காதல் தீண்டவே- 23
காதல் தீண்டவே- 23
சில நேரங்களில் அப்படி தான் காற்றில் எந்தவித கவலையும் இல்லாமல் பறந்து கொண்டிருக்கும் லேசான பஞ்சு, திடீரென நீரில் விழுந்து கனத்துப் போகும்.
அப்படி தான் மிதுராவின் மிருதுவான இதயம் இன்று கனமாகிப் போயிருந்தது.
அவளுக்கு கட்டிலிலிருந்து எழுந்து கொள்ளவே பிடிக்கவில்லை…
இருந்தாலும் உலகை எதிர்கொள்ள வேண்டுமே!
எழுந்து கொண்டாள்.
அவளுக்கு அலுவலகத்திற்கு செல்லவே விருப்பமில்லை…
இருந்தாலும் தீரனை நேரில் சென்று சந்திக்க வேண்டுமே!
‘ஏன் என்னை வேண்டாம் என்றாய்?’ என்ற கேள்வியை கேட்கவே பிடிக்கவில்லை தான்.
இருந்தாலும் கேட்க வேண்டுமே!
காரணமே தெரியாமல் நிராகரிக்கப்படும் வேதனையை தாங்கிக் கொள்ள முடியவில்லையே!
அவனை நேரில் சந்திக்க தயாராகிவிட்டாள்.
சோர்வு பொதிந்த முகத்துடன் கிளம்பி வெளியே வந்தவளின் கால்கள் எதிரே கண்ட காட்சியை கண்டு அப்படியே நின்றுவிட்டது.
“ஆல் தி பெஸ்ட் அதிதி”
குண்டு குண்டு எழுத்துக்களில் மிதுராவிற்கு தந்ததைப் போலவே ஒரு செய்தித்தாளைப் பிடித்துக் கொண்டு விஸ்வம் நின்றிருந்தார்.
அவளுக்கு மட்டுமே என நினைத்திருந்த ப்ரத்யேக அன்பு இப்போது பங்கிடப்பட்டுவிட்டது. விரக்தியில் விதிர்த்தது மிதுராவின் முகம்.
அந்த செய்தித்தாளை நிமிடத்திற்கு ஒரு முறை விரித்து படித்தபடி ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தவரின் கவனத்தை கலைக்காமல் மெதுவாய் கடந்து செல்ல முயற்சித்தாள் அவள்.
“என்னடா சாப்பிடாமயே போற?” அக்கறையாய் விஸ்வம் கவனித்து கேட்க வெறுமையாய் நிமிர்ந்தாள் மிதுரா.
“நீங்க பெத்த ஒரே ஒரு பொண்ணு கிட்டே மட்டும் இந்த கேள்வியை கேளுங்க. என் கிட்டே கேட்க வேண்டாம்” என்றாள் உடைய துடித்த கண்ணீரை கண்களுக்குள் அடக்கியபடி.
அவளது வார்த்தையைக் கேட்டு சீமாவிற்குள் கோபம் துளிர்த்தது.
“ஹே மிது! அப்பா கிட்டே பேசுற பேச்சா இது… எப்போ இருந்து மரியாதை இல்லாம பேச கத்துக்கிட்டே?” அதட்டலாய் வந்தது சீமாவின் குரல்.
“இந்த வார்த்தையை முதல்ல சொன்னது அவர் தான், நானில்லை. பெத்த பொண்ணு வந்ததும் வளர்த்த பொண்ணை ஈஸியா தூக்கி எறிஞ்சுட்டாருல” சாட்டையாக சுழன்ற மிதுராவின் வார்த்தைகளில் விஸ்வத்தின் இதயத்தில் பல சவுக்கடிகள்.
தான் சொன்ன வார்த்தையை தானே திரும்ப கேட்கும் போது அமிலத்தைக் கரைத்தது போல நெஞ்சு எறிந்தது.
அவசரத்தில் தடுமாறி வந்த வார்த்தை தன் பெண்ணின் மனதை இப்படி காயப்படுத்திவிட்டதே!
எப்படி உடைந்துப் போய் இருப்பாள் அவள்!
நெஞ்சுக்குழியில் ஊறிய குற்றவுணர்வுடன் விஸ்வம் மிதுராவின் முகத்தைப் பார்த்தார்.
“உண்மையா மனசறிஞ்சு பேசல மிது. சட்டுனு பதட்டத்துல என்ன பேசணும்னு தெரியாம பேசிட்டேன்டா…
மன்னிச்சுடுனு நான் சொல்ற ஒரு வார்த்தையிலே எல்லா காயமும் மறைஞ்சுடாது தான். ஆனால் இந்த வார்த்தையை தவிர வேற எந்த வார்த்தையும் இல்லாததாலே இதையே சொல்றேன். ” என்ற தகப்பனின் வார்த்தைகளில் சட்டென மிதுராவின் நினைவடுக்கில் தீரனின் முகம் வந்துப் போனது.
