சில்லென்ற தீப்பொறி – 4

ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்இனிதே

பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே

வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்

காப்படையக் கோடல் இனிது.

 

சில்லென்ற தீப்பொறி – 4

அமிர்தசாகர், தனது இன்டெர்ன்ஷிப்பின் போதே, இந்தியாவின் முத்திரை பதித்த பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டான். பின்னர் அதே நிறுவனத்தில் உள்நாட்டு வெளிநாட்டு ஏற்றுமதி பிரிவில் ஜூனியர் மார்க்கெட்டிங் அசிஸ்டெண்ட்டாக பணி நியமனம் கிடைத்தது.

படித்த படிப்புக்கேற்ற மனதிற்கு பிடித்தமான உத்தியோகம் கிடைத்ததில், மிகுதியான ஆர்வத்துடனும் திறமையுடனும் அயராது உழைத்தான். அதற்கு கைமேல் பலனாக இரண்டே வருடத்தில் சீனியர் மார்க்கெட்டிங் ஆபிசராக தனது பிரிவில் பதவி உயர்வு பெற்றான்.

தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில் வயதும் அனுபவத்தையும் விட, ஊக்கத்தையும் ஆக்கத்தையும் மட்டுமே முன்னிறுத்தி பதவி வருவதும் போவதும் வழக்கம்.

இவனது கடின உழைப்பிற்கு அன்பளிப்பாக பதவியும் அதிகப்படியான ஊதியமும் கொடுத்து மேலும் பல சலுகைகளையும் அள்ளிக் கொடுத்தது நிறுவனம்.

அதற்கு கைமாறாக இவன் முன்னிலும் விட அதிக உழைப்பையும் கவனத்தையும் பணியில் காட்ட வேண்டி வர, தயங்காது உழைத்தான்.

மாதத்தில் நான்குநாள் விடுப்பி‌ல் மட்டுமே சொந்த ஊரில் இருப்பவன், மற்ற நாட்களில் எல்லாம் ஊரும், நாடும் என மாறிமாறி பறந்து கொண்டிருப்பான்.

மொத்தத்தில் தனக்கு வேலையளித்த நிறுவனத்திற்கு மிக விசுவாசமான நம்பகமானவன் என்கிற நற்பெயரை பணியிடத்திலும் வெளியிடத்திலும் பெற்றிருந்தான் அமிர்தசாகர்.

இவனது வேலை ஏற்றுமதிக்கான ஆர்டர் எடுப்பதோடு முடிந்து விட்டாலும், அது இறுதியாக உரிய இடத்திற்கு சென்று சேரும்வரை, அதை பின்தொடர்வதே இவனின் சிறப்பு.

சுயமுயற்சியுடன் மிகக் குறுகிய காலத்தில் புகழின் உச்சியை எட்டியவனுக்கு ஆணவமும் அகங்காரமும் மகுடமாகி, அவன் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டது. இது உலக நியதியே!

தான் சிறந்தவன் அனைத்தும் அறிந்தவன் என்கிற அகங்காரத்தில், அனைவரையும் அலட்சியத்துடன் பார்த்து, தள்ளியே நிறுத்தி வைத்தான். தன்னை அரவணைக்கும் உறவுகளிடமும் அதே தோரணையை கடைபிடித்தான்.

இவனது ஆணவப்பார்வையும், அலட்சிய மனோபாவமும் தந்தை சடகோபனிடமும் எதிரொலித்ததில், உள்ளம் புண்பட்டுப் போனார். இடைபட்ட காலத்தில் தாயில்லாமல் சுயமாகவே வளர்ந்தவனின் பண்பு, அவனை முழுவதுமாக புரட்டிப் போட்டிருந்தது.

பதினெட்டு வயதின் தொடக்கத்தில் இருந்தே யாரையும் சார்ந்திராமல், வளர ஆரம்பித்தவன் அமிர்தசாகர். இவனது இயல்புகளையும், இவனது விருப்பத்தின் அடிப்படையில் வழக்கமாக்கிக் கொண்டு அதையே பழக்கிக் கொண்டான்.

யார், என்ன என்றெல்லாம் பார்க்காமல், வயது வித்தியாசமின்றி தரம் தாழ்த்திப் பேசவதில் மிகக் கெட்டிக்காரனாகிப் போனான்.  

