காதல் சதிராட்டம்

காதல் சதிராட்டம்

இந்த மனது என்பது மாயாஜாலம் காட்டும் ஒரு கால இயந்திரம். நிகழ்காலத்தில் இருந்து கொண்டே இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் கூட்டிச் செல்லும் ஒரு மாய கருவி தானே இந்த மனம்.

அந்த கருவி தான் வினய்யை  இப்போது இறந்தகாலத்திற்கு கூட்டிச் சென்று பசுமையான நினைவுகளை எல்லாம் அவன் கண் முன்னால் விரித்து வைத்தது.

ஆனால் அந்த இனிமையான இறந்த காலத்திலேயே இருந்துவிட முடியாதபடி ஒரு குரல் அவனை கலைத்துப் போட்டது.

“அண்ணா ” என்றான் ப்ரணவ்.

“டேய் ப்ரணவ்… ஏன் டா தப்பான நேரத்துல எப்பவுமே கரெக்டா என்ட்ரி தரே… இப்ப நீ என்ன பண்றனா அப்படியே  திரும்பி போயிட்டு சரியான நேரத்துக்கு வருவியாம்… ” என்று ப்ரணவ்விடம் சொல்லிவிட்டு மீண்டும் வினய்யிடம் திரும்பினாள்.

“அண்ணா நீங்க சொல்லுங்க… அப்புறம் என்ன ஆச்சு??” என்று மேலும் வினய்யை பேச ஊக்க மீண்டும் ப்ரணவ்  இடைமறித்தான்.

“அடியே உத்ரா நேரங்காலம் புரியாம பேசிக்கிட்டு இருக்காதே… ” என்று ப்ரணவ் அவளை கடிந்துவிட்டு மீண்டும் வினய்யை நோக்கினான்.

“அண்ணா அண்ணிக்கு பயங்கரமா குளிர ஆரம்பிச்சுடுச்சு… கம்பளி எது தந்தாலும் அவங்க நடுக்கம் நிக்குறா மாதிரி தெரியல…. ஹீட்டர் கூட ஆன் பண்ணிட்டேன் அண்ணா ஆனாலும் நடுக்கம் குறையல… எனக்கு பயமா இருக்கு அண்ணா”…
என்று ப்ரணவ் பேசிக் கொண்டே இருக்க வினய் நேராக சமையலறையை நோக்கி சென்றான்.

ஆதிராவை நோக்கி செல்வான் என நினைத்த இருவரும் அவன் சமையலறையை நோக்கி செல்வதைப் பார்த்து தங்கள் புருவங்களை தூக்கி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“ஹே உத்ரா நியாயமா பார்த்தா இப்போ அண்ணா அண்ணியைப் பார்க்க தானே போய் இருக்கணும்… எதுக்கு இப்போ சமையல் கட்டுக்குள்ளே போறாரு… “

“ஒரு வேளை அண்ணா தண்ணி குடிச்சுட்டு ஆதிரா அண்ணி கிட்டே பேச தன்னை தயார் பண்ணிட்டு இருக்கலாம் ப்ரணவ்… “

“இல்லைனா எலுமிச்சம்பழம் வாசனை பிடிச்சு மனசை சரி பண்ண போய் இருக்கலாம் உத்ரா… “”

“இல்லனா இஞ்சி சாப்பிட்டு தன் குரலை சரி பண்ண முயற்சி பண்ணிட்டு இருக்கலாம் ப்ரணவ்… “

“இல்லைனா… “என்று இவர்கள் ஒருவர் தோளின் மீது ஒருவர் விட்டத்தைப் பார்த்து பேசிக் கொண்டு இருக்க கையில் ஒரு குவளையோடு வினய் வெளியே வந்தான்.

விட்டத்தைப் பார்த்து உளறிக் கொண்டு இருப்பவர்களைப் பார்த்து ”  என்ன டா.. பண்ணிட்டு இருக்கீங்க…. ” என்றான் கேள்வியாக.

“நீங்க கிட்சன்ல என்ன பண்ணிட்டு இருப்பீங்கனு கண்டுபிடிச்சுக்கிட்டு இருந்தோம் அண்ணா… ” என்றனர் இருவரும் கோரசாக.

“ஹ்ஹ்ம்… கிட்சன்ல துணி காயப் போட்டுட்டு இருந்தேன்… ” என்றான் வினய் சலிப்பாக

“மிஸ்.. உத்ரா..  நாம இந்த கோணத்துல யோசிக்கவே இல்லை பாருங்களேன்… “

“ஆமாம் ப்ரணவ்.. இது யோசிக்க முடியாத கோணம்…” என்று இருவரும் இன்னும் அந்த டிடெக்டிவ் மோடில் இருந்து வெளியே வராமல் பேசிக் கொண்டு இருந்தனர்.