அன்று தீரன் கூட இப்படி தானே என்னிடம் கடையில் வைத்து எல்லார் முன்பும் மன்னிப்பு கேட்டான்…
யோசனையுடன் நின்று கொண்டிருந்தவளை விஸ்வத்தின் குரல் கலைத்தது.
“அப்பாவை மன்னிப்பியாடா?”
குற்றவுணர்வில் தள்ளாடியபடி நின்று கொண்டிருந்த தன் தகப்பனை காண சகியவில்லை அவளுக்கு.
அவரை சமாதானப்படுத்த வேகமாய் நிமிர்ந்த பொழுது அவளருகே இன்னொரு நிழல் விழுந்தது.
திரும்பி பார்த்தாள்.
அதிதி!
அவளைக் கண்டதும் வெளிவர துடித்த வார்த்தைகள் தொண்டைகுழியிலே அடங்கிவிட்டது.
எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பியவளை கவலையாக தொடர்ந்தது விஸ்வத்தின் கண்களும் சீமாவின் கண்களும்.
“மார்னிங் ப்ரேக்ஃபாஸ்ட் எனக்கு வேண்டாம். லன்ச் ரெடினா, நான் வாங்கிட்டு கிளம்பிடுவேன்… ” எங்கோ பார்த்தபடி அதிதி சொல்ல, வேகமாய் சமையலறைக்குள் சென்ற சீமா இரண்டு லன்ச்பாக்ஸோடு வந்தார்.
கேள்வியாய் அதிதி நோக்க, “மிது, அவசரத்துலே எடுக்காம போயிட்டா, அவள் கிட்டே கொடுக்க முடியுமா?” தயங்கியபடி கேட்டவரிடம்,
“வீட்டுக்கு வந்த பேயிங்கெஸ்ட்டை, டெலிவிரி வேலையையும் பார்க்க வெச்சாச்சு” குறைபேசியபடி இரண்டு லன்ச் பாக்ஸையும் கைப்பையில் திணித்துக் கொண்டு வெளியே செல்ல எத்தனித்தாள்.
“அம்மா இறந்த துக்கத்தோட வேலைக்கு போறதுக்கு பதிலா கொஞ்சம்நாள் ஓய்வெடுத்துவிட்டு வேலைக்கு போகலாமே… ” வாஞ்சையாய் கேட்ட சீமாவை, உணர்ச்சியற்ற பார்வை பார்த்தாள் அதிதி.
“கொஞ்சம் நாள் நான் ஓய்வெடுக்கிறதாலே அம்மா திரும்ப வரப் போறதில்லையே… போனவங்க போனவங்கதானே.” அந்த வார்த்தையை சொல்லும்போது அதிதியின் குரல் இடறியது. அதை சமாளித்துக் கொண்டு நிமிர்ந்தவள்
“அதோட தனியா இருந்தா நிறைய யோசனைகள் தோணும். நம்மளே நாமளே எங்கேஜ்டா வெச்சுக்கிறது நல்லது. அதனாலே தான் ஆஃபிஸ்க்கு அடுத்த நாளே கிளம்பிட்டேன்.” சொல்லியபடியே வெளியே செல்ல முயன்றவளின் முன்பு விஸ்வம் செய்தித்தாளை நீட்டினார்.
“சாரி, எனக்கு நியூஸ் பேப்பர் படிக்கிற பழக்கமில்லை”
“இது நியூஸ்பேப்பர் இல்லைடா… அப்பா உனக்காக பண்ண ஸ்பெஷல் ஒன்” என்றபடி மீண்டும் நீட்ட அதை வாங்கி பிரித்தாள்.
அதில் எழுதி இருந்த வார்த்தைகளைப் படித்துவிட்டு ஏளனமாய் விஸ்வத்தை நோக்கினாள்.
“நைஸ் ட்ரை. ஆனால் இந்த ஒரு ஆல் தி பெஸ்ட் கடந்து வந்த என் வாழ்க்கையை மாத்திடாதே. எங்களுக்கு நீங்க பண்ண துரோகத்தையும் சரிபண்ணிடாது மிஸ்டர்” நறுக்கென்று சொல்லிவிட்டு வெளியே சென்ற மகளை கண்கலங்கியபடி பார்த்தார் விஸ்வம்.
அவரது தோளின் மீது ஆதரவாய் படர்ந்தது சீமாவின் கரங்கள்.
