எந்நாளும் தீரா காதலாக – 8
எந்நாளும் தீரா காதலாக – 8
💝8
நாட்கள் அதன் வேகத்தில் ரக்கை கட்டி பறந்துக் கொண்டிருந்தது.. அர்ஜுன் ஊருக்குச் சென்று ஒரு வாரம் முடிந்த நிலையில், தவறாமல் காலை வணக்கம், இரவு வணக்கம், நடுநடுவில் சில ஜோக்குகள் என்று சிவாத்மிகாவின் மொபைலின் மூலம் தனது இருப்பை உணர்த்திக் கொண்டு இருந்தான்..
அதே போல தினமும் காலையிலேயே ஒரு காதல் பாடலுடன் அவனது போட்டோ ஒன்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குடிப்புக, நடுநடுவே அவனது ரீல்ச்கள் வேறு சிவத்மிகாவைப் பார்த்து சிரித்தது.. அதைக் காலையிலேயே பார்க்கும் சிவாத்மிகாவிற்கு முகத்தில் புன்னகை அரும்பும்.. அந்த நாளிலும் ஏதோ ஒரு சுகமான, இனம் புரியாத இதம் மனதினில் பரவும்..
அதே போலவே காலையிலும் மாலையிலும் ஒரு ஐந்து நிமிடமாவது நிர்மலா அவளுடன் வந்து பேசிவிட்டு செல்வது வழக்கமாக இருந்தது.. உறவென்று யாருமே இல்லாமல் இருந்தவளுக்கு, நிர்மலாவின் தாயன்பு மனதிற்கு பாலைவனத்து தண்ணீராய் இனித்தது.. அந்த ஐந்து நிமிட இதமான பேச்சிற்காக, அவள் அந்த நாள் முழுவதும் எதிர்ப்பார்க்கத் துவங்கினாள்.
மாலையில் அவள் வரும்பொழுது பெரும்பாலும் ராதாவுடன் பேசிக் கொண்டிருப்பவர், சிவாத்மிகா வந்ததும், அவளுக்கு காபி கலந்துக் கொடுத்து, தான் செய்து எடுத்து வந்திருக்கும் சத்தான கொரிப்புகளை அவளுக்கு எடுத்து வைப்பார். அவரது மனது ஓரளவிற்கு புரிந்து, சிவாத்மிகாவின் மேல் அவருக்கு இருக்கும் அன்பும் புரிய, ராதா அமைதியாக வேடிக்கைப் பார்த்தாள்.
“அம்மா.. என்னம்மா? நீங்க ஏன்ம்மா கஷ்டப்படறீங்க?” என்று ஒருமுறை கேட்டதற்கு,
“நான் என்னம்மா தனியா செஞ்சிடப் போறேன்.. எனக்கு பொண்ணு இருந்தா செய்வேன்ல அப்படி தான்.. எனக்கு உன்னைப் பார்க்கும்போது எல்லாம் அப்படித் தான் தோணுது..” என்று அவர் வாஞ்சையாக அவளது தலையை கோதிக் கொடுக்க, சிவாத்மிகா உருகியே போவாள். அப்படி அவள் உண்ணும் நேரத்தில், பலவித பேச்சுக்களின் நடுவில், அர்ஜுனின் தந்தையைப் பற்றிய பேச்சு வர,
“அர்ஜுனோட முதல் படம், ரொம்ப கஷ்டப்பட்டு கிடைச்ச சான்ஸ்.. அது ஷூட் எல்லாம் முடிஞ்சு ரிலீஸ் ஆகற நேரத்துல, அந்த டைரெக்ட்டருக்கும் ப்ரொட்யூசர்க்கும் ஏதோ பிரச்சனை.. அதுல அந்த ஹீரோயின் இவன் பேரையும் இழுத்து விட, பணம் போனாலும் பரவால்லன்னு, படத்தை அந்த ப்ரொட்யூசர் ரிலீஸ் பண்ணல.. அர்ஜுனும் அவங்க அப்பாவும் ரொம்ப எதிர்ப்பார்த்த படம்.. நல்லபடியா ரிலீஸ் ஆகி இருந்தா இன்னும் நிறைய படம் வந்திருக்கும்.
அதோட இவன் பேரும் தேவையே இல்லாம இழுத்துனால நிறைய கேலி, அவமானம்ன்னு சந்திச்சான்.. அவனை வச்சு எவ்வளவு மீம் எல்லாம் வந்துச்சு தெரியுமா? இவன் அதை எல்லாம் பார்த்து பழகினது இல்லையா.. அவங்க அப்பாவோட சமாதானம் எல்லாம் கேட்காம ரூமுக்குள்ளயே அடைஞ்சு கிடந்தான்.. அப்பறம் எனக்கு நடிப்பு எல்லாம் வேண்டாம்ன்னு, அவனே ஒரு சானல்ல வேலைக்கு சேர்ந்துட்டான்..” நிர்மலா கண்ணீருடன் அந்த நாள் நினைவுகளில் சொல்லிக் கொண்டு வர, சிரிப்பை மறந்து, முகம் இறுக நின்ற அர்ஜுனின் முகம் அவளது மனக்கண்ணில் தோன்ற, அது அவளுக்கும் வலியைக் கொடுக்க, சிவாத்மிக்கா அவரது கையை அழுத்தினாள்.
