சூரியநிலவு 6

சூரியநிலவு 6

அத்தியாயம் 6

வாகன நிறுத்துமிடத்தில், பிரதாப்பும் நிலாவும், ஒருவரை ஒருவர் தங்களை அறியாமல், நெருங்கி வாதித்துக் கொண்டிருக்க,  அதை சூர்யா எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தான். 

அங்கு மாலினுள்ளோ ஆகாஷ்,  தேர்ந்தெடுத்த பொருட்களுக்கு,  பில்லை கட்டிவிட்டு,  பொருட்களை வாங்கிக்கொண்டு,  வாகன நிறுத்துமிடத்திற்கு வந்தான்.  அங்கிருந்த சூழ்நிலையைப் பார்த்து, ‘என்ன நடக்குது இங்க?,’ என ஒருநிமிடம் திகைத்து நின்றான். (பிரது, நிலாவின் வாதத்தை பார்த்து) அவன் புருவங்கள் கேள்வியால் சுருங்கியது. 

அவர்களை நெருங்கிச் செல்ல, விஷயம் பிடிபட்டது. ‘ஹய்யோ ஆண்டவா!  இதுங்க எப்போ தான் திருந்துமோ?’ என தலையில் அடித்துக்கொண்டான்.

அவர்களைக் கண்டுகொள்ளாமல்,  வாங்கிய பொருட்களை காரின் டிக்கியில் வைத்துவிட்டு, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துகொண்டு, ஹாரனைச் சத்தமாக ஒலிக்க விட்டான்.

’எவன்டா அவன்’ என அவர்களின் பார்வை,  ஒரே ஒரு நொடி ஆகாஷை நோக்கித் திரும்பியது.  ‘நீ தானே’ என அவனைக் கண்டுகொள்ளாமல், மறுபடியும் விட்ட வேலையைத் தொடர்ந்தனர். (வாதிக்கறது )

“நீ எப்படி அவன் கையை பிடிக்கலாம்?”   பிரதாப் சீறிக்கொண்டிருந்தான்.

“கைய பிடிச்சேனா!?” என திருதிருத்த நிலா, “ஹே! அது வெறும் ஹேண்ட் ஷேக்பா.  அதுல என்ன தப்பிருக்கு?  இதுலாம் பெரிய விஷயமா” என்றாள் சலிப்பாக

“சரி, அது வெறும் ஹேண்ட் ஷேக் தான் ஒத்துக்கறேன். ஆனா அவன் உன்ன முழுங்கற மாதிரி பார்க்கறானே, அது உனக்குத் தெரியலையா? சரி, அதையும் கூட விட்டுடலாம், அவன் பூ குடுக்கறான்,  நீயும் பல்லை காட்டிட்டுஅத வாங்குற”  என வானத்துக்கும் பூமிக்கும் குதித்தான்.

கடைசி வரியை மட்டும் எடுத்துக்கொண்ட நிலா, “எனக்கு பிடிச்ச பூ,  ஞாபகமா வாங்கிட்டு வந்து குடுக்கறான், அதை எப்படி வேண்டாம் சொல்லுறது?” அவனின் கோவத்திற்கு தெரிந்தே எண்ணெய் ஊற்றினாள்.

“ம்’ வாயால தான் வேண்டாம்னு சொல்லணும்.  அவன் கிட்டயிருந்து விலகியே இரு. அவனும், அவன் பார்வையும் சரியில்ல. ” எனப் பற்களை நறநறத்தான்.

(நிலா மனதில் ‘ஒரு பூ வாங்குனதுக்கே இத்தனை அக்கப்போரா.  அப்போ காலேஜ் படிக்கும் போது, தினமும் அவன் எனக்கு பூ கொடுத்ததும், நான் வாங்கினதும் தெரிந்தால், என்னுடைய நிலை, அதைவிட சூர்யாவின் நிலை.’) ஹய்யோ தலையை உலுக்கிக்கொண்டாள்.  நினைவே பீதியைக் கிளப்பியது.

அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த,  ஆகாஷ் ‘இவர்கள் இப்போதைக்கு முடிக்க மாட்டார்கள்,’  என முடிவு செய்துகொண்டு,  “இப்ப வண்டில ஏறப்போறீங்களா, இல்ல உங்களை விட்டுட்டு, நான் மட்டும் போகவா?” என கூலாக குண்டை போட்டான்.

“நான் இவன்கிட்ட உக்காரமாட்டேன்.”  என முறுக்கிக்கொண்ட நிலா,  முன் இருக்கையிலேற, கதவில் கையை வைத்தாள்.

அதில் கோபம் கொண்ட பிரதாப்,  அவள் கரங்களைப் பற்றியிழுத்து, காரின் பின் இருக்கைக்கு அவளைத் தள்ளி,  தானும் அவளுடன் ஏறிக்கொண்டான்.

பிடித்த அவள் கரங்களை அவன் விடவேயில்லை.  அது எனக்கு மட்டுமே சொந்தம், என்பது போல் அவன் பிடி இரும்புப் பிடியாக இருந்தது. நிலாவும் அவள் கரங்களை விலக்க முயலவில்லை.

இவ்வளவு கலவரம் நடந்தும், நிலாவினால் பிரதாப்பிடம் இருந்த பூவை, திரும்பப்பெற முடியவில்லை.

அந்த கார் பயணம், ஆரம்பிக்கும்போது இருந்த கலகலப்பிற்கு,  நேரெதிரே இப்பொழுது அமைதியில் கடந்தது.

சூர்யா,  நிலாவுடன் பேசியது தவறில்லை.  அந்த உரிமை பேச்சு, அதைத் தான் பிரதாப், ஆகாஷ் இருவராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பிரதாப்பைப் பொறுத்தவரை, நிலா தவமின்றி அவனுக்குக் கிடைத்த வரம்.  அவனின் பொக்கிஷம். அந்த பொக்கிஷத்தை யாரிடமும் கொடுக்க, அவன் தயாராகயில்லை.

ஆகாஷை பொறுத்தவரை, தொலைந்த அவன் மகிழ்ச்சியை,  திருப்பி கொடுத்த பெண்ணிலா.

அவர்கள் இருவரின்,தொலைந்த உணர்வுகளை,  மீட்டெடுத்த தேவதை.

எல்லோரையும் அன்பாக அரவணைத்து,  யார் மனதையும் புண்படுத்தாமல், நல்லதை மட்டுமே நினைக்கும் மனம் நிலாவினுடையது.

அவள் ஒரு குழந்தை. இந்த பொல்லாத உலகத்தில், தங்களிடம் மட்டுமே,  அவள் பாதுகாப்பாக இருப்பாள், என  பிரதாப்பும் ஆகாஷும்  நம்பினார்கள்.  இப்போது புதிதாக ஒருவன், தங்களின் நடுவே வருவதை அவர்கள் விரும்பவில்லை. அவனின் உரிமை பேச்சும், காதல் பார்வையையும் அறவே வெறுத்தனர்.

ஆம்!  சூர்யாவின் காதல் பார்வை,ஆகாஷிற்கும் பிரதாப்பிற்கும் புரிந்தது.

(பாம்பின் கால் பாம்பறியும்)

அதனால்  சூர்யாவை  அவளிடமிருந்து   விலக்க முடிவெடுத்தனர்.

நிலாவும்,விதியும் வேறாக இருக்க,   இவர்கள் முடிவெடுத்தால் போதுமா?

இதுவரை நடந்த நிகழ்வுகள் சூர்யாவின் பார்வையில்:

சூர்யதேவ்,  கோயம்புத்தூரிலுள்ள  சூர்யாஸின் ஏகபோக வாரிசு.

சூர்யாஸ்!  கோவையில்  மிகவும்  பிரசித்திபெற்ற ஜவுளி உலகம்.

சூர்யா! இருபத்தைந்து வயது கட்டிளங்காளை; கல்லூரி பெண்களின் கனவு நாயகன்; அவனை, பல பெண்களின் கண்கள் வட்டமிட்டது: ஆனால் சூர்யா! தன் பெயருக்கு ஏற்றார் போல பார்வையால், அவர்களை சுட்டெரித்து எட்ட நிறுத்திவிடுவான்;  அவன் கண்கள் விரும்பி  பார்த்ததும், பார்க்க ஆசைப்பட்டதும் மதுநிலாவை மட்டுமே.

