எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 07

IMG_20221031_134812-63c0a05a

மாயாவின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொண்டதிலிருந்து சாவித்திரியின் மனது ஒருநிலையிலேயே இல்லை.

ஒரு பெண்ணாக, ஒரு தாயாக அவளை எண்ணிக் கவலை கொண்டவராக அவர்கள் சென்ற அந்த மலையில் இருந்து இறங்கி வந்தவர் அப்போதுதான் அத்தனை நேரமும் சித்தார்த்திடமிருந்து எந்தவொரு அழைப்பும் வரவில்லை என்பதை உணர்ந்து கொண்டார்.

ஒருவேளை தான் மும்முரமாக மாயாவோடு பேசிக் கொண்டிருந்த தருணம் அவனிடமிருந்து அழைப்பு வந்து அதைத் தான் கவனிக்காமல் விட்டு இருக்கலாம் போலும் என்று எண்ணிக் கொண்டவர் சித்தார்த்தைப் பற்றிய பலத்த யோசனையுடனேயே தன் கைத்தொலைபேசியை எடுத்துப் பார்க்க, அதுவோ எந்தவொரு அழைப்பும் வந்ததற்கு அறிகுறிகள் இன்றி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது.

“என்னடா இது? இவ்வளவு நேரமாகியும் இந்த சித்தார்த் பையா ஒரு கால் கூட பண்ணல. இப்படி எல்லாம் அவன் இருக்க மாட்டானே, என்னதான் வேலையாக இருந்தாலும் கண்டிப்பாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவையாவது கால் பண்ணிப் பேசிட்டுத் தானே இருப்பான், இன்னைக்கு அப்படி என்ன நடந்து இருக்கும்? ஒருவேளை ரொம்ப வேலையாக இருக்கிறானோ? சரி, பரவாயில்லை நாமே கால் பண்ணிப் பார்த்துடலாம்” என்றவாறே அத்தனை நேரமும் தன் கைத்தொலைபேசியுடன் நடத்திக் கொண்டிருந்த பேச்சு வார்த்தையை முடித்து வைத்த சாவித்திரி சித்தார்த்திற்கு அழைப்பை மேற்கொள்ள,

அதுவோ, ‘அவன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறான்’ என்று மீண்டும் மீண்டும் அறிவித்தது.

‘ஒருவேளை சித்தார்த் இப்போது இருக்கும் பக்கம் சிக்னல் சரியாக கிடைக்கவில்லை போலும்’ என தனக்குள்ளேயே முடிவெடுத்துக் கொண்டவராக தனது தொலைபேசியை தனது கைப்பைக்குள் வைக்கப் பார்த்தவர் மனமோ ஏனோ தெரியவில்லை அந்த முடிவை முழுமையாக ஏற்றுக்கொள்ள செய்யவில்லை.

அவர் மனதிற்குள் ஏதோ ஒரு விதமான பதட்டவுணர்வு தங்கியிருப்பது போல அவருக்குத் தோன்றவே உடனே மாயாவைத் தன்னருகே வரும்படி சைகை செய்தவர் தனது மனப்பதட்டத்தைப் பற்றிக் கூற, அவளோ சிறு புன்னகையுடன் அவரது கையை அழுத்திக் கொடுத்து விட்டு, “ஆன்ட்டி, இங்கே இப்படி அடிக்கடி சிக்னல் கட் ஆகுவது சகஜம் தான், அதுவும் அவங்க போய் இருப்பது காட்டுக்குள்ளே, அப்படி இருக்கும் போது நீங்க வீணாக டென்ஷன் ஆகவே வேண்டாம். வேணும்னா நாம இப்படி பண்ணலாம், எப்படியும் நம்ம இன்னைக்கு வழக்கமாக வீட்டுக்குத் திரும்பிப் போகும் நேரத்தை விட கொஞ்ச நேரம் முன்னாடியே கிளம்பலாம்ன்னு இருந்தோம், இப்போ நீங்க இப்படி கவலைப்படுவதனால நம்ம இந்த மீதியான நேரத்திற்கு அவங்க போன காட்டுக்கு கிட்ட போய் பார்க்கலாம், எப்படியும் அவங்க காட்டை விட்டு வெளியே வந்திருந்தால் அங்கே செக்யூரிட்டிக்கு இருக்கும் ஆபிஸருக்கு தெரிந்து தானே இருக்கும், அதோடு அங்கே இருக்கும் அங்கிள் ஒருத்தங்க எனக்குத் தெரிந்தவங்க தான், ஷோ நம்ம இப்போ அங்கே போய் பார்த்து உங்க கவலையை அப்படியே இல்லாமல் பண்ணிடலாம், ஓகேவா?” என்று கேட்க, தன் பதட்டத்தை மறைத்துக் கொண்டவராக அவளைப் பார்த்து தலையசைத்தவர் அந்தக் காட்டுப் பகுதிக்குச் சென்று சேரும் வரை தன் மகனிற்கு எந்தவொரு ஆபத்தும் இருந்துவிடக்கூடாது என்று தன் இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டே அமர்ந்திருந்தார்.