“சிஐடி சிஷ்யர்களா கொஞ்சம் நிறுத்துறீங்களா உங்களோட investigation எல்லாத்தையும்”

“நிறுத்திட்டோம் அண்ணா… ” என்று கோரசாக பதில் வந்தது.

“டேய் ப்ரணவ்… இந்த மாடியை தாண்ட மாட்டேனு நான் ஆதிராவுக்கு சத்தியம் பண்ணி கொடுத்து இருக்கேன் டா… அதனாலே இப்போ நீ என்ன பண்ற,,, இந்த டீயை கொண்டு போய் ஆதிரா கிட்டே  குடிக்க சொல்லி கொடுக்குற… இந்த டீயை குடிச்ச கொஞ்சம் நேரத்துலயே அவள்  குளிர் தன்னாலே குறைஞ்சுடும்… ” என்று வினய் சொல்ல ப்ரணவ் யோசனையுடன் தாடையை சொறிந்தான்.

“கண்ணாடியை திருப்புனா எப்படி ஆட்டோ  ஓடும் அண்ணா?  ஹீட்டர் கம்பளியாலே சரி பண்ண முடியாத குளிரை எப்படி அண்ணா இந்த டீ சரி பண்ணும்?”

“அதெல்லாம் சரியாகிடும்டா…நீ முதலிலே இந்த டீயை கொண்டு போய் ஆதிராவுக்கு கொடு ” என்ற வினய்யின் கட்டளைக்கு இணங்க டீயை எடுத்துக் கொண்டு ஆதிராவின் அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றான்.

கட்டிலின் ஒரு மூலையில் , கம்பளியில் சுருண்டபடி குளிரில் நடுங்கிக் கொண்டு இருந்தாள் ஆதிரா.

“அண்ணி இந்தாங்க… இந்த டீயை குடிங்க.. குளிருக்கு இதமா இருக்கும்.. ” என்றபடி தேநீரை அவளின் முன்பு நீட்டினான்.

கைகளில் வாங்கியவள் ஒரு மிடறு விழுங்கியதும் அவள் முகம் மாறியது.
அவளுக்கு பழக்கப்பட்ட சுவை. இந்த நறுமணத்தோடும் சுவையோடும் அவன் ஒருவனால் மட்டுமே டீயைப் போட முடியும். கல்லூரியில் நடந்த சம்பவங்கள் எல்லாம் அவளின் கண் முன்பு நிழலாடியது.

தினமும் அதிகாலை குளிரில் நடுங்கிக் கொண்டு வரும் அவளுக்கு தேநீர் பரிமாறிய வினய், நினைவிற்கு வந்தான். அதிகாலையில் நடுக்கத்துடனும்  குளிருடனும் வருபவளுக்கு அவன்  கொடுக்கும் தேநீர் சிறந்த புத்துணர்வு பானம். இன்றும் அதேப் போல தான் அவளுக்குள் ஒரு புத்துணர்வு பிறந்தது. குளிர் மெல்ல விலகியது. மெதுவாக கம்பளியை விட்டு விலகினாள்.

ஆதிராவின் குளிர் சட்டென்று விலகியதைப் பார்த்து ப்ரணவ் ஆச்சர்யப்பட்டு போனான்.

அவனை அறியாமலேயே அவனுடைய உதடுகள் ” கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஓடுது குமாரு… ” என்று உளறியது.

அவனது உளறல் மொழிகள் ஆதிராவின் செவியை அடைய குழப்பத்துடன் திரும்பினாள்.

“என்ன கண்ணாடி? என்ன ஆட்டோ? எனக்கு புரியல ப்ரணவ்.”

“அது ஆட்டோவோட கண்ணாடி அண்ணி.” என்று சொன்னவன் ஆதிராவின் குழப்பம் தெளியாத முகத்தைக் கண்டவுடன் அவன் குரல் தெளிந்தது.

“அண்ணி  அதை விடுங்க. இப்போ குளிர் போயிடுச்சுல?” என்று அவன் கேட்க ஆம் என்று ஆதிரா தலையசைத்தாள்.

“அப்போ ஓகே அண்ணி…. கீழே போகலாம் வாங்க… ஃபேமிலி ஆல்பம், வீடியோ எல்லாம் பார்க்கலாம்… நீங்க தூங்காம இருக்கிறதுக்கு நான் போட்ட ப்ளான்… எப்படி இருக்கு அண்ணி?… ” என்று கண்ணடித்தபடி கேட்க ஆதிராவின் முகத்திலோ புன்முறுவல்.

“அப்போ உன் அண்ணா ஜெயிக்கிறதுக்கு பதிலா, நான் ஜெயிக்கணும்னு நினைக்கிறியா ப்ரணவ்.”

“ஹா ஹா.. அப்படி இல்லை அண்ணி.. எனக்கு நீங்களும் ஜெயிக்கணும்… அண்ணாவும் ஜெயிக்கணும்… சோ ரெண்டு பேருக்கும் ஒரு ஒரு டாஸ்க்ல உதவி பண்ணுவேன்..” என்று சொல்ல அவனை நோக்கி நட்பாக புன்னகைத்தவள் அவனுடன் இறங்கி கீழே இறங்கி சென்றாள்.

