காதல் பரிசோதனை

images (12)-38b292ab

“ராகுல் நான் இன்னும் எத்தனை தடவை நிரூபிக்கிறது, என்னோட காதலை.  உனக்கு கொஞ்சமாவது என் மேல நம்பிக்கை இருந்தா தான் இந்த உறவு இன்னும் அதிக நாள் நிலைக்கும் புரிஞ்சுக்கோ” என திவ்யா சொல்லி முடித்த அந்த நொடியில் மீண்டும் அவன் ஆரம்பித்தான்.

“ஓஹோ எனக்கு இப்போ நல்லா புரியுது, அப்ப உனக்கு நம்ம உறவு நிலைக்கும்ன்ற நம்பிக்கை இல்லை சீக்கிரம் முடியப் போதுனு சொல்றியா? எனக்கு நல்லாவே புரிஞ்சிருச்சி தாங்ஸ் மா” என்றான்.

“நான் என்ன பேசுனா நீ என்ன புரிஞ்சுக்குற ஒரு விஷயத்தை நல்ல விதமாவே உனக்கு பார்க்க தெரியாதா நான் நம்பிக்கை வைனு சொன்ன அப்ப நீ நம்பிக்கை இல்லையானு எதிர் விவாதம் பண்றது கொஞ்சம் கூட சரியில்லை… இப்ப உனக்கு என்ன நான் நிரூபிக்கணும் அவ்வளவு தான… இரண்டு நாள் முன்னாடி நீ என்கிட்ட சொன்னதை நான் மறக்கல, வெள்ளக்கிழமை கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போக சொன்ன, ஆனால் நான் அன்னைக்கு தலைக்கு ஊத்திகிட்டேன் வயிறு வலி… அதான் சீக்கிரம் கிளம்பிட்டேன் மறந்து போய் கிளம்பல போதுமா” என சொல்லி கிளம்பியவளை கரம் பற்றி உட்கார வைத்தான்.

“இதை முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல” என அவள் கையை வருடிய படியே அவன் சொல்ல

“எனக்கு சொல்ல ஒரு மாதிரி இருந்துச்சு. இதை உன் கிட்ட காரணம்னு சொல்லி, நான் மறக்கலனு நிரூபிக்கணுமானு தான் ரெண்டு நாளா சொல்லாம இருந்தேன்.. ஆனால் நீ என்னை வார்த்தையாலே குத்தி கிழிக்கிற, என் மேல அன்பு இருந்தா உனக்கு மறந்து இருக்குமானு லாம் கேட்டு என்னை காயப்படுத்துற.  இதுக்கு மேலயும் சொல்லாம இருந்து உன் கிட்ட நிறைய பேச்சு வாங்க எனக்கு இஷ்டம் இல்ல அதான் சொல்லிட்டேன்” என வேக வேகமாய் பொறிந்து தள்ளினாள்.

“ஸாரிமா” என அவன் அமைதியாய் சொல்ல அதைக் கேட்ட அவளோ மீண்டும் கோபமானாள்.

“இப்போ இதுக்காக என் கிட்ட மூணு நாளா சண்டை போட தெரிஞ்ச உனக்கு, எதனால அவள் வரலனு யோசிக்க தெரியலைல, இங்கே பாரு சின்ன சின்ன விஷயத்துக்கும் என்னை பரிசோதனை பண்ணி அன்பை நிரூபிக்க சொல்லாத, இதான் கடைசி தடவையா இருக்கணும் சொல்லிட்டேன்… ஏற்கனவே நிறைய தடவை நிரூபிச்சு நொந்து போயிட்டேன்” என அவள் சொல்லிவிட்டு அவனைப் பார்த்தாள்.

“சாரிமா இனி நான் உன்னை நம்புவேன்” என அப்போதைக்கு இவனும் சமாதான கொடியை பறக்கச் செய்து சண்டையை முடித்தான்.

ஆனால் அவள் இந்த வார்த்தையை நம்பவில்லை எத்தனை தடவை சாரிமா நான் உன்னை நம்புவேனு சொல்லி இருப்பான்.

