சரணாலயம் – 1

சரணாலயம் – 1

வானருவியாய் மழை ஊற்றிக் கொண்டிருக்க, நிறைசூலியாய் கருமேகங்கள் அந்த மதிய வேளையை இருட்டாக்க முயன்று கொண்டிருந்தன. இடியும் மின்னலுமாக காலையில் ஆரம்பித்த மழை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அன்று மும்பை பெருநகரம் தனது வழக்கமான பரபரப்பை இழந்து விட்டது போல் தோன்றியது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்கும் இங்குமாய் ஒரு சில மனிதர்கள் மட்டுமே நடமாடிக் கொண்டு இருந்தார்கள்.

பருவமழை ஆரம்பித்த இரண்டு மாதங்களாக இப்படிதான்… சாலைவழி மழைநீர் கரைபுரண்டோட வெள்ளம் போல் ஆர்ப்பரித்தபடி பாதாளவழி தேடி பாய்ந்து கொண்டிருந்தது.

காலம் தவறிப் பெய்யும் மழையால் யாருக்கு என்ன பலன்? மழை இல்லையே என்று ஒரு சாரார் மக்கள் ஏங்கிக் கொண்டிருக்க, இங்கே விடாமல் பெய்து வீணாய் போகிறதே என்ற வருத்தத்துடன் தன் டொயட்டா காரினை, அந்த தொகுப்பு வீடுகளுக்குரிய வாகனங்கள் நிறுத்துமிடத்தில், மெதுவாக உருட்டிக் கொண்டு வந்து நிறுத்தினாள் சரண்யா.

மும்பை துறைமுகத்திற்கு அருகிலுள்ள, இக்கால நவீன பத்து மாடிகள் கொண்ட குடியிருப்போர் வளாகம் அது. அங்கு வசிக்கும் உயர் மத்தியதர குடும்பங்களுக்கு மத்தியில் நான்காவது மாடியில் உள்ள ஒரு வீட்டில்தான் இவள் தங்கியிருக்கிறாள். 

காரினுள் இருந்த இரண்டு பெரிய மனிதர்களை மிக பத்திரமாக இறங்க வேண்டுமென அறிவுறுத்தியபடியே அவர்களுக்கு ரெயின்கோட் மாட்டி விட்டாள்.

“டிட்டு பேட்டா… டோன்ட் ரன்! கோ ஸ்லோ! (ஓடாதே, மெதுவா போ)” என்றபடியே ஆறு வயது சிறுவனை கீழே இறக்கிவிட, அவனை தொடர்ந்து அதே வயதை ஒத்த மற்றொருவனும் வெளியே தாவிக் குதித்தான்.

அப்படி தாவிக் குதித்ததில் மழைநீர் உடல் முழுவதும் தெறித்துவிட, அதே குஷியுடன் கனமழையில் மேலும் எம்பிக் குதித்தான் அந்த சேட்டைக்காரன்.

“அரே சோட்டு… மைனே பஸ் தும்கோ பதாயா ஹை நா? (இப்போதானே சொல்லி முடிச்சேன்)” கோபக்குரலில் கீழிறங்கியவள், தானும் நீர்புகாத மேற்சட்டையை (ரெயின்கோட்) அணிந்திருந்தாள்.

“ஜல்தி சலோ!” என்று டிட்டுவை விரைந்து நடக்க சொன்னவள், “வாடா அறுந்தவாலு!” பல்லை கடித்தபடி சோட்டுவை முன்னே விட்டாள்.

“ஜாலி மாம்!!” மேலும் இருமுறை குதித்தபடி நடக்க ஆரம்பித்த சோட்டு,

“அச்சா ஹை நா டிட்டு? (நல்லா இருக்குல்ல டிட்டு)” நண்பனிடம், தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள, அவனும்,

“ஹாங் ப்ரோ! (ஆமாம் சகோ)” அவனும் தன் பங்கிற்கு மழைநீரில் இரண்டு முறை குதித்து விட்டு நடக்கத் தொடங்கினான்.

