காதல் சதிராட்டம் 14

ப்ரணவ்…ஓடாதே டா…மெதுவா தான் அடிப்பேன்… கிட்டே வா… ”

” ஐயோ அண்ணி… ப்ளீஸ் என்னை விட்டுடுங்க… நான் தெரியாம தான் பண்ணேன்… தெரிஞ்சே பண்ணல… ” 

” ஒழுங்கா கிட்டே வந்தேனா… ஒரே அடியோட நிறுத்திடுவேன்.. இல்லாட்டி செமயா அடிப்பேன் ப்ரணவ்… ”

“அண்ணி நான் வேணும்னே பண்ணல.. உத்ரா மேலே சத்தியமா… ” என்று பக்கத்தில் இருந்த உத்ரா தலையின் மீது சத்தியம் செய்ய அவளோ கோபமாக அவனை முறைத்தாள்.

“ஏன்டா நீ அடிவாங்கிறதுலே இருந்து தப்பிக்கிறதுக்காக, எதுக்குடா என் மேலே பொய் சத்தியம் போட்டு கொல்ல பார்க்கிற… ” என்றாள் கோபமாக.

“ஐயோ உத்ரா இது பொய் சத்தியம் இல்லை டி… உண்மை… அண்ணி ப்ளீஸ் அண்ணி இதுக்கு மேலே துரத்தாதீங்க… என்னாலே ஓட முடியல… மாடிப்படி இல்லாமயே மூச்சு மேலும் கீழுமா போயிட்டு வருது… முடியல.. ” என்று பெருமூச்சுவிட்டவன்

“உங்களோட ஸ்விம்மிங் ட்ரைனரை இப்படி பாரபட்சம் இல்லாமல் ஓட வெச்சு டயர்ட் ஆக்கிட்டீங்கனா அப்புறம் எப்படி தெம்பா சொல்லி தர முடியும்… உங்களை எப்படி என்னாலே அடுத்த போட்டியிலே ஜெயிக்க வைக்க முடியும்… ” என்று  மூச்சு இரைத்தபடி சொல்ல ஆதிரா அதுவரை தன் கையில் வைத்து இருந்த குச்சியை கீழே போட்டாள்.

“நீ சொல்றது கரெக்ட் தான்… இந்த போட்டியிலே தோத்ததுக்கு வருத்தப்பட்டு அடுத்த போட்டியை விட்டுட கூடாது… ” என்றாள் அவனைப் பார்த்து.

“சூப்பர் அண்ணி. அதான் அதே தான். தட்டுறோம்… தூக்குறோம்… நான் கத்துக்கிட்ட மொத்த வித்தையும் உங்களுக்கு கத்து தந்து உங்களை ஜெயிக்க வைக்கிறோம்… என்னை நம்புங்க அண்ணி… மாஸா பண்ணிடலாம்… ”

“எப்படி மாஸா உப்பு எடுத்து கொடுத்தியே அதே மாதிரியா ப்ரணவ்… ” என்று உத்ரா இடையில் புக கீழே கிடந்த கொம்பை எடுத்து அவளின் மீது வீசினான் கடுப்பில்.

“அடியே ஒழுங்கா ஓடுடி… ” என்று அவளை பார்த்து கத்தியவன் ஆதிராவிடம் திரும்பி

“அண்ணி அவள் பேச்சை எல்லாம் கேட்காதீங்க…  என்னை நம்புங்க … இந்த போட்டியிலே நம்ம தான் ஜெயிக்கிறோம்..” என்று சொல்லி ப்ரணவ் அவளுக்கு உத்வேகமாக நீச்சல் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தான். ஆதிராவும் அவன் சொன்னபடி பிசிறு தட்டாமல் கற்று கொள்ள ஆரம்பித்தாள்.

உள் அறையில் அமர்ந்து நாளிதழைப் பார்த்துக் கொண்டு இருந்த வினய்யின் கவனம் அதன் மேல் பதியவில்லை.
பெயருக்கு விரித்து வைத்து இருந்தானே தவிர ஒரு வார்த்தையை கூட படிக்கவில்லை. அவன் யோசனை எல்லாம் ப்ரணவ்வை தான் சுற்றிக் கொண்டு இருந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்பு தூக்கம் வராமல் மொட்டை மாடியில் நடக்க படி ஏறிக் கொண்டு இருந்தவன் காதுகளில் ப்ரணவ்வின் வருத்தமான குரல் கேட்க அப்படியே நின்றுவிட்டான்.

