சரணாலயம் – 10

சரணாலயம் – 10

சரணாலயம் – 10

பொன்னந்திப் பொழுதை வரவேற்கும் முன்மாலைப் பொழுது… அலையின் ஓசையும், கடல் காற்றும் மனதின் சஞ்சலங்களை துடைத்துக் கொண்டிருந்தது.

துளசி, தோழிகளுடன் விளையாடச் சென்று விட, சரண்யா அலைபேசியில் லயா மற்றும் சௌந்திரவல்லியுடன் பேசி முடித்திருந்தாள். பேச்சுவாக்கில் சசிசேகரனுடன், தான் இருப்பதை கூறியதும், இரண்டு பெண்களையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி அவனிடமும் பேசி விட்டு வைத்திருந்தனர்.

அதன் பிறகு அங்குமிங்கும் வேடிக்கை பார்த்து, அமைதியாக கடந்த நேரத்தை சசிசேகரன் உடைத்தான்.

“நீயும் அவங்ககூட போயிருக்கலாமே சரண்யா? உனக்கு பிடிக்காதா?”

“இல்ல… என்னோட டிரஸ் சூட் ஆகாது” என சரண்யா சொல்ல, அப்பொழுது தான் அவளின் வெள்ளைநிற சல்வாரை கவனித்தான். இந்த உடையுடன் ஈரத்தில் விளையாடினால் எப்படி பிரதிபலிக்கும் என்பதை புரிந்து கொண்டவன்,

‘பரவாயில்ல… இங்கே வந்து கொஞ்சம் மெச்சூர்ட் ஆகிட்டா  போல’ மனதில் பெருமைபடவும் செய்தான்.

எந்தவித மேற்பூச்சுமின்றி மாநிறத்தில், இயற்கையான அழகோடு நிற்பவளை பார்த்ததும் ஏனோ மனம் தடுமாறத் தொடங்கியது.

இத்தனை நாட்களாக பேசாமலும் பார்க்காமலும் இருந்ததற்கு தண்டனையாக, இன்று அவளின் அருகாமை கிடைக்கப் பெற, மனதளவில் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள திண்டாடிப் போனான்.

சிறுவயது முதல் இவளிடம் கொண்ட பாசமும் அக்கறையும் எந்தக் கோட்டில் நேசமாக உருவெடுத்தது என்பதை அவனால் கண்டறிய முடியவில்லை. இவளது நிராகரிப்பை அனுபவித்த பிறகுதானே, இவளின் மீதான விருப்பத்தையே இவன் அறிந்து கொண்டான்.

இவளிடம் கோபத்தையும் எரிச்சலையும் காட்டியே தனது பலவீனத்தை மறைத்துக் கொண்டு இன்று வரையில் நடமாடி வருகிறான். 

‘இந்த அவஸ்தையை எப்படித்தான் தொலைக்கிறது? லீவுக்கு வராம இருந்திருக்கலாமோ’ மனதோடு இவன் போராடும் நேரத்தில்,

“அப்படியே கொஞ்சதூரம் நடந்துட்டு வருவோமா சசி?” அவனை திசை திருப்பும் விதமாய் சரண்யா கேட்க, மறுக்காது அவளுடன் நடக்கத் தொடங்கியவன்,

‘இவள விட்டு தள்ளி நிக்கிறதுதான் மனசுக்கும் உடம்புக்கும் நல்லது…’ என மந்திரம் போல் ஜெபித்துக் கொண்டே, வேகமாக முன்னே செல்லத் தொடங்கினான்.

“அடப்பாவி! என்னோட சேர்ந்து நடக்க கூப்பிட்டா இப்படி போட்டிக்கு நடக்குற மாதிரி ஓடுறியே? உன்னை கூப்பிடதுக்கு நான்தான் தலைதெறிக்க ஓடனும்” முணுமுணுத்தவாறே அவனை இடித்துக் கொண்டே வேகமாக நடக்க,

“மெதுவா போ சரண்யா! ஹை ஹீல்ஸ் தட்டி விடப்போகுது! எதுக்கு ஓடுற?” அக்கறையுடன் அவளின் வேகத்திற்கு தடை போட்டான்.

“நீ நடக்குற ஸ்பீடுக்கு என்னால இப்படி ஓடத்தான் முடியும் சசி!”

