😍உணர்வை உரசி பார்க்காதே! 22😍

20211124_190527-7d55a69a

😍உணர்வை உரசி பார்க்காதே! 22😍

🌹அத்தியாயம் 22

மீத்யுகாவும் சஷ்டியும், நேராக திவ்யாவின் வீட்டிற்குச் சென்றனர்.  அவ்வேளை திவ்யா அங்கில்லை. விளையாட்டு கழகத்தில் இருந்து வந்துக்கொண்டிருந்தாள்.  உடனே திவ்யாவுக்கு அழைப்பு விடுத்து வீட்டிற்கு வந்ததை கூற, திவி கூடிய விரைவில் வருவதாக கூறினாள். 

“ஹாய் மீயூ, இன்னைக்கு செக் அப் போனீயா?” வாசலில் வைத்தே திவ்யா கேட்டாள். 

“வீட்டுக்குள்ள போய் பேசலாமா?” என்று வாடிய முகத்தில் வருத்தத்தை தெரிவித்தாள் மீத்யுகா. 

“ஸாரி டீ, வீட்டுக்குள்ள வா” என்று மீத்யுகா அழைத்து விட்டு, “உள்ள வா சஷ்டி.” என்று மலர்ந்த விழிகளுடன் சஷ்டியையும் திவ்யா வரவேற்றாள்.  சஷ்டியும் திவ்யாவை பார்த்து புன்முறுவினாள்.

மீத்யுகா சஷ்டியை பற்றி திவ்யாவிடமும், திவ்யாவை பற்றி சஷ்டியிடம் கூறி இருப்பதால்,  இருவரும் அதை புரிந்துகொண்டனர். 

“வீட்ல இருந்து கெளம்பும் போதே நீ ஒரு கால் பண்ணிட்டு வந்தா, நீ வாசல்ல இருந்து வெய்ட் பண்ணிட்டு இருக்க தேவையில்ல.” என்ற திவ்யா, மீத்யுகா சூலியாக இருக்கும்போது இரவு நேரத்தில் வீட்டு வாசலில் வந்து நின்றுக்கொண்டிருப்பதை எண்ணி மனம் மருகினாள் திவ்யா.

“இங்கதான் வாரோம்ன்னு முடிவே பண்ணல. எங்க போறதுன்னு தெரியாம இங்க வந்துட்டோம்.” சோகத்தை தேக்கி வைத்த குரலில் கூறினாள் மீத்யுகா.

திவ்யா பதற்றத்துடன், “ஏய் என்னாச்சு?” என்று கேட்டாள்.

“நான் தோத்துட்டேன் திவ்யா, விகுஷ்கி கிட்ட தோத்துட்டேன்!” என்று கலங்கி இருந்த கண்கள்  பெருக்கெடுத்தது. 

“அழாத மீயூ, எல்லாம் சரியாகிடும்.” என்று திவியின் தோளில் மீத்யுகாவை சாய்த்துக்கொண்டாள். 

“எங்க டீ சரியாக, புதுசா ஒரு பிரச்சனைய விகுஷ்கி தேடிட்டு வந்திருக்காரு, என்ன சொல்லுறதுன்னு தெரியல அசிங்கமா இருக்கு. விகுஷ்கி மாதிரி ஒரு சைக்கோவ எங்கயும் பார்த்ததில்ல.” என்று கூறி அடி வயிற்றில் கையை வைத்து மூச்சு திணறினாள் மீத்யுகா. 

“என்ன சொல்ற, எனக்கு ஒண்ணும் புரியல? ஃபர்ஸ்ட் நீ கூலாகு” என்று திவ்யா, மீத்யுகாவின் தலையை வருடியவாறு, சஷ்டியின் முகத்தை பார்த்து என்னவென்று கண்களால் வினவினாள். 

“அண்ணா புதுசா ஒரு கேஸ் வாதாடப்போறான். இப்போ சோஸியல் மீடியால டிரெண்டிங் நியூசே அதுதான். பார்லிமெண்ட் மெம்பர் இராஜா யோகியன் வீட்ல ஒரு குட்டி பொண்ணு கேஸு போய்கிட்டு இருக்கு. அதை எடுத்து வாதாடப் போறான்.” 