“ஏங்கே… அவள் கோபப்படுறா மாதிரி பேசிட்டு போனாலும் அந்த நியூஸ் பேப்பரை கசக்கி எறியல கவனிச்சுங்களா? பேக்ல பத்திரமா எடுத்து வைச்சுட்டு தான் போறா… இத்தனை நாள் வருஷ கோவம்லாம் இப்போ தான் அவளுக்குள்ளேயிருந்து வெளியே வருது. மொத்தமா கொட்டிட்டா அவள் சரியாகிடுவ.” சீமா சொல்ல சொல்ல விஸ்வத்தின் கண்களில் நம்பிக்கை சுடர் படர்ந்தது.
“கண்டிப்பா என் கிட்டே அன்பா பேசுவா தானே சீமா?” கண்கலங்கியபடி கேட்டவரை ஆதரவாய் தாங்கியது சீமாவின் கரம்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐
சாலையின் மீது விழி வைத்திருந்த மிதுரா ஆளரவம் கேட்டு வேகமாய் திரும்பினாள்.
அருகே அதிதி!
அவளைப் பார்த்து சிரிக்க வேண்டுமா? முறைக்க வேண்டுமா? முகத்தை திருப்பிக் கொள்ள வேண்டுமா? என மிதுரா புரியாமல் தவித்த நேரம் வேகமாக அதிதி அவளின் முன்பு விஸ்வம் கொடுத்தனுப்பிய செய்தித்தாளை விரித்தாள்.
தனது தந்தை தனக்காக கொடுத்த பரிசுப் பொருளை மற்ற பிள்ளைகளிடம் காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சிறுகுழந்தையின் முகபாவம் அதிதியின் முகத்தில் தெரிந்தது.
அதில் மிதுராவை பொறாமைப்பட வைக்க வேண்டும் என்ற எண்ணமும் கலந்தே இருந்தது.
அதைக் கண்டு கொண்ட மிதுரா வேகமாக தன் கைப்பையைத் திறந்து விஸ்வம் அவளுக்காக கொடுத்த செய்தித்தாளை விரித்து வைத்துவிட்டு புருவம் உயர்த்த அதிதியின் உதடுகள் சுழிந்தது.
அதே நேரம் பேருந்து அவர்களின் முன்பு வந்து நிற்க இருவரும் நியூஸ்பேப்பரை கைப்பையில் திணித்துக் கொண்டு அவசரமாக பேருந்தில் ஏற முயன்றனர்.
இருவருடைய காலடித்தடங்களும் முதல் படிக்கட்டில் ஒரே சமயத்தில் பதிந்தது.
இருவரும் விட்டுக் கொடுப்பதாக இல்லை.
“நீங்க என்ன தான் என்னை விட பெரியவங்களா இருந்தாலும், நான் தான் இப்போ சீனியர்… சோ நான் தான் ஃபர்ஸ்ட் ஏறுவேன்.” மிதுரா உதட்டைப் பிதுக்கிக் கொண்டு சொல்ல அதிதி அவளை முறைத்தாள்.
“ஹலோ உங்க ஆஃபிஸ்ல ஜாயின் பண்ற நியூ மெம்பர்ஸை இப்படி தான் வெல்கம் பண்ணுவிங்களா? கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லையா?” காரமாக கேட்ட அதிதியை நோக்கி
இல்லையென தோளை குலுக்கிய மிதுரா வேண்டுமென்ற சென்டிமீட்டர் சிரிப்பை இதழில் தைத்து வெறுப்பேற்றினாள்.
“நீங்க இப்படியே சண்டை போட்டுக்கிட்டு நின்னா வண்டி லேட்டா தான் ஆஃபிஸ்ல போய் நிக்கும். வேகமா ஏறுங்கமா ப்ளீஸ்” ட்ரைவரின் கெஞ்சலான முகத்தைப் பார்த்து இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
பின்பு வேகமாக ஒரே நேரத்தில் நெருக்கியடித்தபடி வெற்றிகரமாக உள்ளே ஏறிவிட்டனர் இருவரும்.
ஆனால் மிதுராவின் காலணி அந்த முந்தியடித்தலில் கழண்டு கொண்டுவிட்டது.
அதை சரிசெய்ய குனிந்த நேரம் அதிதியோ இவள் எப்போதும் அமரும் கடைசி இருக்கையில் அமர சென்றாள்.
அதைக் கண்டு பதறியது மிதுராவின் உள்ளம். வேகமாக காலணியை சரிசெய்து கொண்டு அங்கே வந்து நின்றாள்.