“உன்னோட சின்ன சைஸ் ஸ்டூலை கழட்டிட்டு நடந்தா, என் ஸ்பீடுக்கு வரலாம்” அவள் அணிந்திருந்த ஹைஹீல்ஸை பார்த்துக் கொண்டே கேலியுடன் அவன் யோசனை சொல்ல,

“என்னாது ஸ்டுலா?” என அவனை முறைத்தவளுக்கு, இவன் சொல்வதை செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் தலைதூக்கியது. சற்றும் தாமதிக்காமல் தனது ஹீல்ஸை கழட்டி, அவன் கைகளில் திணித்து விட்டு, தனது பட்டியாலாவையும் மடக்கி விட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

காலில் செருப்பில்லாமல் நடந்து பார்க்க வேண்டுமென்று நினைத்தவளுக்கு, அவன் கைகளில் தனது ஹீல்ஸை கொடுத்தது மறந்து போயிருந்தது.

இப்போது இவள் முன்னே நடக்க, அவன் பின்னே கையில் அவளது ஹீல்ஸை சுமந்து கொண்டு, ‘ங்ஞே’ என்று முழித்தவாறு, தன்னை யாரும் வேடிக்கை பார்க்கிறார்களோ என திருதிருத்தபடியே அவளை தொடர ஆரம்பித்தான்.

“ஏய் அராத்து! நீ மெதுவாவே நடந்து வா! உனக்கு கூஜா தூக்கினாலும் ஒரு அர்த்தம் இருக்கு. இப்படி செருப்ப தூக்க வைக்கிறியே?” அவளைக் கடிந்து கொண்டவனின் குரலில் மருந்துக்கும் கோபம் இல்லை.

“சாரி சசி! மறந்தே போயிட்டேன்… அதுவுமில்லாம நடக்கும் போது கையில எதாவது இருந்தா எனக்கு நடக்க வராது. அந்த பழக்கத்துல, உன் கையில குடுத்திட்டேன்!” அசடு வழிந்தபடியே இறங்கிய குரலில் விளக்கம் சொல்ல,

“நல்ல பழக்கம்… இன்னைக்கு உனக்கு சர்வீஸ் செய்யத்தான் வாண்டடா வந்து மாட்டிகிட்டேனா?”

“ஏன் செய்யக்கூடாதா? எனக்காக செஞ்சா இந்த ஆபீசரோட கெத்து கொறைஞ்சா போயிடும்?” இடுப்பில் கைவைத்து சட்டமாய் கேட்டவளின் பாவனையில் தன்னையும் மீறி பக்கென சிரித்து விட்டான் சசிசேகரன்.

எங்கே திட்டி விடப் போகிறானோ என நினத்தவள், அவன் சிரிக்கவும் தானும் உடன் சேர்ந்து சிரித்து விட்டாள். 

“இப்படி பேசி சிரிச்சு எவ்வளவு நாள் ஆச்சு? இப்படியே இரேன் சசி!” என்றவாறே, அவன் கையில் இருந்த தனது ஹீல்ஸை வாங்கிக் கொள்ள,

“வாங்கிட்டு அன்னநடை நடப்ப… நானே சுமந்துட்டு வர்றேன் வா!” என இவனும் தடுக்க

“சரிதான் குடுடா… ஒரேடியா முறைக்கிற… இல்லன்னா மொத்தமா சலாம் போட்டு குனியுற! ரொம்ப மாறிட்ட சசி!” பேசியபடியே காலில் ஹீல்ஸை மாட்டிக் கொண்டு நடக்கத் தொடங்கினாள்.

“அப்படியெல்லாம் இல்லையே! எப்பவும் போல அதே தன்மானசிங்கமா தான் நடமாடுறான் இந்த சசி” என்றவனின் மனசாட்சியோ,

‘போதும்டா! வழியுறது நல்லாவே தெரியுது. ஸ்டடி சசி… ஸ்டடி… திரும்பி வரமுடியாத ஆபத்த நோக்கி நீ போயிட்டு இருக்க…’ என்று தலையில் தட்டி அவனை உஷார்படுத்த, மொத்தமாய் சோர்ந்து போனான்.

சரண்யா எடுத்து வைத்த வேக நடையில் ஹைஹீல்சின் உபயத்தால் தடுமாறி விழப் போக, சசியின் வலுவான கரம், அவள் கையை பிடித்து நிறுத்தியது.

“இதுக்கு தான் கையில குடுக்க சொன்னேன் முட்டாளே!” புன்னகையுடன் கூறியவன் தலையில் ஒரு கொட்டும் வைத்து, பிடித்திருந்த அவளின் மணிக்கட்டை மென்மையாக அழுத்தி விடுவித்தான்.