அலைபேசியில் யாருடனோ சோகமாக பேசிக் கொண்டு இருந்த ப்ரணவ்வின் வார்த்தைகள் தான் அவன் காதுகளில் ரிங்காரமிட்டுக் கொண்டு இருந்தது.

“ப்ளீஸ் வைஷாலி… என்னை இப்படி வருத்தாதே… எனக்கு நீயும் முக்கியம் உத்ராவும் முக்கியம்… அவளைக் காரணமா வெச்சு என் கிட்டை சண்டை போடாதே.. நீ என் கிட்டே பேசுறதே கொஞ்சம் நேரம் தான் அதுலயும் இப்படி சண்டை போடாதே வைஷூ…. இப்போலாம் நீ என்னை காதலிக்கிறியானே எனக்கு சந்தேகமா இருக்கு… நான் பண்ற போன் கால் எதையும் எடுக்க மாட்டேங்குற..  பத்து பதினைஞ்சு நாள் கழிச்சு நீயா எனக்கு போன் பண்ற… அந்த நேரத்துலேயும் என் கூட சண்டை போடுற… என்னை ஒரு பொம்மை மாதிரி பயன்படுத்திக்கிறே… நான் இவங்க கிட்டே தான் பேசணும்.. இவங்க கிட்டே பேசக்கூடாது னு எனக்கு ஆர்டர் போடாதே… உன்னோட ப்ரைவேசியில நான் எப்படி தலையிடுறது இல்லையோ அதே மாதிரி என் ப்ரைவேசியிலேயும் தலையிடாதே… எனக்கு இப்போதைக்கு வெளிநாட்டுக்கு போறதுல ஆசை இல்லை.. எனக்கு என் குடும்பத்தோட இருக்கணும்.. ப்ளீஸ் எனக்கு குடைச்சல் தராதே…

ஆமாம் எனக்கு நிறைய வெளிநாட்டுக்கு போன ஆஃபர் வந்துட்டு தான் இருக்கு.. ஆனால் எனக்கு போக விருப்பம் இல்லை… நான் என் அண்ணாவோட சேர்ந்து எங்க டெக்ஸ்டைல் கம்பெனியை தான் நடத்த போறேன்.. உன் இஷ்டத்துக்கு எல்லாம் என்னாலே வெளிநாட்டுக்கு வர முடியாது… ப்ளீஸ் இந்த விஷயத்தை இதோட விட்டுடு… வேற எதையாவது பத்தி பேசலாம்…

சரி நீ எப்படி இருக்க சொல்லு வைஷாலி…

என்னை மிஸ் பண்ணியா… ஹே ஹே போனை வைக்காதே…” என்ற ப்ரணவ்வின் கெஞ்சலும் அதை தொடர்ந்து வெச்சுட்டியா என்ற ப்ரணவ்வின் சோகமான பெருமூச்சும் வினய்யின் காதுகளை நிறைத்தது.

வந்த தடம் தெரியாமல் அப்படியே கீழே இறங்கி சென்றுவிட்டான் வினய்.

அதைத் தொடர்ந்து அவன் ப்ரணவ்வை உற்றுக் கவனித்தான்.

அடிக்கடி அலைபேசியைப் பார்ப்பதும் பிறகு சோகமாக அதை அணைப்பதும், மற்றவர்களுக்கு தன் சோகமோ வருத்தமோ சிறிதளவு கூட தெரியாமல் சிரித்தபடி நடிப்பதையும் அப்போது தான் வினய்யின் கவனத்தில்பட்டது.

ப்ரணவ்வின் இந்த நிலைமை அவனுக்கு வருத்தத்தைக் கொடுத்தது. அந்த பெண் ப்ரணவ்வை வருத்துவது கண்கூடாக அவனால் உணர முடிந்தது.  ப்ரணவ்வின் வாழ்வில் எப்படியாவது சந்தோஷத்தை கொண்டு வர வேண்டும் என்று அவன் எண்ணி கொண்டு இருந்த போது தான் உத்ராவின் குரல் கேட்டது.

“அண்ணா… ” என்று அழைத்தாள் அவள். அதுவரை நாளிதழை பெயருக்குப் பார்த்துக் கொண்டு இருந்த வினய்யின் கழுத்து உடனடியாக திரும்பியது. கண்களால் என்ன என்று கேட்டான்.

