காதல் சதிராட்டம் – 17b
காதல் சதிராட்டம் – 17b
அதிகாலை வானம் என்பது எப்போதும் ஒரு அழகு தான்.
நிலவு விண்மீன் என ஒவ்வொன்றாய் தான் உடுத்திய ஆபரணங்களை எல்லாம் கலைந்து எந்த அலங்காரமும் இல்லாமல் நிர்மலமான முகத்துடன் இருக்கும் அந்த அதிகாலை எப்போதும் அழகு தான்.
அதுவும் மரம் விரித்த நிழலில் அமர்ந்து கொண்டு தென்றல் வீசிய சாமரத்தை உடலில் பூசிக் கொண்டு அந்த அதிகாலையை ரசிப்பது என்பது சொர்க்கம்.அந்த சொர்க்க சுகத்தில் தன்னை மறந்து லயித்துக் கொண்டு இருந்த நேரம் தனியாய் ஒரு பறவை வானில் பறந்தது.
அந்த ஒற்றைப் பறவையை பார்த்ததும் அதுவரை சிலிர்ப்பியில் லயித்து இருந்த வினய்யின் கண்கள் சட்டென வாடியது.
அந்த ஒற்றைப் பறவையின் சிறகசைப்பு அவனுக்கு ஆதிராவின் இமை அசைப்பை ஒத்து இருந்தது. அந்த பறவையின் தனிமை அவளின் தனிமையை நினைவுப்படுத்தியது. அதன் சோகம் அவனுக்கு ஆதிராவின் சோகத்தை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது.
“இந்த பறவைங்க என்னை போல அம்மா அப்பா இல்லாத அனாதைங்க போல… அதான் இந்த பறவைங்களுக்கு கூடுனு ஒன்னு தனியா இல்லாம பொதுவான இந்த நீர்நிலைக்கு வந்து இருக்குங்க போல… ” என்ற அவளது வார்த்தையே அவன் மனதினில் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டு இருந்தது.
பாவம் அவள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாள். சிறு வயதில் இருந்து தனக்கு என்று தனியாக அன்பு செலுத்த என்று யாரும் இல்லாமல் இருக்கும் வெறுமை எப்பேற்பட்ட வெறுமை. ஒரு ஜீரம் வந்தாளோ இல்லை தலைவலி வந்தாளோ அவளை கவனிக்க என்று யாரும் இருந்து இருக்க மாட்டார்களே.
அவளை அவளே தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அது மிகவும் கொடுமை.
தனக்கு என்று ஒருத்தர் இருக்கிறார்கள் என்ற எண்ணம் தரும் நம்பிக்கையை அவள் இதுவரை தன் வாழ்க்கையில் இதுவரை கடந்தே வந்து இருக்க மாட்டாளே.
இதுவரை அவள் இப்படி தனியாய் இந்த வாழ்க்கையை கடந்து வந்து இருக்கலாம் ஆனால் இனியும் அவளை தனியாக கடக்க நான் விட மாட்டேன்.
அவளுக்கு என்று தோள் கொடுக்கும் ஒரு நண்பனாக எப்போதும் நான் இருப்பேன். அவளுக்கு ஒரு அரணாக ஒரு அன்பாக ஒரு உறவாக ஒரு நண்பனாக எப்போதும் நான் இருப்பேன் என்று முடிவெடுத்தப் பிறகு அதுவரை அவன் முகத்தினில் இருந்த சோகமும் மனதினில் இருந்த கலக்கமும் சட்டென கலைந்தது.
வேகமாக போனை எடுத்து ஆதிராவின் தோழியான கயல்விழிக்கு அழைத்தான்.
இரண்டே ரிங்கில் எடுத்தவள் ” அண்ணா ஆதிரா எவ்வளவு எழுப்பியும் எழுந்துக்கல… சரியா தண்ணி ஊத்தி எழுப்ப போன சமயம் தான் நீங்க கால் பண்ணீங்க… ஒரு ஐந்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க அண்ணா.. ” என்று சொல்லிவிட்டு போனை மேஜையின் மீது வைத்தவள் அழைப்பைத் துண்டிக்க மறந்து இருந்தாள்.
“ஓகே சிஸ்டர்.. ” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டிக்க சென்ற நேரம் ” எருமைமாடே.. ” என்ற ஆதிராவின் குரல் அலைபேசியில் ஒலித்தது.
துண்டிக்க சென்றவனின் விரல்கள் அப்படியே தடைப்பட்டு நின்றது. அலைபேசியை மீண்டும் காதில் வைத்தான்.