எல்லோரையும் அலட்சியமான பாவனைகளுடன் மட்டுமே எதிர்கொள்வான். மகனின் நிலையை எண்ணி சங்கடப்பட்டுக் கொள்ளும் சடகோபன், ஆறுதலைத் தேடி நண்பன் ரெங்கேஸ்வரனிடம் புலம்புவதும் வழக்கமாகிப் போயிற்று.  

“என் பையனோட நடவடிக்கையும் சுபாவமும் நாளுக்குநாள் மோசமாகிக்கிட்டே போகுது ரெங்கா. இப்படி திமிரா நடந்துகிட்டா இவன் எதிர்காலம் எப்படி இருக்கபோகுதுன்னு தெரியல?” நண்பனிடம் சடகோபன் பெரிதாக ஆதங்கப்பட,

“உன் பையனுக்கு என்ன குறைன்னு இப்படி வேதனைபடுற கோபி? இந்த வயசுலயே சுயம்புவா தன்னை செதுக்கிட்டு நிக்கிறான். இந்த உறுதிதான் எதிர்காலத்துல எந்தவொரு கஷ்டத்தையும் தாங்கிக்கிற பக்குவத்தை கொடுக்கும்.

தனக்கான அடையாளத்தை முன்னிறுத்த போராடுறவனோட மனப்பான்மை இது. எனக்கு இப்படி ஒரு பையன் இல்லையேன்னு நான் எவ்வளவு வருத்தபடுறேன் தெரியுமா?” பெருமிதத்துடன் கூறி, தனது மனத்தாங்கலையும் வெளிப்படுத்தினார் ரெங்கேஸ்வரன்.

“உனக்கென்னடா! தேவதை மாதிரி பொண்ணு இருக்கா… அவகிட்ட என்ன குறை இருக்குன்னு, பையன் இல்லைன்னு வருத்தப்படுற நீ?” சடகோபன் உரிமையோடு நண்பனை கடிந்து கொள்ள,

“அவ மேல குறை சொல்லல கோபி! பொண்ணுங்ககிட்ட இத்தனை எதிர்பார்ப்பை வைக்க முடியுமா? எனக்கு பிறகு என் தொழிலை பார்த்துக்கற நம்பிக்கையானவனை, எனக்கு மாப்பிள்ளையா பார்த்துட்டு இருக்கேன். ஒண்ணுமில்லாத ஆம்பளைங்கதான், வீட்டோட மாப்பிள்ளையா இருக்க ஓடோடி வர்றாங்க…

அப்பேற்பட்டவனை நம்பி எப்படி தொழிலையும் பொண்ணையும் ஒப்படைக்க முடியும்? முப்பத்தைந்து வருஷமா கட்டிக் காப்பாத்திட்டு வர்ற தொழில்டா… நினைச்ச நேரத்துக்கு இடத்த மாத்தவோ, வியாபாரத்தை நிறுத்தவோ முடியாது. அதை ஒருநாளும் நடக்க விடமாட்டேன்!” ஏக்கப் பெருமூச்சுடன் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார் ரெங்கேஸ்வரன்.  

“நாங்கெல்லாம் எதுக்காக இருக்கோம்? ஊரெல்லாம் சல்லடை போட்டு அலசி நல்ல மாப்பிள்ளைய கொண்டு வந்து நிறுத்திடலாம்டா… கவலைப்படாதே!” ஆருயிர் நண்பனுக்கு நம்பிக்கையளித்தார் சடகோபன்.

“இருபத்திரெண்டு வருஷமா கண்ணுலயே பொத்தி வளர்த்த பொண்ணை, என் கடைசி காலத்துல விட்டு பிரிஞ்சு வாழுற தைரியம் எனக்கில்ல… பொறுப்பான ஒருத்தன் மாப்பிள்ளையா வரணும்னு கடவுள்கிட்ட வேண்டுறேன்.

மொத்தத்துல என் தொழிலையும் என்னையும் சேர்த்தே தாங்கிக்கிற ஒரு மகனைத்தான் தேடிகிட்டு இருக்கேன். அப்படி யார் கிடைப்பா?” பெரும் ஆற்றாமையில் பேசிக் கொண்டே போனார் ரெங்கேஸ்வரன்.

பல அலசல்கள் பல விளக்கங்கள் நண்பர்களிடத்தில் பகிர்ந்து கொள்ளப்பட, இறுதியில் இருவரும் சம்மந்தி முறையை ஏற்படுத்திக் கொண்டால் என்ன என்ற பேச்சில் வந்து நின்றனர்.

