காதல் சதிராட்டம் 30

வானத்தில் மிதந்த குமிழ், பறந்து வையத்தின் முட்செடியில் பட்டு உடைவதுப் போல் உடைந்துக் கிடந்த ஆதிராவையே வருத்தத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான் வினய்.

அவன் கேட்ட கேள்விக்கு ஆதிராவின் இருதயத்தில் இருந்து கிளம்பிய வார்த்தைகள் தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டது.

முதல் முறை தன் காதல் கதையை சொல்லும் போதே வினய் கேட்டக் கேள்விகள் அவளைப் பாதியை தான் சொல்ல வைத்தது.

மீதியைச் சொன்னால் எங்கே அவன் கேள்விக் கணைகளுக்கு பதில் சொல்ல முடியாது போய்விடுமோ என்று அவள் அப்போது தவிர்த்ததை இப்போது மீண்டும் கேட்கிறான்.

இம்முறை தப்பிக்க முடியாது என்று எண்ணியவள் மெதுவாக உண்மையைச் சொல்ல ஆரம்பித்தாள்.

“எனக்கு வைபவ் மேலே முதலிலே பெருசா எந்த  அபிப்ராயமும் இல்லை வினய். ஆனால்  அவன் என்னோட ஆதார் கார்ட் திருப்பிக் கொடுக்கும் போது நம்ம காலேஜ் ஐடி கார்ட் பார்த்தேன். ” என்று சொல்ல ” ஓ” என்று வினய் உதட்டைக் குவித்தான்.

“நம்ம காலேஜ் பையன்றதாலே அவனைப் பிடிச்சுடுச்சா ஆதிரா?” என்று வினய் கேட்க இல்லை என்று தலையசைத்து மறுத்தவள் “அவனோட கழுத்து மச்சமாலே தான் அவனைப் பிடிச்சது.” என்றாள் சிறிது வெட்கியவளாக.

ஆனால் அவளது பதிலில் வினய் முகத்தில் வியப்பின் விரிவு கூடவே  உதடுகளில் அழுத்தமான புன்னகை.

அவனது புன்னகையை குழப்பமாக ஆதிரா பார்த்துக் கொண்டு இருக்க வினய் தனது பேன்ட் பாக்கெட்டைத் துழாவி ஒரு சிறிய துண்டு துணியை எடுத்து அவளின் முன்பு  நீட்டினான்.

அதைக் கண்டவளது கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.

வேகமாக அருகில் வந்து அந்த துணியை கைகளில் வாங்கி பரிசோதித்துப் பார்த்தாள். இது அதே துணி தான் என்பதை உணர்ந்தவளது கண்கள் பனித்தது.

அவன் சின்ன சிரிப்புடன் “எனக்கும் கழுத்துல மச்சம் இருக்கு ஆதிரா.” என சொல்ல அப்போது தான் அவனது கழுத்தோர மச்சத்தையே கவனித்தாள்.

“வினய் நீ தானா அது?” என ஆதிரா கேட்க அவன் ஆமாம் என்று கண்மூடித் திறந்தான்.

இவள் கல்லூரி படித்துக் கொண்டு இருந்த காலம் அது. காலேஜ் கல்சுரஸில் இவளிடம் வம்பு செய்த வேறு கல்லூரி மாணவர்கள் இவளுடைய துப்பட்டாவைப் பறித்துக் கொண்டு சென்றவர்கள் மீண்டும் உடலில் அடி வாங்கிய காயத்தோடு நின்றனர். அவர்களே இவளிடம் பறித்த துப்பட்டாவை கொடுத்துவிட்டு மன்னிப்பும் கேட்டு இருந்தனர்.

ஆதிராவிற்கு ஒரே ஆச்சர்யம். அவர்களை அடித்தது யார் என வினவ அவர்களுக்கோ அவனின் பெயர் தெரியவில்லை. கழுத்து மச்சத்தை மட்டுமே அடையாளமாக சொல்லிவிட்டு கூடுதலாக இன்னொரு தகவலையும் சொல்லிவிட்டு சென்றனர்.