“மொளைச்சு ஒத்த இலைகூட விட ஆரம்பிக்கல… அதுக்குள்ள ப்ரோவாம்! இந்த பெரிய மனுஷங்க அலப்பறை தாங்க முடியலடா சாமி!” முணுமுணுத்தபடியே சிரிப்புடன் சிறுவர்களின் ஸ்கூல் பேக்கையும், லஞ்ச் பேக்கையும் சுமந்து கொண்டு நான்காவது மாடியை அடைந்தவள், இரண்டாவது வீட்டு அழைப்பு மணியை அடித்தாள்.  

சரண்யாவின் கணவனுடன் வேலை செய்யும் கௌஷிக், தன் மனைவி பூஜா, மகன் நிதின், என குடும்பத்துடன் இவளின் வீட்டிற்கு எதிர் வீட்டில்தான் தங்கியுள்ளான்.

பக்கத்திற்கு இரண்டாக மொத்தம் நான்கு வீடுகள் உள்ள அந்த மாடியில், இந்த இரண்டு குடும்பமும் எதிரெதிர் திசையில் வசிக்கின்றனர்.

இப்பொழுது அந்த வீட்டின் அழைப்பு மணியை அடித்துதான் பூஜாவை அழைத்திருந்தாள்.

இரு பெண்களின் குடும்பத் தலைவர்களும் ஒரே இடத்தில் வேலை பார்க்கும் சமயத்தில் நட்புறவு கொண்டிருக்க, இவர்களின் மனைவிகளிடமும் அதே நட்பு அழகாய் பிரதிபலித்தது.

இயல்பான தோழமையில் இருவரின் பிள்ளை வளர்ப்பிற்கும் ஒருவரின் உதவி மற்றவருக்கு தேவையாக இருந்தது. குழந்தைகளும் இந்த ஆறுவயது நட்பிற்கே ‘ஹமாரா தோஸ்த்’ என்று நெருக்கத்துடன் தோளில் கைபோட்டு சுற்றும் பெரிய மனிதர்களாக வளர்ந்து விட்டார்கள்.  

சரண்யாவின் திருமணம் முடிந்த, இந்த பத்து வருடங்களில் எங்கு சென்றாலும் உடன் வரும் தோழமையாக கௌஷிக்-பூஜா குடும்பம் சேர்ந்து கொண்டது.

இவையெல்லாம் எல்லோருக்கும் சாத்தியமில்லை என்றாலும் உறவுகளை விட்டு விலகி இருக்கும் இவளின் குடும்பத்திற்கு, உறவாகவே அந்த குடும்பம் அமைந்து விட்டது என்கிற நினைவு அடிக்கடி எழுவதை இவளால் தவிர்க்க முடிவதில்லை.

இன்றைய நிலையில் இவளின் குடும்பத்திற்கு ஆதரவு சொந்தம், பந்தம், ஊர், உறவு, நட்பு எல்லாமே அவர்கள்தான். ஒரே வயதில் வளர்ந்துவரும் குழந்தைகள், இரு குடும்பத்திற்கும் இருக்க, தனிமைக்கு அவசியம் ஏற்படவில்லை. வாழ்வின் போக்கு இப்படிதான் என்றானதில் இதுவே மனதிற்கு பிடித்தும் போயிற்று.

கௌஷிக் குடும்பம் மட்டுமே தற்போதைய இவளின் உற்றார் உறவினர் கூட்டம். இரண்டு குடும்பங்களும் சகோதரத்துவம் மற்றும் தோழமையுடன் விகல்பம் இல்லாமல் பழகி வருகின்றனர்.

முகம் நிறைந்த புன்சிரிப்புடன் வந்து கதவை திறந்த பூஜா, குழந்தைகளுடன் சேர்த்து அவளையும் உள்ளே அழைக்க, உடை முழுவதும் ஈரமாக இருப்பதால் உள்ளேவர மறுத்து, அவள் மகன் டிட்டு என்கிற நிதினை மட்டும் உள்ளே அனுப்பினாள்.

பூஜா குழந்தைகளுக்கு பிடித்த கட்லெட்டை கொண்டு வந்து கொடுக்கும் ஐந்து நிமிடத்திலேயே, சோட்டு இரண்டு முறை ஈர உடையுடன் டிட்டு வீட்டை வலம் வந்து அங்கப்பிரதட்சணம் செய்யாத குறையாக ஈரமாக்கி விட்டான்.

