ஜீவநதியாக நீ – 18

JN_pic-06123c92
Akila Kannan

ஜீவநதியாக நீ…  

அத்தியாயம் – 18

கீதாவின் கைகள் ரவியின் நெஞ்சின் மீது அவன் கைகளுக்கு இடையே அழுத்தத்திற்கு ஆட்பட்டு  அவன் இதயத்துடிப்பை உணர ஆரம்பிக்க, அவள் விழிகளோ அவனை படபடப்பாக பார்க்க, அவன் விழிகளோ அவளை பரிதவிப்போடு பார்த்தன.

“கீது…” அவன் குரல் ஆழமாக அழைக்க, “ரவி…” அவன் தந்தையின் குரல் அதீத சத்தத்தோடு, அந்த வீட அதிரும் அளவுக்கு ஒலிக்க, ரவி பதட்டத்தோடு படியிறங்கி அவன் தந்தை முன் வர, அவர், “பளார்…” என்று அவன் கன்னத்தில் அறைந்திருந்தார். ரவியின் பின்னே படி இறங்கி வந்து கொண்டிருந்த கீதா அவள் இறங்க எத்தனித்த படியில் ஸதம்பித்து நிற்க, ரவியின் தாயாரோ அதிர்ந்து நின்றார். வீட்டின் வேலையாட்களோ, அவர்கள் இருக்கும் இடத்திலே முடங்கி கொண்டனர்.

“அப்பா…” ரவி தடுமாற, “நீ ஜீவா இருக்கும் இடத்திற்கு போய், அந்த ஜீவாவோட ரோட்டில் சண்டை போட்டிருக்க?” ஷண்முகம் கர்ஜிக்க, “அப்பா…” ரவி தடுமாறினான். “லூசா நீ ரவி. இப்படி ரோட்டில் அடிச்சி ஜீவாவை தூக்கி போட எனக்கு தெரியாதா இல்லை முடியாதா?” அவர் ஆவேசமாக கேட்டார். “அவங்க இருக்கிற இடம் தெரிஞ்ச மறுநாளே நான் அதை பண்ணிருக்க மாட்டேன்?” அவர் கேள்வியாக நிறுத்த அங்கு மௌனம்.

“நீ எப்பவுமே ஒரு அவசர குடுக்கை தான். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு சொல்ற மாதிரி தான் நீ. அது தான் அந்த ஜீவா கிட்ட உன் தொழில் விஷயத்தில் தோத்து போன.” ஷண்முகம் இந்த வார்த்தைகளை உதிக்கும் பொழுது ரவியின் முகம் அவமானத்தில் சுருங்க அவன் கூனி குறுகி நின்றான். கீதாவுக்கு அவனை பார்க்கும் பொழுது மிக பாவமாக இருந்தது. ‘அப்படி என்ன நடந்திருக்கும்?’ என்ற கேள்வியும் அவளுள் எழுந்தது.

“நான் ஆயிரம் தடவை சொல்லுவேன். அந்த ஜீவா கொள்கை பேசிட்டு அலைவானேயொழிய அவன் கெட்டிக்காரன். உனக்கு அவனளவு சாமர்த்தியம் இல்லாததால் தான் எல்லா விஷயத்திலையும் அவன் கிட்ட தோத்துட்டு வர. இன்னைக்கும், அந்த போலீஸ்காரன் அவன் மேல தப்பில்லைனு சொல்றாங்க. தப்பே செய்தாலும் அதை ஒழுங்கா செய்யணும்” அவர் பேசிய வார்த்தையில் ரவியின் கம்பீரம் உடைந்தது. அதுவும் தன் மனைவி முன்னே கூறியதில் அவமானம் அவனை பிடுங்கி தின்றது. ஷண்முகத்தின் செய்கை கீதாவுக்கு பிடிக்கவில்லை.