“நீங்க படிச்சு முடிச்ச அப்புறம் தான் உங்க முன்னாடி வருவேன்னு அவர் சொல்ல  சொன்னாரு சிஸ்டர். ” அந்த வார்த்தையைக் கேட்டவளுக்கு அவனை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆர்வம்.

அவனைத் தேடாத இடம் இல்லை. ஆனால் அந்த தேடலின் முடிவு அருகிலேயே இருந்ததைத் தான் உணர முடியவில்லை. இப்போது உணர்ந்ததும் அவளது உடலில் இனம் புரியாத ஒரு சிலிர்ப்பு.

“நான் எங்கே எங்கேயோ அந்த கழுத்து மச்சத்தை தேடி அலைஞ்சேன், பக்கத்துலேயே இருந்த உன்னை விட்டுட்டு. அப்போ தான் நமக்குள்ளே சில சங்கடங்களும் குழப்பங்களும் வர ஆரம்பிச்சது, நான் அதுனாலே உன்னைக் கவனிக்க தவறிட்டேன் வினய்” என்று அவள் ஆற்றாமையோடு கூறிவிட்டு திகைத்துப் போய் கட்டிலில் அமர்ந்தாள்.

“ஏன் வினய் நீ அப்பவே என் கிட்டே சொல்லல?” என்றாள் கண்களில் திரண்ட கண்ணீரோடு.

“அப்பவே நான் சொல்லி இருந்தா…ஒரு நன்றியுணர்ச்சியாலே தான் என் மேலே காதல் வந்து இருக்குமே தவிர உண்மையான காதல் வந்து இருக்காது ” என்று சொன்னவனையே இமைக்க மறந்துப் பார்த்தாள்.

இவன் தான் தன் காதலுக்கு எத்தனை கண்ணியமானவன்? எத்தனை உண்மையானவன்?

💐💐💐💐💐💐💐💐💐💐💐

அறையில் குற்றம் செய்த உணர்வோடு வைபவ் நடந்துக் கொண்டு இருந்தான்.

முகத்தில் வாங்கிய அறையும் குத்துகளும் அவனது தாடையை அசைக்க முடியாத அளவிற்கு செய்து இருந்தது.

அவசரத்தில் வார்த்தையை பெரிதளவுக் கொட்டிவிட்டதை எண்ணி அவன் இப்போது வருத்தப்பட்டான்.

ஆனால் காலம் கடந்த ஞானதோயம் அது.

தன் காதலியை வேறொருவன் அணைத்து இருப்பதை பார்த்ததும் எந்த ஆண்மகனும் கோபப்படுவான் அவனும் அப்படி தான் கோபப்பட்டான்.

ஆனால் கொண்ட கோபத்தை எல்லாம் கொட்டிவிட்டு அவளது பக்க நியாயத்தை யாராக இருந்தாலும் கேட்பார்கள்.

ஆனால் அவள் மீது கொடும் சொற்களைக் கொட்டிவிட்டு அவளது பெண்மையையே கலங்கம் செய்து வந்துவிட்டான் இவன்.

தான் செய்தது பெரும் தவறு என அவனது உள்ளம் கலங்கிய நேரம் அலைபேசி ஒளிர்ந்தது.

எடுத்துப் பார்த்தவனது உள்ளத்திற்கு இன்று அவள் மட்டும் தான் தனக்கு ஆறுதலாக இருப்பாள்  என்று தோன்ற வேக வேகமாக பதில் குறுஞ்செய்தி அனுப்பினான்.

“சாரி அன்னைக்கு உன்னோட போட்டாவைப் பார்த்துட்டு நான் எந்த பதிலும் சொல்லல. இன்னைக்கு உன்னைப் பார்க்கணும்னு தோணுது பார்க்கலாமா?” என்று வைபவ் கேட்க சட்டென்று ஓகே என்று ரிப்ளை வந்தது.

