சில்லென்ற தீப்பொறி – 11

 

சலவாரைச் சாரா விடுதல் இனிதே

புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே

மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்

தகுதியால் வாழ்தல் இனிது.

விளக்கம்

வஞ்சகர்களை நீக்குதல் இனியது. அறிவுடையாருடைய வாய்மொழிச் சொற்களைப் போற்றுதல் இனியது. பூமியில் வாழ்கின்ற உயிர்கள் உரிமையுடன் வாழ்தல் இனிது.

 

சில்லென்ற தீப்பொறி – 11

கண்டிப்பும் கறாருமாய் மனைவியிடம் கொந்தளித்து விட்டுச் சென்ற அமிர்தசாகரின் செய்கைகள் எல்லாம் வழமையாகவே இருந்தன.

‘மனச் சுணக்கங்கள், அதிருப்திகள் எல்லாம் உனக்கு தானே, எனக்கில்லையே’ என்னும் தோரணையில் தனது அன்றாடங்களை மனைவியிடம் ஒப்பிவித்து, அவளிடமிருந்தும் கேட்டுக் கொண்டான் அமிர்.  

தொடர்ந்து வந்த நாட்களில் காணொளி அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் இவர்களது இல்லறம் தங்கு தடையின்றி ஷேமமாகவே சென்றது.

மனைவியை சீண்டி விட்டு, அவளின் வெட்க சங்கோஜ பேச்சுக்களை கேட்டு மகிழ்ந்ததெல்லாம் நீங்காத எண்ணங்களாயின. லக்கீஸ்வரியும் அவனுக்கு தோதாக பின்பாட்டு பாடியும் பொம்மையாக தலையசைத்தும் பேசிச் சிரிக்க, மனைவி தன்னுடன் வெளிநாடு வர முடிவெடுத்து விட்டாள் என்றே எண்ணினான் அமிர்.

மூன்று மாதங்கள் கழித்து கோவைக்கு வந்தவன் மனைவியை கையோடு அழைத்துக் கொண்டு போகும் முடிவுடன் நேரடியாகவே மாமனார் வீட்டில் வந்து இறங்கினான்.

கணவன் வந்தவுடன் அவனது கைப் பாவையாக மாறி கூடி கழிப்பதில் எல்லாம் லக்கியும் சுணக்கம் காண்பிக்கவில்லை. தந்தையை பற்றி அவன் பேசும்போது மட்டுமே வெளிப்படையாக வருத்தத்தை காட்டினாள் லக்கி.

“என்கூட சகஜமா இரு, எப்பவும் போல என்கிட்ட பேசு மின்னி. உன் அப்பா பத்தின பேச்சை மட்டும் எடுக்காதே!” கணவனது புன்னகையின் நடுவே கண்டிப்பும் தெரிய, ஒரு கணம் அவள் முகம் சுணங்கி மீண்டும் பிரகாசமாகியது.

மருமகனின் வருகைக்காகவே தவமிருந்தது போல் சந்தோச பூரிப்புடன் வரவேற்ற மாமனாரின் அழைப்பை அமைதியுடன் தலையசைத்து ஏற்றுக் கொண்டான்.

“நீ வந்ததுல ரொம்ப சந்தோசம் அமிர். என் பொண்ணும் மாப்பிள்ளையும் ஒன்னா. என் வீட்டுல இருக்குறதை பார்க்காமலேயே போயிடுவேனோன்னு ரொம்பவே கவலைப்பட்டேன். அதை போக்கிட்ட நீ!” ரெங்கேஸ்வரன் நெகிழ்ச்சியாய் கூறும்போது அவனால் பதில் பேச முடியவில்லை.

‘நீ ஏன் பேச மாட்ட மாமனாரே? என்னை கரெக்டா கோல் போட்டு அவுட் பண்ணனும்னே, நீ பொண்ணை பெத்து வச்சுருக்க… உனக்கு வாய்த்த மாப்பிள்ளை மிகவும் தேர்ந்த இளிச்சவாயன்னு காலரை தூக்கி விட்டுக்கோ!’ அலுப்புடன் மனதிற்குள் புழுங்கிக் கொண்டான் மருமகன்.

இவன் வந்த அடுத்த நாளே மாமனார் வியாபார விசயமாய் வெளியூருக்கு கிளம்பி விட்டார். தம்பதிகளின் தனிமைக்கு நாசூக்காய் அவர் சாலை வகுத்து விட்டுப் போக, அடுத்தடுத்த வேலைகளில் இறங்கினான் அமிர்.