அந்த ஒற்றை தீண்டலே, அவனின் மனதை அவளுக்கு எடுத்துக்காட்ட போதுமானதாய் இருந்தது. அவனது மென்தீண்டலுக்கு அர்த்தம் கேட்பவளாய் அவனை நோக்க, மெல்லிய புன்னகையால் மீண்டும் அதே அழுத்தத்தில் கையை பிடித்து விடுவித்தான்.

சசிசேகரனின் உரிமைச் செயலில் இவளின் உடல் படபடத்து, இதயமும் வேகமாய் சப்தமிடத் தொடங்கியது. வேகமாய் துடித்த நெஞ்சை சமன் செய்யும் வழியறியாது, பெரிய பெரிய மூச்சுக்களை விட்டவள், தன் கைகளை தன்னிச்சையாக நெஞ்சில் புதைத்துக் கொண்டாள்.

அவளின் செய்கையை கண்கொட்டாமல் பார்த்தவனின் கள்ளப் பார்வை, அவளின் கைகள் சென்ற திசையில் இருக்க, சரண்யாவிற்கு அதுவே சொல்ல முடியாத அவஸ்தையை  கொடுக்க, அவனை கண்டிக்கும் வகையறியாது தவித்தாள்.

“போலாமா!” என வார்த்தைகளுக்கும் வலிக்கும் வண்ணம் கேட்டவன் அவளின் கையை பிடித்து நடக்க, இவளும் அமைதியாக தொடர்ந்தாள்.

என்னவாயிற்று இவனுக்கு? இத்தனை நேரம் பாராமுகமாய் இருந்தவன் நொடிநேரத்தில் மாறுவதற்கு காரணம் என்ன? ஒருவேளை காதல், நேசம், விருப்பத்தின் தொடக்கமோ என நினத்தவளின் நெஞ்சமும் தித்திக்கத் தொடங்கியது.

ஆனாலும் இது ஆபத்தானதென்று மனம் எச்சரிக்க, அமைதியாக நடக்க ஆரம்பித்தாள். இதனைத்தான் தன் மனமும் விரும்புகிறதோ என்ற அவளின் நெடுநாளைய சந்தேகம், இன்று ஆமென்று சொல்லி உறுதிப்படுத்தியது.

பேசாமல் வருகிறானே என இவளின் மனம் சுணங்கிக் கொள்ள, மூளையோ தற்போது விடுதிக்கு சென்றுவிட்டால் போதுமென்று நினைத்தது. இருவருக்கும் இடையில் மௌனம் சூழ்ந்து கொள்ள, மிக அருகில் ஒருவரையொருவர் தொடாமல் நடந்து கொண்டிருந்தனர்.

மணலில் புதையுண்டு ஹீல்சில், அவனுடன் சரிக்கு சரியாக நடக்க மிகவும் மெனக்கெட வேண்டியிருந்தது. எங்கேனும் கீழே விழுந்து மற்றவர்களுக்கு காட்சிப் பொருளாகிப் போவதற்கு பதிலாக, இவனுடன் கை கோர்த்துக் கொண்டு நடப்பதே உத்தமம் என தோன்றிட,

“சசி!” என மெதுவாக அழைத்தாள். அமைதியாக அவளுக்கு ஓரடி முன்னே நடந்து கொண்டிருந்தவன் நின்று என்ன என்பதைப் போல் பார்த்தான்.

“இல்ல… என்னால ஹீல்ஸ் போட்டுட்டு நடக்க முடியல!” முகத்தை சுருக்கியபடி சொல்ல,

“அதுக்கு, உன்னை உப்பு மூட்டை தூக்கிட்டு பீச்சுல வலம் வரச் சொல்றியா?” கேலியுடன் கேட்க,

“ஆசைய பாரு… கையை பிடிச்சுக்கட்டுமான்னு கேக்க வந்தேன்” இறங்கிய குரலில் சொன்னவளை ஆழ்ந்து நோக்கியவன், தனது வலது கையை நீட்டினான். அவனது கையை பிடித்தபடியே நடந்தவளுக்கு மனம் பட்டாம்பூச்சியாய் சிறகடித்தது.

மெல்லிய குளிர்காற்று இருவரையும் வருடிச் செல்ல, தங்களின் மோனநிலையை கலைக்க இருவருக்கும் மனமில்லை. ஆள் அரவமற்ற பகுதியை எட்டியவுடன் திரும்பி விடலாமென முடிவு செய்து விட்டான்.