அந்தஸ்தை பொருட்படுத்தாமல் ரெங்கேஸ்வரன் தான், முதலில் பிள்ளைகளின் திருமணம் பற்றி பேச ஆரம்பித்தார்.

“ஒரே தொழிலை செய்யணும், ரெண்டு பேரும் குடும்பமா அன்னியோன்யமா ஒரே வீட்டுல வாழணும்னு ஆரம்பகாலத்துல ஆசைபட்டோம். அதுதான் நடக்கல. கடைசி காலத்துலயாவது ரெண்டு பேரும் சேர்ந்து இருப்போம்டா கோபி!

உன் வேலைக்கும் வி.ஆர்.எஸ். கொடுத்திடு! நம்ம பசங்கள தொழிலை எடுத்து நடத்தச் சொல்லுவோம். அவங்க குடும்பமும் தொழிலும் நடத்துற அழகை பார்த்து நீயும் நானும் மிச்ச காலத்தை ஓட்டுவோம்! சரின்னு சொல்லுடா!” உத்தரவாகவே கூறி முடித்தார்.

தனியாளாகவே காலத்தை கடத்திக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு, உறவினை அடித்தளமாகக் கொண்டு இரு குடும்பமும் சேர்ந்து இருப்பதில் பெரிய தவறொன்றும் இருப்பதாகத் தோன்றவில்லை. இதுவே வீட்டுப் பெண்கள் இருந்திருந்தால் அவர்களின் கண்ணோட்டமே வேறாய் இருந்திருக்கும்.

முழுக்க முழுக்க ஒரே தொழிலைச் சார்ந்து இரண்டு குடும்பங்கள், ஒரே வீட்டில் வாழத் தொடங்குவதில் இருக்கும் பேதங்களை எடுத்துக் கூறி, ஆரம்பத்திலேயே தடுத்திருப்பர் அந்த குடும்பத்து பெண்மணியினர்.

திருமணம் முடிக்கப் போகும் இருவருக்குமான விருப்பங்கள், படிப்பு, சுபாவங்கள் என அனைத்தையும் அலசி ஆராயத் தொடங்கியிருப்பர். அத்தனை எளிதில் திருமணத்திற்கு ஒப்புதல் அளித்திருக்க மாட்டார்கள் பிள்ளைகளின் நலன் விரும்பும் அம்மாக்கள்.

ஆனால் இங்கே எல்லாமே தலைகீழாக இருக்க, அப்பாக்கள் தங்களின் முடிவை மட்டுமே பிரதானமாகக் கொண்டு பிள்ளைகளின் முடிவை உப்பு பெறாத விசயமாகவே ஒதுக்கி விட்டனர்.

ரெங்கேஸ்வரன், தனது தொடர்ந்த வலியுறுத்தல்களின் மூலம் வீட்டோடு மாப்பிள்ளையாக மகனை கொடுப்பதாக மட்டுமல்லாமல், வீட்டோடு சம்மந்தியாகவும் இருக்கலாம் என்கிற முடிவை சடகோபனிடம் திணித்து சம்மதிக்க வைத்திருந்தார். இரு தந்தைகளும் ஏகமனதாக தங்கள் பிள்ளைகளின் திருமணத்தை தங்களுக்குள்ளேயே பேசி முடிவெடுத்துக் கொண்டனர்.

சிறுவயது முதலே, ஒருவரையொருவர் அறிந்திருந்த காரணத்தினால், பிள்ளைகளிடமிருந்து எதிர்ப்பு வராது என்ற நம்பிக்கையும் வலுவான காரணமாகிப் போனது.

இருவரும் சிறுவயதில் இருந்தே பேசிப் பழகிக் கொண்டவர்கள். அவர்களிடம் இருந்து திருமணத்திற்கான ஆட்சேபனைகள் வராது என்று தங்களுக்குள்ளாக மனக்கணக்கும் போட்டுக் கொண்டனர். தங்களின் போக்கில் திருமண ஏற்பாட்டினையும் செய்யத் தொடங்கினர் இருவரின் அப்பாக்களும்.

வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பதென்பது, ஒரு ஆண்மகனின் தன்மானத்தை அடகு வைத்து வாழ்வதைப் போல என்ற வழமையான கருத்தும் உண்டு.