“என்னது அந்த கேஸா! நாங்கூட யூடியூப்ல பார்த்தேன். உங்க அண்ணா அந்த பொண்ணுக்காகதானே வாதாடடுறார்?” 

“அதான் இல்ல, இராஜா யோகியனுக்காக வாதாடப் போறான்.”

“இதான் பிரச்சனை, எவ்வளவோ சொல்லிட்டோம் கேக்கவே மாட்டிங்கிறார் விகுஷ்கி. பாவத்த கட்டிக்கிட்டு என் புள்ளைய வளர்க்க வேணாம்ன்னு நான் கெளம்ப, சஷ்டியும் எங்கூட வந்துட்டா, நானாவது ஸ்போர்ட்ஸ் க்ளப்ல தங்கிப்பேன். பட் சஷ்டிய எங்க தங்க வக்கிறதுன்னு தெரியாமதான் உன் வீட்டுக்கு வந்தேன்.” 

“இங்க நான் மட்டும்தான் இருக்கேன். இங்கவே தங்கலாம் டீ. ப்ராப்ளம் இல்ல.” 

“நான் உங்கள எப்படி கூப்பிடுறது?” என்று சஷ்டி திவ்யாவை கேட்டாள்.

“மீயூவ எப்படி கூப்பிடுறீயோ அப்படியே கூப்பிடு.”  

“அப்போ அண்ணினு கூப்பிடுறேன். ச்சே! இன்னொரு அண்ணா இருந்தா, திவ்யா அண்ணிக்கு கல்யாணம் பண்ணி வச்சி இருக்கலாம்.” என்று போலியாய் சளைத்துக்கொண்டாள்.

“அடிப்பாவி! என் உயிர் தோழியோட உயிரே போகுது. இதுல என் உயிரும் சேர்ந்து போகணும்னு ஆசை படுறீயா?” என்று லேசாக இதழ் பற்கள் தெரிய நகைந்தாள் திவ்யா. 

“சஷ்டி அப்படித்தான் திவி, எவ்ளோ சோகமா இருந்தாலும் சிரிக்க வைப்பா, இப்படி பட்ட தங்கச்சிக்கு கெடச்சிருக்க அண்ணன பார்த்தியா? பொழுதுக்கும் நான் அழுதா போதும் அவருக்கு.”

நமசிவாயம், மீத்யுகா கருத்தரித்திருப்பதை உமேஷ்வரியிடம் பாட்டியிடமும் தெரிவித்திருந்தார். மனம் பொறுக்காமல் மீத்யுகாவின் தாய் தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். 

அழைப்பை பார்த்த மீத்யுகாவிற்கு தெரிந்துவிட்டது. தந்தை எப்படியும் கூறியிருப்பார். அதனால்தான் அழைப்பது வருகிறது என்பதை உணர்ந்தாள். எப்படி சமாளிப்பது என்றுதான் தெரியவில்லை. தொண்டையை சரிப்படுத்தி அழைப்பை அழுத்தி காதில் வைத்தாள். “அம்மா!” 

“உனக்கே நல்லா இருக்கா மீத்யுகா, மாசமா இருக்கேன்னு ஒரு வார்த்தைகூட சொல்லல. நாங்க எல்லாம் உனக்கு மூனாவது மனுசங்கதானே! உங்க அப்பா போன்ல என்னென்னமோ சொல்றாரு, எனக்கு தலையே வெடிச்சிரும் போல இருக்கு. உனக்கு என்ன மா பிரச்சனை?” என்று உமேஷ்வரியின் விழிகள் நீர் வழிந்து ஓட, ஒரு தாயின் பதற்றமும் பரிதவிப்பும் அவருடைய குரலில் தெரிந்தது.

மீத்யுகாவின் மூக்கு புடைக்க ஆரம்பித்தது. ஒற்றை கையால் கலங்கி இருந்த கண்களை கசக்கினாள். “ஒண்ணும் இல்லமா, நீங்க அழாதீங்க மா. இதுக்குதான் உங்களுக்கு ஒண்ணும் சொல்லுறதில்ல.” 