தொலைக்காட்சித் திரையில் ப்ரணவ்வும் உத்ராவும் குழந்தை முகத்தில் சிரித்துக் கொண்டு இருந்தனர்.

“அண்ணி அங்கே பாருங்களேன் உத்ராவுக்கு ரெண்டு தென்னை மரம் தலையிலே முளைச்சு இருக்கு.. ” என்று ப்ரணவ் சொல்லி சிரிக்க வினய்யும் ஆதிராவும் சிரித்துவிட்டனர். ஆனால் உத்ரா மட்டும் கோவமாக முறைத்தாள்.

“அண்ணா அங்கே பாருங்களேன் அந்த ப்ரணவ் எருமை மாடு பொம்பளை ட்ரஸ் போட்டாக்கிட்டு தையா தையா பாட்டுக்கு டான்ஸ்க்கு ஆடிட்டு இருக்கான்… ” என்று அவள் சொல்லவிட்டு சிரிக்க மற்றவர்களும் சிரிப்பில் இணைந்து கொண்டனர்.

ப்ரணவ் கோவப்பட்டு வேகமாக டிவி ரிமோட்டை எடுத்து மாற்றினான்.

“ஏன்டா எருமைமாடு மாத்துன.. எவ்வளவு அழகா தையா  தையா பாட்டுக்கு டான்ஸ் ஆடிட்டு இருந்தே… அதையே வைடா..”

“போடி தென்னை மர கொண்டை… அதெல்லாம் என்னாலே வைக்க முடியாது… ” என்று சொல்லிக் கொண்டு இருந்தபடியே அடுத்த வீடியோவை மாற்றியவனின் கை அதில் கண்ட காட்சியைக் கண்டு அப்படியே விக்கித்துப் போய் நின்றது.

அதுவரை சிரித்துக் கொண்டு இருந்த வினய்யின் முகமும் நொடிப் பொழுதில் உருமாறியது.

அவர்கள் இருவரது முக மாற்றங்களையும் ஆதிரா கவனித்துக் கொண்டு இருந்த நேரம் உத்ரா சங்கடமாக அடுத்த வீடியோவை மாற்றினாள்.

“ப்ரணவ்… ” என்றவளது குரலில் லேசாக கலக்கம் தெரிந்தது… அவன் நீர் திரையிட்ட கண்களுடன் திரும்பி அவளைப் பார்த்தான்.

உத்ரா கண்களால் வினய்யை காண்பிக்க ப்ரணவ்வும் வினய்யைப் பார்த்தான். அவனது முகத்தினுள் சொல்லெண்ணா துயரம் நிரம்பி வழிந்தது. தன் அண்ணனின் வருத்தத்தைக் கண்டதும் தன் துயரத்தைத் துடைத்துக் கொண்டு முகத்தில் புன்னகையை கொண்டு வந்தான். வேகமாக அடுத்த காட்சியை மாற்றினான்.

அதில் ப்ரணவ்வும் உத்ராவும் ஒருவர் தலைமுடியை இன்னொருவர் பற்றி இழுத்துக் கொண்டு மண்ணில் உருண்டு சண்டைப் போட்டுக் கொண்டு இருந்தனர்.

“அண்ணா அங்கே பாருங்களேன்… உத்ரா எப்படி என் கிட்டே அடி வாங்குறானு… ” என்று ப்ரணவ் வினய்யின் கவனத்தைக் கலைத்தான்.

திரும்பி உத்ராவும் ப்ரணவ்வும் சிறுவயதில் சண்டை போடும் காட்சிகளை பெயருக்குப் பார்த்தான்.

ஆனால் அவனது கவனம் எல்லாம் முந்தைய வீடியோவினிலேயே நிலைத்து நின்றது. அதில் இருந்து கவனம் மீளவே இல்லை.

ஆதிரா அவனது கவலையுற்ற முகத்தையே கேள்வியுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். ப்ரணவ்வும் உத்ராவும் கூட சங்கடமான அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தனர். எல்லோருடைய கவனமும் தன் மேல் இருப்பதை உணர்ந்தவன் வேகமாக எழுந்து சென்று தன் அறைக்குள் புகுந்து கொண்டவன் இரண்டே நிமிடங்களில் தன் முகத்தை சமன் செய்து கொண்டு வெளியே வந்தான்.

அவனது முகம் உணர்ச்சியை மொத்தமாக துடைத்தெறிந்துவிட்டு கல்லாக சமைந்து இருந்தது.

ப்ரணவ் வேகமாக டீவியை நிறுத்திவிட்டு ஆல்பத்தையும் எடுத்து மறைத்து வைத்துவிட்டான். அவனது மனம்  லேசாக வருந்தியது.

