கனவு 19
கனவு 19
அத்தியாயம்-19
அடுத்த நாள் காலை கௌசி எழ… விக்னேஷ் ஷோபாவில் இல்லாததைக் கவனித்தாள். பிறகு மணியைப் பார்த்தவள் அது ஆறரையைக் காண்பிக்க
வேகவேகமாக எழுந்து படுக்கையை ஒதுக்கி காலைக் கடன்களை எல்லாம்
விக்னேஷ் வருவதற்குள் முடித்தாள்.
பின் விக்னேஷ் வர அவனிற்குக் காஃபியைக் கொடுத்து விட்டுத் தனக்கும்
எடுத்துக் கொண்டு உட்காரந்தாள். “காலைல என்ன செய்யனும்?” என்று
கௌசி கேட்க “டிபனே ஏதாவது செய்.. மாமாவுக்கும் அம்மாவுக்கும் செஞ்சிரு.. நான் எப்படியும் ஹாஸ்பிடல் போயிட்டு அப்புறம் தான் வளைகாப்பிற்குப் போவேன்” என்றான்.
“சரி” என்றவள் வேலைகளை
ஆரம்பித்தாள்.
பின் அவன் ரெடியாகச் செல்ல வெளியே யாரோ கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டது.
யாரென்று சமையல் அறையில் இருந்து எட்டிப் பார்த்தவள் தன் தந்தையை விட வயதில் மூத்தவர் உள்ளே வருவதைப்
பார்த்தாள். அவர் உரிமையாய் உள்ளே வர யாரோ தெரிந்தவர் தான் போல என்று நினைத்தவள் “வாங்க” என்று
அழைத்து உட்கார வைத்தாள்.
“காஃபியா டீயா?” – கௌசி.
“இல்லமா.. எதுவும் வேண்டாம்.. விக்கா எங்கே? ரெடி ஆயிட்டானா? என்று வினவ..
அவரின் விக்கா என்ற அழைப்பு அவளை ஏதோ செய்தது.
“இருங்க கூப்பிடறேன்” என்றவள் விக்னேஷின் அறை முன் நின்று கதவைத் தட்டினாள்.
கதவை அவன் திறக்க “உன்னைப் பார்க்க ஒரு தாத்தா வந்திருக்கிறார்” என்று
சொல்ல “மகாலிங்கம் தாத்தா கௌசி” என்று அவளை அழைத்து வந்தவன் இருவருக்கும் இருவரையும் அறிமுகம் செய்தான்.
“வாங்க டிபன் ஆச்சு சாப்பிடலாம்” என்று
இருவரையும் கௌசி அழைக்க.. சாப்பிட்டு விட்டு தான் வந்தேன் என்ற
மகாலிங்கம் அய்யாவை வற்புறுத்தி ஒரு இட்லியாவது என்று இருவரும் அழைத்து
சாப்பிட வைத்தனர்.
சாப்பிட்ட பின் நியாபகம் வந்தவனாக விக்னேஷ் “கௌசி சொல்ல மறந்துட்டேன்
பார். வியா குட்டிக்குக் காய்ச்சலாம்.. ஜீவா உன்ன அங்கே வீட்டுக்கு வரச் சொல்றான். ஹாஸ்பிடல் போயிட்டு வந்துட்டாங்க. பட்
நாங்க போயிட்டு வர வரைக்கும் நீ குட்டி கூட இருந்து அவள பாத்துக்க” என்று
சொல்ல சரி என்றாள். பின் இருவரும் சாப்பிட்டு முடித்த பின் கௌசி கிளம்பச் சென்று இருபது நிமிடந்தில் தயாராகி
வந்தாள்.
“கிளம்பலாம்” என்று வந்து நிற்க விக்னேஷ் காரை எடுத்தான். மகாலிங்கம்
ஐயா ஏதோ பேசப்பேச அவரோடு இயல்பாகவே வந்தாள்.
பின் ஜீவா வீடு வந்ததும் மூவரும் இறங்க ஜீவா வெளியே வந்து மகாலிங்கம்
ஐயாவை வரவேற்றான். மகாலிங்கம் ஐயா நல்ல பழக்கமே.. அதனால் அவருக்கும் சந்தியா வளைகாப்பிற்கு அழைப்பு இருந்தது.
