கனவு 4

அத்தியாயம்-4

மூன்று வருடங்களாக தன் மனதிற்குள் பூட்டி வைத்திருந்ததை மூவரிடமும்
சொன்னதை நினைத்துக் கூட கௌசிகா கவலைப்படவில்லை. ஆனால் இனி அனைவரின் பரிதாபப் பார்வையை சகிக்க வேண்டும் என்று எண்ணியவளுக்கு அழுகை வெடித்துக்
கொண்டு வர வேக வேகமாக நடந்து வந்து வீட்டை அடைந்தாள். கோபத்திலும்
ஆதங்கத்திலும் சாவியை எடுத்தவள் பூட்டில் நுழைக்கவே சிரமப்பட்டாள். ‘ச்சை’
என்று எரிச்சல்பட்டவள்.. ஒருவாறு நிதானித்து கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.

உள்ளே வந்து தன் கட்டிலில்
உட்கார்ந்தவளுக்கு அழுகை வெடித்து கண்ணீர் சிதறியது. அவளால் மறக்கவும் முடியாத மறுக்கவும் முடியாத நினைவுகள் எல்லாம் சேர்ந்து உள்ளுக்குள் வந்து அலையாய் எழுந்து சுனாமியாய்
உருவெடுத்தது.

‘நினைவுகள் காயத்தைப்போல
ஆறிவிட்டது..                     ஆனால் சிலருடைய நினைப்புகள்
ஆறாது வடுவாய் அழியாமல்
இருக்கும்’
என்பதை கௌசி இன்று உணர்ந்தாள்.

அவளது ஆசைகள் எல்லாம் கானல் நீராய் ஆகி அவள் தாங்க முடியாத துயரத்தை
அனுபவித்ததை யார் அறிவார்? ஏன் உடன் இருந்தோரே அவளைப் புரிந்து
கொள்ளவில்லையே?

பிரபு ஒப்பனையில்லா அழகு என்று சொன்னது நியாபகம் வர கௌசியின் உதடு ஏளனமாக தன்னால் வளைந்தது.

அவனுக்கு என்ன தெரியும்? அவளின் அழகே அவளுக்கு எமனாகப் பாசக் கயிரை வீசவே ஒப்பனைகளை எல்லாம் வெறுத்து தூக்கி எறிந்தது
யாருக்குத் தெரியும்?

தன் முகத்தையே தான் சிதைக்க நினைத்துக் கொண்டதை யார் அறிவார்?

தன்னுள் இருந்த காதல் உணர்வுகள் செத்து வெறும் காமம் தனிக்கும் கருவியாய் தான் இருந்த நரகத்தை யார்
அறிவார்? மூன்றரை வருடங்களுக்கு முன்னால் நடந்ததை இப்போது நினைக்கும் போதே உடல் கூசியது கௌசிக்கு.

தன்னைச் சுற்றி உள்ள எதையும் உணராமல் தன்னை நினைத்து அழுது கொண்டு இருந்தவளை வீட்டிற்குள்
இருபது நிமிடம் கழித்து வந்த கவிதா பெட்ரூம் நிலவின் மேல் நின்றபடி பார்த்துக் கொண்டு இருந்தாள்.

கௌசி சென்ற பின் மூவருக்குமே வாய் கம் போட்டு ஒட்டியது போல ஆகிவிட்டது.
முதலில் கவிதா தான் அந்த அமைதியை கலைத்தது. “சரி நான் கிளம்பறேன்” என்று நகரப் பார்த்தவளிடம் பிரபு
பேசினான்.

“வீட்டுக்குப் போனோன கௌசி என்ன நிலமையில இருக்கான்னு சொல்லுங்க..
கௌசிகா அழுதுட்டே போனது ஒரு மாதிரி இருக்கு” என்று பிரபு இயலாமையானக் குரலில் பேசினான்.

“ஆமா… போனோன அங்க இருக்க நிலமைய சொல்லு… கொஞ்சம் சமாதானம் செய்” என்று சுரேஷ் சொல்ல தலையை ஆட்டிவிட்டு கிளம்பினாள் கவிதா.

வரும் வழியில் தான் கவிதாவிற்கு ஒவ்வொன்றாக தெளிவாகியது. ஒரு தடவை ஊருக்குச் சென்று வரும் போது
அம்மன் கோயில் குங்குமத்தை வைக்க நீட்டிய போது கௌசி குங்குமத்தை வெறித்து நோக்கிவிட்டு “இல்ல கவிதா..
எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்ல.. தப்பாக எடுத்துக்காதே” என்று சொன்னது. ஆனால் ஒரு தடவை எங்கையோ இடித்துக் கொண்டவள் “முருகாகா” என்று முணுமுணுத்ததைக் கவனித்த கவிதாவிற்கு அது முரண்பாடக இருந்தது.
கோயிலிற்கும் வந்ததில்லை.. பூ ஒரு தடவை தந்தபோது கூட நயமாக மறுத்தது எல்லாம் நியாபகம் வந்தது.. எல்லாம்
இதற்காகத் தானா?

ஆனால் இதை மறைத்ததிற்காகக் கவிதாவிற்கு கோபம் வரவில்லை கௌசியின் மேல். மாறாக அவள் இதை
மனதிற்குள்ளே வைத்து எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள் என்று தோன்றியது.
எல்லாவற்றையும் நினைத்தபடியே வீட்டிற்கு வந்து கௌசியைப் பார்த்தவள்
அதிர்ந்தாள். இரண்டு கைகளையும் பெட்டில் ஊன்றியபடி காலைத் தரையில் படும்படி வைத்து இறுகி உட்கார்ந்திருந்தாள். ஆனால் கண்கள் மட்டும் கண்ணீரை சிந்திக் கொண்டு
இருந்தது.