இங்கே சாவித்திரி சித்தார்த்தை எண்ணிப் பதட்டத்துடன் அமர்ந்திருக்க, மறுபுறம் சித்தார்த் தான் வந்த வழி தெரியாமல் அந்தக் காட்டிற்குள் அங்குமிங்கும் அல்லாடிக் கொண்டு நின்று கொண்டிருந்தான்.

“உனக்கு இது தேவைதான், சும்மா வழக்கமாக போகும் வழியில் போய் தேவையான போட்டோவை எடுக்காமல் இப்படி தெரியாத வழியில் வந்து மாட்டிக்கிட்டியேடா சித்தார்த், இப்போ அந்த ஜி.பி.எஸ்ஸை ஆன் பண்ணவும் பயமாக இருக்கு, நம்ம நினைத்து வந்த மாதிரி எந்தவொரு போட்டோவும் எடுக்கல, இப்போ நான் வேறு வழியில் வந்தது அவங்களுக்கு தெரிந்தால் இனி சத்தியமாக என்னை இங்கே வர அனுமதிக்கவே மாட்டாங்க, இப்போ நான் என்ன பண்ணுவேன்? யாருக்காவது கால் பண்ணி என் நிலைமையைப் பற்றி சொல்லலாம்னனு பார்த்தாலும் எந்த பக்கமும் சிக்னல் கிடைக்க மாட்டேங்குது. ஆண்டவா! என்ன இது சோதனை?” சித்தார்த் எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் ஒரு புறம் செல்ல எத்தனிப்பதும், பிறகு சிறு தயக்கத்துடன் வேறு பக்கமாக செல்ல எத்தனிப்பதுமாக தடுமாறிக் கொண்டு நின்றான்.

நேரம் செல்லச் செல்ல சித்தார்த்தின் தடுமாற்றம் அதிகரிப்பது போல இருக்கவே இனியும் இந்தக் காட்டிற்குள் இப்படி அல்லாடிக் கொண்டு இருப்பது சரியில்லை என்று உணர்ந்து கொண்டவன் தன் மனம் சொன்னக் கணக்கின் படி ஒரு பாதையைத் தெரிவு செய்து அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த தருணம் சட்டென்று ஏதோ ஒரு மிருகம் வேகமாக அந்த வழியாக ஓடிச் செல்வது போல சத்தம் கேட்கவே, ஒரு கணம் அந்த சத்தத்தைக் கேட்டு தயங்கி நின்றவன் பின்னர் ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டு அந்த வழியாகவே ஓட்டமும் நடையுமாக செல்லத் தொடங்கினான்.

தனியாக காட்டிற்குள் சிக்கிக் கொண்டதை எண்ணி ஏற்பட்ட பதட்டமும், அங்கங்கே கேட்கும் பலவிதமான சத்தங்களும் அவனது தைரியத்தை சிறிது ஆட்டம் காணச் செய்திருக்க, எப்படியாவது தனது அன்னையைச் சென்று பார்த்தால் போதும் என்கிற எண்ணத்துடன் சித்தார்த் ஓடிக் கொண்டிருந்த வேளை எதிரே ஒரு பெரிய மரக்குற்றி விழுந்து கிடந்ததை அவனது கண்கள் கவனிக்கத் தவறியிருந்தது.