ஆம்! மதுநிலா படித்த அதே கல்லூரியில் தான், அவனும் படித்தான்.   அவளின் சீனியர் தான் இந்த சூர்யதேவ்.

கல்லூரியில் மதுநிலாவை பார்த்த நொடி, அவள் அழகால் ஈர்க்கப்பட்டான். நாளடைவில் அந்த ஈர்ப்பு காதலாக உருமாறியது.

நிலா! இளங்கலை முடித்து, லண்டன் சென்ற பின், தொடர்பற்று போய்விட்டது.  அதன் பிறகு, இன்று தான் பார்க்கிறான்.

வெற்றியுடனான, அவளின் திருமணச் செய்தி, தெரிந்திருந்தால், என்றோ அவளைக் கவர்ந்து சென்றிருப்பான்.

அவ்வளவு நேசம் அவள் மீது.  அந்த நேசம், அவனை எந்த எல்லைக்கும் செல்ல வைக்கும். அதில் பாதிக்கப்படப் போவது பிரதாப், நிலா, ஆகாஷ், மேகவர்ஷினி, இன்னும் ஒருத்தி இருக்கிறாள். 

ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் என்ன நடக்கிறது:

வேறுவழி இல்லாமல் நிலாவிடம்,  விடைபெற்று வந்தான் சூர்யா.  தன் காரை கிளப்ப மனமில்லாமல், தன் இருக்கையில் அமர்ந்து, நுழைவாயிலையே வெறித்துக் கொண்டிருந்தான்.

சூர்யாவின் மனம் முழுவதும் ‘தன் நிலாவிடம், இவ்வளவு உரிமையுடன் பழகும்,  இவர்கள் யார்?’ என்ற சிந்தனையிலேயே குழம்பி கொண்டிருந்தது.

நிலாவிற்கும்  இவர்களுக்கும்  என்ன  சம்பந்தம்?

அவர்கள் நிலாவின்  வாழ்வில் எப்போது நுழைந்தார்கள்?

நிலாவின் மனதில் அவர்கள் இடம் என்ன?

இப்படி ஏகப்பட்ட கேள்விகள், அவன் சிந்தனை முழுவதும் வியாபித்திருந்தது.  ஆனால் அவனுக்கு, ஒன்று மட்டும் புரிந்தது, ‘அவர்களை மீறி, நிலாவை அடைவது அவ்வளவு சுலபமில்லை.’ .

அவன் சிந்தனைகளுக்கும்,  கேள்விகளுக்கும், தற்காலிக முற்றுப்புள்ளி வைப்பதற்காக, பிரதாப்பும் நிலாவும் காம்ப்ளெக்ஸிலிருந்து காரை நோக்கி, வந்து கொண்டிருந்தார்கள்.

இதுவரை,  நிலாவை மட்டுமே வட்டமடித்த சூர்யாவின் விழிகள்,  இப்பொழுது அவள் அருகில் இருக்கும் பிரதாப்பை அளந்தது.

நல்ல உயரம் (எப்படியும் ஆறு அடிக்கும் மேலிருப்பான்). கலையான முகம் (கண்டிப்பாகப் பெண்களை வசீகரிக்கும்). ஆண்மையின் கம்பீரம். நடை, உடை அனைத்திலும், ஒரு நேர்த்தியும் மிடுக்கும்  இருந்தது.  ஆணாகிய அவனாலேயே, பிரதாபின் தோற்றத்தை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

ஆகாஷின் தோற்றத்தை நினைவுகூற முயற்சிதான்,  அந்தோ பரிதாபம் ஞாபகம் வரவில்லை, கொஞ்சமாவது ஊன்றிப் பார்த்திருந்தால் நினைவில் இருந்திருக்கும். இவர் பார்வைதான், நிலா மீது மட்டுமே,  பசைபோட்டு ஒட்டிக் கொண்டதல்லவா? ஃபிரேமுக்கு வெளியே மங்கலாக இருந்தவர்கள், எப்படி ஞாபகத்தில் வருவார்கள்?