“ரவி, உன்னால் என்ன கிழிக்க முடிந்தது? உன் தொழிலை காப்பற்ற முடியலை. அப்பவும் இந்த ஜீவா பெயரைத்தான் சொன்ன, உன் தங்கை காதல் விஷயத்தை தெரிஞ்சிக்கவும் முடியலை. உன் தங்கை கல்யாணத்தை நிறுத்தவும் முடியலை. இப்ப அவன் கூட ரோட்டில் சண்டை போட்டு அவனை நல்லவனாகிட்டு இருக்கிற.” அவர் சிடுசிடுக்க, ரவி வார்த்தைகள் வராமல் தடுமாறினான். அவர் பேச்சின் போக்கை நிறுத்த முடிவு செய்து படியிறங்கி வந்தாள் கீதா.

“இதுக்கெல்லாம் யார் காரணம் மாமா?” கீதா நடுக்கூடத்திற்கு வந்து அவர்கள் முன்னே நின்று கேட்டாள்.  “கீதா…” ரவி இப்பொழுது அழுத்தமாக அவளை கண்டிப்போடு அழைத்தான். “இந்த வீட்டில் பெண்கள் பொது விஷயத்தை பேசுறதில்லை மா” அவர் அன்போடு அவள் பேச்சுக்கு முற்று புள்ளி வைக்க முயற்சித்தார். “அது தான் மாமா எல்லா பிரச்சனைக்கும் காரணம். அத்தையும் தாரிணியும் பேசிருக்கணும் மாமா.” கீதாவின் குரல் இப்பொழுது தெளிவாக வெளி வந்தது. புஷபவல்லிக்கு மருமகள் பேச்சில் உதறல் எடுக்க, “கீதா…” இப்பொழுது ரவியின் குரல் சற்று கெஞ்சலாக ஒலித்தது. இந்த சில நாட்களில் அவள் பிடிவாதத்தை அவன் அறிந்திருக்க, தன் மகன் தன் மனைவியின் மேல் வைத்திருக்கும் பிரியத்தை ஷண்முகம் இந்த ஒற்றை நொடியில் கண்டுகொள்ள, அவர் சோபாவில் நிதானமாக சாய்ந்து அமர்ந்தார்.

எந்த கீதாவை ஜீவாவை எதிர்க்கும் கேடயம் என்று அவர் எண்ணினாரோ, அது இவர்கள் இல்லத்ததை தாக்க போகும் ஈட்டியோ என்ற ஐயம் அவருள் எழ, அவர் தன் தொண்டையை கமறிக் கொண்டார். “ஏன் பேசுறதில்லை மாமா?” கீதா நிதானமாக மரியாதையாக கேட்டாள். “பயம்… மரியாதை…” அவர் அடுக்க, “மாமா,எனக்கு உங்க கிட்ட மரியாதை இருக்கு. ஆனால், பயம் இல்லை. நான் ஏன் உங்களை பார்த்து பயப்படணும்? தப்பு பண்ணினவங்க தானே  பயப்படணும்?” அவள் பேச, “கீதா, நீ நம்ம ரூமுக்கு போ” என்றான் ரவி அவளிடம் கோரிக்கையாக.

“இல்லை ரவி. மருமகள் பேசட்டும். ஏதோ பேச ஆசைப்படுற மாதிரி இருக்கு” அவர் கீதாவின் எண்ணத்தை அறிந்து கொள்ள முடிவெடுத்துவிட்டார்.  “இவங்க செய்யுற எல்லா தப்புக்கும் நீங்க தான் காரணம் மாமா” அவள் விட்ட இடத்தில ஆரம்பித்தாள். “இவங்க செய்யுற தப்பை நீங்க கண்டிச்சா மட்டும் போதாது மாமா. நீங்க நல்ல விஷயத்தை சொல்லி கொடுத்திருக்கணும். ஆனால், நீங்களே தப்பான வழியை தானே காட்டுறீங்க. என் அண்ணனை உங்க கைக்குள் வைக்க என்னை கல்யாணம் பண்ண சொல்லி திட்டம் போட்டது நீங்க” கீதா நிறுத்த, அவர் தன் மருமகளை மெளனமாக பார்த்தார். ‘உண்மையை எத்தனை நாள் மறைக்க முடியும்?’ என்ற பாவனை அவரிடம். புஷ்பவல்லிக்கு முகம் எல்லாம் வியர்த்து விட்டது.