“அர்ஜுனோட அப்பாகிட்டயும் நிறைய பேர் நேரடியாவும், இல்ல மறைமுகமாவும் கேலி செஞ்சாங்க.. அவன் என்னிக்குமே வெளிய எல்லார் கூடவும் சிரிச்சு பேசறவன் கிடையாது தான்.. வினய் மட்டும் தான் அப்போவும் அவனுக்கு எல்லாம்.. மனசு விட்டு அவன்கிட்ட தான் எல்லாம் சொல்லுவான்..
ஒருநாள் வேலைக்கு போயிட்டு வந்தவன், ‘என்னோட ஒட்டு மொத்த கனவையும் குழி தோண்டி புதைச்சிட்டாங்கடா.. நான் செய்யாத தப்புக்கு எனக்கு தண்டனை கொடுத்துட்டு இருக்காங்க.. எவ்வளவு கேலி கிண்டலான செய்தி எல்லாம் என்னைப் பத்தி வருது தெரியுமா? பார்க்கவே அவமானமா இருக்கு..
நான் வேலைக்கு போன இடத்துலையும் சில சமயம் அவங்க எல்லாம் என்னை கேலியா பார்க்கற போலத் தோணுது.. என் காது படவே அவங்க எல்லாம் கேலியும் செய்யறாங்க.. எனக்கு ஏன் இந்த நடிக்கணும்ன்னு ஆசை வந்ததுன்னு தெரியல.. இப்போ அதை விட்டு வேற வேலை பார்க்கறதும் எனக்கு கஷ்டமா இருக்கு.. அப்படியே எங்கயாவது வண்டியை கொண்டு போய் இடிச்சிடலமான்னு கூட இருக்குன்னு’ தலைமுடியை பிச்சுக்கிட்டு வெறி வந்தது போல கத்தினான்..
அதெல்லாம் பார்த்து அவங்க அப்பா மனசொடிஞ்சு, கவலைப்பட்டு போய், வேலை செஞ்ச இடத்துலேயே நெஞ்சு வலி வந்து போயிட்டார்..” அந்த நாள் நினைவில் நிர்மலாவின் உடல் அழுகையில் குலுங்க, சிவாத்மிகா எழுந்து அவரை அணைத்துக் கொள்ள, அவளது தோளில் முகம் புதைத்தவரின் தோளை அவள் ஆறுதலாக வருடிக் கொடுக்க,
“அப்பறம் கடவுள் அருளால, அதே ப்ரொட்யூசர் இவன் மேல எந்த தப்பும் இல்லைன்னு தெரிஞ்சு வேற படம் எடுத்து, உடனே ரிலீஸ் பண்ணினார்.. அவனோட கனவு நிறைவேறிச்சு.. அந்தப் படம் இவனுக்கு நல்ல பேரை வாங்கிக் கொடுத்துச்சு.. அந்த வாய்ப்பை பிடிச்சுக்கிட்டு நல்லபடியா பேரெடுக்கணும், நல்லபடியா முன்னேறி வரணும்ன்னு அவன் எந்த ஒரு தப்பும் நடுந்துடாம ரொம்ப ஜாக்கிரதையா அடி எடுத்து வச்சு வரான்.. ஆனா.. அதுவரை போன மானமும், அவனோட அப்பாவும் திரும்ப வருவாங்களா? அதுக்கு அவன் பதில், ‘என்னோட உழைப்பும் வெற்றியும் தான் அந்த இழப்புகளை கொஞ்சமாவது சரி பண்ணும்’ன்னு அடிக்கடி சொல்லுவான்.. அது தான் இப்படி கிடைக்கிற வாய்ப்பை எல்லாம் அவன் வெறித்தனமா பயன்படுத்திக்கறான்..” என்று அவர் சொல்லி முடிக்க, அர்ஜுனின் மேல் அவளுக்கு மதிப்பு உயர்ந்தது.
“இனிமே எல்லாம் நல்லபடியா நடக்கும்மா.. பாருங்க.. சூப்பரா வரப் போறார்.. எல்லாருமே ஹீரோ சார் ஹால்ஷீட் கேட்டு வரிசையில நிப்பாங்க பாருங்க..” என்று அவள் ஆறுதலாகச் சொல்ல, தனது கண்களைத் துடைத்துக் கொண்ட நிர்மலா,
“உன் வாய் முஹுர்த்தம் நல்லபடியா நடக்கட்டும்..” என்றவர், அதோ கடவுளிடம் வேண்டிக் கொள்ள, அப்படியே வேறு பேச்சிற்குத் தாவியது. மனம் விட்டு பேசிக் கொள்ளும் அளவிற்கு அவர்கள் உறவு வளர்ந்திருந்தது.