நகமும் சதையுமாய் இருந்த தம்பதிகள், கீரியும் பாம்புமாய் தனித்தனியே பிரிந்து நின்ற தருணங்கள் அன்றிலிருந்து ஆரம்பமாயின. கடவுச் சீட்டு புதுப்பிப்பு(பாஸ்போர்ட் ரினுவல்) மற்றும் அயல்நாட்டு நுழைவுச் சான்று(விசா) வாங்குவதற்காக மனைவியை அழைத்துக் கொண்டு, சம்மந்தபட்ட அலுவலகத்தின் முன் அமிர் சென்று நிற்க, அங்கே முரண்பட்டாள் லக்கீஸ்வரி.

“எத்தனை வருஷ கான்ட்ராக்ட்ல சைன் பண்ணி இருக்கீங்க?” காரிலிருந்து இறங்காமலேயே லக்கி கேட்க, பல்லைக் கடித்தான் அமிர்.

‘அலுவலக வாயிலில் வந்துவிட்டு கேட்கும் கேள்வியா இது?’ என மனைவியை கண்டனப் பார்வையுடன் பார்க்க,

“வீட்டுல இருந்து கிளம்பும் போதே இங்கேதான் போகப் போறோம்னு சொல்றதுக்கென்ன? எனக்கு பதில் சொல்லிட்டு முறைச்சு பாருங்க.” அவனது கண் பார்வைக்கே பதில் பேசினாள் லக்கி.

“அப்படி எந்த பாண்டுலயும் சைன் பண்ணல. ஃலைப் லாங் அங்கேதான்னு நான் முடிவு பண்ணிட்டேன் மின்னி.” சர்வசாதாரணமாய் கூறினான் அமிர்.

“அப்போ நம்ம வீடு, எங்கப்பா பிஸ்னெஸ், பிராபர்டீஸ் எல்லாத்துக்கும் யார் பொறுப்பெடுத்துக்க போறா?” புரியாமல் லக்கி கேட்க, அலட்சியமாய் முகத்தை சுளித்தான் அமிர்.

“வீட்டுக்கு டோக்கன் அட்வான்ஸ் வாங்கியாச்சு. சித்தப்பா வீட்டு மாடிரூம்ல நம்ம வீட்டு திங்க்ஸ் எல்லாமே ஒதுக்கியாச்சு. ஆல்மோஸ்ட் ஓவர்.

அப்புறம் உங்கப்பா பிஸ்னெஸ்… அது நமக்கெதுக்கு மின்னி? அவருக்கு யார் மேல் நம்பிக்கையோ அவங்களை வச்சு நடத்திக்க சொல்லு. இல்லன்னா, கை மாத்தி விடச் சொல்லு. இதை எல்லாம் எதுக்கு பெரிய இஸ்யூ ஆக்குற? எந்த காரணத்துக்காகவும் உன்னை இங்கே விட்டுட்டு போற ஐடியா எனக்கில்ல.” தீர்மானமான குரலில் அமிர் கூற வெகுண்டு போனாள் லக்கி.

“உங்க பக்கம் இருந்து எல்லாமே கிளியர் பண்ணத் தெரிஞ்ச உங்களுக்கு, என் பக்கம் இருந்து யோசிக்க தெரியலையா இல்ல மறந்து போச்சா? எங்கப்பா தொழில் வேணாம், ஆனா அவரோட பொண்ணு வேணும், அவ மூலமா வர்ற சொத்து மட்டும் வேணுமா?” கோபக்குரலில் கேட்க, அவனுக்கும் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.

“வார்த்தையை இஷ்டத்துக்கு விடாத… என்னமோ நான் உன்ன, உன் சொத்து மேல ஆசைப்பட்டு வம்படியா கட்டிகிட்ட மாதிரி பேசுற?”

“அப்போ எனக்கு வாழ்க்கை பிச்சை போட்டேன்னு சொல்றீங்களா? எங்கப்பாவா தேடி வந்து பொண்ணு கொடுத்ததுக்கு முடிஞ்ச அளவுக்கு ரொம்ப பெரிய மாரியாதைய அவருக்கு பண்ணிட்டீங்க!” பொறுமையாக பேசித் தீர்க்க வேண்டியவைகளை அவசரகோலத்தில் வாகனத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர் இருவரும்.

“ஏய், உங்கப்பாவை பத்தி பேசாதேன்னு சொல்லிட்டேன்.”

