என் விழியில் நீ இருந்தாய்

IMG_20211105_201017-347045b8

 

காதல் மன்னனா நீயும் கண்ணனா…

நாளும் ஓர் அலங்காரமா…

தோழி மெல்லத்தான் சேதி சொல்லத்தான்

தோன்றினேன் அவதாரமா…

 

டிரெண்டிங்கான பாடல் உச்சஸ்தாயியில்  ஒலிக்க, கண்டிப்புக்குப் பெயர் போன அந்த லேடீஸ் ஹாஸ்டல் நள்ளிரவிலும் ஜகஜோதியாய் காட்சியளித்தது.

அணிந்திருந்த நீளமான லெஹேங்கா பாவாடையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இடையை வளைத்துப் பாடலுக்கேற்ப ஆடிக் கொண்டிருந்தாள் மதுஜா.

உடன் ஆடிய பெண்களின் ஆரவாரமும் விசில் சப்தமும் அந்த ஹாஸ்டலையே கலகலக்க வைத்துக் கொண்டிருந்தது.

கல்லூரி விடுதி வாழ்வின் இறுதிநாள் கொண்டாட்டம் கோலாகலமாய் நடந்து கொண்டிருந்தது. எப்போதும் கண்டிப்பாய் இருக்கும் ஹாஸ்டல் வார்டன் ரோசாலியா கூட இவர்களின் கொண்டாட்டத்துக்கு பச்சைக் கொடி காட்டியிருக்க, அலப்பரைகள் கொஞ்சம் ஓவராய்தான் இருந்தன.

மதுஜா இருபத்து மூன்று வயது அழகுப்புயல். கதாநாயகிக்குரிய லட்சணங்கள் அவளிடம் அபரிமிதமாகவே இருந்தன.

கடந்து செல்பவரை ஒருமுறையேனும் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு. இளமஞ்சள் நிறமும் நீண்டு அடர்ந்த கூந்தலும் கேரளப் பாரம்பர்யம் கொண்ட அவளது தாய் சுப்ரஜாவைக் கொண்டு அவளுக்கு வந்திருக்க. முகஜாடை தந்தையை உரித்து வைத்திருந்தாள்.

 தந்தை மகாதேவன் தமிழர். அவளது அன்னை சுப்ரஜாவை இளவயதில் விரட்டி விரட்டி காதல் சொல்லி, தன் காதலால் மூழ்க வைத்து மணந்தாராம் மகாதேவன். அன்னை தந்தையைப் பற்றி அவளுக்கு சொல்லப்பட்டவைகளில் இதுவும் ஒன்று.

ஆம்! சொல்லப் பட்டவைதான். விபரம் அறியும் முன்பே பெற்றோரை இழந்தவள் அவள்.

சுப்ரஜாவின் அக்கா மஞ்சுளா மற்றும் அவளது கணவன் மாதவனின் பொறுப்பில் வளர்ந்தவள்.

‘பொறுப்பில்’ அவ்வளவே… பாசமோ நேசமோ அவர்களிடம் இருந்து கிடைத்தது இல்லை. கண்டிப்பும் கட்டுப்பாடும் காவல்களும் மட்டுமே அவர்களிடம் மதுஜா அதீதமாய் உணர்ந்தவை.

ஐந்து வயது முதலே ஏற்காட்டில் உள்ள பெயர் போன உண்டு உறைவிட பள்ளியில் சேர்த்துவிட… உயர்கல்வி வரை அங்கே படித்து முடித்தவள், கடந்த ஐந்து வருடங்களாக சென்னையில் வாசம். புகழ் பெற்ற கல்லூரியில் முதுகலை பட்டமும் பெற்றுவிட்டாள்.

ஐந்து வயதில் இருந்து இப்போதுவரை ஹாஸ்டல் ஹாஸ்டல் ஹாஸ்டல் மட்டுமே.  பள்ளி கல்லூரி விடுமுறை தினங்களில் கூட வீட்டுக்கு அவளை அழைப்பது அரிது.

தவிர்க்க முடியாத தருணங்களில் மட்டுமே புதுக்கோட்டையில் உள்ள அவளது வீட்டுக்கு அவளை அழைப்பர்.