இப்படியாக ஒரு வாரம் கடந்திருந்த நிலையில், அன்றய தினம் காலையில் நிர்மலா நெடுநேரமாகியும் வராமல் போகவும், சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தவள்,
“அக்கா.. அம்மா இன்னைக்கு எங்கயாவது போறேன்னு சொன்னாங்களா? நேரமாச்சு காலையில இன்னும் காணுமே.. ஒருவேளை, வேலை செய்யற அம்மா வரலைன்னு வேலை எல்லாம் இழுத்து போட்டுக்கிட்டு செய்யறாங்களா?” கவலையுடன் ராதாவிடம் கேட்க,
“நேத்திக்கே சாயந்திரம் தலைவலின்னு சொல்லிட்டு இருந்தாங்க பாப்பா.. நீயும் டயர்டா வரவும் உன்கிட்ட அவங்க சொல்லவே இல்ல.. ஒருவேளை மாத்திரை போட்டு தூங்கறாங்களோ என்னவோ?” ராதாவின் பதிலில்,
“அப்படியா? ஹையோ அம்மாவுக்கு உடம்பு முடியலையோ என்னவோ? இதோ நான் உடனே போய் பார்த்துட்டு வரேன் அக்கா..” என்றவள், அவரைத் தேடி வீட்டிற்குச் சென்றாள். டைனிங் ஹாலில் அமர்ந்து காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்த மாணிக்கத்தைத் பார்த்தவள், அவனது முகமும் சோர்ந்து இருக்கவும், “மாணிக்கம்.. உங்களுக்கு ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” அவள் கேட்கவும்,
“நேத்து சாயந்திரத்துல இருந்தே கொஞ்சம் உடம்பு முடியலைம்மா.. அம்மாவும் காலைல இருந்து எழுந்துக்கவே இல்ல.. கொஞ்ச கவலையா இருக்கும்மா? நானும் ரெண்டு தடவ கதவைத் தட்டிப் பார்த்தேன்.. ‘கொஞ்ச நேரம் படுத்து இருக்கேன்’னு குரல் கொடுக்கறாங்க.. அவங்களுக்கும் உடம்பு முடியலையான்னு தெரியலைம்மா” என்றவன், முடியாமல் எழுந்துக் கொள்ளவும், சிவாத்மிகா பதறிப்போய் நிர்மலாவின் அறைப்பக்கம் திரும்பிப் பார்த்தாள்.
“மாணிக்கம்.. நீங்க பேசாம ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடுங்க.. நான் ராதா அக்காவை சமைச்சுத் தரச் சொல்றேன்.. இன்னைக்கு நீங்க ரெஸ்ட் எடுங்க” என்றவள், அவனுக்கு பணத்தைக் கொடுத்து அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, நிர்மலாவின் அறைக்குச் சென்றாள். நிர்மலா உடல் சூடு தாங்காமல் அனத்திக் கொண்டு படுத்திருக்க, சிவாத்மிகா பதறிப் போனாள்.
“ஹையோ அம்மா.. என்னாச்சு” அவரது அருகில் சென்றவள், அவரது நெற்றியில் கை வைத்துப் பார்க்க, உடம்பு அனலாக கொதித்துக் கொண்டிருக்கவும், பதட்டத்துடன் அவரை மெல்ல எழுப்பினாள்.
“அம்மா.. அம்மா.. என்னாச்சும்மா? ஏன் இப்படி உடம்பு கொதிக்குது? எனக்கு அப்போவே ஒரு போன் பண்ணி இருக்கலாம்ல?” என்று கேட்க, மெல்லக் கண் திறந்துப் பார்த்தவர், அவளைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தார்.
“எனக்கு ஒண்ணும் இல்லைடாம்மா.. நேத்திக்கு ராத்திரி இருந்து திடீர்ன்னு ஜுரமா இருக்குடா சிவா.. ரொம்ப முடியல.. கைல இருந்த மாத்திரை போட்டுக்கிட்டேன்.. ஆனாலும் சரி படல.. தொண்டை எல்லாம் ரொம்ப வலிக்குது.. எச்சை விழுங்கவே கஷ்டமா இருக்கு.. தலையை தூக்க முடியாம பாரமா இருக்கு” மிகுந்த சிரமத்துடன் அவர் சொல்லிக் கொண்டே, மெல்ல எழுந்து அமர முயல, அவருக்கு எழுந்து அமர உதவியவள், ஒரு தலையணையை அவரது முதுகிற்கு கொடுத்து அவரை சுவற்றில் சாய்த்து அமர வைத்தாள்.
“அம்மா உங்களுக்கு எப்பவும் பார்க்கற டாக்டர் யாராவது இருக்காங்களா? ஃபேமிலி டாக்டர் போல? ஏன்னா அவருக்கு உங்களைப் பத்தி நல்லா தெரியும்ல.. அது தான். அவங்க நம்பர் தாங்கம்மா.. நான் உடனே கால் பண்ணி பேசறேன்..” என்றவள், நினைவு வந்தவளாக,
“அம்மா.. மாணிக்கம்க்கும் உடம்பு சரி இல்ல.. நான் அவங்களை ஹாஸ்பிடல்க்கு அனுப்பி இருக்கேன்.. இப்படி எல்லாருக்குமே ஜுரமா இருக்கே.. எனக்கு பயமா இருக்கும்மா..” என்றபடி குழம்பியவள், நிர்மலா பதில் பேச முடியாமல் தலையை பிடித்துக் கொண்டு அமரவும், என்ன செய்வதென்று யோசித்தவள், உடனே அர்ஜுனுக்கு அழைத்தாள்.
அவளது மனம் முழுவதும், இப்பொழுது பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக நிர்மலா பாதிக்கப்பட்டு இருப்பாரோ என்ற பயம் பிடித்துக் கொண்டது. வீட்டில் வேலை செய்து வரும் பெண்மணி இரண்டு நாட்களாக உடல்நிலை சரி இல்லாததுனால் விடுப்பு எடுத்திருக்க, இப்பொழுது மாணிக்கமும், நிர்மலாவும், பாதிக்கப்பட்டு இருப்பது அவளுக்கு பயத்தைக் கொடுத்தது. அதை விட கேட்கும் விஷயங்கள் எதுவும் நல்லதாக இல்லாமல் போகவும், அவளுக்கு உள்ளுக்குள் நடுக்கம் எடுக்கத் துவங்கி இருந்தது..