தன் மகன் சோட்டு என்கிற சிவதர்ஷனை தன்னுடன் பிடித்து வைக்க சரண்யாவால் முடியாமல் போக,

“தர்ஷன்! உதை வாங்கப்போற… வா இந்த பக்கம்!” கண்டிப்புடன் அழைத்து, இழுத்து நிறுத்தினாள்.

தமிழில் பேசி முறைத்தால் சோட்டு, அந்த கணமே நல்ல பிள்ளையாய் அடங்கி விடுவான். தமிழ் உச்சரிப்பும் அம்மாவின் முறைப்பும் எப்பொழுதும் அவனுக்கு வேப்பங்காயாக கசக்க கூடியவை.

வீட்டில் இருக்கும் நேரங்களில் கட்டாயமாக தமிழில் பேசியே ஆகவேண்டும் என்னும் எழுதப்படாத விதியை கடந்த ஆறு மாதங்களாக கடைப்பிடித்து வருகிறாள்.

சரளமான ஆங்கிலத்திலும் ஹிந்திலும் நாள் முழுவதும் சகஜமாய் உரையாடுபவளின் மனதிற்கு, தினமும் தாய்மொழியில் நான்கு வார்த்தையாவது மனம் விட்டு பேசினால் மட்டுமே அன்றைய பொழுது நிறைவானது போலிருக்கும்.

கணவனுடன் பேசலாமென்றால், அவன் பின்னிரவில் வந்து உணவு உண்டு முடிப்பதற்குள் சோர்ந்து போய் விடுகிறான். இவளும் அவனுக்கு பாவம் பார்த்தே அமைதியாக இருந்து விடுவாள்.

தன் ஏக்கத்தை போக்கிக் கொள்ளவும், அதே சமயத்தில் மகனுக்கு தமிழ் மொழியில் விருப்பம் எற்படவுமே வீட்டில் தாய்மொழியில் பேசுவதை கட்டாயமாக்கி விட்டாள். அடுத்ததாக எழுத, படிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்று மனக்கணக்கு போட்டு வைத்திருந்தாள்.  

மகன் சிறுபிள்ளையாக இருக்கும் பொழுது, பெரும்பாலான நேரங்களில் பூஜா மற்றும் நிதினுடன் கழிந்ததால், தர்ஷனிடம் தமிழில் பேசிப் பழக்கப்படுத்தும் முயற்சியை எடுத்திருக்கவில்லை.

பள்ளியில் சேர்த்த பிறகு, பயிற்சியை தொடர்ந்த மாதங்களில் மிக நன்றாகவே அவனுக்கு தமிழில் பேசுவது அத்துபடி ஆகிவிட்டது. பெற்றவர்களின் தாய்மண்ணும் தாய்மொழியும் தமிழாக இருக்கும் பட்சத்தில், சிறுவனுக்கு இந்த செம்மொழி வசப்படாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.  

ஆனாலும் சிறுபிள்ளைக்குரிய சுணக்கம் வந்து விடுவதால், தாயின் வீம்பிற்கு மட்டும் தமிழில் பதில் சொல்ல முன்வருவான் சோட்டு.

இப்பொழுது அம்மாவின் கண்டிப்பிற்கு முகத்தை சுருக்கி கொண்டு அமைதியாக நின்றிருக்க, அவன் கைகளில் கட்லெட் இருக்கும் டப்பாவை திணித்தவாறே,

“ஏ லோ சோட்டு பேட்டா… துமாரா கே லியே…(வாங்கிக்கோ சோட்டு உனக்காக தான்)” பூஜா கொஞ்சிப் பேச,  

“மை ஏ நஹி சாக்தா! (எனக்கு இது வேண்டாம்)” முறுக்கிக் கொண்டு மறுத்தான்.