பதட்டமும், பயமும் கண்களை மறைக்க தன் மனது கொடுத்த தைரியத்தில் வேகமாக ஓடிக் கொண்டிருந்தவன் தன் கண்கள் கவனிக்கத் தவறியிருந்த குற்றியில் இடறி அப்படியே ஒரு பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்திருந்தான்.

கண்ணிமைக்கும் நொடிக்குள் எல்லாம் நடந்து முடிந்திருக்க ஒரு வழியாக தட்டுத்தடுமாறி எழுந்து நின்றவன் தான் நின்று கொண்டிருந்த இடத்தை சுற்றிலும் திரும்பிப் பார்க்க, அந்த இடத்தில் ஒரு நீரோடை பாயும் ஓசையைத் தவிர வேறு எதுவுமே கேட்கவில்லை.

இதற்கு மேலும் தனது பிடிவாதக் குணத்தை கை விடாவிட்டால் தனது உயிருக்கே அது வினையாகிப் போய் விடும் என்பதை வெகு தாமதமாக உணர்ந்து கொண்ட சித்தார்த், “இனி காட்டிற்குள் வராமல் போனாலும் பரவாயில்லை, முதலில் உயிரோடு இங்கிருந்து தப்பிச்சு ஆகணும். நான் பண்ண முதல் தப்ப அந்த ஜி.பி.எஸ் மெஷினை ஆஃப் பண்ணது, இப்போ உடனே அதை ஆன் பண்ணிடலாம்” என்று முடிவெடுத்துக் கொண்டவன் தன் தோளில் மாட்டியிருந்த பைக்குள் தன் கையை விட்டுத் துழாவ, அந்தோ பரிதாபம் அவன் விழுந்த வேகத்தில் அவனது பை கிழிந்து பல பொருட்கள் தொலைந்து போய் இருந்தது.

ஜி.பி.எஸ் கருவியைக் காணவில்லை என்றதும் ஒரு கணம் சித்தார்த்திற்கு தன் மூச்சே நின்று விட்டது போல இருந்தது.

தான் விளையாட்டாக செய்ய நினைத்த காரியம் இப்போது தனக்கு இந்தளவுக்கு ஆபத்தாக முடிந்து விட்டதே என்கிற குற்றவுணர்வுடன் சித்தார்த் அந்த இடத்திலேயே முழங்காலிட்டு அமர்ந்து கொள்ள, அவன் மூச்சுக்காற்று சத்தத்திற்கு மேலதிகமாக அந்தக் காட்டில் இன்னும் ஒரு காலடி ஓசையும் அவனுக்குத் துல்லியமாக கேட்க ஆரம்பித்தது.

**********
சித்தார்த் வழக்கமாக காட்டுக்குள் செல்லும் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த மாயாவுக்கு சாவித்திரியின் பதட்டமான தோற்றத்தைப் பார்த்து சிறிது கவலையாகத் தான் இருந்தது.

இந்த ஊட்டிக்கு அவர் வந்த நாளிலிருந்து அவரது முகம் இந்தளவுக்கு பதட்டமாக ஒரு நாளும் இருந்ததில்லை, அப்படியிருக்கையில் அவரது முகத்தில் தெரிந்த பதட்டமே அவருக்கு சித்தார்த் மீது எந்தளவுக்கு பிரியம் இருக்கின்றது என்பதை உணர்த்த ஒரு கணம் சித்தார்த்தின் மீது அவளுக்கு சிறு பொறாமையாகவும் இருந்தது.