“அண்ணா அன்னைக்கு நீங்க பாதி கதையை தான் சொன்னீங்க… மீதி சொல்றதுக்குள்ளே ப்ரணவ் வந்துட்டான்…” என்றாள் அவனைப் பார்த்து.

உதட்டில் பூத்த புன்முறுவலுடன்” கதை கேட்க அவ்வளவு ஆர்வமா??” என்றான். ஆமாம் என்று கழுத்தை மேலும் கீழுமாக ஆட்டினாள் இவள்.

“ஓ அப்போ சரி என் கதையை சொல்லிடலாமே.. … ஆனால் அதுக்கு முன்னாடி ப்ரணவ் கதையை சொல்லு… ” என்றான் அவளை நேராக பார்த்து. ஆனால் உத்ராவால் நேராக அவனைப் பார்க்க முடியவில்லை. சட்டென குனிந்து கொண்டாள்.

தடுமாறியபடி வந்தது வார்த்தைகள்.

“ப்ரணவ் வாழ்க்கையிலே என்ன கதை இருக்க போகுது அண்ணா… அதெல்லாம் எதுவும் இல்லை… ”

“ஓஹோ என் கிட்டேயே பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டியா உத்ரா… சொல்லு அவன் யாரை காதலிக்கிறான்? ”

“இல்லை னா எனக்கு எதுவும் தெரியாது..” என்றாள் முகத்தை திருப்பியபடி.

“அப்போ சரி.. என் கிட்டே உண்மையை சொல்ல மாட்டே இல்லை உத்ரா… ”

“இல்லை அண்ணா… ப்ரணவ் என்னை நம்பி சொன்ன விஷயத்தை அவன் அனுமதி இல்லாம என்னாலே சொல்ல முடியலை அண்ணா… ”

“சரி உத்ரா நீ சொல்ல வேண்டாம்… நானே பார்த்துக்கிறேன்… ” என்றான் கண்களால் கணக்கு போட்டபடியே.

உத்ரா அங்கிருந்து நகரமால் வினய்யை கெஞ்சும் பார்வையில் பார்த்தாள்.

வினய் என்ன என்று தாடையை உயர்த்தி கேட்டான்.

“அண்ணா உங்க கதையை நீங்க சொல்லவே இல்லையே… ” என்று உத்ரா இழுக்க

“அடிங்க ஓடிப் போயிடு..” என்ற வினய்யின் அதட்டலான குரலில் சிட்டாக பறந்துவிட்டாள் அவள்.

இங்கே நீச்சல் குளத்தில்.

“அண்ணி அப்படி தான் அண்ணி… செம அண்ணி… காலையிலே நீங்க ஆரம்பிக்கும் போது 40% இல இருந்தீங்க… ஆனால் இப்போ 100% கிட்டே வந்துட்டீங்க… மாஸ் பண்ணிட்டீங்க அண்ணி.. …. அப்படி தான் கையை காலா இன்னும் கொஞ்சம் வேகமா அசைச்சா இன்னும் கொஞ்சம் வேகமா  நீந்தலாம்…   ” என்று சொல்ல அதன்படி அவளும் வேகமாக நீந்த துவங்கினாள்.

அவளுடன் நீந்தியபடியே ப்ரணவ் மெதுவாக கேட்டான்.

“அண்ணி நான் உங்களை ஒன்னு கேட்பேன்… உங்களுக்கு சொல்லணும்னு தோணுச்சுனா சொல்லுங்க.. இல்லைனா வேண்டாம்… ” என்றான்.

“என்ன ப்ரணவ் பீடிகை எல்லாம் பலமா இருக்கு…. தயங்காம கேளு… ” என்றாள் நீச்சலடித்தபடியே.

“இல்லை அண்ணி.. இங்கே இருந்து தப்பிக்கிறதுக்காக இவ்வளவு கஷ்டப்படுறீங்களே அதுக்கு நீங்க இங்கே வராமயே இருந்து இருக்கலாம்ல.. பிடிக்காத இந்த இடத்துக்கு நீங்க வந்தது எதனாலே அண்ணி? ” என்று ப்ரணவ் கேட்க அதுவரை நீந்தி கொண்டு இருந்தவளின் கை கால்கள் ஒரு நொடி அசைவற்றுப் போனது.

