் சொல்லி கூப்பிட வந்தாங்க.. கண்டிப்பா வரணும்ன்னு சொல்லிட்டு போனாங்க.. ரொம்ப அன்பா பேசறாங்க தங்கம்.. எனக்கு அவங்களை ரொம்ப பிடிச்சது..” என்று ராதா சொல்லவும், சிவாத்மிகாவின் விழிகள் விரிந்தது..

“ஹையோ.. பூஜைக்கா.. நானா? ராதாக்கா விளையாடறீங்களா?” அவளது அலறலில், அவளது கதையைக் கேட்டு சிலையாக நின்றுக் கொண்டிருந்த அர்ஜுனின் இதழ்களில் புன்னகை விரிந்தது.

‘ஹ்ம்ம்.. பையன் ஒரு பக்கம் பொண்ணை சுத்தறான்.. அம்மா ஒரு பக்கம் வராங்க.. இது தானா அமையுதா? இல்ல பையனோட பார்வையை பார்த்து அவங்க அமைச்சாங்களா?’ வினய் மனதினில் நினைத்துக் கொண்டிருக்க, அர்ஜுன் உள்ளே நகரத் துவங்கினான்..  

“அவங்களைப் பார்த்தா உனக்கு ரொம்ப பிடிக்கும் சிவா.. உன்னை கண்டிப்பா கூட்டிட்டு வரணும்ன்னு சொல்லிருக்காங்க.. அக்கம் பக்கம் இருக்கோம்.. ஒரு பூஜை இதுக்குன்னு போகாம இருக்கலாமா? அப்பறம் நமக்கு பேச்சுத் துணைக்கு கூட யாரும் இருக்க மாட்டாங்க” என்று  கேட்டு, சிவாத்மிகாவை ஒத்துக்கொள்ள  வைத்துவிட்டே ஓய்ந்தாள்.

“சரி.. சரி.. போகலாம்க்கா..” என்று அவள் சம்மதம் தெரிவிக்கவும்,

“நல்ல புடவையா எடுத்து வை.. எப்போப் பாரு தொலபுலான்னு ஒரு டிரஸ்.. இல்ல ஜீன்ஸ் போட்டுட்டு போக வேண்டியது..” என்று அவளை மிரட்டியவள்,

“இப்போ வா.. படுத்துத் தூங்கு.. இங்க வெளிய உட்கார்ந்து நட்சத்திரம் எண்ண வேண்டாம்.” என்று மிரட்டி, சிவாத்மிகாவின் சிரிப்பைப் பார்த்த பிறகே, அவளை உள்ளே அழைத்துச் சென்றாள்.

அமைதியாகவே உடையை மாற்றிக் கொண்டு படுத்த அர்ஜுனின் மனம் முழுவதும், சிவாத்மிகாவின் வார்த்தைகளையே சுற்றி வந்தது.. அவளது அறையில் பார்த்த அந்த குழந்தையின் படம் இப்பொழுது இன்னும் அவனது மனதில் வலியைக் கொடுத்தது..

தனது சிறு வயதின் தனிமையை அப்படியே சுவற்றில் வரைந்து வைத்து, மீண்டும் மீண்டும் அந்த வலியைக் கீறிக் கொள்கிறாளே என்று அவனது மனம் வருந்தியது.. தந்தைத் தாய் இருந்தும்.. தேவைக்கு அதிகமாக பணம் இருந்தும், அவள் இப்பொழுதும் உழைத்துக் கொண்டிருக்கிறாளே என்று அவன் மனம் யோசிக்க, உடனே அவனது மனது காலையில் அந்த ஹீரோயின் அவளை வரவழைத்த காட்சி நினைவிற்கு வந்தது..

அவள் ‘ப்ரான்க்..’ என்று சொன்னதும், அவளது முகத்தில் தோன்றிய வலி.. அந்த வலியை உடனே அவள் மறைத்துக் கொண்ட விதம்.. அனைத்தும் அவனது மனதில் படமாக ஓடத் துவங்க,

‘அது தான் நிறைய காசு கொடுக்கறாங்க இல்லன்னு சும்மா பொழுதை ஓட்டாம எப்படி இருக்கா இல்ல. ச்சே.. நினைச்சு இருந்தா எப்படியோ இருக்கலாம்.. ஆனா.. அவளா கஷ்டப்பட்டு ஒரு ப்ராண்ட் பண்ணி இருக்கா.. கிரேட்..’ அவளைப் பற்றிய எண்ணம் மட்டுமே அவனைச் சுற்றிக் கொண்டிருக்க, உறங்க முடியாமல் எழுந்து பால்கனிக்குச் சென்றான்..

அந்த இடம் வெறுமையாக இருக்க, மீண்டும் அறைக்குள் வந்தவன், திரையை நகர்த்தி, அவளது அறையைப் பார்க்க, சிறு ஒளியைத் தவிர அங்கு எதுவும் தென்படாமல் போகவும், மீண்டும் தனது பெட்டில் சென்று படுத்தவனுக்கு, தன்னை நினைத்தே சிரிப்பு வந்தது..

காலையில் தான் அவளைப் பார்த்தோமா? ஏனோ நீண்ட நெடுநாட்களாக அவளைத் தெரியும் என்பது போல ஒரு எண்ணம் எழ, இதழில் புன்னகையுடன், அன்றைய அலைச்சலில் உறங்கியும் போனான்.

