மாயாவின் பேச்சைக் கேட்டு சித்தார்த் திகைத்துப்போய் நின்று கொண்டிருக்க, கௌசிக் மற்றும் கௌசல்யா ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டே, “அம்மா, மாயா உங்க பையனுக்கு சரியான நோஸ்கட் கொடுத்துட்டு போயிட்டா. இனிமேலாவது உங்க பையனை ரொம்ப வாய் பேச வேண்டாம்னு சொல்லி வைங்க” என்று விட்டு அங்கிருந்து சென்று விட, சாவித்திரி சிறு தயக்கத்துடன் சித்தார்த்தை திரும்பிப் பார்த்து விட்டு எதுவும் பேசாமலயே அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தார்.
ஒரு சில நொடிகள் அங்கே என்ன நடக்கிறது என்று கூட புரியாமல் திகைத்துப்போய் நின்று கொண்டிருந்த சித்தார்த் சிறிது நேரம் கழித்து தன்னை சுதாரித்துக் கொண்டு இதற்கு முன்பு சந்தித்தே இல்லாத ஒரு நபர் மீது எதனால் தனக்கு இந்தளவுக்கு வெறுப்பு வர வேண்டும் என்று சிந்தனையுடனேயே தன் அறைக்கு வந்து சேர்ந்திருந்தான்.
ஒரு சில நிமிடங்கள் அந்த நிகழ்வைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவன் பின்னர் தீர்மானமாக முடிவெடுத்துக் கொண்டு இனி தான் இங்கே வந்திருக்கும் வேலையில் மாத்திரம் தன் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்துக் கொண்டவன் நாளை தான் என்ன என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டத் தொடங்கினான்.
இங்கே சித்தார்த் தன் நாளைய நாளுக்கான திட்டத்தை மும்முரமாக நீட்டிக் கொண்டிருந்த தருணம், மறுபுறம் மாயா தனது அறை ஜன்னல் அருகே அமர்ந்து கொண்டு வானில் உலா வந்து கொண்டிருந்த நிலவைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மாயா இன்னும் ஐந்து நாட்களில் இருபத்து மூன்று வயதை நெருங்கப் போகும் இளம்பெண்.
மாநிறத்திற்கும் சற்று அதிகமான நிறத்துடன், சற்று பூசினாற் போல தேகம் கொண்டவள் விழிகள் மாத்திரம் எப்போதும் தன்னிடமிருந்து தொலைந்த எதோ ஒன்றை தேடுவது போலவே இருக்கும்.
அவளுக்கு நன்றாகப் படித்து ஒரு பெரிய பதவியில் இருக்க வேண்டும், தன் தாய், தந்தையை தன் உழைப்பில் வெகு சந்தோஷமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பல கனவுகள் இருந்தது, காலத்தின் கோலம் அந்த கனவுகள் எல்லாம் இப்போது உண்மையாகவே கனவாகவே போய் விட்டன.
மூன்று வருடங்களுக்கு முன்பு அவளது வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட அந்த ஒரு சம்பவத்தினால் அவளது அன்னையின் உயிர் பிரிந்தது மட்டுமின்றி, அவளது ஒரே உடன்பிறப்பான அவளது அண்ணனும், தன் மனைவியுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்.
அவளுக்கு இப்போது இந்த உலகத்தில் சொந்தம் என்று சொல்லிக் கொள்ள அவளது தந்தை மாத்திரமே இருக்கிறார்.
என்னதான் நடந்த நிகழ்வுகளை எல்லாம் மறந்து ஒரு இயல்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அவள் முயற்சி செய்தாலும் ஒவ்வொரு நாள் இரவிலும் அவளுக்கு கிடைக்கும் தனிமை அவளது கடந்த கால வாழ்க்கையை அவளை நினைக்க விடாமல் தடுத்ததே இல்லை.
