சூரியநிலவு 9

சூரியநிலவு 9
அத்தியாயம் 9
மாலை நேரம்! வெயில் சற்று குறைந்து, இதமான தென்றல் வருட ஆரம்பித்திருந்தது, துபாய் நகரில்(city). சுற்றுலாவிற்கு ஏற்ற நவம்பர் மாதம்.
தன்னை மறந்து! உலகத்தின் உயரமான கட்டிடத்தை, ரசித்திருந்தனர் நண்பர்கள் மூவரும். ரசித்தது மட்டும் போதாமல், அதைப் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். நிலாவின் தோளில் கைபோட்டு ஆகாஷ் நிற்க, அவன் தோளையணைத்து பிரதாப், தங்கள் கைப்பேசியில் சேமித்துக்கொண்டனர்.
புர்ஜ் காலிஃபா!(Burj khalifa) இது தான் உலகிலேயே உயரமான கட்டிடம். நூற்றி அறுபது தளங்களைக் கொண்டது. அதன் அருகிலுள்ள, துபாய் மாலின் ஃபௌன்டைன் டான்ஸ், (Dubai Mall, Fountain dance) நடக்குமிடத்தில் தான் இவர்கள் தற்போதிருப்பது.
ஒரு பக்கம் புர்ஜ் காலிஃபா, அதன் எதிரே ஐந்து நடச்சத்திர விடுதி அட்ரஸ் ஹோட்டல்,(Address Hotel) ஒரு பக்கம் துபாய் மால், அதன் நடுவே இவர்கள். கண்ணைப் பறிக்கும் விளக்கொளியில், அந்த இடமே ஜொலித்தது.
இவர்கள் புகைப்படம் எடுத்து கொண்டிருக்கும் போது, திடீரென சத்தமாக ஹிந்தி பாடலொலிக்க ஆரம்பித்தது. அனைவரின் பார்வையும் பாடல் வந்த திசைக்கு சென்றது.
என்ன ஆச்சரியம்! குளத்திலிருந்த நீரில், ஃபௌன்டைன் டான்ஸ் நடந்தது. மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் வரை நீடித்த, அந்த நடனத்தை விட்டு யாராலும் கண்களை திருப்ப முடியவில்லை.
ஃபௌன்டைன் டான்ஸ் முடியவும், மாலின் உள்ளே சென்ற இவர்கள் அங்கிருந்த அட்ரியம், அக்வேரியம், ஐஸ் ரீங்க் முதலிய இடங்களை, சுற்றியலைந்து களைத்து போயினர்.
ஃபுட் கோர்ட்டில் உணவை முடித்துக் கொண்டு, தாங்கள் தங்கியிருக்கும் ஏழு நட்சத்திர விடுதி, புர்ஜ் அல் அரபுக்கு(Burj Al Arab) திரும்பினர்.
அவர்கள் தங்கி இருந்தது, ஃபேமிலி சூட் இரண்டு படுக்கை அறை கொண்டது.
தங்கள் அறைக்கு சென்று, குளியலை முடித்து கொண்டு ஹாலில் கூடினர். பிரதாப் ஒற்றை சோபாவில் அமர்ந்து, கைப்பேசியில் ஏதோ செய்துகொண்டிருந்தான். ஆகாஷ் நீள சோபாவில் அமர்ந்து, அதே வேலையைச் செய்துகொண்டிருந்தான்.
தன் அறையிலிருந்து வந்த நிலா, இருவரையும் மாறி, மாறிப் பார்த்துவிட்டு, ஆகாஷின் மடியில் தலை வைத்து படுத்து கொண்டாள். தன்னியல்பாக ஆகாஷின் ஒரு கரம் நிலாவின் தலையை ஆதரவாக வருடியது.
பிரதாப்பின் பார்வை ஒரேயொரு நொடி அவர்களை நோக்கி சென்றது. மீண்டும் கைபேசியில் தன் தலையை புதைத்து கொண்டான். அந்த பார்வையிலிருந்தது என்ன அன்பா? காதலா? வாஞ்சையா?
“ஏன்டா இரண்டு பேரும், இங்க வந்தும், அந்த மொபைலை கட்டிட்டு அழறீங்க.”