உள்ளே மதியும் ஜீவாவும் தயாராக இருந்தனர். “அத்தை எங்கே?” -கௌசி.
“அவங்க காலைல சீக்கரமே
கிளம்பிட்டாங்க.. நாங்க தான் பாப்பாக்கு காய்ச்சல்ன்னு போக முடியல” என்று மதி
பதில் அளித்தாள்.
“நீங்க போயிட்டு வாங்க மதி.. நான் பாத்துக்கறேன்..” என்றவள் “மெடிசன் ஏதாவது இடையில குடுக்கணும்மா”
என்று கேட்டாள் கௌசி.
கௌசி கேட்க மதி டாக்டர் குடுத்த மருந்தில் எதைக் குடுக்க வேண்டும் என்று கௌசிக்குச் சொன்னாள்.
எல்லாவற்றையும் சரியாகக் கேட்டுக் கொண்டவள் அனைவரையும் வழி அனுப்பி வைத்தாள்.
மூவரையும் அனுப்பி விட்டு வந்த கௌசி உள்ளே வியாஹா தூங்கிக்
கொண்டிருந்த அறைக்குச் சென்றாள். சுட்டியாய் இருப்பவள் இன்று காய்ச்சலில்
அயர்ந்து படுத்திருப்பது கௌசிக்கு சற்று கனமாகத் தான் இருந்தது.
மெதுவாக அருகில் சென்று பெட்டின் நுனியில் அமர்ந்தவள் அவளின் பாப் கட் முடியைக் கோதி நெற்றியில் முத்தம்
இட்டாள். தூக்கத்தில் விலகி இருந்த வியாஹாவின் போர்வையை நன்கு இழுத்துப் போர்த்தி விட்டவள் அந்த
அறையிலேயே ஒரு சேரை எடுத்துப் போட்டு உட்கார்ந்து போனை நோண்டினாள்.
திடீரென போன் அடிக்க.. கட் செய்தவள் வெளியே ஹாலிற்கு வந்து கவிதாவிற்கு
கூப்பிட்டாள். ஆம் கவிதா தான்
கூப்பிட்டது. திரும்பி தோழிக்கு போனைப் போட்டாள்.
“ஹலோ கௌசி” – கவிதா.
“கவிதா” என்றவள் “சாரி கவி.. நான் உனக்கு காலே பண்ணல.. தப்பா
நினைச்சுக்காதே” என்று மன்னிப்பைக் கோரினாள்.
“அதெல்லாம் ஒன்னும் நான் நினைக்கல கௌசி.. அப்பா எப்படி இருக்காரு?” என்று
கேட்டாள்.
“இப்போ பரவாலையா இருக்காரு கவி.. ஆனா நல்ல இருந்தவர தான் நான் படுக்க
வச்சிட்டேன்” என்ற கௌசியின் குரல் தழுதழுத்தது.
“கௌசி அழுகாத.. எல்லாமே விதி.. அப்பாக்கு நடந்ததுக்கு நீ காரணம்ன்னா அப்போ உனக்கு நடந்ததுக்கு யார்
காரணம் சொல்லு.. எல்லாமே
சூழ்நிலைநால நடந்தது.. கூல் கௌசி” என்று தோழியாய் கௌசியை சமாதானம்
செய்தாள்.
“சரி எல்லோரும் என்ன சொல்றாங்க.. எல்லோரும் ஓகே தான உன்கிட்ட.. நல்லா
பேசறாங்களா எப்பவும் போல” – கவிதா.
“எல்லாரும் நல்லா பேசறாங்க கவி.. ஆனா என்னால தான் பழைய மாதிரி ஆக முடியலை.. எல்லார் கிட்டையும் பேச ஒரு
மாதிரி தயக்கமா இருக்கு.. ஏதோ என் உரிமையை இழந்த மாதிரி” என்று தவிப்புடன் சொன்னாள் கௌசி.