“உன்னைய பார்க்கணும் போல இருக்கு டா மா?” என்று கலங்கிய குரலில் ஏக்கத்தோடு தாய் பாசத்தை வெளிக்காட்டினார் உமேஷ்வரி.

“எனக்கும் உங்கள  பார்க்கணும் போல இருக்கு மா.” என்றிட, “உங்க அப்பா உன்னை போய் பார்க்கக்கூடாதுன்னு சொல்லிட்டாரு மீத்யுகா!” என்று மகளை கருவுற்ற சந்தர்ப்பத்தில் பார்க்க முடியாததை எண்ணி வேதனையுற்றார் உமேஷ்வரி. 

“அப்போ என்னை பார்க்க வரமாட்டீங்களா மா?” என்று தாயாக போகும் நேரத்தில் தன் தாயை பார்க்கும் ஆசை மீத்யுகாவின் குரல் தாயின் அரவணைப்பிற்கு ஏங்கிய பிள்ளை மனம் ஆனது. 

“அப்பாக்கு தெரியாம வந்து பார்க்குறேன் மா.” என்று கவலையோடு தெரிவிக்க, “சரி மா” என்றாள் கவலையுடன் மீத்யுகா. 

“உங்க அப்பா மறுபடியும் போன் அடிக்கிறாரு அவர்கூட பேசிட்டு வாரேன்.” என்று அழைப்பை துண்டித்தார். 

‘அம்மா கையால சாப்பிடணும் போல இருக்கு’ என்று பெருங்கவலைக்கு உள்ளாகியது மீத்யுகாவின் மனம். 

அதன் பிறகு அந்தச் சிறுமியின் சிந்தனை மீத்யுகாவை வாட்டி வதைத்தது. சிறுமி பட்ட வேதனைகளை எல்லாம் படங்களில் காட்டும் காட்சிகளோடு ஒப்பிட்டு பார்க்கும்போது  அறியா பருவத்தில்  அவள் அனுபவித்த பாலியல் இச்சை சிறுமியின் உடலையும் உணர்வுகளையும் கட்டிட்டு இரண்டு வருட வாழ்க்கை கொடுமையாகவும் அடிமைதனமாகவும் வாழ்ந்ததை எண்ணும்போது மீத்யுகாவின் உள்ளம் கசிந்துருகியது. ஏழை வீட்டு பெண்ணாய் பிறந்த பாவத்திற்கு எத்தனை வேதனை அனுபவித்திருப்பாள் அந்தச் சிறுமி!

பெண்களின் உடலில் இருக்கும் வெறும் சதை பிண்டத்தை இச்சிக்க நினைக்கும் காம வெறியர்களே! ஒரு நாள் பெண்ணாய் மாறி, ஒரு முறை மாதவிடாய் வலியையும், ஒரு  கருவை சுமந்து பிரசவத்தின் முழு வலியையும் அனுபவித்தால் தெரியும் பெண்களின் அன்பு, தியாகம், புனிதம் எப்படிபட்டது என்று? 

மீத்யுகா, விளையாட்டு சங்கத்திற்கு செல்லும்போது சஷ்டியையும் அழைத்துச் சென்றாள். 

“சஷ்டி நீ இப்படி உக்காந்து இரு, நான் பிராக்டிஸ் குடுத்துட்டு வாரேன்.” 

சஷ்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, மீத்யுகா பயிற்சி அளிப்பாள். நாட்கள் இப்படியே சென்றது. 

விகுஷ்கிக்கு சில நாட்கள் தங்கையை பார்க்காமல் இருக்க முடியவில்லை. இந்த வழக்கை வாதாடுவதால் சஷ்டியும் மீத்யுகாவும்  அவனுடன் இருப்பது பாதுகாப்பில்லை என்பதை உணர்ந்தான். அவன் குழந்தையை மீத்யுகா சுமக்கவில்லையென்று அவன் நினைத்தாலும், அவனால் வேற எந்த பிரச்சனையும் மீத்யுகாவிற்கு வரக்கூடாதென்று இருந்தான். அதனால்தான் மீத்யுகா கிளம்பும்போது மறுக்கவுமில்லை, சஷ்டியை தடுக்கவுமில்லை. 

