UYS 26

1662455813139-493bcf05

UYS 26

அத்தியாயம் 26

 

சூர்யா, மகா இருவரும் இவ்வாறு எட்ட நின்று… சொல்லிக் கொள்ளாத காதலை சற்றே விலக்கி வைத்து அவர்களின் கனவுகளுக்கான திசையில் பொறுப்பாக பயணித்தனர்.

நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாக உருண்டோட, மகா முதல் செமஸ்டரை நன்றாக எழுதி முடித்திருக்க, சூர்யா ஐந்தாவது செமஸ்டரை நன்றாக எழுதி முடித்திருந்தான்.

அலைபாயும் மனதை இருவருமே கட்டுப்படுத்த பழகியிருந்தனர். தடுமாற்றம் வந்தாலும் தடம் மாறவில்லை அவர்கள் மனம்.

படிப்பு, சேட்டை, கேலி என நாட்களும் அழகாகச் சென்றது.

இத்தனை நாட்களில் உள்ளம் சொன்ன செய்தி இருவருக்கும் தெளிவாகவே புரிந்திருந்தது. ஆனாலும் அவசரம் கொள்ளாமல் எப்போதும் போலவே இருந்தனர்.

ஆரம்பத்தில் அவர்கள் அமைதியை கண்டுகொள்ளாத பிரண்ட்ஸ் கூட, அவர்கள் இருவரும் என்ன நினைக்கின்றனர் என அறிய முயன்று தோற்றனர்.

இந்த முறை அரியர் விழக் கூடாது என்பதாலும், இருந்த அரியரையும் கிளீயர் செய்ய வேண்டுமென்பதாலும் இறுதியாண்டு மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினர்.

கடைசி செமஸ்டர் என்பதால் கிளாஸ், டெஸ்ட், அசைன்மென்ட், அப்சர்வேஷன், ரெகார்ட், லேப் என அவர்கள் சுற்றிக் கொண்டிருக்க, செமினார் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

செமினார் ஹாலில் இருந்த மேடையில்… மைக்கை பிடித்து… தயக்கமில்லாமல் சூர்யா… தெளிவாக எளிமையாக எடுத்த செமினார் பலருக்கும் புரிந்தது.

கணீரென்ற அவன் குரல்… தெளிவாக… அழுத்தமாகவே எதிரே இருப்பவர்களிடம் சென்று சேர்ந்தது. வருங்கால வாத்தியார் என்பதை நிரூபித்தான்.

கைத்ததட்டல்களுடன் அவன் பேச்சு முடிவு பெற, மற்றையவர்கள் செமினார் எடுக்க ஒவ்வொருவராக வந்தனர்.

மகா அவன் சொல்ல வந்ததையும், அவனையும் சேர்த்தே கவனித்துக் கொண்டிருந்தாள். ஆனாலும் இயல்பான பாவனையோடு!

இப்போதெல்லாம் கல்லூரி யூனிபார்ம் புடவை கட்டிப் பழகியிருக்க, இன்று கூட சாரீதான் உடுத்தியிருந்தாள்.

சூர்யாவும் அவளைக் காணாமல் கண்டான். ஆனாலும் ஆசிரியர் ஒருவர் அழைக்க, அவரிடம் சென்றவன் கவனம் அங்கு சென்றுவிட்டது.

இடைப்பட்ட நாளில் நந்து, கவி வேறு காதலில் விழுந்திருந்தனர். அவனின் சேட்டை அவளுக்கு பிடித்துப் போக, அவளின் பேச்சும்… சிரிப்பும் அவனுக்குப் பிடித்துப் போக இருவரும், ‘நீ இல்லாவிட்டால் நானில்லை.’ என்று சுற்றிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் காதல் செய்வது… யாருக்கும் தப்பாக படவில்லை. ஜோடி கூட கியூட்தான்.

ஆனால் வெளியே சுற்ற அடிக்கடி கல்லூரியை கட் அடிப்பது, மதிய உணவைக் கூட தவிர்த்து… படிக்கட்டில் நின்று பேசுவது, படிப்பில் கவனமில்லாமல்… ஐந்தாவது செம்மில் நந்து பல அரியர் வைக்க, கவி கூட ஒரு அரியர் வைத்துவிட்டாள்.

காதல் செய்வது கூட தவறல்ல. ஆனால் படிப்பை பாதிக்காமல் பார்த்துக் கொள்ள முயற்சியாவது செய்திருக்கலாம் என நினைத்தார்கள் உடனிருப்பவர்கள்.

இருப்பக்க நண்பர்கள் அறிவுரை சொல்லும்போதும் அசட்டையாகவே இருந்தனர்.