“கொஞ்சம் வேலை இருக்கு பேபி. நீ போய் தூங்கு. ஒழுங்கா ரெஸ்ட் எடுக்கணும். அப்பத் தான் உடம்பு நல்லா இருக்கும்.” என்றான் பிரதாப், முகத்தைக்கூட நிமிர்த்தாமல்.
ஆகாஷ், நிலா ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டு, “என்ன நீ, எப்பயிருந்து இவ்வளவு பார்மலா பேச ஆரம்பிச்ச?” என்றாள் நிலா.
“அதுலாம் ஒண்ணுமில்ல. ஒழுங்கா ரெஸ்ட் எடுத்தா தான, நல்லா சுத்தி பார்க்க முடியும். அதுதான் சொன்னேன்.” இப்போதும் பிடிகொடுக்காமல், ஆனால் அவள் முகம் பார்த்து கூறினான்.
“நல்லா என்ஜாய் பண்ணத்தான் வந்தேன். காலையில் வந்ததிலிருந்து நீ தூங்கு, தூங்குன்னு சொல்லி, மதியம் நல்லா தூங்கிட்டேன். இப்ப தூக்கம் வரல.” பாவமாக உதட்டை பிதுக்கிக் கூறினாள்.
அவளின் செயலை, ரசிக்க ஆரம்பித்த மனதை அடக்கி,”இல்ல பேபி, கொஞ்சம் வேலையிருக்கு. அதுவரை அஷ் கூட பேசிட்டிரு.” என்று கூறிய பிரதாப்பை, இருவரும் வினோதமாகப் பார்த்தார்கள்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என கொஞ்சம், அமைதியான குணமுடையவன் ஆகாஷ். சிந்தித்து நிதானமாக செயல் படுவான்.
விளையாட்டு, நடனம், ஊர் சுற்றல் என உற்சாகமும் துடிப்பும், கொண்ட அடாவடி குணமுடையவன் பிரதாப். அதிரடியாக செயல் படுவான்.
அந்த அடாவடி, இப்படி அமைதியாக கடமையை, பற்றி பேசினால் விநோதமாக தான இருக்கும். பிரதாப், அவர்கள் தன்னை பார்ப்பதை, உணர்ந்தாலும் அதைக் கண்டுகொள்ளவில்லை.
புருவமுயர்த்தி,“அவ்வளவு முக்கியமான வேலை என்னவோ? சாட்டிங்ல ஏதும் பொண்ணுகூட, கடலைப் போடுறயா? எங்க காட்டு” என, அவன் சுதாரிக்கும் முன், மொபைலை அவனிடமிருந்து பறித்திருந்தாள்.
அதில் பதறிய பிரதாப்,”விளையாடாத அதைக் குடு” என்றான் கடுமையான குரலில்.
எங்க மொபைலை பார்த்தாள், தன்னை தவறாக நினைத்துக் கொள்வாளோ? என்ற பயம். அவன் ரசித்துக் கொண்டிருந்தது, அவனுடைய நிலாவின் புகைப்படத்தை அல்லவா. பயம் இருக்கத்தானே செய்யும்.
“குடுக்க முடியாது, யாரு உன் கேர்ள் பிரண்ட்? நான் பார்க்கணும், எனக்கு காட்டு” என்றாள் பிடிவாத குரலில்.
“கேர்ள் பிரண்ட்லாமில்லை அதை கொடு”
“நான் பார்த்துட்டுத்தான் தருவேன்.” என சொல்லி, ரகசிய எண்ணைப் போட்டு மொபைலை திறந்திருந்தாள். அதில் இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
கைபேசியிலிருந்து நிலாவினால், அவள் கண்களை திருப்ப முடியவில்லை. ஆகாஷின் பார்வையும் ரசனையாக அதில் படிந்தது.
வண்ண விளக்கொளியில், ஒரு கரத்தைப் பேன்ட் பாக்கெட்டில் விட்டு, மறு கரத்தால் தலைமுடியை ஒதுக்குவது போல, எங்கோ பார்த்துக்கொண்டு, மயங்கவைக்கும் புன்னகை முகத்துடன் நிலா. அவள் பின்னணியில் புர்ஜ் காலிஃபா.