இன்றும் வழமை போல தன் வாழ்க்கையை புரட்டிப் போட்ட அந்த சம்பவத்தை எண்ணி முற்றிலும் களைத்துப் போனவளாக தன் அறையில் அவள் அமர்ந்து கொண்டிருந்த தருணம், “அம்மும்மா” என்ற குரல் ஈனஸ்வரத்தில் ஒலிக்க, அவசர அவசரமாக தன் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு அந்தக் குரல் வந்த புறம் ஓடிச் சென்றவள் அறையின் ஒரு மூலையில் கட்டிலில் படுத்துக் கிடந்த தன் தந்தையின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
“என்னாச்சுப்பா? ஏதாவது வேணுமா?” மாயாவின் கேள்விக்கு மெல்ல மெல்ல ஆமென்று தலையசைத்தவர் சற்று தள்ளி வைக்கப்பட்டிருந்த நீர் ஜாடியை நோக்கி தன் கையைக் காட்ட, அந்த ஜாடியில் இருந்து நீரை ஒரு டம்ளரில் எடுத்து வந்தவள் தன் தந்தையின் தலையை மெல்ல நிமிர்த்தி அவருக்கு அந்த நீரைப் புகட்டி விட்டாள்.
அவர் நீரைக் குடித்து முடித்ததும் அவரது முகத்தை அழுந்த துடைத்து விட்டு அவரது உடல் முழுவதையும் போர்வையால் போர்த்தி விட்டு எழுந்து கொள்ளப் பார்க்க, அவரோ அவளது கையைப் பிடித்துக் கொண்டு தன் முகத்தை அவளது கையில் புதைத்துக் கொண்டார்.
“என்னாச்சு ப்பா? உடம்புக்கு ஏதாவது பண்ணுதா?” மாயாவின் கேள்விக்கு இல்லை என்று தலையசைத்தவர்,
“மன்னிச்சுடு ம்மா” ஒவ்வொரு எழுத்தையும் வெகு சிரமப்பட்டு ஒன்று சேர்த்துப் பேச,
அவரைப் பார்த்து புன்னகை செய்தபடியே தன் கையை அவரது கையிலிருந்து விலக்கி எடுத்தவள், “அதைப் பற்றி எல்லாம் எதுவும் யோசிக்காமல் நிம்மதியாக தூங்குங்கப்பா, நாளைக்கு காலையிலேயே நான் வேலைக்கு போகணும், பக்கத்து வீட்டு லதா அக்கா கிட்ட நான் சொல்லிட்டு தான் போவேன், அவங்க வந்து உங்களைப் பார்த்துப்பாங்க, சரியா? அப்புறம் இரண்டு வாரத்திற்கு சேர்த்து தான் ஒரு ஃபேமிலி என்னை ஹயர் பண்ணி இருக்காங்க, அவங்க கொடுத்த அட்வான்ஸ் வைத்துத்தான் உங்களுக்கு மருந்து எல்லாம் வாங்கி வந்திருக்கேன், எப்படியும் இந்த டிரிப் முடியும் போது ஒரு நல்ல வருமானம் கிடைக்கும்ன்னு நம்புறேன், பணம் கையில் வந்த பிறகுதான் ஹாஸ்பிடல் போய் டாக்டர் கிட்ட உங்க உடம்பைக் காட்டி ட்ரீட்மெண்ட் எடுக்கணும், எப்பாடுபட்டாவது உங்களை பழையபடி துருதுருன்னு மாற்றிடுவேன்ப்பா, நீங்க வேணும்னா பாருங்க” என்று விட்டு, அவர் சொன்ன மன்னிப்பை பற்றி எதையுமே பேசாமல் அங்கிருந்து விலகிச் சென்றிருந்தாள்.
என்னதான் தன் தந்தையின் முன்பு தன் மனதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்பது போல அவள் காண்பிக்க முயற்சி செய்தாலும் அவளால் உண்மையாகவே நடந்த எதையும் மறக்க முடியவில்லை, அதிலும் தன் வாழ்க்கை இப்படியாக மாற தன் தந்தையின் பங்கும் இருக்கிறது என்று அவளுக்கு தெரிந்தாலும் அவர் மேல் கோபம் கொள்ள அவளால் முடியவே இல்லை, காரணம் அவளுக்கென்று இருக்கும் ஒரே சொந்தம் அவர் மட்டும்தானே.