ஆனால் கடைசி வரை அவன் என்னை நம்பவே இல்லையே என ஆற்றாமையோடு நினைத்தவள், சரி ஒரே ஒரு கடைசி வாய்ப்பு கொடுக்கலாம் என எண்ணி அவளும் அப்படியே அந்த பிரச்சனையை விட்டுவிட்டாள்.

ராகுல் எப்போதும் அப்படி தான் எளிதில் ஒரு விஷயத்தை விட மாட்டான். உப்பு சப்பே இல்லாத விஷயத்தை எடுத்து கொண்டு ஏன் அவ்வாறு செய்தாய்? ஏன் இப்படி செய்யவில்லை? அப்படி செய்யாமல் இருந்ததற்கு உனக்கு என் மேல் அன்பு இல்லாதது தான் காரணமா? நீ என் மேல் வைத்த அன்பின் அளவு இவ்வளவு தானா? என வார்த்தைகளை வீசியே அவள் இதயத்தை கலங்க செய்துவிடுவான். அவளும் ஒவ்வொன்றிற்கும் விளக்கம் கொடுத்து அவன் வைக்கும் காதல் பரிசோதனையில் தன் அன்பு தூயது என நிரூபிப்பாள்.

குறுஞ்செய்தி கொஞ்சம் குறுகினால் சண்டை, அவள் மற்றவர்களிடம் கொஞ்சம் சிரித்துப் பேசினால் சண்டை, அவன் கூப்பிட்டு இவள் செல்லாவிட்டால் சண்டை, அன்பை உணர்த்தி கொண்டே இருக்காமல் விட்டால் சண்டை, என ஒவ்வொரு நாளும் விளக்கம் கொடுத்துக் கொண்டே இருந்தாள்.

குற்றவாளி கூண்டில் நிற்கும் அவளின் மேல் விழும் அத்தனை கேள்விகளுக்கும் விளக்கம் கொடுத்து தன்னை குற்றமற்றவள் என்றும் தன் அன்பு தூயது என நிரூபிப்பது அவ்வளவு கொடுமையாக இருந்தது அவளுக்கு.

அவளும் பாவம் தானே அவளுக்கும் ஒரு கட்டத்தின் மேல் சலிப்பு வராதா தன்னை நிரூபித்து கொண்டே இருப்பதற்கு.

ஒவ்வொரு முறையும் அன்பு உணரப்படாமல் உணர்த்தப் படுவதன் கொடுமையை அவள் முழுதாய் அனுபவித்து இப்போது அவள் வெறுத்தே போய்விட்டாள்.

இது தான் அவனுக்கு கொடுக்கப்பட்ட கடைசி வாய்ப்பு. பார்க்கலாம் அவள் அன்பை அவன் மீண்டும் பரிசோதிக்கிறானா என?

அவள் அன்பை நிரூபித்த அடுத்த நொடியில் இருந்தே அவளை தாங்கு தாங்கு என தாங்கினான்.  அவளின் மீது பாசத்தை பொழிந்தான்.

இது எப்போதும் வழக்கம் தான். அவள் மீது கொண்ட கோபம் தவறு என ஆகிவிட்ட பிறகு அவளை அதிகம் பார்த்து கொள்வான் அவளும் இவன் செய்கையில் மகிழ்ச்சியானாள்.

ஆனால் அவளின் மகிழ்ச்சி அப்படியே சுக்கு நூறாய் ஆகும் நேரமும் நெருங்கியது.

மீண்டும் பிரச்சனை தொடங்கியது. ஆனால் அதன் காரணம் ஒன்றும் மிகப் பெரியதல்ல. மிகவும் சிறியது தான்.
அதை அவன் பெரிதாக்க அவர்களின் உறவுக்கான விரிசலும் இப்போது பெரிதாகிவிட்டது.

நேற்று கடற்கரைக்கு சென்று இருந்தார்கள். அப்போது ராகுலிடம் பணம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது.  அதனால் அந்த பணத்திற்கு ஏற்றார் போல் ஒரு பரிசு வாங்கி தந்தான். இவள் இருவருக்கும் சேர்த்து இரண்டு கீசெயின் வாங்கினாள். அது இவன் வாங்கிய பரிசை விட கொஞ்சம் விலை அதிகம்.