அவளுக்கே தெரியாமல், எடுத்த கேஸுவல் ஷாட், அவ்வளவு ஸ்டைலிஷாகவும் அழகாகவும் வந்திருந்தது.
“ஹே! நானா இது நம்பவே முடியலை. ரொம்ப அழகாயிருக்கு.” மகிழ்ந்தாள் நிலா.
“அது நீ தான் டார்லிங். நம்பு சந்தேகமே வேண்டாம்.” என்ற ஆகாஷே தொடர்ந்து,“ஆனா நீ எப்படி இவ்வளவு அழகாயிருக்க? எங்கோ இடிக்குதே?”
“எங்கும் இடிக்கல, இப்போ நான்தான் உன்னை அடிக்க போறேன்” என, அவனைத் துரத்தத் தொடங்கிவிட்டாள். இருவரும் பிரதாப்பை சுற்றி கொண்டிருந்தனர்.
பிரதாப் எதோ சிந்தனையிலேயே இருப்பதை, இருவரும் கவனித்துக் கொண்டு தானிருந்தனர். அது இருவரையும் வேறு, வேறு வகையில் தாக்கியது.
அவர்களின் ரகளை ஓய்ந்த போது, இருவரும் படத்தை மறந்திருந்தனர். ப்ரதாப் நிம்மதியாக மூச்சை விட்டான்.
மீண்டும் ஆகாஷின் மடியில் படுத்த நிலா உறங்கிவிட்டாள். நிலாவை பார்த்த, இருவரின் மனமும் இரத்தக்கண்ணீர் வடித்தது.
அவளின் கவலைகள் அனைத்தையும், தங்களுக்காக மறைத்து, மகிழ்ச்சியாக இருப்பதைப் போல காட்டிக்கொள்பவளின், ஆசையை நிறைவேற்ற துடித்தனர்.
அவளின் நீண்டநாள் ஆசை, துபாயைப் பார்க்க வேண்டும் என்பது. அதை நிறைவேற்றவே, அதிக ரிஸ்க் எடுத்து இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இல்லையென்றால் அவர்கள் தற்போது இருக்க வேண்டிய இடம் லண்டன்.
அவள் நன்கு உறங்கிவிட்டதை உணர்ந்த ஆகாஷ், பிரதாப்பை அழைத்து, அவளைத் தூக்கிச்சென்று படுக்கையில் விடச் சொன்னான். பிரதாப் அவளைத் தூக்கத் தயங்கவும், ஆகாஷ் அவனைச் சந்தேகமாகப் பார்த்தான்.
’இனியும் தாமதித்தால் தப்பாகிவிடும்,’ என உணர்ந்து, உடனே அவளை தன் கரங்களில் அள்ளிக்கொண்டான், பூக்குவியலைப் போல். அலுங்காமல் கொண்டுச்சென்று படுக்கையில் கிடத்திவிட்டு, நிமிர முயற்சித்தான்.
முயற்சி வெறும் முயற்சியாகவே இருந்தது. காரணம், அவனுடைய உள்ளங்கையில், தன் கன்னத்தை பதித்து, நல்ல உறக்கத்தின் பிடியில், அவனை நோக்கி படுத்திருந்தாள் நிலா.
அவளைவிட்டு செல்லப் பிரியமில்லாமல், சிறிது தாமதித்து அவளின் அழகை, தன் விழிகளால் அள்ளிப்பருகினான்.
‘தான் செய்வது தவறு’ என்று தெரியும். தெரிந்தும் மனதில் குறுகுறுப்போடு, அந்த தவறை விரும்பி செய்தான்.’தன் நிலாப் பெண்ணைவிட்டு, இனி தன்னால் விலகி இருக்கமுடியுமா?’ என்ற கேள்வி பூதாகரமாக, அவன் முன் விஸ்வரூபம் எடுத்து, அவனை மறுகச்செய்தது.
அவளை முத்தமிட துடித்த மனதை அடக்கி, அவள் அறையை விட்டுத் தங்கள் அறைக்குச் சென்றான். அங்கே பல குழப்பங்களுடனும் கேள்விகளுடனும் இவனுக்காகக் காத்திருந்தான் ஆகாஷ்.
