காதல் சதிராட்டம் – 7

காதல் சதிராட்டம் – 7

தரையில் சிதறிக் கிடந்த அந்த தட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தான் வினய்.

அவன் கண்களில் அவளை வருத்தியதன் விளைவாய் துளிர்த்து எழுந்தது கண்ணீர்.

” சாரி ஆதிரா.நான் உன்னை கஷ்டப்படுத்தணும்னு நினைக்கல.என் காதலை உனக்கு புரிய வைக்கணும்னு தான் முயற்சி பண்றேன்.ஆனால் என்னை புரிஞ்சுக்காம இப்படி உன்னையும் வருத்திக்கிட்டு என்னையும் வருத்துறீயே ஆதிரா ” என்று அவன் இலக்கில்லாமல் எங்கேயோ பார்த்து யோசித்துக் கொண்டு இருந்த நேரம் சாப்பிட்ட தட்டை வைக்க ப்ரணவ் உள்ளே நுழைந்தான்.

கீழே சிதறிக் கிடந்த தட்டையும் வாடிப் போன வினய் முகத்தையும் மாற்றி மாற்றி பார்த்தவன் பதறிப் போய் வினய்யின் தோளில் கை வைத்தான்.

அவன் கரங்கள் தோளைத் தொட்டதும் சட்டென திரும்பினான் வினய்.அவனது கண்களில் துளிர்த்து இருந்த கண்ணீர் ப்ரணவ்வை உலுக்கிப் பார்த்தது.

” அண்ணா என்ன ஆச்சு??.நீங்க இப்படி கண் கலங்கி நான் பார்த்ததே இல்லையே.என்ன அண்ணா ஆச்சு.” என்று கேட்டவனின் வார்த்தைகளில் பதற்றத்தின் தடம் பதிந்து இருந்தது.

” நான் எந்த முடிவு எடுத்த அப்புறமும் இது சரியா தப்பானு இதுவரை யோசிச்சது இல்லை டா.ஆனால் ஆதிரா கிட்டே அக்ரிமெண்ட்ல கையெழுத்து வாங்குன முடிவு தப்போனு எனக்கு தோணுது டா ப்ரணவ். அவள் மனசை நானே காயப்படுத்திட்டேன் ” என்று உடைந்த குரலில் பேசிய வினய்யை சட்டென இறுக கட்டி அணைத்துக் கொண்டான் ப்ரணவ்.

” அண்ணா நீங்க எடுத்த முடிவு சரியானது. உங்களுக்கு இதுக்கு முன்னாடி கிடைக்காத அந்த வாய்ப்பை இப்போ உருவாக்கி இருக்கீங்க.அந்த வாய்ப்புல நீங்க உங்களோட காதலை உணர்த்த தான் பார்க்கிறீங்களே தவிர அண்ணியை கட்டாயப்படுத்தப் பார்க்கல.இதுல நூறு சதவீதம் தப்பே இல்லை அண்ணா.. நீங்க எதுவும் கவலைப்படாதீங்க.உங்களுக்கு கிடைச்சு இருக்க இந்த முப்பது நாட்களிலே உங்களோட மொத்த காதலையும் உணர்த்திடுங்க. ஆனால் இறுதி முடிவு அண்ணி கையிலே தான். சோ தப்பு பண்ணிட்டோமேனு இப்படி உடைஞ்சு போய் உட்கார்ந்து உங்களுக்கு கிடைச்ச இந்த நாட்களை வீணாக்காதீங்க. சீக்கிரமா எழுந்துடுங்க.போங்க போய் அண்ணி கிட்டே உங்க மனசுல கொட்டி கிடக்கிற காதலை எல்லாம் காட்டுங்க. ” என்று ப்ரணவ் சொல்ல வினய் முகம் தெளிவானது… மனதில் அழுந்திக் கிடந்த பாரம் மெதுவாய் வெளியேறி புத்துணர்ச்சி அடைந்ததைப் போல் உணர்ந்தான்.

” தேங்க்ஸ்டா தம்பி.” என்று ப்ரணவ்வை கட்டி அணைத்தவன் நேராக மாடிப்படியின் கீழ் சென்று நின்றான்.

” ஆதிரா… ” என்று அழைத்தான் சப்தமாக…

அவனது சப்தத்தைக் கேட்டு தன் அறையில் இருந்து வெளியே வந்து நின்று கீழேப் பார்த்தாள் ஆதிரா.மாடிப்படியின் தொடக்கத்தில் கால் வைக்காமல் வினய் நின்றுக் கொண்டு இருந்தான்.