இந்த மூன்றரை வருடங்களில் கௌசி அழுது அவள் பார்த்ததே இல்லை.. எப்போதுமே ஒரு கம்பீரமான மிடுக்குடன் இருப்பவள் இன்று அழுகும் போது பார்க்கவே சகிக்கவில்லை. இப்படி
அழ வைத்துவிட்டோமே என்று குற்ற உணர்வு குத்தியது கவிதாவை.

அமைதியாக சென்று கௌசியின் எதிரில் இருந்த கட்டிலில் அமர்ந்தாள் கவிதா. அவள் வந்ததைக் கூட உணராமல் தரையை வெறித்தபடி கண்ணீரை சிந்திக் கொண்டு இருந்தாள் கௌசி.

“கௌசி” – அழைத்துப் பார்த்தாள் கவிதா.

“……….” – கௌசிகா.

எழுந்து அருகில் சென்று நின்றபடியே “கௌசி..” என்று தோளைப் பற்றினான்.

தன்னை யாரோ தொடுவதை உணர்ந்த கௌசி நிமிர்ந்து பார்க்க கவிதா நின்றிருந்தாள். “சாரி கவி” என்றவளின்
கண்களில் கண்ணீர் வழிந்தது.

“ச்சு எதுக்குடி சாரி.. நாங்க தான் உன் நிலைமை புரியாம கல்யாணம் அது இது என்று…. சாரி கௌசி” என்று முகம்
கன்ற கேட்டாள் கவிதா.

“உன்கிட்ட நான் இவ்வளவு பழகி மறச்சுட்டேன் கவி.. உனக்கு என் மேல கோபம் இல்லயா?” என்று அவளின்
கரத்தைத் தன் இருகைகளால் பிடித்தபடிக் கேட்க “அதெல்லா எதுவும் இல்ல கௌசி” என்று கவிதா சொல்ல அவளின்
கைகளைப் பிடித்தபடியே அவளின் கைகளின் மேல் சாய்ந்து கண்ணீர் விட்டாள் கௌசி.

அவளின் அருகில் அமர்ந்த கவிதா.. அவளை சமாதானம் செய்ய தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் கூறினாள் கௌசிகா. கணவனின் இழப்பு
மட்டும் என்றுதான் என்று நினைத்த கவிதாவிற்கு கௌசி சொல்லச் சொல்ல தலை சுற்றியது. கண்களில் நீர்மணிகள் கோர்த்தன. அவளைத் தட்டித் தட்டிச்
சமாதானம் செய்தவளுக்குத் தொண்டை அடைத்தது.

இப்போது அழுவதை விட இந்த மூன்றரை வருடத்தில் அவளின் ‘கண்ணீரில்லா அழுகையின் சோகம் மிகவும் ஆழமானது’ என்பதைப் புரிந்து கொண்டாள்.

“பேசாமல் தூங்கு கௌசி.. எதையும் நினைக்காதே நாளைக்கு பேசலாம்..” என்று கௌசியை தூங்க வைக்க
முயற்சிக்க யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது.

கதவின் ஓசை கேட்ட பெண்கள் இருவரும் இந்த நேரத்தில் யார் என்பது போல இருவரின் முகத்தையும் மாறி மாறி
பார்த்தனர்.

ஹாலிற்கு வந்த கௌசியும் கவிதாவும் யோசிக்க வெளியே “கவிதா….” என்று சுரேஷின் குரல் கேட்டது.

கவிதா போய் கதவைத் திறக்க சுரேஷும் பிரபுவும் வெளியே நின்றிருந்தனர். சுரேஷின் குரல் கேட்டவுடனே கௌசி
குளியல் அறைக்குள் புகுந்துவிட்டாள். உள்ளே சென்று நன்றாக மூஞ்சியை
அழுத்திக் கழுவிக் கொண்டு வெளியே வந்தாள்.

பிரபுவும் சுரேஷும் ஹாலில் தரையில் அமர்ந்து இருந்தனர். இரு பெண்கள் மட்டுமே என்பதால் சேர் எதுவும்
வாங்கவில்லை..

ஹாலிற்கு வந்த கௌசி இருவரையும் “வாங்க” என்று அழைத்தாள். என்னதான்
முகத்தைக் கழுவியிருந்தாலும்
கண்களில் உள்ள சிகப்பு
காட்டிக்கொடுத்து விட்டது கௌசியின் அழுகையை.

நால்வருக்கும் டீயை எடுத்து வந்த கவிதா அனைவருக்கும் தர, டீயை காலி செய்யும்
வரை எவருமே பேசவில்லை. டீயை முடித்த பிறகும் அங்கு அமைதியே நிலவியது.

“சாரி கௌசிகா” என்றான் பிரபு.

“…..” என்ன பதில் பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள் கௌசி.

“உன் நிலைமை என்னன்னு தெரியாம இப்படி ஹர்ட் பண்ணிட்டேன். ஐம் எக்ஸ்ட்ரீம்லீ சாரி” என்றான் பிரபு.

“இல்ல பரவாயில்லை.. தெரியாம தானே…” என்றவள் “எல்லாத்தையும் மறந்திடுங்க” என்று அழுத்தமாகச்
சொன்னாள் கௌசி.

“ஆனால் கௌசி… நீ மனசு மாறினால் நான்… ” என்று பிரபு ஆரம்பிக்க “வேண்டாம் பிரபு.. எனக்கு கல்யாணத்துல வெறுப்பு.. என்ன நினைச்சுகிட்டு நீங்க உங்க
லைஃப்-அ வீணாக்கிறாதீங்க.. நம்ம வேணும்னா நல்ல ப்ரண்ட்ஸா இருப்போம்” என்று முடித்தாள் கௌசி.