விகுஷ்கி, சஷ்டிக்கு அழைப்பு விடுத்தான். அவள் எடுக்கவில்லை, அழைப்பை துண்டித்தாள். இரண்டு மூன்று முறை அழைத்தும் அவன் முயற்சி தோற்றுப்போக, குறிஞ்செய்தி அனுப்பினான். “செலவுக்கு பணம் அனுப்பி இருக்கேன். வேலா வேலைக்கு மாத்திர எடுத்துக்கோ,  எதும் ப்ராப்ளம்னா உடனே தெரியப்படுத்து.” என்று அனுப்பி இருந்தான். 

குறுஞ்செய்தியை படித்த சஷ்டியோ ஆத்திரமடைந்தாள். ‘வேறு பெண் எக்கேடு கெட்டால் உனக்கென்ன? உன் தங்கை மட்டும் நன்றாக இருக்க வேண்டும்.’ என்று நினைத்து விட்டு உதட்டை சுளித்தாள். “பாவப்பட்ட காசுல மாத்திர சாப்பிட்டு உயிர் வாழுறதுக்கு நான் செத்து போறதே மேல். மீத்யுகா அண்ணிய குடுத்த கடவுளுக்கு நன்றி. எனக்கு இருக்குற ஒரே ப்ராப்ளம் நீதான். தயவுசெஞ்சு காலோ மெசேஜோ பண்ணாத உனக்கு புண்ணியமா போகும்.” என அனுப்பிய வார்த்தையில் அண்ணா என்று சுட்டிக்காட்டவுமில்லை. அண்ணா என்று கூப்பிட சஷ்டிக்கு பிடிக்கவுமில்லை. 

வேலனை தவிற வேறு எவரிடமும் வழக்கிற்கான ஆதாரங்களை வழங்கமாட்டான். வேலன் இன்றி வேலை பார்ப்பது கடினமாய் இருந்தது விகுஷ்கிக்கு . வேலனிடம் ஒரு அண்ணனாய் நின்று மீண்டும் ஒரு மாதத்திற்கு  மட்டும் பணி புரியுமாறு தாழன்புடன் கேட்டிருந்தான். வேலனுக்கு விகுஷ்கியின் அழைப்பை மறுக்க முடியவில்லை. மீண்டும் ஒரு மாதத்திற்கு இணைந்து கொண்டான்.

வழக்கை வாதாடுவதற்கு முன்னதாகவே கையொப்பமிட்டாயிற்று.  அன்று போல் இன்றும் அக் கடிதத்தை கையில் வைத்துக்கொண்டு நீள்சாய்வு கதிரையில் ஆடிக்கொண்டிருந்தான். வீட்டில் விகுஷ்கியையும் லட்சுமியையும் தவிர யாருமே இல்லை. 

அவன் இதழ் கணத்த மௌனம் நீண்டுச் செல்ல, சிந்தனை எனும் ஆழ்கடலில் நீந்த முடியாமல் சிக்கித்தவித்தான்.

ஒரு புறம் மீத்யுகா கூறும் காட்சிப்பிழைகள். என்னதான் ஒரு பெண் தன்னைதானே தாழ்த்திக்கொண்டு நீதிமன்றம் வரை வந்து கற்புக்காக போராடுவதை நினைக்கும்போதும், எவ்வளவு தூரம் மீத்யுகாவை அவமதித்தும், ஒரு பெண்ணுக்கு சுமத்தக்கூடாத வார்த்தைகளை அவள் மீது கூறியும் மீத்யுகா ஒற்றை பிடியில் இருந்தாள். விகுஷ்கிதான் அவள் குழந்தைக்கு தகப்பனென்று உறுதியாய் நின்றாளே! அதை நினைக்கும் போதும் உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குமா, அப்படி நடந்திருந்தால் அது மட்டும் ஏன் அவன் நினைவில் இல்லையென்று அவன் மூளையை குழப்பிக்கொண்டிருந்தான். 

மறுபுறம் மடலை படித்து முடித்து விடுத்து கண் கலங்கினான். அவனை மட்டும் சனி பார்வை விடாமல் துரத்திக்கொண்டிருந்தது.  