தான் இந்த ஆல்பத்தையும் வீடியோக்களையும் போட்டு இருக்கக்கூடாதோ என்று காலம் தவறி யோசித்தான்.ஸ

அவன் பார்த்து பார்த்து தான் ஆல்பத்தையும் வீடியோக்களையும் தேர்ந்தெடுத்து கொண்டு வந்து இருந்தான்.

ஆனாலும்  இதில் அந்த வீடியோவும் கலந்து இருக்கும் என்று கொஞ்சமும் அவன் எதிர்பார்க்கவில்லை.  தலையில் கைவைத்தபடி அமர்ந்துவிட்டான்.

“ப்ரணவ் இங்கே நடக்குது… ஏன் எல்லார் முகமும் ஒரு மாதிரி இருக்கு… ” என்று மெதுவாக ஆதிரா கேட்டாள்.

“அண்ணி நான் அப்புறமா அதை சொல்றேன்… அண்ணா ரொம்ப மனசு உடைஞ்சு போய் இருக்காரு… அவரோட மனசை உங்க ஒருத்தராலே மட்டும் தான் மாத்த முடியும்…. ப்ளீஸ் அண்ணி ஏதாவது பண்ணி என் அண்ணா மனசை மாத்துங்களேன்… எனக்காக… ” என்று இரைஞ்சினான் ப்ரணவ்.

ப்ரணவ் கெஞ்சிக் கேட்டு அவளால் மறுக்க முடியவில்லை. வினய்யின் வருத்தமான முகத்தைப் பார்ப்பதற்கு அவளுக்கும் ஒரு மாதிரி வருத்தமாக தான் இருந்தது.

என்ன தான் அவனை பல மடங்கு வெறுத்தாலும் அவனது உணர்வற்ற முகத்தைப் பார்க்க அவளுக்கு திராணியில்லை என்பதே நிஜம். ஒரு முடிவோடு எழுந்தவள் பல நாட்களாக பாடிப் பழகாத தன் குரலால் மெதுவாக பாடத் துவங்கினாள்.

அதுவரை கல்லென கிடந்த வினய்யின் முகத்தில் சட்டென்று ஒரு மலர்ச்சி மெது மெதுவாக பரவியது.

சில் பறவையே
    சில் சில் பறவையே
சிறகை அசைத்தே
     தொடங்குமா பயணம்??….
என்னருகில் யார் இருக்க
     யாரோடு நான் பறக்க….
சில் பறவையே சில் பறவையே
    சிறகை அசைத்தே
தொடங்குமா பயணம்????…..

💐💐💐💐💐💐

காற்றில் தோய்ந்து வந்த அந்த தேன் குரல் அவன் மனதை மயிலிறகால் வருடியது. பல நாட்கள் கழித்து பாடும் அவள் குரலைக் கேட்கின்றான். முன்பை விட அதிகமாக மெருகேறி இருந்தது அவளுடைய குரல்.

அவளது குரலில் கலந்து இருந்த மென்மை அதுவரை கல்லாகி இருந்த அவனது  இதயத்தையும் மென்மையாக்கிவிட்டது.

 முதல் முறையாக அவளாகவே ஒரு அடியை எடுத்து வைத்து அவனை நோக்கி வந்து இருந்தாள். அதிலேயே மனது இறக்கைக் கட்டி பறந்து கொண்டு இருந்தது.

கண்களை மூடி மெய்மறந்துப்  பாடிக் கொண்டு இருந்தவள் பாடி முடித்ததும் தன் கண்களைத் திறந்தாள்.

எதிரில் தன்னையே விழியகலாது பார்த்துக் கொண்டு இருந்த வினய்யைக் கண்டதும் அதுவரை முகத்தினில் பரவி இருந்த மென்மை தன்னால் மறைந்து இறுக்கம் முகத்தில் ஒட்டிக் கொண்டது.

தயக்கமாக உடைந்து வெளிப்பட்டது அவளுடைய குரல்.

” ப்ரணவ் கேட்டதாலே தான் நான் பாடினேன்… ” என்று சொல்லி முகத்தை வேறுப் பக்கம் திரும்பி கொண்டாள்.

எனக்காக தான் பாடினேன் என்று நான் தவறாக நினைத்துவிடக்கூடாது என்பதற்காக சாக்கு சொல்கிறாளாம் என்று மனதினுள் புன்னகைத்துக் கொண்டான்.

“ஓகே ஓகே நம்பிட்டேன்… ” என்று ஆதிராவை நோக்கி புன்னகையுடன் சொன்னவன் சோபாவில் வந்து அமர்ந்தான்.

அவனது வார்த்தை நம்பிவிட்டேன் என்று சொன்னாலும் குரல் தான் நம்பவில்லை என்பதை தெளிவாய் சொன்னது. அவன் தன்னை கேலி செய்கிறான் என்பது அப்பட்டமாக அவளுக்கு தெரிந்தது. கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு வினய்யை முறைத்துப் பார்த்தாள்.