அதை கேட்க, “சரண்…” என மென்குரலில் அழைத்து, கைகளில் அழுத்தத்தை கொடுக்கவும், அவள் விதிர்த்து நின்று பின் தன்னை சமன் செய்து கொண்டாள்.

“என்ன சரண்?” அவளை மீண்டும் அழைக்க, தன்னால் அவளின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. இவன் அழைக்க வேண்டுமென தான் விரும்பிய அழைப்பல்லவா?

இவனது ஒற்றை அழைப்பிற்கு இவளின் உடலும் மனமும் இனந்தெரியாத பரசவசத்தில் சிலிர்க்க தொடங்கியது. இவனது பிரத்யேக அழைப்பிற்கு இத்தனை ஏங்கிப் போயிருக்கும் மனதை என்னவென்று சொல்லி கடிந்து கொள்வது? என தன்னைத்தானே கேட்டுக் கொண்டவள்,

“சொல்லு சசி!” தலைதாழ்த்தி குரல் கரகரக்க பதிலளித்தாள்.

“திரும்பி போகலாமா?”

“இன்னும் கொஞ்ச நேரம்… இல்ல போகலாம்” இவள் தடுமாற,

“என்னாச்சுமா? எதுக்கு மென்னு முழுங்குற?” கேட்டவனின் கரிசனத்தை தாங்கிக் கொள்ள முடியாமல், மெலிதாக விசும்ப ஆரம்பித்தாள்.

“என்னாச்சு சரண்? நடக்க ரொம்ப கஷ்டமா இருக்கா? ஹீல்ஸ் கழட்டு!” பதபதைப்புடன் அவளின் தோளினை தொட, அதையே ஆதரவாக பற்றிக் கொண்டவள், அவன் தோளில் முகம் புதைத்து நன்றாகவே அழ ஆரம்பித்தாள்.

“சரண் என்ன இது? தூக்கிக்கோடான்னு சொன்னா, உன்னை தூக்கிட்டு போறேன்! இதுக்கு போயி அழுவியா?” என கிண்டலில் இறங்க,

“போடா லூசு! இப்படி கூப்பிட்டு அக்கறையா பேச, உனக்கு இத்தனை நாளாச்சா?” அழுகையோடு திட்டியவள், நன்றாகவே அவன் மார்பில் ஒன்றிக் கொண்டாள்.  

வீட்டை விட்டு வந்த தனிமையிலும், குடும்பம் மற்றும் நட்புகளுடன் இருந்து விலகிய கொடுமையிலும் சோர்ந்து போயிருந்த பெண்ணின் மனம், சசிசேகரனின் அன்பான அழைப்பில் ஒட்டு மொத்தமாய் அவனிடம் சரணடைந்திருந்தது.

ஒருவர் மீது ஒருவர் உரசிக் கொண்டு நின்றதில், இருவருக்கும் உணர்ச்சிவசப்பட்ட நிலைதான். ஆனால் விலகிக் கொள்ள நினைக்கவில்லை.

சசிசேகரன் தர்மசங்கடத்துடன் நெளிய தொடங்கினான். மெல்லிய பூவுடல் தனது முரட்டு உடம்பின் மீது பட்டு படர ஆரம்பித்ததில், அவனது புத்தி, உடல், மனம் என சகலமும் ஸ்தம்பித்து போனது.

தன் பொருள், தன் கைக்கு வந்த மகிழ்ச்சியில் மனமும் மூளையும் சந்தோசத்தில் கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து விட, சசியின் கைகள் பெண்ணவளின் இடுப்பினை வாகையாக சுற்றிக் கொண்டன. தன் மீது சாய்ந்திருந்தவளின் தலையை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தவன், நெற்றியில் தன் இதழை ஒற்றியெடுத்தான்.

இவனது செய்கையில் அவள் அசையாது நின்றிருக்க, மேலும் முன்னேற துடித்து, சரண்யாவின் கழுத்து வளைவில் மெலிதாய் ஊதி, கன்னத்தில் தனது முரட்டு உதட்டை பட்டும் படாமல் பதித்தான். 

சரண்யாவின் இடையை சசியின் கைகள் சுற்றிக் கொள்ளவும், அவளின் அழுகை சட்டென்று நின்று விட்டது. அவனது இதழ் கடத்திய மின்சாரத்தில் உடலும் நடுங்கத் தொடங்கி விட்டன.