‘அப்பா, ஏன் கீதாவை பேச சொன்னாங்க? இவ சும்மாவே ரொம்ப பேசுவா. இவள் பேச்சை எப்படி நிறுத்துறது?’ ரவி கைகளை பிசைந்து கொண்டு நின்றான். “நீங்க தப்பு பண்ணறீங்க. ஆனால், உங்க வயசுக்கு தப்பின் எல்லைக்கோடு தெரியுது.உங்க பையனுக்கு இளம் வயசு. தப்பு செய்யும் பொழுது நிதானம் தவறி எல்லைக்கோட்டை மீறிடுறார்” கீதா கூற, அவர் தன் மருமகளை ஆழமாக பார்த்தார்.

 “தாரிணி விஷயத்திலும் உங்க மேல தான் தப்பு. என் அண்ணன் நீங்க தட்டி கழிக்கிற அளவுக்கு மோசமான ஆள் கிடையாது. ஆனால், உங்க பணம் அந்தஸ்து எல்லாம் வேற. உங்க பெண்ணை நீங்க என் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திருக்க வேண்டாம். ஆனால்,  உங்க பொண்ணு என் அண்ணனை விரும்பியிருந்தா நீங்க சொல்லி புரிய வச்சிருக்கணும். இல்லை கொஞ்சம்  கால அவகாசம் கொடுத்திருக்கணும். எதுவுமில்லாமல் நீங்க அவசரஅவசரமா ஏதோ ஒரு மாப்பிள்ளையை பார்க்க, தாரிணி அவசரப்பட்டு முடிவு எடுக்க, என் அண்ணன் வேறு வழி இல்லாமல் தான் இதை  செய்திருக்கணும்.” அத்தனை நேரம் கம்பீரமாக ஒலித்த அவள் குரல், தன் அண்ணனை பற்றி பேசும் பொழுது கரகரத்தது.

அவள் பேசிய பேச்சில் செய்வதறியாது நின்ற ரவி, அவள் குரல் பிசிறுதட்டுகையில் அவளை வேதனையோடு பார்த்தான். கீதா சட்டென்று அவளை சமாளித்துக்கொண்டு, “இதை அத்தையாவது எடுத்து சொல்லிருக்கலாம். ஆனால், நீங்க தான் வீட்டில் பெண்களை பேச விடுறதே இல்லையே” கீதா மெதுவாக தன் பேச்சை முடித்துக் கொண்டாள்.

ஷண்முகம் பெரிதாக கோபப்பட்டு கத்தும் குணம் கொண்டவரில்லை. ஆனால், தன் பார்வையாலே அனைவரையும் கட்டுக்குள் வைத்திருப்பவர். அவர் வீடு இந்நாள் வரை அப்படித்தான் இயங்கி கொண்டிருக்கிறது. அவர் பணபலமும், அதிகார பலமும் வெளியிடத்திலும் அவர் தொழிலிலும் அவரை அப்படித்தான் இயங்க வைத்து கொண்டிருக்கிறது. அதை தொட்டு பார்த்த கீதாவின் மீது அவருக்கு கடுங்கோபம் ஏறியது.