“அட உண்மையா நம்பிட்டேன் ஆதிரா… ” என்று புன்னகையை அடக்கிக் கொண்டு சொன்னவனை கோபத்துடன் பார்த்தபடி எதிர் சோபாவில் வந்து அமர்ந்தாள்.

“சே பாவமான அந்த முகத்தைப் பார்த்து என் மனசு இளகியிருக்கக்கூடாது… அப்படியே முகத்தைப் பாவமா வெச்சுக்கோனு நான் கண்டுக்காம இருந்து இருக்கணும்… பாவம் பார்த்து பாடி தொலைச்சா என்னையே கலாய்க்கிறான்… ஓவரா சிரிக்கிறான்… இதையே காரணமா வெச்சுக்கிட்டு ஓவர் advantage எடுத்துக்க ட்ரை பண்ணுவானே… இவனை எப்படி சமாளிக்கப் போறேன்.. எப்படி தப்பிக்க போறேன்… ” என்று மனதுக்குள் எண்ணியபடி பெருமூச்சுவிட்டாள்.

அவள் விடும் மூச்சைக் காற்றில் இருக்கும் அர்த்தத்தைக் கூட அறிந்தவன் அவனாயிற்றே. இந்த பெருமூச்சும் எதனால் அறிந்த அவன் புன்னகையுடன் ஆதிராவை நோக்கி

“பயப்படாதே நான் ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்க மாட்டேன்… “என்றான்

படக்கென்று நிமிர்ந்தாள் அவள். இவனுக்கு எப்படி என் மனதுக்குள் ஓடிய வார்த்தைகள் கேட்டது  என்று விழியகலாமல் பார்த்தாள்.

வினய்யோ அவளைப் பார்த்து லேசாக கண்ணடித்தான். அதில் தன்னிலைக்கு மீண்டவளது முகம் கோபத்தில் சிவந்தது.

“பாவி பாவி… இப்போ தானே ஓவர அட்வான்டேஜ் எடுத்துக்க மாட்டேன்னு சொன்னான்.. சொல்லி முடிச்ச அடுத்த நிமிஷமே இப்படி கண்ணடிக்கிறானே… இவனை நம்புறதும் பாம்பு பல்லிலே விஷம் இல்லைனு நம்புறதும் ஒன்னு தான்… இவனை நம்பிடாதே ஆதிரா.. இவனோட நிஜ முகத்தை தெரிஞ்சும் இவனுக்காக பரிதாபப்பாடதே… இவன் விரிச்ச தூண்டிலிலே இருந்து எப்படியாவது தப்பிக்கணும்… அதுக்கு நாளைக்கு காலையிலே வரை தூங்காம இருக்கணும்… எப்படியாவது தூங்காம இரு டி… ” என்று தனக்கு தானே சமாதானம் செய்துக் கொண்டு போட்டிக்கு தயாரானாள்.

மணி பத்தரையாகி இருந்தது. அவளுடைய அதிகபட்ச நேரம் பதினொரு மணி. அதைத் தாண்டி அவள் தூங்காமல் கண்விழித்துக் கிடந்ததாய் அவள் வாழ்க்கை அகராதியிலேயே இல்லை. இன்று அந்த அகாரதியை மாற்றி அமைக்கும் நேரம் ஆதிரா.

இறைவா சக்தி கொடு… சக்தி கொடு… சக்தி கொடு…. சக்தி கொடு.. இறைவா.. இறைவா… என்று பாடலை உதடுகளில் முணுமுணுத்துக் கொண்டு இருந்தாள்.

அவளது வேண்டுதல் கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ வினய்யிற்கு தெளிவாக கேட்டது.
அவளையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.

உத்ராவும் ப்ரணவ்வும் ஆதிராவுடைய கோபத்தையும் வினய்யுடைய காதலையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

“ஹே உத்ரா அண்ணாவோட கண்ணுல இப்போ தான் உண்மையான சந்தோஷத்தை பார்க்கிறேன்… அண்ணி வந்த அப்புறம் தான் பல மாசமா  உடைஞ்சு கிடந்த அண்ணா கொஞ்சம் கொஞ்சமா சரி ஆகிட்டு வராங்க… இது நினைச்சு ஒரு பக்கம் சந்தோஷப்பட்டாலும் இன்னொரு பக்கம் பயமா இருக்கு… அண்ணி அண்ணாவை வேண்டாம்னு சொல்லிட்டா இப்போ இருக்கிறதை விட பல மடங்கு உடைஞ்சு போயிடுவாங்களே… ” என்றவனது குரலிலோ கடளலவு வருத்தம் இருந்தது.