அவர்கள் காதல் என்னாகிறது என பிறகு காண்போம். இப்போது இவர்களிடம் வருவோம். ( ஒரு கதைக்கு இவங்கள மெயின் லீடா வச்சு எழுத ஆசை இருக்கு. பாப்போம்.)

அன்றைய செமினார் சிறப்பாக நடைபெற்று நிறைவுற்றது.

அதன்பின்னான நாட்கள் யாவும் ரெக்கை கட்டிப் பறந்தது என்றால் மிகையில்லை.

ப்ராக்டிகலே வந்துவிட… அடித்துப் பிடித்து அவுட் புட் வரவைப்பது, வைவா எனக் கேட்கப்படும் கேள்விகளுக்கு சமாளித்து பதில் சொல்லி லேபிலிருந்து கிளம்ப என பாடாய் பட்டுக் கொண்டிருந்தனர்.

கல்லூரிக்கு அருகில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும். அங்குதான் முதல் பரீட்சை நாள் காலையில், ஈஸியாக வினாத்தாள் வரவேண்டும் என்று பலர் மனமுருக சாமிக்கு வேண்டுதல் வைத்துக் கொண்டிருப்பர்.

இன்று மகாவும்… அவளுக்கு மட்டுமல்லாது அவளவனுக்கும் சேர்த்தே வேண்டிக் கொண்டாள்.

‘ரெண்டு பேரும் எல்லா எக்ஸாமும்… நல்லா எழுதனும். பிள்ளையாரப்பா. பாத்து பண்ணுங்க.’ என வேண்டியவாறு கண்களைத் திறக்க, எதிரே கல்லூரிக்கு நடந்து வந்து கொண்டிருந்தான் சூர்யா.

ஒருநொடி அவள் கண்களில் மின்னல் வந்து போனது. ஆனாலும் திரும்பியவள் அங்கிருந்த திருநீறினை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டு…. ஒரு தாளில் மீதி திருநீறை மடித்து எடுத்துக் கொண்டாள்.

ஏனோ… அவனுக்காகவும் வேண்டியதால் அதை அவனிடம் மனம் சேர்ப்பிக்கச் சொன்னது.

‘இதற்க்கு முன் அவனுக்காக வேண்டிக் கொள்ளும்போதெல்லாம் அவனிடம் திருநீறை கொடுத்தாயா?’ என்ற மனதின் கேள்வியை அப்படியே அமுக்கியவள், அமைதியாக நின்றாள்.

அவனுமே இயல்பாக வந்து பிள்ளையாருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு விபூதி வைத்துவிட்டு திரும்ப, அவனையே இருநொடி பார்த்தவள், அங்கிருந்த ஒரு திட்டில் திருநீறு உள்ள தாளை வைத்துவிட்டு, அவனுக்குதான் என்பது போல மீண்டும் ஒரு ஆழமான பார்வை பார்த்துவிட்டு நகர, அதை புரிந்து கொண்டவன் இதழ்களில் ஒரு வசீகரப் புன்னகை.

ஏனோ… இப்போது தடுமாற்றமும் பதற்றமும் வரவில்லை அவனுக்கு. இந்த தெளிவுதான் அவர்கள் வேண்டுவதும்.

அவள் செய்கையைக் கண்டு, ‘கண்ணாலேயே சொல்லிட்டு போறா பாரேன்.’ என்றுதான் தோன்றியது.

அதையெடுத்து திருநீறை வைத்துக் கொண்டவன் அவள் சென்ற பக்கம் பார்க்க, ஒரு மரத்திற்கு பின்னே நின்று புன்னகையாக அவன் செய்கையை கவனித்துக் கொண்டிருந்தாள்.

அவன் இங்கு பார்க்கவும் திருதிருவென விழித்தவள் ஓடிவிட, அவனும் புன்னகையாக கல்லூரிக்குள் சென்றான்.

அன்றைய எக்ஸாமை நன்றாக எழுதிவிட, அதற்கு பின்னான பரீட்சையையும் நன்றாகவே எழுதிக் கொண்டிருந்தனர்.

இத்தனை நாட்களாக கல்லூரியில் அவனை பார்த்துக் கொண்டிருந்ததால் தெரியாதது, அனுவிடம் பேசும்போது,

“உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன் மகா. எவ்ளவோ கேட்டுட்டேன் வீட்ல, வேற காலேஜ்லதான் பி.ஜி பண்ணனும்னு சொல்லிட்டாங்க. எக்ஸாம் முடிஞ்ச பிறகு செர்டிஃபிகேட்ஸ் வாங்க மட்டும்தான் வரணும்.” என புலம்ப, பதிலுக்கு பீலாகி அவளிடம் ஆறுதல் சொன்னாலும், சூர்யாவும்தானே இறுதியாண்டு என்ற எண்ணம் அவள் நிம்மதியை இல்லாமல் செய்தது.

