காதல் சதிராட்டம் – 13

பறவைக்கூட்டங்கள் கூட்டில் இருந்து புறப்பட்டு வானில் மிதந்துக் கொண்டு இருந்தது. சூரியனின் பொற்கதிர்கள் மெது மெதுவாக பூமியில் பரவத் தொடங்கியிருந்தது.

ஜன்னலின் சாளரம் வழியே புகுந்து வந்த சூரியனின் பொன் கீற்றுகள் ஆதிராவின் முகத்தினில் மெதுவாக விழ ஆரம்பித்தது. ஆனால் அவளிடத்தில் சிறிது மாற்றமும் இல்லை. உறங்கிக் கொண்டே இருந்தாள்.

அதேப் போல வினய்யிடத்திலும் எந்த மாற்றமும் இல்லை. எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டு உறங்கும் அவள் முகத்தையே இரவு எல்லாம் எப்படி பார்த்துக் கொண்டு இருந்தானோ இப்போதும் அப்படியே தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவள் முகத்தை மனதினுள் நிரப்பி பத்திரப்படுத்திக் கொண்டு இருக்கின்றான் போலும்.

துயில் கலைந்து எழுந்து வந்த ப்ரணவ் வேகமாக வினய்யிடம் வந்தான்.

“என்ன அண்ணா… அண்ணி இன்னும் எழல…. இப்படி தூங்கிட்டு இருக்காங்க…”
என்று ப்ரணவ் கேட்க வினய்யோ அவனை மெதுவாக பேசும் படி உதட்டில் விரலை வைத்து சைகை செய்தான்.

ப்ரணவ்வும் தன் உதட்டில் கை வைத்துக் கொண்டு மெதுவாக ” அண்ணா என்ன அண்ணா … அண்ணி இப்படி தூங்கிட்டு இருக்காங்க… ” என்றான் மறுபடியும்.

“அதான் தூங்குறானு தெரியுதுல டா.. அப்புறம் ஏன் மறுபடியும் மறுபடியும் அதே கேள்வியை கேட்டுட்டு இருக்கே… ” என்றான் வினய் சலிப்பாக.

“ஆமாம் அண்ணா நான் ஏன் இதே கேள்வியை கேட்டுக்கிட்டு இருக்கேன்… ” என்று ப்ரணவ்வும் திரும்ப அதே கேள்வியை கேட்டான்.

வினய் அவனை முறைத்தபடி அருகில் வருமாறு சைகை செய்தான். ப்ரணவ்வோ இரண்டடி பின்னால் நகர்ந்தான்.

” இல்லை அண்ணா.. நான் வர மாட்டேன்… இப்படி மொக்கையா பதில் சொன்னதுக்கு நீங்க என்னை அடிப்பீங்க. ” என்றான் போலியாக பயந்த பாவனையில்.

“அடச் சீ கிட்டே வா டா.. நீ வரலனா தான் நான் துரத்தி துரத்தி அடிப்பேன்… ” என்று வினய் சொல்ல ப்ரணவ் அருகில் வந்து நின்றான்.

“ப்ரணவ் நான் சொல்றதை கவனமா கேட்டுக்கோ… இந்த போட்டியிலே ஜெயிச்சது நான் இல்லை ஆதிரா தான்… புரிஞ்சுதா?”

“எதேதே… ” என்றான் புரியாத குரலில்.

“அதான் ப்ரணவ்… “

“அண்ணா எனக்கு சுத்தமா புரியல… நீங்க தானே அண்ணா நைட் முழுக்க தூங்காம முழிச்சுட்டு இருந்தது… அப்புறம் எப்படி அண்ணா ஆதிரா அண்ணி ஜெயிச்சவங்களா ஆவாங்க?”

“அதெல்லாம் அப்படி தான் டா… அவள் இப்படி தூங்கினதாலே முக்கியமான ஒரு விஷயத்தை அவள் வாழ்க்கையிலே மிஸ் பண்ணிட்டா டா… அந்த வருத்தமே அவள் மனசுல இருந்து இன்னைக்கு வரைக்கும் போய் இருக்காது….  இன்னைக்கும் அதே மாதிரி தூங்கிட்டோம்னு மறுபடியும் அவள் வருத்தப்படக்கூடாது புரியுதா.. அதனாலே நான்  சொல்றா மாதிரி சொல்லு சரியா… ” என்று ப்ரணவ்வின் காதுகளில் சில விஷயங்களை  ரகசியமாக சொல்லிவிட்டு சென்றான்.