அதற்கு பிறகு நால்வரும் அதைப் பற்றி எதுவும் பேசவில்லை.. பின் நால்வரும்
ஏதேதோ பேசினர்.. கௌசி தலையை மட்டும் ஆட்டிக் கொண்டு இயல்பாக நடந்து கொண்டு இருந்தாள்.

ஒரு அரை மணி நேரம் பேசிவிட்டு சுரேஷும் பிரபுவும் கிளம்பினர். அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வர
இருபெண்களுக்குமே பசி வயிற்றைக் கிள்ளியது. இரு மேக்கி பாக்கெட்டை உடைத்து கவிதா மேக்கி செய்ய கௌசி
வீட்டின் பின்னால் நிற்கிறேன் என்று நின்றிருந்தாள்.

பின் இரு பெண்களும் சாப்பிட்டுவிட்டு படுக்கைக்குச் சென்றனர். இருவரும்
அவரவர் கட்டிலில் படுக்க கௌசி கவிதாவிற்கு முதுகு காட்டி படுத்திருந்தாள். தன்னைப் பார்த்துக் கொண்டே சங்கடப்படுவாள் என்றே
கண்ணை மூடித் திரும்பிப்படுத்திருந்தாள்
கௌசி.

எவ்வளவு கட்டுப்படுத்தியும் மனம் பழசையே நினைக்கச் சொல்லியது. மூளை வேண்டாம் என்று சொல்ல
கடைசியில் கௌசியின் மனமே வென்றது.

மூன்றரை வருடங்களுக்கு முன்…

சென்னையில் அடையாரில் உள்ள தனது வீட்டில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள் கௌசிகா.. மணி காலை ஐந்தரை ஆகியிருந்தது. சூரியன் உதித்தும் உதிக்காமலும் நிலாவிடம்
எப்போது அனுமதி தருவாய் என்பது போல பாதி மட்டும் வானில் தூக்கக்கலகத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

நேற்று ப்ரண்ட்ஸோடு சுற்றிவிட்டு வந்த கௌசி உடை மாற்ற மனமில்லாமல் அதே
பென்சில் ஃபிட் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் பார்மல் சர்ட் உடனே தூங்கிக் கொண்டிருந்தாள். இப்போது இருப்பதை
விட மூன்று மடங்கு அழகு. எந்தக் கஷ்டத்தையும் பார்க்காமல் ஜாலியாக
நண்பர்களோடு சுற்றும் வயது. எந்தத் துன்பமும் இல்லாமல் எந்த மன அழுத்தமும் இல்லாமல் பளிச்சென்று
இருந்தாள். சிற்பம் தான்.

கௌசிகா எழுவதற்கான ஐந்தே முக்கால் அலாரம் அடிக்க.. அவளது கைகளால்
கண்ணை மூடிக்கொண்டே போனைக் கைகளால் தேடினாள். போனைத் தேடி
அலைந்து கொண்டிருந்த கையை திடீரென ஒரு கரம் பிடித்தது. அவள் சுதாரித்து எழுவதற்குள் அவளின்
போர்வையை வைத்தே சுற்றி அவளை அமுத்திப் பிடித்தன இரண்டு பேர்.

அரண்டு கத்தப் போனவளை ஒரு கரம் வாயை அமுக்கியபடி தலையைப் பிடித்துத் தூக்க வேறு யாரோ காலை
இறுக்கமாகப் பற்றித் தூக்கினர். அவளை அப்படியே தூக்கிக் கொண்டு போக கௌசியால் எதுவும் செய்ய முடியவில்லை. நெளியக் கூட
முடியாத படி பிடித்திருந்தனர்.

ஒரு ஐந்து நிமிடத்திற்குப் பிறகு அவர்கள் அவளைக் கீழே இறக்கிவிட பரபரவென்று
பெட்ஷீட்டை கலைத்து வெளியே வர
“ஹாஹாப்பிபிபி பர்த்டேடேடே டி கௌசிக் பையாயாயாயா” என்று அவளின் தலையில் இரண்டு பக்கெட்தண்ணீர்
ஊற்றினர் அந்த இரண்டு பேர்.

“ஏய்ய்ய்ய்……” என்று முதலில் கத்தியவள் பின் பயன் இல்லை என்று தெரிந்து கால்களை மடக்கி முகத்தைக் கைகளால்
மூடியபடி தன் மேல் தண்ணீர் ஊற்ற ஊற்ற அமர்ந்துவிட்டாள்.

முழுதாக நனைந்தவள் கண்ணைத் திறக்க அவளது அத்தை பசங்களான விக்னேஷும் ஜீவாவும் நின்றிருந்தனர். இருவரின் முகத்திலும் அவளின் மேல்
தண்ணீர் ஊற்றியதில் அவ்வளவு சந்தோஷம். “டேய்ய்ய்ய்ய் உங்களை..”
என்று பல்லைக் கடித்தபடி எழுந்தவளிடம் “ஹே… நில்லு கௌசிக் பையா.. இதுக்கே
இப்படியா.. இன்னும் இருக்கு” என்று விக்னேஷ் சொல்ல கரெக்டாக ஜீவாவின் உடன் பிறந்த தங்கை சந்தியா ஒரு
பக்கெட்டுடன் மாடி ஏறி வந்தாள். அதுவும் “மாட்னியா?” என்ற பார்வையோடு.