தனது காலைப் பணியாக, ஷூட்டிங் கிளம்புவதற்கு முன், வழக்கம் போல இன்ஸ்டாக்ராம் பக்கத்தில், ஒரு காதல் பாடலுடன் தனது ரீல்சைப் பதிவு செய்துவிட்டு, சிவாத்மிகாவிற்கு மெசேஜ் அனுப்ப டைப் செய்துக் கொண்டிருந்த நேரம் அவளிடம் இருந்து போன் வரவும், அர்ஜுனின் மனம் துள்ளியது.
‘என்னோட ஸ்வீட்டு, நான் மெசேஜ் அனுப்ப லேட் ஆகிடுச்சுன்னு அவளே கால் பண்ணிட்டா.. அந்த சைடும் ஏதாவது எஃப்பெக்ட் இருக்குமோ? அர்ஜுனே அப்படி மட்டும் இருந்துச்சு.. நீ லக்கிடா..’ என்று மனதினில் சொல்லிக் கொண்டே போனை எடுத்தவன், அவளது பதட்டமான குரலைக் கேட்டதும் எழுந்து நின்றான்.
“அர்ஜுன்.. அம்மாவுக்கு ரொம்ப உடம்பு முடியல.. ரொம்ப ஃபீவரா இருக்கு.. தொண்டைவலி, தலை வலி எல்லாம் சொல்றாங்க அர்ஜுன்.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. மாணிக்கம்க்கும் உடம்பு சரி இல்ல..” என்று அவள் பதற, அவளது குரலில் இருந்த நடுக்கம் அர்ஜுனுக்கும் பயத்தைக் கொடுத்தது.
“என்ன? என்ன சொல்ற? அம்மாவுக்கு என்ன ஆச்சு? சிவா.. சொல்லு.. ஒண்ணும் இல்லையே.. எனக்கு பயமா இருக்கு.. ஏதாவது சொல்லு.. சிவா.. இப்போ ஏதாவது சொல்லப் போறியா இல்லையா? அம்மாவுக்கு என்ன ஆச்சு?” என்று பதட்டப்பட்டவன், அவள் பதில் சொல்வதற்கு முன்பே,
“வினய்.. அம்மாவுக்கு உடம்பு சரி இல்லையாம்.. ஷூட்டிங் எல்லாம் கேன்சல் பண்ணச் சொல்லு.. நாம உடனே ஊருக்குப் போகலாம்..” என்று தொண்டையடைக்க, கண்ணீர் குரலில் அவன் சொல்லவும், அதைக் கேட்டவள் தடுமாறிப் போனாள். அவன் ஷூட்டிங் கேன்சல் செய்வதைப் பற்றிப் பேசவும், அவளது மூளையில் அபாய மணி அடிக்கத் துவங்கியது..
நிர்மலா அவனைப் பற்றிக் கூறியது அனைத்தும் நினைவு வர, தனது நடுக்கத்தைக் கட்டுக்கு மெல்ல கொண்டு வந்தவளுக்கு, மீண்டும் அர்ஜுனுக்கு அப்படி ஒரு நிலை வரக் கூடாது என்ற எண்ணம் மனதினில் நன்றாக மேலோங்க, தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள்.
அதற்குள் அவன் அங்கு ஷூட்டிங் கேன்சல் செய்து, அடுத்த ப்ளைட்டிற்கு டிக்கெட் புக் செய்யுமாறு வினயிடம் சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்கவும், “அர்ஜுன்.. அர்ஜுன்.. இங்க நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க.. ப்ளீஸ் கொஞ்சம் காம் டவுன் ஆகுங்க..” என்று அவள் சத்தமிட்டு அவனை நிதானப்படுத்த,
“என்ன சிவா? அம்மா இப்படி இருக்கும் போது நான் எப்படி அமைதியா இருக்க முடியும்.. எனக்கு இருக்கறது அம்மா மட்டும் தானே..” என்று அவன் உடைந்து அழத் துவங்க, சிவாத்மிகா தவித்துப் போனாள்.
“அர்ஜுன்.. இங்கப் பாருங்க.. நான் சொல்றதைக் கேளுங்க.. அம்மாவுக்கு நீங்க பயப்படற அளவுக்கு எல்லாம் ஒண்ணும் இல்ல.. நான் சொல்றதை கொஞ்சம் நிதானமா கேளுங்க..” என்று அவனை மெல்ல சமாதானப்படுத்தியவள்,
அவன் “சொல்லு..” என்றதும்,
“உங்க பேமிலி டாக்டர் நம்பர் இருந்தா அனுப்புங்க அர்ஜுன்.. நான் பேசறேன்.. டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு நாம ஹாஸ்பிடல் போகனுமா இல்ல வீட்லயே இருக்கலாமான்னு பார்த்துக்கலாம்.. நீங்க லேட் பண்ணாம உடனே அனுப்புங்க ப்ளீஸ்.. அம்மா நல்லா இருக்காங்க.. நான் இங்க தானே இருக்கேன்.. அவங்களை பார்த்துக்கறேன்..” நிதானமாக அவள் சொல்ல, அர்ஜுனுக்கு மூளை மரத்துப் போன உணர்வு..