அறைக்குள் நுழைவதற்கு முன்பு ” டேய் ப்ரணவ் அவளை ரொம்ப நேரம் தூங்கவிடாதே  அரை மணி நேரம் பொறுத்து அவளை எழுப்பு… இல்லைனா காலையிலே டிபன் சாப்பிடாம தூங்கிட்டு இருப்பா… உடம்புக்கு நல்லது இல்லை…. அப்புறம் அரை மணி நேரம் கழிச்சு நீ எழுப்பியும் அவள் எழுந்துக்கலைனா அந்த தண்ணி எடுத்து மூஞ்சுல ஊத்து… இரண்டு செகண்ட்ல எழுந்து உட்காருவ… ” என்று சிரித்தபடி சொல்லிவிட்டு அவன் அறைக்குள் புகுந்து கொண்டான்.

“தண்ணீர் எடுத்து ஊற்றும் அளவிற்கு எல்லாம் அண்ணி தூங்கிக் கொண்டே இருக்க மாட்டங்க… அண்ணா சும்மா அண்ணியை கலாய்ச்சுட்டு போறாங்க… ” என்று ப்ரணவ் தன் மனதினில் பேசிய படி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

வினய் சொன்ன அரை மணி நேரம் முடிந்து இருந்தது. ப்ரணவ் மெதுவாக எழுந்து ஆதிராவின் அருகில் வந்தான்.

“அண்ணி… ” என்றழைத்தான் அவளை எழுப்பும் விதமாக. ஆனால் ஆதிராவிடம் சிறு அசைவு  கூட இல்லை.  லேசாக குரலை உயர்த்தி ” அண்ணி… ” என்றழைத்தான். அப்போதும் அவளிடத்தில் எந்த மாற்றமும் இல்லை.

மெதுவாக உலுக்கிப் பார்த்தான். அவள் கண்கள் கூட திறக்கவில்லை. சத்தமாக அழைத்து வேகமாக உலுக்கிப் பார்த்தான். அப்போதும் அடித்துப் போட்டாற் போல் உறங்கிக் கொண்டு இருந்தாள்.

வினய் சொன்னது அவன் மனதிற்குள் நியாபகம் வந்தது. அப்போது தான் வினய் உண்மையை தான் சொல்லி இருக்கின்றான் என்ற உண்மை புரிந்தது..

“அண்ணா நீங்க அண்ணியை செமயா புரிஞ்சு வைச்சு இருக்கீங்க … ” என்று மனதிற்குள் வினய்யை பாராட்டிய படி தண்ணீர் பாட்டிலை எடுத்து ஆதிராவின் மீது ஊற்றினான். இரண்டே நொடிகளில் பட்டென எழுந்து அமர்ந்தாள் ஆதிரா.

அவள் முகத்தினில் தண்ணீர் ஊற்றப்பட்டதன் அதிர்ச்சி ஊறி இருந்தது. ப்ரணவ்வை திரும்பி புரியாமல் பார்த்தாள்.

“அண்ணி சாரி அண்ணி… நீங்க இந்த போட்டியிலே ஜெயிக்கணும்ன்றதுக்காக தான் உங்க முகத்துல தண்ணியை ஊத்துனேன்… ” என்று ப்ரணவ் சொன்ன பிறகு தான் நேற்றிரவு தூங்காமல் இருக்க வேண்டும் என்ற போட்டியே நினைவிற்கு வந்தது. தலையில் கைவைத்து அப்படியே அமர்ந்துவிட்டாள்.

“போச்சா… முதல் போட்டியிலேயே தோத்துட்டேனா… எப்போ தூங்குனேனு தெரியாமயே இப்படி தூங்கிட்டேனே… இந்த தூக்கம் தான் என் வாழ்க்கையை எப்போ பார்த்தாலும் தோல்வியிலே தள்ளுது…  ” என்று புலம்பத் தொடங்கினாள்.

“அண்ணி உங்களுக்கு முன்னாடி அண்ணா தான் தூங்கிட்டாங்க… நீங்க தான் வின்னர்… ” என்றான் ப்ரணவ். ஆனால் ஆதிராவால் அதை நம்ப முடியலில்லை.

” இல்லை ப்ரணவ் நான் புக் படிச்சுக்கிட்டே இருந்தது எனக்கு நியாபகம் இருக்கு… அதுக்கு அப்புறம் எனக்கு எதுவுமே நியாபகமே இல்லை… அப்போ நான் அப்பவே தூங்கிட்டேனு தானே அர்த்தம்… அப்புறம் எப்படி நான் வின்னர் ஆவேன்… ” என்று புரியாமல் கேட்டாள்.