அவன் ஏன் மேலே வரவில்லை என்ற யோசனையுடன் அவனைப் பார்த்தவளுக்கு நேற்று அவன் சொன்ன வார்த்தை நியாபகம் வந்தது.

“ஓஹோ  மாடிப்படியை தாண்ட மாட்டேன் என்று போலியாய் என்னைக் கவர்வதற்காக சொன்ன அந்த வாக்கை காப்பாற்றுவதைப் போல் நடிக்கிறான் போல. பார்க்கலாம் எவ்வளவு நாட்கள் இந்த போலி வாக்கை காப்பாற்றுகிறான் என்று ” என்ற யோசித்த படி நின்றுக் கொண்டு இருந்தவளை நோக்கி மீண்டும் ஆதிரா என்று அழைத்தான்.சிந்தனை கலைந்து அவனைப் பார்த்தாள்…

” ஆதிரா சீக்கிரமா கிளம்பி ரெடியா இரு.நாம தலையார் அருவிக்கு போறோம் “

” ஹலோ மிஸ்டர் வினய்… என்ன நீங்க பாட்டுக்கு வந்து ஆர்டர் போட்டுட்டு இருக்கீங்க??  என்னாலே எங்கேயும் வர முடியாது. ” என்று வேகமாக சொல்லிவிட்டு செல்ல முயன்றவளை மீண்டும் வினய் ஆதிரா என்று பெயர் சொல்லி தடுத்தான்…

” ஆதிரா நீ உன் வாக்கை மீறுறே.. “

” நான் எந்த வாக்கையும் மீறல… உங்க கிட்டே அக்ரிமென்ட்ல சைன் போட்டா மாதிரி தானே இங்கே உங்க கூட இருக்கேன்.. இதை தவிர்த்து நான் எந்த வாக்கை மீறுனேன்???.”

” அதே அக்ரீமென்ட்ல தான்.கொடைக்கானலிலே இருக்கிற சுற்றுலாத்தளங்களுக்கு சுத்திப் பார்க்க  மறுக்காம சம்மதம் சொல்லணும்னு எழுதி இருந்தது.” என்று வினய் அவளை மடக்க ஆதிரா கோபத்தில் தலையில் அடித்துக் கொண்டாள்.

அந்த அக்ரிமெண்ட்டின் முதல் வார்த்தையைப் பார்த்து கோபமாக அவனிடம் சண்டைப் போட வந்தவள் அடுத்து இருந்த வாக்கியங்களைப் படிக்க மறந்தே போய் இருந்தாள். வைபவ் அவளை இந்த அக்ரிமெண்ட்டிற்கு சம்மதம் சொல்ல சொல்லவும் மறு யோசனையின்றி வினய்யின் அக்ரிமெண்டில்  கையெழுத்துவிட்டாள்.
அந்த அக்ரிமெண்ட்டை முழுவதாக படிக்காமல் விட்டது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது தான் உணர்ந்தாள்.

இன்னும் அந்த அக்ரிமெண்ட்டில் இதைப் போல இன்னும் எத்தனை சூழ்ச்சிப் பின்னல்கள் இருக்கும் என்று தெரியவில்லையே. எல்லாம் விதி என்று தலையில் அடித்து கொண்டவள்  ,,, ஆக இவனை  எதிர்த்து இப்போது எதுவும் பேச முடியா. இவன் கூப்பிடும் எல்லா இடத்திற்கும் சென்று தான் ஆக வேண்டும். மறுக்கவே முடியாதா?? என்று கையறு நிலையில் எதுவும் பேசாமல் அப்படியே நின்றுவிட்டாள் ஆதிரா.

அவளது அமைதியைப் பார்த்து புன்னகை பூத்தவன்” கெட் ரெடி ஆதி மா… ” என்று  வினய்  சொல்லிவிட்டு போக அவனது திமிரை தன்னால் அடக்க முடியவில்லையே  இப்படி பணிந்து போகும்படி ஆகிவிட்டதே என்ற கோபத்தில் கதவை அறைந்து சாத்திவிட்டு உள்ளே சென்றாள் ஆதிரா.

கோபமாக சாத்தப்பட்ட கதவையே சிரிப்புடன் பார்த்தவன் ” என் கோவக்காரி. ” என்றான் காதலுடன்…

கதவை சாத்திவிட்டு அதில் அப்படியே அமைதியாக இரண்டு நிமிடம் சாய்ந்து நின்றவள் ஒரு பெருமூச்சுவிட்டப்படி தயாராக தொடங்கினாள்…

லாவண்டர் கலர் உடை அணிந்து கண்ணாடி முன் நின்றவள் வழக்கமாக தன் கண்களில் தீட்டும் காஜலை விழியோரம் கொண்டு சென்றாள்…

அந்த கண்ணாடி என்ன தவம் செய்ததோ.. வெண்ணிலவை தன்னுள் வாங்கி  பிரதிபலிக்கும் வரம் பெற்றுவிட்டதைப் போல அவள் முகத்தை பிரதிபலித்து தன் பிறவிப் பலனை அடைந்து கொண்டு இருந்தது… கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தை உற்றுப் பார்த்தவள் மனதினிலோ ஒரு வித விரக்தி.