“அதெல்லாம் போகப்போக சரி ஆயிரும் கௌசி.. நீ உன் பேமிலி கூட சேந்ததே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..
ஃப்ரீயா விடு” என்று கவி சொல்ல “ம்ம்” என்று மட்டும் சொன்னாள் கௌசி.
திடீரென நியாபகம் வந்தவளாக “வீட்டுல
சொல்லிட்டியா கவிதா” என்றுக் கேட்டாள்.
“ம்ம்” – கவிதாவின் குரல் குழைந்தது.
“ஹே.. என்ன வெட்கப் படறிய கவிதா” என்று கேட்டாள் கௌசி சிரிப்புடனே.
“வந்த சொன்னப்போ.. அம்மா
அடிச்சிட்டாங்க கௌசி.. அப்பா பேசவே இல்லை.. அப்புறம் ஒருவழியா பேசி ஒத்துக்க வச்சிட்டேன்.. இன்னும்
மூணு மாசத்துல கல்யாணம் ” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
“வாவ்.. சூப்பர்.. கங்கிராட்ஸ் கவி” என்று கௌசி தன் சந்தோஷத்தைத் தெரிவிக்க
கவியோ “நான் எப்போ உனக்கு சொல்றது கங்கிராட்ஸ்?” என்று கேட்க
முதலில் புரியாத கௌசிக்கு பின் புரிந்தது.
“எனக்கு விக்னேஷிற்கும் கல்யாணம் கவி” என்று வெற்றுக் குரலில் சொன்னாள்.
“அப்போ இன்னும் விக்னேஷிற்கு கல்யாணம் ஆகலையா?” என்று அதிர்ச்சி
மாறாமல் கேட்டாள் கவிதா.
“இல்லை” என்ற கௌசி.. நான்சியின் வேலை.. செந்தில் நாதன் மாமா இறப்பு..
விக்னேஷ் வேலையை விட்டது என அனைத்தையும் கூறி முடித்தாள்.
“ஓ… சரி” என்ற கவிதா “பீ ஹாப்பி கௌசி” என்றாள்.
“இல்ல கவி.. ஐம் நாட் அட் ஆல் ஹாப்பி.. குழப்பம் தான் அதிகம் ஆயிருக்கு” என்றவள் “நம்ம ஒரு காலத்துல அழுது
ஏங்குன விஷயம்.. நாம் வாழ்க்கையவே வெறுத்த பிறகு கிடைக்கும் போது
குழப்பம் தான் வருது.. சந்தோஷம் வரதில்லை” என்றாள்.
“இல்ல கௌசி… நீயா வாழ்க்கைய வெறுக்கல.. உன்ன அந்த குருங்கற
அரக்கன் வெறுக்க வச்சிட்டான்.. அவனே போய் சேர்ந்திட்டான்.. நீ அவன மறந்திட்டு மாற ட்ரைப் பண்ணு” என்று அறிவுரை
வழங்கினாள் கவிதா.
“சரி கௌசி… பிரபு சார் ரௌண்ட்ஸ் வருகிறார்.. நான் வைக்கிறேன்” என்றவள் போனை வைத்துவிட்டாள்
கவிதா.
போனை வைத்தவள் உள்ளே சொல்ல வியாஹா நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும் என்று எண்ணியவள் சமையல் அறையில் கிடந்த சில
பாத்திரத்தை எடுத்துப் போட்டு கழுவ ஆரம்பித்தாள். கவிதாவுடன் பேசியதை
நினைத்துக் கொண்டிருந்தாள். என்ன தான் எடுத்துச் சொன்னாலும் அவள் மனம் அதை ஏற்க மறுத்தது. இந்த நான்சி மட்டும் சரியாக இருந்திருந்தால் இப்படி
நடந்திருக்குமா? என்று அவளை சரமாரியாக மனதில் திட்டிக் கொண்டு இருந்தாள் கௌசி.
அதற்குள் “சித்திதி…” என்ற குரலில் திரும்பியவள் வியாஹா கண்ணைத்
துடைத்தபடி நின்றிருப்பதைக் கண்டாள்.