அவன் மூளை அவர்களைப் பற்றி சிந்தித்தாலும், அவன் கவனம் முழுவதும்,  காரின் வெளியே இருந்து, வாதம் செய்து கொண்டிருந்தவர்கள் மீது மட்டுமே.

திடீரென அந்த ஆடவன், பூவை அவளிடமிருந்து பறிக்க,  அதை வாங்க நிலா முயற்சிக்க, என தங்களையறியாமல் மிக நெருங்கி இருந்தார்கள்.  நெருக்கம் என்றால், இரு உடல்களும் உரசியும் உரசாமலும் இருக்கும் நெருக்கம்.

‘இதற்கு மேல் பொறுக்க முடியாது.’  எனக் கொதித்தெழுந்த சூர்யா, காரை திறக்க சென்ற நேரம், அந்த இன்னொரு ஆடவன் வந்துவிட்டான்.

இப்பொழுது அவனை எக்ஸ்ரே(Xray) எடுத்தது சூர்யாவின் கண்கள். ‘முதலாமவனுக்கு, சற்றும் குறையாத வசீகரத்துடன் இருக்கிறான்.’  என சூர்யாவின் மனம் முடிவு செய்தது.

‘இவனாவது அவர்களை விலக்கி விடுவானா?’ எனப் பார்த்தான்.   அவர்களை பார்த்த அவன், அதைக் கண்டுகொள்ளாமல், பொருட்களை காரில் வைப்பதுதான் தன் கடமை என்பதுபோல இருக்க  சூர்யா பொருமினான்.

(சூர்யாவிற்கு என்ன தெரியும், நிலா என்று வந்துவிட்டால்,

இருவரும்  ஒரே  குட்டையில்  ஊறிய மட்டைகள் என்று)

அந்த இரண்டாமவன் காரில் அமர்ந்து கொண்டு,   ஏதோ சினிமா பார்ப்பதுபோல, பார்த்துக் கொண்டிருந்தான்.

சூர்யா தனக்கு இல்லாத பொறுமையை,  இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தான்.

அவன் தன் கட்டுப்பாட்டை,  முழுவதும் இழக்கும் முன் நிலாவை வலுக்கட்டாயமாக, பின் இருக்கையில் தள்ளி, அவளருகில் அமர்ந்து கொண்டான், அந்த வாதம் செய்தவன்.

அவர்களின் வாகனம் கிளம்பிச் செல்ல,  சூர்யாவும் அவர்களை பின் தொடர்ந்தான்.

அவர்களின் கார், ஒரு பங்களாவிற்குள் நுழைய,  சூர்யா வாயிலில் இருந்த பெயரைக் குறித்துக்கொண்டான்.

கொஞ்சம் தள்ளி நின்று, என்ன நடக்கிறது என பார்த்தான்.

நிலா காரிலிருந்து இறங்கினாள். அந்த கார் ஓட்டிய இரண்டாமவன்,  அவள் கரம் பற்றி நிறுத்தி, ஏதோ பேச முயற்சிக்க, நிலா முகம் திருப்பிக்கொண்டாள்.

அவன் நிலாவின் தோள் தொட்டுத் திருப்பி,  ஏதோ சொல்லி தன் தோளில் சாய்த்துக் கொண்டான். தொடர்ந்து அவன் பேச

நிலா அவனை தள்ளிவிட்டுட்டு,  வீட்டிற்குள் சென்றுவிட்டாள். அதற்கு மேல் அங்குக் காத்திருக்க முடியாத சூர்யா, தான் தங்கி இருக்கும் விடுதிக்குச் சென்றான்.

அங்க இருந்தே, ஒரு துப்பறியும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு,  அந்த வீட்டு முகவரியையும், கார் நம்பரையும், தந்து விசாரிக்கச் சொன்னான்.

வீட்டின் பெயரை சொன்ன உடனே,  அந்த வீடு யாருக்கு சொந்தம் என்ற தகவல் கிடைத்துவிட்டது. அந்த இருவரைப் பற்றியும் நிலாவையும் பற்றியும் விசாரிக்க, அவர்களுக்கு இரண்டு நாள் அவகாசம் தேவைப்பட்டது.