“சரி என்னை பத்தி பேசுறேன். உங்களை கல்யாணம் பண்ணிகிட்டதால உங்களுக்கு அடிமையா உங்களை டிபெண்ட் பண்ணியே நான் வாழணுமா? எனக்கான பொறுப்புக்கள எடுத்து செய்யக் கூட எனக்கு சுதந்திரம் இல்லையா?” மூச்சு முட்டிப் போகும் அளவிற்கு கோபங்கள் ஏறியிருக்க, லக்கியின் வார்த்தைகள் வரைமுறை இல்லாமல் வந்து விழுந்தன.

“புரியாம பேசாதே மின்னி… உன்னை யாரும் வீட்டுலயே தனியா அடைச்சு வைக்கப் போறதில்ல. அங்கே ஏதாவது கோர்ஸ் எடுத்து படி! கொஞ்சநாள் என்கூட தங்கியிருந்தா, என் ஜாப் நேச்சர் சொல்லியே, உனக்கும் பெர்மிட் வாங்கிடலாம். அடுத்து நீ வேலைக்கு போகணும்னாலும் போயிக்கலாம்.” அமிர் சமாதானங்களை கூற அவளின் அகமும் புறமும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. 

இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்கும் பாசாங்குகாரனாகவே லக்கியின் கண்களுக்கு தெரிந்தான் அமிர்தசாகர். இவனிடம் சொல்லிப் புரிய வைக்கும் சாமர்த்தியம் சத்தியமாக தனக்கில்லை என்கிற தோல்வி மனப்பான்மை அவளிடத்தில் வந்தே விட்டது.

“என்னால டிபெண்டிங் விசால எங்கேயும் வர முடியாது. எல்லாத்தையும் அம்போன்னு விட்டுட்டு வர்ற பெரிய மனசெல்லாம் எனக்கு இல்லவே இல்லை.” அழுத்தமாக கூறி மீண்டும் தன் வாதத்தில் அவள் நிற்க, வெளியிடம் என்றும் பாராமல் கத்தி விட்டான் அமிர்.

“உன் இஷ்டத்துக்கே பேசி சாதிக்கிறதுக்கா என் பின்னாடி வந்த? வீட்டு ஆம்பளையோட வேலையை அனுசரிச்சு, குடும்பத்துல இருக்குற மத்தவங்களோட வேலை, பழக்க வழக்கத்தை எல்லாம் மாத்தி அமைச்சுக்கணும். அதை உனக்கு யாரும் எடுத்துச் சொல்லலையா?

எல்லா விசயத்துக்கும் எதிர்த்து பேசி திமிர்த்தனம் பண்ணிட்டு இருந்தா, சரிதான் போடின்னு போயிட்டே இருப்பேன்.” பிரிவைப் பற்றிய பேச்சினை கணவன் மீண்டும் எடுக்க, இவளுக்கும் மனம் விட்டுப் போனது.

“போங்களேன்! யாரு உங்கள இங்கே கட்டி வைக்கிறா? எந்த நேரமும் உங்களை மட்டுமே சுத்துற ரோபட்டா இருக்க நான் விரும்பல… உங்களை தாண்டிய உலகத்தை யோசிக்க தெரியாதவருக்கு, குடும்பம் பொண்டாட்டி எல்லாம் தேவையே இல்ல?” குமுறிக் கொட்டியவளின் மனமெல்லாம் ரணபட்டுப் போனது.

‘குடும்ப வாழ்க்கை என்பது இப்படித்தான் என்றால் அனுபவித்த வரை போதுமே’ என்ற முடிவினை நொடி நேரத்தில் எடுத்திருந்தாள் லக்கி.

“உனக்கெல்லாம் சொன்ன புரியாது. பட்டாதான் புத்தி வரும் அனுபவி!” என்று கரித்துக் கொட்டியவன், அதே வேகத்தில் வீட்டிற்கு இழுத்துக் கொண்டு வந்தான். அடுத்தடுத்த நாட்களில் தனியே வெளிநாட்டிற்கு பயணம் கொள்ள ஆயத்தமானான்.

இரண்டு நாளில் வெளியூரில் இருந்து திரும்பிய ரெங்கேஸ்வரனுக்கு மகளின் சோர்ந்த முகம், கலவரம் கொள்ள வைத்தது.

மீண்டும் என்ன பிரச்சனையோ என்ற கலக்கத்துடன் அவளிடம் கனிவாக பேசியே அமிரின் பயணத்தையும் இருவரின் பிரிவினை முடிவினையும் தெரிந்து கொண்டார்.

“அவன் கூட போக மாட்டேன்னு, நீயும் ஏன் மா அடம்பிடிக்கிற?” தந்தை அமைதியாக கேட்க,

“அவர் கூட போற முடிவுலதான் நான் இருந்தேன் ப்பா. ஆனா, அவர் இங்கே திரும்பி வர்ற யோசனையே இல்லன்னு சொல்றாரே… அதை என்னால ஏத்துக்க முடியல.