கையைக் கழுவிக் கொண்டு அருகில் செல்ல வியாஹாவோ தன் இரு கைகளைத் தூக்கி ‘தூக்கு’ என்றபடி நின்றாள். அவளின் செயலை ரசித்தபடி
அவளைத் தூக்கிய கௌசி அவளின் கழுத்தையும் நெற்றியையும் தொட்டுப்
பார்த்தாள். “வியா பாப்பாக்குக் காய்ச்சல் குறஞ்சிருச்சு கொஞ்சம்” என்று குழந்தையின் தலையில் லேசாக முட்டினாள்.
“ஆனா.. இப்போ கொஞ்சம் சாப்பிட்டுட்டு மருந்து குடிச்சா.. ஃபுல்லா சரி அயிரும்”
என்றாள் கௌசி அவளை இடுப்பில் வைத்தபடியே.
“சித்தி மருந்து கசக்கும்” – என்று சிணுங்கினாள் வியாஹா.
“இல்லை சித்தி நீங்க மருந்து குடிச்சாகொஞ்சம் சக்கரை தரேன்.. கசக்காது ஓகேவா?” என்று வினவ “ம்அம்” என்று
மீண்டும் சிணுங்கியவள் தலையை ஆட்டினாள்.
பின் வியாஹாவை உள்ளே கொண்டு சென்று டைனிங் டேபிள் மேல் குழந்தையை உட்கார வைத்தவள் மதி
சொல்லிய படி ரசம் சாதத்தை ஒரு கப்பில் தேவையான அளவு போட்டு ஸ்பூனுடன்
வியாஹா அருகில் வந்தாள்.
பிறகு சித்தியும் மகளும் ஏதேதோ கதைகள் பேச ரசம் சாதம் தன்னால் உள்ளே சென்றது. சாப்பாட்டை ஊட்டி
விட்டபின் வியாஹாவின் வாயைத் துடைத்து விட்டவள்.. மருந்தையும் சக்கரை டப்பாவையும் எடுத்து வந்தாள்.
மதி சொன்ன அளவு டானிக்கை ஊற்றி வியாஹா வாயில் ஊற்ற கசப்புத்
தாங்காதவள் அப்படியே துப்ப அது அவளின் உடையிலும் கௌசி கையிலும் விழுந்தது. மருந்தைத் தன் சித்தி மேல்
துப்பியதில் அரண்டு போய் கௌசியை வியாஹா பார்க்க கௌசியோ முகம் சுளிக்காமல் பக்கத்தில இருந்த டவலை
எடுத்து மருந்து சிந்திய இடத்தை எல்லாம் சுத்தம் செய்தாள். தன் அன்னையிடம் ஒரு தடவை இதே மாதிரி செய்து திட்டு வாங்கிய நினைவு வர.. பக்கத்தில வந்த
கௌசியைத் தாவிக் கட்டி முத்தத்தைத் தந்தாள் வியாஹா.
“சித்தி.. நீங்க என்ன திட்டவே
மாட்டிங்களா.. நீங்க ரொம்ப குட் கேர்ள்” என்று அவள் கன்னத்தோடு கன்னம்
வைத்துக் கொஞ்ச.. கௌசி அந்த அன்பில் கரைந்தாள்.
“சரி.. நீங்களும் இப்போ சித்தி மருந்து தருவேன் குடிக்கணும் சரியா” என்று கேட்க அழகாய் தலையை ஆட்டினாள்
வியாஹா. இந்த முறை மருந்தைக் குடித்துவிட்டு சிறிய அளவு சர்க்கரையை
அமைதியாக வாங்கிக் கொண்டாள்.
பின் சித்தியும் மகளும் ஹாலிற்கு வர காலிங் பெல் அடித்தது. வியாவை
ஷோபாவில் உட்கார வைத்தவள் போய்க் கதவைத் திறந்தாள். கதவைத் திறந்த
கௌசி அப்படியே நின்றுவிட்டாள். காரணம் நின்றிருந்தது மதியின்
அண்ணன் சுதாகரன். வளைகாப்பில் யாருடனோ ஜீவா பேசிய போது குழந்தையை கௌசியிடம் விட்டுவிட்டு வந்திருப்பதைத் தெரிந்து கொண்டவன்
அங்கே வீட்டிற்குக் கிளம்புகிறேன் என்று
சொல்லிவிட்டு இங்கே வந்திருக்கிறான்.