அதனால்  சூர்யா  காத்திருக்க  முடிவு  செய்தான்.

மூவரின் நிலை:

அந்த கார் பயணம், என்றும் இல்லாமல், மிகக் கொடுமையாக இருந்தது.  அமைதியான பயணம். இவர்கள் மூவரும், சேர்ந்திருக்கும்போது இருக்காத அமைதி.

பிரதாப்பும் நிலாவும் ஒருவரையொருவர், முறைத்துக்கொண்டிருக்க, கார் வீட்டின் வாயிலை அடைந்து, தன் பயணத்தை முடித்துக்கொண்டது.  நிலா வேகமாக இறங்கிச் செல்ல பார்க்க, அதை விட வேகமாக ஆகாஷ்,  அவள் கரம் பற்றி நிறுத்தினான்.

“என்ன நிலாமா, இதுக்குப் போய் இவ்வளவு கோவம்?”

“நீயும் என்கிட்ட பேசாத”  என நிலா முகம் திருப்பினாள்.

அவள் தோளைப்பற்றி, தன்னை நோக்கித் திருப்பி,  தன் சுட்டுவிரலால் அவள் முகத்தை நிமிர்த்தினான். “நான் என்ன பண்ணுனேன்”

“அவன் என்னை திட்டுறான்,  நீயும் வேடிக்கை பார்க்கற”  எனக் கண்கலங்க, அதை தாங்கமுடியாதவன்

“என்ன இது, பேபி மாதிரி அழுதுகிட்டு” எனச் சொல்லி, தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.  “அவனைப் பத்தி உனக்கு தெரியாதா, அதுக்குப் போய் பீல் பண்ணிட்டு”  பதில் வரவில்லை, அதே நேரம் விலகவும் இல்லை.

“அவனுக்குப் பதில் நான் இருந்திருந்தால், என்கிட்ட திட்டு வாங்கியிருப்ப,  அவன் சமாதானம் செஞ்சியிருப்பான். ஜஸ்ட் மிஸ்(Just miss)” நமட்டுச் சிரிப்புடன் சொல்ல

உடனே கோபம்கொண்ட நிலா “போடா,  உங்க ரெண்டு பேரையும் திருத்த முடியாது. என்கிட்ட பேசாத” என அவனைத் தள்ளிவிட்டு, வீட்டினுள் சென்றாள்.

ஆகாஷ் சிரித்துக்கொண்டே, “யு ஆர் சோ ஸ்வீட் டார்லிங்(You are so sweet darling)”  எனச் சொல்லி, அவளை பின் தொடர்ந்தான்.

அங்கு சோபாவின் ஒரு மூலையில் பிரதாப்பும்,  மற்றோர் மூலையில் நிலாவும் ஒருவரையொருவர் முறைத்துக்கொண்டு, தொடையில் முழங்கையை மடித்து, உள்ளங்கையைக் கன்னத்தில் தாங்கி அமர்ந்திருந்தனர் (கோபமாம்).

இவர்கள் கோவமெல்லாம், ஒரு அரைமணிநேரம் கூட தாக்குப்பிடிக்காது.  அதை அறிந்த ஆகாஷ், அவர்களைக் கண்டுகொள்ளாமல், கண்ணாவைத் தேடி சமையலறை சென்றுவிட்டான் .

தங்களைச் சமாதானம் செய்யாமல், போன  ஆகாஷை முறைத்துவிட்டு, இவர்களும் அவனைப் பின்தொடர்ந்தனர். சமையலறை கதவுநிலையில் கைக்கட்டிச் சாய்ந்து, அவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதையறியாத ஆகாஷ்  கண்ணாவிடம்  வம்பளந்து கொண்டிருந்தான்.

“பா! ரொம்ப பசிக்குது, இப்ப சாப்பிட என்ன செஞ்சீங்க?”

“ஏன் தம்பி! மணி ஆறாக போகுது, இன்னுமா சாப்பிடலை?”