“க்யா ஹுவா பச்சே? (என்ன ஆச்சு தம்பி)” மென்மையாக அவன் உயரத்திற்கு குனிந்து கேட்ட பூஜாவின் பார்வை, சரண்யாவை பார்த்து ‘எல்லாம் உன் வேலைதானா’ என்று முறைக்க,

“மாப் இல்லாம உன் வீட்டை கிளீன் பண்ண ஆரம்பிக்கிறான் பூஜா…” ஹிந்தியில் பேசி சிரித்தபடியே கட்லெட்டை வாங்கிக் கொண்டு தன் வீட்டிற்கு வந்தாள்.

இரண்டு படுக்கையறை, நவீன சமையலறை, ஒரு ஹால் மற்றும் பால்கனியுடன் நவீன வசதிகளை உள்ளடக்கிய அம்சமான வீடு.

தனது ரெயின் கோட்டை கழற்றி பால்கனியில் வைத்தவள் மகனையும் அவ்வாறே செய் என அறிவுறுத்தி விட்டு, மதிய உணவை எடுத்து வைக்கவென சமையலறைக்குள் செல்ல, சோட்டுவின் அட்டகாசம் வீட்டை இரண்டாக்கியது.

தனது ரெயின்கோட்டை கழற்றாமல், வொய்ஃபை இணைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியை போட்ட சோட்டு, நெட்ப்ளிக்ஸில் தனக்கு பிடித்த கார்ட்டூன் சீரிசை ஓட விட்டான்.

அதில் வந்த வசனங்களை சிதறாமல் படக்கதையாக ஒப்புவித்துக் கொண்டே வந்தவன், இடதுபுறம் இருந்த ஆடியோ சிஸ்டத்தையும் முடுக்கி விட்டான்.

லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி

பே அட்டென்ஷன் லிஸன் டூ மீ…

என்னனா இங்கிலீஷு?

ஜஸ்ட் லிசன் டூ மீ…

லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி

பே அட்டென்ஷன் லிஸன் டூ மீ…

உச்சஸ்தாயில் குட்டி ஸ்டோரி பாட்டு அதிர, ஷோஃபாவில் ஈர உடையுடன் பாட்டுக்கேற்றபடி ஆடத் தொடங்கினான். அதிகபட்ச இரைச்சலால் காதுகளை பொத்திக் கொண்டே ஹாலுக்கு வந்த சரண்யா,

“சொல் பேச்சு கேட்காம, வீட்டை அதிரவைக்கதடா… எதையாவது ஒன்ன ஆஃப் பண்ணு…” கண்டித்தவாறே ஹாலுக்கு வந்தவள், ஷோஃபா முழுவதும் ஈரமாகி இருப்பதை பார்த்து,

“என்ன காரியம் பண்ணி வச்சிருக்கடா கொரங்கே! உன்னை…” மகனை அடிக்க விரைய, அவனோ பின்புறம் திரும்பி இடுப்பை ஆட்டிவிட்டு, “வெவ்வெ..” என சிரித்தவாறு போக்கு காட்டியபடியே குளியலறைக்குள் ஒளிந்து கொண்டான்.

“படவா… அங்கே திட்டினதுக்கு இங்கே பழி வாங்குறியா! வெளியே வருவாதானே! அப்ப இருக்குடா உனக்கு…” கோபமூச்சுடன் குஷனை துடைக்க ஆரம்பிக்க, சரியாக அலைபேசியில் கணவன் சசிசேகரன் அழைத்தான்.

“வீட்டுக்கு வந்திட்டியா சரண்? குட்டி என்ன பண்ணறான்?” என்றவனின் அக்கறையில் மனம் லயித்துப் போனாலும்,

“வந்து அரைமணி நேரம் ஆச்சு! உங்க வாலு குட்டி இப்போதான் பாத்ரூம் உள்ளே போயிருக்கு. தண்ணிபிசாசு ஒருமணி நேரம் கழிச்சுதான் வெளியே வரும்…” அடுக்கடுக்காய் நொடித்துக் கொண்டாள்.

“கருவேப்பிலை கொத்து மாதிரி ஒத்த புள்ளைய வச்சுட்டு என்னமா சலிச்சுக்குற? அவன் பேர தவிர வேற எல்லா பேரையும் சொல்லி திட்டுறேடி!”

