காதல் சதிராட்டம் – 6
காதல் சதிராட்டம் – 6
சூரியனின் கதிர்கள் மெது மெதுவாக பூமியில் பரவத் தொடங்கி இருந்தது. அவனின் கதிர் பட்டு தாமரை சிலிர்த்து மலர்ந்தது.புல்லின் மீது கிடந்த பனித்துளிகள் வேக வேகமாய் வேரில் சென்று ஒளிந்துக் கொண்டன. பறவையினங்கள் துயில் கலைந்து வானில் நீந்திக் கொண்டு இருந்தது.
இப்படி பூமியே சூரியனின் வருகையில் தன்னை மாற்றிக் கொண்டு இருக்க எந்த மாற்றமும் இல்லாமல் உறங்கிக் கொண்டு இருந்தாள் ஆதிரா.
அங்கு வீசிய குளிர்காற்று அவளைத் தாலாட்டு பாடாமலேயே ஆழ்ந்த உறக்கத்திற்கு இழுத்து சென்று இருந்தது.திடீரென அந்த உறக்கத்தை கலைக்கும் அபஸ்வரமாய் சிணுங்கியது தொலைபேசி.
நல்ல தூக்கத்தை யார் கெடுக்கப் பார்க்கிறார்கள் என்ற கோபத்துடனும் சலிப்புடனும் கட்டிலின் மீது உருண்டாள்.ஐந்து முறை உருண்டபிறகு அவள் எதிர்பார்த்த அந்த போன் ரீசிவர் கையில் கிடைத்தது.அதை எடுத்து காதில் வைத்தவள் யாரது என்றாள் சலிப்புடனும் கோபத்துடனும்.
” என்ன ஆதிரா. என் கிட்டே பேச கூட இப்போ பிடிக்கலையா??. இவ்வளவு சலிப்பா பேசுற?? என்ற வைபவ்வின் குரல் அவளை சட்டென்று சிலிர்த்து எழுந்து உட்கார வைத்தது.
” சாரி வைபவ்.நல்லா தூங்கிட்டு இருந்தேனா அதான் கால் வரவும் கோபத்துல யாரதுனு கேட்டுட்டேன். சரி நீ எப்படி இருக்க வைபவ்? “
” எப்படி ஆதிரா உனக்கு நிம்மதியா தூக்கம் வருது. நான் உன்னை நினைச்சு எப்படி தவிச்சுட்டு இருக்கேன் தெரியுமா?உனக்கு கொஞ்சம் கூட என்னைப் பத்தின நினைப்பே இல்லையா?எந்த கவலையும் இல்லாம இப்படி தூங்கிட்டு இருக்கே?”
என்ற அவனது கேள்வி அவள் மனதை சுருக்கென்று தைத்தது…
” இல்லை வைபவ்.நேத்து லேட்டா தான் தூங்குனேன்.அதான் காலையிலே சீக்கிரமா எழுந்துக்க முடியல.” என்றாள் சோகம் நிறைந்த குரலில்..
” ஓஹோ அவனும் நீயும் நைட்டு ரொம்ப நேரமா பேசிட்டு அப்புறம் தான் தூங்குனீங்களா?? நான் தான் பைத்தியம் மாதிரி உன்னை நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டு இருக்கேன் போல. போ போய் நீ அவன் கூடவே பேசு. ” என்ற அவனது குத்தல் பேச்சு கேட்டு அவள் தொண்டை அடைத்தது.பதில் சொல்ல நினைக்கும் முன்பே கோபமாக ரீசிவரை வைத்துவிட்டு சென்றுவிட்டான் அவன்.
அவனது இந்த செயலும் அவனுடைய அந்த வார்த்தைகளும் அவள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது கூடவே கோபத்தையும். கையில் இருந்த ரீசிவரை விசிறி அடித்தாள். அது சுவற்றில் பட்டு நொருங்கிப் போனது, அவளுடைய மனதைப் போல.