“புஷ்பா தண்ணீர் கொண்டு வா” அவர் கூற, தன் மனைவி கொடுத்த தண்ணீரை மடமடவென்று குடித்தார். நிதானமாக தன் கண்களை மூடி அமர்ந்தார். ‘பெரிய பிரச்சனை வருமோ?’ புஷ்பாவும் ரவியும் அவரை அச்சத்தோடு பார்க்க, அவரோ கீதா சொன்னது சரியா தவறா என்று சிந்திக்க விரும்பாமல் அதை அவர் இரண்டாம் பட்சமாக ஒதுக்கி வைத்தார். ‘வருடம் இரெண்டாயிரத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறது. தன் வீட்டு பெண்கள் மௌனம் காக்கலாம். ஆனால், எல்லா பெண்களும் அப்படி இருக்க மாட்டார்கள்.’ என்ற எண்ணத்தோடு அதற்கு உதாரணமாக நின்ற தன் மருமகளை பார்த்தார்.

‘மருமகளின் பேச்சில் தன் மனைவிக்கு எங்கோ ஒப்புதல் இருக்கவே தான் அவள் வெகுண்டு எழவில்லை.’ என்று யோசித்தவாறே, என்ன நடக்குமோ என்று பயத்தோடு நிற்கும் தன் மனைவியை பார்த்தார். ‘தன் மனைவியை வேலைக்கு அனுப்பும் மகன். அவனை அடித்தால் கூட வாங்கி கொள்ளும் மகன். தன்னை எதிர்த்து பேசும் மனைவியை கண்டிக்காமல் அவன் கெஞ்சிய விதம், தடுமாறிய விதம் கீதாவிற்கான ரவியின் நேசத்தை அவர் கணக்கிட்டு கொண்டார்.

‘நான் எகிறினால், சூழ்நிலை எப்படி வேண்டுமானால் மாறலாம்’ பக்குவப்பட்ட மனிதராய் அவர் பொறுமையோடு கேலியை கையில் எடுத்துக்கொண்டார்.

“நான் செய்த தப்பு இன்னும் ஏதாவது இருக்கா? இல்லை நான் செய்ய வேண்டியது ஏதாவது இருக்கா” அவர் நக்கல் தொனியில் கேட்க, பேசிவிட்டாலேயொழிய கீதா மனதிலும் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது.

ஷண்முகத்தின் பேச்சில், ஆசுவாசம் அடைந்தவளாக, “உங்க மகனை அடிக்கும் உரிமை உங்களுக்கு இருக்கு மாமா. ஆனால், என் கணவரை நீங்க அடிக்கும் பொழுது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.” கீதா கூற, அவர் இப்பொழுது பெரிதாகவே சிரித்தார். “நான் ஏதாவது தப்பா பேசிருந்தா என்னை மன்னிச்சிருங்க. உங்களை காயப்படுத்த நான் இப்படி பேசலை. ஆனால், சொல்லணும்னு தோணிடுச்சு சொல்லிட்டேன்” அவள்  மன்னிப்பு கோரும் விதம் போல் தன்மையாக கேட்டாள்.

“எல்லாம் சொன்ன நீ, நான் செய்த நல்ல காரியத்தை சொல்லவே இல்லையே கீதா?” அவர் இப்பொழுது கேட்க, கீதா அவரை புரியாமல் பார்த்தாள். “காரணம் என்னவா இருந்தாலும், என் மகனுக்கு நான் ஒரு நல்ல பெண்ணை தான் மனைவியாக்கிருக்கேன்” அவர் கூற, கீதாவின் முகத்தின் புன்னகை.  “உன் புருஷனை அடிதடிக்கு போகாம பார்த்துக்கோ” கூறிவிட்டு அவர் செல்ல, ரவியும் கீதாவும் அவர்கள் அறைக்குள் சென்றார்கள். 