“எனக்கு ஒண்ணுமே புரியல..” அவள் சொன்ன விஷயத்தை மூளை மீண்டும் ஓட்டிப் பார்க்க, அவனது நிலை புரிந்தவள்,
“அம்மாவுக்கு இப்போ ஜுரம் தான் அர்ஜுன்.. சாதாரண ஜுரமாவும் இருக்கலாம்.. ப்ளீஸ் உங்க பேமிலி டாக்டர் நம்பர் தாங்க.. உண்மையை சொல்லணும்ன்னா.. மனசுக்குள்ள அம்மாவுக்கு கொரோனாவோன்னு பயமா இருக்கு.. நீங்களும் அப்படி பயந்தா நான் இங்க என்ன செய்வேன்? கொஞ்சம் காம் ஆகுங்க.. எனக்கு அம்மாவைப் பார்க்கற டாக்டர் நம்பர் அனுப்புங்க அர்ஜுன்..” மீண்டும் அவள் கேட்கவும்,
“திடீர்ன்னு அம்மாவுக்கு என்ன ஆச்சு? ஒண்ணும் பயம் இல்லையே.. நான் உடனே டாக்டர் நம்பர் அனுப்பறேன்.. கொஞ்சம் அம்மாவைப் பார்த்துக்கோ.. நான் உடனே கிளம்பி வரேன்.. அம்மா எப்படி இருக்காங்க? ரொம்ப முடியலையா? மூச்சுத் திணறல் இருக்கா? ரொம்ப கஷ்டப்படறாங்களா? என்னைக் கேட்கறாங்களா?” அவன் வரிசையாகக் கேட்கவும், அவனது நிலை புரிந்தவள், தன்னை மேலும் நிதானித்துக் கொண்டவள், அவனை வேறு விதமாக சமாதானப்படுத்தினாள்.
“அர்ஜுன் இங்க கொஞ்சம் நான் சொல்றதைக் கேட்கறீங்களா? நான் சொல்றதை பதட்டப்படாம மனசுல எடுத்துக்கோங்க….” அவள் குரல் உயர்த்தவும், அர்ஜுன் அமைதியாக,
“அம்மாவுக்கு மூச்சுத் திணறல் எல்லாம் இல்ல அர்ஜுன்.. ஜுரமும் தொண்டை வலியும் தான் இருக்கு.. நீங்க இப்போ வர வேண்டாம் அர்ஜுன்.. உங்களுக்கு ஷூட்டிங் ப்ரோடோகால் எல்லாம் இருக்கு.. ஒருவேளை அம்மாவுக்கு பாசிடிவ் ஆச்சுன்னா நீங்க வந்தா நீங்களும் தனிமை படுத்திக்கணும்.. சந்தேகத்துல என்ன ஏதுன்னு புரியாம, ஷூட்டிங்ல இருந்த அத்தனை பேரும் தனிமை படுத்திக்கறது போல ஆகும்.. ஷூட்டிங் கேன்சல் செய்யணும்.. அது எல்லாம் இப்போ தேவை இல்லாத பிரச்சனை அர்ஜுன்..
இப்போ அது எல்லாம் வேண்டாம்.. எனக்கு டாக்டர் நம்பர் மட்டும் அனுப்புங்க.. நான் அம்மாவை பார்த்துக்கறேன்.. எப்படியும் நான் ஏற்கனவே அம்மா பக்கத்துல இருக்கறதுனால நானும் தனிமை தான் படுத்திக்கணும்.. டாக்டர் சொல்றதை கேட்டுட்டு நீங்க வரதை பத்தி நம்ம யோசிக்கலாம்.. என்ன சரியா? புரியுதா? இப்போ ஷூட்டிங் எல்லாம் கேன்சல் பண்ண வேண்டாம்.. ப்ளீஸ்.. நான் சொல்றதைக் கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. என்ன பதிலே காணும்?” அவள் குரல் உயர்த்தவும், அர்ஜுன் அமைதியாக நின்றான்.
அவன் அமைதியாக இருக்கவும், மீண்டும் “அஜ்ஜு.. நான் சொல்றது புரியுதா? எப்படியும் நான் இங்க அம்மா பக்கத்துல தான் இருக்கேன்.. மொதல்ல இது கொரோனா தானான்னு தெரியாது.. அதனால டாக்டர்கிட்ட பேசிட்டு முடிவு செஞ்சிக்கலாம்.. நீங்க பதட்டப்படாதீங்க அஜ்ஜு..” என்று அவள் இதமாகச் சொல்லவும்,
“எனக்கு பயமா இருக்கு சிட்டு.. அம்மாவுக்கு ஒண்ணும் இருக்காதுல.. அங்க அம்மா அப்படி இருக்கும்போது நான் எப்படி இங்க நிம்மதியா இருக்க முடியும்? நான் வரேனே..” தாயிடம் குழந்தை ஆதரவுத் தேடி கெஞ்சுவது போல அர்ஜுன் கேட்க,
“இல்ல அஜ்ஜு.. நான் சொல்றதைக் கேளுங்க.. நான் பார்த்துக்கறேன்.. உங்களுக்கு பதிலா இங்க அம்மாவை பத்திரமா பார்த்துக்க நான் இருக்கேன்னு நினைச்சுக்கோங்க.. பயப்படாதீங்க..” என்றவள், அவன் அமைதியாக இருக்கவும்,
“அஜ்ஜு..” என்று மீண்டும் அழைக்கவும்,
“சரிம்மா.. நான் நம்பர் அனுப்பறேன்.. நீ முதல்ல டாக்டர்கிட்ட பேசு.. நானும் அவர்கிட்ட பேசறேன்.. நான் உடனே வினய்ய கிளம்பி வரச் சொல்றேன்..” அர்ஜுன் மனமே இல்லாமல் சொல்ல, சிவாத்மிகா அவனை அதட்டினாள்.