” ஏன் வைபவ் இப்படி பேசுன? உனக்காக தானே நான் இந்த கன்டிஷன்க்கு ஒத்துக்கிட்டேன். உனக்காக தானே எனக்கு பிடிக்காதவன் கூட வந்து தங்கி இருக்கேன். நீ ஏன் என்னைப் புரிஞ்சுக்காம இப்படி பேசுன.ஏன் வைபவ்? ” என்று கதறி அழுதுக் கொண்டு இருந்த நேரம் அவளது அறைக் கதவு தட்டப்பட்டது
சட்டென கன்னங்களில் வழிந்து கொண்டு இருந்த கண்ணீரை துடைத்தாள் குரலில் இயல்பை வரவழைத்துக் கொண்டவள் ” யாரது?” என்றாள் சப்தமாக.
” நான் தான் அண்ணி உத்ரா வந்து இருக்கேன். மணி பத்தாச்சு.சாப்பிட்டு வந்து ரெஸ்ட் எடுங்க.”
” ஓகே உத்ரா.ஒரு ஃபைவ் மினிட்ஸ் ப்ரெஷ் ஆகிட்டு வந்துடுறேன். “
” ஓகே அண்ணி. ” என்று உத்ரா சொல்லிவிட்டு கிளம்ப வேகமாக கட்டிலில் இருந்து எழுந்தாள். அணிந்து கொள்ள தன் உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்றவள் பத்து நிமிடத்தில் கிளம்பிவிட்டு கீழே வந்தாள்.
அங்கே டைனிங் டேபிளில் எல்லோரும் சாப்பிடாமல் அவளுக்காக காத்துக் கொண்டு இருக்க அவள் மனதை குற்ற உணர்ச்சி பின்னியது.
” நீங்க சாப்பிட்டு இருக்கலாம்ல ஏன் எனக்காக காத்துக்கிட்டு இருந்தீங்க. ” என்றாள் தயக்கமான குரலில்.
“அட அண்ணி எதுக்கு நீங்க இப்படி வருத்தப்படுறீங்க? எல்லாரும் ஒன்னா சேர்ந்து சாப்பிடுறது தான் எங்களோட வழக்கம்.நீங்க தயங்காம வந்து உட்காருங்க.” என்று ப்ரணவ் சொல்ல அவனைப் பார்த்து நட்புடன் புன்னகைத்தபடியே அமர்ந்தாள்
” அண்ணி உங்களுக்கு நான் இன்னொரு சீக்ரெட் சொல்லட்டுமா? ” என்று உத்ரா சீரியசாக கேட்டாள்.
” என்ன சீக்ரெட் உத்ரா. ” என்று ஆதிரா அவளை விட சீரியசாக கேட்டாள்.
” நாங்க ஏன் தெரியுமா அண்ணி எல்லாரும் ஒன்னா சேர்ந்து சாப்பிடுறோம்.”
” ஏன் உத்ரா?”
” ஏன்னா இதோ எதிர்ல உட்கார்ந்துட்டு இருக்கானே அந்த தீவெட்டி தலையன் ப்ரணவ், அவன் மொத்த ஐட்டத்தையும் ஒரே முழுங்குல முழுங்கிடுவான். அதை தடுக்குறதுக்காக தான் எல்லோரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிடணும்னு ஒரு ரூல் கொண்டு வந்தோம்… ” என்று சொல்லிவிட்டு உத்ரா சிரிக்க வினய்யும் ஆதிராவும் அந்த சிரிப்பில் இணைந்து கொண்டனர்…
உத்ராவைக் கொலை வெறியோடு முறைத்த ப்ரணவ் அவளை அடிக்க வேகமாக எழுந்து கொள்ள முற்பட்ட போது வினய் கை நீட்டி அவனைத் தடுத்தான்…
” என்னை தடுக்காதீங்க வினய் அண்ணா.. அவளை இன்னைக்கு ஒரு வழி பண்ணாம விட மாட்டேன்… “
” உங்க சண்டையை சாப்பிட்ட அப்புறம் கன்டினியூ பண்ணுங்க. இப்போ அமைதியா சாப்பிடுங்க ” என்ற வினய்யின் கண்டிப்பு குரல் அவனை அமைதிப்படுத்தியது…
” உங்க வார்த்தைக்கு கட்டுப்படுறதாலே அவளை அடிக்காம இந்த வாட்டி விட்டுடுறேன் அண்ணா ”
என்று வயிற்றை தடவியபடியே அவசர அவசரமாக பாத்திரத்தை உருட்டினான்.