இருவரும் உள்ளத்தை வெளிப்படையாக பகிர்ந்து கூட கொள்ளவில்லையே. இனி அவனை பார்க்க முடியாதே என்ற எண்ணங்களெல்லாம் வரிசையாக வந்து அவளை சோர்வுறச் செய்தது.

அதில் லேசாக கண்கள் கலங்கிப் போக, அதை கவனித்த அனு, “அச்சோ…” என தன் தலையிலேயே தட்டிக் கொண்டவள்,

“மகா…” என அழைத்து அவளை நிகழ்வுக்கு கொண்டு வந்தவள், “சூர்யா இங்கதான் பி.ஜி பண்றான். அழுவாத.” என, மகா முழிக்கவும்,

‘ஒன்னுமே இல்லாத மாறி முழியப் பாரு. இதுல மட்டும் ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்காங்க.’ என நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள்,

“நான் ஜஸ்ட் இன்பர்மேஷனுக்கு சொன்னேன்.” என சோற்றில் பூசணியை மறைத்தது போல பேச, அந்த பாவனையில் அழுகை போய் லேசாக சிரிப்பு வந்தது மகாவிற்கு.

ஆனால் அவளும் சரி என்பது போல தலையாட்டி வைத்தாள். கிடைத்த தகவலே அவளுக்கு நிம்மதியைத் தந்துவிட்டது.

அதன்பின்னர் வீட்டிற்கு கிளம்பிவிட்டனர்.

»»»»

எழுந்ததும் முகம் கழுவி பல் துலக்கிவிட்டு ஹாலிற்கு வந்தவள் ஒருமுறை அவ்விடத்தை சுற்றியும் அலசினாள்.

இன்னும் அகத்தியன் கீழே வந்திருக்கவில்லை. அதை உணர்ந்து ஒரு பெருமூச்சோடு டீ போட கிட்சனுக்குள் சென்றாள்.

நேற்று இரவுதான் வீடு வந்திருந்தான். வேலை என வந்துவிட்டால் வீட்டையே மறந்துவிடுவது போல, வீட்டிற்கு அவ்வப்போது வந்து கொண்டிருந்தான். வெளியே… டிரான்ஸ்பரில் இருந்தான்.

இரவு இவள் தூங்கியிருந்தாள் அவன் வரும் நேரம். அவனும் தந்தையிடம் பேசிவிட்டு அவள் அறையை எட்டி பார்த்துவிட்டுதான் உறங்கச் சென்றான்.

தயானந்தனுக்கு மகன் இப்படி வேலை வேலை என தனியே அலைந்து கொண்டிருப்பது உவப்பானது இல்லைதான்.

அவனிடம் கூறினாலும் கேட்கப் போவதில்லை எனும்போது என்ன செய்ய இயலும்?

எழுந்ததும் வழக்கமான உடற்பயிற்சிகளை முடித்துக் கொண்டு, ஃப்ரெஷ்ஷாகி கீழே வந்து சோபாவில் அமர்ந்தவனைக் கண்டு, கொதிக்கும் டீயை சிம்மில் வைத்துவிட்டு அவனிடம் வந்தாள்.

‘ண்ணா… எப்படி இருக்கீங்க?நேத்து வரேன்னு சொல்லவே இல்ல. தெரிஞ்சிருந்தா நானும் நைட் முழிச்சிட்டு இருந்துருப்பேன்ல. அங்க வேலைக்கு போய்ட்டா, நாங்க இங்க இருக்கோம்னு நெனப்பே இல்லையா? இங்கயே வேலைக்கு டிரான்ஸ்பர் வாங்க முடியாதா? அடிக்கடி போன் பண்ணுங்க இனி.’ இப்படியெல்லாம் சொல்ல அவளுக்கும் ஆசைதான். ஆனால் ஒரு வார்த்தையும் வரவில்லை.

அவனருகே வந்துவிட்டு எப்போதும் போல அவள் தயங்கி நிற்க, அரவம் உணர்ந்து… நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருந்தவன் நிமிர்ந்தான்.

சட்டென தமயன் நிமிரவும் பேச வராததன் பொருட்டு, அவள் பல்லைக் காட்ட, அதைக் கண்டு அவன் முகத்தில் கொஞ்சமே சிரிப்பு வந்தது.