மனதார ஒத்துக் கொண்டு மாமனார் வீட்டில் வாழச் சென்ற தொண்ணூறு சதவிகித ஆண்களும், இடையில் சிலபல மனக் குமுறல்களோடு உறவுமுறையை முறித்துக் கொண்டுதான் வெளியே வந்திருக்கின்றனர்.

ஆளுமையுடனும் அதிகாரத்துடனும் எதையும் எதிர்நோக்கும் தன்மகன், இதற்கு சம்மதிப்பானா என்று சடகோபன் சிந்தித்தாலும் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்த நட்புறவு அவரை தலையாட்ட வைத்தது.

ஊரும் நாடும் சுற்றிக் கொண்டு, மாதத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வீட்டிற்கு வருபவன் இதையெல்லாம் பெரிய விசயமாக எடுத்துக் கொள்ள மாட்டான் என்றே நினைத்திருந்தார் சடகோபன்.

திருமணத்திற்கு பிறகு இயல்பாக தொழிலின் மீதுள்ள நாட்டத்தில், மாமனாரின் தொழிலை தயக்கமின்றி பொறுப்பேற்று நடத்துவான் என மனதிற்குள் கணக்கு போட்டு நண்பனிடமும் பகிர்ந்து மகிழ்ந்து போனார்.

அந்த எண்ணத்திலேயே தனது தம்பி நடேசன் குடும்பத்தை மட்டும் வைத்துக் கொண்டு, மணமக்கள் இல்லாமலேயே திருமண நிச்சயத்தையும் நடத்தி முடித்தார்.

விருப்பங்களை தன்னளவில் மட்டுமே நிறைவேற்றிக் கொள்ளும் ஆண்களின் பண்பிற்கு, இரண்டு நண்பர்களும் எடுத்துக்காட்டாக இருந்தனர்.

அமிர்தசாகர் வியாபார சுற்றலில் வெளிநாட்டில் இருக்க, லக்கீஸ்வரியும் இறுதியாண்டு படிப்பை முடிக்க விடுதியில் தங்கியிருந்தாள். பிள்ளைகளிடம் நேரில் சொல்லிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில், நெருங்கிய உறவுகளை மட்டுமே வைத்துக் கொண்டு, தங்களுக்குள் எளிமையாக நிச்சயதார்தத்தை நடத்திக் கொண்டனர்.

தங்களின் வாரிசுகள், தாங்கள் கிழித்த கோட்டை தாண்ட மாட்டார்கள் என்ற இரு அப்பாக்களின் அசைக்க முடியாத உறுதியில் ஆறு மாதங்களுக்கு பிறகு திருமணத்திற்கென முகூர்த்த நாளும் குறிக்கப்பட்டது.

மகனிடம் நேரில் திருமண விஷயத்தை தெரிவித்து ஆனந்த அதிர்ச்சி அளிக்கலாம் என்ற நினைவில் அலைபேசியில் மகன் பேசிய பொழுதுகளிலும் சடகோபன் திருமண நிச்சயத்தை தெரிவிக்கவில்லை.

இறுதியாண்டு படிப்பில், கவனத்தை சிதறடிக்க வேண்டாமென்று மகளிடமும் ரெங்கேஸ்வரன் திருமண விசயத்தை தெரியப்படுத்தவில்லை.

திருமண நிச்சயம் முடிந்து சடகோபன் கேரளாவிற்கு சென்ற சமயம் மழைக்காலம் தொடங்கியிருந்தது. அந்த சமயம் அடாது பெய்த கனமழையில் நிலச்சரிவும், வெள்ளமும் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கையே பாதித்த மிகக் கடுமையான காலம் அது.

அந்த சீதோஷண சூழ்நிலையில் அனைவருக்கும் தொற்றிக் கொள்ளும் விஷக்காய்ச்சலும் சுவாசக்கோளாறும் சடகோபனைத் தீவிரமாய் தாக்கியது.

துணைக்கு யாருமின்றி, சரியான கவனிப்பும் இல்லாமல் பெரும் அவஸ்தைக்கு உள்ளானார். நோயின் தாக்கத்தில் மகனிடம் சொல்லாத விஷயத்தை மனைவியிடம் கூற பரலோகம் பயணப்பட்டு விட்டார் சடகோபன்.