சந்தியாவிடம் சென்று பக்கெட்டை வாங்கிய விக்னேஷ் அப்படியே மாடியின்
க்ரில் கதவிற்குப் பூட்டு போட்டுவிட்டு சாவியை தன் ட்ராக் பாண்ட் பாக்கெட்டில்
வைத்தான். திரும்பிப் பார்த்தவன் கேலிப்பார்வையோடு ஜீவா அருகில் சென்று பக்கெட்டை காண்பிக்க ஜீவாவும்
கௌசிகாவைப் பார்த்து உதட்டைப் பிதுக்கிச் சிரித்தான்.

“ஏய் என்னடி சந்தியா நீயும் இவனுங்க கூட சேர்ந்துட்டயா?” என்று தன்னை விட இரண்டு வயது சின்னப்பெண்ணான
சந்தியாவை மிரட்டியவள் தன் அத்தைப் பசங்களிடம் திரும்பி “டேய்ய்ய்ய்ய்ய்ய வேண்டாம் உங்க பர்த்டேவும் வரும்..
அப்புறம் அவ்வளோதான்” என்று மிரட்ட “அதை அப்போ பாத்துக்கலாம் கௌசிக்”
என்று கலர் தண்ணீர் நிரம்பிய பலூனை கௌசியின் மேலே வீசினான் விக்னேஷ்.

ஓடப் பார்த்தவளை பாய்ந்து சென்று பிடித்தவன் அவள் முகத்தில் எதையெதையோ பூசினான். உடன் சேர்ந்து ஜீவாவும் சந்தியாவும் தங்கள்
வேலைகளைக் காட்டினர். மூவரும் சேர்ந்து ஒரு வழி பண்ணிவிட்டனர் கௌசிகாவை. கடைசியில் விக்னேஷ் கண்ணடிக்க மூவரும் சேர்ந்து கிச்சுகிச்சு
மூட்ட ஆரம்பித்து விட்டனர்.
“அய்ய்ய்யோயோ… ஏய்ய்ய்ய்” என்ற கௌசி பக்கத்து வீட்டிற்கு கேட்கும் அளவிற்குச் சிரித்தாள். சின்ன வயதில்
இருந்தே எவ்வளவு கோபமாக
இருந்தாலும் இதைத் தான் அனைவரும் கௌசியிடம் கையாளுவர். ஏனென்றால்
இதைச் செய்தாள் அவளால் எதுவுமே செய்ய முடியாது. கெக்கபுக்கே என்று சிரித்து விழுந்தே விடுவாள்.

சிரித்து சிரித்து கண்களில் தண்ணியே வந்துவிட்டது கௌசிக்கு. அப்படியே அந்தத் தரையிலேயே படுத்தவள் சிறிது நேரம் அப்படியே கிடந்தாள். சர்ட்டில் ஆங்காங்கே கலர் சாயம் வேறு பல்லைக்
காட்டியது. விக்னேஷ், ஜீவா, சந்தியா மூவரும் ஒரு ஓரமாக அப்படியே மூச்சு வாங்க உட்கார்ந்திருந்தனர்.

பிறகு எழுந்தவள் எதையோ
தேடிக்கொண்டு தண்ணீர் டாங்கிற்கு அருகில் சென்றாள் கௌசிகா. அதற்கு அருகில் இருந்த பைப்பில் ஒரு ஹோசை
சொருகியவள் பைப்பைத் திறந்து மூவரின் மேலும் தண்ணீரை அடிக்க
ஆரம்பித்துவிட்டாள். “யேயேயேயேயே… ரௌடி நிறுத்துடி…” என்று விக்னேஷ்
கத்த “இவ எந்திரிச்சு தேடும் போதே நினைச்சேன் டா.. ஏதாவது பண்ணுவான்னு” என்று ஜீவாவும் கத்த கௌசி எதையுமே காதில் வாங்கிக்
கொள்ளவில்லை.

முழுதாக மூவரும் நனைந்த பின்னே தண்ணி டாப்பை க்ளோஸ் செய்தாள். “அச்சச்சோ என்ன மூணு பேரும் இப்படி
தொப்பலா நலஞ்சுடிங்க.. என்ன மழையா வந்துச்சா?” என்று அப்பாவியாக முகத்தை வைத்து நக்கலான சிரிப்புடன்
வானத்தை நோட்டம் விட்டபடிக் கேட்டாள் கௌசி.

“ஆமாம்.. வருணபகவான் லீவ்ல போயிட்டாருன்னு அவரு தம்பி கௌசிக் பகவான் வேலை” என்று சொல்லி
கௌசியின் கழுத்தை தன் கரத்தால் சுற்றி லாக் செய்தவன் அவளை ‘நங் நங்’
என்று கொட்டினான் விக்னேஷ்.

பின் நால்வரும் கீழே இறங்க
விக்னேஷும் கௌசியும் சண்டையிட்ட படியே கீழே வந்தனர். கீழே வர “இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கௌசிமா” என்று தன் மகளை வாழ்த்தியபடி வந்த
வரதராஜன் தன் மகளின் கோலத்தைக் கண்டு சிரித்தார். சட்டையிலும் ஆங்காங்கே கலர், ஸ்டைலாக நடு முதுகு
வரை வெட்டப்பட்டிருந்த தலை முடியிலும் ஆங்காங்கே கலர்பொடி பல்லைக்
காட்டியது “ஜீன்ஸ்ம் சட்டையும் அம்பேல் தான்.. இனி போட முடியாது” என்று
நினைத்தவரிடம் “தாங்க்ஸ் அப்பா.. ஆனா என்ன நீங்களும் சிரிக்கறீங்க?” என்று உதட்டைச் சுழித்துக் கேட்டவளிடம்
“போய் நீயே கண்ணாடியில் பாருமா” என்று சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் புகுந்துவிட்டார் அவர்.