“இல்லை அண்ணி.. உங்க கவனம் எல்லாம் புக் படிக்கிறதுல தான் இருந்தது… நீங்க அண்ணாவை பார்க்கல.. ஆனால் நான் அண்ணாவைப் பார்த்தேன்.. நீங்க புக் படிச்சுக்கிட்டு இருக்கும் போது மெதுவா அவர் ரூம்க்கு போனார்… அப்படியே படுத்து தூங்கிட்டார்… இதான் உண்மை…  நான் இதை உங்க கிட்டே சொல்லலாம்னு வரும் போது உத்ரா வந்து சண்டை போட்டுட்டு இருந்தா… அவள் கிட்டே பேசிட்டு வரதுக்குள்ளே நீங்க தூங்கிட்டீங்க… சோ முதலிலே அண்ணா தூங்குனாரு… அப்புறம் தான் நீங்க தூங்குனீங்க…
சோ நீங்க தான் வின்னர்… ” என்று ப்ரணவ் சொல்ல ஆதிராவால் நம்பவே முடியவில்லை.  நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

“உண்மையாவே நான் ஜெயிச்சுட்டனா??” என்று உறுதிப்படுத்துவதற்காக கேட்டாள்…

“அட உண்மையா தான் அண்ணி…. என் கூட வாங்க…. நீங்க உண்மையா தான் ஜெயிச்சிக்கங்கணு நான் நிருபிக்கிறேன்… ” என்று சொல்லியபடி ஆதிராவின் கையைப் பற்றிக் கொண்டு வினய்யின் அறைக்கு அருகே கூட்டிச் சென்றான்.

உள்ளே வினய் போர்வையை இழுத்திப் போர்த்திக் கொண்டு தூங்கி கொண்டு இருந்தான். அதைக் கண்டதும் அதுவரை நம்பலாமா வேண்டாமா என குழம்பிக் கொண்டு இருந்த மனது அந்த காட்சியைப் பார்த்ததும் உடனே நம்பிவிட்டது.

“ஐயோ ப்ரணவ் அப்போ நான் உண்மையாவே ஜெயிச்சுட்டனா? இது உண்மை தானா? எனக்கு கனவா நனவானு தெரியலயே… ஐயோ ப்ரணவ் நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்… ” என்று ஆதிரா சந்தோஷத்தில் கத்த அப்போது தான் கண்விழிப்பதைப் போல வினய் எழுந்தான்.

“ன்ன ஆச்சு? என்ன சப்தம்?” என்று கேட்டபடி எழுந்தமர்ந்தான்.

“அண்ணா நீங்க தோத்துட்டீங்க… நீங்க  முதலிலே தூங்கினதாலே அண்ணி தான் வின்னர்… அதை அண்ணி செலிபிரேட் பண்ணிட்டு இருக்காங்க… ” என்று ப்ரணவ் சொல்ல தோற்றுப் போன கோபத்தில் கட்டிலை குத்துவதைப் போல் போலியாக அடித்தான்.

அதைப் பார்த்த ஆதிரா அவனை நக்கலாக பார்த்து புன்னகைத்தாள். அவனோ அவளை முறைப்பதைப் போல பாவனை செய்தான்.

ஆதிராவின் குரலைக் கேட்டு உத்ரா தன் அறையில் இருந்து வெளியே வந்தாள்.

தோற்றுப் போன விரக்தியில் அண்ணி கத்துவதாக நினைத்து அவர்களை எப்படியாவது சமாதானம் செய்ய வேண்டும் என்று எண்ணியபடி ஆதிராவின் அருகில் வந்தாள்.

“அண்ணி தோத்ததுக்கு வருத்தப்படாதீங்க… ” என்று அவள் முழுவதாக சொல்லி முடிப்பதற்குள் ப்ரணவ் குறுக்கிட்டான்.

“அண்ணி தான் வின்னர் உத்ரா.. ” என்றான்… உத்ரா குழம்பிப் போய் நின்றாள்… வினய்யிடம் திரும்பி ” அண்ணா நேத்து அண்ணி தானே முதலிலே… ” என்று மீண்டும் பேச முயன்றவளை முழுவதாய் முடிக்கவிடாமல் ப்ரணவ் மீண்டும் குறுக்கிட்டான்.