இவன் எதற்கு இங்கே வந்தான்? என்று யோசித்த கௌசி.. சரி பாப்பாவைப்
பாக்க இருக்கும் என்று நினைத்தாள். “வாங்க” என்று வழியை விட்டு உள்ளே
விட்டாள் அவனை. வந்து உட்கார்ந்தவன் கௌசியை மேல் இருந்து கீழ் வரை
அளக்க கௌசிக்கு ஆத்திரத்தைக் கிளப்பியது.
“காஃபியா டீயா? ” என்று முடிந்த அளவு பொறுமையை இழுத்து வைத்துக் கேட்டாள்.
“என்ன கேட்டாலும் கிடைக்குமோ?” என்று
அவன் இரட்டை வசனத்தில் குழந்தை முன்னாலேயேக் கேட்க கௌசி வந்த
கோபத்தை அடக்கிக் கொண்டு சமையல் அறைக்குள் புகுந்து விட்டாள்.
“அறிவு கெட்ட ஜென்மம்.. பொண்ணுங்க கிட்டயும் எப்படி பேசணும்ன்னு தெரியாது..
குழந்தை முன்னாடியும் எப்படி பேசுது பாரு.. தறுதலை.. ஆகாவலி..” என்றுத் திட்டிக் கொண்டே கடனே என்று ஒரு
டீயைப் போட்டாள்.
பின் அவள் ட்ரெஸை யாரோ இழுப்பது போலப் பதறித் திரும்ப வியாஹாதான்
அவள் சுடிதார் டாப்பை பிடித்திருந்தாள். அவளைத் தூக்கியவள் “தூக்கம் வருதா?”
என்று கேட்க அவள் இல்லை எனத் தலை ஆட்டினாள்.
“சித்தி மாமாவை ஏன் உள்ளே விட்டீங்க.. எனக்கு அவரைப் பிடிக்கவே பிடிக்காது.. அவரு என்னைத் திட்டிக்கிட்டே இருப்பாரு.. லூசு மாதிரி” என்று வியாஹா சொல்ல
பொங்கி வந்த சிரிப்பை அடக்கினாள்.
“ஷ்ஷ்.. மெல்ல பேசு.. மாமாக்கு கேட்கும்” என்று கௌசி எச்சரிக்க.. அவள் இடுப்பில்
இருந்து கீழ் இறங்கி ஹாலிற்குச் சென்றது.
மீண்டும் இரண்டு நிமிடத்தில் தன் துப்பட்டாவை இழுக்க “என்ன வியாக்குட்டி வேணும்..” என்று திரும்ப அவளின்
துப்பட்டா சுதாகரன் கையில் இருந்தது.
“ஏய்.. என்னது இது.. மரியாதையா துப்பட்டாவை விடு” என்று எச்சரித்து
துப்பட்டாவை இழுக்கப் பார்த்தாள் கௌசி. ஆனால் அவனின் பிடியோ இரும்பாய்
அவளின் துப்பட்டாவை பற்றி இழுத்தது. கௌசி தயங்கவே இல்லை.. அடுப்பில்
கொதித்துக் கொண்டிருந்த டீயை கைப்பிடியில் எடுத்து அவன் மேல் வீசிவிட்டாள்.
சுடசுட டீ தன் மேல் விழ அலறியவன் அவளின் துப்பட்டாவில் இருந்து தன்னால் கையை எடுத்தான். அதற்குள் அவனின் சத்தத்தில் ஹாலில் டி.வி யில் மூழ்கி
இருந்த வியாஹா உள்ளே ஓடி வந்தாள். டீயை மேலே ஊற்றிய கோபத்தில் அவன்
கௌசியைப் பிடிக்க வர டீப்
பாத்திரத்திலேயே கையை ஓங்கினாள் கௌசி.. ஆனால் அவள் முயற்சியை அவன் கையை வைத்துத் தடுத்து
கௌசியின் கையில் இருந்த
பாத்திரத்தைப் பிடிங்கி தூக்கி எறிந்தான்.