“கயலு.. ஏன்டி இப்படி டெய்லி தண்ணியில அபிஷேகம் பண்ணி எழுப்பி விடுற.. ” என்று புலம்பிக் கொண்டு இருந்த ஆதிராவின் குரலைக் கேட்டதும் வினய்யின் உதடுகள் புன்னகையில் மலர்ந்தது.
“பின்னே எவ்வளவு நேரம் எழுப்பியும் கும்ப கர்ணி மாதிரி தூங்கிட்டு இருந்தா தண்ணி தெளிச்சு எழுப்பாமா பன்னீர் தெளிச்சா எழுப்ப முடியும்… ” என்று தொடர்ந்து வந்தது கயலின் குரல்.
“கயலு காலையிலே முழுக்க ஹாட்சிப்ஸ்ல வேலைப் பார்த்துட்டு அப்புறம் செகண்ட் ஷிப்ட்ல க்ளாஸை அட்டென்ட் பண்ணிட்டு நைட்டு முழுக்க அசைன்மென்ட்டுக்கும் டெஸ்ட்டுக்கும் எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு இருக்கேன்… நீயே சொல்லு எல்லா அலைச்சலும் உடம்பு வலியும் சேர்ந்தா கும்பகர்ணி மாதிரி தூங்காம எப்படி தூங்குவாங்களாம்… ” என்ற ஆதிராவின் கேள்வி அதுவரை உதட்டின் புன்னகையில் மலர்ந்து இருந்த புன்னகையை மறைய வைத்தது. அவளது வலிகள் அவனது கண்களில் வலியை கொண்டு வந்தது.
“ஆதிரா எனக்கு எல்லாமே புரியுது… ஆனால் நீ ஏன் உன் ஸ்பான்சர் கிட்டே உன் செலவுக்கும் சேர்த்து காசு ஸ்பான்சர் பண்ண சொல்லக்கூடாது… உன் செலவுகளுக்காக நீ இப்படி தனியா வேலைக்குப் போய் கஷ்டப்பட வேண்டாம்ல.. ”
“இல்லை கயல் அவங்க எனக்கு படிக்கிறதுக்கு ஸ்பான்சர் பண்றதே பெரிய விஷயம்.. இதுல என்னேட தனிப்பட்ட செலவுக்கு பணம் கேட்கிறது எல்லாம் கொஞ்சம் கூட நியாயம் இல்லை.. நான் அப்படி கேட்கவும் மாட்டேன்.. என்னை நானே பார்த்துப்பேன்… எனக்கு அவங்க படிப்புக்காக செய்யுற பண உதவி மட்டும் போதும்… அதைத் தவிர்த்து எந்த உதவியும் யார் கிட்டேயும் எதிர் பார்க்க மாட்டேன்… ” என்றாள் உறுதியான குரலில்…
” அதெல்லாம் சரி தான் ஆதிரா… அப்போ நீ உன் தனிப்பட்ட செலவுகளை சமாளிக்கிறதுக்கு அந்த singing competition ல கலந்துக்கிட்டு நீ ஜெயிச்சு வர பணத்தை யூஸ் பண்ணிக்கலாம்ல…. ஏன் அந்த போட்டியிலே கலந்துக்கிறதுக்கு இவ்வளவு பயப்படுற ஆதிரா? நீ உனக்கு கிடைச்ச அருமையான வாய்ப்பை இழக்கிறியோனு எனக்கு தோணுது… ” என்று கயல்விழி கேட்க வேகமாக கிளம்பி கொண்டு இருந்த ஆதிரா திரும்பி அவளைப் பார்த்தாள்.
“எனக்கு அந்த போட்டியிலே கலந்துக்க பயம் லாம் இல்லை கயல்… தயக்கம் தான்… அத்தனை பேர் பார்க்கப் போற அந்த போட்டியிலே நான் நல்லதா போட்டுக்க எனக்கு எந்த ட்ரஸ்ஸூம் இல்லை… மத்தவங்களோட இரக்கப் பார்வையும் எளக்கார பார்வையும் பரிதாபப் பார்வையும் தவிர்க்கிறதுக்காக தான் இந்த போட்டியிலே நான் கலந்துக்கணுமானு யோசிக்கிறேன்… எங்க கடை ஓனர் கிட்டே ஐயாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கேட்டு இருக்கேன்… அவர் கொடுக்கிறேனு சொல்லிட்டா கண்டிப்பா போட்டியிலே கலந்துப்பேன்.. இல்லைனா கலந்துக்க மாட்டேன்… அதுக்காக தான் ரெண்டு நாள் யோசிக்கிறேனு டைம் வாங்கி இருக்கேன்… சரி சரி நான் வந்து மீதி கதையைப் பேசிக்கிறேன்… அங்கே வினய் எனக்காக ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருப்பாங்க… நான் கிளம்புறேன் பாய்…” என்ற ஆதிராவின் குரலும் அதைத் தொடர்ந்து “பார்த்து போயிட்டு வா” என்ற கயலின் குரலும் ஒலித்தது.