“உத்ரா, அதான் அண்ணி தான் வின்னர்னு சொல்றேன்ல.. நம்ம சண்டை போட்டுட்டு வெளியே போன நேரத்திலே அண்ணா தூங்கிட்டாரு… அண்ணி அப்புறமா தான் தூங்குனாங்க… ” என்று சொல்லியபடி கண்களால் நம்பும் படி கெஞ்சினான். ஓரளவுக்கு உத்ராவுக்கு புரிந்தார் போல் இருந்தது. உடனே முகத்தை மாற்றிக் கொண்டாள்.

“ஆமாம் அண்ணி… மறந்துட்டேன் பாருங்களேன்…. நீங்க தான் கடைசியா தூங்குனீங்க… நீங்க தான் வின்னர் என்றபடி ஆதிராவை கட்டிக் கொண்டு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாள்.

வினய் தோற்ற வருத்தத்தில் இருப்பதைப் போல் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு ஆதிராவின் அருகில் வந்து நின்றான்.

“முதல் போட்டியிலே வேணும்னா நீ வின் பண்ணி இருக்கலாம்… ஆனால் இரண்டாவது போட்டியிலே நான் தான் ஜெயிப்பேன்… ” என்றான் சாவலாக.

“அதையும் தான் பார்ப்போமே… யாரு ஜெயிக்கிறாங்கணு…  ” என்று இவளும் சவால்விட்டாள்.

“அடுத்தப் போட்டியை இன்னைக்கு காலையிலேயே வெச்சுக்கலாம்… யார் ஜெயிக்கிறாங்கணு இன்னைக்கே முடிவு பண்ணிடலாம்… ” என்றான் வினய்.

“எனக்கு ஓகே தான்… ஆனால் சமையல் போட்டியோட ரூல்ஸ் என்ன?” என்று ஆதிரா கேட்டாள்… ப்ரணவ் முன்னால் வந்தான்.

“அண்ணி நான் சொல்றேன்… சமையல் பண்றதுக்கு மொத்தமா முப்பது நிமிஷம் டைம் கொடுப்போம்… ரொம்ப சிம்பிள் டிஷ் தான்.. கேசரி பண்ணா போதும்… அப்புறம் ஹெல்ப்புக்கு என்னை இல்லைனா உத்ராவே வெச்சுக்கலாம்…  யாருக்கு யாருனு சீட்டு எழுதிப் பார்த்துக்கலாம்… அதுக்கு முன்னாடி டிபன் சாப்பிட்டுடலாம்..” என்று ப்ரணவ்  சொல்ல வினய்யும் உத்ராவும் சரியென்று தலையாட்டினர்.

எல்லோரும் காலை உணவை முடித்துவிட்டு சோபாவில் வந்து அமர்ந்தனர்.
ப்ரணவ் சீட்டு எழுதி மடிக்க உத்ரா அதை குலுக்கிப் போட்டாள். வினய்யும் உத்ராவும் ஆளுக்கொரு சீட்டு எடுத்து இருந்தனர்.

அதில் வினய்யிற்கு உத்ராவும் ஆதிராவிற்கு ப்ரண்வ்வும் வந்து இருந்தனர். ப்ரணவ் கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் சரியாக ஒன்பதரை ஆகி இருந்தது..

“அண்ணா அண்ணி மணி இப்போ  ஒன்பதரை …சரியா பத்து மணிக்கு  போட்டி முடியும்… ” என்று ப்ரணவ் சொல்ல ஆதிராவும் வினய்யும் அவசர அவசரமாக சமையலறைக்குள் நுழைந்தனர்.

ஆதிராவின் அருகே ப்ரணவ் வந்து நின்றான். ” அண்ணி ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க… “என்று கேட்டான்.

“ஆமாம் ப்ரணவ்.. எனக்கு ரவை,சர்க்கரை,நெய், முந்திரிப் பருப்பு, ஏலக்காய்.. ” எடுத்துத் தர முடியுமா என ஆதிரா கேட்க ப்ரணவ் ” ஓகே அண்ணி.. இந்தா எடுத்துட்டு வரேன்… ” என்று சொல்லிவிட்டு சமையல் பொருட்கள் வைக்கும் கபோர்ட் அருகே வந்தான்.

ஒவ்வொரு உணவுப் பொருட்களிலும் லேபிள் ஒட்டி வைக்கப்பட்டு இருந்தது. ஆதிரா சொன்ன எல்லா பொருட்களையும் எடுத்துவிட்டான், சர்க்கரையைத் தவிர. ஏனென்றால் சர்க்கரை என்று எந்த டப்பாவிலும் எழுதி வைக்கவில்லை.