பாத்திரத்தை எரிந்துவிட்டு கௌசியின் தோளை அவன் முரட்டுத்தனமாகப் பற்ற
கௌசி தீச்சுட்டார் போல அவனிடம் இருந்து விலகித் திமிறினாள். பின் கையைப் பிடித்து இழுக்க கௌசி
சமையல் அறையின் ஜன்னலை அழுத்தமாகப் பிடிக்க அவனின் பிடியும்
விடவில்லை.. கௌசியின் பிடியும் ஜன்னல் கம்பியில் இருந்து தளரவில்லை.
இதை எல்லாம் பார்த்த வியாஹா சுதாகரிடம் ஓடி வந்து அவனின் காலைச்
சுற்றிப் பிடித்து இழுக்க.. குழந்தையால் அவனை அசைக்கக் கூட முடியவில்லை.
பின் வியாஹா அவன் காலைப் பிடித்து நறநறவெனக் கடிக்க ஆரம்பிக்க அந்த உசிப் பற்களின் கூர்மையில் வலி எடுக்க அப்படியே காலோடு குழந்தையை உதறித்
தள்ளினான்.
வியாஹா சென்று கீழே விழ பதறிய கௌசி “அய்யோ…” என்று அவளிடம் செல்ல அதுதான் சமயம் என்று
கௌசியை இழுத்தான். “விடுடா.. கையை விடுடா” என்று கத்திய கௌசியின்
கண்களில் கீழே விழுந்து வலியுடன் அழுத வியாஹாவே தெரிந்தாள். கடைசியில் தானும் அவனின் கையைப்
பிடித்துக கடிக்க அவன் அவளை விட்டான்.
வியாஹாவிடம் ஓடிச் சென்று அவளைச் சமாதானம் செய்ய வெறி வந்தவனாய் சுதாகரன் கௌசியின் முடியைப் பிடிக்கப்
போனான்.
வியாஹாவைத் தூக்கிய கௌசி சுதாகரைக் கவனிக்கவில்லை. ஆனால்
திடீரென்று சுதாகரின் கத்தலில் கௌசி திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க விக்னேஷின் அடியில் அவன்
விழுந்திருந்தான். அவனின் சட்டைக் காலரை பிடித்துத் தூக்கிய விக்னேஷ் அவனை சுவற்றில் தள்ளிக் காட்டுத்
தனமாய் அடிக்க கௌசி பயந்து போய் விக்னேஷைத் தடுத்தாள்.
சீறிப் பாய்ந்து வரும் வெள்ளத்தை மடையோ எதுவும் செய்ய முடியாது.
அதுபோல கௌசியால் விக்னேஷை தடுக்க முடியவில்லை. விக்னேஷ் அடித்த அடியில் அவன் முன் பல் உடைந்து ரத்தம் கசிய… “விக்னேஷ்…” என்று கௌசி கத்த அதுவும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆனது.
கடைசியில் அவன் சட்டைக் காலரை பிடித்து தரதரவென்று வெளியே இழுத்துச் சென்ற விக்னேஷ்.. அவனை வெளியே தள்ளி “இனிமேல் என் கண்ணுல உன்ன பாத்த..
கொன்னுருவேன் டா பொறுக்கி நாயே..
பாஸ்டார்ட்” என்று கோபத்தின் உச்சியில் கர்ஜிக்க அவன் பயந்து போனது உண்மைதான்.
“நிறுத்துடா” – என்று பரமேஸ்வரியின் குரல் ஆங்காரத்தில் கத்தியது
விக்னேஷைப் பார்த்து.
வியாஹாவின் உடல் நலத்தைக் காரணம் கொண்டே மதியும் ஜீவாவும் எல்லா
முறைகளையும் முடித்து விட்டுக் மகாலிங்கம் அய்யாவைக் கூட்டிக் கொண்டு கிளம்பினர். கூடவே அங்கு
விஷேசத்திற்கு வந்த பரமேஸ்வரியும் முருகானந்தமும் பேத்தியைப் பார்க்க மகள் மருமகனோடு கிளம்பிவிட்டனர். வீட்டிற்கு அவர்கள் வந்து இறங்கவும்
விக்னேஷ் சுதாகரனை வெளியே தரதரவென்று இழுத்து வந்து வெளியே
தள்ளவும் சரியாக இருந்தது.