“இருபத்திநாலு மணிநேரம் இவனை உங்க பொறுப்புல பிடிச்சு வைச்சுக்கோங்க… அப்புறமா என்னை குற்றம் சொல்லலாம்” மூக்குநுனி சிவக்க கோபத்துடன் இவள் வார்த்தை வளர்க்க,

“ம்ப்ச்… ஃபோன்ல சண்டைய ஆரம்பிக்காதே! இன்னும் அரைமணி நேரத்துல வீட்டுக்கு வந்துடுவேன். எதுவும் வாங்கிட்டு வரணுமா? ரெண்டு நாள் மழை சொல்லியிருக்காங்க…”

“எல்லாம் இருக்கு சசி… நீங்க மெதுவா வரப் பாருங்க. கௌஷிக் பையா(அண்ணா) கூடதானே கெளம்புறீங்க…”

“ஆமாம்மா… இனி எந்த வேலையும் பார்க்க முடியாது. மழை குறையரத பொறுத்துதான் அடுத்த வேலைய ஆரம்பிக்க முடியும். சீக்கிரம் வர்றேண்டா” என பேசி வைத்தான்.

சசிசேகரன் மும்பை துறைமுகத்தில் உதவிப் பொறியாளராக கடந்த ஏழு வருடங்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிறான். கடல் பொறியியலில் முதுநிலை(எம்.ஈ மரைன் இன்ஜினியரிங்) முடித்தவன்.

மூன்று வருடங்கள் பயிற்சிக்காக கடலோர மாவட்டங்களில் மாறிமாறி பயணித்த பிறகு, மும்பை துறைமுகம் இவனை வாரியணைத்துக் கொண்டது.

இவனது பயற்சி காலத்தில்தான் கௌசிக் அறிமுகமானான். அன்றிலிருந்து இன்றுவரை நெருங்கிய நட்பாகவே இவர்களின் உறவு தொடர்கிறது. நாடாறு மாதம் கடல் ஆறுமாதம் என அவ்வப்போது கப்பல் பயணமும் இவர்கள்  மேற்கொள்வார்கள்.

முன்பெல்லாம் அந்த பயணத்திற்கு குடும்பத்தை உடன் அழைத்து செல்பவர்கள், பிள்ளைகளை பள்ளியில் சேர்த்த வருடம் தொட்டு ஒருவர் மாற்றி ஒருவர் என சென்று வருகின்றனர். தற்சமயம் பருவமழை காலமாதலால் இருவருக்கும் வேலை துறைமுகத்தில் மட்டுமே.

சரியாக அரைமணிநேரத்தில் வீட்டிற்கு வந்தடைந்த சசிசேகரனும் மழையில் நனைந்தபடி உள்ளேவர,

“அப்பாவுக்கும் பிள்ளைக்கும் இதே வேலையா போச்சு… இன்னும் அந்த தண்ணி பிசாசு வெளியே வரல. நீங்க உள்ளே போயி அவனை அனுப்பி விடுங்க…” கணவனுக்கு உத்தரவிட்டபடி,

“தர்ஷூ வெளியே வா… டாடி வந்தாச்சு…” மகனை அழைக்க,

“லிட்டில் ஃபியூ மினிட்ஸ் மாம்…”

“சோட்டு பேட்டா… ரெண்டு பேரும் சேர்ந்து குளிப்போமா?” பேசிக்கொண்டே குளியலறைக்குள் செல்ல,

அங்கே ஷவர் பைப்பை திறந்து வைத்து, அதற்கு நேர் கீழே நின்று கொண்டே நடனமாடிக் கொண்டிருந்தான் சோட்டு.

“பாபா.. தோடி தேர் ஐ வான்ட் டு ஹியர்ட் மியுசிக் (அப்பா, கொஞ்ச நேரம் நான் மியுசிக் கேக்கணும்) ப்ளீஸ்…” மகனின்  கெஞ்சலில் தகப்பனும் தலையசைத்து மீண்டும் ஆடியோ சிஸ்டத்தை போட்டுவிட, முன்னிலும் விட அந்த வீடு அதிர்ந்தது.

“கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா, அங்கே ரெண்டு கொடுமை தலைவிரிச்சு ஆடுச்சாம்… உங்ககிட்ட சொல்றதுக்கு பதிலா நானே ரெண்டு போடு போட்டு வெளியே கூட்டிட்டு வந்திருக்கலாம்…” கிராமத்து சொலவடைகளை கலந்து கட்டி இருவரையும் தாளித்த சரண்யா, முப்பத்தியிரண்டு வயது பேரிளம்பெண்.

கிராமத்து களையான மாநிறம். தீட்சண்யமான கண்களுடன் கூடிய ஆளுமையான தோற்றம். ஐந்தரையடி உயரத்தில் அரக்குநிற குர்தியும், கருப்புநிற லெக்ஹின்சும் அணிந்து நாகரீகப் பெண்களின் இலக்கணமாக இருந்தாள். 

இக்கால வழமையான வீட்டில் இருந்தே உலகத்தை காணும் நவீன மங்கை. எம்.ஆர்க் பட்டதாரி. ஃபிரீலான்சராக(தனியாக) கட்டிட வடிவமைப்புகளை தயாரித்து கொடுத்து வருகிறாள். பிள்ளை வளர்ப்பு, வீட்டுப் பரமாரிப்பு இரண்டையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டவள், தன்திறமையை வீட்டளவில் சுருக்கிக் கொண்டுள்ளாள்.

சிறுகுறு நிறுவனங்களின் தற்காலிக வடிவமைப்பாளராக மட்டுமே வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகிறாள். மகன் வளர்ந்த பிறகே தனது தொழிலில் முழுமூச்சாய் இறங்கவேண்டும் என்ற எண்ணத்துடன் வலம் வருபவள்.

கணவன் சசிசேகரன், இவளது விருப்பத்திற்கு மாறாக எந்த ஒன்றையும் செய்ய விரும்பாதவன். இருவருக்கும் இடையேயான அன்பில், இதுநாள் வரையில் எந்த இடையூறும் தலை காட்டியதில்லை.

பெற்றவர்களின் ஆசீர்வாதம் இல்லாமல், உற்றார் உறவினர் துணையில்லாமல், இவன் வேலையின் நிமித்தம் எந்தவொரு மனத் தாங்கலையும் வெளிப்படுத்தாத அருமை மனைவியின் மேல் எல்லையில்லா நேசம் கொண்டவன் சசிசேகரன். 

இதுவரை பிறந்த வீட்டிற்கு செல்ல வேண்டும் என்கிற சின்ன முனுமுனுப்பு கூட மனைவியிடம் இருந்து வந்ததில்லை. இதன் காரணமே குடும்ப வாழ்க்கையை பொறுத்த வரையில் பெண்களுக்கு மனவலிமை அதிகம்தான் என்று சசிசேகரன் நினைக்காத நாளில்லை.

மனைவியின் நினைவில் குழந்தையை இவன் குளிப்பாட்டிக் கொண்டிருக்க, மகனோ அன்னையிடம் தான் திட்டு வாங்கியது, தன்னை அடிக்க விரட்டிய கதைகளை சொல்லி முடித்துக் கொண்டிருந்தான்.

“மாம் பிகம் எ பேட் கேர்ள் பாபா” குற்றசாட்டுடன் மகன் பேச்சினை முடிக்க,

“அப்படியெல்லாம் சொல்லகூடாது சோட்டு! நான் என்னனு கேக்குறேன்” பிள்ளையை சமாதானப்படுத்திய சேகரன்,

“சரண் இங்கே வா! குட்டி பையன என்ன சொன்ன?” என மனைவியை அழைக்க,

அங்கே வந்தவள் மகனும் தந்தையும் நின்ற கோலத்தை பார்த்து பொங்கிச் சிரித்தாள்.

உடல் முழுவதும ஈரம் சொட்ட, இடுப்பில் சார்ட்ஸ் மட்டுமே நின்றிருந்த இருவரின் சிவந்த மேனியும் குளிரால் ஆட்டம் காண ஆரம்பித்திருந்தது. அந்த ஆட்டத்திலும் வம்பு வளர்கும் இருவரையும் பார்க்க கோபமும் சிரிப்பும் ஒருசேர உண்டானது.