மன நிறைவும், இனி மகனைப் பற்றிய கவலையில்லை என்கிற ஆசுவாசமும், அதனுடன் போட்டி போட்ட காலநிலையும் சேர்ந்தே சடகோபனின் இதயத்துடிப்பை நிறுத்தியிருந்தது.

எக்காரணம் கொண்டும் மருமகளை நிச்சயித்த ராசி என்ற பழிச்சொல்லை யாரும் சொல்லிடா வண்ணம் அண்ணனின் அனைத்து காரியங்களையும், அவரின் தம்பி நடேசன் நேர்த்தியாக செய்து முடித்தார்.

தந்தையின் மரணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீளும் வரை அமிர்தசாகரிடம், அவனது திருமண நிச்சயம் முடிந்த விஷயம் பகிரப்படவில்லை.

துக்க சமயத்தில் மங்களகரமான விசயத்தை கூறினால், கோபம் கொண்டு திருமணத்தை நிறுத்தி விடுவானோ என்றே அனைவரும் சொல்லாமல் மறைத்தனர்.

சரியாக, சடகோபன் இறந்த நாற்பத்தைந்து நாட்களுக்குப் பிறகு சுபகாரியங்கள் நடத்த தீர்மானித்த நடேசன், மகனின் திருமண நிச்சயம் முடிந்த சேதியை பக்குவமாக அமிர்தசாகரிடம் எடுத்துரைத்தார். விசயத்தை கேட்டவன், பொங்கிய ஆத்திரத்தில் ஆவேச சாகராக கொந்தளித்து ஆடித் தீர்த்து விட்டான்.

தனது குடும்ப வாழ்க்கையின் முடிவுகளை, மற்றவர்கள் எவ்வாறு கையில் எடுக்கலாம் என்று காறி உமிழாத குறையாக அனைவரையும் இன்னதென்ற வார்த்தையில்லாமல் கேட்டுவிட்டான் அமிர்.

மறைந்த தந்தையின் முடிவும் விருப்பமும் இதுதானென்று கூறியும் அசைந்து விடவில்லை. அவருக்கும் சேர்த்தே மண்டகப்படி நடத்தி முடித்தான். அத்தனை கோபம் வந்தது அவனுக்கு.

தனது சம்மதம் இல்லாமல் நடந்த நிச்சயத்திற்கு தன்னால் பொறுப்பேற்க முடியாது என்றும் தட்டிக் கழித்து அனைவரையும் கதிகலங்க வைத்தான்.

எக்காரணம் கொண்டும் தன்னால் இந்த திருமண விஷயத்தை ஏற்றுக் கொள்ள முடியாதென வாதங்கள் செய்ய, மாதங்களும் ஓடிக் கொண்டிருந்தது. நிச்சயித்த திருமண நாளும் நெருங்கி வந்து கொண்டிருந்தது.

அமிரின் சித்தப்பா நடேசன், சித்தி கோமதி, அவர்களின் மகள் ஹரிணி என மூவரும் தந்தையின் இறுதி ஆசை இது மட்டுமே என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தியே அமிரை திருமணத்திற்கு ஒருவழியாக சம்மதிக்க வைத்தனர்

பாசமான வேண்டுகோள், அன்பான மிரட்டல் எல்லாம் சேர்ந்து ஒருவழியாக திருமணத்திற்கு தலையாட்டி வைத்தான் அமிர்தசாகர்.

ஆனால், அதற்கு முன்பு பெண்ணை நேரில் பார்த்தே ஆக வேண்டுமென்று பிடிவாதத்தில் நிற்க, அங்கே லக்கீஸ்வரியும் தனது கொள்கைகளை மேடையில் நின்று முழங்காத குறையாக தோழிகளிடம் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள்.

சென்னை பிரபல கல்லூரியில் எம்பிஏ நிர்வாக மேலாண்மை இறுதியாண்டு மாணவிகளின் வீக் என்ட் பார்ட்டி நேரம். நண்பர்களுடன் நண்பிகளும் ஒன்று சேர்ந்து விட்டால் ஆட்டம் கொண்டாட்டம் வரைமுறை இல்லாமல் செல்வதைப் போல், பேச்சுகளும் திசைமாறிச் சென்று கொண்டே இருக்கும். தடுத்து நிறுத்தி அவர்களின் பேச்சிற்கு அணைகட்ட யாரும் முன்வர மாட்டார்கள்.