விடிந்த பொழுது வியாழக்கிழமை மீத்யுகா மருத்துவ பரிசோதணையை தவிர்த்து விட்டு நீதி மன்றத்தில் அந்த சிறுமியின் வழக்கை பார்வையிடுவதற்காக சஷ்டியுடன் சென்றிருந்தாள். 

மீத்யுகா அருகில் இருப்பதை கண்டும் மாமனாரும் மருமகனும் அவளை கடந்துச் சென்றனர்.  சஷ்டியை பார்த்த விகுஷ்கி, கைபேசியில் குறுஞ்செய்தியை பகிர்ந்தான். “ஏன் சஷ்டிமா இங்க வந்திருக்கு?” என்று அனுப்பியிருந்தான். 

“அது உனக்கு தேவையில்லாத விஷயம்.” என்று சஷ்டியின் பதிலை பகிர்ந்தாள். 

வழக்கிற்கான  நேரம் வந்தது நீதிபதி இருக்கையில் அமர்ந்து விட, மீத்யுகாவும் சஷ்டியும் சிறுமிக்கு சார்பாக முடிவு வரவேண்டுமென்று பிரார்த்தனை மேற்க்கொண்டனர். 

வழக்கை தொடர்ந்தது சிறுமியின் வீட்டினர் என்பதால் நமசிவாயம் முதலில் ஆரம்பித்தார். 

“மை லார்ட், மீத்யுகா சகஸ்ரீ எனும்  பதிமூன்று வயதே நிரம்பிய சிறுமி.” என்ற நமசிவாயத்தின் வாதம் மீத்யுகாவையும் சஷ்டியையும் உலுக்கியது. 

மீத்யுகா அடுத்த நொடி விகுஷ்கியை நோக்க, ‘மீத்யுகாங்குற பேருக்காகத்தான் இந்த கேஸே எடுத்தேன் டீ!’ என்பது போல் இருந்தது, அவன் அனல் வீசும் அம்பகங்கள்(பார்வை). அதன் பிறகு விழிகளை தாழ்த்திக் கொண்டாள் மீத்யுகா. 

“குடும்பத்தில் நிலவிய வறுமை நிலையின் காரணமாக வீட்டு வேலைக்கு பணிப் பெண்ணாய் பாராளுமன்ற உறுப்பினர் ராஜயோகியனின் வீட்டிற்கு, அனுப்பப்பட்டாள் அந்த சிறுமி.   தற்போது சிறுமிக்கு பதினைந்து வயது, மன உளைச்சலை காரணமாக சிறுமி தற்கொலை செய்து கொண்டாள் என்று சிறுமியின் வீட்டினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பெற்றோருக்கு தனது மகளுக்கு நிகழ்ந்தது தற்கொலையா? என்ற சந்தேகத்தின் பெயரிலே இவ்வழக்கு.  

உண்மையாகவே மீத்யுகா சகஸ்ரீ தற்கொலை செய்தாரா, இல்லை கழுத்தில் கயிற்றை கட்டி தூக்கிலிட்டாரா? அதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ராஜயோகியனின் வீட்டினரை விசாரிப்பத்தற்கு அனுமதிக்குமாரு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், மை லார்ட்.”  என்ற நமசிவாயத்திற்கு நீதிபதி அனுமதி வழங்கிட ஒவ்வொருவரையும்  குறுக்கும் நெடுக்கும் தூண்டித்துருவி விசாரிக்க திட்டமிட்டார். 

“இராஜா யோகியன் நீங்க படிச்சவர்தானே?” என நமசிவாயம்  சரியான புள்ளியை பிடித்தார். 

“ஆமா.” 

“அந்த பொண்ணு தற்கொலை பண்ணத நீங்க கண்ணால பார்த்தீங்களா, இல்ல நீங்களே கொலை பண்ணீங்களா?” 

“உங்க குடும்பத்துல எல்லாரும் வந்துருக்காங்க, உங்க பையன் வரலையே ஏன்?” 

“என் பையன் வெளியூர்ல” என்றார் விரக்தியான குரலில். 

“எப்போ போனாரு, வெளியூர் போய் எத்தன நாள் ஆகுது?” 

“ஒரு மாசம்.” 