சர்க்கரை எந்த டப்பா என்று தேடிக் கொண்டு இருந்தான். அந்த நேரம் பார்த்து உத்ரா வந்தாள். 

அவளிடம் ” ஹே சர்க்கரை எங்கே இருக்குனு பார்த்து எடுத்துக் கொடு டி… ” என்று கேட்டான்.

ஆனால் அவளோ அவனை சட்டைக் கூட செய்யவில்லை. அவள் கோபத்தில் இருப்பதே அப்போது தான் அவனுக்கு நியாபகம் வந்து இருந்தது.

“ஹே உத்ரா பேசுடி ப்ளீஸ்… ” என்று இறைஞ்சினான். அப்போதும் அவள் பேசினாளில்லை. அவளது பாராமுகம் அவனைக் கோபப்படுத்தியது.

“ஹே உத்ரா அப்போ இனி என் கிட்டே பேசவே மாட்ட அப்படி தானே… “என்று கோபமாகக் கேட்டான். அப்போதும் அவள் அசையவில்லை. அவளது பதிலளிக்காத்தன்மை அவனை மேலும் கோபத்தில் தள்ளியது.

“சரி இனி நீ என் கிட்டே பேசவே வேண்டாம்… “என்று கோபத்தில் சொல்லியபடி அங்கே இருந்த ஏதோ ஒரு டப்பாவை எடுத்துக் கொண்டு ஆதிராவிடம் சென்றான்.

“அண்ணி இந்தாங்க.. ” என்று தந்துவிட்டு கோபமாக நின்று இருந்தான். அவனுடைய முகத்தையும் காலையில் இருந்து அவன் உத்ராவுடன் சரியாக பேசாததையும் வைத்து ஓரளவுக்கு ஊகித்து இருந்தாள் ஆதிரா.

“என்ன ஆச்சு ப்ரணவ்.. ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு.. ” என்று கேட்டாள்.

“ஒன்னுமில்லை அண்ணி..” என்று  சொல்லி சமாளிக்கப் பார்த்தான்.

“அதான் முகமே காட்டிக் கொடுக்குதே ப்ரணவ். என்ன ஆச்சு? உத்ரா கூட சண்டையா?”என்று கேட்டாள். ப்ரணவ் பதில் பேசவில்லை.

“தங்கச்சி கிட்டே போய் சண்டை போட்டு பேசாம இருக்கலாமா?” என்று மீண்டும் ஆதிரா கேட்டாள்.
அந்த கேள்வியை கேட்டு வேகமாக ப்ரணவ் திரும்பினான்.

“ஐயோ அண்ணி நீங்க வேற.. அவள் எனக்கு தங்கச்சிலாம் கிடையாது.. முறைப்படி பார்த்தா அவள் எனக்கு அத்தை பொண்ணு… ” என்று ப்ரணவ் சொல்ல அதுவரை ரவையை கிண்டிக் கொண்டு இருந்தவள் அந்த வெள்ளைக் கலர்  டப்பாவில் என்ன இருக்கிறது என்று சரியாக கவனிக்காமலேயே இரண்டு ஸ்பூன் எடுத்து கடாயில் போட்டவள் கரண்டியால் கிண்டியபடியே ப்ரணவ்விடம் பேசிக் கொண்டு இருந்தாள்.

“எனக்கு சுத்தமா புரியல ப்ரணவ்.. உத்ரா உங்களோட சித்தப்பா பொண்ணு தானே.. அப்போ அவள் உங்களுக்கு தங்கச்சி முறை தானே…. “

” இல்லை அண்ணி.. அவள் எங்கப்பா தம்பிக்கு பிறக்கல.. எங்கம்மாவோட தம்பிக்கு பிறந்த பொண்ணு… அவங்க இறந்துட்டாங்க.. அதான் குழந்தை இல்லாத எங்க சித்தப்பா உத்ராவை எடுத்து வளர்த்தாரு… ” என்று சொல்ல அப்போது தான் ஆதிராவிற்கு உத்ரா யாரென்று புரிந்தது.

“ஒ சரி ப்ரணவ்…  கவலைப்படாதே. கண்டிப்பா உத்ரா உங்க கிட்டே பேசுவா..”