“இது என்னோட இடம். என் அப்பாவை பறிச்சா மாதிரி இந்த இடத்தையும் பறிச்சுடாதே ப்ளீஸ்… இங்கே நிறைய ஸ்பெஷல் மெமரீஸ் இருக்கு” கெஞ்சல் குரலில் கேட்ட மிதுராவின் வருத்தம் அதிதியை ஏதோ செய்து இருக்க வேண்டும்.
இல்லையென்றால் மறுப்பேச்சில்லாமல் அதிதி, எழுந்து சென்று ராஜ் அமரும் இருக்கையில் அமர்ந்திருப்பாளா!
விட்டுக் கொடுத்து சென்ற அதிதியை திரும்பி ஒரு பார்வை பார்த்த மிதுரா சோர்வாக அந்த கண்ணாடியின் மீது சாய்ந்தாள்.
முன்பொரு நாள் இதே இடத்தில் தீரன் எழுதிய சாரி என்ற வார்த்தைகளை அவளது இதய எழுத்தாணி மீண்டும் எழுதிக் காட்டி அவள் கண்களை கலங்க செய்தது.
அவளுக்கு தீரன் என்பவனே புதிராக தெரிந்தான்.
முதல்முறை பார்த்தபொழுது நட்பு பாராட்டினான். பின்பு சுற்றுலாவில் மெதுமெதுவாக அவளை விட்டு விலக தொடங்கினான். அதன்பின்பு மொத்தமாக இங்கிருந்து பெங்களூருக்கு தப்பித்தோடிவிட்டான்.
திடீரென மீண்டும் அந்நிய பாவனையை பொருத்தியிருந்த கண்கள் லேசாக தடுமாறத் துவங்கியது.
ராஜ் பிறந்தநாளிற்கு அடுத்த நாள் மொத்தமாக தடுமாறி இவளிடம் விழுந்துவிட்டான். விழுந்ததை தன் வாயால் இவளிடம் ஒப்பும் கொண்டுவிட்டான்.
ஆனால் ஒரே நாளில் என்ன நிகழ்ந்தது?
எதனால் என்னை வேண்டாம் என்றான்?
மறைக்கப்பட்ட அந்த பக்கத்தில் நடந்தது தான் என்ன?
இப்போது கூட நேரில் என்னை காண துணிவில்லாமல் அலுவலகப் பேருந்தை தவிர்த்தது ஏன்?
அவனை தடுப்பது என்ன?
இவன் ஏன் இப்படி தடுமாறி கொண்டே இருக்கின்றான்? ஏன் என்னையும் தடுமாற வைக்கின்றான்?
கேள்விப்பின்னல்கள் மனதைப் பின்னிய நேரம் அலைப்பேசி சிணுங்கியது. எடுத்துப் பார்த்தாள்.
சிற்பிகா!
சோர்வுடன் எடுத்து காதில் வைத்தவள் “சொல்லு சிற்பி” என சொல்ல எதிர்ப்பக்கம் உற்சாகமாய் ஒலித்தது சிற்பிகாவின் குரல்.
“ஹே மிது! நேத்து உன் லவ் ஸ்டோரியை ரேடியோல கேட்டேன்டி. செமையா இருந்தது… நீ தீரன்க்கு கொடுத்த சப்ரைஸ் மாதிரி நானும் என் ஆளுக்கு சப்ரைஸ் தர ப்ளான் பண்ணிட்டேனே” சிற்பிகா சொல்ல சொல்ல மிதுராவின் முகத்தில் ஆர்வம் கூடியது.
“ஹே யாருடி உன் ஆளு. அதுவும் எனக்கு தெரியாம?” என்று கேட்ட மிதுராவிற்கு கிடைத்த பதில், அதிர்ச்சி அளிப்பதாய்.
“ஏது நீ அபி அண்ணாவை காதலிக்கிறியா” அதிர்வில் சற்று உரத்த குரலில் மிதுரா கேட்டுவிட முன்னே அமர்ந்திருந்த அதிதி திரும்பிப் பார்த்தாள்.
“ஹே மிது, உன் லவ் மாதிரி என் லவ்வும் சக்சஸ் ஆகும்ல… ” தவித்தபடி சிற்பிகா கேட்க மிதுராவின் இதழ்களில் விரக்தி முறுவலின் அரும்பல்.
ஒரே நாளில் முடிவுக்கு வந்த காதலை சிற்பிகாவிடம் சொல்லி வருத்தப்பட வைக்காமல் “கண்டிப்பா உன் லவ்வும் சக்சஸ் ஆகும் சிற்பி. ஆல் தி பெஸ்ட் டி…” சொல்லிவிட்டு போனை வைத்தவள் மீண்டும் தீரனைப் பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கினாள்.