“நான் சொல்லிட்டே இருக்கேன்.. நீங்க என்ன அதையே சொல்லிட்டு இருக்கீங்க.. இப்போ வினய் அண்ணா வந்தாலும் அதே பிரச்சனை தான்.. சொல்லச் சொல்ல கேட்காம அதையே சொல்லிட்டு இருக்கீங்க? நான் உங்களுக்காக தானே சொல்றேன்..” என்று அவனை அதட்டியவள்,
“அர்ஜுன்.. முதல்ல டாக்டர்கிட்ட பேசிட்டு அப்பறம் முடிவு செஞ்சிக்கலாம்.. நான் அம்மாகிட்ட இருக்கேன்னு சொல்றேன்ல.. நீங்க கவலைப்படாதீங்க..” மென்மையான குரலில் அவனை சமாதானம் செய்தவள், அர்ஜுன் டாக்டர் நம்பரை அனுப்பி விட்டு,
“அனுப்பிட்டேன்.. நீ பேசிட்டு சொல்லு..” எனவும்,
“சரி.. நான் பேசறேன்..” என்று போனை அவள் வைத்துவிட, சிவாத்மிகா சொன்னதாக அர்ஜுன் சொன்னதைக் கேட்ட வினய்,
“என்னடா சொல்ற? அங்க மாணிக்கமும் உடம்பு முடியலைன்னா அவ என்ன பண்ணுவா? வேலை செய்யறவங்களும் ரெண்டு நாளா வரலைன்னு அம்மா சொன்னாங்க.. சிவா மட்டும் தனியா எப்படி சமாளிப்பா? இப்போ அம்மாவுக்கு பாசிடிவ் வந்தா சிவாவும் இல்ல தனியா இருக்கணும். அப்போ ராதா தனியா மட்டுவா.. பேசாம நான் கிளம்பவா?” என்று வினய் கேட்கவும்,
“எனக்கும் ஒண்ணும் புரியல.. சிட்டு நம்ம ரெண்டு பேரையும் வர வேண்டாம்ன்னு சொல்றா.. மொதல்ல டாக்டர் வந்து பேசட்டும்.. நாம அப்பறம் டிசைட் பண்ணிக்கலாம்..” என்று அர்ஜுன் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தான்.
சிறிது நேரத்தில் டாக்டரிடம் பேசிவிட்டு வைத்தவள், ராதாவை அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டு, தனது உதவியாளருக்கும் போன் செய்து, அன்றைய வேலைகளை பட்டியலிட்டு சொல்லிவிட்டு, டாக்டருக்காக காத்திருந்தாள்.
தானும் டாக்டருக்கு அழைத்த அர்ஜுன், மீண்டும் அவளுக்கு அழைத்து, “சிட்டு.. நான் டாக்டர்கிட்ட பேசிட்டேன்.. அவர் உடனே எல்லா ஏற்பாடோட வரேன்னு சொல்லிட்டார்.. உனக்கு கஷ்டம் ஒண்ணும் இல்லையே.. உன்னோட பொட்டிக் எல்லாம் பார்க்கணுமே.. நான் வினய்யை வேணா வரச் சொல்லவா? தனியா உன்னால மேனேஜ் பண்ண முடியுமா? நீயும் ஜாக்கிரதையா இரு..” அர்ஜுன் போன் செய்து மனமே இல்லாமல் சிவாத்மிகாவிடம் கேட்க,
“அது எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன் அர்ஜுன்.. எல்லாருக்கும் சொல்லிட்டேன்.. இப்போதைக்கு முக்கியமா நான் நேரா போகணும்னு எந்த வேலையும் இல்ல.. ராதா அக்காவையும் இங்க வர வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்.. அவங்க வெளிய இருந்து பார்த்துப்பாங்க.. இப்போ எனக்கு மாணிக்கத்தை ஹாஸ்பிடல் அனுப்பி இருக்கேன். ஒருவேளை அவரை அப்படியே கவர்மென்ட் ஹாஸ்பிடல்க்கு அனுப்பி இருப்பங்களோ?” அவனிடம் தனது வேலைகளை சொல்லிவிட்டு, மாணிக்கதிற்காக புலம்ப,
“ஆமா சிவா.. சந்தேகம் இருந்தா அங்க தான் அனுப்புவாங்க.. நான் மாணிக்கத்துக்கு போன் பண்ணி கேட்டுக்கறேன்.. நீ கவலைப்படாதே..” அர்ஜுன் அவளை சமாதானப்படுத்த,
“நீங்களும் கவலைப்படாதீங்க.. நான் உங்களுக்கு அப்போ அப்போ போன் பண்ணி அம்மா உடம்பு பத்தி சொல்றேன்.. இப்போ வினய் அண்ணா வந்தாலும், உங்களுக்கு ஷூட்டிங் ஸ்பாட்ல தேவை இல்லாத டென்ஷன் ஆகும்.. நான் என்னால முடியலைன்னா சொல்றேன்.. நீங்க வாங்க.. நான் அம்மாவ பத்திரமா பார்த்துக்கறேன்.. எனக்கு எந்த பிரச்சனை இல்ல.. கவலைப்படாதீங்க அர்ஜுன்.. என் மேல நம்பிக்கை இல்லையா?” அவள் பரிதாபமாகக் கேட்கவுமே, அர்ஜுன் அதற்கு மேல் ஒரு வார்த்தை பேசாமல்,
“சரி ஸ்வீட்டு.. நீயே பார்த்துக்கோ.. உன்னால முடியலைன்னா சொல்லு.. நான் உடனே கிளம்பி வரேன்.. நீயும் மாஸ்க் போட்டுக்கோ.. ஜாக்கிரதை..” என்றவனுக்கு, எப்படி உணர்கிறோம் என்றே தெரியாமல் வினயைப் பார்க்க, அவனது மனம் புரிந்தது போல, வினய் அவனது தோளைத் தட்டிவிட்டு,
“எதுக்கும் ராதா நம்பரை அனுப்பச் சொல்லு.. நம்ம இவள காண்டாக்ட் பண்ண முடியலைன்னா ராதா கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கலாம்.. எதுக்கும் நம்மகிட்ட இருக்கட்டும்..” என்று வினய் சொல்லவும்,
“இதோ உடனே அக்கா நம்பர் அனுப்பறேன்..” என்றவள், உடனே அனுப்பிவிட்டு,
“அர்ஜுன்.. டாக்டர் வந்துட்டாங்க.. நான் அவரைப் பார்க்கறேன்..” என்று போனை வைத்துவிட, வினயும், அர்ஜுனும் அவளது போனுக்காக காத்திருந்தனர்.