மறுநாள் காலையில் வினயும், நிர்மலாவும் பரபரப்பாக பூஜைக்கு தயாராக, மாணிக்கம் அன்றைய காலைச் சமையலை கவனித்துக் கொண்டிருந்தான்.. காலையில் எழுப்ப வந்த வினய், அவன் நன்றாக உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து, “அம்மா.. அவன் நல்லா தூங்கிட்டு இருக்கான்.. பூஜை ஆரம்பிக்கிறதுக்கு கொஞ்ச நேரம் முன்னால நான் எழுப்பறேன்..” என்றவன், மெல்ல நிர்மலாவிடம் பேசிக் கொண்டே அவருக்கு தேவையானதை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

“அவனை ஒரு கல்யாணத்துக்கு சம்மதிக்க சொல்லுடா.. இந்த பூஜை புது வீடு வாங்கினதுக்கும்.. அவனுக்கும் உனக்கும் ஒரு நல்ல பொண்ணா அமையணும்ன்னு சேர்த்து வேண்டிக்கிட்டு பண்றது..” நிர்மலா வினய்யிடம் புலம்ப,

‘அது சீக்கிரம் நடந்துடும் போல இருக்கும்மா.. நீங்க கவலைப்படாதீங்க.. அவன் நேத்து இருந்து மந்திரிச்சு விட்ட கோழி போல சுத்திட்டு இருக்கான்..’ மனதினில் அவரது புலம்பலுக்கு மனதினில் பதில் சொன்னவன், பதவிசாக தலையசைத்தான்.

“என்னடா பதில் சொல்லாம நிக்கற? நீயாவது சரின்னு சொல்லு.. அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் பண்ணிப்பன்னு சொல்ற.. ஒண்ணு அவன் பண்ணிக்கணும் இல்ல நீ கல்யாணம் பண்ணிக்கோ.. உனக்கு பொண்ணு பார்க்கறேன்.. அவன் எப்போ கேட்டாலும் இன்னும் ரெண்டு படம் பண்ணிட்டு கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றான்.. கூடவே இது போல பாட்டு ஆல்பம் எல்லாம் பண்றான்..

ஓடி ஓடி சம்பாதிக்கிறான்னு சந்தோஷமா இருக்கு.. அப்பா ஆசைப்பட்டா  போல அவன் நல்லா பேரும் புகழுமா இருக்கறது சந்தோஷமா இருக்கு.. ஆனா.. எனக்கு உங்களை குடும்பம் குட்டின்னு உங்களைப் பார்க்க ஆசையா இருக்கே.. நீயும் அவன் கூட சேர்ந்து கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு ஆடற.. என்னை நினைச்சுப் பார்க்கறீங்களா தடிமாடுங்களா?” அவர் மனத்தாங்கலாக கேட்க,

“இப்போ உங்களுக்கு மருமக கூட சண்டைப் போடணுமாம்மா.. அதுக்கு தான் எங்களை கல்யாணம் பண்ணிக்கச் சொல்றீங்க? அதுக்கு ஆமான்னு மட்டும் சொல்லுங்க.. இதோ ஒரு அஞ்சு நிமிஷத்துல கூட்டிட்டு வரேன்..” வினய் சீரியசாகச் சொல்ல, நிர்மலா அவனை முறைத்தார்.

“ஆமா.. பொண்ணு பக்கத்து வீட்ல இருக்கா.. போய் கூட்டிட்டு வா..” என்று நிர்மலா சொல்லவும், வினய் அதிர்ந்துப் பார்க்க, அவனது முகத்தைப் பார்த்த நிர்மலா, குழப்பமாகப் பார்த்தார்.

“என்னடா இப்படி முழிக்கிற?” என்று அவர் கேட்கவும், தலையை அசைத்தவன்,

“நீங்க ஒரு ஞானிம்மா.. எப்படி இப்படி நடக்கப் போறதை அப்படியே சொல்றீங்க..” என்று கேலி செய்தவன், உதட்டைப் பிதுக்கவும், அவனது தோளில் அடித்தவர்,

“அவனை போய் எழுப்பிட்டு வா.. பூஜைக்கு மணியாகுது.. அதோ அய்யர் எல்லாம் வந்தாச்சு..” என்று சொல்லவும், வினய், அர்ஜுனை எழுப்புவதற்காக நகர்ந்து செல்ல, நிர்மலா பூஜை வேலைகளை கவனித்தார்..

அர்ஜுன் அவசரமாக குளித்துவிட்டு வரவும், பூஜை தொடங்கி நடக்கத் துவங்க, புடவையில் தயாரான சிவாத்மிகாவைப் பார்த்த ராதாவின் கண்களில் நீர்த் திரையிட்டது..

“ரொம்ப அழகா இருக்க தங்கமே..” என்று அவளுக்கு நெட்டி எடுத்தவள், அவளை ஒரு சேரில் அமர வைத்து, தலையை பின்னலிடத் துவங்கினாள்.

“அக்கா..” என்று அவள் சிணுங்க,

“சும்மா இரு நீ.. நீயே எப்போவாவது தான் புடவை கட்டற.. அந்த நாளை நான் விடலாமா?” என்று சொன்ன ராதா, பின்னலிட்டு முடித்து, அவளது தலையில் மல்லிகைச் சரத்தை வைத்துவிட்டு, கண்ணாடியில் பார்த்தவள், நிறைவான புன்னகையை சிந்தி,

“சரி.. நானும் கிளம்பறேன்.. ரெண்டு நிமிஷம்..” என்று சொல்லவும், அவளை நிறுத்தியவள், அவளுக்கு அழகான புடவையை எடுத்துக் கொடுத்து,

“இதைக் கட்டிட்டி வாங்க.. அதோட.. இப்போ உட்காருங்க..” என்று சொன்னவள், அவளை அமர வைத்து, அவளது நீண்ட பின்னலில், மீதம் இருந்த மல்லிகைச் சரத்தை வைத்து விட, ராதா அவளது அன்பில் நெகிழ்ந்துப் போனாள்.