“நான் கண்டிப்பா அரேஞ்சுடு மேரேஜ்தான் பெஸ்டுன்னு சொல்லுவேன்!” தோழி சுரபி தனது தரப்பு வாதத்தை கூறிக் கொண்டிருக்க, இடையிட்ட லக்கீஸ்வரி,

“நோ, நோ… இல்லை, இல்லவே இல்லை! லவ் மேரேஜ்தான் பெஸ்டுன்னு எங்க எப்ப வேணும்னாலும் நான் அடிச்சு சொல்லுவேன்!” தன் தரப்பு நியாயத்தை வெகு உறுதியுடன் வெளிப்படுத்தினாள்.

“ஆமாமா! நீ சொல்றத ஒத்துக்கலைன்னா, நல்லா அடிச்சுதான் சொல்லுவ!” தோழியிடம் வம்பிழுத்த சுரபி, நமுட்டுச் சிரிப்புடன்,

“காதுல ரத்தம் வருது லக்ஸ்! அரசியல் கூட்டத்துல பேசுற மாதிரி பேசுற பேச்சை பாரு!”

“ஏய் சுபி… எதுக்கு பேச்சை மாத்துற? உன் சைட் வீக்கா இருக்குன்னு உனக்கே தெரிஞ்சு போச்சா?” புருவத்தை ஏற்றி இறக்கி தோரணையாய் கேட்டாள் லக்ஸ் என்கிற லக்கீஸ்வரி,

.“அட லூசு லக்ஸ்! லவ் லவ்வுன்னு ஏண்டி மூச்சுக்கு மூச்சு சொல்லிட்டு இருக்க? நம்ம அம்மா அப்பா என்ன லவ் பண்ணியா கல்யாணம் பண்ணாங்க? அரேஞ்சுடு மேரேஜ்ல அவங்க எவ்ளோ ஹாப்பியா லைஃப் மூவ் பண்றாங்க?

இதவிட பெஸ்ட் எக்சாம்பிள் உன் கண்ணுக்கு தெரியலன்னா சாரி லக்ஸ், போய் உன் கண்ணை நல்லா டெஸ்ட் பண்ணு!” என்றவள் உதட்டை சுளித்து அழகு காட்டிட, அவளை வெட்டும் பார்வையில் முறைத்தாள் லக்கீஸ்வரி.

“போடி, பெருசா எனக்கு அட்வைஸ் பண்ண வந்துட்ட?  அவங்க நிறைய அட்வன்சர்ஸ் மிஸ் பண்ணிட்டாங்க! லவ் பண்ணும் போது இருக்குற த்ரில் வேற எதுலயும் இருக்காது. எவ்ளோ ட்விஸ்ட் அன்ட் டேர்ன்ஸ் இருக்கும் தெரியுமா?” கூறியவளின் கண்களில் காதல் கனவுகளும் போட்டிபோட்டுக் கொண்டு மின்னின.

தோழிகளின் அடுத்தடுத்த தர்க்கங்கள், அழகான அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு சிறந்தது காதல் திருமணமா, வீட்டில் நிச்சயித்த திருமணமா என்கிற விவாதத்தில் செல்ல, அருகில் உள்ள மற்ற தோழிகள் தலையில் கைவைத்து சலித்துக் கொண்டனர்.

“இவங்கள விட்டா இந்த செம் முடியுற வரைக்கும் இந்த பட்டிமன்றம் நடத்தியே நம்மை காண்டாக்கிடுவாங்க!” ஒருத்தி வெகுவாக குறைபட,

“லூசு பக்கிகளா! இப்போ நீங்க வாயை மூடலன்னா, ரெண்டு பேருக்கும் ஹாஸ்டல் புளியோதரையை கொண்டு வந்து வாய்க்குள்ள திணிச்சிடுவேன்” பயம் காட்டினாள் மற்றொருத்தி. 

இவர்களின் மிரட்டலும் கெஞ்சலும் தொலைதூரமாகிப் போக, தங்களுக்குள் வாதம் செய்து கொண்டிருந்தார்கள் சுரபியும் லக்கியும். அத்தனை உறுதியும் தீர்க்கமும் இருந்தது பெண்களின் பேச்சில்.

இரு தோழிகளின் லட்சியம், கனவு இத்தனை ஏன், இவர்களின் பிறப்புரிமை என நினைப்பதே இதனைதானே! தங்களின் எண்ணம் போல் மணவாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டுமென்று மனதளவில் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டிருந்தனர்.