“அண்ணா அந்த ப்ரணவ்வை நம்பாதே.அவன் உன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு ஒன்னும் என்னை அடிக்காம விடல.அவன் வயித்துக்கு கட்டுப்பட்டு தான் என்னை அடிக்கல.” என்று சொன்ன உத்ராவை முறைத்தபடியே குழம்பை எடுத்து ஊற்றி சாப்பிட ஆரம்பித்தான் ப்ரணவ்.தனக்கு சோறு தான் முக்கியம் என்பதைப் போல.
” நீங்க ரெண்டு பேரும் எப்போ தான் வளரப் போறீங்களோ.” என்று சிரித்தபடியே வினய் சாப்பிட துவங்க ஆதிராவோ சாப்பாட்டை அளந்துக் கொண்டு இருந்தாள்.
” ஆதிரா ஐ திங்க் உன் தட்டுல எழுனூத்து இருபத்தைஞ்சு சோத்துப் பருக்கை இருக்குனு நினைக்கிறேன். ” என்ற சொன்ன வினய்யை புரியாமல் கேள்வியுடன் பார்த்தாள்.
” இல்லை தனியா சாப்பாட்டை எண்ணிட்டு இருக்கியே.. அதான் உனக்கு ஹெல்ப் பண்ணலாம்னு. ” என்று வினய் இழுக்க
” எனக்கு எந்த ஹெல்ப்பும் வேண்டாம் ” என்று கோபத்துடன் சொன்னவள் வேகமாக சாப்பிட ஆரம்பித்தாள்.
அவள் சாப்பிடுவதையே கண்களில் புன்னகையுடன் பார்த்தவன் ஒரு நீண்ட பெருமூச்சுடன் தானும் சாப்பிட ஆரம்பித்தான்.
ஆதிரா வேகமாக சாப்பிட்டுவிட்டு தட்டை எடுத்துக் கொண்டு சமையலறைக்கு நோக்கி சென்றாள். உடனே வினய்யும் வேக வேகமாக தன் தட்டை எடுத்துக் கொண்டு சமையலறைக்கு செல்ல எத்தனித்தான்…
” அண்ணா நீங்க முழுசா சாப்பிடல.” என்று உத்ரா வினய்யின் சாப்பிடாத தட்டை பார்த்து சொல்ல வர ப்ரணவ் அவளைக் கண்களாலேயே பேசாதே என சொல்லி ஜாடை செய்தான். வினய் வேகமாக உத்ராவை நோக்கி சென்றுவிட உத்ரா கேள்வியாக ப்ரணவ்வைப் பார்த்தாள்.
” டேய் அண்ணா பாதி கூட சாப்பிட்டு முடிக்கல. அதுக்குள்ளே எழுந்து போயிட்டாங்க. நான் தடுக்க நினைச்ச அப்போ நீ ஏன் என்னை பேச விடாம தடுத்த??”
” எனக்கு அண்ணாவோட வயிறு நிறையுறதை விட மனசு நிறையுறது தான் முக்கியம்.”
” எனக்கு புரியல ப்ரணவ்.. “
” விம் பார் போட்டு விளக்காம உனக்கு எனக்கு தான் புரிஞ்சு இருக்கோ??” என்று சலித்துக் கொண்டவன் ” ஹே லூசு அண்ணா , அண்ணி கூட பேச தான் இவ்வளவு வேகமா போனாங்க.இப்போ புரியுதா??”
” ஹான் புரியுது புரியுது நல்லா புரியுது… ” என்று வேகமாக தலையை ஆட்டினாள் உத்ரா…
” இப்பவாவது உனக்கு புரிஞ்சுதே சந்தோஷம். ” என்று சாப்பிட ஆரம்பித்தவனை புன்னகையுடன் ஏறிட்டாள்…
” எனக்கு எப்படி ப்ரணவ் இந்த காதல் சமாச்சரம்லாம் புரியும்??.. நான் என்ன உன்னை மாதிரி லவ்ல expert ஆ??.ஆமாம் உன் ஆளு வைஷாலி எப்படி இருக்கா??”