எனக்கு நீங்க முக்கியம், உங்க உழைப்புல உருவான நம்ம தொழிலும் முடங்கிப் போகாம நல்லபடியா நடத்திக் காட்டுற ஆசையும் கடமையும் எனக்கிருக்கு. அதுல இருந்து எப்பவும் பின்வாங்குற எண்ணமே எனக்கில்ல ப்பா.

கொஞ்சநாளோ, வருசமோ அங்கே இருந்து திரும்பி வர்றதா இருந்தா மட்டுமே அவர்கூட கிளம்பிப் போற ஐடியா எனக்கிருந்தது. அது சரியா வரலன்னா, அவர் முடிவு என்னவோ அதுக்கு தலையாட்டுற முடிவுக்கு நான் எப்பவோ வந்துட்டேன்.” தனது உறுதியான தீர்மானங்களை தந்தையிடம் லக்கி வெளிப்படுத்தி விட, யார் பக்கம் நின்று பேசுவதென்று ரெங்கேஸ்வரனுக்கே தெரியவில்லை.

தனது பொறுமைக்கும் சவால் விடும் விதமாக இருந்த இவர்களது முடிவை பெரியவரால் அத்தனை எளிதாய் எடுத்துக் கொள்ள முடியவில்லை.

இதற்கொரு முற்றுபுள்ளி வைத்தே ஆக வேண்டுமென்று குடும்பத்து பெரியவர்களை அழைத்து பஞ்சாயத்து பேச வைக்க, அதற்கும் அசைந்து கொடுக்கவில்லை அமிர்தசாகர்.

‘யாரை அழைத்து பேச வைத்தாலும் நான் மசியமாட்டேன். என் சுயமுயற்சி ஒன்றே எனக்கு போதும். எனக்கு யாரும் வேண்டாம், எதுவும் வேண்டாம். என்னையும் யாரும் தேட வேண்டாம்.” இப்படியான எகத்தாள பேச்சுக்களும் அகங்கார வார்த்தைகளையும் பெரியவர்களிடம் கொட்டிவிட்டு மாமனார் வீட்டை விட்டு வெளியேறினான் அமிர்தசாகர்.

அப்படி கோபத்தில் வெளியேறியும் மனைவியை அலைபேசியில் அழைத்து, ‘நமக்கிடையே நடந்த பேச்சினை எதற்காக சபை ஏற்றினாய்?’ என்று கடிந்து கொள்ளவும் முழுதாய் வெறுத்துப் போனாள் லக்கீஸ்வரி.

“ரெண்டு பேரோட மனசும் ஒத்துப்போன லவ் மேரேஜா இருந்திருந்தா இப்படி பிரிஞ்சு போகணும்னு நினைப்பீங்களா? என்னை அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுப்பீங்களா?” ஆற்றாமை கேள்விகளை கணவனின் முன்வைத்தவள் முடிவில்,

“உங்களை விட்டு விலகுற முடிவுக்கு நானும் வந்துட்டேன். இனி எங்கப்பாவை சாமாளிக்கிறது என்னோட வேலை. உங்க வழிக்கு நானும் வர விரும்பல சாகர்.” வெடித்து பேசி முடித்தாள்.

இதோ அமிர், இவளுடன் கோபித்துக் கொண்டு சென்று இன்றுடன் ஒருவாரம் முழுதாய் முடிந்து விட்டது. இந்த நிலையிலும் அவளால் கணவன் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டான் என்ற நிதர்சனத்தை முழுதாய் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நான்கு நாள் கோபத்திற்கு பிறகு அலைபேசியில் அவனை அழைத்து பேசலாம் என்றாலும் அது எந்நேரமும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டிற்கு சென்று சேர்ந்து விட்டான் போலும் என தன்னைத்தானே சமாதானபடுத்திக் கொண்டாள்.

அமிரின் சித்தப்பா குடும்பத்தில் யாரிடமாவது அவனது அலைபேசி எண்ணை கேட்டால் கொடுத்து விடுவார்கள்தான். ஆனால் அப்படி கேட்க அவளின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.

அலைகழிப்புடன் இப்படியே பத்து நாட்கள் செல்ல, அமிரின் பெயரினை கூறிக்கொண்டு அவனது வழக்கறிஞர் ரெங்கேஸ்வரனை தேடி வந்தார்.