அவர்கள் அறைக்குள் நுழைந்ததும்,

“கீதா, இனி அப்பா கிட்ட இப்படி எல்லாம் பேசாத” ரவி சற்று கண்டிப்போடு கூறினான். “ஏன்? தப்புன்னு பட்டத்தை நான் சொன்னேன். இதில் என்ன இருக்கு?” கீதா புருவத்தை உயர்த்தினாள். அவள் புருவம் உயர்ந்த விதம், அவள் இத்தனை நேரம் நின்ற கம்பீர தோற்றத்தை நினைவு படுத்த அதில் மயங்கி  ஒரு எட்டு அவளை நெருங்கி, அவளை இடையோடு அணைத்து கொண்டு, அவள் புருவத்தை நீவினான். அவன் தீண்டலில் அவள் முகம் கேள்வியின் தோரணையை மாற்றிக்கொண்டது.

“நான் ஏன்னு கேட்டேன்?” அவள் அவன் நெருக்கத்திலிருந்து விலகவும் முடியாமல், நெருங்கி நிற்கவும் முடியாமல் கேள்வியை  தொடுத்தாள். “அப்பாவுக்கு கோபம் வந்தா என்ன வேணும்ன்னாலும்  பண்ணுவாங்க. இன்னைக்கும் அப்பாவுக்கு கோபம் வந்திருக்கும். ஆனால், குடும்ப சூழ்நிலையை மனசில் வச்சி மௌனமா போய்ட்டாங்கன்னு நினைக்குறேன்” ரவி அவள் முகத்தை கைகளில் ஏந்தி மென்மையாக கூறினான்.

“கோபம் வந்தா என்ன பண்ணுவாங்க? என்னை வீட்டை விட்டு அனுப்பிருவாங்களா? அனுப்பட்டுமே… எனக்கு எந்த கவலையும் இல்லை. எனக்கு நீங்க வேண்டாமுன்னு போய்கிட்டே இருப்பேன்” அவன் அணைப்பில், அவள் விலகலை சொல்ல, அவன் அணைப்பு இறுகியது. “ஆனால், எனக்கு நீ வேணுமே கீது…” அவன் அவள் வெற்றிடையை ஒற்றை கையால் அணைப்பில் நிறுத்தி, அவள் கூந்தலில் மற்றொரு கையை பொதித்து அவள் கன்னம் இழைத்து  ஆழமான குரலில் கூற, அவள் இதய துடிப்பு எகிறியது.

‘இது என்ன? என்ன நடக்குது இங்க? ரவிக்கு என்னை பிடிக்காது. எனக்கும் ரவியை பிடிக்காது’ அவள் திமிர நினைக்க, அவள் தேகம் அவன் அணைப்பில் உருகி நின்றது. அவளிடம் பதிலில்லாமல் போக, “நான் சொல்றது கேட்குதா கீதா. எனக்கு கீது வேணும்…” அவன் குரலில் பிடிவாதம் இருக்க, “எனக்கு…” அவள் ஆரம்பிக்க, அவள் இதழ்களை அவன் சிறை செய்தான்.

“தப்பா எதுவும் சொல்லாத கீதா. உனக்கும் நான் வேணும். உனக்கு என்னை பிடிக்கும். எனக்கு காயம் பட்டால் நீ துடிக்கிற. என்னை அடித்தால் உனக்கு கஷ்டமா இருக்கு” அவன் அவள் கூந்தலை பிடித்து மென்மையாக முகம் உயர்த்தி கேட்க, “யாருக்கு காயம் பட்டாலும், யாரை அடித்தாலும் எனக்கு கஷ்டமா தான் இருக்கும்.” அவள் மறுப்பு தெரிவித்து முகம் குனிய, அவள் மருந்திட்ட அவன் தேகத்தில் அவள் கைகளை வைத்து, “எல்லாருக்கும் இப்படி தான் மருந்து போடுவியா கீது?” அவன் கேட்க, “அதெல்லாம் நர்ஸ் மாதிரி…” அவள் அவனிடமிருந்து முழுதாக விலகி நின்று கொண்டாள்.