உள்ளே தன் அறைக்குள் புகுந்து கண்ணாடியில் பார்த்தவள் பயந்தே விட்டாள். முகம் முழுதும் கரி அப்பியது
போல இருந்தது. பின்னால் வந்து நின்ற விக்னேஷ் “எப்படி… செம அழகா
மாத்துனேனா உன்ன” என்று சிரித்தவன் “எங்க அப்படியே ஒரு போஸ் குடு.. போட்டோ எடுத்து அப்படியே வீட்டு
முன்னாடி திருஷ்டி கழிக்க மாட்டிடலாம்” என்று போனை எடுத்து போட்டு எடுக்க
வந்தவனை தடுத்துச் சண்டையிட ஜீவாவும் சந்தியாவும் உள்ளே வந்தனர்.

“கௌசி எல்லாரும் செல்பி எடுக்கலாம்..” என்று சந்தியா சொல்ல.. நால்வரும் நெருக்கி நின்றபடி நின்று செல்பியை
எடுத்தனர். “இன்னும் ஒன்னுனுனு” என்று கௌசி கேட்க விக்னேஷ் முறைத்தான்.
“ப்ளீஸ் விக்கா.. ஒன்னே ஒன்னு.. பர்த்டே பேபில நானு” என்று கண்களைச் சிமிட்டி
தன் இரு கைகளையும் தன் கன்னத்தில் வைத்தபடிக் கேட்க “சரியான செல்பி பைத்தியம்” என்று முணுமுணுத்தபடியே
செல்பியை எடுத்தான்.
சொல்லப்போனால் அந்தக் கடைசி போட்டோ தான் இயல்பாகவும் அருமையாகவும் வந்தது.

போட்டோவை எடுத்துமுடித்த பின் “நம்ம நாலு பேரு இருக்க வாட்ஸ்அப் க்ரூப்-ல
அனுப்பீரு” என்றவளிடம் “சரிடா கௌசிக்” என்று விக்னேஷ் சொல்ல தன் முழங்கையால் அவனை இடித்தாள்.

“எத்தனை தடவை சொல்றது.. அப்படி கூப்பிடாதேன்னு.. எப்போ பார்த்தாலும் பாய் நேம் வச்சு கூப்டுட்டு” என்று
முறைத்தவளை “அதுக்குப் பொண்ணு மாதிரி இருக்க வேண்டும் கௌசிக். நீதான் முழுசா பையன் மாதிரி
திரிகிறாயே” என்று விக்னேஷ் மேலும் அவளை வம்பிழுக்க “டேய் டேய் ஆரம்பிக்காதீங்க.. கௌசி இங்க பாரு.. எட்டு மணிக்கு படை எல்லாம் வந்திடும்.. சீக்கிரம் குளிச்சுட்டு ரெடி ஆகிடு.. நாங்களும் போய் கிளம்பி வறோம்” என்று ஜீவா சொல்லச் சொல்ல தஞ்சாவூர்
பொம்மை போல தலை ஆட்டினாள் கௌசி.

“சரியான வாலு டி நீ” என்று அவள் தலை மேல் கை வைத்து தலையைச் சுத்திய ஜீவா “இன்னையோட இருபத்திரண்டு ஆயிருச்சு.. அதாவது நியாபகம் இருக்கட்டும்” என்று சொன்னான்.

பின் வரதராஜனிடமும் மூவரும் கிளம்ப விக்னேஷ் ஒரு பெட்டியை அவளிடம்
நீட்டினான். ஜீவா ஒரு சிரிய பேக்கைக் கொடுத்தான். சந்தியா இன்னொரு குட்டி
கிப்டை தந்தாள்.

“என்னடா இவ்ளோ தர்றீங்க” என்று சிரித்தபடி பிரிக்க அவளின் கையை தட்டிவிட்ட விக்னேஷ் “பரக்காவட்டி..
குளிச்சிட்டு வந்து பிரி.. கையெல்லாம் கலர்-ஆ இருக்கு பாரு” என்று சொல்லிவிட்டு கிளம்ப மூவரையும்
வழியனுப்பி விட்டு உள்ளே நுழைந்தவள் தன் அறைக் கதவைப் பூட்டிவிட்டு உடனே
குளிக்கச் சென்றுவிட்டாள்.

குளித்துவிட்டு தலைக்கு உடலுக்கும் துண்டைக் கட்டிக்கொண்டு வந்தவள்
உடனே வந்து விக்னேஷ் குடுத்த ட்ரெஸ் பெட்டியைப் பிரித்தாள். பெட்டியைப்
பிரித்தவளின் உதடு தன்னால் சிரிப்பில் விரிந்தது. அவளுக்கு பிடித்த அடர் மஞ்சள் கலரில் ஒரு ஃபுல் லென்த் மேக்ஸி
ட்ரெஸ் இருந்தது. எடுத்து கையில் பிரித்து அதன் வேலைப்பாடை ரசித்தாள். ‘V’
நெக்கில் ஆங்காங்கே கோல்டிலும் ரோஸ் கலரிலும் டிசைன் வைத்து அழகாக
இருந்த உடையை ரசித்த கௌசியின் உதடுகள் தானாக “விக்கா” என்று முணுமுணுத்தது.

ட்ரெஸை அணிந்தவள் கண்ணாடியில் பார்க்க அது அவளது உடம்பை சிக்கென
பற்றி இருந்தது. ஏனோ விக்னேஷ் ‘கௌசிக்’ என்று கூப்பிடுவது எரிச்சல்
பட்டாலும் அதை மனது விரும்பத்தான் செய்தது. அவள் தைரியமாக வெளியே
சுற்றுவது.. தப்பைக் கண்டால்
சண்டைக்குப் போவது.. எப்போதுமே ஜீன்ஸ் சர்ட்டில் திரிவதாலேயே இந்தப்
பெயரை வைத்திருந்தான் அவன்.