இந்தளவு பாசம் காட்டும் ஒரு அன்னை கிடைக்க அவரது மூன்று பிள்ளைகளும் எவ்வளவு நன்றிக்கடன் செலுத்தினாலும் போதாது என்றெண்ணியபடி சித்தார்த் செல்லும் காட்டை வந்து சேர்ந்திருந்த மாயா அங்கே காவலுக்கு நின்று கொண்டிருந்த ஒரு அதிகாரியின் அருகில் செல்ல, அவளை அங்கே பார்த்ததுமே முகம் மலர அவளெதிரில் வந்து நின்ற அந்த அதிகாரி, “அடடே! மாயா, வா, வா. என்னம்மா திடீர்னு இந்தப் பக்கம்? காட்டுக்குள்ளே ஏதாவது விசிட் போகணுமா?” என்று வினவ,

பதிலுக்கு அவரைப் பார்த்து புன்னகை செய்தபடியே மறுப்பாக தலையசைத்தவள், “அதெல்லாம் இல்லை ராமு ஆங்கிள், எனக்குத் தெரிந்த ஒருத்தர் இங்கே காட்டுக்குள்ளே வந்திருக்காரு, அவருக்கு போன் பண்ணோம் ரீச் ஆகல, அதுதான் அவரு உள்ளே இருக்காரா, இல்லை கிளம்பிட்டாரான்னு பார்த்துட்டுப் போகலாம்னு வந்தோம்” என்று கூற,

“ஓஹ் அப்படியா?” என்று கேட்டுக் கொண்டவர் அவளின் பின்னால் சிறிது தள்ளி பதட்டத்துடன் நின்று கொண்டிருந்த சாவித்திரியையும், கௌசல்யா மற்றும் கௌசிக்கையும் பார்த்துக் கொண்டே அங்கேயிருந்த ஒரு கூடாரம் போன்ற அமைப்பை நோக்கி மாயாவை அழைத்துக் கொண்டு சென்றார்.

“ஆள் யாருன்னு டீடெயில்ஸ் சொல்லும்மா, நான் செக் பண்ணி சொல்லுறேன்”

“பேரு வந்து சித்தார்த், ஊர் கோயம்புத்தூர், ஏதோ போட்டோகிராப் கம்பெடிஷனுக்காக வந்ததாக சொன்னாங்க”

“ஓஹ்! அந்தக் கோயம்புத்தூர் தம்பியா? அந்தத் தம்பி சொன்ன நேரத்திற்கே திரும்பி வரும் ஆளாச்சே, எப்படியும் இப்போ அவரு திரும்பி வந்துட்டு தான் இருப்பாங்க, எதற்கும் ஒரு தடவை ஜி.பி.எஸ்ஸைப் பார்த்துடலாம்” என்றவாறே அந்த அதிகாரி தனக்கு முன்னால் இருந்த திரையில் பார்க்க, அவரது விழிகளோ தான் பார்த்த விடயத்தைக் கண்டு அதிர்ச்சியில் பன்மடங்கு விரிந்தது.

அந்த அதிகாரியின் முகத் தோற்றம் மாறுவதைப் பார்த்ததும் ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து கொண்ட மாயா, “என்னாச்சு அங்கிள்? ஏதாவது பிரச்சனையா?” என்று வினவ,

அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவர், “ஒரு நிமிஷம் இங்கேயே இரும்மா” என்று விட்டு, அந்தக் கூடாரத்தில் இருந்து வெளியேறிச் சென்று ஒரு சில நிமிடங்களுக்குப் பின்னர் இன்னொரு நபரை அழைத்துக் கொண்டு வந்தார்.

அந்தப் புதிய நபரும் ஏதேதோ காகிதங்களைப் புரட்டிப் பார்ப்பதும் அந்தக் கணிணித் திரையில் எதையோ மும்முரமாக பார்ப்பதுமாக நின்று கொண்டிருக்க, அவர்கள் அமைதியாக நின்று கொண்டிருந்த ஒவ்வொரு நொடிகளும் மாயாவுக்கு கண்களை இருட்டிக் கொண்டு வருவது போலவே இருந்தது.

அவர்கள் இருவரும் பேசுவதை வைத்தே சித்தார்த் தான் கொண்டு சென்ற ஜி.பி.எஸ் கருவியைக் காலையிலேயே ஆஃப் செய்து விட்டான் என்றும், அவன் அதை ஆஃப் செய்த இடம் அவன் வழக்கமாக செல்ல அனுமதிக்கப்பட்ட பாதைக்கு எதிரானது என்றும் புரிந்து கொண்ட மாயா இந்த செய்தியை எப்படி சாவித்திரியிடம் சொல்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டு நின்றாள்.

