காதல்போர் 20

ei3N2FV84632-d6b5b903

காதல்போர் 20

வேதாவின் வார்த்தைகளிலும் குரலிலும் இருந்த மாற்றத்தை உணர்ந்த ராவண், அந்த ஆள் அரவமற்ற சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி அவளையே ஆழ்ந்து நோக்க, அவளும் காதலாக அவனையேதான் பார்த்திருந்தாள்.

சரியாக, இவர்களிருவரின் நேரத்திற்கு வருணபகவான் என்ன நினைத்தாரோ? சோவென மழை பொழிய, அந்த இதமான காலநிலை மற்றும் இரவுநேரம் இருவரின் உணர்ச்சிகளையும் தூண்டுவது போலே அமைந்தது. ராவணின் பார்வையில் அவன்மேல் காதல் கொண்ட அவள் மனமோ அவன் பக்கமே மேலும் சாய்ந்தது என்றால், பெண்மையின் அருகாமைக்கு ஒரு ஆண்மகனாக அவனுடைய ஹார்மோன்கள் தாறுமாறாக செயற்பட தொடங்கின.

தான் அணிந்திருந்த சீட்பெல்ட்டை கழற்றியவன், இருக்கையிலிருந்து சற்று அவள் நோக்கி திரும்பி அவளருகே மெதுவாகச் செல்ல, அவனையே இமை மூடாது பார்த்திருந்தவளும் காந்தம் ஈர்ப்பது போல் மெதுவாக முன்னோக்கி சென்றாள். அவள் மூச்சோடு தன் மூச்சுக்காற்றை கலக்கும் தூரத்திற்கு நெருங்கியவன், சேலையினூடாக தெரிந்த வெற்றிடையை அழுந்தப் பற்றி தன்னை நோக்கி இழுத்து, அவளிதழையே விழுங்குவது போல் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவளை நெருங்க எது உந்தியது என்று அவனுக்கு சுத்தமாக தெரியவில்லை. ஆனால், ‘காதலா?’ என்று கேட்டால் கண்டிப்பாக இல்லையென்றுதான் சொல்லியிருப்பான்.

அவன் இடையை பற்றியதுமே அவள் உடலில் ஒரு சிலிர்ப்பு! இதுவரை நண்பன் என்ற ஒரு உறவை தாண்டி எந்த ஆண்மகனுடனும் அவள் நெருங்கிப் பழகியதில்லை. முதல்முறை அவன் மேல் கொண்ட காதல் அவன் அவளை நெருங்க சம்மதிக்க, அவன் இதழை நெருங்கும் போதே விழிகளை இறுக மூடிக்கொண்டாள்.

அவனும் அவளின் மூடிய விழிகளை பார்த்துக்கொண்டே அவளிழை தன் இறுகிய இதழால் அழுந்த சிறப்பிடித்துக்கொள்ள, தடுமாற ஆரம்பித்துவிட்டாள் வேதா. அவனோ அவள் தடுமாற்றலையும் தன் செயலாக்கி அவள் இதழ் தேனை சுவைத்துக்கொண்டே செல்ல, பிடிமானத்திற்காக அவன் பின்னந்தலை முடியை இறுகப் பற்றிக்கொண்டாள் அவள்.

அவனுக்கு அது மேலும் தூண்டுதலாக அமைந்ததோ, என்னவோ? காற்று கூட புக முடியாத அளவிற்கு அவளிடையை தன் வலிய கரத்தால் வளைத்து தன்மீது நெருக்கிக்கொண்டு தன் முத்தத்தை தொடர்ந்துக்கொண்டேச் செல்ல, முதலில் திணறியவள் பின் அவனிடம் கற்றுக்கொண்ட பாடத்தை அவனுக்கே போட்டியாக அவனுக்கு ஈடாக செய்ய, அவள் கொடுத்த அழுத்தத்தில் அவனுக்கே மூச்சு திணறியது.

மூச்சுக்காக அவனே விலக முயன்றாலும் அவள் விட்டால் தானே!