நடுக்கத்தில் அவனின் இடையை ஆதரவாகப் பற்றிக் கொண்டாள். அந்த செயலே அவனது செயலுக்கு இவள் சம்மதம் சொல்வதைப் போல தொன்றிவிட, சசிசேகரனுக்கு புது தைரியம் பிறந்து, இதழ்களை நோக்கி குனியத் தொடங்கினான்.

மாலை மயங்கும் நேரம், மக்கள் வந்து செல்லும் இடம் தன்னிலை மறந்து நின்ற நொடிநேரத்தை பின்னால் வந்த குதிரை சவாரி சப்தம், இருவரின் சுயத்தை உணரச் செய்தது.

ஒரு நிமிடம் மூளை மழுங்கி, உடலின் கட்டுப்பாட்டில் சென்ற மனதை நினைத்து இருவருக்குமே எரிச்சல் வந்தது. இன்று ஆசைபட்டு, நாளை நடக்காமல் போனால் என்னவாகியிருக்கும் என்ற குற்ற உணர்வில் மனம் தெளிவு பெற்று மீண்டும் நடக்கத் தொடங்கினர்.

“சரண்…” என மெதுவாய் அழைத்தவன், மறக்காமல் அவளின் கைகளை பிடித்துக் கொண்டான்.

“ம்ம்ம்…” என்ற ஒலி மட்டுமே பதிலாக வர,

“பதில் பேசமாட்டியா?” மையல் கடந்து இப்போது நட்பும் அக்கறையும் வந்தமர்ந்து கொண்டது. நொடிநேர சபலம் மனிதரை எப்படியெல்லாம் புரட்டி போட்டு விடுகின்றது?

“ஐ’யாம் சாரி சரண்… நீ அப்படி அழுது, என் தோளை பிடிக்கவும், என்னை மீறி… ரியலி வெரி சாரி…” என்றதற்கும் சரண்யா பதிலேதும் சொல்லவில்லை.

“என்மேல கோபமா? பேசமாட்டியா?” என்றவன் தலை கவிழ்ந்திருந்த முகத்தை நிமிர்த்த, அவளோ தன் பார்வையை வேறுபக்கம் திருப்பினாள்.

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும் கேட்கற மன நிலையில இருக்கியா?” இவனின் கேள்விக்கு ஆமென்று தலையசைக்க,

“உன்கிட்ட பேசாம நான் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணதுக்கு காரணம், உன்மேல இருக்குற பயம்தான்”

“பயமா என் மேலயா?” பார்வையை கூர்மையாக்கி விளங்காமல் பார்த்தாள்.

“ம்ம்… எப்படி பார்த்தாலும் நம்ம ரெண்டு பேர் குடும்பத்துக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. அப்படி இருக்குறப்போ என் ஆசையை சொல்லி உன் மனசை காய படுத்திடுவேனொன்னு தான் உன்னை தவிர்த்துட்டு வந்தேன்.

என் காரணமா, நீ உடைஞ்சு போய் நிக்குறத பாக்குற சக்தி சத்தியமா எனக்கில்ல சரண். ஏற்கனவே ரொம்ப அடிபட்டு நொந்து போயிருக்கேன். இன்னுமொரு பெரிய அடிபட்டா அதுல இருந்து மீண்டு வர்ற தைரியமும் எனக்கில்ல…” என்று முழுவதுமாய் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.

இந்த நேசம் ஒருநாளில் இருவரின் மனதில் உதித்த எண்ணமாக இருக்க வாய்ப்பில்லை. அந்த உணர்வை மனதிற்குள் உரிமையுடன் இருவருமே உரு போட்டிருக்க வேண்டும், இல்லையென்றால் இத்தனை எளிதாக வார்த்தைகளாகவோ செயல்களாகவோ வெளிவராது என இருவருக்குமே தோன்றியது.

“புரியுது சசி… உன்னோட இந்த நிலைமைக்கு காரணமே எங்க குடும்பம்தான். இப்பவும் அப்படிதான் இருக்கு… அப்புறம் எப்படி?” முற்றுப் பெறாத கேள்வியாய் நிறுத்தியதில், வரும் நாட்களில் இவர்களின் உறவு எப்படி என்பதை கேட்காமல் கேட்டு முடித்தாள்.

“எப்பவும் இந்த சூழ்நிலை மாறாம போனா, என்னை விட்டு பிரிஞ்சு போயிடுவியா சரண்?” கேட்டவனின் குரலும், விழிகளும் அத்தனை தவிப்பை வெளிப்படுத்தின.