ஆம்! அவளது வீடுதான். வீடு என்று சொல்வதைக் காட்டிலும் மாளிகை என்று சொல்வதே சாலப் பொருந்தும். கணக்கில் அடங்காத ஏராளமான சொத்துக்களுக்கு சொந்தக்காரி.

சொத்துக்களைப் பற்றி நினைத்தாலே தன்னைமீறி அவளது முகத்தில் வெறுப்பு படியும். ‘அதற்காகத்தானே அவளது வீட்டுக்கு கூட சுதந்திரமாய் வந்து போக முடியாதபடி ஹாஸ்டலில் வைத்தே வளர்க்கின்றனர்’ கசப்பாய் எண்ணிக் கொள்வாள்.

அவள் கற்றுக் கொள்ளாத கலைகளே இல்லை. பாட்டு நடனத்தில் ஆரம்பித்து ஜூடோ கராத்தே வரை அவ்வளவும் பயின்றிருக்கிறாள்.

பின்னே விடுமுறை நாட்களில் என்னதான் செய்வதாம். அந்தப் பயிற்சிகளுக்கென விடுதி வசதியோடு கூடிய பாடசாலைகளில்தான் அவளது விடுமுறைகள் கழியும்.

மைனர் பெண்ணாக இருந்தவரை வருடம் ஒருமுறை வக்கீல் வந்து அவளைப் பார்த்துவிட்டு செல்ல வரும்போது மட்டுமே ஊருக்குப் போக அனுமதி. அதுவும் பெரியப்பா வந்து அழைத்துச் சென்றுவிட்டு அவரே கொண்டுவந்தும் விட்டுவிடுவார்.

ஊருக்கு செல்லும் நாட்களை அவள் பெரிதாய் ரசித்ததும் இல்லை. “அங்கே நிற்காதே! இங்கே நிற்காதே! வெளியே போகாதே! என்பதில்  தொடங்கி வெளி மனிதர்கள் ஒருவரையும் பார்த்து பேசி அவள் பழகிவிடாதபடிக்கு அவர்களது கட்டுப்பாடுகள் தொடரும்.

அதற்கு விடுதியே பரவாயில்லை என்று தோன்றிவிட ஊருக்குச் செல்ல அவளும் பெரிதாய் ஆர்வம் காட்டியதில்லை.

பதினெட்டு வயது பூர்த்தியான போது அனைத்து சொத்துப் பத்திரங்களுக்கும் வக்கீல் முன்னிலையில் பெரியம்மாவுக்கு பவர் எழுதிக் கொடுத்த பிறகு அதுவும் நின்று போனது.

பெரியம்மா மஞ்சுளாவுக்கு இரண்டு பிள்ளைகள். பெரியவன் பிரசாந்த் இளையவள் பிரவீணா… இருவருமே இவளுக்கு ஒன்றிரண்டு வயது மூத்தவர்கள்தான். அவர்களோடு சேர்ந்து பழகக்கூட மதுவுக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைத்ததில்லை.

ஆனால், இருவருமே இவள் மீது மிகுந்த பாசம் உடையவர்கள்… அதுமட்டும்தான் அவளது ஒரே ஆறுதல்.

கல்லூரி படிப்பு முடியும் முன் ஒரிரு மாதங்களுக்கு முன்பே அவளை அலைபேசியில் அழைத்த மஞ்சுளா,

“மது, அடுத்து என்ன படிக்கப் போற? இந்த லீவ்ல என்ன கத்துக்கப் போற? சொன்னா அதுக்கேத்த ஏற்பாடெல்லாம் செய்யலாம்.”

“இ… இல்ல பெரியம்மா நான் மேல எதுவும் படிக்க விரும்பல.”

“ஓ… அப்ப உனக்கு பாஸ்போர்ட் விசா எல்லாம் ரெடி பண்றேன். ஆசைப்பட்ட வெளிநாட்டுக்கு போயி நல்லா சுத்திப் பாரு. நான் உனக்கேத்த மாதிரி மாப்பிள்ளை பார்க்கறேன். மாப்பிள்ளையும் வெளிநாட்லதான் பார்க்கனும்னு நினைச்சிருக்கேன்.”