ஒருவர் மூச்சை ஒருவருக்கு சுவாசமாக வழங்கி நிமிடங்கள் தாண்டி முத்தத்தில் திளைத்திருந்தவர்கள், ஒருகட்டத்தில் மெதுவாக விலக, அப்போதும் கல் உண்ட வண்டாய் அவள் நெற்றியோடு தன் நெற்றியை ஒட்டி அவளிதழையே பார்த்திருந்தான் ராவண்.

அவன் பார்வையில் வெட்கியவள், மீண்டும் அவனிதழில் அழுந்த முத்தத்தை பதித்து “லவ் யூ ராவண்” என்று சொல்ல, சட்டென அவள் விழிகளை நிமிர்ந்துப் பார்த்தவனுக்கு எதுவுமே புரியவில்லை.

“வாட், லவ்வா? ஹாஹாஹா…” அவன் வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பிக்க, இப்போது புரியாமல் விழிப்பது வேதாவின் முறையானது. புருவத்தை நெறித்து அவனையே பார்த்திருந்தவள், “நொட் இன்ட்ரஸ்டட்” எனற அவனுடைய அழுத்தமான பதிலில் திகைத்து விழித்தாள்.

சரியாக, வேதாவின் பின்னால் பார்த்த காட்சியில் வேகமாக அவள் பின்னந்தலையை பற்றி குனியச்செய்து ராவணும் குனிந்துக்கொள்ள, இவர்களின் கார் கண்ணாடி சுக்கு நூறாக சிதறியது.

கோபத்தில் பற்களை கடித்தவனுக்கு அப்போதே புரிந்துப் போனது, இது தந்தையின் அடியாற்கள்தான் என்று. அவனும் இதைதானே எதிர்ப்பார்த்தான். ஆரம்பத்திலிருந்து சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த ராவணுக்கு வேதா வெளியில் அழைத்ததும் வசதியாக போய்விட, மண்டபத்திற்கு சென்று திரும்பி வந்ததிலிருந்து தங்கள் வண்டியை பின்தொடர்ந்தவர்களை கவனித்துக்கொண்டுதான் இருந்தான்.

அதனாலேயே இந்த ஆளில்லா சாலையில் வண்டியை செலுத்தியவன், வேதாவின் அருகாமையில்தான் சற்று தடுமாறிப்போனான்.

இப்போது பத்து பதினைந்து அடியாற்கள் அவர்களை சுற்றி இருக்க, கார் கண்ணாடி சிதறியதில் வேதாவை காத்தவாறு ராவண் குனிந்துக்கொள்ள, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவன் கோலரை பற்றி அடியாளோருவன் வெளியில் இழுத்தான்.

ஆனால், நொடியில் சுதாகரித்தவன், அடுத்த தன் கோலரை பற்றியிருந்த அடியாளின் கையை வளைத்து உதைத்த உதையில் தரையில் மூச்சு பேச்சின்றி விழுந்துக் கிடந்தான் அவன்.

வேதாவுக்கோ நடப்பதை ஜீரணிக்கவே சில மணித்துளிகள் தேவைப்பட்டன. அவள் தன்னை சுதாகரித்து ராவணை கவனிப்பதற்குள், வேதாவையும் தன்னையும் நெருங்க நினைத்த அத்தனை பேரையும் கொஞ்சம் கூட சுதாகரிக்க விடாது அடி வெளுத்தெடுத்துக்கொண்டிருந்தான் ராவண்.

சுனிலுடைய கட்டளையின் பெயரில் வந்த அந்த அடியாற்களும் அறிவார்கள், ராவணை தாம் எதிர்த்து நிற்பது சிங்கத்தின் வாயில் தன் தலையை தானே நுழைப்பதற்கு சமன் என்று. ஆனால், முதலாளியின் கட்டளையை மீற முடியாது அல்லவா!

சொன்ன வேலையை கச்சிதமாக செய்து முடிக்க அவர்கள் முயற்சிக்க, அவர்கள் கையில் வைத்திருந்த இரும்பு ராடை சுழற்றி அதைக்கொண்டே அவர்களை புரட்டியெடுத்தான் ராவண். கோபத்தில் முகம் சிவந்து, நெற்றி நரம்புகள் புடைத்து ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தவன் கிட்டதட்ட ராட்சசன் போல்தான் தெரிந்தது அவர்களுக்கு.