இந்த அழகு…  இந்த அழகைப் பார்த்து தானே இவன் காதலிக்கிறேன் என்று சொல்லி என்னை இப்படி  தொல்லை செய்கிறான்.இந்த அழகு இல்லை என்றால், இல்லை அது  குறைந்துப் போய் விட்டால் கண்டிப்பாக அவனும் அவன் காதலும் என்னை விட்டு ஓடிவிடும் என்ற எண்ணம் தோன்ற சட்டென கைகளை இறக்கினாள்.

கண்களில் மைத்தீட்டவில்லை. முகத்தை மேலும் பிரகாசிக்க வைக்க பவுடர் போடவில்லை.

கழுத்தில் எப்போதும் வீற்று இருக்கும் அந்த செயினை கழட்டி வைத்தாள்.காதுகளில் தொங்கிக் கொண்டு இருந்த ஜிமிக்கியை கழட்டி ஓரமாக வைத்தவள் நட்சத்திரக் கீற்றுப் போல சிறிய கம்மலை காதினில் அணிந்து கீழே இறங்கி வந்தாள்.

அவளுக்காக படிகளின் தொடக்கத்திலேயே காத்துக் கொண்டு இருந்தான் வினய்.

இறங்கி வந்த ஆதிராவை ஒரு வித திணறலான பார்வையில் பார்த்துக் கொண்டு இருந்தான்…

அவனுடைய திணறல் பார்வை அவளுள் சிரிப்பை மூட்டியது…

என்னுடைய அழகு குறைந்துவிட்டதை எண்ணி எப்படி திணறுகிறான் பார். இன்னும் இவனை இப்படி பல முறை திணறடித்து என்னை விட்டு ஓட வைக்க வேண்டும் என்று தன் மனதினிடம் சொல்லியபடி கீழே இறங்கி வந்தாள்.

அவள் அவனுக்கு நேராக வந்து நிற்கவும் சட்டென தன் இயல்புக்கு வந்தவன் காரை நோக்கி நடக்க ஆதிரா அவனைப் பின்தொடர்ந்தாள்.

நடந்தவளின் கால்களை சட்டென ஒரு கல் இடையிட்டு தடுமாற வைக்கப் பார்க்க அவள் லேசாக தடுமாறி விழப் பார்த்தாள்.அதை வினய்யும் கவனித்துவிட்டான்.அவளை விழாமல் பிடிக்க நீண்ட கைகளை சட்டென மூளை தடுத்தது.

எக்காரணம் கொண்டும் உன் கை என் மீதுக் கூடப் படாது, இங்கு இருக்கும் நாட்களில் உன்னை தொட மாட்டேன் என்று அவன் அவளுக்கு கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது.

நொடிப் பொழுதில் அவளை நோக்கி நீண்ட தன் கைகளை இழுத்துக் கொண்டான்.

கீழே விழுந்துக் கிடந்த  அவளுடைய துப்பட்டாவை எடுத்தவன் சட்டென அவள் இடையை சுற்றி வீசினான்.

துப்பட்டா அவள் இடையை சுற்றி அணைக் கட்ட வில்லாய் வளைந்து விழப் போனவளை முன்னோக்கி துப்பட்டாவால் இழுத்தான்.

அவன் இழுத்த வேகத்தில் அவளது உடல் வேகமாக நிமிர்ந்து அவனை நோக்கி வந்தது.

இருவருக்கும் இடையில் இரண்டே சென்டிமீட்டர் இடைவெளி தான்.

அவள் பதற்றத்தில் மூச்சைப் பெரியதாக விட அவளது மூச்சுக்காற்று வினய்யைக் குடைந்து எடுத்தது.

இருவரும் மூச்சு வாங்க இருவரை இருவர் பார்த்துக் கொண்டு அப்படியே நின்றனர்.

அதிர்ச்சியில் இருந்து ஆதிரா இன்னும் மீளவில்லை என்பதை உணர்ந்தவன் முயன்று தன் குரலை வரவழைத்துக் கொண்டு ” ஆதிரா ஆர் யூ ஓகே??” என்றான்.