*************************
வெற்றி! தன் அறையில், தன் படுக்கையில், மல்லாக்க படுத்து, விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.’அடுத்து என்ன செய்ய வேண்டும்.’ என தெரியாமல், மொபைலை கைகளில் வைத்துக்கொண்டு, சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.
காலையில் தன் தந்தையிடமிருந்து, மதுவின் எண்ணை வாங்கியதிலிருந்து, அவ்வப்போது அந்த எண்ணிற்கு முயன்று கொண்டிருக்கிறான்.
’தாங்கள் அழைக்கும் வாடிக்கையாளர், தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார். சிறிது நேரத்திற்கு பின் முயற்சிக்கவும்.’ என பதிவு செய்யப்பட்ட, பெண்னின் குரல் மட்டுமே தொடர்ந்து வந்தது.
தொலைபேசி நிலையத்தில், வேலை பார்க்கும் தன் நண்பனை வைத்து, அந்த எண், கடைசியாக எந்த டவரிலிருந்து செயல்பட்டது, என்றவரை அறிய முடிந்தது.
‘அடுத்து என்ன செய்யலாம்?’ என்ற சிந்தனையின் முடிவில், அவனின் பள்ளிக்கால தோழன் கருணாகரன் தோன்றினான். முதலிரண்டு அத்தியாயத்தில், வந்த அதே கருண் தான்.
அவனின் சகோதரி ஏ எஸ் என் குரூப்ஸில் பணியாற்றுகிறாள். அவளின் மூலம் அந்த இருவரையும் பிடிக்க முடியுமா என்ற முயற்சித்தான் .
மணி இரவு ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. அதைக் கவனத்தில் கொள்ளாமல் கருண்ணை அழைத்துவிட்டான்.
போன் யாரிடமிருந்து, என்று பார்த்த கருண் தலையிலடித்துக்கொண்டே,’திருமணம் முடிந்த அடுத்தநாள் நைடே, பிரண்டை கூப்பிட்டு பேசுற ஒரே ஆளு இவனாதான் இருப்பான்.’ என்று புலம்பிக்கொண்டே,
”சொல்லுடா நண்பா! என்ன இந்நேரம் கூப்பிட்டிருக்க?”
“சாரிடா உன்ன தொந்தரவு பண்ணிட்டேனா?” என்றான் வருத்தமான குரலில்.
“அறிவுகெட்டவனே! நேத்து தான் உனக்குக் கல்யாணம் முடிஞ்சிருக்கு. இந்நேரம் உன் மனைவியை தான் நீ தொந்தரவு பண்ணிருக்கணும் . நீ என்னனா எனக்கு பேசுற.” பொரிந்துவிட்டான்.
“மனைவியா?” என்ற பின் தான், ஓவியாவின் நினைவு தோன்றியது.
“அவ அம்மாகூட பேசிட்டுட்டு இருக்கா” எந்த உணர்வையும் வெளிக்காட்டாத குரல்.
“அவங்களை அம்மாகிட்ட விட்டுட்டு, நீ என்ன தோட்டத்தில பூப்பறிச்சுட்டிருக்கியா போடா அறிவுகெட்டவனே. முதலில் போய் ஓவியாகூட டைம் ஸ்பென்ட் பண்ணு.” என வறுத்து எடுத்துவிட்டான்.
“ப்ச்” சலிப்புடன் “அத அப்பறம் பார்ப்போம். நான் கேட்கிறதுக்குப் பதில் சொல்லு”
“என்ன?”
“உன்னோட சிஸ்டர் வேலை பார்க்கற, க்ருப்ஸோட எம்டி பத்தி தெரியணும்.”
“அவங்களை பத்தி உனக்கு எதுக்கு?” என்றான் சந்தேகமாக.
“அதுல ஒருத்தன்தான் மதுவை நேத்து கூட்டிட்டு போனது.”
“என்னாது மறுபடியும் மதுவா! டேய் அவ போய்ட்டா. உன்னோட மனைவி ஓவியா, அவளைப் பத்தி மட்டும் யோசி.”
“அப்படியெல்லாம் விட முடியாது. என்னை! அவனுக்காக வேண்டாமென்று விட்டுப் போகும் அளவு, எங்கிட்ட இல்லாதது, அவன்கிட்ட என்ன இருக்குதுனு தெரிஞ்சே ஆகணும். நான் பட்ட அவமானத்துக்கு, மது எனக்குப் பதில் சொல்லியே ஆகணும். நான் அவளைத் திருப்பியடிப்பேன்.” கோபம் மட்டுமே இருந்தது.