“இல்லை அண்ணி.. உத்ரா என் கிட்டே பேசாம பத்து நிமிஷம் கூட இருக்க மாட்ட… ஆனால் பத்து மணி நேரத்துக்கு மேல ஆகியும் அவள் பேசல அண்ணி… ” என்றவனின் குரலில் இருந்த வருத்தம் ஆதிராவையும் பாதித்தது.

வினய்யும் உத்ராவைக் கவனித்து கொண்டு தான் இருந்தான்.
அவளிடம் கலகலப்பு சுத்தமாக குறைந்துப் போய் இருந்தது. சாதரணமாக இருப்பதுப் போல் காட்டிக் கொண்டு இருந்தாலும் அவளிடம் ஒரு சோகம் இழையோடியிருந்தது.

அந்த சோகத்திற்கான காரணத்தையும் அவன் அறிந்தே வைத்து இருந்தான்.

எலியும் பூனையுமாக சண்டைப் போட்டுக் கொண்டு இருக்கும் உத்ராவும் ப்ரணவ்வும் இன்று அமைதியாக நின்று கொண்டு இருந்ததைப் பார்த்ததும் அவர்களுக்குள் ஏதோ ஒரு சண்டை என்பதைப் புரிந்துக் கொண்டான்.

எந்த சண்டையாக இருந்தாலும் அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பது அவனுக்கு எளிது தான்.

உத்ராவிடம் திரும்பினான்.

“உத்ரா நான் உனக்கு இந்த வாரம் முழுக்க ஐஸ்கீரிம் சாப்பிடலாம்னு சொல்லி இருந்தேன்ல… ப்ரிட்ஜ்ல வெச்சு இருக்கேன்.. போய் எடுத்துக்கோ…. ” என்று சொல்ல உத்ரா இரண்டு ஐஸ்க்ரீமை எடுத்து கொண்டு வந்தாள்.

என்ன தான் உணவிற்காக இரண்டு பேரும் அடித்துக் கொண்டாலும் எப்போதும் பங்கு பிரித்து தான் சாப்பிடுவார்கள். அதனால் இரண்டு ஐஸ்க்ரீமை எடுத்து கொண்டு வந்தவள் ப்ரணவ்வைப் பார்த்தாள். அவன் வந்து வாங்கிக் கொள்வான் என நினைத்தாள்.

ஆனால் ப்ரணவ் அப்படி செய்யவில்லை. அப்படியே நின்றபடி உத்ராவையே சோகமாகப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவனது வருத்தமான முகம் உத்ராவைப் பாதித்தது.நேற்று கொஞ்சம் அதிகமாக தான் கோபப்பட்டுவிட்டோம் என மனம் வருந்தியது.

அவன் மன்னிப்பு கேட்டும் இப்படி முறுக்கிக் கொண்டு செல்வது அவளுக்கு சரியாகப்படவில்லை.

மெதுவாக அவனருகில் வந்து ஐஸ்க்ரீமை நீட்டினாள்.  சமாதான சின்னமாக ஐஸ்கீரிம் உருவாகி இருந்ததை ப்ரணவ்வால் உணர முடிந்தது.

அவள் சமாதானமாகிவிட்டதை நினைத்து அவனது முகம் மலர்ந்தது. அவனின் முன்பு நீட்டப்பட்ட அந்த ஐஸ்கீரிமை வாங்க கை நீட்டியவன் சட்டென நினைவு வந்தவனாக பட்டென இறக்கிவிட்டான்.

அவள் புரியாமல் ப்ரணவைப் பார்க்க அவனது பார்வை வினய்யின் பக்கம் திரும்பியது. உத்ராவிற்கு சட்டென்று நினைவு வந்தது.

அன்று வினய், ப்ரணவ்வை ஐஸ்கீரிமை தொடக்கூடாது என்று சொன்னதால் தான் இன்று வாங்குவதற்கு தயங்குகிறான் என.

“ப்ரணவ் அண்ணா.. நீ ஐஸ்கீரிமை தொடக்கூடாதுனு தானே சொன்னாங்க… நான் தொட்டா ப்ரச்சனை இல்லைல.. கிட்டே வா… நான் ஊட்டிவிடுறேன்… அண்ணா வாக்கை மீறாத மாதிரியும் இருக்கும்… நீ ஐஸ்கீரிமை சாப்பிட்டா மாதிரியும் இருக்கும்… ” என்று உத்ரா சொல்லிவிட்டு ப்ரணவ்விற்கு ஊட்ட அவனும் சந்தோஷமாக சாப்பிட ஆரம்பித்தான்.