வினய் யோசனையுடன் அழைப்பைத் துண்டித்துவிட்டு வானத்தைப் பார்த்தான்.
முன்பு தனியாக பறந்த ஒற்றை பறவைக்கு அருகில் இன்னொரு புதிய பறவை பறந்து கொண்டு இருந்தது.
அதைப் பார்த்ததும் அவன் கண்களில் புதியதாய் ஒரு புத்துணர்ச்சி பரபரவென பரவியது. இனி அந்த பறவை தனிப்பறவை அல்ல. இணைப்பறவை. என்ற எண்ணம் அவனுள் மகிழ்ச்சியைப் பரப்ப சந்தோஷத்துடன் காகிதத்தை எடுத்தவன் வேக வேகமாக எழுதி முடித்துவிட்டு மீண்டும் அந்த பறவைகளை ரசிக்கத் தொடங்கினான்.
“இரண்டு பறவையும் அழகா இருக்கு இல்லை… ” என்று சொன்னபடி அவனருகில் வந்து அமர்ந்தாள் ஆதிரா.
புன்னகையுடன் கண்களால் ஆமாம் என்று தலையசைத்தவன் தன் மணிக்கட்டை காட்டி இரண்டு முறை விரல்களால் தட்டிவிட்டு கேள்வியுடன் புருவத்தை உயர்த்தினான்.
” சாரி வினய்.. என் ரூம்மேட் இருக்காளே சரியானவள்… நான் கரெக்டா இங்கே கிளம்பி வர்ற நேரத்துல தான் அவளுக்கு சப்ஜெக்ட்ல டவுட் வந்துடுது… நான் என்ன பண்ணட்டும்…. அதான் லேட் ஆகிடுச்சு…” என்ற அவளது பொய்க் காரணத்தைக் கேட்டதும் எப்போதும் போல இப்போதும் அவனது உதடுகளில் புன்னகை மலர்ந்தது. அதை மறைக்க திரும்பிக் கொண்டான்.
பொய்யை முகத்தில் மறைக்கத் தெரியாமல் வெறும் வாய் வார்த்தையில் மட்டும் பொய் சொல்பவளை ரசிக்க வேண்டும் என்பதற்காகவே தினமும் இந்த கேள்வியை கேட்பான்.
அவளும் அதேப் போல குழந்தைத்தனமான முகத்துடன் அதே பொய்யை திரும்ப திரும்ப சொல்லிவிட்டு உதட்டை கடித்துக் கொள்வாள்.
இன்றும் அப்படி உதட்டைக் கடித்துக் கொண்டு நின்ற அவளை அருகில் அமர சொல்லிவிட்டு ப்ளாஸ்க்கில் வைத்து இருந்த தேநீரை அவளுக்கு ஒரு கப்பில் ஊற்றிவிட்டு தனக்கு ஒரு கப்பில் ஊற்றிக் கொண்டான்.
அவளிடம் அந்த கப்பை நீட்ட புன்னகையுடன் வாங்கி அருந்தத் தொடங்கினாள்.
அவள் மொத்தமாக அருந்தி முடித்து அவனிடம் கோப்பையை நீட்ட அதை வாங்கி வைத்தவன் மீண்டும் அவள் முகத்தை உற்றுப் பார்த்தான்.
அவன் அப்படி பார்ப்பதைப் பார்த்ததும் குழப்பத்துடன் அவள் என்னவென்று புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.
“நீ என்ன முடிவு பண்ணி இருக்க ஆதிரா? போட்டியிலே கலந்துக்கப் போறீயா?” என்றுக் கேட்டான்..
“என் முடிவை சொல்ல இன்னைக்கு நைட் வர டைம் இருக்கு இல்லை… நான் யோசிச்சு சொல்றனே.. ” என்று பதில் சொன்னவளை அமைதியாகப் பார்த்தவன் ” சரி ” என்று ஒரே ஒரு வார்த்தை சொல்லிவிட்டு திரும்பி அந்த காகிதத்தை எடுத்து அவள் கைகளில் கொடுத்தான்.
அதில் எழுதிய வார்த்தைகளைக் கண்டதும் அவள் முகம் வியப்பில் விரிந்தது.