நண்பனின் நிலையையறிந்த கருண்,”சரிடா வெற்றி, நான் மாலதியிடம் காலையில் கேட்டுச் சொல்லுறேன்.”
“ஏன் காலைல! இப்போ கேட்க முடியாத?” அவனிற்கு என்ன அவசரமோ?
“டேய் வேண்டாம் அழுதுடுவேன். மணி என்ன பாரு, பத்து இப்பபோய் ஒரு வயசு பொண்ணுக்கு பேசலாமா?”
தன் தவறு புரிந்தது, இருந்தாலும்,”மாலு உன் சிஸ்டர் தான” என்றான் இறங்கிய குரலில்.
“வேலைக்குப் போற பொண்ணு நேரமே தூங்கிடுவா? கல்யாணமான நீயும் கச்சேரி நடத்தமாட்ட. கல்யாணமாகாத என்னையும் கனவு காணவிடமாட்ட. எனக்காக காஜல்அகர்வால், கீர்த்தி சுரேஷ் எல்லாம் வைட்டிங் வரட்டா.” என இணைப்பைத் துண்டித்துவிட்டான்.
அதற்கு மேல் என்ன செய்வது, தெரியாமல் தற்போது சிந்தனையின் வசம்.
அவனின் ஆழ்ந்த சிந்தனையை, கலைத்து அறைக்குள் நுழைந்தாள் ஓவியா. அவனிருக்கும் குழப்ப நிலையை பார்த்து,”என்ன ஆச்சு வெற்றி, ஏன் இப்படிக் குழம்பி போயிருக்கீங்க?” என கேள்வி எழுப்பினாள்.
காலை, உணவை முடித்தபின் அவர்கள், வெற்றியின் வீட்டிற்கு வந்துவிட்டனர். தற்போது அவர்கள் வெற்றியின் அறையில்.
“ஒண்ணுமில்லை” எனப் பேச்சை முடித்தான். அவளிடம் சொல்லவா முடியும்,‘உன் அக்காவைப் பற்றி நினைக்கிறேன் ’ என்று
‘அவன் எதைப் பற்றிச் சிந்திக்கிறான்.’ என்று அவளிற்குப் புரிந்தது. மனதில் சுருக்கென்று ஒரு வலி வந்து மறைந்தது.
‘மது நீ போனது நல்லதா? கெட்டதா? என்னை நினைத்தால் நல்லதென்று தோணுது. வெற்றியை நினைத்தால் கெட்டதா தோணுது.’ என்ற சிந்தனையில், வெற்றியின் அருகில் படுத்துவிட்டாள்.
********************
மறுநாள் காலை, மதுவின் மொபைலில் வாட்ஸ் அப்கால் வந்து, அவளின் தூக்கத்தைக் கெடுத்தது.
“குட் மார்னிங் மேகி” என்றாள் உற்சாகத்துடன். ஆனால் அந்தப்புறம் இருந்த மேகவர்ஷினி,
“ஏண்டி மது! நான் பாட்டுக்கு நிம்மதியா இருந்தேன். அவன்கிட்ட ஏன்டி என்னைக் கோர்த்துவிட்ட? அவன் நேத்து காலையில், என்னைத் தூங்க விடாம போனை போட்டு, உயிரை எடுத்துட்டான்.” என பொங்கிவிட்டாள்.
“ஏண்டி அறிவுக்கொழுந்தே! நேத்து அவன் உன் தூக்கத்தை கெடுத்தானென்று, இன்னைக்கு என் தூக்கத்தை கெடுக்கற” என்றாள்.
“என்னது உன் தூக்கத்தை கெடுக்கறேனா? மணி எட்டரை ஆச்சு.”
“இங்க ஏழுதான் ஆகுது.”
“ஏழு ஆச்சுல்ல அப்ப தப்பில்லை. ஏன் அவன் கிட்ட என் பேரைச் சொன்ன? சும்மாவே அடிக்கடி கூப்பிட்டு உன்னை பத்தி கேட்பான். கொஞ்ச நாளா தொல்லை இல்லாமல் இருந்தேன். இப்ப டெக்ஸ்டைல்ஸ் ஆரம்பிக்கிறது பத்தி வேற சொல்லி இருக்க” பொரிந்துவிட்டாள்.