வைபவ் அருகில் இருக்கும் பூங்காவில் தனக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பெண்ணிற்காக காத்துக் கொண்டு இருக்க பத்தே நிமிடத்தில் அவனை நோக்கி வந்தாள் அவள்.

இவன் எழுந்தே நின்றுவிட்டான்.

கல்லூரியில் இவன் முதுகலை இறுதியாண்டு  படிக்கும் போது அவள் இளங்கலை இறுதியாண்டு படித்துக் கொண்டு இருந்தாள்.

அப்போது எப்படி இருந்தாளோ  இப்போதும் அப்படியே தான் இருக்கின்றாள்.

எப்பொழுதும் சந்தேகம் என ஏதாவது ஒரு புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வரும் அவளுக்கு இவன் சந்தேகம் தீர்த்து வைத்தது எல்லாம் அவனது நியாபக அடுக்கில் சுழன்றது.

பின்பு கல்லூரி முடித்ததும் இவன் வேலைக்காக இந்த ஊருக்கு வந்துவிட்டான்.

பல வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் அவளைப் பார்க்கின்றான்.

தன்னை நோக்கி வந்துக் கொண்டு இருந்தவளைக் கண்டு எழுந்து நின்றவன் “ஐஸ்வர்யா… ” என்றான் கலங்கிய குரலில்.

அவனது கலக்கமே அவளை வருத்த ” என்னாச்சு சீனியர்? பல வருஷம் கழிச்சு நாம பார்க்கிறோம் ஆனா உன் முகத்துல சிரிப்பையே காணோம். ” என்றாள் கேள்வியாக.

“ஆமாம் ஏன் சீனியர் அன்னைக்கு நான் உன்னை பார்க்க வரேனு சொன்ன, அப்போ என்னை மீட் பண்ண வரல” என்று மீண்டும் கேள்வியைத் தொடுத்தாள்.

“என் காதலிக்கு துரோகம் பண்ணக்கூடாதுனு நினைச்சேன். ” என்று அவன் சொல்ல சட்டென்று ஐஸ்வர்யாவின் கண்களில் கண்ணீர் துளித்தது.

தான் கல்லூரியில் உருகி உருகி காதலித்த ஒருவன் இன்று வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறான் என்று அறிந்தால் கண்ணீர் தளும்பும் தானே. அப்படி தான் அவளுக்கும் தளும்பியது.

ஆனாலும் கண்ணீரை வெளிவிடாமல் இழுத்துப் பிடித்தவள் ” அப்போ  ஏன் வந்த சீனியர்? இப்போ மட்டும் நீ துரோகம் பண்ணலையா” என்றாள் கேள்வியாக.

“நான் தப்பு பண்ணிட்டேன் ஐஸ்வர்யா. நான் காதலிச்சவளை நானே கலங்கடிச்சுட்டு வந்துட்டேன்.” என்று  அவனையே அதிர்ந்துப் போய் பார்த்தாள்.

“என்ன ஆச்சு வைபவ்? ஏன் முகத்துல இப்படி காயம் பட்டு இருக்கு? யாரை கலங்கடிச்ச? கொஞ்சம் தெளிவா சொல்லு.” என்று ஐஸ்வர்யாவைக் கேட்க வைபவ் கலங்கிய குரலில் சொன்னான்.

“ஆதிராவை.. ” என்று

“எந்த ஆதிராவை ?” என்று ஐஸ்வர்யா விதிர்த்துப் போய்க் கேட்டாள்.