“நிச்சயமா முடியாது சசி… இனிமேலும் உன் விஷயத்துல பொய்யான முகமுடியை போட்டு வேஷம் போட நான் விரும்பல…” என்றவளின் கண்களில் மீண்டும் நீர் கோர்த்துக் கொள்ள, அந்தகணமே அவனது நேசம் கொண்ட மனம், சந்தோஷ பூக்களை வாரியிறைத்து தன் தேவதையின் கரம் கோர்த்துக் கொண்டது.    

“இது எப்ப இருந்து? நான்தான் லேட் பண்ணிட்டேனா?”

“எனக்கே இப்பதான் பல்பு எரிஞ்சுது. இதுல நான் எப்படி நாளும் கிழமையும் குறிச்சு வைக்க?” நொடிப்பொழுதில் இருவரும் தங்கள் நிலையில் உறுதி கொண்டு சகஜமாகியிருந்தனர்.

“ஒஹ்… அப்ப நீயும் என் கேசுதான்!”

“போடா மடையா! என்னோட பேசமா இருந்துட்டு இப்போ கேசுன்னு சொல்றியா?” மீண்டும் சிணுங்க ஆரம்பிக்க,

“ம்ப்ச்… சரி அழாதே… வெளியே நின்னு அழுதா என்னைத்தான் முறைச்சு பார்ப்பாங்க…” கூறவும் சரண்யா சிரித்தாள்.

“இப்போ என்ன பண்றது?” அறியா குழந்தை போல் இவள் வேடிக்கையாக கேட்க,

“என்ன செய்யலாம்னா… விட்ட இடத்தில இருந்து தொடங்கலாம்” என்றவன் அவள் தோள் தொட்டு அணைக்க வர, சரண்யாவின் முகம் கடுமையை பூசிக் கொண்டது.

“பயப்படாதே… கொஞ்சம் சீரியஸா பேசுவோம்…” என்றவன்

“என்னாலாதான் உனக்கு கெட்ட பேரு… அன்னைக்கு  வீட்டுக்கு போயி நீயாவது உண்மையை சொல்லியிருக்கலாம். உங்க அப்பா கூட அத பத்தி கேட்டுக்கல…” என்றவன் தீவிர குரலில் அவளுக்காக வருத்தப்பட,

“எங்கப்பா என்னைக்கு, என்னை நல்ல விதமா பேசியிருக்காரு? எப்பவும் இப்படிதானே! என்ன… அன்னைக்கு கொஞ்சம் டோஸ் ஜாஸ்தி!” என இவளும் எளிதாக தட்டிக் கழித்து விட்டாள்.

“இப்டி ஒரு விஷயம் யாருக்குமே பிடிக்காது தானே! உன் மனசு ரொம்ப கஷ்டபட்டிருக்கும். யாருமே உன்னை பத்தி யோசிக்கல…” மீண்டும் ஆழ்ந்த குரலில் அவன் கூற,

“விட்டுத் தள்ளு சசி!” என அந்த சம்பவத்தை உதறித் தள்ளியவள், அவனை உற்றுப் பார்த்து,

“என்ன சொல்ல வந்தியோ சொல்லு!” அவனை புரிந்து கொண்டவளாய் கேட்க,

“அது வந்து… நான் வீட்டுல எல்லாத்தையும் சொல்லிட்டேன்!”

“என்ன சொன்ன உங்க வீட்டுல?”

“அன்னைக்கு நடந்த எல்லாத்தையும்…” என்றவன், அன்றைய தினம் தந்தையிடம் நடந்ததை மறைக்காமல் கூறியது, அதன் காரணமே இவர்கள் வீடு மாற்றிக் கொண்டது, தன் தாய், இவளது அன்னையிடம் நடந்ததை விவரித்தது என சகலத்தையும் கூறினான்.

இவனது பேச்சில், தன் அம்மாவிற்கு நடந்த விசயங்கள் எப்படி தெரியவந்தது என்ற சரண்யாவின் நெடுநாளைய கேள்விக்கும் பதில் கிடைத்து விட்டது. சிறிது நேரம் அமைதியாக யோசனையில் இருந்தவள்,

“ஏன் சசி? நீ வீட்டுல சொன்னத, எல்லார் முன்னாடியும் சொல்லி இருக்கலாம் இல்லையா?” கடுமையாகவே கேட்டு விட்டாள்.

இந்த இரண்டு வருடங்களில், தன் தந்தையின் பாராமுகம் அவர் தன்னுடன் பேசாததில் காயம்பட்ட வலி மற்றும் குடும்பத்திலிருந்து அந்நியப்பட்டது என அனைத்தும் சேர்ந்து யோசிக்காமல் அந்த கேள்வியை கேட்க வைத்தது.