“பதினெட்டு வயசுக்கு கீழ்ப்பட்ட பொண்ண வேலைக்கு எடுக்க கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா? நீங்க படிச்ச அரசியல்வாதி தானே?” என்று நமசிவாயம் உசாவினர். 

உடனே விகுஷ்கி, “அப்ஜக்ஷன் மை லார்ட்!” என்று அனுமதி கோர, கோரிக்கை நிறைவேறியது. 

“மிஸ்டர். நமசிவாயம், பெத்தவங்களுக்கு பதிமூனு வயசுப்பொண்ண வேலைக்கு அனுப்பக்கூடாதுன்னு தெரியாதா?” என்று கடுந்த குரலில் கேட்டான் விகுஷ்கி.

என்று வினா தொடுத்துவிட்டு, “தேங்க் யூ மை லார்ட்.” என்று கூறிவிட்டு விகுஷ்கி அமர்ந்து கொண்டான். 

“அடுத்த முறை உங்க மகன் கோர்ட்டுல ஆஜர் ஆகணும்.”  என்றார் நமசிவாயம். அத்தோடு அவருடைய வாதம் முடிவடைய விகுஷ்கி, அச் சிறுமியின் பெற்றோரை விசாரணை செய்ய ஆரம்பித்தான். 

மீத்யுகாவின் தாய், “அம்மா நீங்க எங்க இருந்து வாரீங்க. உங்க குடும்பத்துல எத்தன பேர் இருக்கீங்க. உங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்க மா.” என்று தன்மையாக கேட்டான். 

தாயின் கண்கள் நிரம்பி இருந்தது கண்ணீரால், நீதிபதிக்கு தலை வணங்கி விட்டு, “நாங்க ஊட்டில இருக்கோம். மண் சரிவுல வீடு உடைஞ்சி போச்சுங்க ஐயா, கடன் எடுத்து சின்ன குடிசை கட்டிக்கிட்டோம். வீட்டுக்காரரும் நானும் தோட்ட வேலைப் பார்த்தோம். அதுல வர சம்பளம் சாப்பிடுறத்துக்கே பத்தல. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இன்னுமொரு குழந்த பொறந்ததால என்னால வேலைக்கு போக முடியல. வீட்டுக்காரவங்க மட்டும்தான் வேலைக்கு போனாங்க. ரொம்ப கஷ்டப்பட்டோம். 

மூத்த பையன் பத்தாவது பரீட்சை எழுதிட்டு இருந்தான் அதனால அவன வேலைக்கு அனுப்ப முடியல. எனக்கு வேற வழிய தெரியாமதான் என் பொண்ண வேலைக்கு அனுப்புனேன்.” என்று பிள்ளையை பரிக்கொடுத்த வேதனையில் கண்ணீர் வடித்தார் அந்த தாய்! 

“ஏம்மா உங்க புருஷன சென்னைக்கு வேலைக்கு அனுப்பி இருக்கலாமே! பத்தாவது பரீட்சை முடிஞ்சதும் உங்க பையன வேலைக்கு அனுப்பிட்டு பொண்ண மறுபடியும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்கலாமே, கடைசியா மீத்யுகா சகஸ்ரீ என்ன சொன்னாங்க என்று வினவினான். 

“அம்மா உன்ன பார்க்கணும் போல இருக்கு வந்து கூட்டிட்டு போமானு சொன்னா?” என்று தாயின் கதறல்களும் கேவல்களும் அங்கிருந்தவர்களின் மனதில் துயரேற்றியது. 

“நீங்க ஏன் கூட்டிட்டு போகல, அந்த பொண்ணுக்கு எவ்ளோ ஏக்காமா இருந்து இருக்கும்” என்ற கேள்விக்கு தாயிடம் பதில் இல்லை. 

“அம்மா நீங்க போகலாம்.” என கூறிவிட்டு, “மை லார்ட்  இதிலிருந்தே புரிகிறது சிறுமி அதித மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து இருக்கிறாள் என்று உறுதி செய்யப்படுகிறது.” என்று விகுஷ்கி கூறிமுடிக்கும் முன்னர் நமசிவாயம் வாய்தா வாங்குவதற்கு நீதிபதிடம் கோரினார் நீதிபதி அதனை ஆமோதித்தார்.