தன் வாழ்க்கைப் பயணத்தை எண்ணி பெரு மூச்சு விட்டபடியே தன் அறைக்குள் வந்து அமர்ந்து கொண்டவள் மெல்ல மெல்ல தன்னை அறியாமலேயே தூக்கத்தை தழுவியிருக்க, இனி வரப்போகும் நாட்கள் எல்லாம் அவளுக்கு வைத்திருக்கும் அதிசயங்கள் என்னவோ?
**********
ஊட்டியில் அது சற்று மழையும், குளிரும் சேர்ந்து அமைந்திருந்த காலம் என்பதனால் காலையில் நேரத்திற்கே எழுந்து தயாராகி வர சித்தார்த்திற்கு அத்தனை சிரமமாக இருந்தது.
“ஐயோ! ஊட்டி இவ்வளவு குளிராக இருக்கும்ன்னு தெரியாமல் போச்சே! யப்பா! என்னா குளிரு, இதற்கு முன்னாடி ஒன்றிரண்டு தடவை ஊட்டி வந்த என்னாலேயே இந்தக் குளிரை சமாளிக்க முடியல, அப்படியிருக்கும் போது ரொம்ப வருஷம் கழிச்சு ஊட்டிக்கு வந்திருக்கும் நம்ம அம்மா, கௌசி, கௌசிக்கோட நிலைமை? இதில் காலையில் எட்டு மணிக்கே எழும்பி ஊர் சுற்றிப் பார்க்கப் போறோம்னு பெருமை வேற. இப்போ நம்ம தான் போய் எல்லோரையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி விடணும் போல” என்றவாறே சித்தார்த் வெகு சிரமப்பட்டு எழுந்து தயாராகி நடுங்கியபடியே ஹாலை நோக்கி வர, அவன் நினைத்ததற்கு மாற்றமாக சாவித்திரி, கௌசிக் மற்றும் கௌசல்யா நேரத்திற்கே தயாராகி நின்றது மட்டுமின்றி அன்றைக்கு அவர்களுக்கு தேவையான பொருட்களை எல்லாம் ஒழுங்கு படுத்தி வைத்துக் கொண்டு நின்றனர்.
தான் ஒன்று நினைக்க நடந்தது வேறு ஒன்றாக இருக்க தன் வீட்டினரைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தவனாக அவர்கள் எதிரில் வந்து நின்றவன், “அம்மா! இந்தக் குளிரில் எப்படிம்மா இவ்வளவு நேரத்திற்கே எழும்பி ரெடி ஆகிட்டீங்க? அப்புறம் திங்க்ஸ் எல்லாம் வேறு ரெடி பண்ணிட்டு இருக்கீங்க? எப்படிம்மா இதெல்லாம்?” என்று வினவ,
அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவரது தலையை செல்லமாக கலைத்து விட்டவர், “அதுதான் உங்க அம்மாவோட ஸ்பெஷலே! எந்த இடத்திற்கு போனாலும் என்னோட வேலையில் நான் பக்காவாக இருப்பேன், அது சரி நீ என்ன இன்னும் ரெடி ஆகல போல இருக்கு? போ, போய் சீக்கிரமாக உன் திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வா, நேரத்திற்கு போனால் தான் ரொம்ப லேட் ஆகாமல் வீட்டுக்கு வர முடியும், மாயா வேறு சரியாக எட்டு மணிக்கு வர்றேன்னு சொல்லி இருக்கா, சீக்கிரமாக ரெடி ஆகணும்” என்று கூற, அத்தனை நேரமும் இயல்பாக நின்று கொண்டிருந்தவன் ‘மாயா’ என்கிற பெயரைக் கேட்டதுமே நேற்றிரவு தான் எடுத்த முடிவை முற்றிலும் மறந்து போனவனாக சலித்துக் கொண்டான்.
“அம்மா! இல்லை நான் தெரியாமல் தான் கேட்கிறேன், டூரிஸ்ட் கைட்டோட வேலை என்ன? நம்ம வெளியே எங்கேயாவது ஒரு இடத்திற்கு போய் நிற்கும் போது தான் அவங்க நம்மளை ஊரைச் சுற்றிக் காட்ட வந்து பேசுவாங்க, ஆனா இங்கே என்னடான்னா வீட்டில் இருந்தே கைடு வர்றாங்க, இதெல்லாம் எந்த ஊரில் நடக்கும்?”