வீட்டில் இருக்கும் பொழுதுகளில் எல்லாம், இவள் குறும்பு செய்தால் திட்டுவதற்காவது மகளுடன் பேசிக் கொண்டிருப்பார் சிவபூஷணம். இப்போது அது முற்றிலுமாக நின்று விட்ட பிறகு, அன்று மௌனமாக இருந்தது தவறோ என சரண்யாவின் உள்மனதில் தோன்ற ஆரம்பித்து இருந்தது.

“அன்னைக்கு எனக்கு, என் தங்கச்சி பேர் வெளியே வராம பார்க்க வேண்டியிருந்தது. அதனாலதான் நான் சொல்லல… நீயாவது உங்க அம்மாகிட்ட சொல்லி, அப்பாவுக்கு புரிய வைச்சுருக்கலாம் இல்லையா?” எதிர் கேள்வியாக அவளை கேட்டான்.

இதற்கென்ன பதில் சொல்வாள்? உன் தியாகத்திற்கு மரியாதை செய்வதாக நினைத்து, ஊமையாகி நின்றேன் என சொல்லி தன் மனதை வெளிப்படுத்த, அந்த தருணத்தில் அவள் விரும்பவில்லை.

அப்படியென்றால் இவனின் மீதானா தனது விருப்பம் அன்றிலிருந்தே வெளிப்பட ஆரம்பித்து விட்டதா என அவளின் உள்மனம் கேட்ட கேள்வியில் ஒருநிமிடம் உறைந்தேதான் நின்றாள். 

“இப்ப அத பத்தி பேச வேணாமே சசி?” சங்கடத்துடன் இவள் தவிர்க்க, அவனோ விடாமல் பிடித்துக் கொண்டான்.

“உங்க வீட்டுல யாரும் நம்ம விசயத்த ஏத்துக்க மாட்டாங்க, சரண்! உங்க அண்ணனுங்க பேச்சுதான் முக்கியமா படும்”

“இப்ப அதுக்கு அவசியமென்ன சசி? இன்னும் வருசங்கள் இருக்கு… நீ, துளசிக்கு மேரேஜ் முடிக்கணும். நானும் படிச்சு செட்டில் ஆகணும். அதுக்கு அப்புறமா இத பத்தி யோசிக்கலாமே!” வரிசையாக அடுக்கி, இந்த நிமிட இன்பத்தை கெடுத்துக் கொள்ளாதே என்பதைப் போல் பார்த்தாள் சரண்யா.

“எதுவும் சொல்லாம கடைசி நேரத்துல, நிதானமில்லாம எடுக்குற முடிவால, பாதிப்பு ரெண்டு பக்கமும் இருக்கும் சரண்… அப்படி எதுவும் நடக்க கூடாதுன்னு மெனகெடுறேன் அது தப்பா?”

“நீ நினைக்கிற மாதிரி ஆப்போசிட்டா நடந்தாலும் பாதிப்பு எனக்குதான் சசி! பெத்தவங்க சம்மதம் இல்லாம நாம வாழ ஆரம்பிச்சாலோ இல்ல அவங்களுக்காக பார்த்து உன்னை விட்டு விலகினாலோ எனக்குதான் வலியும் வேதனையும்…” என வெறுமையாக முடித்தவளை, வருத்தத்தோடுதான் பார்த்தான்.

“அந்த வேதனையோட வாழ்நாள் முழுக்க உன்னால என்கூட வர முடியுமா சரண்?”

“எனக்கு, என் வீட்டுல உள்ளவங்க சம்மதம் தேவையில்லை சசி! அம்மா அப்பா வேணும்தான்… ஆனா அவங்க, அண்ணனுங்க பேச்சை கேட்டு எப்ப வேணும்னாலும் நம்மை ஒதுக்கி வைக்கலாம்.

உன்னை பத்தி நல்ல விதமா சொல்லி புரிய வைக்கணும்னா என் கூடப் பிறந்தவங்க தப்பை வெளிச்சப்படுத்தனும். இதெல்லாம் அவ்வளவு ஈசியா நடக்குன்னு எனக்கு தோணல…”

“அப்படின்னா அவங்க சப்போர்ட் நமக்கு தேவையில்லைன்னு சொல்றியா?”