“அவளும் நம்ம காலேஜ்ல தான் படிச்சேனு சொன்னா ஐஸ்வர்யா” என்று சொல்லியவன் சட்டென்று நிறுத்திவிட்டு “ஒருவேளை உனக்குக் கூட அவளைத் தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இருக்கு.. குத்துமதிப்பா பார்த்தா நீ PG பண்ணிட்டு இருந்த அப்போ தான் அவள்  காலேஜ்ல சேர்ந்து இருப்பா. ” என்று வைபவ் சொல்ல ஐஸ்வர்யா சிலையானாள்

“எனக்கு தெரியும் வைபவ். அவள் என்னோட சிஸ்டர் மாதிரி… ஆதிராவைத் தான் நீ காதலிச்சியா? அவளை என்னடா கலங்கப்படுத்தின.” என ஐஸ்வர்யா அவனது சட்டையைப் பிடித்துக் கேட்க வைபவ் மடமடவென்று நடந்த எல்லாவற்றையும் சொன்னான்.

ஏற்கெனவே வீங்கிப் போய் இருந்த கன்னத்தில் ஐஸ்வர்யாவும் தற்போது  ஒரு அறை ஓங்கி விட்டாள்.

“ஹவ் டேர் யூ வைபவ்.. அவளை எப்படி அப்படி சொல்ல உனக்கு மனசு வந்தது? இப்படி நாக்குல நரம்பு இல்லாம பேசி அவளை சாகடிச்சுட்டியே டா பாவி. கொஞ்சம் நிதானமா யோசிச்சு இருந்து இருக்கலாம்ல. உன் காதல் மேலே சுத்தமா உனக்கு நம்பிக்கையே இல்லையா வைபவ்?” என்று ஐஸ்வர்யா கேட்க வைபவ்வோ கண்களில் வழிந்த கண்ணீரோடு “இல்லை இல்லை ” என்று பெருங்குரலோடு  கத்தினான்.

“எனக்கு என் காதல் மேலே நம்பிக்கையே இல்லை ஐஸ்வர்யா. ஏன்னா இதோட அஸ்திவாரமே பொய்யாலே ஆனது. ” என்று உடைந்துப் போய் சொல்லியவனின் வார்த்தையைக் கேட்டு “வாட்” என அதிர்ந்தாள் அவள்.

“ஆமாம் ஐஸ்வர்யா. ஆதிரா பின்னாடி நான் சுத்தும் போது என்னை அவள் கண்டுக்கவே இல்லை. ஆனால் நம்ம காலேஜ் ஐடி கார்ட் பார்த்ததும் அவளுக்குள்ளே ஒரு பரபரப்பு வந்தது. என் கழுத்து மச்சத்தைப் பார்த்தா. அப்புறம் நான் தான் காலேஜ்ல ரேக் பண்ண எல்லாரையும் போட்டு மிதிச்சேனானு கேட்டா… அவளை இம்ப்ரெஸ் பண்ண எனக்கு கிடைச்ச வாய்ப்பை இழக்க தோணாம ஆமாம்னு சொல்லிட்டேன். அதுக்கு அப்புறம் தான் ஆதிரா என் கிட்டே பழக ஆரம்பிச்சா. ” என வைபவ் தயங்கி தயங்கி சொல்ல ஐஸ்வர்யாவோ வருத்தமாகப் புன்னகைத்தாள்.

“ஆக பொய்யோட காதலை ஆரம்பிச்சு இருக்க?” என்று அவள் கோபமாக கேட்க வைபவ்வின் தலை குற்றவுணர்வோடு ஆடியது.

💐💐💐💐💐💐💐

இங்கே கலங்கிப் போன உணர்வுடன் அமர்ந்து இருந்த ஆதிராவை நோக்கி ஆறுதலாக புன்னகை பூத்த வினய்  “வைபவ்வை பிடிக்க காரணமான விஷயம் அந்த கழுத்து மச்சம். அப்போ வைபவ் மேலே காதல்  வர என்னக் காரணம்?” என்றான் பதிலைத் தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில்.