எல்லாரும் இறங்க விக்னேஷ் கர்ஜித்த வார்த்தை அனைவரின் காதுகளிலும்
விழுந்தது. அந்தக் காலத்து டிகிரி என்பதால் பரமேஸ்வரிக்கு விக்னேஷ்
சொன்ன ஆங்கில கெட்ட வார்த்தைகள் புரியாமல் இல்லை. அந்தக் கோபத்தில்
“நிறுத்துடா” என்று கத்தினார். அதற்கு மதி “அம்மா” என்று கூப்பிடதையும் அவள்
கவனிக்கவில்லை.
அவர் கத்தியதில் கௌசியும் வியாஹைத் தூக்கிக் கொண்டு அவசரமாக வெளியே வந்தாள். விக்னேஷ் ஏற்கனவே பரமேஸ்வரி மீது ஒரு ஓரத்தில் கோபத்தில் இருந்தான் கௌசியைப்
பேசியதற்கு (சந்தியாவின் மீதும் கோபம் தான்.. வளைகாப்பை சீக்கிரம் முடித்துக் கொண்டு அவன் வந்ததிற்கு அதுவும் ஒரு
காரணம்). அந்தக் கோபம் இப்போது மதியின் அம்மா மேல் இப்போது வெளியே வந்தது.
“இவனை இப்போதே கூட்டிட்டு
போயிருங்க.. இன்னும் கொஞ்சம் நேரம் இவன் இங்க இருந்தா அவன அடிச்சே
கொன்றுவேன்” என்று ஆத்திரமாய் அதே சமயம் அழுத்தமாய் பரமேஸ்வரியைப்
பார்த்துச் சொன்னான்.
“நான் ஏன்டா என் மகனைக் கூட்டிட்டு போகணும்.. இது என் பொண்ணு வீடு” என்று அவர் ஒருமையில் பேச விக்னேஷிற்கு அடக்க முடியாத ஆத்திரம் வந்தது.
விஷயம் பெரிசா போவதை உணர்ந்த கௌசி விக்னேஷிடம் வந்து “விக்னேஷ்.. போகலாம்” என்று சொல்ல கௌசியின் கையில் இருந்த வியாஹா இறங்கி தன்
அப்பாவான ஜீவாவிடம் சென்று ஒன்றினாள்.
“எல்லாம் இவ வந்துட்டால அதான் இப்படி மறுபடியும் கேடா இருக்கு” என்று
கௌசியின் பக்கம் பரமேஸ்வரி விஷத்தைக் கக்கினார்.
அதுவரை மதிக்காகவும்
ஜீவாவிற்காகவும் பிடித்த பொறுமையை பறக்க விட்டான் விக்னேஷ். “நிறுத்துங்க..
பொம்பளைன்னு பாத்தா சும்மா பேசிட்டே போறீங்க.. இதே வேற எவனாவது
பேசியிருந்தா இன்னேரம் கழுத்தில் காலை வச்சிருப்பேன்.. ஏதோ மதியோட அம்மாங்கறனால தான் உங்களுக்கு மரியாதை தரேன்” என்று தன் ஆள்காட்டி
விரலை நீட்டி எச்சரித்தான்.
“என்னடா என்ன அடக்கறே.. இவளை சொன்னோனே உனக்கு ரோஷம் வருதா.
இவ ராசி கெட்டவ தான்.. கல்யாணம் ஆன நாலு நாள்ல புருசன முழுங்குனவ” என்று கௌசியை பரமேஸ்வரி
வார்த்தைகளால் கொட்டினார்.
“அம்மா” “பரமேஸ்வரி” என்று
பரமேஸ்வரியின் மகள் மதியும் கணவர் முருகானந்தமும் ஒருசேர அதட்டினர்.