“அம்மா, உங்க பையனுக்கு ஆளு வளர்ந்த அளவுக்கு அறிவு வளரல. இந்தக் காலத்தில் எல்லாமே ரொம்ப அட்வான்ஸாக போயிட்டு இருக்கு, அப்படி இருக்கும் போது இன்னும் பழைய காலத்து ஆளு மாதிரி பேசுறாங்க. மை டியர் பிரதர், அவங்க கைடு தான், ஆனா இப்போ கைடு புக் பண்ணுவதில் இருந்து அவங்களுக்கான ஃபீஸ் செலக்ட் பண்ணுற வரைக்கும் எல்லாமே ஆன்லைனில் வந்துடுச்சு, உங்க போனை எடுத்து வேணும்னா செக் பண்ணிப் பாருங்க”
“ஹான், அது எல்லாம் எங்களுக்கும் தெரியும், நீங்க ஊர் சுற்றிப் பார்க்கும் போது கொட்டிக்குறதுக்கு நொறுக்குத்தீனி எடுத்து வைங்க, போங்க” கௌசல்யாவைப் பார்த்து வேண்டுமென்றே வெறுப்பேற்றுவது போல பேசி விட்டு தான் கொண்டு செல்லத் தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு நின்ற சித்தார்த் யாரும் தன்னைக் கவனிக்காத தருணம் தன் தொலைபேசியை எடுத்து அதில் கௌசல்யா சொன்னது போலவே எல்லாம் இருக்கிறதா என்று நோட்டம் விட ஆரம்பித்தான்.
ஆனால் அவனது நல்ல நேரம் அவன் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து சற்று தள்ளி அமர்ந்திருந்த கௌசிக் சித்தார்த் தயங்கித் தயங்கி தன் தொலைபேசியை எடுத்ததைக் கண்டு கொண்டது மட்டுமின்றி அதை ஜாடையில் சாவித்திரி மற்றும் கௌசல்யாவுக்கும் காண்பித்திருந்தான்.
சித்தார்த் மும்முரமாக மாயாவைப் பற்றிய தகவல்களைப் பார்த்துக் கொண்டு நின்ற தருணம் பதுங்கி பதுங்கி அவன் பின்னால் வந்து நின்ற கௌசல்யா சட்டென்று அவன் கையிலிருந்த ஃபோனைப் பறிக்க, சித்தார்த்தோ ஒரு கணம் திடுக்கிட்டுப் போய் நின்றான்.
“என்ன பிரதர், நான் சொன்ன மாதிரி எல்லாம் டீடெயிலா இருக்கா?” என்றவாறே அவனுடைய ஃபோனைத் திருப்பிப் பார்த்த கௌசல்யா,
“அட! சரியாக மாயாவைப் பற்றிய டீடெயில்ஸ் கூட எடுத்துட்டீங்க போல இருக்கே. வெரி குட் ஜாப் பிரதர்” என்று விட்டு அவனது தோளில் தட்டிக் கொடுக்க, அவனோ அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டே ஃபோனை வாங்கத் தன் கையை நீட்டினான்.
ஆனால் கௌசல்யா வேண்டுமென்றே அவனுக்கு போக்கு காட்டியபடி அவனை வீடு முழுவதும் ஓட வைக்க, சித்தார்த்தும் அவளை விடாமல் விரட்ட ஆரம்பித்தான்.
ஒரு நிலைக்கு மேல் வீட்டுக்குள் ஓட முடியாமல் களைத்துப் போன கௌசல்யா வெளியே தோட்டப் புறமாக ஓடிச் சென்று சமையலறை வாயில் வழியாக மீண்டும் வீட்டிற்குள் வந்து விட, அவளை விரட்டிக் கொண்டு வந்த சித்தார்த் வாயில் கதவைத் திறந்து கொண்டு உள் நுழைந்து வந்து கொண்டிருந்த மாயாவின் மேல் அப்படியே மோதியிருந்தான்.