அர்ஜுனின் வேண்டுகோளின் படி, அவர் கையேடு டெஸ்டிற்கு லேபில் இருந்து ஆளை அழைத்து வந்திருக்க, நிர்மலாவை பரிசோதனை செய்துவிட்டு, எதற்கும் சிவாத்மிகாவையும் அவர் பரிசோதனை செய்துக் கொள்ளச் சொல்ல, அவளும் செய்துக் கொண்டாள்.
சில மாத்திரைகளை பரிந்துரை செய்துவிட்டு, சில பல அறிவுரைகளையும், தெர்மாமீட்டர், ஆக்ஸிமீட்டர் என்று அனைத்தையும் சிவாத்மிகாவிடம் கொடுத்து, அதை எப்படி உபயோகப்படுத்துவது என்று சொல்லிவிட்டு டாக்டர் விடைபெற்றுச் செல்ல, சிவாத்மிகா ராதாவிடம் பழங்கள் மற்றும் மருந்துகள் வாங்கிக் கொண்டு வரச் சொல்லிவிட்டு, அர்ஜுனுக்கு அழைத்து விஷயத்தைக் கூறினாள்.
அவள் கூறிய அனைத்தையும் கேட்டுக் கொண்டவன், “சிட்டு.. திரும்பத் திரும்ப கேட்கறேன்னு தப்பா எடுத்துக்காதே.. நீ மேனேஜ் பண்ணிடுவியா? உனக்கு ஒண்ணும் கஷ்டமில்லையே.. அங்க மாணிக்கமும் இல்ல.. வேலை செய்யறவங்களும் இல்ல..” அர்ஜுன் மீண்டும் கேட்கவும்,
“ஏன் அர்ஜுன்.. அம்மா அப்பா இல்லாம ஹாஸ்டல்ல வளர்ந்தவ தானே.. அவளுக்கு எங்க அம்மாவ என்ன பார்த்துக்கத் தெரியும்? முடியும்ன்னு கேட்கறீங்களா?” அவன் மீண்டும் மீண்டும் அவன் கேட்கவும், சட்டென்று தனது நிலை அவளுக்கு நினைவு வரவும், சிவாத்மிகா கண்ணீருடன் கேட்டுவிட, அர்ஜுனுக்கு அந்த வார்த்தைகள் சுளீரென்று இருந்தது.
அவன் பதில் பேசுவதற்கு முன்பே, “ஒரு வாரமா தானே இவளுக்கு அம்மாவைத் தெரியும்.. இவ எப்படி பாசமா அம்மாவைப் பார்த்துப்பான்னு நினைக்கறீங்களா? அப்படி இல்ல அர்ஜுன்.. எனக்கு அம்மாவை கொஞ்ச நாளா தான் தெரியும்.. ஆனா.. என்னவோ தெரியல அம்மாவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. எங்க அம்மாவா இருந்தா நான் செய்வேன் இல்ல அர்ஜுன்? அம்மா கூட ஒரு வாரம் தான் பழகி இருந்தாலும் நான் மனசார தான் அம்மான்னு கூப்பிடறேன்.. அப்படி தான் நினைச்சு செய்யறேன் அர்ஜுன்..” அவளது குரல் உடைய, அர்ஜுன் தவித்துப் போனான்.
“சிட்டு.. உன் மேல நம்பிக்கை இல்லாம கேட்கலடாம்மா.. எப்படி சொல்றது.. உனக்கு பொட்டிக் பார்த்துக்கணும்.. வீட்ல வேலை செய்யறவங்களும் இல்லன்னா கஷ்டம் இல்லம்மா.. அது தான் கேட்டேன்.. இனிமே இப்படி நான் உன்னைக் கேட்டா என்னை எதாலையாவது அடி என்ன? நீயே அம்மாவைப் பார்த்துக்கோ.. உனக்கு இல்லாத உரிமையே இல்ல.. சரியா? இப்போ போய் நல்லா சாப்பிட்டு நீயும் ரெஸ்ட் எடு.. நான் திரும்ப கொஞ்ச நேரத்துல கூப்பிடறேன்..” விளையாட்டாகவே பேசிவிட்டு, போனை வைத்தவன் கவலையுடன் வினயை பார்க்க, வினய் வீட்டின் வாட்ச்மேனிற்கு அழைத்து சில வேலைகளைச் சொல்லிவிட்டு, ராதாவிற்கு அழைத்தான்.
அப்பொழுது தான் மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வந்தவள், போன் அடிக்கவும், புது நம்பராக இருக்க, யோசனையுடன் போனை எடுத்து காதிற்கு கொடுத்தாள்.