” அவளுக்கு என்ன பேஷா இருக்கா.ஆமாம் நீ ஏன் உத்ரா இன்னும் காதலிக்கல??… “
” எனக்கு இன்னும் யாரைப் பார்த்தும் காதல்ன்ற ஃபீல் வந்ததே இல்லை ப்ரணவ்.”
” நான் வேணும்னா ஒரு ஐடியா சொல்லட்டுமா டி??”
” என்ன ஐடியா டா?”
” நீ வேணும்னா பேசாம வைபவ்வை காதலியேன். அப்படி நீ பண்ணா நம்ம வினய் அண்ணா ரூட்டு கிளியர் ஆகிடும். ” என்று விளையாட்டாக சொல்லிவிட்டு ப்ரணவ் சிரிக்க உத்ராவோ சீரியசாக யோசித்தாள். அவளது தீவிரமான முகபாவனையைக் கண்டு ப்ரணவ் அதிர்ந்தான்.
” ஹே என்னடி ஆச்சு??”
” நான் முடிவு பண்ணிட்டேன் ப்ரணவ் , வைபவ்வை காதலிக்கலாம்னு. “
” ஹே லூசு நான் சும்மா சொன்னேன்டி. “
” ஆனால் நான் சீரியசா சொல்றேன் ப்ரணவ். தேங்க்ஸ்டா எனக்கு இப்படி ஒரு ஐடியா கொடுத்ததுக்கு.” என்று அவனுடைய கன்னத்தை செல்லமாக கிள்ளவிட்டு துள்ளிக்குதித்து சென்றவளை திகிலோடு பார்த்தான் ப்ரணவ்.
அங்கே சமையலறையில்,
பாத்திரத்தை வைத்துவிட்டு ஆதிரா திரும்பிய அதே நேரம் பாத்திரத்தை வைக்க வினய் வந்தான். இருவரும் ஒரு நிமிடம் சுதாரிக்கவில்லை என்றால் இடித்துக் கொண்டு இருந்து இருப்பார்கள். வேகமாக நகர்ந்த ஆதிரா வினய்யை முறைக்க அவனோ அவளது முறைப்பை சிரிப்புடன் ரசித்தான்.
” இப்படி தான் திடீர்னு முன்னாடி வந்து பயமுறுத்துவீங்களா??”
” இப்படி தான் திடீர்னு பின்னாடி திரும்பி பயமுறுத்துவியா ஆதிரா?” என்று வினய் கேட்க இருவரது கேள்வியும் இப்போது ஒரே எடையில் நின்றது.அவனை மீண்டும் முறைத்துவிட்டு முன்னே நகர முயன்றவளை ஒரு நிமிஷம் என்றவனின் வார்த்தை தடுத்து நிறுத்தியது.
வேகமாக திரும்பி என்னவென்று கண்களாலேயே கேட்டபடி நின்றாள்.
” என்ன ஆச்சு ஆதிரா உனக்கு??” என்றான் வருத்தமாக.
” எனக்கு என்ன ஆச்சு??நான் நல்லா தான் இருக்கேன். “
” இல்லை ஆதிரா பொய் சொல்ற.உன் கன்னத்துல அழுத தடம் மறைஞ்சு இருக்கு. உன் கண்ணுல சிரிப்பு இல்லை.அழுதியா ஆதிரா??” என்று அழுத்தமாக கேட்டான்.அவளிடம் பதில் இல்லை.
” என்ன ஆச்சு ஆதிரா??ஏன் அழுதே. உன் அழுகைக்கு என்ன காரணம்??”
” நீ தான் காரணம். நீ போட்ட கன்டிஷன் தான் காரணம். ” என்று அவனை நோக்கி எரிச்சலாக கத்திவிட்டு அங்கே இருந்து வேக வேகமாக நகரந்தவளை கண்களில் கண்ணீரோடு பார்த்தான். அவள் கண்ணீருக்கு தான் தான் காரணம் என்று தோன்றிய இயலாமையில் கையில் இருந்த தட்டை கோபத்தில் விசிறி அடிக்க அதே கீழே தரையில் விழுந்து பல துண்டுகளாக உடைந்தது, அவனது மனதைப் போல.
வாடிய மலர் வாசத்திற்காக
ஏங்குவதைப் போல
உன் பாசத்திற்காக
ஏங்குகிறேன் நான்…