“ஆமா இவள சொன்னா எனக்கு ரோஷம் தான் வரும். சின்ன வயசில இருந்து என்
கூட வளந்தவ.. நாளைல இருந்து என் பொண்டாட்டி” என்று கௌசியின் தோளில் கையைப் போட்டு கம்பீரமாய்ச்
சொன்னவன் “அப்புறம் என்ன
சொன்னீங்க ராசி கெட்டவளா.. இவ என் மாமா சொல்ற மாதிரி எங்க வீட்டு மகாலட்சுமி.. இவ வந்த நேரம் எனக்கு நிறைய ஆர்டர்ஸ்.. அப்புறம் இயற்கை
விவசாயம் பற்றிய கேஸ் எல்லாம் முடிஞ்சிருச்சு..” என்று அவரின் வாயை மூட வைத்தான்.
“அப்புச்சி” என்று முருகானந்தத்தை வியாஹா அழைக்க எல்லோரும் அவளின்
பக்கம் திரும்பினர்.
“அப்புச்சி.. மாமா வந்து சித்திய கையைப் பிடிச்சு இழுத்தாங்க.. சித்தி அடிச்சிட்டாங்க.. என்னையும் மாமா உதச்சுடாங்க அப்புச்சி.. அதான் சித்தா மாமாவை அடிச்சாரு” என்ற வியாஹா “இங்க வலிக்கிது” என்று தன் கையின் முட்டியைக் காட்டி அழுதது அந்தப் பிஞ்சு.
முருகானந்தம் தன் மகனிடம்
திரும்புவதற்குள் மதியின் கரம் தன் அண்ணனின் கன்னத்தைப் பதம் பார்த்தது. “ச்சி நீயெல்லாம் ஒரு
அண்ணனா.. நான் உனக்கு தங்கச்சி னா.. கௌசியும் உனக்குத் தங்கச்சி முறைதான் தெரியுமா.. ஒரு பொண்ணுகிட்ட எப்படி நடந்திருக்க பாரு நீ.. அதுவும் கொழந்த முன்னாடி.. என்
கண்ணு முன்னாடி நிக்காதே.. வெளிய போடா” என்று மதி சத்தம் போட்டாள்.
“மதிக் கண்ணு.. நீ குழந்தையைத் தூக்கிட்டு உள்ள போ” என்று மகாலிங்கம்
அய்யா அப்போது தான் வாயைத் திறந்தார். குழந்தையை அந்த இடத்தில்
இருக்க வேண்டாம் என்று எண்ணிய மதி வியாஹாவைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.
“நாங்க கிளம்பறோம்” என்ற
முருகானந்தம் மனைவியை மட்டும் கையைப் பிடித்து இழுக்க சுதாகரனும்
வருவதைக் கண்டவர் “பரமேஸ்வரி நீ மட்டும் வா” என்றார்.
“ஏங்க அவன்…” என்று மனைவி ஏதோ ஆரம்பிக்க “இவன் உண்மையாவே எனக்கு தான் பிறந்தானா பரமேஸ்வரி”
என்று கேட்க “என்ன வார்த்தை
கேக்கறீங்க” என்ற பரமேஸ்வரி
கண்ணீரைச் சிந்தினார். “அவன் எனக்கு பொறந்தவனா இருந்தா.. அவன இங்கேயே விட்டுட்டு வா.. என் ரத்தம்
கொஞ்சம் ஆவது உடம்பில் ஓடினால் திருந்தி என் காசில் திங்காமல் வாழட்டும்” என்று அவர் சொல்ல பரமேஸ்வரி வாயை மூடிக் கொண்டார்.
அவர் முன்னால் நடக்க பரமேஸ்வரி கணவனின் பின்னாலேயே சென்றார்.
கொஞ்ச தூரம் தான் இருக்கும்
விக்னேஷின்அழைப்பில் திரும்பினார் முருகானந்தம். “நாளைக்கு மருதமலைல
கல்யாணம்.. கண்டிப்பா வந்திருங்க மாமா” என்று விக்னேஷ் சொல்ல
தலையசைப்புடன் அவர் சென்றார்.