மாலில் நடந்த அனைத்தையும் சொல்லி
“திடீர்னு அவரை பார்க்கவும், எனக்கு என்ன பண்ணுறதுனு தெரியலை? சாதாரணமா பேசி அவரை அனுப்ப நான் பட்டபாடு அப்பப்பா. என்னோட முகத்தில் சின்ன எக்ஸ்பிரஷன், மாறினாலும் இவங்க இரண்டு பேரும் அவரை உயிரோட விடமாட்டாங்க. அந்தப் பயத்தில் உன்னை மாட்டி வச்சுட்டேன். சாரி மேகி.” என்றாள் உருக்கமாக.
“என்னடி இதுக்கு போய், இவ்வளவு பீல் பண்ணிட்டிருக்க. இந்தச் சூர்யா என்ன, அந்த ஆர்யா வந்தாலே நமக்கு ஜூஜூபி. இவனை நான் பார்த்துக்கறேன். நீ கவலைப்படாத”
“சூர்யா ஓகே யாருடி அந்த ஆர்யா, எனக்கு தெரியாமல் புது பாய் பிரண்ட்.””
“ம்க்கும் ‘அந்த ஒன்னு தான் குறைச்சல்’ அது செத்துப் போன எங்க தாத்தா, ஏண்டி ரைமிங்க்கா பேசுனா உனக்குக் கிண்டலா போச்சா. அந்த இரண்டு கிட்டயிருந்து தள்ளியே இரு. செல்லம் குடுத்து, உன்னை ரொம்ப கெடுத்து வச்சிருக்காங்க.” என நொடித்துவிட்டு காலைத் துண்டித்தாள்.
மது சிரித்து கொண்டே தன்னை தூய்மை படுத்திக்கொண்டு, பக்கத்து அறையில் நுழைந்தாள். ஆகாஷ் பிரதாப் நல்ல உறக்கத்தில் இருந்தனர்.
“அது எப்படி நானிருக்கும்போது நீங்கத் தூங்கலாம்” என்ன தனக்கு தானே பேசிக்கொண்டு, சுற்றும் முற்றும் பார்க்க தண்ணீர் பாட்டிலிருந்தது. அதை முகத்தில் ஊற்றலாமா, என சிந்தித்த நேரம் அவள் கண்களில் பட்டது டிஸ்ஸு பாக்ஸ்.
அதிலிருந்து ஒரு டிஸ்ஸுவை எடுத்து நீரில் நனைத்து, முதலில் ஆகாஷின் மேல் போட்டாள். தூக்கத்தில் ஒன்றும் புரியாமல், அவன் அடித்து பிடித்து எழுந்தமர, சிரித்துக்கொண்டிருந்த நிலா அவன் கண்களில் பட்டுவிட்டாள்.
அவனும் அவளை முறைக்க முயன்று, முடியாமல் சிரித்துவிட்டான். அவன் எதோ சொல்ல வாயைத் திறக்கப்போக, தன் கரத்தினால் அவன் வாயை முடி, பிரதாப் புறம் கைகாட்டினாள்.
அவனுக்கும் இதையே செய்யப்போகிறாள், என்பதை உணர்ந்து அவள் காதை பிடித்துத் திருகி, ”உனக்கு ரொம்ப சேட்டை அதிகமாகிருச்சு. அவன் தூக்கத்தை கெடுத்தா, அரக்கனாகிடுவான்” என்றான் மெல்லிய குரலில், அவளுக்கு மட்டும் கேட்குமாறு.
‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ எனச் சைகை காட்டிவிட்டு, அடுத்த டிஸ்ஸுவை நனைத்தாள். ஆகாஷ் ரொம்ப ஆர்வமாக, பிரதாப்பின் எதிர்வினையை பார்க்க காத்திருந்தான்.
அந்த காகிதத்தை, பிரதாப்பின் மீது போட்ட நிலா, சிட்டாகப் பறந்து விட்டாள். வாசலிலிருந்து எட்டிப் பார்க்க, பிரதாப் அதைத் தூசியாகத் தூக்கிப்போட்டு உறக்கத்தைத் தொடர்ந்தான்.