அப்போதே இவனுக்கு ஒரு கீ செயினை கொடுத்துவிட்டு மற்றொன்றை கைப்பையில் பத்திரப்படுத்திக் கொண்டாள். அவன் வாங்கிய பரிசை கேட்க நினைத்து அவள் திரும்பிய போது அவளுக்கு தெரிந்தவர்கள் தூரத்தில் வர வேகமாய் பின் சென்று மறைந்து கொண்டாள். அவர்கள் அவளை கவனிக்காமல் செல்ல அவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

அதற்குள் அவள் தாயிடம் இருந்து அழைப்பு வந்தது சீக்கிரம் வீட்டிற்கு வா  என.

உடனே அவனிடம் சொல்லிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பி விட்டாள், அவன் அவளுக்காக வாங்கிய பரிசை வாங்க மறந்து.

வீட்டினுள் நுழைந்த அவளுக்கு வரிசையாய் அதிர்ச்சிகள் காத்து இருந்தது. அவளது அத்தை வீட்டிற்கு வந்து இருந்தார், தன் மகனுக்கு அவளை பேசி மனம் முடிப்பதற்கு சம்மதம் கேட்பதற்காக.

உள்ளே வந்த திவ்யாவை அமர சொல்லி அவர்கள் தான் வந்ததற்கான காரணத்தை எடுத்துச் சொல்ல திவ்யா கொஞ்சம் அதிர்ந்து தான் போனாள்.

உடைமாற்றி வந்துவிடுகிறேன் என சொல்லி உள்ளே வந்தவளை அவள் தாய் மனதை மாற்ற முயற்சித்தாள்.

“திவ்யா இங்கே பாருமா வெளியிலே அத்தை கிட்டே போய் சம்மதம்னு சொல்லிடுடா.. ராஜேஷ்ம் நல்ல பையன் தான்… நல்ல வேலையில கூட இருக்கான்… சரினு சொல்லுமா” என தாய் ஏக்கம் கலந்த குரலில் கேட்க அவளோ குரலைத் திடப்படுத்தி கொண்டு பேச ஆரம்பித்தாள்.

அம்மா உனக்கு ராகுலை தெரியும் இல்லை, என் கூட வேலை செய்யறவரு. அவரை தான் நான் காதலிக்கிறேன்… கல்யாணம் பண்ணாலும் அவனை மட்டும் தான்மா பண்ணுவேன். அத்தை கிட்டே நீயே பேசிடுமா.. என் பொண்ணு ராஜேஷை அண்ணாவா தான் பார்த்தேனு சொல்றா அவனுக்கு நல்ல பொண்ணு கிடைப்பாங்கனு சொல்லிட்டா அப்படினு சொல்லிடுமா ப்ளீஸ்” என கலங்கிய விழியோடு சொன்ன மகளைப் பார்த்து அதிர்ந்தே போனாள் தாய்.

எதிர்பாராமல் தன் நாத்தனார் சம்பந்தம் பேசியது ஒரு அதிர்வு என்றால் இப்போது மகள் சொன்னது அதைவிட அதிர்ச்சியாய் இருந்தது. அதை தாங்க முடியாமல் மயங்கி விழவும் செய்தார் அந்த தாய்.

பதறிப் போன திவ்யாவோ தாயை மருத்துவமனையில் அனுமதித்து தாயைப் பார்த்துக் கொண்டாள். இரண்டு நாள் கழித்து அவள் தாய் வீடு திரும்பினாள் மருத்துவமனையில் இருந்து.

இந்த இரண்டு தினங்களும் விடுமுறை தினம் என்பதால் அவள் அலுவகத்திற்கு விடுப்பு எடுக்கும் நிலையும் வரவில்லை.

அவள் அன்னையை கவனித்து கொள்ள அலையாய் அலைந்ததில் அலைபேசியையும் கொஞ்சம் மறந்தே போனாள்.

தன் தாய் வீடு திரும்பிய பிறகு அவள் அலுவலகத்திற்கு திரும்பினாள் சோர்வுடன்.