பெரியன்னை பேசப்பேச நெஞ்சு காந்தியது அவளுக்கு, ‘உள்நாட்டுல ஒதுக்கியே தனியா வச்சு வளத்துட்டு இப்ப நாடுகடத்த பிளான் போடுறீங்களா?’ தனக்குள் எரிச்சலாய் நினைத்தவள்,

“அஞ்சு வருஷமா இந்த ஹாஸ்டலை விட்டு எங்கயும் போகாம இருக்கேன் பெரியம்மா. இப்பகூட ஊருக்கு வான்னு கூப்பிட மாட்டீங்களா?” தன்னை மீறி கேட்டிருந்தாள். சுய பட்சாதாபத்தில் கண்கள் கலங்கி குரல் உடைந்தது.

பெரியன்னையின் பதில் சொல்லாத மௌனம் மனதை மேலும் அறுக்க…

“பிரவீக்கா ஃபோன் பண்ணா. அவளுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகியிருக்காம். அதைக்கூட நீங்க யாருமே எனக்குச் சொல்லல.

அவ கல்யாணத்துக்குக் கூட என்னை வரச் சொல்ல மாட்டீங்களா? சர்க்கஸ்ல வளர்க்கற மிருகத்துக்குக்கூட கொஞ்சம் சுதந்திரம் இருக்கும் பெரியம்மா. எனக்கு அதுகூட இல்லையா?” என்ன முயன்றும் தேம்பலை அடக்க முடியாமல் போக அலைபேசியை அணைத்திருந்தாள்.

என்ன நினைத்தும் மனதே ஆறவில்லை. இப்படி வளர்ப்பதற்கு பதில் விபரம் அறியா வயதிலேயே கழுத்தைத் திருகித் தன்னை கொன்றிருக்கலாம் இவர்கள்…

உள்ளூர கோபம் கனன்ற போதும், பெரியன்னை குடும்பத்தை முழுதாய் வெறுக்கவும் முடிந்ததில்லை அவளால்.

அவர்களிடம் கண்டிப்பை உணர்ந்திருக்கிறாளே தவிர ஒருபோதும் வெறுப்பை உணர்ந்ததில்லை.

அதேபோல பாசத்தை உணர்ந்ததில்லையே தவிர கடமைக்காகத்தான் தன்னை வளரக்கிறார்கள் என்றும் எண்ண முடியவில்லை.

புகழ்பெற்ற பள்ளியில் சற்றும் வசதி குறையாமல் படிக்க வைத்ததோடு, சகல விதமான கலைகளையும் அதற்கென இருந்த சிறப்பான பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெறவும் வைத்திருந்தனர்.

அவள் பயின்ற கல்லூரியும் மிகப் புகழ்பெற்ற கல்லூரி… கல்லூரி விடுதி வாசத்திலும் எந்த விதத்திலும் வசதிக் குறைவோ, அசௌகரியமோ எதுவுமே இருந்ததில்லை அவளுக்கு.

உடுத்தும் உடையிலிருந்து பயன்படுத்தும் பொருட்கள் வரை அத்தனையும் முதல் தரம்.

எதையும் வாய் திறந்து அவள் கேட்க வேண்டிய அவசியமே இராது. அவளுக்குத் தேவையானவை அனைத்தும் அவளிடம் வந்து சேரும்.

பணத்தைத் தண்ணீராய் செலவழித்துதான் தன்னை வளர்க்கின்றனர், படிக்க வைக்கின்றனர் என்பது புரியாத அளவுக்கு சிறுகுழந்தை இல்லை அவள்.

படிக்கவே வைக்காமல் வீட்டோடு வைத்து தற்குறியாய் தன்னை வளர்த்திருந்தாலும் யாரும் கேட்பார் கேள்வி இல்லை என்பதும் புரிந்துதான் இருந்தது அவளுக்கு.

பதினெட்டு வயது ஆனதுமே மிரட்டி கையெழுத்து வாங்கியிருந்தால் கூட பெரிதாய் எதிர்ப்பின்றி கேட்ட இடத்தில் கையெழுத்து இட்டு கொடுத்திருப்பாள்தான்.