அவன் வருத்தத்திலும் நியாயம் இருக்கவே செய்தது.  உத்ராவால் மறுத்து எதுவும் பேச முடியவில்லை. இருவரும் அமைதியாக இருந்தனர். அந்த அமைதியை கலைக்கும் பொருட்டு ப்ரணவ் மீண்டும் பேசினான்.

“சே ஒரு மனுஷனுக்கு ஒரு சோகம் வந்தா பரவாயில்லை…  இப்படி வரிசையா  சோகம் வந்தா என்ன பண்றது?. ஒரு பக்கம் அண்ணாவை நினைச்சு வருத்தம்னா இன்னொரு பக்கம் இந்த வைஷாலியை நினைச்சு எனக்கு வருத்தமா இருக்கு.   இந்த வைஷாலி வேற இப்போ எல்லாம் எனக்கு போனே பண்ண மாட்டேங்குறா உத்ரா… மெசேஜ்ம் பண்ண மாட்டாங்குற..  ஏன்னே தெரியல… நல்ல வேளை நீ இருக்கிறதாலே எனக்கு அது கஷ்டமா தெரியல…. ” என்று ப்ரணவ் சொல்ல அது வரை அமைதியாக இருந்த உத்ரா சட்டென கோபமாக நிமிர்ந்தாள்.

கொடைக்கானல் வருவதற்கு முன்பு வரை ப்ரணவ்வின் இடத்தில் ஒரு ஒதுக்கம் இருந்தது. ஆனால் இங்கே வந்த பிறகு அவன் இயல்பாய் எப்போதும் போல அவளிடம் ஒதுக்கம் இல்லாமல் பேசினான். இப்போது தானே புரிகிறது அவனுடைய இந்த திடீர் இணக்கத்திற்கு காரணம் வைஷாலி காட்டும் ஒதுக்கம் என்று.

“வைஷாலி பேசாத வெறுப்பை மறக்கிறதுக்காக டைம்பாஸ்க்கு இப்போ என் கூட பேசிக்கிட்டு இருக்க அப்படி தானே..  ” என்று கோபமாக கேட்டவளை புரியாமல் பார்த்தான்.

“உத்ரா என்ன ஆச்சு உனக்கு??….நீ நல்லா தானே இருக்க… ஏன் இப்படி பைத்தியம் மாதிரி பேசிக்கிட்டு இருக்கே….நான் எப்பவும் போல தானே உன் கிட்டே பேசிக்கிட்டு இருக்கேன்… “

“இல்லை ப்ரணவ் இப்போ தான் நான் பைத்தியத்துல இருந்து தெளிஞ்சு இருக்கேன்.. நான் கூட பரவாயில்லையே நீ என் கூட முன்னாடி மாதிரி close ஆ பேசுறானேனு நினைச்சேன்… ஆனால் இப்போ நீ தெளிவா புரிய வைச்சுட்டே… வைஷாலி உன் கூட பேசாததாலே தான் என் கூட நல்லா பேசுறேன்னு… “

“ஹே பைத்தியம் அப்படி எல்லாம் இல்லைடி… நான் உன் கூட எப்பவும் போல தான் பேசுறேன்… ” என்று ப்ரணவ் சமாதானம் செய்ய முயன்றான். ஆனால் உத்ரா சமாதானம் ஆகவில்லை.

“நீயே மனசாட்சி தொட்டு சொல்லு ப்ரணவ்,, வைஷாலி உன் வாழ்க்கையிலே வந்த அப்புறம் உனக்கும் எனக்கும் இடையிலே இடைவெளி விழுந்தது உண்மையா இல்லையா??'” என்று கோபமாக கேட்டாள். அவனிடம் மறுத்துப் பேச பதிலில்லை.

ஏனென்றால் அது தானே உண்மை. வைஷாலி வந்த பிறகு உத்ராவிடம் பேசுவது குறைந்து தான் போய் இருந்தது. பதில் பேச முடியாமல் தலைக்கவிழ்ந்தான். அவன் தலை குனிந்ததைப் பார்த்ததும் உத்ராவின் முகத்திலோ ஒரு விரக்தி சிரிப்பு.

“அப்போ  நீயே உண்மையை ஒத்துக்குறல ப்ரணவ்… அப்போ அவள் இருந்தா நான் தேவைப்படல.. இப்போ அவள் இல்லை அந்த வெறுமையை போக்க நான் தேவைப்படுறேன். நீ  யூஸ் பண்ணிக்கிற.” என்று உத்ரா பேசிக் கொண்டே போக உத்ராவின் கையைப்பிடித்து வெளியே அழைத்து வந்தான்.

“ஹே உத்ரா இது பெரிய வார்த்தை டி… நீ எனக்கு எப்பவும் நெருக்கம் தான் டி… ஆனால் வைஷாலி வந்ததுக்கு அப்புறம் என்னாலே காட்ட முடியல.. இப்போ அவள் இல்லாததாலே அந்த அன்பை காட்டுறேன் … அவ்வளவு தான் வித்தியாசம்… “

“அப்போ அவள் உன் வாழ்க்கைக்குள்ளே மொத்தமா வந்துட்டா சுத்தமா என்னை கண்டுக்க மாட்ட தானே… என்னை ஒதுக்கிடுவ தானே… ”
என்று கண்களில் உதிர்த்த நீரோடு கேட்டாள்.