“நீங்கச் செய்ற கேசரியையும் பஜ்ஜியையும் அடிச்சுக்க யாருமில்லை. அதுதான் ஓடி வந்துட்டேன்.” தொடர்ந்து அவனே 

“உங்கள் கையால், சிற்றுண்டி சாப்பிட ஓடோடி வந்த, என்னை ஏமாற்றி விடாதீர்கள் கண்ணா பா, ஏமாற்றி விடாதீர்கள்.”  என்றான் நாடக பாணியில். அவன் புகழ்ச்சியில் உச்சிகுளிர்ந்து போனார் கண்ணா. 

“பாவம் பாப்பா, பசிதாங்காதுனு பிரதாப் தம்பி காலையிலேயே சொல்லுச்சு.  அந்த புள்ளைய பசியோடவா கூப்பிட்டு வந்திங்க”

கடுப்பான ஆகாஷ் “அந்த தும்பியும்,  பீப்பாவும் சண்டை போட்டுகிட்டு, என்ன பட்டினி போட்டு இழுத்துட்டு வந்துட்டாங்க”

“என்ன சண்டை போட்டாங்களா?  எதுக்கு? நான் போய் பார்த்துட்டு வரேன்.”  எனப் பதறிய கண்ணா, திரும்பப் போக அதைத் தடுத்த ஆகாஷ்

“ஒன்னும் வேண்டாம். இன்னும் கொஞ்ச நேரத்தில், அவங்களே ராசியாகிடுவாங்க. நம்ம சமாதானம் செய்யறோம்னு போனா, ரெண்டு பேரும் நம்மல பந்தாடிடுவாங்க.  அனுபவப்பட்டவன் சொன்னா கேளுங்க.” என்றான், முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு. 

அதிர்ச்சி விலகிய கண்ணா,  முகத்தில் புன்னகை பரவ “நல்ல பசங்க தம்பி, அதுக போய் சண்டை போடுமா”

“நீங்க வேற, பார்க்கத் தான் நல்ல பசங்க. அவங்களுக்கு நடுவுல போனோம்,  நம்ம முடியப் பிச்சு கையில் கொடுத்துடுங்க.” எனச் சொல்லித் திரும்ப, அங்கே கொலைவெறியுடன் நின்றிருந்தவர்களை, பார்த்து அதிர்ச்சியானான் ஆகாஷ்.

சட்டென்று ஒன்றுமே தெரியாத மாதிரி,  முகத்தை மாற்றிக்கொண்டு,  “நீங்க எப்போது வந்தீங்க?” என அசடுவழிந்தான்.

“பாரு பேபி,  இவளோ நேரம் நம்மல அந்த டேமேஜ் பண்ணிட்டு, இப்போ ஒன்னுமே தெரியாத மாதிரி பேசுறத”  என பிரதாப் பல்லை கடிக்க

“ஆமாம் பேபி, இவனை என்ன பண்ணலாம்”  என நிலா, சுற்றும் முற்றும் தேடி ஒரு பூரி கட்டையை எடுத்தாள்.

அதில் எச்சரிக்கையான ஆகாஷ், பின் வாசலை நெருங்கி கொண்டே “வேண்டாம் டார்லிங், அந்த கோட்டை தாண்டி நீயும், வராத நானும் வர மாட்டேன்.  பேச்சு பேச்சாதான் இருக்கனும். ஆயுதம் எடுக்கக் கூடாது.”

“பேபி! அந்த கட்டையை என்கிட்ட கொடு.”  என பிரதாப், அதை  வாங்கி “என்னது டார்லிங்கா?  இதுக்கே உன்னை போடணும்.” எனத் துரத்தத் தொடங்கிவிட்டான்.

‘அச்சச்சோ சொதப்பிட்டியே ஆகாஷ், உனக்கு இது தேவைதான்.  இங்க இருந்தா உன் உயிர்க்கு ஆபத்து. இங்க நிக்காத ஓடிடு’ என மனம் சொல்ல

‘விடு ஜூட்’ விட்டான் ஓட்டம், பீச்சை நோக்கி, பின் வாசல் வழியே.

அவர்கள் வீட்டில் இருந்து நடக்கும் தொலைவில் இருந்தது கடற்கரை. 

தொடரும்

நிதானமான ஆகாஷ்?

அதிரடியான பிரதாப்?

சுட்டெரிக்கும் சூரியன்?

இதில் நிலா யாருக்கு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!