அடுத்து ஜீவா குடுத்த கிப்ட்-ஐப் பிரித்தாள். அவள் உடைக்கு ஏற்ற செயின், ஸ்டட், பாங்கில்ஸ் என அனைத்தையும் இருக்க
விக்னேஷ் தந்த மேக்ஸிக்கு கரெட்டாக கட்சிதமாக வாங்கியிருந்தான். மதியுடன்
சென்று வாங்கியிருப்பான் என்று நினைத்தவள் அடுத்து சந்தியா குடுத்த கிப்ட்-ஐப் பிரித்தாள். அவளுக்குப்
பிடித்த மேக்(mac) நியூட் ஷேட் லிப்ஸ்டிக் இருந்தது. எல்லாவற்றையும் பிரித்தவளின் முகம் “ஈஈஈஈஈஈஈஈஈஈ” என்று ஆகியது.

ட்ரெஸிங் டேபிளின் முன்னாடி
அமர்ந்தவள் தலையைத் துவட்டி ஃபிஷ் ப்ரெயிட் (fish braid) போட்டு அடுத்து
ஃபேஸ் க்ரீம், காம்பக்ட் பவுடர், ஐ லைனர், மஸ்காரா, காஜல், சந்தியா குடுத்த லிப்ஸ்டிக் என அனைத்தையும் முகத்தில்
லைட் மேக்கப்பாக அப்ளை செய்துவிட்டு நெற்றியின் நடுவில் ஒரு அழகான கல்
பொட்டை வைத்தாள். பின் ஜீவா குடுத்ததை எல்லாம் அணிந்துவிட்டு வெளியே வந்தாள்.

சமையல் அறையில் இருந்த தன் தந்தையின் பின்னால் சென்று நின்றவள் “மிஸ்டர்.வரதராஜன்” என்று அழைக்க அவர் சாதரணமாகத் திரும்பினார்.

“எப்படி இருக்கு… அழகா இருக்கேனா?” என்று வரிசைப் பற்கள் தெரியச்
சிரித்தவளிடம் “அப்படியே உன் அம்மா மாதிரியே இருக்க டா” என்று தன் மகளின் நெற்றியை வருடினார்.

“என்ன ஸ்பெஷல் பா” என்று வாசனைப் பிடித்தபடி அடுப்பருகில் வந்தவள் அங்கு
உள்ள எல்லாவற்றையும் திறந்து பார்த்தாள். எல்லாமே அவளுக்குப் பிடித்த
அயிட்டங்கள். காலை கேசரி.. பூரி மசால்.. வடை என தயார் செய்து வைத்திருந்தார்
வரதராஜன்.

“சூப்பரேரே…. எல்லாமே புடிச்சது” என்று தன் தந்தையை பிடித்து உலுக்கினாள்
கௌசி.

“டேய் டேய்… பாப்பா.. அப்பாக்கு வயது ஆயிருச்சு.. இப்படிலாம் உலுக்குனா மயக்கம் வந்திரும்” என்று தலையை சிலுப்பியபடிச் சொன்னவரை “நோநோ..
யூ ஆர் ஆல்வேஸ் யங் ..ப்பா” என்று தன் அப்பாவின் மீசையை முறுக்கி விட்டவள்
ஒரு வடையை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து டி.வியைப் போட்டு அமர்ந்து விட்டாள்.

பிறகு வரதராஜனும் போய் குளித்துவிட்டு வர அதற்குள் அன்னையின் படத்தை
பூக்களால் அலங்கரித்தாள் கௌசி. கோமதி – அதாவது வரதராஜனின் மனைவி கௌசிகாவின் தாய்.
கௌசியைப் போல கோமதி என்று சொல்லுவதை விட கோமதியைப் போலத்தான் கௌசிகா என்றே சொல்ல
வேண்டும். அப்படியே தன் அன்னையை உரித்து வைத்திருந்தாள் கௌசிகா.

இருவரும் கோமதியின் படத்தின் முன்பு நின்று கும்பிட்டனர். பிறகு சாமி படத்தின் முன்பு சாமி கும்பிட்டுவிட்டு திருநீறை
எடுத்து பட்டையாக தன் நெற்றியில் தீட்டினாள் கௌசி. இது எப்போதுமே இருக்கும் பழக்கம். என்னதான்
மாடர்னாக இருந்தாலும் எப்போதும் காலையில் சாமி கும்பிட்டு பட்டை தீட்டும்
பழக்கம் மட்டும் கூடவே வரும் ஒன்று கௌசிக்கு.

பிறகு எட்டரை மணி அளவில் ஜீவாவின் குடும்பமும் விக்னேஷின் குடும்பமும்
வந்து சேர்ந்தது. ஜீவாவின் அம்மா அப்பா – ஜெயா சதாசிவம் தம்பதி. ஜீவாவின்
தங்கை சந்தியா. விக்னேஷின் அம்மா அப்பா – சுமதி செந்தில்நாதன்.

எல்லாரும் வந்து சேர எட்டே முக்காலிற்கு மதியும் வந்து சேர்ந்தாள் (அதாங்க நம்ம
ஜீவாவின் காதலி).. “ஹேஹே மதி.. வா வா” என்று போய் அவளைக் கட்டிக் கொண்டாள் கௌசிகா.