“வினய் உண்மையா சொல்றேன்… ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க.. ஒவ்வொரு வரிகளும் ரொம்ப அருமையாவும் ஆழமாவும் இருக்கு… ஆனால் நீங்க இப்படி எழுத நானும் ஒரு காரணம் தானே… சோ பாதி கிரெடிட் எனக்கு கொடுக்கணும் வினய்.. ” என சொல்ல
“கண்டிப்பா உனக்கு தான் முழு கிரெடிட்டும் ஆதிரா.. நேத்து பார்த்த அந்த பறவை தான் என் வரிகளுக்கு காரணம்… நீ தான் காரணம்… ” என்று மெல்லியதாக சிரித்தவன் கைகளில் கிட்டாரை எடுத்து மெதுவாக இசைக்க ஆரம்பித்தான்.
அவன் கிட்டாரின் ஒவ்வொரு நரம்பை மீட்ட மீட்ட இவள் கண்கள் அந்த இசை தந்த சிலிர்ப்பில் மெல்ல மூடியது. தன் குரலால் அந்த இசையை மெதுவாக வருட ஆரம்பித்தாள்.
சில் பறவையே
சில் சில் பறவையே
சிறகை அசைத்தே
தொடங்குமா பயணம்??….
என்னருகில் யார் இருக்க
யாரோடு நான் பறக்க….
சில் பறவையே சில் பறவையே
சிறகை அசைத்தே
தொடங்குமா பயணம்????…..
அது ஒரு இலையுதிர் காலம்
என்னை சுற்றி இலைகளின் கூட்டம்
எந்த இலையின் உதிர்வுக்காக
வருந்துவது நானும்……
கடைசி இலையை கொண்டு போக
ஊதக் காத்து வந்ததே…
என் கூடு கொண்ட மரம்
இன்று வேரறுந்து போனதே….
சுற்றி எங்கும் வேறு வேறாய் ஆனதே….
இருள் கண்ட பிள்ளையாய்
மலங்க மலங்க விழிக்கும் போது
உந்தன் சிறகு தெரிந்ததே….
இதயம் மீண்டும் தெளிந்ததே…..
உந்தன் சிநேகப் பார்வையில்
உதிர்ந்த இலை மீண்டும் கிளையை
சென்று சேர்ந்ததே….
வேரறுந்த மரம் புதிததாய்
வேர்விட தொடங்கியதே…
மயில் தோகைப் போல உடலை
வளைத்து நெளித்து ஆடுதே….
எல்லா ஜன்னல்களும் திறந்து கிடக்க
நான் விரும்பி புகும் கூடு மீண்டும் இன்று கிடைத்ததே….
என்று ஆதிரா பாடிவிட்டு வினய்யைப் பார்க்க வினய் உதட்டில் பூத்த முறுவலுடன் பாடத் துவங்கினான்…
கூட்டை விட்டு வெளியே வா….
வானம் எங்கும் வெண்ணிலா…
உதிர்ந்த இலைக்கு வருந்தியே
உதிக்கும் சூரியனை மறந்துவிட்டாய்….
உச்சிக்கிளையில் அமர்ந்த நீ
உச்சிவானில் என்னோடு பறக்க வா….
மண்ணில் தானே எல்லைக் கோடுகள்
விண்ணில் ஒன்றும் இல்லை வா….
எங்கோ தனித்து கிடக்கும்
ஒற்றைக் குளத்திற்கு
அழைய விருந்தாளியாய் போவாம் வா…..
என்று அவன் பாடி முடித்துவிட்டு ஆதிராவைப் பார்க்க ஆதிரா மீண்டும் தொடர்ந்தாள்…
விரிந்ததே சிறகும் உன்னோடு பறக்க….
தெரியுதே பாதை, பூவோடு மணக்க….
உன்னருகில் நேரம் மனதோடு இனிக்க….
கையருகில் வானம் எனக்காக இருக்க…..
சுற்றி எல்லா வாசலும் திறந்திருக்க
நானைடையும் கூடு நீயடா….
உன் மனதே என் அன்பின் கூடடா…..
கூட வருவாயா என் பாதை முழுக்கவே..
என்று ஆதிரா பாடி முடித்துவிட்டு அவனைப் பார்க்க வினய்யும் அவளோடு இணைந்துப் பாட துவங்கினான்…
சில் பறவையே
சில் சில் பறவையே
சிறகை அசைத்தே
தொடங்கலாம் பயணம்….
என்னருகில் நீ இருக்க
உன்னருகில் நான் பறக்க…..
சில் பறவையே சில் பறவையே
சிறகை அசைத்தே
தொடங்கலாம் பயணம்…..
என்று இருவரும் ஒன்றாக பாடி முடித்துவிட்டு ஒருவர் முகத்தைப் பார்த்து ஒருவர் புன்னகைத்துக் கொண்டு வானத்தைப் பார்த்தனர்… அங்கே அந்த இணைப் பறவைகள் சந்தோஷமாக வானில் இவர்களைப் பார்த்து சிறகடித்துக் கொண்டு இருந்தது…