அவள் வருத்தம்  எல்லாம் சிறு வயதில் இருந்து தன்னோடு இருந்தவன் மெது மெதுவாக பிரியும் போதே இவ்வளவு கஷ்டமாக இருக்கிறதே அவன் மொத்தமாக விலகிவிட்டால் என்னால் எப்படி தாங்க முடியும் என்பது தான்?

அவன் அவளை  விட்டு முழுவதுமாக தள்ளி  சென்றுவிடுவானா என்கிற பயம் அவளை அப்படி பேச வைத்தது.

ஆனால் ப்ரணவ்விற்கோ இந்த சிறிய பிரிவை கூட இவள் தாங்க மாட்டேன் என்கிறாளே அன்பை உணர்த்தி கொண்டே இருக்க வேண்டும் என்கிறாளே என்கிற எண்ணம் சலிப்பை வர வைத்தது. அந்த சலிப்பில் அவன் வார்த்தைகளும் இடறியது.

” உத்ரா உனக்குனு ஒருத்தன் வரும் போது தான் உனக்கு அது புரியும்… நானும் இப்படி என் மேலே அன்பு காட்டு காட்டு னு  எரிச்சல் பண்ணும் போது இரண்டு பேருக்கு நடுவுலே மாட்டிக்கிட்டு படுற அவஸ்தை உனக்கு அப்போ தான் நல்லா புரியும்… இப்படி ஒண்டி கட்டையா இருக்கிறதாலே தான் உனக்கு எதுவும் புரியல… ” என்றவனது வார்த்தைகள் அவளது இதயத்தை கூராக பதம் பார்த்தது. விடாமல் பேசிக் கொண்டு இருப்பவள் ஒரு வார்த்தை கூட பேசாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

அவளது மௌனமான முகமும் கண்களில் தெரிந்த வலியையும் பார்த்த ப்ரணவ் சட்டென தான் பேசிய வார்த்தைகளை எண்ணி தலையில் அடித்துக் கொண்டான்.

” ஹே உத்ரா நான் வேண்டும்னு சொல்லல.. வாய் தவறி வந்துடுச்சு….ப்ளீஸ் டி கோச்சிக்காதே.. நாலு வார்த்தை அசிங்கமா திட்டிட்டு கூட போ…. ஆனால் இப்படி பேசாம போகாதே… மனசு ஒரு மாதிரி இருக்கு டி… “

“இல்லை ப்ரணவ்.. இனி நான் பேச மாட்டேன்.. உன்னை இனி எனக்கும் வைஷாலிக்கும் இடையிலே நிறுத்தி சங்கடமான நிலையிலே நிறுத்த மாட்டேன்… இனி அன்பு காட்ட சொல்லி எரிச்சல் படுத்த மாட்டேன்…  நான் இனி ஒண்டிகட்டை இல்லை ப்ரணவ்… வைபவ்வை காதலிக்க போறேன்” என்று சொல்லியபடி வேகமாக வீட்டிற்கு  உள்ளே நுழைய முயன்றவளின் கையைப் பற்றி தடுத்தான்.

“வாட்.. என்ன உத்ரா லூசு மாதிரி உளருற…. ப்ளீஸ் கோவத்துல இப்படி பைத்தியம் மாதிரி முடிவு எடுக்காதே… “

“நான் தெளிவா முடிவெடுத்துட்டேன்… நான் வைபவ்வை காதலிக்கப் போறேன்..” என்று அவனது கையை உதறியபடி வீட்டிற்குள்ளே நுழைந்தவளை கையறு நிலையோடு பார்த்தான்.

உள்ளே ஆதிரா சோபாவில் கிடந்த செய்தித்தாள்களை புரட்டிக் கொண்டு இருந்தாள். அவளின் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் வைஷாலி.

“அண்ணி வைபவ் எப்படி இருப்பாங்கணு எனக்கு காமிங்களேன்… ” என்று கேட்ட உத்ராவை பார்வையால் கெஞ்சிக் கொண்டு இருந்தான் ப்ரணவ்.

“என் கிட்டே போன் இல்லையே உத்ரா.. வைபவ்வோட போட்டோ கூட எதுவும் இல்லையே… ” என்று உதட்டைப் பிதுக்கினாள் ஆதிரா.

அப்பாடா என்று பெருமூச்சு விட்ட ப்ரணவ்விற்கு உத்ரா கேட்ட அடுத்த கேள்வி முச்சடைக்க வைத்தது.