சிறுவயது முதலே ஒரே வகுப்பில் படிக்கும் போது ஆரம்பித்த நட்பு பெற்றோரின் ஆதரவுடன் தங்கு தடையின்றி இன்றளவும் பயணித்துக் கொண்டிருக்கிறது. தோழிகள் எத்தனையோ விஷயங்களில் விட்டுக் கொடுத்துக் கொண்டாலும், ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் பரம்பரை எதிரிகளைப் போல அடித்துக் கொள்வர்.

அந்த பண்பட்ட விஷயத்திற்காகவே இப்பொழுதும் தர்க்கப்போரில் ஈடுபட்டு அவர்களுக்குள் பேசியும் கடித்தும் கொண்டது. இவர்களின் இந்த சிறந்த லட்சியத்தை வீட்டில் சொல்லிக் கொள்ளாத சமார்த்தியசாலிகள்.

அடுத்த மாதத்தில் இவர்களின் படிப்பு முடிவதாக இருக்க, தன் வீட்டிற்கு சில நாட்கள் வந்து தங்கிச்செல் என சுரபியை நச்சரிக்கத் தொடங்கி இருந்தாள் லக்கீஸ்வரி.

“நீ வேலைக்கு போற ஐடியால இருக்க சுபி. நானும் அப்பா கூட பிசினஸ் பார்க்க போயிடுவேன். இடையில இருக்குற இந்த ஒருமாசம் நல்லா என்ஜாய் பண்றோம். ஹாப்பியா இருப்போம். என்ன சொல்ற?” லக்கீஸ்வரி தனது திட்டங்களை கூற,

“எங்க வீட்டுல இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க லக்ஸ்!” முகாரி பாடிய சுரபியின் குடும்பம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தது. பெற்றோரின் கண்டிப்பு கொஞ்சம் அதிகப்படியாகவே இருக்கும் அவர்களின் வீட்டில்.

ஒற்றை பெண்ணாக வளர்ந்த லக்கிக்கு ஆரம்பத்தில் அவர்களின் கண்டிப்பு சிறிது தயக்கத்தை கொடுத்தாலும், சுபியின் தாயாரின் அன்பான கவனிப்பில் அந்த குடும்பத்தோடு ஒன்றிப்போனாள். இவளின் தந்தைக்கும் தோழியின் குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்து, நட்பை பலப்படுத்திக் கொண்டாள் லக்கி.

“ஃபர்ஸ்ட், நான் உங்க வீட்டுக்கு வந்து ஒரு வாரம் தங்குறேன். அப்போ அம்மாவை தாஜா பண்ணி உங்க வீட்டுல கேக்குறேன்! அப்போ ஒண்ணும் சொல்ல முடியாதுதானே!” லக்கி சொல்வதும் சரியென்று பட முழுமனதோடு சம்மதித்தாள் சுரபி.

தாய் தந்தை இருவரும் வேலைக்கு செல்ல, சின்னத் தங்கையுடன் வாழும் சிறிய குடும்பம் சுரபியினுடையது. இவளுக்கும் லக்கிக்கும் இடையிலேயே இருக்கும் நட்பும் பிணைப்பும் இரு வீட்டினற்கும் தெரிந்ததே!

அதனால், லக்கி வந்து தங்குவதாக சொல்லவும் சுரபியின் வீட்டினர் சரியென்று சம்மதித்து விட்டனர். ரெங்கேஸ்வரனும் மகளின் ஆசைக்கு என்றும் தடை சொல்லாதவர். பெண்களுக்கு இதை விட வேறென்ன வேண்டும்?

லக்கீஸ்வரி சொன்னபடியே சுரபியின் வீட்டில் ஒருவாரம் தங்கவென அங்கே முகாமிட, அவள் சென்ற இரண்டாம் நாள் ரெங்கேஸ்வரனிடம் இருந்து உடனே வீட்டிற்கு வந்து சேர் என்கிற தகவல் மட்டுமே வந்தது.

மனம் சுணங்கிக் கொண்டாலும் தந்தையின் பேச்சினை மறுக்க முடியாமல் தோழியை அழைத்துக் கொண்டு கோவைக்கு வந்திறங்கினாள் லக்கீஸ்வரி.

அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே

பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே

தந்தையே ஆயினுந் தான்டங்கான் ஆகுமேல்

கொண்டையா னாகல் இனிது.