சித்தார்த் திடீரென அங்கே வரக்கூடும் என்று எதிர்பார்த்திராத மாயாவும், மாயா அங்கே வரக்கூடும் என்று எதிர்பார்த்திராத சித்தார்த்தும் ஒருவரையொருவர் மோதிய அதிர்ச்சியில் திகைத்துப்போய் நிற்க, முதலில் தன்னை சுதாரித்துக் கொண்ட மாயா, “மிஸ்டர், கண்ணு என்ன பிடறியிலயா இருக்கு? இப்படி ஏதோ மாதிரி வந்து மோதுறீங்க” என்று கேட்க, அவளது ‘ஏதோ மாதிரி’ என்கிற விளிப்பில் முகம் சிவக்க அவளை முறைத்துப் பார்த்தவன் எதுவும் பேசாமல் அங்கிருந்து விலகிச் சென்று விட, மாயாவோ அவனைப் பார்த்து சலித்துக் கொண்டே இயல்பாக தன் தோளைக் குலுக்கிக் கொண்டாள்.
“புல்டோசர் மாதிரி உடம்பை வைச்சுக்கிட்டு இப்படி வந்து மோதியது மட்டுமில்லாமல் ஒரு சாரி கூட சொல்லாமல் போவதைப் பாரு, இடியட்” சித்தார்த் நடந்து செல்வதைத் பார்த்து திட்டிய படியே கீழே விழுந்து கிடந்த தன் கைப்பையை தட்டி எடுத்தவள் தன் தொலைபேசியை எடுத்து கௌசல்யாவுக்கு அழைப்பை மேற்கொள்ளப் பார்த்த தருணம், வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த சித்தார்த் சட்டென்று தன் நடையை நிறுத்தி விட்டு வேகமாக மாயாவை நோக்கி ஓடி வந்தது மட்டுமின்றி அவளை மோதி கீழே தள்ளி விட்டியிருந்தான்.
சித்தார்த் தன்னை நோக்கித் தான் ஓடி வருகிறான் என்று மாயா சுதாரித்துக் கொள்ளும் முன்னரே அவன் அவளை மோதியிருக்க, அவன் மோதிய வேகத்தில் கீழே விழுந்து கிடந்தவள் கண்கள் இரண்டும் கலங்கிப் போக அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ வெகு இயல்பாக அவளருகில் முழங்காலிட்டு அமர்ந்து கொண்டு, “ஏதோ மாதிரி மோதினேன்னு சொன்னே இல்லையா? அதுதான் அந்த ஏதோ மாதிரி உண்மையாகவே மோதினால் எப்படி இருக்கும்ன்னு ஒரு டெமோ காட்டுனேன்” என்று விட்டு அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே உள்ளே சென்று விட, அவளோ கோபமும், ஆற்றாமையும் ஒன்று சேர அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டே மெல்ல எழுந்து நின்றாள்.
‘நீ என் கிட்ட ரொம்ப அதிகமாக உன் வேலையைக் காட்டிட்ட, நீ இந்த ஊரை விட்டு போக முதல் நான் யாருன்னு உனக்கு காண்பிக்கிறேனா இல்லையா பாரு’ சித்தார்த்தைப் பார்த்துத் தன் மனதிற்குள் கருவிக் கொண்டவள் அதன் பிறகு அவன் வீட்டிலிருந்து வெளியேறிச் செல்லும் வரை ஒரு தடவை கூட அவன் இருக்கும் பக்கமும் திரும்பிப் பார்க்கவில்லை, ஆனால் நொடிக்கு ஒரு தடவை சித்தார்த்தின் பார்வை மாயாவைத் தழுவிச் சென்று கொண்டு தான் இருந்தது.
கௌசிக், கௌசல்யா மற்றும் சாவித்திரி காரில் ஏறி அமர்ந்து கொண்டு மாயாவையும் உள்ளே அமரும் படி அழைக்க, அவளோ சிறு தயக்கத்துடன் சித்தார்த் நின்று கொண்டிருந்த புறமாகத் திரும்பிப் பார்த்தாள்.