“வைபவ் தான் காரணம்.. அவனாலே தான் வந்தேன்.. அவன் தான் என்னை போக சொன்னான்.. ” என்று விரக்தியாக சொன்னவள் மீண்டும் நீந்த துவங்கினாள்.

“அது தான் அண்ணி எனக்கு புரியல… தான் காதலிக்கிறே பொண்ணை எப்படி இன்னோருத்தவங்க வீட்டுல அதுவும் அவளை காதலிச்சவங்க வீட்டுல எந்த உறுத்தலும் இல்லாம தங்க சம்மதம் சொல்ல முடியும்… ” என்றான் ப்ரணவ் விளங்காத குரலில்

“அது தான் வைபவ்.. அவன் என் மேலே வைச்ச நம்பிக்கை தான் எந்த உறுத்தலும் இல்லாம இங்கே சம்மதம் சொல்ல வெச்சுடுச்சு… ” என்றாள் பெருமிதமாக.

ஆனால் ப்ரணவ்விற்கு ஏனோ அது சரியாக படவில்லை.

தன் காதலி மீது முழுவதாக நம்பிக்கை இருப்பதாகவே வைத்துக் கொள்ளலாம். ஆனாலும் அவனுக்கு யார் என்றே தெரியாத ஒருவனுடன் தங்க எப்படி சம்மதம் தெரிவிப்பான்?

அவன் நல்லவனா இல்லை கெட்டவனா என்று தெரியாமலேயே எப்படி சரி என்றான்.

தன் காதலியின் பாதுகாப்பை பற்றி சிறிதளவு கூட அவனுக்கு பயம் இல்லையா ?

ஒரு கொடூரமான கரங்களில் அவள் சிக்கவிட்டால் எப்படி தப்பிப்பாள் என்று சிறிதளவும் அவனுக்கு தோன்றவில்லையா?

பெயர் தெரியாத ஊரில் ஏதாவது ஆபத்து நேர்ந்தால் யாரிடமும் உதவி கேட்க முடியாமல் எப்படி பிழைப்பாள் என்று அவன் ஏன் எண்ணவில்லை?  என்று ப்ரணவ் யோசித்துக் கொண்டு இருந்த நேரம் உத்ரா உதடுகளில் விசில் ஊதியபடியே அங்கே வந்து நின்றாள்.

டேய் ப்ரணவ்.. உங்க ப்ராக்டீஸ் டைம் முடிஞ்சு போயிடுச்சு… இது போட்டிக்கான நேரம் ”  என்று சொல்லியபடி உத்ரா அங்கே வந்து நிற்க அருகே வினய் நீச்சல் உடையில் அங்கே வந்து நின்றான்.

ஆதிராவும் நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்து வினய் அருகினில் நின்றாள். ஆனால் ஏற்கனவே நனைந்து இருந்தவள் அந்த நீச்சல் குளத்தின் மேற்பரப்பினில் இருந்த டைல்ஸில் கால் வைக்க லேசாக வழுக்கிவிட தடுமாறி விழப் போனாள்.

அவள் கீழே விழப் போவதை உணர்ந்த வினய்யின் கைகள் நேராக தாங்கிப் பிடிக்க போனது. ஆனால் அவளைத் தொட மாட்டேன் என்று கொடுத்த வாக்குறுதி நொடிப் பொழுதினில் மூளையில் மின்னலடித்தது.

சட்டென்று கைகளைப் பின்னிழுத்துக் கொண்டவன் ” உத்ரா அண்ணியை பிடி.. ” என்று வேகமாக கத்த அதுவரை நீச்சல் குளத்தை பார்த்துக் கொண்டு இருந்த உத்ரா சட்டென்று திரும்பி ஆதிராவை கீழே விழாமல் தாங்கிப் பிடித்தாள்.

ஆதிரா கீழே விழவில்லை என்றாலும் அவளது முழங்காலில் லேசாக தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதை சரி செய்து கொள்வதற்காக கால்களை அவள் வேகமாக உதறினாள்.

அதைக் கண்டவனோ ” ஆதிரா நீ கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு.. நாளைக்கு போட்டியை வெச்சுக்கலாம்” என்றான் அக்கறையாக.