“வைபவ்க்கு அடிப்பட்டு இருந்த அப்போ அவனோட நிலைமைக்கு நான் தான் காரணம்ன்ற குற்றவுணர்வு தான் நான் காதல் சொல்ல காரணம். அதுமட்டும் இல்லாம நான் உயிர் போற நிலைமையிலே வைபவ் தான் எனக்கு ரத்தம் கொடுத்துக் காப்பாத்துனான். அதனாலே அவன் எனக்கு செஞ்ச உதவிக்கு காதலை நான் பதிலுக்குக் கொடுத்தேன். ” என்று சொன்னவளை நோக்கி அவனால் வெற்று சிரிப்பு தான் சிரிக்க முடிந்தது.

“ஆதிரா உனக்கு நல்லா தெரியுமா? உன்னோட அதே ஓ பாசிட்டிவ் ப்ளட் க்ரூப் தான் வைபவ்வுக்கும் இருக்குனு?” என்று வினய்க் கேட்க மீண்டும் அவளுக்குள் ஒரு அதிர்வு.

வினய் உனக்கு எப்படி, என்னோட ப்ளட் க்ரூப் ஓ பாசிட்டிவ் னு தெரியும்?” என்று அவள் சந்தேகமாகக் கேட்க

“அந்த ரத்தம் கொடுத்தவனே நான் தான் ஆதிரா. ” என்று வினய் சொல்ல அவளுள் எழும்பிய திகைப்புக்கு அளவே இல்லை.

ஆக இதிலும் வைபவ் பொய் சொல்லி இருக்கின்றானா?

பொய்யினாலேயே ஒரு காதலை உருவாக்கி இருக்கின்றான்.

அவனுக்கு என் மீது அல்ல அவன் காதலின் மீதே நம்பிக்கை இல்லை.

அந்த நம்பிக்கையின்மை தான் அவனைஅப்படி பேச வைத்து இருக்கிறது. அவன் மீது சொல்லெண்ணா கோபம் வந்தது. அதை விட வினய்யின் மீது…

நேராக சென்று அவன் சட்டைக் காலரைப் பற்றியவள் “ஏன்டா வினய் எதுவுமே சொல்லாம இப்படி மறைச்ச.அப்போ நான் unconscious ல இருந்த இரண்டு நாளும் நீ தான் என்னைப் பார்த்துக்கிட்டியா? கண்ணே திறக்க முடியாத அந்த நிலையிலேயும் என்னை சுத்தி ஒரு பாதுகாப்பு கரம் சூழ்ந்து இருக்கிறதை என்னாலே  உணர முடிஞ்சது.. அது நீ தானா வினய்? ஏன் வினய் நான் கண்ணு முழிச்ச அப்போ காணாம போயிட்டே”

“நீ இப்போ சொன்னியே ஆதிரா ஒரு காரணம் அதனாலே தான் உன் முன்னாடி நான் வரல. எங்கே என் மேலே நன்றியுணர்ச்சியாலே காதல் வந்துடப் போகுதுனு தான் நான் வரல.” என்ற வினய்யின் வார்த்தைகள்  ஆதிராவின் இருதயத்தை அசைத்துப் பார்த்தது.

எப்படியாவது ஏமாற்றிக் காதலை அடைந்துவிடுபவர்களின் மத்தியில், தன் உயிர்க்காதலை அடைவதற்காக எத்தனை தவம் செய்து இருக்கின்றான் இவன்.

என எண்ணியவள் மனதிற்குள் மீண்டும் ஒரு கேள்வி.

“வினய் உன்னை விட்டு தூரமா நான் ஓடிப் போன  அப்புறம் என்னை எப்போ கண்டுபிடிச்ச? எப்படி கண்டுபிடிச்ச?”