காரிலிருந்த நடப்பதை விழி விரித்து பார்த்துக்கொண்டிருந்த வேதாவுக்கு ‘விட்டால் மொத்தப் பேரையும் கொன்றுவிடுவான்’ என தோன்றியதோ, என்னவோ? காரிலிருந்து இறங்கி, “ராவண்…” என்று வேதா கத்தியதும்தான் தாமதம், அடிப்பதை நிறுத்தி முன்நெற்றி முடியிலிருந்து மழைத்துளி சொட்டு சொட்டாக விழ, நிதானமாக அவளை திரும்பிப் பார்த்தான் அவன்.

அவளோ மழைநீரில் மொத்தமாக நனைந்துப்போய் அவனை கோபமாக  நோக்க, கையிலிருந்து ராடை தரையில் போட்டு இரு கைகளையும் தூக்கி சோம்பல் முறித்துக்கொண்ட ராவணின் முகத்திலோ கேலி தாண்டவமாடியது.

அடுத்தநாள்,

“நான்தான் அப்போவே சொன்னேனே, எப்படியும் சுனிலய்யா நம்மள போட்டுத்தள்ள ஆள் அனுப்புவாருன்னு. பையா, அவனுங்கள உயிரோட விட்டுட்டா வந்தீங்க?” வம்சி கோபமாக கேட்க, ராவணிடமோ பதிலே இல்லை.

சாதாரணமான முகபாவையுடன் எதையோ வெறித்தவாறு நின்றிருந்த வேதாவைதான் சிகரெட்டை புகைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தான் அவன். அவளுக்கோ அவன்மேல் அத்தனை கோபம்!

‘முத்தம் கொடுத்துவிட்டு காதல் இல்லையென்றால் அப்போது அதற்கு பெயர்தான் என்ன?’ என்ற ஆத்திரம்! ஆனால், அதை கேட்டு சண்டை போடும் சூழ்நிலை இது இல்லை என்று தெரிந்தே நடக்கும் பிரச்சினையைப் பற்றி யோசனையில் இருந்தாள்.

“எனக்கு ரொம்பவே பயமா இருக்கு. வேதா பேசாம இதெல்லாம் விட்டுட்டு நாம…” விக்ரம் பயந்த குரலில் ஏதோ சொல்ல வர, ‘ச்சே!” என்று சலித்தவள், “எத்தனை தடவை சொல்லிட்டேன், இப்படி பேசாதன்னு. உயிருக்கு பயந்து கண்ணுக்கு முன்னாடி நடக்குற கொடுமைய என்னால பார்த்துட்டு இருக்க முடியாது” என்றாள் அழுத்தமாக.

“வேதா, இதுக்கு மேல தாமதிக்கிறது எனக்கு சரியா தோனல. உன்கிட்ட ஏதோ எவிடென்ஸ் இருக்குன்னு சொன்னல்ல, அதை கொடு. நான் பண்ண வேண்டியதை பண்றேன்” வம்சி கேட்க, “அதை பண்ண எனக்கு ஒருநிமிஷம் ஆகாது. ஆனா, அதை பண்ண முடியாத சூழ்நிலையில இருக்கேன்” மாஹியை நினைத்து சொன்னாள் வேதா.

அதேநேரம் ராவணின் முகத்தில் ஒரு வெற்றிப்புன்னகை!

வம்சியோ அவனுடைய சிரிப்பை கவனித்து தானும் பலத்த குரலில் சிரிக்க, அவனுடைய சிரிப்பை கவனித்த விக்ரமும் வேதாவும்  புரியாமல் நின்றனர்.

“பையா, சொல்லல்லயா நீங்க? ராவண்னா சும்மாவா!” வம்சி கோலரை தூக்கி விட்டுக்கொள்ள, “மாஹி இஸ் சேஃப்” வெற்றிப்புன்னகையோடு சொன்னான் ராவண்.

வேதாவுக்கோ அதிர்ச்சி! கூடவே இன்னொருவனுக்கும். அது வேறு யாருமல்ல விக்ரமேதான். ‘மாஹி’ என்ற பெயரைக் கேட்டதுமே அவளைப் பற்றி கேட்க தூண்டிய நாவை, ராவணுக்கு பயந்து அடக்கி வைக்க படாதபாடுபட்டுத்தான் போனான் அவன்.