வினய்யும் ஆதிராவும் அவர்களை சந்தோஷமாகப் பார்த்துவிட்டு திரும்ப இருவரது பார்வையும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

இருவரது பார்வையும் ஜெயித்துக் காட்டுகிறேன் பார் என்று சொல்லிவிட்டு வேகமாக திரும்பிக் கொண்டது.

அங்கே சமாதனமான இரண்டு பேரும் இரண்டொரு நிமிடங்களிலேயே மீண்டும் சண்டையிட தொடங்கி இருந்தனர்.

“அடியே உத்ரா.. ஒழுங்கா ஊட்டி விடுடி.. கீழேயே பாதி விழுந்து வேஸ்ட் ஆகிடுச்சு…”

“அடேய் ப்ரணவ் நீ முதலிலே வாயை திற டா… ” என்று இருவரும் சண்டையிட்டபடியே சாப்பிட்டு முடித்த நேரம் வினய் உத்ராவை அழைத்தான்.

“உத்ரா கொஞ்சம் சர்க்கரையை கொண்டு வாயேன்… ” என்று வினய் கேட்க உத்ரா நேராக ப்ரணவ்விடம் சென்று கேட்டாள்.

அவன் அந்த வெள்ளை டப்பாவை எடுத்துக் கொடுக்க இவள் நேராக சென்று வினய்யிடம் கொடுத்தாள்.

திறந்து பார்த்தவன் உத்ராவைப் பார்த்து முறைத்தான்.

“உத்ரா உனக்கு சர்க்கரைக்கும் உப்புக்கும் கூடவா வித்தியாசம் தெரியாது… “என்றான் கோபமாக.

“அண்ணா எனக்கு இல்லை  அந்த ப்ரணவ் எருமை மாடு தான் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாம  இதை எடுத்துக் கொடுத்துட்டான்… ” என்று சொல்லிக் கொண்டு இருந்த உத்ரா சட்டென நினைவு வந்தவளாக ” ஐயோ அப்போ அண்ணியோட கேசரி… ” என்று அதிர்ச்சியாகக் கேட்டாள். வினய்யிற்கும் அதே அதிர்ச்சி தான்.  வேகமாக திரும்பி வினய் ஆதிராவைப் பார்த்தான்.

என்ன போட்டோம்னே தெரியாம கேசரியை கிண்டிக் கொண்டு இருந்த ஆதிராவை பார்க்க பரிதாபமாக இருந்தது. அவளருகே சென்றான்… பாத்திரத்தைத் திறந்து வாசம் பிடித்தான்.

“ஆதிரா  எனக்கு இந்த கேசரி நல்லா வரும்னு தோணல.  இன்னும் பத்து நிமிஷம் இருக்கு நீ வேணும்னா வேற கேசரி கிண்டேன்.. ” என கேட்க ஆதிராவோ கோபமாக அவனை முறைத்தாள்.

“எனக்கு என் கேசரி மேலே நம்பிக்கை இருக்கு… நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்… கிளம்புங்க… ” என்று சொல்ல

” எனக்கும் உன் கேசரி மேலே நம்பிக்கை இருக்கு… ஆனால் உன் கூட இருக்கிறவன் மேலே தான் நம்பிக்கை இல்லை..” என்று வினய் பொடி வைத்து பேசினான்.

அதுவரை முந்திரி சாப்பிட்டுக் கொண்டு இருந்த ப்ரணவ் சட்டென்று சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அருகில் வந்தான்.

“அண்ணி, அண்ணா உங்களை திசை திருப்பப் பார்க்குறாங்க… நான் தானே அண்ணி இவ்வளவு நேரம் உங்களுக்கு கேசரி கிண்ட இவ்வளவு ஹெல்ப் பண்ணேன்.. இனியும் பண்ணுவேன்… ” என்று ப்ரணவ் சொல்ல வினய்யோ ” நல்லா பண்ணிட்டே டா… ” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

சரியாக கடிகாரத்தின் சின்ன முள் பத்திற்கு வந்து நின்றது. இருவரும் கேசரியை பாத்திரத்தில் போட்டு டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைத்தனர்.

இப்போது யார் சுவைப் பார்த்து முடிவு சொல்லப் போகிறார்கள் என்று தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்க வினய் ப்ரணவ்வை அழைத்தான்.