“இப்படியே வழியிலேயே கட்டிப்பிடித்தால் அவ எப்படி உள்ளே வருவா” என்று
ஜீவா கேட்க “பொறாமையா இருக்கா ஜீ” என்று காதில் கிசுகிசுக்க ஜீவா கௌசியின் காதைப் பிடித்துத் திருகினான்.

மதி தன் வாழ்த்துக்களைத்
தெரிவித்தவள் தான் வாங்கி கிப்ட்-ஆக ஒரு பெரிய்யயய டைரியைத் தந்தாள். தங்க நிற மஞ்சளில் சுமார் 800
பக்கங்களைக் கொண்டிருந்தது. அதை
யாரும் படிக்க முடியாத மாதிரி ஒரு அதற்குத் தகுந்த பாக்சில் வைத்து லாக் வசதி போன்ற அமைப்போடு இருந்தது.
மதிக்குத் தெரியும் கௌசி பிடித்த விஷயங்களை ஏதாவதில் எழுதுபவள் என்று. அதை மறைத்து மறைத்து
வைப்பாள் என்றும் எல்லோரும்
அறிந்ததே. அதனால் தான் மதி இதை வாங்கித் தந்ததே.

“தாங்க்ஸ் மதி” என்றவள் டைரியை பத்திரமாக உள்ளே வைத்துவிட்டு வந்தாள் கௌசி.

அவள் வருவதற்குள் கேக்கை
வைத்திருந்தனர் எல்லோரும். “எப்போமே ஈவ்னிங் தானே வெட்டுவீங்க.. இன்னிக்கு
மார்னிங்கேவா” என்றபடி கேக்கின் அருகில் வந்தவள் தன் தந்தையை நோக்கினாள். மகளின் பார்வையைப்
புரிந்து அருகில் வரதராஜன் வர தன் தந்தையின் கையோடு தன் கரத்தைச் சேர்த்து கேக்கை வெட்டினாள் கௌசிகா.
இது சிறு வயது முதலே இருக்கும் ஒரு பழக்கம் கௌசிக்கு. தந்தையுடன் சேர்ந்து கேக் வெட்டுவது தான் அவளுக்குத் திருப்தி.

கேக்கை வெட்டித் தன் தந்தைக்கு முதல் ஊட்டியவள் அடுத்து விக்னேஷிற்கு
ஊட்டினாள். அடுத்து அத்தை மாமா சந்தியா மதி ஜீவா என
ஒவ்வொருவருக்கும் தன் கையிலேயே கேக்கை ஊட்டினாள் கௌசிகா. அடுத்து
அனைவரும் காலை உணவுக்கு அமர ஜெயாவும் சுமதியும் பரிமாறினர்.

பின் அனைவரும் சாப்பிட்டு விட்டு வர விக்னேஷ் ஒரு அழகான ரவுன்ட் ஷேப்
கூடையுடன் உள்ளே வந்தான்.
கௌசியின் முன் நின்றவன் “இது நானும் மாமாவும் (வரதராஜனும்) உனக்குக்
கொடுக்கும் கிப்ட் டி..” என்று அவள் முன் வைத்தான்.

ஒரு அழகான கூடையில் வெள்ளைத் துணி போட்டு மூடியிருந்ததை திறந்தாள்.
உள்ளே ஒரு அழகான் ப்ரௌன் கலர் நாய்க்குட்டி உறங்கிக் கொண்டிருந்து. பிறந்து ஐந்து நாள் தான் இருக்கும் போல.
அழகான லாப்ரடோர் வகையைச் சேர்ந்தது அது. கூடையோடு சேர்த்து தூக்கி மடியில் வைத்தவள் தன் கையில் எடுத்து கொஞ்சு கொஞ்சு என்று
கொஞ்சிவிட்டாள். அவளின்
கொஞ்சலைத் தாங்காமல் நாய்க்குட்டி சிணுங்கவே ஆரம்பித்துவிட்டது. அதன்
சிணுங்களைக் கண்டவள் “ஓகே ஓகே” என்று தலையை நீவிக் கொடுத்தாள்.

“என்ன பேர் வக்கப் பொற கௌசி” என்று விக்னேஷின் தந்தை செந்தில்நாதன்
கேட்டார்.

“இவன் ப்ரௌன் கலர்-ல.. ஸோ ஹீ இஸ் ப்ரௌனி.. ப்ரௌனி தான் இவன் பெயர் மாமா” என்று அதன் காதில் மூன்று
முறை சொன்னவள் ப்ரௌனியைக் கொஞ்சினாள்.

“யேய் போதும் விடு.. அது அழுதுறும்” என்று ஜீவா சொல்ல சமையல் ரூமிற்குச்
சென்று ஒரு குட்டி கப்பில் பாலை எடுத்து வந்து ப்ரௌனிக்குக் கொடுத்தாள்.

“சரி எல்லாரும் கிளம்புங்க” ஜீவாவின் தந்தை சதாசிவம் சொல்ல எல்லோரும்
கிளம்பினர். நாய்க்குட்டியை தன் அறையில் பத்திரமாக வைத்து வந்தாள் கௌசி.

அன்று ஞாயிறு என்பதால் ஃபுல் ப்ளான் போட்டிருந்தனர் எல்லோரும். மதியம் ஜெயா அத்தை வீட்டில் சாப்பாடு. அப்புறம் சினிமா.. பீச்.. நைட் டின்னருக்கு செந்தில்நாதனும் சதாசிவமும் ஒரு ரெஸ்டாரண்ட்டில் டேபிள் புக்
செய்திருந்தனர்.