“எப்படி இருக்க பாப்பா?” என்றான் சற்றே இயல்பாக.

“அஹ்… நல்லாருக்கேன் ண்ணா.” என்றவள்,

“நீங்… நீங்க எப்படி இருக்கீங்க?” எனக் பதிலுக்கு கேட்டாள்.

“ம்ம்… நல்லாருக்கேன்.” என்றவன்,

“எக்ஸாம் எப்படி பண்ணிருக்க?” என,

தேர்வைப் பற்றி இப்போதே கேட்கவேண்டுமா என்று நினைத்தாலும்,

“ம்ம்… நல்லா எழுதிருக்கேன் ண்ணா.” என்று அவள் ஆர்வமாக பதில் சொல்லிக் கொண்டேப் போக,

அனைத்தையும் கேட்டவன், “குட்.” என்ற ஒரே வார்த்தையில் பாராட்ட, உள்ளே நொந்து போனாள்.

இப்போதெல்லாம் தந்தையிடம் நன்றாகதான் பேசுகிறாள். ஆனாலும் சிறுவயதில் அவர் வீட்டில் அதிகம் இருக்கமாட்டார். தமயன், பாட்டிதான் வீட்டிலிருப்பர்.

எனவே, அவனிடம் ஒரு சொல்ல இயலாத பிணைப்பு. பேசாவிட்டாலும், வாயடிக்க ஆசை இருந்தது. 

ஆனால் சிறுவயதிலிருந்தே அண்ணனிடம் ஒரு பயம், அவனின் கண்டிப்பால். அதுவும் போலீஸ் ஆன பிறகு சொல்லவே வேண்டாம்.

‘ஏற்கனவே விரப்பாதான் இருப்பாரு. இதுல போலீஸ் வேற ஆகிட்டாரு. இனி சொல்லவா வேணும்?’ என நினைத்தாலும்,

வெளியே… ‘நான் நேர்மையான எஸ்.ஐயின் தங்கை.’ என்று பீற்றிக் கொள்ளவும் தவறுவதில்லை.

அதன்பிறகு தலையசைத்துவிட்டு மகா, உள்ளே தேநீரை எடுத்துவர சென்றுவிட, வாக்கிங் சென்ற தந்தை வீடு திரும்பவும், அகத்தியன் அவருடன் பொதுவாக பேச ஆரம்பித்தான்.

தன்னிடம் ஜாலியாக பேச மாட்டேன் என்கிறான் என நினைத்தாளே தவிர, அதுதான் அவன் இயல்பு என புரிந்துகொள்ள மறுத்தாள்.

அகத்தியன்… தங்கையிடம் பாசமழையை வெளிப்படையாக பொழியாவிட்டாலும், அவள் விடுமுறையில் இருக்கும் சமயம் வீடு வந்தால்… வீட்டில் தந்தை, அவன், தங்கை என அனைவரும் இருப்பது மனதுக்கு இதமாக இருக்கும் என்பதால் வந்ததை காட்டிக் கொள்ளவில்லை. அவளும் அதை அறியவில்லை.

»»»»

“இப்போ என்ன சொல்ல வர கற்பகம்?” என்ற கணவனின் நிதானமான கேள்வியில் உள்ளே உதறினாலும்,

“இல்லங்க… சூர்யா அங்க வேலைக்கு போனா… அண்ணனுக்கும் ஒத்தாசையா இருக்கலாம்ல. அதான் சும்மா அவனுக்கு விருப்பமானு கேட்டேன்.” என்று வார்த்தைகளை மென்று விழுங்கினார்.

சூர்யா முகத்தில் எதையும் காட்டாது நின்றிருக்க, கீர்த்திக்கு அன்னையின் பேச்சு பிடிக்கவில்லை. அதிருப்தி முகத்தில் தெரிந்தது. ஆனாலும் பெரியவர்கள் பேச்சில் இடை புகக் கூடாதென அமைதியாக நின்றாள்.

ப்ரீத்தியோ… அன்னையை நன்றாக முறைத்துக் கொண்டிருந்தாள். தாயின் இதுபோன்ற செயல்கள் எப்போதுமே அவளுக்கு கொஞ்சமும் பிடிப்பதில்லை.

விஷயமென்னவென்றால், சூர்யா பி.ஜி சேர்வது குறித்து அவர் அறிந்துவிட, அதைத் தடுக்கவும் முடியாமல்… வெளிப்படையாக கேட்கவும் முடியாமல்,

அவரின் அண்ணன் வைத்துள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு சூப்பர்வைஸராக… கடையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அவனிடம் தள்ளப் பார்த்தார்.