அவன் பேசவில்லை. அவன் குறுஞ்சிரிப்போடு அவளைப் பார்த்தான். ‘நீ சொல்வது பொய்…’ அவன் கண்கள் குற்றம் சாட்ட, அவள் விழிகள் படபடத்துக் கொண்டன. அவன் புன்னகை விரிய, “உங்கள் முன்னாள் காதலி என்ன ஆனா?” அவள் விசுக்கென்று கேட்க, “அது தான் உன் பிரச்சனையா கீதா?” அவன் இதழ்கள் நமட்டு சிரிப்பில் மடிய, “எனக்கு என்ன பிரச்சனை? கொஞ்சம் நாள் முன்னாடி இருந்த ரவி இப்ப இல்லை. அப்ப பிரச்சனை உங்க கிட்ட தான் இருக்கு. நான், நானாகவேத் தான் இருக்கேன்” அவள் கூற, “நானும் அப்படியே தான் இருக்கேன் கீதா. எனக்கு உன் அண்ணன் தான் எதிரி. நீ இல்லை. இதை நான் முதல் நாளே சொல்லிருக்கேன். நான் உனக்கு என்னைக்கும் நல்லவன் தான் ” அவன் அவளுக்கு புரிய வைக்கும் நோக்கோடு நிதானமாக கூறினான்.

“என் அண்ணனும் நானும் வேறில்லை” அவள் அவன் முகம் பார்த்து உறுதியாக கூற, “என்ன சொல்ல வர்ற கீதா?” அவன் இப்பொழுது அவளிடம் இறங்கி பேச முயற்சித்தான். “நான் எதுவும் சொல்லலை.” அவளும் அவள் குரலும் அவனிடமிருந்து முழுதாக விலகி நின்றது.

“கீதா…” ஓர் அழைப்பில், ஓர் எட்டில் அவளை தன் பிடிமானத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தினான். “கேளு கீதா. உன் அண்ணன் வழியில் நான் வரக்கூடாதுன்னு நீ என் கிட்ட கேட்கணும் கீதா. நீ ஒரு வார்த்தை உன் அண்ணனுக்காக கேட்டுடா, நான் மொத்தத்தையும் விட்டுறேன். எங்க அப்பா ஜீவா என்னை விட கெட்டிக்காரன்னு நம்புறாங்க கீதா. ஆனால், நான் ஜீவாவை விட கெட்டிக்காரன்னு நிரூபிக்க போராடுறேன். என் தங்கை வாழ்க்கையை சரி செய்ய போராடுறேன் கீதா.”

 “ஆனால், என் மனைவி நீ, நான் ஜீவாவை விட கெட்டிக்காரன்.  என் கிட்ட மோதினால் உன் அண்ணனுக்கு  இழப்புன்னு நீ சொல்லு கீதா. நான் ஜீவா வழியில் குறுக்கிடாம, என் தங்கை வாழ்க்கையை சரி செய்ய நான் வேற வழி பார்க்குறேன். நீ சொன்னால் போதும் கீதா. என் அப்பா ஏதுக்காத ஒரு விஷயத்தை என் மனைவி ஏத்துக்கிட்டா போதும். நான் உங்க அண்ணன் கிட்ட பிரச்சனை பண்ணாமல் விலகிடுறேன். உன் அண்ணனால் என் கிட்ட மோதி ஜெயிக்க முடியாதுன்னு சொல்லு கீதா. நான் விலகிட்டா, உன் அண்ணனுக்கும் பல பிரச்சனைகள் கிடையாது. ஆனால்,  நீ சொல்லணும், நான் உன் அண்ணனை விட சாமர்த்தியசாலின்னு சொல்லணும். உங்க அண்ணனை வாழ விட சொல்லி கேட்கணும்”  என்று அவள் கோரிக்கைக்காக காத்து நின்றான். அவள் தன் தமயனுக்காக கெஞ்ச வேண்டும் என்று எண்ணியவன், காதல் மனைவி தன்னிடம் கேட்கவாது வேண்டும் என்று விரும்பினான்.

காதலனாக! கணவனாக! ஜீவாவின் விரோதியாக!

நதி பாயும்…