ராவணோ வேதாவை பார்த்தவாறே ஒரு எண்ணிற்கு அழைத்து ஸ்பீக்கரி. போட, எதிர்முனையில் அழைப்பை ஏற்றதுமே “பையா…” என்ற மாஹியின் கீச்சிடும் குரல். வேதா ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள் என்றால், விக்ரமின் உணர்வுகளை விளக்கவா முடியும்?  காதல் கொண்ட மனமல்லவா, அவள் குரலை கேட்டதுமே அவள் பெயரையே திரும்பத் திரும்ப உச்சரித்துக்கொண்டிருந்தது.

“எப்படி இருக்க மாஹி, எல்லாம் வசதியா இருக்கா? ஒன்னும் பிரச்சினையில்லையே!” ராவண் கேட்க, “நிஜமாவே நீங்க என் பையா தானா?” ஆச்சரியமாக வந்த அவள் கேள்வியில் இதழ் பிரித்து சிரித்துக்கொண்டான் அவன்.

“கேள்வியில கேலி தெரியுது. ம்ம்… என்ன?” ராவண் சிரிப்பை மறைத்து போலியான கண்டிப்புடன் கேட்க, “அய்யோ பையா! அப்படியெல்லாம் கிடையாது. எனக்கு என்ன பிரச்சினை இருக்க போகுது? நான் நல்லாதான் இந்த வீட்டுல இருக்கேன். ஆனா, என்கிட்ட ஒரேயொரு கேள்விதான். அவர் உயிரோட இருக்காருன்னு தெரிஞ்சி போச்சு. எப்படி இருக்காரு? உங்க பக்கத்துல இருக்காரா?” மாஹியின் குரலில் விக்ரமை பற்றி கேட்கையில் அத்தனை காதல்! அதை ராவணும் உணரத்தான் செய்தான்.

தான் பேசுவதையே ஏக்கமாக பார்த்தவாறு நின்றிருந்த விக்ரமை ஒற்றை புருவத்தை உயர்த்தி அவன் நோக்க, ராவணின் பார்வை தன் மேல் படிந்ததுமே தயக்கமாக முகத்தை திருப்பிக்கொண்டான் விக்ரம். ஆனால், தன்னவள் தன்னை பற்றி கேட்டதில் உண்டான கர்வச்சிரிப்பு அவனிதழ்களில்!

“உங்க அவருக்கு என்ன! பேஷா இருக்காரு. கூடிய சீக்கிரம் உன்னை இங்க வர வைச்சிடுறேன். கவனமா இரு!” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தவன், ‘எப்புடி?’ என்ற ரீதியில் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி தெனாவெட்டாக வேதாவை நோக்க, “எப்ப…எப்படி?” அதிர்ந்துப்போய் கேட்டாள் அவள்.

சிகரெட்டை பற்ற வைத்தவாறு, “வம்சி…” என்று ராவண் அழைத்ததும்தான் தாமதம், “இப்போவே அவங்கள கூப்பிடுறேன்” என்றுவிட்டு வம்சி ஒரு எண்ணிற்கு அழைக்க, எதிர்முனையில், “ஹெலோ ஹெலோ…” என்று பதட்டமாக ஒலித்தது சுஜீப்பின் குரல்.

“பாப்பா…” இல்லாத அழுகையை வரவழைத்து வம்சி நீட்டி முழக்கி அழைக்க, “வம்சி, உனக்கு எதுவும் ஆகல்லையே? நீ நல்லாதானேப்பா இருக்க? அந்த மெஹ்ரா குடும்பமே ஆபத்தானவங்கன்னு இப்போவாச்சும் புரிஞ்சிக்கடா. அவங்களோட காரியத்தை சாதிக்க அவனுக்கு உதவி பண்ண உன்னையே கொல்லுவேன்னு மிரட்டுறான். நிலைமை சரியாகட்டும், அவனை…” சுஜீப் கோபமாக இழுக்க, “என்னை…” அவரை இடையிட்டு கேள்வியாக இழுத்தான் ராவண்.