“எப்படியும் எங்கோயோ ஒரு இடத்தில என்னை கட்டிக் கொடுத்து, மறுபடியும் என்னை அவங்ககிட்ட இருந்து ஒதுக்கி வைக்கத்தான் போறாங்க… அதுக்கு என் மனசுக்கு பிடிச்ச உன்னோட வாழுறதுல என்ன தப்பு?”

“நீ பேசுறது விதண்டாவாதம் சரண்…”

“நமக்கு அவங்க சம்மதம் வேண்டாம்னு சொல்றேன். என் வீட்டுல என்ன சொல்றாங்கன்னும் எனக்கு தேவையில்லை. எல்லாத்தையும் விட்டுட்டு நம்ம வாழ்க்கையை அமைச்சுக்க நான் தயாரா இருக்கேன்…” என இவள் ஆணித்தரமாய் பேச இவன்தான் அசந்து போனான்.

“நீ பேசுறது சினிமா, டிராமாக்குதான் ஒத்து வரும் சரண்… ஒரு பொண்ணா, உன்னோட அப்பா அம்மா சம்மதிச்சு கல்யாண நடக்கிறதுதான் முக்கியம். நாலு பேர் முன்னாடி அவங்க உனக்காக தலை குனியக் கூடாது.”

“ஷ்ஷ்… இப்ப நீ சொல்றதுதான் செம செண்டிமென்ட் சீனா இருக்கு…” என்றிவள் உதட்டினை சுழிக்க,  

“என்ன வேணும்னாலும் நினைச்சுக்கோ! முயற்சி பண்ணி பார்க்காம, அவங்களை ஒரேடியா ஒதுக்கி வைக்கப் போறேன்னு சொல்றத என்னால அனுமதிக்க முடியாது. அப்படி ஒரு வாழ்க்கை நமக்கு தேவையே இல்ல…” நொடியில் கோபத்தில் வெடிக்க ஆரம்பித்திருந்தான்.

“சரி டென்ஷன் ஆகாதே… டைம் கிடைக்கும் போது நம்ம விஷயத்தை சொல்லப் பார்க்குறேன் சசி!” என அவனை அமைதிப்படுத்த,

“அவங்க சம்மதம் இல்லாம, எதுவும் நடக்க கூடாது சரண்! இதை எப்பவும் மறக்காதே” உத்தரவாக சொல்லி முடித்தான்.  

“நீ கொஞ்சம் அறிவாளி, தைரியசாலின்னு நினைச்சேன் சசி! ஆனா நீயும் ஒரு கோட்டுக்குள்ள தான் நிப்பேன்னு பிடிவாதம் பிடிக்கிற…”

“தங்கையோட எதிர்காலத்த தோள்ல தூக்கி சுமக்கிற சராசரி அண்ணன்மா நானு… யதார்த்தம் என்னான்னு யோசிக்கும் போது, அறிவும் தைரியமும் ரெண்டாம் பட்சமாதான் நிக்கும். நம்ம வாழ்க்கை அடுத்தவங்க எதிர்காலத்துக்கு முட்டுகட்டையா இருக்கக் கூடாது.

துளசிய கார்னர் பண்ணி, உங்க வீட்டுல நம்மை பிரிக்கவும் கூட வாய்ப்பிருக்கு. அதுக்கு நாமளே முன்கூட்டியே கோடுகாட்டி, நம்ம பக்கம் அவங்கள திருப்புறது நல்லதில்லையா?” என தெளிவாக உரைத்தவனை பெருமையாக பார்த்தாள்.

எப்படி இவனால் மட்டும் எப்பொழுதும் மற்றவர்களுக்காகவே யோசிக்க முடிகிறது? எல்லோரும் வேண்டுமென நினைக்கும் நல்லவர்களைதான் உலகம் ஏசிக் கொண்டிருக்கும் என்பது இவன் விசயத்தில் உண்மைதானோ…

வார்த்தைகள் இல்லா ஆனந்தத்தில் சசிசேகரனின் தோளில் சாய்ந்து கொண்டாள். தானாக ஒரு திடம் மனதில் உருவாகியிருந்தது. என்ன நடந்தாலும் இவனுக்கு மறுபடியும் துன்பமேற்படும் வகையில் நடந்து கொள்ளகூடாது.

வீட்டில் அம்மாவின் மூலம் அப்பாவிடம் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கிவிட வேண்டும். எக்காரணம் கொண்டும், தன்னை அலட்சியப்படுத்தும் உடன்பிறப்புகளின் அவமதிப்பை இனியும் சகித்துக் கொள்ளக் கூடாது என்று முடிவும் அந்த நேரத்தில் வலுப்பெற்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!