ஆனால் அப்படியெல்லாம் எதுவுமே செய்யாமல், எதற்காக இப்படி ஒளித்து வைப்பது போல, தன்னை ஊருக்கே வரவிடாமல் யாரிடமும் காட்டாமல்  வளர்க்க வேண்டும்?

எனக்கு யாராலாவது ஆபத்து ஏற்படும் என்று பயப்படுகிறார்களா?

எதுவுமே தெரியாது? எதையும் அவர்களிடம் கேட்டாலும் பதில் வராது… பெரியப்பாவிடம் பேசவே முடியாது. அப்படியே கேட்டாலும் மெல்லிய புன்னகை தவிர எதையும் அவரிடம் இருந்து பெற முடியாது.

பெரியம்மாவோ கேட்கவே வேண்டாம்… தேவையில்லா விபரங்கள் உனக்கு எதற்கு? அடுத்து என்ன படிக்கப் போகிறாய் என்று பேச்சை கத்தரித்து விடுவார்.

சற்று இயல்பாய் அவளோடு பேசும் ஜீவன்கள் பிரவீணாவும் பிரசாந்தும்தான். அவர்களுக்கும் பெரிதாய் எந்த விபரங்களும் தெரிந்திருக்கவில்லை.

“இங்க பாரு… நீ வெளியூர்ல படிக்கிற. நாங்க உள்ளூர்ல படிக்கிறோம். அவ்வளவுதான் வித்தியாசம்… மத்தபடி நாங்களுமே வீட்டை விட்டு அநாவசியமா எங்கயும் போக மாட்டோம். யார் கூடவும் பேசவும் மாட்டோம்.

உனக்கு எப்படி எங்கயுமே வெளிய போக முடியாதபடி கண்டிப்பான ஹாஸ்டல்ல வச்சிருக்காங்களோ அதேபோல  எங்க கூடவே நம்ம ஆளுங்க யாராவது எப்பவுமே பாதுகாப்புக்கு இருப்பாங்க. எங்க போனாலும் கூடவே வருவாங்க.

அப்படி பார்த்தா நீ ஹாஸ்டலுக்கு உள்ள  நல்லா சுதந்திரமாதான் இருக்க.” பிரவீணாவின் புலம்பல் இவளுடையதை விட கூடுதலாய் இருக்கும்.

ஆனால்… என்ன இருந்தாலும் அவர்கள் அவர்களுடைய பெற்றோர் அரவணைப்பில் வளர்கிறார்களே… நான்தானே தனியாய் அநாதையாய் வளர்கிறேன்… நினைக்கையில் மனம் வெம்பிப் போகும் மதுவுக்கு.

ஆனால் இதுதான் நிதர்சனம். யாரிடமும் அன்பைக் கேட்டுப் பெற முடியாது. அவர்கள் ஒட்டாமல் தள்ளி நின்று தன்னை வளர்க்கும் போது, தானும் அதுபோலவே ஒட்டாமல் தள்ளி நின்று கொள்வோம் என்று முடிவெடுத்தவள் அதன்பிறகு பெரிதாய் இவற்றையெல்லாம் நினைத்து மருகுவதில்லை.

ஆனால் கல்லூரி காலம் முடியும் தருவாயில் கூட ஊருக்கு அழைக்காதது மட்டுமல்லாமல், உடன்பிறந்தவளாய் இல்லாது போனாலும் தன்மீது பிரியம் காட்டும் சகோதரியின் திருமணத்துக்குக்கூட  அழைக்காதது வெகுவாய் பாதித்திருந்தது அவளை.

‘போகட்டுமே! யாருமே எனக்குத் தேவையில்லை. சொத்துக்கள்தான் அவர்களது முக்கியம் என்றால் அனைத்தையும் அவர்கள் முகத்தில் விட்டெறிந்துவிட்டு வெளியேறிவிட வேண்டும்.

என்னுடைய படிப்பு எனக்கு இருக்கிறது. ஏதேனும் வேலையில் அமர்ந்து நல்ல வாழ்க்கை வாழ என்னால் முடியும். பாழாய் போன சொத்துக்களால் எனக்கு என்ன கிடைத்தது தனிமையைத் தவிர?