அதன் பிறகு நீதிமன்றம் கலைய,  இராஜயோகியனை போலீஸ் காவலில் வைக்க அழைத்து செல்ல, விகுஷ்கி அருகில் சென்று பேசினான். “சார் நீங்க பயப்படாதீங்க. கேஸ் நம்ம பக்கம்தான் இருக்கு.” என்று கூறினான். 

“பையன வர சொல்லுறாங்க? இப்போ என்ன பண்றது முதல்ல அதை சொல்லு?” 

“சார் இந்த கேஸ் அவ்ளோ சீக்கிரம் முடியாது. ஆனா நான் சீக்கிரம் முடிக்க பார்க்குறேன். அடுத்த  வாய்தாக்கு உங்க பையன் வர வேண்டாம். அதுக்கு அடுத்த வாய்தாக்கு வந்தா போதும். நான் ரொம்ப நேரம் பேச முடியாது கிளம்புறேன் சார்.” அவன் கிளம்பிச் செல்ல, மீத்யுகாவும் சஷ்டியும், மீத்யுகாவின் ஐந்தாம் மாத பரிசோதணைக்காகச் சென்றனர். 

மீண்டும் வழக்கு விசாரணைக்காக காத்திருந்தனர். இந்த வழக்கிலும் இப்படியே சென்றது. அடுத்து வழக்கு விசாரணைக்கு வந்தால்  மூன்றாவது முறை, நமசிவாயத்தின் கோரிக்கைக்கு இனங்க, மீத்யுகா சகஸ்ரீயின் பூதவுடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. மறைவின் பின்னரும் மீத்யுகா சகஸ்ரீயின் உடலுக்கு நிம்மதி அற்றுப்போனது. 

****

மீத்யுகாவின் தாய் உமேஷ்வரி, ஏழாம் மாதம் சிறிய அளவில் வளைக்காப்பு வைபவம் செய்தார். தாயின் கையால் உணவு உண்டதே பெரும்மகிழ்ச்சியாய் இருந்தது மீத்யுகாவிற்கு. 

குழந்தை ஒவ்வொரு முறை அசையும்போது அதை சஷ்டியை தவிற வேறு யாரிடமும் கூறி மகிழ முடியவில்லை. விகுஷ்கி அருகில் இல்லாத ஏக்கத்தின் தாக்கம் மனம் முழுவதிலும் பரவியிருந்தது. 

விகுஷ்கி நீதிமன்றத்தில் வாதாடும்போது, மீத்யுகாவின் வயிற்றில் இருக்கும் குழந்தை அவனுடைய குரலுக்கு குழந்தை நன்கு அசைவு கொடுப்பதை உணர்ந்தாள் மீத்யுகா.

“சஷ்டி, கேஸ் என்ன ஆகுமோன்னு நினைக்க பயமா இருக்கு, நம்ம சாகும்போது பணத்தோட போகமாட்டோம். அது உங்க அண்ணனுக்கு புரிய மாட்டீங்குது.” 

“அந்த அம்மா அழுறத பார்க்க முடியல. எனக்கு அழுகையா வருது அண்ணி. எனக்கு அம்மா இல்ல. அவங்களுக்கு புள்ள இல்ல. 

நான் ஏன் தெரியுமா உங்க பக்கம் பேசுறேன்? நானும் அண்ணாவும், அம்மா அப்பா இல்லாம வளர்ந்தோம். அண்ணாவோட குழந்த அப்படி வளரக் கூடாது. நாங்க பட்ட கஷ்டம் வேற யாருமே படக்கூடாது.” என்று சஷ்டி கண் கலங்கிட, மீத்யுகா சஷ்டியை அணைத்துக்கொண்டாள். 

மீத்யுகாவின் வயிற்றில் இருக்கும் குழந்தை சஷ்டியை எட்டி உதைத்து. “இப்போ நீ எதுக்கு அழற?” என்று குழந்தை கேட்பது போல் சஷ்டிக்கு தோன்றியது. 

அடுத்த விசாரணை  வெகு விரைவில் வரும்.

யோகியன் பெற்ற மகனெல்லாம், அயோகியனென பெயர் பெற்ற காலமிது!

***

உணர்வுகள்தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!