ஆனால் ஆதிராவிற்கோ நாளை வரை தள்ளிப் போவதில் விருப்பம் இல்லை. இன்றே இக்கணமே முடிவு தெரிய வேண்டும். எப்படியாவது இந்த சிறையில் இருந்து தப்பித்து ஓட வேண்டும்.

கால்களில் ஒன்றும் பெரிய அடி எல்லாம் இல்லை. லேசான தசைபிடிப்பு தான்.  இரண்டு தடவை காலை உதறிய பிறகு அதுவும் சரியானது போல தான் இருந்தது.

முடிவோடு திரும்பி வினய்யைப் பார்த்தாள்.

“இல்லை வினய்.. என்னாலே நீந்த முடியும்…” என்ற குரலிலும் உறுதி.

அவனோ ” ஆர் யூ ஷியூர் ” என்றான் உறுதிப் படுத்திக் கொள்வதற்காக.

“நான் நல்லா தான் இருக்கேன்… ” என்று ஆதிராவின் வார்த்தைகள் அழுத்தமாக வந்தது.

உத்ராவை நோக்கி தலையசைத்தாள்.

புரிந்து கொண்ட அவளோ விசிலை எடுத்து உதட்டினில் வைத்தாள்.

மூன்று இரண்டு ஒன்று என்று வரிசையாக எண்ணி முடித்தவள் விசிலடிக்க வினய்யும் உத்ராவும் மீனைப் போல துள்ளிக் குதித்தனர் நீச்சல் குளத்தில்.

இருவரது விழிகளும் அந்த நீச்சல் குளத்தின் எதிர் புறத்தினில் இருந்த அந்த சுவற்றிலேயே பதிந்து இருந்தது.

கை கால்களை வேக வேகமாக அசைத்து இருவரும் அந்த இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்தனர்.

இருவரும் ஒரே வேகத்தில் நீந்திக் கொண்டு இருந்தனர்.

இன்னும் இரண்டே முறை கையை முன்னும் பின்னும் அசைத்தால் இலக்கு என்ற நிலையினில் தான் ஆதிரா கால்களில் ஏற்பட்ட லேசான தசை பிடிப்பு அவள் முன்னசைத்த வேகத்தில் சட்டென பிழன்றது.

அந்த வலியைத் தாங்காமல் அம்மா என்று கத்த அதுவரை இலக்கை பார்த்துக் கொண்டு இருந்த வினய்யின் கண்களோ சட்டென ஆதிராவின் பக்கம் திரும்பியது. அவளது வலியைக் கண்டு அவனது கை கால்கள் செயலிழந்து போய் நின்றது.

“ஆதிரா ஆர் யூ ஓகே ” என்று அவன் கத்த அவளோ அந்த நிலையிலும் தன் வலியை பொருட்படுத்தாமல் இலக்கினில் கவனம் செலுத்தி தன் கால்களை வேகமாக உதறிவிட்டு முன்னே செல்ல எத்தனிக்க இரண்டே முறையில் அவள் இலக்கை நெருங்கிவிட்டாள். வென்றும் விட்டாள்..

வினய்யோ அவளின் வலி கலந்த முகத்தையே விழியகலாமல் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.

உத்ராவும் ப்ரணவ்வும்.. ” ஐயா அண்ணி.. வின் பண்ணிட்டாங்க… ” என்று சந்தோஷமாக கத்தினர்…  அந்த குரலில் கலைந்தவன் அப்போது தான் அவள் வெற்றிப் பெற்றதையே உணர்ந்தான். அவனது முகமோ கவலைக் கப்பி கிடந்தது.

அதைப் பார்த்த உத்ராவிற்கும் வினய்யிற்கும் அப்போது தான் உத்ரா வென்றால் அந்த வீட்டை விட்டு சென்றுவிடுவாள் என்ற உண்மையே உரைத்தது.

இருவரும் முதலில் எந்த அளவிற்கு சந்தோஷத்தில் கத்தினரோ இப்போது அதை விட வருத்தமாக ” ஐயோ அண்ணி வின் பண்ணிட்டாங்க… ” என்று தலையில் கைவைத்து அப்படியே அமர்ந்துவிட்டனர்.

என் போலி

   சமாதனங்கள் அனைத்தும்

ஒரு நொடியில்

  தவிடு பொடியாக மாறியது…

நீ இல்லை என்ற

    நிஜம் உணர்த்திய வலியால்…