“உங்க ஆறரை அடிக்கு இந்த பக்கம் இவன் நாலுஅடி… அந்த பக்கம் அதே உயரத்துக்கு கம்பு ஒன்னு குடுக்குறேன், பிடிச்சிட்டு நில்லுங்க… பட்டினத்தாருக்கு தொண்டனா போயிடலாம்” சரண்யா நக்கலடித்து சிரிக்க,

“அடிப்பாவி… அசந்த நேரத்தில சந்நியாசி ஆக்குறியா?” கணவன் பொருமிய நேரத்தில்.

“வாட் பத்தினதார்?” புரியாமல் அரைகுறை வார்த்தையில் கேட்டான் மகன்.

“அதுக்கு, நான் விளக்கம் சொல்றேன்டா குட்டி!” என்றவாறே இதுதான் சமயமென்று, பூ துவாலையால் அவனை கோழிக் குஞ்சாக அமுக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.

சோட்டுவை அதட்டி மிரட்டி ஒரு வழியாக அவனது சிறிய தலைக்கு ஹீட்டர் போட்டு காய வைக்கும் நேரத்தில், “எனக்கும்…” என்று தனது தலையையும் மனைவியிடம் கொடுத்து சசிசேகரன் கட்டிலில் அமர, அவன் மடியில் அமர்ந்து கொண்டான் சோட்டு..

மடியில் மகனை அமர்த்திக் கொண்டு, அவன் காதினை சுத்தம் செய்யும் நேரத்தில், இருவரின் தலையை நன்றாக காய வைத்து அழகாக படிய வாரி விட்டாள் சரண்யா.

ஒருவழியாக மதிய உணவை, மாலை மயங்கும் நேரத்திற்கு முன்பாக உண்டு முடிக்கும்போது, மகனின் தயவால் வீடு போர்களமாகி இருந்தது. செல்லத் திட்டுகளையும், பொய் கோபத்தையும் அன்னையிடம் பரிசாக வாங்கியபடியே தனது சிற்றுண்டியை முடித்தான் சோட்டு.

மழை முன்னிலும் விட அதிகமாய் கொட்ட ஆரம்பித்திருந்தது. அலுவலகப் பணியை முடிக்கவென மடிக் கணிணியுடன் சசிசேகரன், கௌஷிக் வீட்டிற்கு செல்ல, வீட்டுப் பாடத்தை முடிக்க மகனுடன் மல்லுகட்ட தயாரானாள் சரண்யா.

“நான் டிட்டு கூட சேர்ந்து படிக்கிறேன் மா!”

“நீங்க ஒன்னு சேர்ந்தா, உங்க அப்பாக்களுக்கும் வேலை கெட்டு போயிடும் குட்டி… சமத்தா இங்கேயே உட்கார்ந்து ஹோம்வொர்க் பண்ணு செல்லம்.”

“மீ குட் பாய் மாம்… அவனை இங்கே கூட்டிட்டு வரவா?”

“டெஸ்டுக்கு படிச்சிட்டு, அவனை போயி பார்க்கலாம். ஆண்ட்டியும் அப்படிதான் சொல்லியிருக்காங்க…” மகனை சமாதனப்படுத்திய வேளையில், ஊரில் இருந்து லச்சு என்கிற லட்சுமி அக்கா, சரண்யாவை அலைபேசியில் அழைத்தாள்.

இவளது சிறுவயது பொழுதுகள் யாவும் லச்சு அக்கா இல்லாமல் கழிந்ததில்லை. அக்கா என்று சொல்வதைவிட உயிர்தோழி என்று சொல்வதே பொருந்தும். இருவரின் சுபாவங்களும் எண்ணங்களும் ஏக பொருத்தமாய் இருக்கும்.

அத்தனை எளிதில் அழைத்து விடமாட்டாள் லச்சு அக்கா. யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இரவில் அல்லது அதிகாலையிலோதான் பேசுபவள், இன்று மாலை நேரத்தில் அழைத்ததை பார்த்ததும் இன்ப அதிர்ச்சிதான் சரண்யாவிற்கு…

அவளுடன் பேசி கிட்டத்தட்ட ஒருமாதம் இருக்குமா? இன்றைய சூழ்நிலையில் சொந்த ஊரில் உள்ள ஒரே தொடர்பு இவள்தான்.