“டேய் ப்ரணவ்… நம்ம சின்னசாமி அண்ணாவை கூட்டிட்டு வா டா… அவர் சாப்பிட்டு பார்த்துட்டு யாரோடது நல்லா இருக்குனு சொல்லட்டும்… ” என வினய் சொல்ல ப்ரணவ்வும் அந்த வீட்டைக் காவல் காக்கும் சின்னசாமி அண்ணாவை கூட்டிக் கொண்டு வந்தான்.

வினய்யிற்கும் உத்ராவிற்கும் அந்த சின்ன சாமி அண்ணாவைப் பார்த்து பரிதாபமாக இருந்தது. உத்ரா முன்னெச்சரிக்கையாக கைகளில் தண்ணீரை எடுத்து கைகளில் வைத்து கொண்டாள். ஆதிராவின் கேசரியை சாப்பிட்டு முடித்த அடுத்த நொடியே அவருக்கு தண்ணீர் கொடுத்து காப்பாற்றுவதற்காக.

சின்னசாமி அண்ணா முதலில் வினய்யின் கேசரியை சாப்பிட்டு முடித்தப் பிறகு அவர் சப்புக் கொட்டி கைகளை உயர்த்தி சூப்பர் என்று காண்பித்தார்..

அதைப் பார்த்த ஆதிரா சோகமாக திரும்பி ப்ரணவ்வைப் பார்த்தாள்.

அவனோ ” அண்ணி நீங்க கவலைப்படாதீங்க… நம்ம கேசரியை சாப்பிட்டதும் அவர் இந்த உலகத்துலயே இருக்க மாட்டார்..சொர்க்கத்துக்கே போன மாதிரி நம்ம டேஸ்ட் இருக்கும்..” என்று சொல்லி முடித்த நேரம் சின்னசாமியின் கண்கள் ரத்தமென சிவந்துவிட்டது.

தொண்டையில் மாட்டிய கேசரியை முழுங்கவும் முடியாமல் வெளியேற்றவும் முடியாமல் இரும ஆரம்பித்துவிட்டார்

உத்ராவும் வினய்யும் சின்னசாமியை தண்ணீர் கொடுத்து சமாதானம் செய்துக் கொண்டு இருக்க ப்ரணவ்வும் உத்ராவும் புரியாமல் பார்த்தனர்.

“என்ன ப்ரணவ் நம்ம கேசரியை சாப்பிட்டதும் அவர் இப்படி ஆகிட்டார்… “

“இல்லை அண்ணி.. நம்ம கேசரி சாப்பிட்டு அவருக்கு இப்படி ஆகி இருக்காது… உடம்புக்கு முடியாம போய் இருக்கலாம் போல.. இல்லைனா பொறை ஏறி இருந்து இருக்கும் போல.. ” என்று சொல்லியபடி கேசரியை எடுத்து வாயில் வைத்தவனின் முகமும் ரத்தமென சிவந்துவிட்டது.

“ஐயோ அண்ணி.. உப்பு அண்ணி.. கேசரி முழுக்க உப்பு அண்ணி… ” என்று ப்ரணவ் கத்த ஆதிராவும் எடுத்து சுவைத்துப் பார்த்தாள்…

ரவா கேசரி..  உப்பு கேசரியாக மாறி இருந்தது.

சின்னசாமி சொல்லவதற்கு முன்பே அவளுக்கு அந்த போட்டியின் முடிவு தெரிந்துவிட்டது. ஆக இந்த போட்டியில் ஜெயித்தது வினய் தானா என்று மனதினில் நினைத்தபடி அவனைப் பார்த்தாள்..

” யெஸ் ஆதிரா…நான் தான் ஜெயிச்சேன்.” என்றான் அவளது மனதை படித்தபடி

“இப்போ வேணும்னா ஜெயிச்சது நீயா இருக்கலாம் வினய்… ஆனால் இரண்டே நாளிலே ஸ்விம்மிங்கை கத்துக்கிட்டு நான் உன்னை ஜெயிச்சுக் காட்டுறேன்… ” என்று ஆதிரா சாவல் விட்டாள்.

“யாரு யாரை ஜெயிக்கிறாங்கணு பார்த்துடலாம் ஆதிரா..” என்று மீண்டும் பதிலுக்கு சவால் விட்டான் அவன். இருவரது எண்ணமும் ஒருவரை ஒருவர் வெல்லுவதில் தான் இருந்தது. பார்க்கலாம் யார் யாரை வெல்கிறார்கள் என்று.

என்னை நீ வென்றாலும்
   உன்னை நான் வென்றாலும் சரி
இருவரையும் முடிவில்
    வெல்லப் போவது
நம் காதல் தான்…