சட்டென்று தன் இயல்புக்கு வந்தவள் வேக வேகமாக அப்போது தான் நடந்ததை உணர்ந்தாள். அவன் அருகே ஒட்டி நின்றாலும் தொடாமல் நிற்பதை பார்த்தவள்  வேக வேகமாக அவனை விட்டு விலகினாள்.

அவன் கைகளில் அவளுடைய துப்பட்டாவின் கடைசி துணி கிடந்தது. மீது துப்பட்டாவின் பாகம் எல்லாம் அவளுடைய இடையில் வீற்று இருந்தது. அவளுக்கு துப்பட்டாவை தர வேண்டும் என்பதற்காக  அவன் துப்பட்டாவின் இறுதி முனையைப் பிடித்து சுற்றினான்.அவளும் நிலை கொள்ளாமல் சுற்ற ஆரம்பிக்க துப்பட்டா கொஞ்சம் கொஞ்சமாக அவளை விட்டு விலகி அவன் கையில் வந்தது.அவன் ஒவ்வொரு சுற்று சுற்றும் போதும் அவள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அவனை நோக்கி நகர்ந்து வந்தாள்.

அவள் இடையில் இருந்த துப்பட்டா மொத்தமாக வினய்யின் கைகளில் வர ஆதிராவும் இப்போது அவன் அருகில் வந்துவிட்டு இருந்தாள். இருவரது கண்களும் மீண்டும் சந்தித்துக் கொண்டது.

அவள் கண்களில் இருந்த தீப்பொறி வினய்யின் இதயத்தில் மொத்தமாக காதலைப்  பற்ற வைத்தது.

சிதறிப் போன இதயத்தோடு அவளைப் பார்த்துக் கொண்டு இருந்த நேரம் அவன் கையில் இருந்த துப்பட்டாவை எடுத்து தோளில் போட்டவள் காரினில் சென்று அமர்ந்தாள்.

ஓரிரு நிமிடம் அப்படியே மோன நிலையில் நின்றவன் ஒரு பெருமூச்சுடன் காரை சுற்றிக் கொண்டு இன்னொரு பக்கத்தில் அமர்ந்தான்.

வந்து அமர்ந்தவன் எதுவும் பேசவில்லை… காரையும் எடுக்கவில்லை.கேள்வியாக அவனைப் பார்த்தாள். அவனும் கேள்வியாக  புருவத்தை உயர்த்தினான்.

” காரை எடுக்கிறதா உத்தேசம் இல்லையா??”

” உத்தேசம் இருக்கு தான். ஆனால் ப்ரணவ்வும் உத்ராவும் வந்த அப்புறம். ” என்று சொல்ல அப்போது தான் ஆதிராவின் மனதினில் இருந்த பெரிய பாரமே குறைந்தது.

ஆக இவனுடன் தனியாக செல்ல வேண்டியதில்லை  என்ற எண்ணம் அவளது உதட்டில் சிரிப்பை வரவழைத்தது.

அந்த சிரிப்பை பார்த்தவன் அவள் மனதைப் படித்தைப் போல ” இந்த ராட்சஷன் கிட்டே தனியா மாட்டிக்கலேனு நினைச்சு சிரிக்கிறா மாதிரி இருக்கு. ” என்றான் ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தபடி.

அவனைக் கூர்ந்துப் பார்த்தவள் ” கிட்டத்தட்ட அதே தான்” என்று சொல்லி முடித்த அதே நொடி ப்ரணவ்வும் உத்ராவும் காரில் வந்து அமர்ந்தனர்.

” அண்ணா நான் லேட் பண்ணல.. இதோ இங்கே உட்கார்ந்துட்டு இருக்கே ஒரு காட்டேறி… இவள் தான் அண்ணா மேக்கப் போடுறேனு டைம் எடுத்துக்கிட்டா. “

” ஐயோ அண்ணா அவனை நம்பாதே.இதோ இந்த எருமைமாட்டுப் பையன் தான், இந்த சென்ட் போட்டா பொண்ணுங்கலாம் என்னை திரும்பி பார்ப்பாங்களா??. இல்லை அந்த சென்ட் போட்டா பொண்ணுங்க வந்து ஹாய் ஹாண்ட்ஸம் சொல்லுவாங்களானு.Smell test வெச்சு என்னை பாடாப்படுத்தி எடுத்திட்டான். ” என்று இருவரும் புகார் பத்திரிக்கை வாசிக்க வினய் சின்ன சிரிப்புடன் காரை தலையாறு அருவி நோக்கிவிடத் தொடங்கினான்…

Leave a Reply

error: Content is protected !!