எந்த நேர்மையான வேலையும் குறைவானதல்ல என்ற எண்ணமுடைய சூர்யாவும், பார்ட் டைமாக பார்க்க ஒப்புக் கொள்வதாகக் கூறினான்.

அவரோ, “இல்ல சூர்யா. அங்க நம்பிக்கையா… நாள் பூரா வேலை செய்யுற மாதிரிதான் வேலைக்கு கேட்டாங்க. நீதான் டிகிரி முடிச்சிட்டியே.” என ஓரக் கண்ணால் அவனை பார்த்தவாறு பேச, அப்போதுதான் அவரின் எண்ணமே புரிந்தது அவனுக்கு.

உள்ளே மனதில் எப்போதும் போல ஒரு கசப்பு எழுந்தது. ஆனாலும் என்ன பதில் சொல்ல என்று அவன் யோசிக்கும்போதே,

ஒரு வேலையாக வெளியே சென்ற வாசுதேவன் வீட்டிற்கு விரைவாக திரும்பியிருக்க, மனைவி பேச்சையும், மகனின் தடுமாற்றத்தையும் கவனித்தவாறே வந்தவர்… மனைவியிடம் பதிலுக்கு கேள்வி கேட்கவும், இப்போது வீடு வருவார் என எதிர்பார்க்காத கற்பகம் என்ன சொல்ல எனத் தெரியாமல் சமாளிக்கப் பார்த்தார்.

அதை ஏற்றுக் கொள்ளாதவர், “இங்க பாரு… அவனுக்கு காலேஜ் ப்ரோபஸ்ஸர் ஆகணும்னுதான் ஆசை. அதுனால அவன் பி.ஜி, பி.எட் பண்ணிட்டு காலேஜ்க்கு டீச்சர் வேலைக்குதான் போவான். புரியுதா? இதுமாறி கேட்டுட்டு இருக்க வேலை வேணாம்.” அழுத்தமாகக் கூற,

“நமக்கும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க ங்க. அவங்களுக்கு கல்யாணம் பண்ணனும். மூணு பேரையும் படிக்க வைக்குறதே பெரிய விஷயம். இதுல இன்னும் இன்னும் படிக்க…” என ஆதங்கத்தில் பேசிக் கொண்டிருந்தவர், கணவனின் கோபமான பார்வையில் முடிக்காமல் நிறுத்திக் கொண்டார்.

வாசுதேவன், “என்ன பொறுத்தவரை எனக்கு ரெண்டு பொண்ணு, ஒரு பையன்.”

கற்பகம், “நான் அப்படி சொல்லல…” என ஆம்பிக்க, கையமர்த்தி பேச்சைத் தடுத்தவர், தன் அண்ணனின் சொத்து பற்றிக் கூறினார்.

அதைக் கேட்டுக்கொண்டவர், இவனெங்கே காசை திருப்பி தந்து அந்த நிலத்தை மீட்கப் போகிறான் என்று நினைத்தவருக்கு, அதை தங்களுடைய சொத்தாக மாற்றிக்கொள்ள இப்போதே ஆசை வந்தது. சூழ்நிலை கருதி அமைதியாகிப் போனார்.

ஏற்கனவே முறைக்கும் கணவன் இன்னமும் எதுவும் பேசினால் இத்தனை வருடங்கள் போட்ட வேஷம் என்னாவது?

சமயம் பார்த்து சாதிக்க வேண்டுமென முடிவெடுத்தவர், சூர்யா மேலே படிப்பது பிடிக்காவிட்டாலும் அமைதியாகினார்.

அதன்பிறகு சூர்யா, பி.ஜி சேர்ந்து படிப்பு, பார்ட் டைம் ஜாப் என மீண்டும் தன் வாழ்வில் ஓடிக் கொண்டிருக்க, மகாவும் செகண்ட் இயர் சேர்ந்து படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.

இருவருள்ளும் ஒரு நிதானம் வந்திருந்த போதும், பேசியிருக்கவில்லை. பேச கொள்ளை ஆசை இருந்தும், என்னவோ ஒன்று தடுத்தது.

ஒருநாள்… அதையெல்லாம் உடைத்து மகாவே அவனிடம் பேசினாள். இல்லையில்லை சண்டையிட்டாள் அவனின் சண்டைக்காரி.

அவளை அமைதியின் சிகரமாக சூர்யா நினைத்ததில்லைதான். ஆனாலும் அவள் அவ்வளவு பேசுவாள் என்று அப்போதுதான் அவனுக்குத் தெரியும்.

ஒரு பெண்ணின் முறைப்பையும் ரசிக்க முடியுமென அவனுக்கு உணர்த்தினாள்.

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!