“அண்ணி என் கிட்டே போன் இருக்கு… வைபவ் facebook ல இருந்தாங்கனா அவங்க நேம் சொல்லுங்க அதுல போய் போட்டா பார்க்கலாம்… ” என்று கேட்க ஆதிராவும் வைபவ்வின் ஐடியை கொடுத்தாள்.
அதில் சென்று வைபவ்வின் முகத்தைப் பார்த்தாள். அம்சமாகவே இருந்தான்.

“அண்ணி சூப்பர் அண்ணி.. செமயா இருக்காங்க … உங்க சாய்ஸ் சூப்பர்” என உத்ரா சொல்ல வினய்யும் ப்ரணவ்வும் ஒரு சேர அவளை முறைத்தனர்.

வினய்யின் முறைப்பைக் கண்டு அசட்டு சிரிப்பு சிரித்தவள் ” உங்க அழகுல கொஞ்சம் கம்மி தான்… என்ன இருந்தாலும் என் அண்ணாவை போல வருமா” என்றாள்.

இப்போது ஆதிரா உத்ராவை முறைத்தாள்…

“ஐயோ சாமி என்னை ஆளை விட்டுடுங்க…. இப்படி இரண்டு பேரும் மாத்தி மாத்தி என்னை முறைக்காதீங்க… இரண்டு பேரும் ஒரே மாதிரி அழகு… ” என்று சொல்லி தப்பித்தவள் மெதுவாக ப்ரணவ்வின் பக்கம் வந்து அவன் கண்ணில் படும்படி வைபவ்விற்கு friend request ஐ அனுப்பிவிட்டு அவனைப் பார்த்து நக்கலாக புன்னகைத்தாள். அவனோ அவளை பாவமாக பார்த்தான்.

“அடேய் ப்ரணவ் வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்காம சும்மா இருந்தவளை இப்படி உசுப்பேத்தி விட்டுட்டியே டா”.. என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டவன் மெதுவாக உத்ராவிடம் வந்து ” சாரி டி… ப்ளீஸ் என் கூட பேசு… ” என்றான்.

“நான் ஏன்  பேசணும் உன் கூட… உனக்கு போரடிச்சா போய் வைஷாலி கூட பேசு… இனி நான் யாருக்கும் நடுவுல வரப் போறதா இல்லை… “

“அப்போ அவ்வளவு தானா உத்ரா… சின்ன வயசுல இருந்து ஒன்னும் மண்ணா பழகிட்டு இப்படி பட்டுனு பிச்சுக்கினு போனா நியாயமா?”

“அப்படி தான் டா பிச்சுட்டு போவேன்…. ” என்று உத்ரா குரல் உயர்த்தி பேச வினய் உஸ் என்று வாயில் கை வைத்து இருவரையும் அமைதியாக சொன்னான்.

இருவரும் ஏன் என்று புரியாமலேயே வாயில் கைவைத்தபடி திரும்பிப் பார்க்க அங்கே ஆதிரா சோபாவிலியே படுத்து கண்ணயர்ந்துவிட்டாள்.

“அண்ணா… அண்ணி தூங்குவாங்கணு தெரியும்… ஆனால் இப்படி பன்னிரெண்டு மணிக்கே தூங்குவாங்கணு தெரியாது அண்ணா… Congrats அண்ணா” என்று ப்ரணவ் சிரிக்க, வினய்யிற்கோ ஆதிராவின் தூக்கம் கலைந்துவிடுமோ என்று தான் பதட்டமாக இருந்தது.

“அடேய் அமைதியா போ டா… எழுந்துக்க போறா… ” என சொல்ல உத்ராவும் ப்ரணவ்வும் செய்கையாலேயே  குட் நைட் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து  தங்களது அறைக்குள் புகுந்து கொண்டனர். அறைக்குள் நுழைவதற்கு முன்பு ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்து முறைத்தபடி சிலிப்பிக் கொண்டு சென்றனர்.

உறங்கும் ஆதிராவையே விழியகலாது பார்த்தான் வினய். கோபத்துடனும் ஒருவித இறுக்கத்துடனும் இருக்கும் அவளது முகம் தூங்கும் போது  நிர்மலமாகி இருந்தது. கற்றை மூடி காற்றில் ஆடி கதைப் பேசியது. குளிரில் மெதுவாக நடுங்க துவங்கியவளின் மீது போர்வை போர்த்திவிட்டு எதிர் இருக்கையில் அமர்ந்துக் கொண்டு அவளது முகத்தை தன் மனப் பெட்டகத்தில் சேகரிக்க தொடங்கினான்.

சாரை பாம்பா
   சலசலத்த மனசை
குரலில் மகுடி
   கடத்திப் பழக்கிற

தரிசு நிலமா
   கிடந்த மனசில்
அடைமழை நீராய் கலக்கிற

காலி வீடா கிடந்த
   மனசில் மெல்ல மெல்ல
காதலை குடியேத்துற

 

Leave a Reply

error: Content is protected !!