“நான்  ஒரு தொழில் சம்பந்தப்பட்ட விஷயத்திற்காக நீ வேலை பார்த்துட்டு இருந்த ஊருக்கு வந்தேன் ஆதிரா. காரிலே போயிட்டு இருக்கும் போது  பஸ்  ஜன்னல் பக்கம் தெரிஞ்ச உன் முகத்தைப் பார்த்துட்டு அடுத்த ஸ்டாப்லயே காரை நிறுத்திட்டு பஸ்ல ஏறுனேன்.  ஆனால் நீ வைபவ்வை ஓரக்கண்ணாலே ரசிச்சுட்டு இருந்ததைப் பார்த்ததும் எனக்குள்ளே இடியை இறக்குன மாதிரியான உணர்வு. இந்த இடைப்பட்ட வருஷத்திலே உனக்குள்ளே காதல் வந்து இருக்குன்றதை உணர்ந்த அப்போ ஒரு மாதிரி வலியா இருந்தது. ஆனால் இன்னைக்கு தான் புரிஞ்சது நீ என்னை நினைச்சு தான் அவனைப் பார்த்து இருந்து இருக்க.” என்றவன் சிறு இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.

“நீ அறியாம உன்னை நிறைய தடவை பின்தொடர்ந்தேன் ஆதிரா. அப்போ தான் ஒரு நாள் நீ நடந்துப் போகும் போது ஒரு கார் காரன் இடிச்சுட்டுப் போயிட்டான். உணர்வில்லாம கிடந்த உன்னை ஆஸ்பிட்டலிலே சேர்த்து உன்னை இரண்டு நாளா பக்கத்துல இருந்து கவனிச்சுக்கிட்டேன். இரண்டு நாள் கழிச்சு அடுத்த நாள் காலையிலே உனக்கு டேப்ளேட்ஸ் வாங்கிட்டு திரும்பி உன் அறைக்கு வரும் போது நீ consciousness க்கு வந்து இருந்த. வைபவ் உன்னோட கையைப் பிடிச்சுக்கிட்டு உட்கார்ந்து இருந்தான். நான் எதுவும் பேசாம திரும்ப வந்துட்டேன் ஆதிரா.” என்று அவன் சொல்ல இவள் சோர்ந்துப் போய் கட்டிலில் அமர்ந்தாள். அவளது அருகே சென்று அமர்ந்தவன் அவள் உள்ளங்கையைப்  பற்றிக் கொண்டு தொடரந்தான்.

“வைபவ் பணம் இல்லாம தவிச்சுட்டு இருந்த அப்போ தான் நான் உன் முன்னாடி வந்து நின்னேன். முப்பது நாள் நிபந்தனைப் போட்டேன்.  என்னை நீ புரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டேன் ஆதிரா. இந்த முப்பது நாளிலே என் மேலே வைச்சு இருந்த வெறுப்பை அழிக்க ஆசைப்பட்டேன். நல்ல நினைவுகளை சேர்க்கணும்னு நினைச்சேன். அந்த நினைவுகளோட காலம் முழுக்க வாழணும்னு ஆசைப்பட்டேன். ஆனால் எக்காரணத்துக் கொண்டும் எந்த உண்மையும் உனக்குத் தெரிஞ்சுடக்கூடாது உன்னை உடைச்சுடக்கூடாதுனு நான் உறுதியோட இருந்தேன். நீ சந்தோஷமா இருக்கணும்னு தான் நான் மறைச்சேன். ஆனால் அது இவ்வளவு பெரிய குழப்பத்திற்கு காரணம் ஆகும்னு நான் எதிர்பார்க்கல. ” என்றவனது வார்த்தைகள் அவளை ஆச்சர்யத்தின் உச்சத்திற்கு கூட்டிச் சென்றது.

தன் காதலியை அடைவதற்காக சாகசம் செய்பவர்களின் மத்தியில் தன் காதலி சந்தோஷமாக இருக்க வேண்டும் என அவன் இத்தனை நாள் தன்னைத் தானே தீயில் இட்டுக் கொண்டு இருக்கின்றான்.

இவனது காதலிற்கு பதிலாக என்னால் என்னத் தர முடியும் என் காதலைத் தவிர்த்து.

இதற்கு மேலும் அந்த தீயில் அவன் தனியாக வெந்து சாகக்கூடாது என நினைத்தவள் தன் காதலைக் கொண்டு அவனை மீட்க நினைத்தாள்.