“ராதா.. நான் வினய் பேசறேன்.. உங்க பக்கத்து வீடு..” வினய் தன்னை அறிமுகம் செய்துக் கொள்ள,
“ஹான்.. சொல்லுங்கங்க.. என்னாச்சு? ஏதாவது வேணுமா?” அவள் குழப்பமாகக் கேட்க,
“இல்ல ராதா.. சிவா போன் பண்ணி அம்மாவுக்கு உடம்பு முடியலைன்னு சொன்னா.. ஏதாவது வாங்கணும்னா நீங்க கடைக்கு எல்லாம் அலைய வேண்டாம்.. வாட்ச்மேன்கிட்ட என்ன வேணுமோ அதை சொல்லுங்க.. வாங்கிட்டு வந்து தருவாங்க.. சிவா அங்க அம்மா கூட இருக்கா.. அவ வீட்டுக்கு வர முடியாதுல.. நீங்க தனியா இருப்பீங்களா? அவளும் இங்க வந்தா ரெண்டு வீடும் தனிமை படுத்திருவாங்க.. அது ரொம்ப கஷ்டம் ஆகிடும்.. நீங்களும் அனாவசியமா வெளிய எல்லாம் அலைய வேண்டாங்க..” வினய் அக்கறையாக சொல்லிக் கொண்டிருக்க,
“சரிங்க.. நான் பார்த்துக்கறேன்.. இங்க தானே பக்கத்து வீட்ல பாப்பா இருக்கா..” ராதா சொல்லவும்,
“ஆமா.. ஆனாலும் நீங்க தனியா எல்லாம் செய்யணும்ல அது தான்.. நான் வாட்ச்மேன தேவையானது எல்லாம் வாங்கிக் கொடுத்து, ரெண்டு வீட்டையும் பார்த்துக்கச் சொல்லி இருக்கேன்.. உங்களுக்கோ சிவாவுக்கோ கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் சொல்லுங்க.. நான் உடனே வந்துடறேன்.. சிவாவைக் கேட்டா சொல்ல மாட்டா.. நான் கொஞ்சம் உங்களுக்கு அப்போ அப்போ போன் செஞ்சு நிலவரம் கேட்டுக்கறேன்.. உங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே..” வினய் கேட்கவும்,
“ஹையோ அதெல்லாம் இல்லைங்க.. நீங்க பண்ணுங்க.. நான் சொல்றேன்.. பாப்பா அம்மாவை பத்திரமா பார்த்துக்குவா.. நீங்க கவலைப்படாதீங்க.. நான் வெளிய இருந்து அவளுக்கு தேவையானது எல்லாம் செஞ்சித் தரேன்.. நீங்க பயப்பட வேண்டாம்.. நாங்க பார்த்துக்கறோம்..” ராதாவும் அவனுக்கு ஆறுதல் சொல்லவும், அர்ஜுனுக்கு நிம்மதியாக இருந்தது..
“அக்கா.. ரொம்ப தேங்க்ஸ் அக்கா.. சிவாகிட்ட நான் திரும்பத் திரும்ப கேட்டா அவ ஃபீல் பண்றா.. அது தான் உங்களை கூப்பிட்டோம்.. அவளும் தனியா அங்க வீட்டைப் பார்த்துக்கணும்ல.. அது தான் மனசு கொஞ்சம் கிடந்து அடிச்சுக்குது.. நாங்க போன் பண்ணி வாட்ச்மேன் கிட்ட சொல்லிட்டோம்..
ப்ளீஸ்.. சிட்டுவும் பத்திரம் ராதா அக்கா.. அவளை மாஸ்க் போடச் சொல்லி இருக்கேன்.. போடறாளான்னு கொஞ்சம் பார்த்துக்கோங்க.. கஷாயம் எல்லாம் எப்படி போடறதுன்னு அவளுக்கு சொல்லிக் கொடுங்க.. குடிக்கச் சொல்லுங்க.. நிறைய பழம் எல்லாம் சாப்பிடணும்..” அர்ஜுன் கவலையுடன் பேசிக் கொண்டே போக, ராதா அவனது வார்த்தைகளைக் கேட்டு வாயடைத்துப் போனாள்.
அவன் பேசியதை அவள் அசைப் போட்டுக் கொண்டிருக்க, “அக்கா.. அக்கா..” அவளிடம் பதில் இல்லாமல் போகவும் அர்ஜுன் பலமுறை அழைக்க,
“ஹான் இருக்கேன் தம்பி..” என்ற ராதா,
“சரி தம்பி.. நான் பார்த்துக்கறேன்.. நீங்க கவலைப்படாம இருங்க.. என்ன அவளை கஷாயம் குடிக்க வைக்கிறது தான் கஷ்டம்.. அடுத்த தடவ பேசும்போது நீங்க ஒரு வார்த்தை கண்டிப்பா சொல்லிடுங்க.” என்றவளிடம்,
“சரி சொல்றேன் அக்கா.. நீங்க அவளையும் கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோங்க..” என்றவன், போனை வினயிடம் தர,
“சரி ராதா நான் அப்போ அப்போ போன் பண்றேன்..” என்ற வினய், போனை வைத்து விட்டு, கவலையுடன் அமர்ந்திருந்த அர்ஜுனின் தோளைத் தட்டிவிட்டு, அவனுக்கு ஷூட்டிங்கிற்குத் தேவையானதை எடுத்து வைக்கத் துவங்கினான்.