ஏறும் போது எப்படி இருவரும் நெருக்கியடித்தபடி ஏறினார்களோ அப்படியே இறங்கும் போதும் நெருக்கியடித்தபடி இறங்கினர்.
அலுவலகத்தில் லிப்ட் பட்டனை அழுத்துவதில் இருந்து கதவை திறக்க ஐடி கார்ட் ஆக்சஸ் வைப்பது வரை இருவரிடமும் போட்டி தான்.
அவர்கள் உள்ளே நுழைய முயன்ற பொழுது சரியாக சிற்பிகாவும் அதே நேரத்திற்கு வந்து சேர்ந்தாள்.
“குட் மார்னிங் சிற்பி” மிதுரா சொல்லியபடி உள்ளே நுழைய, அதிதியின் கண்களோ சிற்பிகாவையே பார்வையால் அளந்தது.
அதிதியின் பார்வை கண்டு சிற்பிகாவிடம் லேசாக தடுமாற்றம்.
மூவரும் ஒருவர் முகத்தைப் பார்த்தபடி உள்ளே நுழைய அங்கிருந்தவர்களின் பரபரப்பான பாவனை இவர்களை பதற்றம் கொள்ள செய்ததது.
வெவ்வேறு திசைகளில் விழுந்த செய்தி கேட்டு அப்படியே ஸ்தம்பித்து நின்றனர்.
அவர்களுடைய பாரத் மேகா இன்சூரன்ஸ் இப்போது மிக இக்கட்டான சூழ்நிலையில் தள்ளாடிக் கொண்டிருப்பதை அறிந்தால் மூவரிடமும் தள்ளாட்டம் இருக்க தானே செய்யும்!
அதுவும் சென்ற ஒரு நாள் மட்டும் பாரத் மேகா இன்சூரன்ஸ் வழியாக போடப்பட்ட பாலிசிகளின் ப்ரிமீயம் வழக்கத்தைவிட மூன்றுமடங்கு அதிகமாக சிஸ்டத்தில் ப்ராசஸ் ஆனது மிக சிறிய விஷயமா என்ன?
பொதுவாகவே பாலிசி நிறுவனங்கள் குறிப்பிடப்பட்ட ப்ரீமியத்திற்கு மேலாக பத்து ரூபாய் ப்ராசஸ் செய்தாலே அது மிகப் பெரிய ப்ரச்சனை.
ஆனால் ஞாயிற்றுகிழமையான நேற்று மட்டுமே, குறிப்பிடப்பட்ட தொகையைவிட மூன்றுமடங்கு அதிகமாக பாலிசிக்கு வசூலித்து இருக்கிறார்கள்.
பாலிசியை போட்ட கஸ்டமர்கள் புகார் கொடுத்தால் கம்பெனியை இழுத்து மூட வேண்டியது தான்.
இப்படியொரு சிக்கலான சூழ்நிலையா?
இதை தான் முன்பே தீரன் கணித்து சொன்னானா?
ஏதோ பெரிய ப்ரச்சனை கம்பெனிக்கு வரப் போகிறதென்று!
இவள் வேகமாக தீரனைத் தேட உள்ளேயிருந்த மீட்டிங் ஹாலின் கதவு திறந்தது.
வரிசையாக ராஜ், தீரன், அபி வந்து கொண்டிருந்தனர்.
மூவரின் முகத்திலும் அத்தனை இறுக்கம்.
அங்கே குழுமியிருந்தவர்களிடையே கேள்விகுதிரைகளின் பாய்ச்சல்கள்.
“இது ஹேக்கிங்ஹா?”
” இல்லை நம்ம ஆஃபிஸ்லே வொர்க் பண்றவங்களோட வேலையா? “
“அப்படினா பண்ணது யார்?” என வரிசையாக கேள்விகள் விழ தீரன் மற்றும் அபியின் பார்வை ராஜ்ஜின் மீது படிந்தது.
ராஜ்ஜின் பார்வையோ எதிரே நின்றிருந்த அந்த மூவரை மட்டும் துளையிட்டது.
அங்கே
அதிதி,சிற்பி,மிதுரா!
அவனின் அழுத்தமான பார்வை கண்டு முவரிடமும் குழப்பம்.
“ராஜ் சார் யார் பண்ணது?” வெவ்வேறு திசையிலிருந்து கூச்சல்கள் வந்த வண்ணமிருக்க ராஜ்ஜின் கரங்கள் அழுத்தமாக ஒரு நபரை சுட்டிக் காட்டியது.
அவன் காட்டிய திசையின் விளம்பில் சிற்பிகா!