அந்த நேரம் பார்த்து வினய்யின் அலைபேசி அலறியது. எடுத்துப் பார்த்தான் விமல் தான்.

“ஒரு நிமிஷம் ஆதிரா.” என்று வெளியே சென்றவன் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தான்.

“டேய் மச்சான் வினய்.” என விமல் எதிர் முனையில் பேசினான்.

“என்ன நொண்ண மச்சான். மவனே நானும் பார்க்கிறேன் டா, எத்தனை நாள் என் கையிலே சிக்காம இந்த கொடைக்கானலை சுத்தப் போறேனு. செஞ்ச சத்தியத்தை மீறிட்டீயே டா பரதேசி. ஆதிரா கிட்டே எல்லா உண்மையும் ஏன் டா சொன்னே. அவள் குற்றவுணர்வுல எப்படி தவிச்சா தெரியுமா?”

“மச்சான் சத்தியமா நான் உண்மையை சொல்லல டா. கனியும் ஐஸ்வர்யாவும் தான் உண்மையை சொன்னாங்க. நான் சத்தியத்தை மீறவே இல்லைடா.”

“விவரம்டா நீ.  என்ன நேக்கா ப்ளான் போட்டு இருக்க விமலு நீ. சரி சரி வீட்டுக்கு வந்து தொலை உன்னை அடிக்க மாட்டேன். என் ஆதிரா இப்ப சரியாகிட்டா அதனாலே உன்னை சும்மா விடுறேன். வீட்டுக்கு வா டா பரதேசி. ” என்று புன்னகையுடன் சொல்ல “மச்சான் நான் மட்டும் தனியா வரல. கனியையும் கூட்டிக்கிட்டு வரேன். அவள் என் லவ்வை ஏத்துக்கிட்டா.. ” என்ற விமலின் வார்த்தேகளால் வினய்யிற்குள் சந்தோஷம் ஊற்றெடுத்தது.

“மச்சான் சூப்பர் சூப்பர் டா. ரெண்டு பேரும் ஜோடியா  வீட்டுக்கு வாங்க மச்சான்.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்துவிட்டு மீண்டும் ஆதிராவின் அறைக்குள் சென்றான்.

ஆதிராவோ அவனையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவள் கைகளில் வினய்யின் காதல் கடிதம் இருந்தது.

பல தடங்கல்கள் சிக்கல்கள் வருத்தங்கள் கோபங்கள் தாண்டி அவனது காதல் எழுத்துக்கள் அவள் இதயத்தை சென்று இன்று செதுக்கி இருந்தது.

இதுவரை ஆதிராவின் கண்களில் பரவி இருந்த அந்நிய பார்வையோ, சந்தேக பார்வையோ, நட்பு பார்வையோ, பரிதாப பார்வையோ குற்றவுணர்வு பார்வையோ இப்போது அவளது கண்களில் இல்லை.

கண்கள் முழுக்க காதல் பார்வை ஊறிக் கொண்டு இருந்தது.

  அந்த மின்வெட்டுப் பார்வை அதுவரை மரத்துப் போய் இருந்த வினய்யின் உள்ளத்தில் ஒரு பூவை பூக்க செய்வதாய்.

“வினய் எனக்கு காய்ச்சல் அடிக்கிறா மாதிரி இருக்கு” என்றாள் அவனை நோக்கி சோகமாக.

வினய் சட்டென அவளது அருகில் வந்து நெற்றியிலும் கழுத்திலும் தன் கையை வைத்து உடல்வெப்பநிலை பரிசோதித்துக் கொண்டு இருக்க அந்த கைகளை தன் உள்ளங்கைக்குள் பொத்திக் கொண்டவள் அவன் கண்களை காதலுடன் ஊடுறுவினாள்.