“ஆங், ராவண் தம்பி… நீங்களா? அது… அது வந்து…” அவர் திணறலைப் பார்த்து வம்சி வாயைப் பொத்திச் சிரிக்க, “என்ன பயம் விட்டு போச்சா?” என்ற ராவணின் கர்ஜிக்கும் குரலில் சுஜீப்பிற்கோ தூக்கி வாரிப்போட்டது.

“அய்யோ! அப்படி எல்லாம் இல்லை தம்பி. பயம் இருக்கப் போய்தானே நீங்க சொன்னதை கச்சிதமா பண்ணியிருக்கேன். ஆனா என்ன, உங்க தங்கச்சிய உங்க வீட்டுலயிருந்து கடத்த நான்தான் படாதபாடுபட்டேன். இது மட்டும் சுனில் மெஹ்ராவுக்கு தெரிஞ்சது என் வீட்டையே குடும்பத்தோடு கொழுத்திருவாரு” அவரின் வார்த்தைகளில் பயம் அப்பட்டமாகத் தெரிந்தது.

“ஹாஹாஹா… ஏதோ நீங்களே ஸ்கெட்ச் போட்ட மாதிரி பேசுறது ரொம்ப ஓவரு. எனக்கு விசுவாசமான சில ஆளுங்களை வச்சிதானே பண்ணீங்க. பட், எதுக்கும் அலெர்ட்டா இருங்க! நான் மறுபடியும் எப்போ வேணா உங்களை கூப்பிடுவேன். நல்லா நியாபகம் வச்சிக்கோங்க! வம்சி என் கையில” சிரிப்பை அடக்கி போலியாக மிரட்டிவிட்டு ராவண் அழைப்பைத் துண்டிக்க, வாய்விட்டே சிரித்துவிட்டான் வம்சி.

“வாவ்! இவளோட மாமா ஒரு டம்மி பீஸுன்னு தெரியாம போச்சே!” விக்ரம் சொல்லிச் சிரிக்க, “அரே…” என்று விக்ரமை முறைக்க முயன்று வம்சியும் அவனுடன் சிரித்துவிட்டான்.

“அப்போ மாஹி எங்க இருக்கா? எந்த ஆபத்தும் இல்லைதானே?” வேதா அப்போதும் ஒருவித பதட்டத்துடனே கேட்க, “டவுன்ல வம்சியோட ஃப்ரேன்ட் வீட்டுல இருக்கா. இப்போ அவள இங்க அழைச்சிட்டு வர முடியாத சூழ்நிலை. அவள காணோம்னு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். டவுன் வரைக்கும் பாப்பாவோட ஆளுங்க மாஹிய தேடிக்கிட்டு இருப்பாங்க. நிலைமை சரியாகுற வரைக்கும் அவ அங்க இருக்குறது பெட்டர்” ராவணுடைய வார்த்தைகள் சுற்றியிருந்தவர்களுக்கும் சரியாகத் தோன்றியது.

வேதாவின் இதழ்களோ புன்னகையில் விரிய, “இப்போ நம்ம வேலைய ஆரம்பிக்கலாமே வேதா?” விக்ரம் சிரிப்புடன் கேட்க, அவனிடம் தன் அலைப்பேசியை தூக்கிப்போட்டாள் அவள்.

“இந்த வழி மக்களுக்கு இதைப் பத்தி எந்தளவுக்கு புரிய வைக்கும்னு தெரியாது. ஆனா, எல்லா மக்களுக்கும் இது போய் சேரணும். இந்த வீடியோவோடு சேர்த்து ஏழெட்டு பிட்டு சேர்த்து போடுங்க. இஃப் யூ டோன்ட் மைன்ட், நீ அடிவாங்கினதும் இதுக்காகதான்னு கூட சேர்த்துக்க!” வேதா கேலியாகச் சொல்ல, “ஐயாவோட பெர்ஃபோர்மென்ஸ்ஸ மட்டும் பாரு வேதா!” கோலரை கெத்தாக தூக்கி விட்டுக்கொண்டனர் வம்சியும் விக்ரமும்.