எல்லா ப்ளானையும் நன்றாக
முடித்துவிட்டு ஏழரை மணி அளவில் தன் மாமாக்கள் புக் செய்திருந்த அடையார்
தக்சினில் அமரிந்திருந்தனர் அனைவரும். தன் முன் வைத்திருந்த அனைத்து
ஐயிட்டங்களையும் வெட்டியவள் வேண்டுமென்றே விக்னேஷ் ஆர்டர் செய்த குலோப் ஜாமூன் உடன்
வைத்திருந்த ஐஸ் க்ரீமை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.

அவன் அவளை ஒற்றைப் புருவத்தை உயர்த்திப் பார்க்க “ஏன்டா முறைக்கற.. என்ன ஆச்சு.. ஓ ஐஸ்கிரீம் நீ அர்டர்
பண்ணதா.. ச்சு ச்சு தெரியாம
எடுத்துட்டேன்.. முறைக்காதடா.. பர்த்டே பேபில நான்.. பில் வரக்குள்ள இன்னொன்றை வாங்கிக்கோ டா” என்று
வெறுப்பேற்றியவளைப் பார்க்கையில் சிரிப்பு தான் வந்தது அவனுக்கு.ஐஸ்கிரீம் சாப்பிட்டபடியே தன் அருகில்
அமர்ந்திருந்தவனை ஓரக்கண்ணால் பார்த்தாள் கௌசி. வெள்ளை சர்ட்டில்..
ப்ளூ ஜீன்ஸிலும் அதிலும் முழங்கை வரை கையை ஸ்லீவை மடித்திருந்தான்.
அலைஅலையான கேசம் ஏசிக்கு நேர் எதிரில் உட்கார்ந்திருந்ததால் லைட்டாக
ஆட கூர் மூக்குடன் புன்னகைத்தபடி அமர்ந்து அழகாகக் காட்சியளித்தவனைக் காணத் தெவிட்டவில்லை கௌசிக்கு.

பின் சாப்பிட்டு விட்டு எழுந்தவள் கை கழுவும் இடத்திற்குச் சென்று கையைக்
கழுவ அங்கு இரு பெண்கள் பேசுவது நன்றாகக் கேட்டது. அதாவது கை கழுவும் இடத்திற்கு முன்னால்.

“ஹே.. அந்த வைட் சர்ட் தான சொல்ற.. செம ஹாட் அன்ட் ஹேண்ட்சம் டி.. நீ போய் பேசி நம்பர் வாங்கேன்” என்று
பஞ்சுமிட்டாய் டாப் போட்டிருந்தவள் பேசினாள்.

“சூப்பரா தாண்டி இருக்கான்.. ஆனால் இவ்வளவு அழகாக இருப்பவனுக்கு லவ்வர் இல்லாமலா இருப்பாள்?” என்று ஒருத்தி யோசனையாய்க் கேட்க அந்த
பஞ்சுமிட்டாய் மறுபடியும் பேசினாள்.

“இருந்தா நமக்கென்ன வந்தது.. அவ என்ன சண்டைக்கே வரப்போறா” என்று பதிலளிக்க “ஆமாம் டி சண்டைக்கு தான்
வரப்போறேன்” என்றபடி அவர்களின் பின்னால் நின்றபடி குரல் கொடுத்தாள்.
அவர்கள் யாரைப் பற்றி பேசுகிறார்கள் என்று நன்றாகப் புரிந்தது
கௌசிகாவிற்கு.

ஒரு நிமிடம் இருவருக்கும் திக் என்று இருந்தது. அவன் அருகில் கௌசி உட்கார்ந்திருந்ததை கவனித்த பெண்கள் கௌசி கைகழுவும் இடத்திற்கு உள்ளே வந்ததைக் கவனிக்கவில்லை.

ஒரு நிமிடம் சுதாரித்துக் கொண்ட பஞ்சுமிட்டாய் “யாருன்னு தெரியாதவங்களை இப்படித்தான் மரியாதை இல்லாமல் டி போடுவீர்களா”
என்று பேச்சை வேறு திசைக்குத் திருப்பினாள்.

“ஓஓ… அப்படியா.. உங்க அட்வைஸிற்கு ரொம்ப நன்றி மிஸ்.பஞ்சுமிட்டாய்.
அடுத்தவனுக்கு ஆள் இருந்தால் கூட பேசி கடலைப் போடும் நினைக்கும் உனக்கு
இந்த மரியாதைப் போதும்ன்னு தான் நினச்சேன்” என்று கைகளைக் கட்டியபடி அவளிற்கு பதிலளிக்க அந்தப்
பெண்களின் முகம் கன்றிவிட்டது.

அவள் ஏதோ பேச வர கூட இருந்தவள்
அவளைத் தடுத்து “சாரி மேடம்” என்று சொல்லிவிட்டு அவளை இழுத்துக் கொண்டு சென்றாள்.

பின் அனைவரும் சாப்பிட்டு முடிக்க சதாசிவமும் செந்தில்நாதனும் பில்லைக்
கட்டினர். அத்தை மாமா எல்லாம் ஒரு காரில் புறப்பட, விக்னேஷ்.. ஜீவா.. மதி.. கௌசி..வரதராஜன் எல்லாம் ஒரு காரில் புறப்பட்டனர். பின்னர் மதியை ஹாஸ்டலில் விட்டுவிட்டு.. கடைசியாக
வரதராஜனையும் கௌசியையும் வீட்டில்
இறக்கிவிட்டு விக்னேஷும் ஜுவாவும் கிளம்பினர்.

அங்கு ஹோட்டலில் தன்னை அந்த ஒரு ஜோடிக் கண்கள் கவனித்ததைக் கௌசி
அறியாமல் ஜாலியாக வீட்டினுள் சென்றாள்.

விதி யாரை விட்டது?