“எனக்கு காதல் காய்ச்சல் அடிக்குது வினய். இந்த காய்ச்சலுக்கு எனக்கு மருந்து நீ தர வேண்டாம் காலம் முழுக்க என் இதயத்திலே இந்த ஜீரம் அடிச்சுக்கிட்டே இருக்கணும். ”  என்று சொல்லியவள் நிறுத்தி ” அந்த சாதா காய்ச்சல் அடிக்கும் போது எல்லாம் நீ தான் காலம் முழுக்க எனக்கு மாத்திரை வாங்கி தரணும்.. ஓகே வா?” என்று  அவள் கேட்க வினய்யிற்கோ பறக்கும் உணர்வு.

பல நாட்கள் அவன் சுமந்து இருந்த அன்பு என்னும் கரு இன்று காதலாய் பிரசவித்த மகிழ்ச்சியில் பெரும் ஆசுவாசம்.

“கண்டிப்பா ஆதிரா.” என்று சொல்லியவன்  அவள் இடையை வளைத்து இறுக்கி அணைத்துக் கொள்ள அவன் கழுத்தை வளைத்து  அவளும் அவனது அணைப்பிற்குள் சரணடைந்தாள்.

இது காலத்திற்குமான காதல் சரணடைவு.

💐💐💐💐💐💐💐💐💐💐💐

வைபவ் சொன்ன எல்லாவற்றையும் கேட்டு ஐஸ்வர்யா அவனைக் கோபமாக முறைத்தாள்.

“அவள் நீ தான் எனக்கு ரத்தம் கொடுத்தியானு கேட்ட அப்போ நீயும் ஆமானு பூம் பூம் மாடு தலையாட்டி இருக்க அப்படி தானே?”என ஐஸ்வர்யா கேட்க வைபவ் பதில் பேச முடியாமல் தலையைக் குனிந்தான்.

“இப்படி பொய்யாலே கட்டின காதல் கண்டிப்பா இடிஞ்சு தான் போகும் வைபவ். எல்லா தப்பையும் நீ பண்ணிட்டு  அவளைத் திட்டி இருக்க. உன் காதல் மேலே இருந்த inferiority complex அவள் மேலே கோபத்தை ஏற்படுத்தி இருக்கு. உன் மேலே காமிக்க வேண்டிய அன்பை அவள் ஏஞ்சல் மேலே காமிச்ச அப்போ உனக்கு கோபம் வந்து இருக்கு. அதனாலே அவளைக் காயப்படுத்தி இருக்க… உன் இக்கட்டான சூழ்நிலையிலே இருந்து வெளியிலே வரதுக்காக அவளை உபயோகப்படுத்தி இருக்க. இப்படி எல்லாத் தப்பையும் நீ பண்ணிட்டு அவள் மேலே பழி போட்டு வந்து இருக்கியே டா பாவி.” என சொல்ல வைபவ் நிலை குலைந்தான்.

அவனுக்கு இது காதல் இல்லை என்பது புரிந்ததது.

வெறும் பொய்யை சொல்லி அடுக்கிய அடுக்குமாளிகையில் இவ்வளவு நாள் காதல் என்ற பெயரில் வசித்து இருக்கிறோம் என்பதும் புரிந்தது.

ஆதிராவின் மீது அள்ளித் தெளித்து வந்த அமில வார்த்தைகள் இப்போது அவனது இதயத்தை சுட்டு எரித்தது.

ஐஸ்வர்யாவின் கைகளைப் பற்றியவன்  “நான் ஆதிராவைப் பார்த்து மன்னிப்பு கேட்கணும் ” என்றான் கலங்கியக் குரலில்.

முன்பு தான் எப்படி இருந்தோமோ அப்படியே தான் இந்த வைபவ் இருக்கின்றான்.

முன்கோபத்தில் எல்லாவற்றையும் பேசிவிட்டு பிறகு வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றான்.

அவன் மீது உண்டாகிய பரிதாபத்தினால்  “சரி ” என்று அவள்  சொல்ல அவன் கண்கள் அவளுக்கு நன்றி உரைத்தது.

அவனை அழைத்துக் கொண்டு கொடைக்கானலுக்கு கிளம்பினாள் அவள்.