“நான் லாயர் கணேஷ்… உங்க மாப்பிள்ளை அமிர்தசாகர் உங்களை பார்க்க சொன்னாரு. உங்க பொண்ணையும் வரச் சொல்லுங்க சில விவரங்கள் சொல்லணும்.” என்றவர் லக்கி வந்து அமர்ந்ததும் மேற்கொண்டு பேச ஆரம்பித்தார்.

“பொதுவா என் ஜூனியரைதான் அனுப்பி வைப்பேன். ஆனா அமிர் ரொம்பவே கேட்டுகிட்டதால நானே வந்திருக்கேன். அவர் ஜெர்மனுக்கு போறதுக்கு முன்னாடி மியூட்சுவல் டிவோர்ஸ் பேப்பர்ஸ்ல சைன் பண்ணி எல்லா டாக்குமெண்டும் சப்மிட் பண்ணிட்டாரு.

ரெண்டு பக்கமும் டிவோர்ஸ் கேக்குறதால அவர் மனைவி அதாவது மிசஸ்.லக்கீஸ்வரி சார்பாவும் என்னையே கேஸ் ஃபைல் பண்ணி டிவோர்சை முடிச்சு குடுக்க சொல்லியிருக்காரு.

உங்களுக்கு இந்த ஏற்பாடு பிடிக்கலன்னா, நீங்க வேற ஒரு வக்கீலை வச்சு கேஸ் ஃபைல் பண்ணணும்னாலும் அவருக்கு சம்மதம்தான்.” எனத் தொடர்ந்தவர் வழக்கின் சாராம்சங்களை உரைத்து இரண்டு நாட்களில் மீண்டும் வருவதாக கூறிவிட்டு சென்றார்.

“நீ வக்கீலை தேடி அலையுற வேலைய கூட உனக்கு மிச்சமாக்கிட்டு போயிருக்கானா? இவ்வளவு அக்கறை இருக்கறவன் எதுக்கு விவாகரத்து வேணும்னு பிடிவாதம் பிடிக்கிறான்?” கவலையுடன் ரெங்கேஸ்வரன் யோசிக்க,  

“இது அக்கறை இல்லப்பா… என்னோட விசயத்துல அவரை தவிர வேற யாரும் முடிவெடுக்க கூடாதுங்கிற மனோபாவம். ஹீ இஸ் சோ டாமினேடிங் மீ…” லக்கி சலித்துப் போன குரலில் கூற, மகளின் வார்த்தைகளில் வாயடைத்துப் போனார் தந்தை.

அடுத்த வந்த இரண்டு நாட்களில் அமிர் அனுப்பி வைத்த  கணேஷை வரவழைத்து தனது ஒப்புதலையும் அளித்த லக்கீஸ்வரி, வழக்கிற்கான முன்னேற்பாடுகளையும் விரைந்து செய்யுமாறு கேட்டுக் கொண்டாள்.

விவாகரத்து ஒன்றே உறுதியான முடிவென தீர்மானித்து அவர்களாகவே காரியத்தை நடத்திக் கொள்ளும் போது இரு பக்கத்து பெரியவர்களால் நடப்பதை தடுத்து நிறுத்த முடியவில்லை. நிலைமை கைமீறிப் போய் விட்டபிறகு அதட்டி, மிரட்டி ஆகப் போவதென்ன?

இருவரின் வேலை நிமித்தங்கள், நேர மாற்றங்களை எல்லாம் அனுசரித்து வழக்கின் முதற்படியான முதல் கட்ட ஆலோசனை அமர்விற்கு(கவுன்சிலிங்) பதினைந்து நாட்கள் கழித்து நாள் குறிக்கப்பட்டது.    

அந்த அமர்வில் இவர்களின் விவாகரத்து வழக்கினையே அசைத்துப் பார்க்கும் வண்ணம் முட்டுக்கட்டையாக வேறொரு தடைக்கல் வந்து நிற்க, வழக்கினை தள்ளுபடி செய்து இருவரையும் சேர்ந்து வாழ பணித்தது குடும்ப நல நீதிமன்றம்.  

 

 

பிறன்கைப் பொருள்வெளவான் வாழ்தல் இனிதே

அறம்புரிந் தல்லவை நீக்கல் இனிதே

மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்

திறந்தெரிந்து வாழ்தல் இனிது.

 

விளக்கம்

பிறருடைய கைப்பொருளை அபகரிக்காமல் வாழ்வது இனியது. தர்மம் செய்து பாவத்தை நீக்குதல் இனிது. மாட்சிமை இல்லாத அறிவிலிகளைச் சேராத வழிகளை ஆராய்ந்து வாழ்தல் இனிது.