நிலாவைப் பார்த்த அகாஷிற்கு சிரிப்பு வந்துவிட்டது. கடுப்பான நிலா, ஆகாஷை நோக்கிச் செல்ல, உஷாரான அவன் குளியலறை சென்று கதவடைத்துவிட்டான்.
“உனக்குப் பாட்டில் தண்ணிதான் போல. எல்லாம் உன் விதி.’ச்ச்’ நீ ரொம்ப பாவம் பேபி.” என்ற நிலா தண்ணீர் பாட்டிலை கைகளில் எடுத்திருந்தாள். என்ன அப்போது போலக் கொஞ்சம் உஷாரா, தள்ளி நின்னு ஊற்றியிருக்கலாம்.
அவள் வெட்டிய குழியில் அவளே விழுந்தாள்.
நிலா பாட்டிலுடன், அவனருகில் செல்ல,
அவளின் கரத்தை, பற்றியிழுத்த பிரதாப்,
படுக்கையில் அவளைத் தள்ள,
நீர் முழுவதும் அவள்மீது கொட்டியது.
ஆகாஷ் எழுந்த அரவத்தில், இவனும் முழித்திருந்தான், என்ன நடக்கிறது என்று பார்க்கப் பொறுமை காத்தான். இதை அறியாத நிலா அவனை நெருங்கி மாட்டிக்கொண்டாள்.
அந்த திடீர் தாக்குதலால், நிலா பயத்தில் கண்களை மூடியிருந்தாள். பிரதாப் புத்தம் புது மலராக இருந்த, நிலாவின் அழகை தன் விழிகளால் அள்ளிப்பருகிக் கொண்டிருந்தான்.
*********************
சென்னையில் இரண்டு நாள் கடந்திருந்தது
மது, ஆகாஷ், பிரதாப் பற்றிய அறிக்கை, துப்பறியும் நிறுவனம் அளித்திருந்தது. இப்போது சூர்யாவின் கைகளில், அந்த அறிக்கை படாதபாடு பட்டுக் கொண்டிருந்தது.
அந்த அறிக்கையிலிருந்து சூர்யா அறிந்துகொண்டது,
’பெற்றோர் பார்த்துவைத்த திருமணம் பிடிக்காமல், ஆகாஷுடன் கிளம்பி சென்னை வந்த நிலா, இப்போது துபாயில் இருக்கிறாள். எதற்குச் சென்றாள்? எப்போது வருவாள் தெரியவில்லை?’
பிரதாப் ஆகாஷின் அறிக்கையிலிருந்து, ஆறு வருடங்களுக்கு முன் நடந்த சாலை விபத்தில், பிரதாப் தன் பெற்றோரையும், ஆகாஷ் தன் தாயையும் ஒன்றாக இழந்துள்ளனர். ஆகாஷின் தந்தை உயிர் தப்பி, தன் கால்களை இழந்துள்ளார்.
விரக்தியின் பிடியிலிருந்த இருவரும், தங்கள் தொழிலில் கவனம் செலுத்தினர். அவர்களின் வெறுமையைத் தாங்க முடியாத, ஆகாஷின் தந்தையும், பிரதாப்பின் தந்தை வழி தாத்தா, பாட்டியும் வற்புறுத்தி, அவர்களின் ஆசையை நிறைவேற்ற லண்டன் அனுப்பியுள்ளனர்.
நான்கு வருடம் கழித்து, சிறிது நாட்களுக்கு முன் தான், இந்தியா திரும்பியுள்ளனர். இது தான் அறிக்கையிலிருந்தது. லண்டன் நிகழ்வு கிடைக்கவில்லை.
அவன் தானாக யூகித்தது, லண்டனில் நிலாவுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கு, அது இப்பொழுதும் தொடர்கிறது.
“உங்களைத் தான் தேடிட்டு இருந்தேன். உங்கள் குடும்பத்தால் நான் இழந்ததிற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும். உங்களிடமிருந்து, என் நிலாவைப் பறித்துச் செல்வேன். உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறேன். வெல்கம் பாக் இந்தியா.” என்றான் குரூரமாக.