“சொல்லு லச்சுக்கா…” மகனுக்கு வேண்டியதை செய்தபடியே, மகிழ்வுடன் அழைப்பினை ஏற்றாள் சரண்யா.  

“சரணீ…” ஆவலுடன் இழுத்து அழைத்த தமக்கையின் குரலில் மழையில் நனைந்த தேகமாய் சிலிர்த்தது இவளின் மனம்.

இராணுவ ரகசியங்களான ஊரின் செய்திகளை ஒலிபரப்பும் பிபிசி-யாக அருமை அக்கா அமைந்தால், இப்படியான சிலிர்ப்புகள் கணக்கிலடங்காமல் கிடைத்துக் கொண்டேதான் இருக்கும்.

“அதிசயமா இருக்கே… இந்த நேரத்துல கூப்பிட்டு இருக்கே? புன்னைகையை நிறைத்துக் கொண்டு பேசினாள் சரண்யா.

“எப்படி இருக்கடி சரணி? நான் கூப்பிடலைன்னா நீயும் பேச மாட்டியா? அவ்வளவு பெரிய ஆளா போயிட்டியா நீயி!” அக்கா பேசிய கிராமத்து பாஷை மனதை மீண்டும் சிலிர்க்க வைக்க, வாய் கொள்ளாமல் சிரித்தாள்.

சரண்யா சிரித்ததை பார்த்து சோட்டுவும் துள்ளிக் குதித்து “பெரியம்மாவாம்மா?” விழியகல கேட்டபடியே அலைபேசியை தன்வசமாக்கிக் கொண்டான்.

“பெரிம்மா… நான் ஸ்கூல் ரன்னிங் ரேஸ்ல ஃபர்ஸ்ட் வந்திருக்கேன்…” தன் அருமை பெருமையை பறைசாற்ற, லவுட் ஸ்பீக்கரில் போட்டபடி தாயும் மகனும் உரையாட ஆரம்பித்தார்கள்.

“அட என் சீனீதங்கம்… ரொம்ப பெரிய ஆளாகிட்டீங்களா சாமி!”

“ரெண்டு எழுத்து, படிச்சு எழுதச் சொல்லு உன் சீனி தங்கத்த…. ஒலிம்பிக்ல ஓடுறத விட ஃபாஸ்டா ஓடி மெடல் வாங்கிட்டு வருவான்…” குற்றப் பாட்டு பாடினாள் சரண்யா.  

“நீ செய்யாத சேட்டையாடி என் தங்கம் செய்யுறான்… உன்னோடத சொல்ல ஆரம்பிச்சா வருஷம் போதாது. பிள்ளைய கரிச்சு கொட்டாம ஒழுங்கா பாடத்த சொல்லிக் குடு!”

“ஹாஹா… லவ் யூ பெரிம்மா… டூ யூ மாம்?” கேலி செய்து வாய்கொள்ளாமல் சிரித்தான் சோட்டு.

“சந்தோசமா லச்சுக்கா… உன்னோட ஆசை நிறைவேறிடுச்சா…“ சரண்யா முகத்தை திருப்பிக் கொள்ள,

“குட்டி பேசும்போது இடையில பேசாதேடி” என்ற லச்சு, பிள்ளையுடன் கொஞ்சிக் கொண்டு பேச்சினை தொடர, சில நிமிடங்கள் அதில் கரைந்தே போனது.

மற்றவர்களிடம் ஹிந்தியும் ஆங்கிலமும் கலந்து பேசும் சோட்டு, தனது பெரியம்மாவிடம் தாய்மொழியில் உரையாடுவதை பார்க்கையில், தன்வளர்ப்பை தானே மெச்சிக் கொண்டாள் சரண்யா.

வீட்டின் ஆடு, மாடு, கோழியின் நலத்தை எல்லாம் கேட்டறிந்த சிறுவனிடம் அலுப்பு தட்டாமல் பதில் அளித்த லச்சு அக்கா, ஒரு வழியாக நேரம் தப்பி அழைத்த காரணத்தை சொல்ல ஆரம்பித்தாள்.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!