இனியாவது எல்லாவற்றையும் துறந்துவிட்டு சுதந்திரமாய் வாழ வேண்டும். அவர்கள் அழைக்காவிட்டாலும் பரவாயில்லை, பரிட்சை முடிந்ததும் ஊருக்குச் சென்று தெளிவாய் அனைத்தையும் பேசிவிட வேண்டும். தீர்க்கமாய் எண்ணிக் கொண்டாள்.

தனக்கென்று ஒரு வேலை, நல்லவனாய் மனதுக்குப் பிடித்தவனாய் பார்த்து ஒரு திருமணம். எளிமையாய் இருந்தாலும் அளவிலா அன்பும் காதலுமாய் ஒரு வாழ்க்கை. இவை மட்டும்தான் அவளது ஆசை.

தனக்கென வருபவன் தன்மீது அளவிலா காதலோடும் பாசத்தோடும் இருக்க வேண்டும். இத்தனை வருடங்களாய் இழந்த அன்பை வட்டியும் முதலுமாய் அவன் மூலமாய்தான் பெற வேண்டும். தானும் அவனோடு மனம் ஒன்றி நேசத்தோடும் பாசத்தோடும் வாழ வேண்டும்.

எல்லா பெண்களைப் போல நியாயமான ஆசைகள்தான். அவளுக்கும் கனவுக் காதலன் உண்டு. எப்படியெல்லாம் அவனோடு வாழ வேண்டுமென்ற கற்பனைகள் உண்டு.

பெரியம்மாவின் கட்டுப்பாட்டிலே இருந்தால் பணத்துக்காக வரும் எவனையாவது திருமணம் செய்ய வேண்டியிருக்கும். மீண்டும் அடிமை வாழ்வுதான்… ம்கூம் கூடாது… இந்த முறை தெளிவாய் அவர்களோடு பேசி நிரந்தரமாய் வெளியேறிவிட வேண்டும்.

இவர்களது பாதுகாப்பும் வேண்டாம், கட்டுப்பாடுகளும் வேண்டாம், பாராமுகமும் வேண்டாம்… நினைத்தபடி வாழும் சுதந்திரம் மட்டும் போதும்… மனதோடு எண்ணிக் கொள்வாள்.

எதிர்பாராத விதமாக பரிட்சைகள் முடிய சில நாட்களே இருந்தபோது அவளுக்கு ஃபோன் செய்த அவளது பெரியன்னை பரிட்சை முடிந்த அன்று பெரியப்பா வந்து அழைத்துச் செல்வார் தயாராக இரு என்று கூறியிருக்க, இதோ இன்று கல்லூரி விடுதியின் கடைசி தின கொண்டாட்டத்தில் ஆரவாரமாய் ஆடிக் கொண்டிருக்கிறாள்.

கொண்டாட்டத்திற்கு காரணமும் இருந்தது. கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி நல்ல வேலையும் உறுதியாகியிருந்தது அவளுக்கு.

இனி பெரியம்மாவிடம் தெளிவாய் பேசிவிட்டு தன் வழியைத் தானே பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

அவர்களே வரச்சொன்னது ஒரு சந்தோஷம் என்றால், சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்ளப் போவது கூடுதல் சந்தோஷம்.

யாருக்கும் பாதகம் இல்லாதபடி நல்லவிதமாகவே அவர்களோடு பேசி, தனது  வழியைத் தானே பார்த்துக் கொள்ள வேண்டும்.

மனதின் உற்சாகம் உடலில் பிரதிபலிக்க,

“மாலை டம் டம் மஞ்சர டம் டம்
மாத்து அடிக்க மங்கள டம் டம்
ஓல டம் டம் ஒதுக்கு டம் டம்
ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம்”

பாடல் வரிகளுக்கேற்ப ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தவளின் காதில் சக தோழி ஒருத்தி வந்து ஏதோ ரகசியம் பேச…

“இப்பவா…? என்னாவாம்…? என்ன விஷயம்…?” தோழியிடம் வினவியவளின் முகத்திலும் ஆயிரம் கேள்விகள்.

 

தொடரும்.