சித்தார்த்தின் ஜி.பி.எஸ் சிக்னலை மீண்டும் பெறமுடியாது போகவே அவனது தொலைபேசிக்கு அழைப்பை மேற்கொள்ளப் பார்த்த அந்த அதிகாரிகள் அதற்கும் அவனிடமிருந்து எந்தவொரு பதிலும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டவர்களாக இப்படியான நிகழ்வுகள் அடிக்கடி அங்கே நடப்பதால் அதற்கு அவர்கள் எடுக்கும் இறுதி தீர்வாக இனியும் தாமதிக்காமல் அவனைத் தேடி காட்டிற்குள்ளேயே செல்லலாம் என்று முடிவெடுத்திருக்க, அவற்றை எல்லாம் கேட்டு சாவித்திரி தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அப்படியே கௌசல்யாவின் மீது சரிந்திருந்தார்.

“ஐயோ ஆண்ட்டி!” மாயா சிறு பதட்டத்துடன் சாவித்திரியின் கையைப் பிடித்துக் கொள்ள,

கண்கள் கலங்க அவளது கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டவர், “தயவுசெய்து என் பையனை எப்படியாவது என் கிட்ட கொண்டு வந்து சேர்த்துடு மாயா, ப்ளீஸ். எனக்கு இப்போதைக்கு உன்னைத் தவிர வேறு யாரரையுமே நம்ப தோணல, நான் உன்னைத் தான் மலை போல நம்பி இருக்கேன்” என்றவாறே தேம்பித் தேம்பி அழ ஆரம்பிக்க,

அவரைத் தேற்றும் வழி தெரியாமல் கௌசல்யா மற்றும் கௌசிக்கை அவரைப் பார்த்துக் கொள்ளும் படி கூறியவள், “ராமு அங்கிள், எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா?” என்று அந்த அதிகாரியில் ஒரு நபரைப் பார்த்து வினவ,

அவரோ, “சொல்லும்மா என்ன விஷயம்?” என்று கேட்டார்.

“நீங்க அவரைத் தேடிப் போகும் போது நானும் உங்க கூட வர்றேனே, ஏன்னா அவங்க அம்மா இங்கே ரொம்ப பதட்டமாக இருக்காங்க, அவங்களை இப்படி பார்க்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கு, நானும் உங்க கூட வந்தேன்னா அங்கே என்ன நடக்குதுன்னு உடனே இவங்களுக்கு சொல்லலாம், இல்லேன்னா நீங்க திரும்பி வந்து தகவல் சொல்லுற வரைக்கும் இவங்க இப்படியே இருந்து அவங்களுக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா. ப்ளீஸ் அங்கிள் முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க, ப்ளீஸ்” என்றவாறே மாயா அவரைப் பார்த்து தன் இரு கரம் கூப்ப,

அவசரமாக அவளது கையைப் பிடித்து தடுத்தவர், “என்னம்மா நீ இப்படி எல்லாம் பேசுற? நீ எனக்கும், என் பொண்ணுக்கும் எவ்வளவோ உதவி பண்ணுற, உனக்காக நான் இந்த சின்ன உதவி கூட பண்ண மாட்டேனா? சரி மாயா, நீ என்கூடவே வாம்மா, யாரும் கேட்டால் நான் சமாளிச்சுக்கிறேன்” என்று கூற,

அவரைப் பார்த்து முகம் நிறைந்த புன்னகையுடன் நின்று கொண்டிருந்தவள் சாவித்திரியின் அருகில் ஓடிச் சென்று, “சாவித்திரி ஆன்ட்டி நான் இப்போ உங்களுக்கு ஒரு வாக்கு தர்றேன், இப்போ நான் காட்டிற்குள்ளே போய் திரும்பி வரும் போது கண்டிப்பாக உங்க பையனோடு தான் வருவேன்” என்றவாறே அவரது கரத்தில் தன் கரத்தை அழுத்தி விட்டு சென்று விட, சாவித்திரி மனம் நிறைந்த ஏக்கத்துடன் அவள் சென்ற வழியையே பார்த்துக் கொண்டு நின்றார்.