அலைப்பேசியை எடுத்துக்கொண்டு இருவரும் அங்கிருந்து நகர, மீண்டும் அவர்களை அழைத்து நிறுத்தியவள், “நம்ம அகௌன்ட்லயிருந்து இதை அப்லோட் பண்ண வேணாம். இதுக்காகவே இருக்காரு நம்ம மினிஸ்டர் நரேந்திரன், அவரோட பர்சனல் அகௌன்ட்டால அப்லோட் பண்ணுங்க. அப்பாகிட்ட நான் பேசிக்கிறேன். இன்னைக்கு நைட்குள்ள பக்காவா நடந்தாகணும். அதுக்கப்றம் இதை நிறுத்துறது  சட்டத்தோட, மக்களோட முடிவு” என்று சொல்லி முடிக்க, “எதுக்கு மாமாவோட அகௌன்ட்?” புரியாமல் கேட்டான் வம்சி.

“சாதாரண ஆளுங்க போட்டா எவன் கண்டுக்குறான்? இதுவே மினிஸ்டர் போட்டாருன்னா, டீவி நியூஸ் சேனல்ல வந்தாலும் ஆச்சரியம் இல்லை” வேதா சொல்லவும், அவளை நெட்டி முறித்த விக்ரம், “சூப்பர் ஐடியா செல்லக்குட்டி” என்றுவிட்டு வம்சியை இழுத்துக்கொண்டுச் செல்ல, இப்போது வேதாவின் பார்வை படிந்தது என்னவோ ராவண் மீதுதான்.

அவனை கோபமாக நோக்கியவள், விறுவிறுவென முன்னோக்கிச்செல்ல, வேகமாக அவள் பின்னால் சென்ற ராவண், அவளிடையை பின்னாலிருந்து பற்றி இழுத்து அவளிதழில் முத்தம் பதிக்க, அவன் மார்பில் கைவைத்து தள்ளிவிட்டாள் அவள்.

அவள் தள்ளிவிட்டதில் தடுமாறி விழப்போனவன், காலை தரையில் ஊன்றி நின்று, “என்னடி, நேத்து அமைதியா தானே இருந்த? இப்போ மட்டும் என்னாச்சு?” முறைப்புடனே கேட்க, “ச்சீ…” என்றுவிட்டு வேதா வெளியேற போனாள். ஆனால், அவன் விட்டால் தானே!

அவளை வழிமறிப்பது போல் வந்து நின்றவன், அவள் தாடையை இறுகப்பற்றி “சொல்லுடி” என்று அழுத்தமாக கேட்க, “என்னை விடு! நேத்து நான் அமைதியா இருந்தேன்னா, அதுக்கு காரணம் நீ என்னை காதலிக்கிறன்னு தப்பா புரிஞ்சிக்கிட்டேன். ஆனா நீ…” முகத்தை அருவருப்பாக அவள் திருப்பிக்கொள்ள, ஏளனமாக வளைந்தன ராவணின் இதழ்கள்.

“ஓஹோ! மேடம் காதலிக்கிறீங்களா? அதுவும் இந்த ராவண?” கேலியாக அவன் வார்த்தைகள் வெளிவர, வேதாவோ அவன் முகத்தை பார்க்கவேயில்லை. தரையை வெறித்திருந்த அவள் பாவனையே அவன் மேலுள்ள அவள் காதலை எடுத்துக்காட்டியது.

இதழை வளைத்து தன் அக்மார்க் புன்னகை புரிந்தவன், “வாவ் மேரா மிர்ச்சி!” என்று அவள் கன்னத்தை பற்றி கோலம் போட்டவாறு அவளிதழை நெருங்க, முகத்தை திருப்பிக்கொண்டவள், “நிஜமாவே உனக்கு என்மேல எந்த ஃபீலிங்சும் இல்லையா?” என்று ஒருமாதிரிக் குரலில் கேட்டாள்.

“இருக்கு. ஆனா, அது காதல் கிடையாது” ராவணின் வார்த்தைகளில் அவனை வேதனை நிறைந்த ஒரு பார்வை பார்த்தவளுக்கு கூடவே கோபமும் பெருக, ‘இவனை என்ன செய்தால் தகும்?’ என்றிருந்தது அவளுக்கு.

Leave a Reply

error: Content is protected !!