அத்தனை நேரத்திற்கு பின்பு மாயாவின் பார்வை தன் மேல் விழுந்ததைப் பார்த்ததும் அவளைப் பார்த்து புன்னகை செய்தபடியே கண் சிமிட்டியவன் தன் அன்னையின் புறம் திரும்பி, “அம்மா, ரொம்ப கவனமாக இருந்துக்கோங்க. கௌசிக், கௌசல்யாவை தனியா விட்டுட்டு எங்கேயும் போயிடாதீங்க, ஃபோனை உங்க கையோடு வைச்சுக்கோங்க, நான் அடிக்கடி கால் பண்ணுவேன், சரியா?” என்றவாறே அவரது கன்னத்தில் அழுந்த முத்தமிட, மாயா சிறு தயக்கத்துடன் தன் தலையைக் குனிந்து கொண்டாள்.
“அதெல்லாம் நான் பார்த்துக்குவேன், நீ ஜாக்கிரதையாக இரு, சரியா? மாயா நீ வந்து உட்காரும்மா நம்ம போகலாம்” என்றவாறே சாவித்திரி மாயாவைத் தன் அருகே அமரும் படி அழைக்க,
அவளோ, “அப்போ இவங்க?” என்றவாறே சிறு குழப்பத்துடன் சித்தார்த்தைப் பார்த்தாள்.
“அவன் நம்ம கூட வர மாட்டான்ம்மா, ஊட்டியை சுற்றிப் பார்க்க வந்தது நாங்க தான், சார் ஊட்டி வந்தது காட்டுக்குள்ளே போய் ஃபோட்டோ சூட் எடுக்க”
“காட்டுக்குள்ளேயா? காட்டுக்குள்ளே போக ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட் பெர்மிஷன் எடுக்கணுமே, இங்கே அவ்வளவு ஈஸியாக அதெல்லாம் கொடுக்க மாட்டாங்களே” மாயா குழப்பம் சூழ்ந்தவளாக சாவித்திரியைப் பார்த்து வினவ,
அவரோ, “என்னம்மா சொல்லுற? டேய் சித்தார்த் பையா! என்னடா பர்மிஷன் எல்லாம் ஏதோ எடுக்கணுமாம், நீ என்கிட்ட அதைப்பற்றி எல்லாம் எதுவுமே சொல்லலையே” என்றவாறே பதட்டத்துடன் அவனைப் பார்த்து வினவினார்.
“அம்மா, அம்மா! நீங்க முதல்ல டென்ஷன் ஆகாமல் இருங்க. ஊட்டி வர பிளான் பண்ண நான் அதைப்பற்றி எல்லாம் விசாரிக்காமல் இருப்பேனா? கிஷோரோட அண்ணா கோயம்புத்தூர் ஏ.சி.பி, அவரு கிட்ட சொல்லி இங்க ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்டோட பேசி காட்டுக்குள்ளே போய் வர பர்மிஷன் லெட்டர் எல்லாம் எப்போவே எடுத்துட்டேன், இங்கே பாருங்க” சித்தார்த் தன் கையிலிருந்த காகிதத்தை சாவித்திரியிடம் கொடுக்க,
அவசர அவசரமாக அதை வாங்கிப் படித்துப் பார்த்தவர், “அப்பாடா! இப்போதான் நிம்மதியாக இருக்கு, பார்த்து பத்திரமாக போயிட்டு வரணும், சரியா?” என்று கூற, அந்தக் கடிதத்தைப் பார்த்த பின்னர் தான் மாயாவின் முகத்திலும் சிறு நிம்மதி பிறந்தது.
மாயாவின் முக மாற்றத்தைப் பார்த்து சிந்தித்தபடியே அவர்களை வழியனுப்பி வைத்தவன் அத்துடன் அவளைப் பற்றிய யோசனைகளைக் கை விட்டு விட்டு தனது பல நாள் கனவை நிறைவேற்றப் போகும் அந்த தருணத்தை தன் கேமராவில் சிறை செய்ய உற்சாகமாக விசிலடித்தபடியே புறப்பட்டுச் சென்றான்…..