இங்கே மாயா மற்றும் வனத்துறை அதிகாரிகள் சித்தார்த்தை தேடி பரபரப்புடன் அந்தக் காட்டைச் சுற்றி வலம் வர ஆரம்பித்திருக்க, மறுபுறம் சித்தார்த் தான் காணும் காட்சியை நம்ப முடியாதவனாக அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தான்.

அப்படி அவன் மொத்தமாக அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும் அளவுக்கு அவன் பார்த்துக் கொண்டிருந்தது வேறு எதுவும் அல்ல, இத்தனை வருடங்களாக அவன் கனவில் தோன்றி அவனை இம்சை செய்து கொண்டிருந்த அந்தப் பாரிய தோற்றம் கொண்ட புலி ஒன்று தான்.

இத்தனை காலங்களாக ஏதோ தனது கனவில் தான் அவை எல்லாம் நடக்கும் என்று அவன் நினைத்திருந்த நிகழ்வு இப்போது அவன் முற்றிலும் எதிர்பாராத தருணத்தில் அவன் முன்னால் நிகழ்ந்து கொண்டிருக்க, ஆரம்பித்தில் அதை நம்புவதா? வேண்டாமா? என்று கூட அவனுக்குப் புரியவில்லை.

அந்தப் புலியை தனது கேமராவினுள் சிறைப்பிடிக்கச் சொல்லி அவன் மனது அவனைத் தூண்டினாலும் அவனது மூளையோ அந்த இடத்தை விட்டு அவனைத் தப்பியோடும் படி எச்சரித்துக் கொண்டே இருந்தது.

சித்தார்த்தின் மனதிற்கும், மூளைக்கும் இடையே நடந்த போராட்டத்தில் இறுதியாக அவனது மனமே வென்றிருக்க, அங்கிருந்த புதரொன்றின் பின்னால் மறைந்து நின்று கொண்டவன் நீரோடையில் நீரருந்திக் கொண்டிருந்த புலியை படம் பிடிக்க தனது கேமராவை தயார் படுத்திக் கொண்டான்.

தன் கனவில் வந்தது போல் ஏதும் மரக்குற்றிகள் அங்கே கிடக்கிறதா என்பதையும் ஒருமுறை நன்கு நோட்டம் விட்டுக் கொண்டவன் பின்னர் மெல்ல மெல்ல அந்தப் புதரிலிருந்து வெளியே வந்து அந்தப் புலியை புகைப்படம் எடுக்க எத்தனிக்க, மனித வாடை வீசியதால் என்னவோ அந்தப் புலி இப்போது சித்தார்த் மறைந்து நின்ற புதரை கூர்மையாகப் பார்த்துக் கொண்டு நின்றது.

அந்தப் புலியின் பார்வையில் மேலெல்லாம் சிலிர்த்துப் போக, அச்சத்தில் பன்மடங்கு துடித்த தன் இதயத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டவன், “கடவுளே! கடவுளே! காப்பாற்று, காப்பாற்று” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டு நின்ற தருணம் அழுத்தமான காலடி ஓசைகள் அவனது செவிகளை எட்ட ஒரு கணம் அவனுக்கு அடிக்கடி தான் காணும் கனவுதான் நினைவுக்கு வந்தது.

இத்தனை நாட்கள் விளையாட்டாக தான் கண்ட கனவு இன்று பலிக்கப் போகிறது போல என்கிற அச்சத்துடன் சித்தார்த் தன் கண்களைத் திறந்து பார்க்க, அவன் மறைந்து நின்று கொண்டிருந்த புதரிற்கு நேர் எதிராக அந்தப் புலி அங்குமிங்கும் நடந்து கொண்டு நின்றது.

இத்தனை நெருக்கத்தில் அந்தப் பாரிய தோற்றம் கொண்ட விலங்கைப் பார்த்ததும் சித்தார்த் தன்னையும் அறியாமல் சத்தமிட்டு அலறப் பார்க்க, சட்டென்று ஒரு மென்மையான கரம் அவனது வாயை அழுத்தமாக மூடிக் கொண்டது…..