அங்கோ ராகுல் பல கேள்வி கணைகளோடு தயராய் இருந்தான்.  ஏற்கனவே காயத்தோடு இருந்த அவளுக்கு அதிகம் காயம் தர…

அலுவலகத்திற்கு வந்த அவள் ராகுலிடம் பேசுவதற்காக செல்ல அவனோ முதல் கேள்வியாய் “ஏன் இரண்டு நாள் மெசேஜ் செய்யவில்லை.” என்றான். அடுத்தடுத்து பல கேள்விக் குதிரைகள் பாய்ச்சல் அவனிடமிருந்து.

“இந்த இரண்டு நாள் என்னை கொஞ்சம் கூட நினைக்கவில்லையே ஏன்? நான் உனக்காக வாங்கிய பரிசை நீ என்னிடம் இருந்து வாங்க மறந்துவிட்டாய், வீட்டிற்கு சென்றாவது மெசேஜ் பண்ணி கேட்பாய் என நினைத்தேன் அதுவும் இல்லை ஏன்? நீ வாங்கியதை மட்டும் பொறுப்பாய் வைத்த நீ நான் வாங்கியதை மறந்தது எதனால்? நான் வாங்கிய பரிசு விலை குறைந்தது என்பதாலா? என்னோடு இரண்டு நாள் பேசவும் இல்லை. ஒருவேளை யாராவது புது நண்பர்கள் கிடைத்துவிட்டார்களோ? என நக்கலாக கேட்க அவள் எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாய் நடந்து வந்துவிட்டாள்.

பின்னாடியே வந்தவன் “நின்று பதில் சொல்லிட்டு போ..  ஏன் அப்படி பண்ண எனக்கு தெரியனும்? உனக்கு என் மேல அன்பே இல்லையா?” என கேட்டவனைப் பார்த்து விரக்தி சிரிப்பை உதிர்த்தாள்.

சாரிமா இனி நான் உன்னை நம்புவேனு சொன்னது நீ தான… அந்த  நம்பிக்கை இப்போ எங்கே போச்சு ஒரு வேளை பறந்து போயிருச்சா? நீ கேட்டதுக்கு எல்லாம் என் கிட்டே பதில் இருக்கு.. ஆனால் நான் சொல்ல மாட்டேன். இனி அன்பை நிரூபிக்க மாட்டேன். அதை நீயா தான் உணரனும். உன்னாலே ஏன் எடுத்த உடனே என்னை நம்ப முடியல? ஏதாவது காரணம் இருந்து இருக்கும் கேட்டுட்டு முடிவு எடுக்கலாம்னு உனக்கு எப்பவுமே தோணாதுல? இப்படி என்னை குற்றவாளி கூண்டுல நிக்க வச்சி நான் எல்லா விளக்கமும் குடுத்த அப்புறம் தான் இந்த அன்பு நிரூபிக்கப்படும்னா அப்படி ஒரு உறவு தேவையே இல்லை. நீ இந்த அன்பை ஒவ்வொரு தடவையும் பரிசோதனை பண்ணி பண்ணி அதோட ஆயுளை கம்மி பண்ணிட்ட… இந்த அன்பு நீ அடுத்த தடவை பரிசோதனை பண்ற வரைக்கும் இருக்கணும்னா, அதுக்கு நம்ம பிரியறது தான் நல்லது. அப்பவாது கொஞ்சம் அன்பு மிஞ்சி இருக்கும்… உன் கிட்டே என்னை நிரூபிச்சு நிரூபிச்சு நான் சோர்ந்து போயிட்டேன்…. உனக்கு கொடுத்த வாய்ப்பு எல்லாமே முடிஞ்சு போயிருச்சு.. போதும் நம்ம பிரிஞ்சுரலாம் என்னால முடியல…. நான் இந்த தடவை எதையும் நிரூபிக்க போறதும் இல்ல… காரணம் சொல்லப் போறதும் இல்ல…லெட்ஸ் ப்ரேக்அப். ” என சொல்லிவிட்டு சென்றவளை வெறித்தபடி பார்த்து கொண்டு இருந்தான் ராகுல்.

 

பரிசோதனை இருக்காது இனி-